Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 18

18.தேடல்

சிவகாமி பொருமிக் கொண்டிருந்தாள். யார் யாரைப்பார்த்து வெளியே போ என்பது……

இந்த ஜமினின் ஒரே ஏகபோக வாரிசு நான்? என்னைப்பார்த்து இந்த மூதேவி ரஞ்சனி என்ன பேச்சு பேசிவிட்டாள். நெஞ்சு பெருமூச்சின் வேகத்தில் ஏறி இறங்கியது.

“அம்மா! ஏம்மா இப்படி இருக்கே! “

சிவகாமியின் பார்வை தழல் போல சுட்டெரித்தது.

எதுவும் பேசாமல் இருக்கையில் அமர்ந்தாள். ஏதேதோ நினைவுகள்.

எத்தனை விஷயங்கள் நடந்து விட்டன அவள் வாழ்வில்? பாட்டி நாகம்மைதேவியின் செல்லப்பேத்தியவள்.பெற்ற  தாயை விட தாயைப்பெற்ற தாயோடுதான் ஒட்டுதல் அதிகம். நாகம்மை தேவியும் பேருக்கேற்றார்போல குணம்படைத்தவர் பேத்திக்கும் தன் குணநலன்களையே உணவோடு சேர்த்து ஊட்டினார். தான் ஒரு ராஜ வம்சம் என்பதை எப்போதுமே எல்லா விஷயங்களிலும் மகாத் தோரணையாகக் காட்டிக் கொள்வார்.

அதே பண்புகள் மிகச் சுலபமாக சிவகாமிதேவிக்கும் படிந்தன. பணியாளர்களை கீழாக வைப்பது..! தான் என்ற கர்வம் அரசிளங்குமரியாய் பாவனை…! எடுத்தெரிந்து பேசுவது இவற்றோடு தந்திரமும் சுயநலமும் சேர கூடவே அழகும் வளர்ந்தது.

பாட்டி சொல்வது வேதவாக்காய் இருந்தது. தாயும் தந்தையுமே இரண்டாம் பட்சம் தான் சிறுமி சிவகாமிக்கு.

சிவகாமியின் தாய்க்கு இரண்டாவது பேறுகால சமயம். இன்றோ நாளையோ என்றிருக்க மருத்துவச்சி கூடவே இருந்தாள். குழந்தை இறந்தே பிறந்தது. நாகம்மை தேவி திடுக்கிட்டுப்போனார். காரணம் ஏற்கெனவே தம் மனைவிக்கு கர்ப்பப் பை பிரச்னை என்பதால் டவுனுக்குப் போன மாப்பிள்ளை யாரிடமும் ஆலோசனை பெறாமலே தம் மனைவி இரண்டாவது கரு சுமந்ததுமே மனையாளின் ஆரோக்கியம் வேண்டி குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையைத் தனியாக நண்பனோடு போய் செய்து கொண்டு வந்து விட்டார்.




பெற்ற பெண்ணின் மீது மாப்பிள்ளை வைத்த அன்பு புரிந்தாலும் அதிகார வர்க்கத்துக்கு இம்மாதிரி செண்டிமென்ட் தேவையில்லாத ஒன்று என்று நினைப்பவர் நாகம்மை தேவி.

அதற்கேற்றார்போல குழந்தையிறந்தே பிறக்க வாரிசின்றி போய்விடுமே என்ற தாக்கத்தில் மாற்று ஏற்பாடாய் மருத்துவச்சியிடம் ரகசியம் பேச ……….அதேயிரவு

பண்ணையில் வேலைபார்க்கும் குடியானவப்பெண்ணுக்கும் பிரசவ வலி வர மருத்துவச்சியின் உதவியால் இந்த ஜமீன் வாரிசு குடியானவன் குடிசைக்கும்

குடியானவனின் ஆண்குழந்தை ஜமினின் பிரசவ அறைக்கும் மாறியது. கண்ணுக்கு முன்னே இதெல்லாம் நடக்க

சிவகாமி திகைத்துப் போய் பார்க்க நாகம்மை தேவி அமைதிப்படுத்தினாள்.

சிவகாமி தந்தை வழியில் ஆண்வாரிசு இல்லாவிட்டால் அடுத்து அவர்கள் குடும்பத்தில் யாருக்கு ஆண் வாரிசு உள்ளதோ அவர்களுக்கே முன்னுரிமைத்தரப்படும். அவர்களே அடுத்தடுத்து அதிகாரத்துக்கு உரியவர் ஆவர்.

