Serial Stories எங்கே நானென்று தேடட்டும் என்னை

எங்கே நானென்று தேடட்டும் என்னை – 16

தேடல் 16

” வதினம்மா! அண்ணைய்யா! இக்கட சூடண்டி? எவரீ அம்மாயி “

(அண்ணி! அண்ணா இங்க பாருங்க? யாரிந்தப் பொண்ணு)

“பெத்தண்ணா! ஏமிட்ரா நீ கொடவா? “

( பெத்தண்ணா …என்னடா உன் பிரச்னை? )

அதற்குள்ளாக ஸ்ரீலஷ்மி அந்த மேடேடர் வேனில் எட்டிப்பார்த்து அதிர்ந்தாள். முகத்தைத் துடைத்துக் கொண்டே வந்த நரசிங்க தேவனும் தலையை நீட்டிப் பார்க்க வேனுக்குள் நிமிர்த்தி வைத்திருந்த  வாழையிலைக்கட்டுக் கருகில் குத்துக் கால் வைத்து கைகளை முழங்காலில் கோர்த்து தலையை சாய்த்துக் கொண்டு கண்களை மூடியிருந்தாள் அந்தப்பெண்.

அழகான முகவடிவு ஆனால் மேகம் மறைத்த  நிலவு போல முகம் களைத்து அலுப்பாய்த் தெரிந்தது.

“யாரிது? “

“எவரிது? “

“அம்மாயி…ஓ அம்மாயி!”

குரலேதும் அவள் செவியை எட்டவில்லை.

“யாருங்க இது? “

“தெரியலையேம்மா “

ஸ்ரீலஷ்மியின் மகள் வண்டியில் ஏறி

“அக்கா! அக்கா…அக்கையா “என்று குரல் கொடுத்தும் அசைவேயில்லை. தோளை பிடித்து உலுக்கினாள். உலுக்கலுக்கேற்ப தலையும் உடலும் ஆட பயமாக இருந்தது அனைவருக்கும்.

“பெத்தண்ணா நீலு தீசுரா” (பெத்தண்ணா  தண்ணீ கொண்டா)




தண்ணீர் தெளித்ததுமே மெதுவே இமை திறந்தாள் அந்தப்பெண். காட்சி புலப்படாது பார்வை மசமசத்தது.

ஸ்ரீலஷ்மியின் பெண் நந்தினி தேவி தண்ணீரால் விழிகளைத் துடைத்து விட்டதும். தண்ணீர் வேண்டும் சைகை காட்டினாள் அந்தப் பெண்.

“கிந்த திக்கிராமா! மஞ்ச்சி நீலு இஸ்ததா “( கீழே இறங்கி வாம்மா.  நல்ல தண்ணீ தாரேன்.)

நந்தினி தேவியின் கைபிடித்தவாறே மெதுவாக இறங்க ஸ்ரீலஷ்மி தாங்கிக் கொண்டு உள்ளே அழைத்துப் போனாள்.

சொம்பு நிறைய நீரும் சூடாக டீயும் கொண்டு வந்து தந்தாள்.

மடமடவென நீரைக் குடித்தவள் டீயையும் குடித்தாள். பிறகே முகம் தெளிவுக்கு வந்தது. நரசிங்க தேவன் அவளையே யோசனையுடன் பார்த்தார்.

மீண்டும் விழிகள் கிறங்க தரையிலேயே படுத்து விட்டாள்.

“ஏமண்டி…”

“விடு விடு! தூங்கி எழுந்திருக்கட்டும் விசாரிப்போம்.  ” நரசிங்க தேவன் நகர்ந்தார்.

