Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 20

தேடல் –20.

விழாவின் போது உடுத்திக் கொள்ள என்று நீட்டிய புடைவையைக் கண்டதும் கண்ணீர் வந்தது மதுமதிக்கு.

தன் பெண்ணுக்கு இணையாக அதே நிறம் அதே தரம் விலையென்று நீட்டிய கைகளை பிடித்துக்கொண்டாள்.

“நான் யார் என்னன்னு தெரியாமலே எதுக்கு இத்தனை பாசம் என்மேலே? ‘

“அதை நீ ஸ்ரீயம்மாவிடம் தான் கேட்கனும் தாயி! அவதான் இப்படியோர் அன்பை என் மேலே காட்டினாள். இதே போல நானும் ஊரைவிட்டு வந்தவன்தான். என்ன ஏதுன்னு கேட்காம சாப்பாடு போட்டது ஸ்ரீயம்மாவின் வீடு.பிறகு வேலை வாங்கிக் கொடுத்து பொண்ணைக் கல்யாணமும் செய்து கொடுத்து ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனுக்குமாக்கி……அதே அன்பைத்தான் இப்போ உன்னிடம் திரும்ப நாங்க காட்றோம். “

“ஆனாலும் இத்தனை விலையிலே எதுக்கு? “

“நீயும் எனக்கு மகள்தாண்டா!”

“தேவிம்மா மாதிரிதான் எங்க கூந்துருதான் (மகள்)நான் அம்மாதான்.”

ஸ்ரீலக்ஷ்மி சிரித்தாள்.

மதுமதிக்கு ஏனோ விஷ்ணுவின் வீட்டில் சிவகாமி பேசியது நினைவில் வந்தது.

“அதென்ன பழக்கப் படுத்தி வச்சிருக்கே! அம்மா செத்துப் போயாச்சு அதை சொல்லி வளர்க்காம உன்னைப்போயி அந்த நிஷாக்குட்டி அம்மா ன்னு கூப்பிட பழக்கியிருக்கே!சத்யாவை அப்பாங்கறா! இதெல்லாம் நல்லாவாயிருக்கு? நாலு பேர் கேட்டா என்ன நினைப்பாங்க? “




 “இல்லே! அவ பத்துமாசக் குழந்தை . பாலுக்கும் தாய்க்கும் ஏங்கிக் கிடந்தா.  நானும் அக்காவும் ஒரே ஜாடை தங்கம் அக்கா அவ ஒருநாள் ரொம்பவும் ஏங்கிஏங்கியழவே என்னை அம்மான்னு கூப்பிட வைக்க அப்படியே பழகிட்டா. தேவா மாம்ஸை ஆஸ்பிடலில் பார்க்கும்போதெல்லாம் டாக்டர் குழந்தையை பக்கத்தில் வைத்து பேசச் சொல்வாங்க. அப்போ அவரை அப்பான்னு பழக்கிட்டேன். “

“அப்புறமாவது எடுத்துச் சொல்லலாம் தான் அதான் அஞ்சு முடியுதே இன்னும் என்ன பச்சக் குழந்தையா? “

“அண்ணி! உங்க ப்ரச்னைதான் என்ன? நிஷா பச்சக் குழந்தையில்லாம வெளஞ்சு நிக்கிற பொம்பளையா? இப்போ அவ மதுவை அம்மான்னு கூப்பிட்டாதான் என்ன? நாலுபேரு நினைக்கிறாங்கன்னு வாழ முடியாது. புரிஞ்சுக்காதவங்க சவகாசமும் தேவையில்லை. நமக்கு உறவுமுறை புரிஞ்சாப் போதும். எப்படின்னாலும் பெத்த தாய்க்கு தங்கைங்கிற  உறவாலே மது அவளுக்கு சின்னம்மா! அவளே

இந்த வீட்டு மருமகளாயிட்டா பெரியம்மா. எப்படியானாலும் அம்மா தானே! நீங்க ஒன்னும் இதுக்காக கஷ்டப் பட்டுக்க வேனாம். “என்று பொறிந்து தள்ளினாள் ரஞ்சனி.

இதோ இன்று ஸ்ரீலக்ஷ்மி மகளென்றும் தன்னை தாயென்றும் கூறிக்கொள்ள மனசு ததும்பியது.

