Serial Stories சந்தன முல்லை 

சந்தன முல்லை – 1

ஜி .ஏ. பிரபா

எழுதும்

சந்தன முல்லை

(1)

                     பாதை முழுவதும் பூக்கள் உதிர்ந்திருந்தது.

       சிவப்பும், மஞ்சளுமான கொன்றைப் பூக்கள். தெரு முழுவதும் காற்று அப்பூக்களைக் கொண்டு பாதை விரித்திருந்தது. பூக்களும், இலைகளும் சேர்ந்து நடக்கையில் காலுக்கு மெத்தையாய் இருந்தது.

       முல்லை சின்னச் சின்ன அடி வைத்து நடந்தாள். நேற்று இரவு பெய்த மழையில் தெருவும், பூக்களும் ஈரமாக இருந்தது. அதன் சில்லிப்பு காலில் படும்போது சிலிர்த்தது. லேசாய் புன்னகை வந்தது.

       வீட்டிலிருந்து தெரு முனைதான் கோவில்.

       சின்ன பிள்ளையார் கோவில்தான் என்றாலும் அப்பாவுக்கு அபார நம்பிக்கை. அங்கு பூஜை போட்ட பிறகுதான் எல்லா புது முயற்சிகளையும் ஆரம்பிப்பார். இன்று கொஞ்சம் சிறப்பு பூஜை.

       மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, வாழை மரங்கள் வைத்து பூஜை நடக்கிறது. அதன்பிறகு தாலி செய்ய தங்கம் கொடுத்து விட்டு வீட்டில் பந்தக்கால் போடப் போகிறார்கள்.

       மிகப் பிரபலமான கட்டிட காண்ட்ராக்டர் ராமமூர்த்தியின் ஒரே மகள், அன்பு மகள் முல்லைக்கும், அவரின் நண்பர் சுவாமிநாதனின் மூத்த மகன் சங்கருக்கும் நாளை மறுநாள் கல்யாணம்.

       வீடே கோலாகலமாக இருக்கிறது. எல்லோரும் கோவிலில். முல்லை கையில் மாலைகளுடன், பாட்டியுடன் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

       இந்த அதிகாலை மழைக் குளிர் சில்லிப்பு, பூக்களின் ஸ்பரிசம், மெதுவாக எழுந்து கொண்டிருக்கும் சூரியக் கதிர்கள் என்று மனதை மயக்கியது. சூரியன் தன் செங்கதிர்களை பூமியை நோக்கி வீச ஆரம்பித்திருந்தான். அதன் கதிர்கள் லேசான மஞ்சள் நிறமுடன் அந்தப் பகுதி எங்கும் பரவியது.

       “கொஞ்சம் வேகமா காலை எட்டி வை முல்லை.– பாட்டி.

       “எப்படி பாட்டி? பாண்டி ஆடற மாதிரியா?

       “பூஜை முடிந்த பிறகு வா. ரெண்டு பெரும் ரோட்டில் பாண்டி விளையாடலாம்.

       “நல்லாத்தான் இருக்கும்.

       “உங்கப்பன் வீட்டை விட்டுத் துரத்துவான். அது இதை விட அருமையா இருக்கும்.

       “எப்பவும் அப்பாவை ஏதானும் சொல்லணும் உனக்கு.

       “ஆமாண்டி. விரதம் எடுத்திருக்கேன்.

       “போதும். நீ உன் திரு அருட்பாவை ஆரம்பி. ஸ்டார்ட் ம்யூசிக்– பாட்டியை அதிகம் பேச விடக் கூடாது என்று நினைத்தாள் முல்லை. 

       “பொழுது விடிந்ததென் உள்ளமென் கமலம்

       பூத்தது பொன் ஒளி பொங்கிய தெங்கும்

       “சரி அப்புறம்?

       “துற்குண மாயை போய்த் தொலைந்தது ஞானம்

       தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்

       “நல்லா மனப்பாடம் செஞ்சிருக்கே பாட்டி. நீ படிச்சிருந்தா கலெக்டர் ஆகியிருப்பே. அஞ்சாம் கிளாசோட நிறுத்திட்டே

       “நான் கலெக்டர் ஆயிடுவேன்னு பொறாமை, அப்போ எல்லோருக்கும்.