குண்டூரு மிளகாயோடு எர்ரமிரப்பப் பண்டுவும்  மளிகையும் காய்கறிகளும் இலைக்கட்டுமாக லோடு  ஏற்றிக் கொண்டு வந்திருந்தார். கூடத்து மூலையில் காய்கறி மூட்டைகளை இறக்கிவி.டு மளிகை மூட்டைகளைத் தனியே வைத்தார். தேவையானதை மட்டும் வண்டியிலேற்றி மெஸ்ஸுக்கு அனுப்ப வேண்டும். நரசிங்க தேவனும் பெத்தண்ணாவும் தேவையை மட்டும் பிரித்து ஏற்றிவிட வண்டியை மெஸ்ஸுக்கு ஓட்டிச் சென்றான் பெத்தண்ணா.

நரசிங்கதேவனும் குளியலைப் போட்டுவிட்டு வர சூடாக சாப்பாடு வரவேற்றது. வாழையிலையில் சுடச்சுடச் சாதமும் நெய்யும் பருப்புமிட கூடமே மணத்தது. ஆவக்காய் ஊறுகாயையும் ஒரு புறமாய் வைத்தாள். மிளகு போட்ட கறிப்பிரட்டலை அள்ளி வைத்தாள்.

“தேவிம்மா சாப்பிட்டாச்சா? “

“ம் ஆச்சு “

“பின்னை நீயும் உட்காரு சாப்பிட்டு விட்டு மத்த வேலையை பார்க்கலாம். “

எல்லா உணவுப்பாத்திரத்தையும் நடுவில் வைத்துவிட்டு அவளும் ஒரு இலையை போட்டுக் கொண்டாள்.

“எங்கே இந்தப் பொண்ணு ஏறுச்சுனே தெரியலை மூணு எடத்திலே வண்டியை நிப்பாட்டினேன் .”

“இருக்கட்டும் சாப்பிடுங்க. எழுந்ததுமே விவரம் கேட்டாப்போச்சு”

“ஸ்ரீயம்மா! இந்தப் பொண்ணை எங்கியோ பார்த்திருக்கேன் “

பேசியபடியே சாப்பாட்டை முடித்தவர் படுக்கையறையினுள் சென்று படுத்து விட்டார்.

ஸ்ரீலஷ்மியும் பெண்ணிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு அடுத்தத் தெருவில் உள்ள தங்கள் மெஸ்ஸுக்கு கிளம்பினார்.சாப்பாட்டு வேளை முடிந்திருக்கும். இரவு டிபன் மட்டுமே!

ஒருமுறை பார்த்துவிட்டு  வேண்டுவதை பணியாளர்களுக்கு வேலை சொல்லிவிட்டு வீட்டு வந்து விட்டு மீண்டும் வரவேண்டும் அல்லது கணவரே பார்த்துக் கொள்வதாக இருந்தால் வீட்டிலேயே வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்து விடலாம். பெத்தண்ணா இருப்பதால் பிரச்னையில்லை. ஸ்ரீலஷ்மிக்கு தூரத்து சொந்தம். சிறுவனாக இருந்தபோதே தீ விபத்தில் பெற்றோரை இழந்துவிட கணவனின் அனுமதியோடு கையோடு அழைத்து வந்து விட்டாள்.

பள்ளியில் சேர்த்து விட்டபோதும் பெத்தண்ணா படிப்பில் அத்தனை சுரத்தாகஇல்லை. ஆனால் சுத்துப்பட்ட வேலையும் மொத்தமாய் முடித்து விடுவான்.




“தேவர் மெஸ்” சிறிதாக இரண்டு பெஞ்சும் நாலு மேஜையுமாகத்தான் ஆரம்பித்திருந்தது. ஆரம்பத்தில் ஸ்ரீலஷ்மியே சமைத்து விடுவாள். பிறகு கூட்டம் அதிகமாக அதிகமாக மேலும் நால்வரை வேலைக்கு வைத்துக் கொண்டனர். இப்போது பெரிய கூடம் போன்ற இடத்தில் ஒரே சமயத்தில் முப்பது பேர் சாப்பிடலாம். பின்னால் கொட்டகை போட்டு சமையல் நடந்தது. சைவம் தான். முன்பெல்லாம் காலைமாலை இரவு டிபன் வகையறாவும் மதியம் சாப்பாடும் என்றிருந்தது. இப்போது மதியம் சாப்பாடு இரவு டிபன் என்று குறைத்துக் கொண்டு விட்டார்கள். ஸ்ரீலஷ்மிக்கு இடையில் உடல் நிலை சீர்கெட்டுப் போகவே இந்த முடிவு.