இரண்டு நாளில் விழா. மெஸ்சுக்கு முதல்நாளும் விழாநாளும் மறுநாளுமாய் லீவ்.  இப்போதெல்லாம் மனசு தெளிவாகியிருந்தது. விஷ்ணுவின் நினைப்பு தாக்கினாலும் வேதனை தந்தாலும் அவன் நன்மைக்காகவே ஒதுங்கி நிற்கிறோம் என்பதில் திருப்தியிருந்தது.

கண்ணை விட்டு தூரமேயிருந்தால் கருத்தை விட்டும் தூரப்போய்விடுவோம் என்ற வறட்டு தத்துவத்தைப்பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருந்தாள். எங்கே போனால் என்ன? வந்தாலென்ன? மனதை விட்டு ஓடிப்போய் விட முடியுமா? வேர்விட்டுக் கிளைத்த உணர்வுகளை கெல்லி எறியத்தான் இயலுமா?

          வீட்டில் யாருமில்லை. செவக்கச்செவேலென்று சிவந்துகிடந்த கைகளையே வெறித்துக் கொண்டிருந்தாள் மதுமதி.பின்புறமிருந்த மரத்திலிருந்து மருதாணி இலைகளைப் பறித்து வந்து பட்டுப்போல அரைத்து எல்லோருக்குமே இட்டிருந்தாள்ஸ்ரீலஷ்மி.   நந்தினி தேவி  உள்ளறையில் பாட்டியுடன் உறங்கிக் கொண்டிருக்க மொட்டைமாடித் தாழ்வாரத்தில்  அமர்ந்திருந்தாள்.

“‘இப்படி சிவந்து போனா புருஷன் மேல ரொம்ப லவ்வுன்னு அர்த்தமாமே “

திடுக்கிட்டு அரக்க பரக்க துடித்தெழுந்து நின்றாள் ….

“கூல்! கூல்! ஏனிந்த பதட்டம். ?”

படிக்கட்டு முடியுமிடத்தில் நிலையை ஒரு கையால் தாங்கிக் கொண்டு உடலை வளைத்து நின்றிருந்தான் அவன்.

“வினு! “சப்தமின்றி உதடு பிரிந்து மூடியது.

“இங்கே வந்து ஒளிந்து கொண்டால் உன் புருஷனால் கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைப்பா? அது சரி! நீ என்னை புருஷனா நினைத்திருந்தால் தானே! மனுஷனாக் கூட நினைக்காத போது உன்கிட்ட இதை எதிர்பார்க்கலாமா? “

முள்ளுக்காட்டை மீண்டும் கட்டிக்கொண்ட முகம் மதுமதி கீழுதட்டை பற்களால் அழுந்தக் கடித்தாள்.

“நான் தான் கணக்குஇல்லே எங்கம்மாவையேனும் யோசிச்சியா? “

கண்ணுக்குள் குளம் கட்டியது இதழ் துடித்தது.

“ஒரே ஒரு கால் பண்ணியிருக்கலாம் தானே? உயிரோடு சாகடிச்சிட்டியேடி “




“வினூ….!” மதுமதி தன் கட்டுப்பாட்டையிழந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டு தொங்கினாள். அவனுடைய கை அவளுடைய இடையைப் பற்றியது. அவளுடைய முகம் அவனுடைய நெஞ்சில் புதைந்தது.

அவளை விலக்கி நிறுத்தியவன்

உறுத்து விழித்தான்…அவளோ பார்வையைத் தழைத்துக் கொண்டாள்.

“நீங்க …எப்…எப்படி இங்கே “

“நீ இங்கே வந்த அஞ்சாவது நாளே கண்டுபிடிச்சிட்டேனடி. நீ ஒரு கால் பண்ணி இங்கேயிருக்கேன்னு சொல்லுவன்னு எதிர்பார்த்தேன். ஆனா…சுலபமா மறந்துட்டீங்களே மகராணி “

“ப்ச்! அப்படியில்லே! தொலைஞ்சு போனவ தொலைஞ்சு போனவளாகவே இருந்திட்டா அங்கே நிலைமை சரியாயிடும்னு நினைச்சேன் “

மென்று விழுங்கினாள்.