       முல்லை சிரித்தாள்.




       “எங்கும் ஆனந்தமே பரவியது எழிலுடன்

       நம்மை மயக்கவே வந்தான் மன்மதராஜன். பாட்டி சொந்தக் கவிதை படித்தாள்.

       “திடீர்னு எங்க மன்மதராஜன் வந்தார்?

       “அங்க பார் நிக்கறான்.-பாட்டி சுட்டிக் காட்டிய திசையில் அம்மாவின் தம்பி மாது நின்றார். வேலை இல்லாமல் மனைவியின் தயவில் வாழ்ந்தாலும் அலட்டல் அதிகம். அஞ்சு விரல்களிலும் மோதிரம், கழுத்தில் மைனர் செயின். அது தெரியும்படி சட்டை முன் பட்டனைத் திறந்து விட்டிருந்தார்.

       அடிக்கடி “எனக்கு எந்தக் குறையும் இல்லை. நாளைக்கு என் மனைவி போயிட்டாக் கூட எனக்கு பென்ஷன் வரும் என்பார். அவரின் ஆர்பாட்டம் பார்த்து பாட்டிதான் மன்மத ராஜன் என்று பெயர் வைத்திருந்தார்.

       “எத்தனை விரல்டி மோதிரம் போட்டிருக்கான்?

       “பத்து விரல்லேயும் மோதிரம் இருக்கு.

       “இவனைக் கொண்டுபோய் பேங்க்ல அடகு வச்சா, அத்தனையும் தங்கமா, கவரிங்கானு தெரிஞ்சுடும்.

       “அது எதுக்கு நமக்கு. நீ வாயை மூடிகிட்டு வா பாட்டி

       “வாங்க, வாங்க– அதற்குள் மாது அவர்களை வரவேற்க வந்தார்.

       “பொண்ணே லேட்டா வரலாமா?

       “என்ன செய்யறது? உங்க மாமாதான் நல்ல நேரம் பார்த்து முல்லையை கூட்டிண்டு வரச் சொன்னார்.

       “இருக்கட்டும், இருக்கட்டும். இன்னும் ஆசாரி வரவில்லை. நீங்க உள்ள போய் உட்காருங்க.– மாது தன் பத்து விரல் மோதிரங்களும் தெரியும்படி கையை ஆட்டி, ஆட்டிப் பேசினார்.

       “பளிச், பளிச்னு மின்னுதே! மோதிரங்கள் புதுசா மாது?

       “ஆமாம் பாட்டி. என் மனைவிக்கு அரியர்ஸ் எல்லாம் வந்தது. அதில் இந்த மோதிரம் செஞ்சுத் தந்தா.– பெருமை பொங்கப் பேசினார் மாது.

       “போறது போ. அதிர்ஷ்டக்காரன் நீ.

       பாட்டி முல்லையை இழுத்துக் கொண்டு உள்ளே வந்தாள்.

       “அவன் ஜென்மம் சாபல்யம் அடைந்திருக்கும்

       முல்லை சிரிப்புடன் பாட்டியைப் பின் தொடர்ந்தாள். கோவில் சின்னதுதான். முன்புறம் பெரிய பிரகாரம். இருபது பேர் உட்காரலாம். இருபது பேர் நிற்கலாம். கருவறையில் பிரம்மாண்டமான பிள்ளையார். முழு அலங்காரத்தில் இருந்தார்.

       “வாம்மா– சுவாமிநாதன் சிரிப்போடு வந்தார்.

       “நமஸ்காரம் மாமா.– முல்லை குனிந்து வணங்கினாள்.

       “நல்லா இரும்மா. சகல சௌபாக்கிய்த்தொடு வாழணும்– வாழ்த்தினார்.

       “அத்தை வரலியா மாமா?

       “பின்னாடி உங்க அம்மா கும்பலோட இருக்கா. போ

       பிரகாரத்தின் பின்னால் அம்மா, நாலைந்து பெண்களோடு அமர்ந்து தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள்.

       “நானும் உதவி செய்யறேன்– முல்லை அவர்கள் நடுவில் அமர்ந்தாள்.