நந்தினி தேவி ஒரே மகள். ஸ்ரீலஷ்மி தெலுங்குப் பெண்தான் என்றாலும் கேள்வி ஞானத்தில் நன்றாக தமிழ் பேசுவாள். நரசிங்கதேவனோ மறத்தமிழன்.

ஆயிற்று! இதோ ….பெண்ணுக்கு பத்து வயது முடியப் போகிறது. நரசிங்க தேவன் ஊரைவிட்டு இங்கே வந்தும் ராமரின் வனவாசம் போல பதினான்கு வருடங்களாகி விட்டது.

ஸ்ரீலஷ்மியின் அப்பாதான் பரப்பிரம்மமாய் பெருமாள் கோயிலில் உட்கார்ந்திருந்தவனைப்பார்த்து அழைத்து வந்தார். செகந்திராபாத் போயிகுடாவில் சின்னதாய் கேட் போட்ட வீடு. பின்னால் ஒரு மாமரமும் சதுரக் கேணியும்.மொட்டைமாடியில் ஒரு கட்டிலும் ஒரு பீரோவும் வைப்பது போல் ஒரு அறை. மாமர வாசம் நெஞ்சாங்கூட்டையள்ளும்.

ஸ்ரீலஷ்மியின் தகப்பனார் கோயிலுக்குப் பக்கத்தில் சின்னதாய் பூஜை சாமான்கள் விற்கும் கடை வைத்திருந்தார். சொந்த வீடு…ஒரே மகள் என்பதாலும் ஜீவனம் நன்றாகவே ஓடியது.

மூன்று நாளாய் இவனைப் பார்த்திருந்து விட்டு பேச்சுக் கொடுத்தவர் தவித்தார். அவனுக்குப்  புரியாத தெலுங்கில் இவர் மாட்லாட

அவருக்குத் தெரியாத தமிழில் இவன் பேச

கடைசியில் ஒன்று மட்டும் பாஷை தேவையில்லாமலே புரிந்தது. அதுதான் அவன் கண்ணில் தெரிந்த பசி!

ஸ்ரீலஷ்மி மொழிபெயர்ப்பாளரானாள். பள்ளியில் அவளின் உயிர்த் தோழி பூங்கொடி பக்காத் தமிழம்மாயி…. அவளுடன் பேசிபேசி தமிழை இவள் மாட்லாடியே கற்றுக்கொள்ள தெலுங்கை அவள் கற்றுக் கொள்ளவேயில்லை.diஅந்தத் தமிழ்  சமயத்திற்கு உதவியது.

வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு வந்தாயிற்று என்பது மட்டுமே சொன்னான். மாடியறை இவன் வாசஸ்தலமாக ஒரு மெஸ்ஸில் வேலையும் வாங்கித் தந்தார். மெஸ் என்பதால் சாப்பாட்டுக் கவலையில்லை. அங்கேயே சாப்பிட்டு விடுவான் தூங்க மட்டுமே இந்த அறை. இதற்கும் ஒரு வாடகை தர ஆரம்பித்தான் முதல் சம்பளம் வாங்கியதுமே! காலையிலே கீழேயுள்ள குளியறை யில் குளித்து துணிகளைத் துவைத்து  கொடியில் போட்டுவிட்டுப் போனால் இரவில் குளியல் போடும் போது எடுத்து உடுத்திக் கொள்வான். அமைதியாக இருக்குமிடமே தெரியாமல் மரியாதை தெரிந்து நடக்கிற பையனை பிடித்துப் போக ஸ்ரீலஷ்மிக்கு புருஷன் ஆனான் நரசிங்கத் தேவ பாண்டியன் சின்ன மருதூரின் இளைய வாரிசு.!