“தொலையட்டும்னு விட்டுவிட நான் ஒன்னும் கையாலாகதவன் இல்லடி “

“என்ன நீங்க வார்த்தைக்கு வார்த்தை டீ போடறீங்க “

“ஆமாம்டீ! இப்போ இதான் முக்யம். “

“அதான் முக்யமின்னு மறுநாளே ஓடி வந்திட்டாற்போல பேசியாகிறது “

“என்னடி முணுமுணுன்றே! உடனே வராம அங்கே சிலபேரை வச்சு செய்ய வேண்டியிருந்தது. அதான் நீ பாதுகாப்பான இடத்திலே இருக்கியேன்னு விட்டுட்டேன்”

“அப்போ இப்ப ஏன் வரணுமாம்? “

“வரவேண்டிய வேலையிருந்தது. அப்படியே அம்மிணிய பார்த்துட்டு நடையைக் கட்டலாம் னு “

அவள் அவனைத்தள்ளி விட்டுவிட்டு திரும்ப அவனோ அவள் கையைப்பிடித்து இழுத்தான்.

“பார்த்தாச்சுல்ல! நடையைக் கட்டுங்க! எங்கம்மா அப்பா வற்ற நேரம். என் தங்கை வேற எழுந்திருக்கிற நேரம்.”

“அடடே! அம்மிணி பெரிய குடும்பியாயிட்டாங்க போலே! “

“ஏன் எனக்கு யாருமில்லேன்னு நினைச்சீங்களா? “

குரல் தழுதழுத்தது.

“ச்சீ! யாருடி அப்படி நினைச்சது. என் மகள் என் மகள்ன்னு உயிரை விடற உன் மாம்ஸ் இருக்கான். அம்மா அம்மான்னு உன்னைத் தேடுற உன் பொண்ணுயிருக்கா மருமகளேன்னு ஆசையா க் கூப்பிடுற உங்க அத்தை மாமானார் செல்விக்கா எல்லாரும் இருக்கிறாங்க .”

“ஆனா நீங்க எனக்கு ஒன்னுமில்லையா? “

“ஆமாம் தேனும்மா நீயில்லைன்னா நான் ஒண்ணுமேயில்லை. நீ காணாமல் போய் உன்னைப்பத்தின விவரம் கிடைக்கிற வரைக்கும் நான் ஒன்னுமேயில்லாமத்தான் போயிருந்தேன். வீடு வீடாவேயில்லை. உன்னைச் சுத்தித்தான் எங்க உலகமேயிருக்குன்னு அப்போதான் புரிஞ்சுது தேனு! “

“நா…வந்து…இல்ல…”அவளை எதுவும் பேசவிடாமல் தன் இதழ்களினால் அவள் இதழ்களைச் சிறை செய்தான். அவள் விழி மூடித் துவள இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான்.




அரவிந்தன் அனுப்பி வைத்த போட்டோ ஒன்றில் அவள் பின்னால் நரசிங்க தேவப் பாண்டியன்  நிற்பது போலிருக்க மேற்கொண்டு சிலவிவரங்களைக் கேட்க மறுநாளே மொத்த டிடெயில்சும் கிடைத்து விட்டது. மதுமதி ரவுடிகளிடமிருந்து தப்பித்து நரசிங்க தேவனிடமே சரண் ஆகியிருக்கிறாள் என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின்னே மூச்சு வந்தது அவனுக்கு. அப்போதும் யாரிடமும் விஷயத்தைப்பகிர்ந்து கொள்ளவில்லை. அவனுக்கு இந்த கடத்தலின் பின்னணியிலிருப்பவர்களை அறிய வேண்டிய அவசியமிருந்தது. அரவிந்தனும் சரவணபாண்டியனும் சேகரித்தத் தகவல்கள் கிடைத்தபோது அத்தனை கோபம் வந்திருந்தது. இதன் மூலகாரணத்தை அறிய வேண்டி டிடெக்டிவ் அரவிந்தனின் துணையோடு சில வேலைகளை செய்தான்.

அதில் கிடைத்த செய்திகள் அவனை திடுக்கிட வைத்ததோடு எப்பேர்ப்பட்ட நாகப்பாம்பை பாலூட்டி சீராட்டியபடி முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்பது புரிந்ததுமே மடமடவென செயல்பட ஆரம்பித்தான்.

அதன் விளைவாய் சிவகாமி தேவி கடத்தப்பட்டாள்.

அரவிந்தனின் உதவியோடு. அத்தோடு சிவகாமியின் வாய்மொழியாகவே பேசியவை ஆடியோ வீடியோ ரெக்கார்டாக்கப்பட்டு அதை அண்ணனும் தம்பியும் தனியறையில் வைத்து கேட்கவும் செய்தனர்.