       “நீ சும்மா உட்காரு. இதோ ஜாக்கெட் பிட் வைத்தா வேலை முடிஞ்சுது.– சுவாமி நாதன் மனைவி பார்வதி. “முன்னாடி போய் உட்காரு

       முல்லை மீண்டும் முன் பக்கம் வந்தாள். யாருடனோ பேசிக் கொண்டிருந்த அப்பா, வேகமாக கையில் காபியுடன் அவளிடம் வந்தார்.

       “கண்ணு, இந்தா இதைக் குடி. சூடா இருக்கு.

       “இருக்கட்டும்பா. நீங்க குடிச்சீங்களா

       “ஆச்சு. இந்தா குடி

       “பாத்து, பாத்து பொண்ணைக் கவனிக்கறீங்க. கல்யாணம் மட்டும் ஏன் சுமாரான இடத்துல கட்டிக் கொடுக்கறீங்க?

       மாது கையை ஆட்டியபடி வந்தார் அருகில்.

       “ஏன் இந்த மாப்பிள்ளைக்கு என்ன குறைச்சல். ராஜா மாதிரி இருக்கான்.
“ராஜா மாதிரி இருக்கான். ஆனா ராஜா இல்லையே. பையனுக்கு ஆஸ்தின்னு ஒன்னும் இல்லையே. ஒரு வீடு இருக்கு. இவனுக்கும் ஐடில வேலை. பென்ஷன் வரணும் மாமா. ஒரு கவர்மெண்ட் மாப்பிள்ளை பாக்கலாம்ல.

       “இப்போ எந்த கவர்மெண்ட் சர்வென்ட்டுக்கு பென்ஷன் இருக்கு?

       “இல்லைன்னாலும் ஒரு அமெரிக்கா, லண்டன், இப்படி வெளிநாட்டு மாப்பிள்ளையா பாக்கலாம்ல.

       “அதைக் கேளு மாது. செல்லமா வளர்ந்த குழந்தை. இவன் சொத்து பூரா அவளுக்குத்தான். நல்ல பெரிய இடத்துல பாக்கலாம்ல.– பாட்டி அருகில் வந்தாள்.

       அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லை. சங்கர் சுமாரான இடம் என்று எதிர்த்தாள். அம்மாவைப் பொறுத்த வரை அப்பா எது சொன்னாலும் சரி. முல்லை அப்பா பேச்சைத் தட்டியதில்லை.

       பாட்டிக்கு நெஞ்சு கொள்ளா வருத்தம். அதற்கு தூபம் போட்டார் மாது.

       அப்பா பதில் சொல்லாமல் மென் சிரிப்புடன் நகர்ந்தார்.

       “இப்படித்தான். எது சொன்னாலும் பதிலே சொல்ல மாட்டான். ஆனா தான் நினைச்சதைத்தான் செய்வான்.– பாட்டி.

       “என்னவோ நண்பனுக்கு வாக்கு கொடுத்துட்டானாம். அதனால சங்கரனுக்குத்தான் தருவேன்னு சொல்லிட்டான்.




       பாட்டி சுருதி இறங்கியது. அந்த நன்றி உணர்வு அவளுக்குப் புரிந்ததால், அழுத்தி எதிர்க்க முடியவில்லை. எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். சுவாமி நாதனுக்கு அப்பா வாக்கு கொடுத்திருந்தார். இன்று அவரின் உயரத்துக்குக் காரணமே சுவாமிநாதன்தான்.

       அப்பாவின் சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்டார். தாத்தா விவசாயம்தான். அதிலும் வருமானம் இல்லை. சுவாமிநாதனின் அம்மாதான் இவருக்கு சோறு போட்டு, படிக்க உதவி செய்தார். பொறியியலில் சிவில் படித்து வந்ததும், தன் கைக்காசைப் போட்டு சொந்தத் தொழில் ஆரம்பித்துக் கொடுத்தார்.