சிவகாமி தேவியின் கணவன்.லாவண்யா தேவியின் தகப்பன்.

விஷ்ணுவின் அத்தைப் புருஷன். வீரேந்திர பூபதியின் மச்சான்.

ஸ்ரீலஷ்மியை கைப்பிடித்தபோது  கையிலிருந்த தொகையை வைத்து  செக்கந்திராபாத்திலேயே மெயினான இடத்தில் மெஸ்ஸை சொந்தமாகத் துவங்கினார். அதுவே மாமனார் வீட்டில் மருமகன் மீது இன்னும் மரியாதையைக் கூட்டித் தந்தது.

திருமணமாகி இரண்டாம் வருடம் நந்தினி தேவி பிறந்த போது மெஸ் இருந்த இடத்தை லீசுக்கு  எடுத்திருந்ததை சொந்தமாக்கிக் கொண்டார். வங்கிக்கடன் உதவியுடன். மெதுமெதுவே தொழில் வளர்ந்து சொந்தமாய் வீடு வேன் என்று வசதியையும் பெருக்கிக் கொண்டு விட்டாலும் …ஸ்ரீலஷ்மியோடு உள்ளம் ஒத்து வாழ்ந்தாலும் மனதின் ஒரு மூலையில் சிவகாமியெனும்  கருவேலமுள் பொத்து பொத்து ரணத்தை ஆறவிடாதபடி செய்தபடியேயிருந்தது.

அந்த ஆறாத ரணத்தைத் தீர்க்க வைக்கும் அருமருந்தாய் வந்தது ………..அந்த சஞ்சீவியை சுமந்து வந்த அனுமந்தன் தானோ……

யாரவன்? அந்த அனாதரட்சகன்….!

                 ************

தலை பாரமாகக் கனத்தது. இமைகளைக் கஷ்டத்தோடு விலக்கினாள் அவள். பறவைகள் கூடடையும் நேரம். மாலை மயங்கிக் கொண்டிருந்தது. நினைவுச்சங்கிலி அங்கங்கே அறுந்தாற் போல் தொடர்பின்றி ஞாபகங்கள் உதிர்ந்தன.

சிவகாமி வாய்க்கு வந்தபடி பேசுகிறாள்.’நீ ஒரு நல்ல குடும்பத்துலே பொறந்தவளாயிருந்தா இப்பவே வீட்டைவிட்டுக் கிளம்பு. ‘




‘இல்லையில்லை! நீதான் மருமகள்! “ஸ்ரீரஞ்சனி அணைத்துக்கொள்கிறாள்.

“தேனம்மா! “விஷ்ணுவின் தாபமும் மோகமும் வழிகிற குரல்..

“மாமோய்!  குட்டி ஷோக்காக்கீது. ஒருதடவை குட்டியோடு மஜாவா இருந்திட்டு பைசல் பண்ணிடலாமே! “

‘சீ! வாய மூடுடா! தொயிலு தர்மம் வேணும்டா! கைபடாத ரோசாவா கொண்டான்னு நம்மதலை சொல்லிட்ட பொறவு எதையும் நினைக்கக்கூடாதுடா கய்தே! தொயில்லே நேர்மையா இருக்கணும். “

அவள் துடித்து திமிறியெழுந்தாள். புது இடம் பீதியைக் கிளப்பியது. உடம்பு தூக்கிவாரிப்போட வினோதமான சப்தம் ஒன்று தொண்டையிலிருந்து ஈனமாகப்பிறந்தது.

நந்தினி ஓடி வந்து

 “அக்கைய்யா! அக்கைய்யா “என்றழைக்க இவள் பேந்த பேந்த பார்த்தாள்.