          வீரேந்திர பூபதியின் பால் கொண்ட வன்மமும் பணம் பதவி மோகமும் சிவகாமியை எத்தனை கீழ்த்தரத்திற்கு தள்ளி விட்டுள்ளது என்பதை அவர் வாய் வார்த்தையாகவே கேட்கையில் மனசு விட்டுத்தான் போயிற்று.

          சின்னசின்னதாக பணம் நகை ஆஸ்தி என்று கணக்குப்போட்டுக் கொண்டே வந்த மனம் கடைசியாக வீட்டைவிட்டுவெளியேறி திருமணம் செய்து கொண்ட சத்ய தேவ் இல்லாமலே போய்விட்டால்……. குயுக்தியாக யோசித்ததில்  விளைந்தது தான் சத்யதேவ் சந்தித்த விபத்து .

சத்யா இறந்து போய்விட்டால்…… பின்பு ஏகபோக வாரிசான விஷ்ணுவுக்கு லாவண்யாவை மணமுடித்து விட்டால்…. அவரே      ஜமினின் வாரிசு.

ஆனால் விஷ்ணு வாளைமீனாக கையிலகப்படாமல் துள்ளிக் கொண்டிருக்க. சிவகாமியும் வீரேந்திர பூபதியிடம் ஜாதகம் மாங்கல்ய பலம் அது இது என்று குழப்பினார்.

இதற்கிடையில் சத்யதேவ்வின் உடல் கிடைக்காததையும் ….அனாதைப்பிணமாக யாரோ தகனம் செய்ததையும் சொல்லிக் காட்டியே தம்பியையும் தம்பி மனைவியையும் குற்றஉணர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

ஒருவேளை விஷ்ணு லாவண்யாவை மணமுடிக்காவிட்டால்  விஷ்ணுவையுமே முடித்துவிட வேண்டியது தான் என்ற எண்ணத்திலிருந்தார். இதற்கிடையில் சத்ய தேவ் கோமாவிலிருந்து மீண்டு வீடு வந்து விட மதுமதியை ரஞ்சனி மூத்த மருமகளாக தேர்வு செய்ய சிவகாமி தேவிக்கு சொல்லொண்ணா அதிர்ச்சியும் எரிச்சலும்.

அதற்கேற்றார் போல. மதுமதிமட்டுமே தனியே வீட்டிலிருக்க அவர் அவளை மானசீகமாக பலவீனப்படுத்தி அவளாகவே வீட்டைவிட்டு வெளியேறும் படி செய்ய நினைத்து காய் நகர்த்த …..எல்லாம் அழகாகவே நடந்தது.அவரே  எதிர்பாராத  விஷயமாய் விஷ்ணு வந்ததும் அவளை மருத்துவ மனையில் சேர்த்ததும்!  இந்த ட்விஸ்ட்டையும் நன்றாகவே கையாண்டார். இரவோடிரவாக அவளைக் கடத்தி விடும்படி அவருக்குத் தெரிந்த ரவுடியிடம் பேசி பணமும் கைமாறியது மதுமதியுமே இடம்மாறினாள். எல்லாமே அவருக்கு சாதகமாகவே நகர சிவகாமிதேவி




வெற்றிக்களிப்பில் கொக்கரித்தார். ஒன்று லாவண்யாவுடன் விஷ்ணு திருமணம்

இல்லை விஷ்ணு செத்து மடியனும் என்ற முடிவிலிருந்தவர்….. இன்னொன்றும் யோசித்து பெண்ணிடம் பேசினார்.

‘ஏன் சத்யதேவை லாவண்யா கட்டிக் கொள்ளக்கூடாது. திருமணமான கையோடு சொத்துக்களில் பெரும்பகுதியை சத்யதேவுக்கு இரண்டாம் தாரம் என்ற விஷயத்தை வைத்தே எழுதி வாங்கிக் கொண்டால்……. சத்யா கைக்கு அடங்கி நடப்பான்.விஷ்ணு போலத் துடுக்கானவன் இல்லை.

லாவண்யா நிஷாவைக்காட்டி பின் வாங்கினாள்.

அதற்கும் நிஷா பேரிலும் கணிசமாய் கறந்து விடுவோம். பிறகு. லாவண்யா சத்யாவை கைக்குள் வைத்திருக்க நிஷாவை அகற்றுவதா பெரிய விஷயம். சிவகாமி அரக்கத் தனமாய் சிரித்தார்.

அவரோடு விதியும் இப்போது சிரித்ததை அவர் அறிய வில்லை..

(தேடல் தொடரும். )




What’s your Reaction?
+1
11
+1
11
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!