       அப்பா படிப்பதற்காக, தன்னால் முடிந்த உதவிகள் எல்லாம் செய்தார் சுவாமிநாதன். தொழில் ஆரம்பித்து ஆரம்பத்தில் நஷ்டம் அடைந்த போது சுவாமிநாதன்தான் தன் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து அப்பாவிடம் தருவார். நஷ்டம் என்று தெரிந்தும் அப்பாவின் ரெண்டு சென்ட் விவசாய நிலத்தை தான் விலைக்கு வாங்கி, அங்கு அப்பாவை பில்டிங் கட்டச் சொன்னார்.

       அந்த வீடுகளை விற்று வந்த லாபத்தில் புதுக் கம்பெனி ஆரம்பித்தார். அதன்பின் மடமடவென்று கம்பெனி வளர்ந்தது. அந்த நன்றியை மறக்காமல் அப்பா நட்பை மறக்காமல் இருந்தார். அதன்பின் இருவரும் கூட்டு சேர்ந்து, நிலங்கள் வாங்கி, வீடுகள் கட்டித் தர ஆரம்பித்தார்கள்.

       “நீ செய்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்னு தெரியலை– அப்பா நெகிழ்ந்தபோது,

       “உன் பொண்ணை என் பையனுக்கு கல்யாணம் செஞ்சு தா– என்று விளையாட்டாகக் கேட்டார் சுவாமிநாதன்.

       அப்பா கையடித்து வாக்கு தந்தார். “என் குலதெய்வம் சத்தியமா முல்லை உன் பையனுக்குத்தான் என்றார்.

       முல்லை வளரும்போதே சொல்லி விட்டார். “உனக்கும் சங்கரனுக்கும்தான் கல்யாணம். காதல் அது, இதுன்னு போயிடாதே என்றார்.

       சுவாமிநாதன் செய்த உதவிகளை நினைத்து வீட்டிலும் யாரும் இதை எதிர்க்கவில்லை. அப்பா செய்வது எல்லாம் சரியாக இருக்கும் என்று நினைத்தாலும் பாட்டிக்கு மட்டும் ஆதங்கம். எதுவும் பேசாமல் நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தாள்.

       பூஜை முடித்து, தாலிக்குத் தங்கம் தந்தார்கள். மூங்கில் குச்சிகளை வைத்து வினாயகர் பூஜை செய்த பின் அவற்றைக் கொண்டு வந்து வீட்டில் வைத்து, பந்தக் கால் நட்டார்கள். சின்னதாகப் பந்தல் போட்டு, இரண்டு பக்கமும் பெரிய குலைகளுடன் வாழை மரம் கட்டி, சுற்றிலும் வெள்ளை நிற சீரியல் பல்பு தொங்க விட அந்த இடமே ஜெகஜோதியாக விளங்கியது.

       மாடியில் சாப்பாடு போட்டார்கள். எல்லோரும் மாடிக்குப் போக, முல்லையும், பாட்டியும் கீழே இருந்தார்கள்.

       “சங்கர், ஏன் வரலை?-பாட்டி

       “இதுக்கு நானே தேவையில்லை பாட்டி. அவர் நான் எதுக்கு வரணும்னு வேலைக்குப் போயிட்டாராம்.

       “என்னவோ போ. சின்னஞ்சிறுசுக கல்யாணத்துக்கு முன்னாடி ஊரைச் சுத்துதுங்க. மணிக்கணக்குல செல்போன்ல பேசுது. இங்க எதுவும் இல்லை.

       முல்லைக்கும் அந்த வருத்தம் உண்டு. கல்யாணம் சிச்சயம் ஆனதிலிருந்து சங்கர் அவளுடன் பேசியதில்லை. என்னவோ விலகல் மாதிரி இருந்தான். மனசு சிறிது சஞ்சலம் அடைந்தாலும், அவன் இயல்பு அது என்று மௌனமாக இருந்து விட்டாள்.

       முல்லை உள்ளே சென்று தன் புடவையை மாற்றப் போனாள்.

       சடசடவென்று வெளியில் சப்தம். என்னது, என்னது என்று தடதடவென்று மாடியிலிருந்து இறங்கி ஓடி வரும் சப்தம். வாசலில் கட்டியிருந்த வாழைமரம் பெருத்த சப்தத்துடன் முறிந்து விழுந்திருந்தது.

  


                                ***********************

What’s your Reaction?
+1
17
+1
34
+1
1
+1
1
+1
0
+1
1
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!