Entertainment Serial Stories

சந்தன முல்லை -2

(2)

                           அதிர்ந்து நின்றாள் முல்லை.

       என்ன நடந்தது என்று ஒரு நிமிஷம் புரியவில்லை. அந்த வாழைமரம் பந்தலையும் இழுத்துக் கொண்டு விழுந்திருந்தது. பந்தல் பாதி கீழே தொங்கிக் கொண்டிருந்தது.

       வாழை மரத்தை இழுத்து, இழுத்துத் தின்ற ஆடுகள் தொலைவில் ஓடிப் போயிருந்தது. வீட்டிற்கு எதிரில் புதர்கள் அடர்ந்த காலி இடம் இருந்தது.  அங்கு இருபது ஆடுகளுக்கு மேலாக தினசரி மேய்ந்து கொண்டிருக்கும். முல்லை வீட்டு கேட் சிறிது திறந்திருந்தாலும் அத்தனையும் உள்ளே நுழைந்து மாடித் தோட்டத்தை துவம்சம் செய்து விடும்.

       எப்பவும் கேட்டைச் சாற்றியே வைத்திருப்பார்கள். இன்று வருவோரும், போவோருமாய் கேட் திறந்தே இருந்தது. ஆடுகள் இஷ்டத்திற்கு உள்ளே புகுந்தது. வாசலில் கட்டியிருந்த வாழை மரத்தை இழுத்து, இழுத்துக் கடித்தது. அத்தனையும் சேர்ந்து வாழை மரத்தை இழுத்ததில் அது முறிந்து விழுந்திருந்தது.

       வேலையாட்கள், சாப்பிட்டு வந்து பந்தலை இறுக்கக் கட்டலாம் என்று போனதில் அதுவும் சரிந்திருந்தது. பாட்டி நிலை குலைந்து போயிருந்தாள்.

       “என்னடா இது அபசகுனம் மாதிரி?

       அப்பாவும் கலங்கிப் போயிருந்தார். கண்கள் நிலை குத்திப் பார்த்திருக்க, பிரமை பிடித்தவர் போல் நின்றிருந்தார். சுவாமிநாதன் அவசரமாகப் போய் பந்தலை எடுத்து நிறுத்தினார். வாழை மரத்தை எடுத்து உள்ளே வைத்தார்.

       “ஆடு மேய்க்கற ஆள் எங்கே?

       “அந்தப் பொம்பளை இங்க ஆடுகளை மேய விட்டுட்டு போயிடும். நாங்களும் எத்தனையோ சொல்லிட்டோம். கேக்கலை. மாடுகளையும் கொண்டு வந்து மேய விட்டுடும்.– பக்கத்து வீட்டினர்.

       ஒரு ஆள், அந்தப் பெண்மணியைத் தேடி ஓடினார்.




       அம்மா கண்ணில் நீருடன் பாட்டியை ஏறிட்டார். அவளின் மனப் பதற்றம் அனைவருக்கும் புரிந்தது. இன்னும் இரண்டே நாள் இருக்கும் நிலையில் இப்படி ஒரு நிகழ்வா என்று அவள் மனம் பதறியது.

       ஆட்கள் பந்தலை எடுத்து நிறுத்தினார்கள். சீரியல் பல்புகளை மாட்டி, வாழை மரத்தை கேட்டை ஒட்டி உள்பக்கமாகக் கட்டினார்கள்.

       “இதில் நம்ம தப்புன்னு எதுவும் இல்லை. பந்தல் ஸ்ட்ராங்கா இல்லை. ஆடு இழுத்ததும் விழுந்துருச்சி. அதான் கட்டியாச்சே மறுபடியும். போய் அடுத்த வேலையைப் பார்க்கலாம்.– அப்பாவின் மாமா.

       “நட்பு, வாக்குன்னு சுவாமி உத்தரவு எதுவும் கேக்கலை. அதான் இப்படி.– மாது.

       “நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?– அம்மா சீறினாள்

       “எந்த நேரத்தில் எது பேசறதுன்னு அறிவு இல்லையா உனக்கு?

       “நல்லது சொன்னா, உங்களுக்குப் பிடிக்காது.

       “என்ன செய்யனும்கறே

       “சுவாமிகிட்ட வாக்கு கேளு. ரெண்டுபேர் ஜாதகத்தையும் பார்.