ஓடிப்போய் தண்ணீரைக் கொண்டு வந்து நீட்டியவளிடம்

“இது …இது…எந்த இடம்?”

“அப்பா….அப்பா… தமிழம்மாயீ! வாங்கப்பா! அக்கா நீங்க தமிழா “

இவள் தலையாட்டினாள். வீட்டினுள்ளிருந்து சிறுமியின் தாயும் தந்தையும் போல வந்தனர்.

“தமிழாம்மா! உன் பேரென்ன?

“தமிழ்தான்! இது எந்த இடம்? நான் இங்கே எப்படி வந்தேன்.”

“சொல்றேன்மா! நீ பாதுகாப்பாதான் இருக்கே. இது செக்கந்திரா பாத்.   இது என் குடும்பம் என்னோட வேனில் ஏறி வந்தே! நந்தினி அக்காவுக்கு முகம் அலம்ப பின்னால கூட்டிப்போ! ஸ்ரீயம்மா பிள்ளைக்கு சாப்பிட ஏதாவது கொண்டுவா “

அவளுக்குமே இயற்கை உபாதையில் அடிவயிறு முட்டி வலித்தது. பின்புறம் போய் கைகால் முகம் கைழுவியபோது புத்துணர்வு வந்தது.

“உங்க பேரு என்னக்கா? “

“மதுமதி”

“அழகான பேருக்கா “

“உன் பேரு? “

“நந்தினி தேவி “

“உன் பேரும் கூட கம்பீரமா அழகா யிருக்கு “

சிறுமி வெட்கிச் சிரித்தாள். மதுமதி ஆசுவாசமாக உணர்ந்தாள். ஸ்ரீலஷ்மி தன்னுடைய நைட்டி ஒன்றைக் கொடுத்து குளித்து விட்டு வரும் படி சொன்னாள்.

சூடான ரசம் விட்டு பிசைந்து சாப்பிட்டதுமே உயிர் திரும்பி வந்தாற் போல் உணர்ந்தாள்.

தன்பெயர் மதுமதி பெற்றோரையும் கூடப்பிறந்த அக்காவையுமே கண்ணெதிரே விபத்தில் பறிகொடுத்து விட்ட அனாதை என்றாள். யாரோ ரவுடிகள் கடத்த முயலும் போது தப்பித்து கண்ணில் பட்ட வேனில் ஏறிவிட்டதாகச் சொன்னாள்.

சாப்பிடும் அந்த சொற்ப நேரத்திலேயே இனி விஷ்ணு வாழ்க்கையில் குறுக்கிடக் கூடாதென்ற முடிவை எடுத்திருந்தாள். அதனாலேயே நடந்ததில்  பாதியை சொன்னாள்.மீண்டும் ஊருக்குப் போக ப்பிரியமில்லையென்றும்  இங்கேயே ஒரு வேலை வாங்கித் தந்தால் போதும் யாருக்கும் பாரமில்லாமல் இருந்திடுவேன்  என்றாள்.

நந்தினிக்கு அவளை ரொம்பவே பிடித்துப் போய்விட்டது. நரசிங்க தேவன் முதலில் ஓய்வெடுத்துக்க. பிறகு மத்ததை பேசலாமென தடா போட்டார்.

அனைவருமே உண்டு விட்டு படுக்கைக்குப் போகும் நேரம் ….பெத்தண்ணாவும் வந்து சேர்ந்தான். மதுமதி நந்தினியோடு இழைந்து கொள்ள அன்றிரவு அவளருகிலேயே நிம்மதியாக உறங்கிப்போனாள். அதிலுமே அவளின் வினு இம்சித்தான்.

மங்கையவள் எடுத்த முடிவைப்பார்த்து விதி நகைத்தது.

.

(தேடல் தொடரும்.)




What’s your Reaction?
+1
13
+1
9
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!