இதற்காகவே நாகம்மைதேவி பதறிக் கொண்டிருந்தார். பெண்ணின் பூஞ்சை உடம்பும் மாப்பிள்ளையின் அவசர முடிவும் விபரித நிலையிலும் கூட மாற்று ஏற்பாடுகளை செய்ய வைத்தது.

விவரம் தெரியும் வயது சிவகாமிக்கு. ஒரு வேலைக்காரன் மகன் எனக்குத் தம்பியா? ச்ச்சீ….சீ…சிறுமியின் உள்ளத்தில் அத்தனை துவேஷம் அருவருப்பு.

ஆனால்…..

நாகம்மைதேவி நஞ்சைக் கரைத்து அவளின் பிஞ்சுள்ளத்துக்கு ஊட்டினார்.

தந்தை வழியில் ஆண்வாரிசு இல்லாது போனால் என்னாகும் என்பதையும்

அடுத்து அவளின் சித்தப்பன் மகன் அதிகாரபூர்வமாக உரிமைக்கோரி வந்து விட்டால் சிவகாமி இரண்டாம் நிலைக்கு போய்விட வேண்டிய கட்டாயத்தையும் சுட்டிக்காட்டினார்.

அதைவிட ……

இதை எப்படி கையாளவேண்டுமென்பதையும் கற்றுத்தந்தார். சிவகாமிக்கு கற்பூர புத்தி பக் கென்று பற்றிக் கொள்ளும். ஆனால் அது நல்லதற்கு உபயோகப்படாமால் அல்லதற்கு போனது தான் கொடுமை.

தம்பி என்பவனிடம் எப்படி பழகவேண்டும் எப்படி அரவணைத்தும் தூர நிறுத்தவும் வேண்டும்.! கைப்பாவையாக ஆட்டி வைத்து பாசப் போர்வை போர்த்த வேண்டும்! அக்காவின் வார்த்தையே அவனுக்கு வேதமாய் ஒலிக்க செய்ய வேண்டிய சாம…தான… பேத… தண்டங்களை வகுப்பெடுத்தார்!.   சிவகாமி எப்படி காய் நகர்த்த வேண்டும் என்று நாகம்மைதேவி கோடு போட சிவகாமி ரோடே போட்டாள்.




வீரேந்தர் பூபதியின் பிறப்பு ரகசியம் நாகம்மைதேவி சிவகாமி தேவிக்கு மட்டுமே தெரியும்.

உதவி செய்த மருத்துவச்சி ஓரிரு மாதங்களுக்குள் வயிற்றுவலி தாங்காமல் தூக்கு போட்டுக் கொண்டாள் என்ற வதந்தி கிளம்பியது நாகம்மையும் “த்சொ! அடடா! “என்றாள்.

அடுத்த சிலநாட்களில் குடியானவன் தம்பதியிருந்த குடிசை பற்றியெரிந்தது. வெளியேறமுடியாதபடி யாரோ தாழ் போட்டிருந்தனர்.

அன்றிரவு நாகம்மை தேவி பேத்திக்கு பாடமெடுத்தாள்.

ஒரு விஷயத்தில் எப்படி சாட்சிகளேயில்லாமல் செய்யவேண்டும் என்பதையும் அதன் முக்யத்துவத்தையும்  சொன்னாள்.தேவையானால் எல்லாவற்றையும் சுத்தமாக அப்புறப்படுத்திவிட வேண்டும் என்றும் போதித்தாள்.

அதன்பிறகு

சிவகாமி வீரேந்திர பூபதியை ஆட்டுவிக்கிற சூத்திர தாரியானாள். பிறந்த வீட்டின் அதிகாரம் தன் கையிலேயே இருக்கும் படி வைத்துக் கொண்டாள். வீரேந்திர பூபதி அக்கா என்றால் தெய்வத்துக்கு சமம்.

அப்போதுதான் அந்த விபரீதம் நடந்துது எக்குதப்பாய் அகப்பட்டுக் கொண்டாள் சிவகாமி.

நாகம்மை தேவி கூட செய்வதறியாது விதிர்விதிர்த்துப் போனாள்.

(தேடல் தொடரும்)




What’s your Reaction?
+1
10
+1
9
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!