       “உளறாதே– பாட்டி சீறினாள். “நாளை மறுநாள் கல்யாணம். இப்போ போய் இப்படி பேசறே? வாக்கு, கேட்கவும், ஜாதகம் பாக்கவும் இதா நேரம்? போய் சுவாமிக்கு ஒரு தேங்காய் உடைசிட்டு அடுத்த வேலையைப் பாருங்கோ. ஏதானும் செஞ்சு நமக்கு எதிர்மறையா பதில் வந்தா என்ன செய்ய முடியும்? ராமமூர்த்தி நீ போய் ஆக வேண்டியதைப் பாரு.

       சுவாமிநாதன் அப்பாவிடம் வந்தார்.

       “ராமு வா, நாம போய் குருஜியைப் பார்த்துட்டு வரலாம்.

       அவர்கள் அடிக்கடி போகும் இடம் குருஜி ஆசிரமம். நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ற அறிவுரைகளைச் சொல்வார். வழி காட்டுவார். இந்தக் கல்யாண ஏற்பாடுகள் ஆரம்பித்ததும் அவரிடம்தான் முதலில் சொன்னார்கள்.

       கண்ணை மூடி தியானித்தவர் “ என்ன தடைகள் வந்தாலும் கல்யாணம் நடக்கும். கவலைப்படாதே. நான் பிரே செய்கிறேன்.– என்றார்.

       மனசு கலங்கும் போதெல்லாம் அவரிடம்தான் ஓடுவார்கள். சிறிது நேரம் அங்கு அமர்ந்திருப்பார்கள். மனசு என்ன செய்வது என்று வழி காட்டும். திருப்தியுடன் திரும்புவார்கள்.

       பந்தலைச் சரி செய்து விட்டு, டிபனை முடித்து விட்டுக் கிளம்பினார்கள்.

       வீடு நிமிஷத்தில் காலி ஆயிற்று. பாட்டி கண்மூடி சோபாவில் சாய, முல்லை வாசலில் வந்து உட்கார்ந்தாள். வீட்டைக் கட்டும்போதே திண்ணை வேண்டும் என்று சொல்லி விட்டார் அப்பா. இரண்டு பக்கமும் திண்ணை கட்டி, முன்னாடி சின்னதாக கார் நிறுத்த இடம், கேட். எதிரில் காலி இடம் என்பதால் வெயில் மட்டும் சுளீரென்று அடிக்கும். அதற்காக அப்பா, திண்ணையிலிருந்து கேட் வரை கம்பிக் கூரை போட்டு, மேலே காகிதப் பூ செடி படர விட்டிருந்தார்.

       பந்தல் போட்ட பிறகு நிழலாக இருந்தது. காலையில் எழுந்து கோலம் போடும்போதே முல்லை திண்ணை மேலும் தண்ணீர் ஊற்றி விடுவாள். ஈரத்துடன், ஜில்லிப்பாக இருக்கும்.

       முல்லை திண்ணையில் அமர்ந்தாள். தலை வலித்தது. நடந்தது எதுவும் மனசில் பதியவில்லை. ஏன், எதற்கு என்பதை விட, இனி அடுத்து என்ன என்றுதான் குழப்பம் மிஞ்சியது.

       அப்பா மனசு பற்றிதான் அவள் கவலைப் பட்டாள்.

       அப்பா கடின உழைப்பாளி. நட்புக்கு முக்கியத்துவம் தருவார். நேர்மையா இருந்தா எப்பவும் நல்லதுதான் நடக்கும் என்று சொல்வார். அப்படிதான் இருந்தார். அவரின் வாழ்வே முல்லைதான்.

       “நீ, உன் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். என்றவர் சங்கருடன் திருமணம் நடக்கும் முன்பு அவளிடம் பேசினார்.

       “கண்ணு. உனக்கு ஏதானும் மனசுல ஆசை இருக்கா? வேற யார் மேலயானும் விருப்பம் இருக்கா?

       “என்ன கேள்விப்பா இது? எனக்கு அப்படி எல்லாம் எதுவும் இல்லை. எனக்குத் தேவையானதைச் செய்ய நீங்க இருக்கறப்போ நான் அப்படி எல்லாம் போவேனா?

       “நன்றிம்மா. உனக்கும் சங்கருக்கும் கல்யாணம் செஞ்சிடலாம்னு. உன் படிப்பு முடிய வெயிடிங்.

       “எனக்கு ஃபைனல் செமஸ்டர் முடிஞ்சுதுப்பா.

       “உனக்கு ஓகேன்னா, கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிக்கலாமா?

       “ஆரம்பிங்கப்பா. என்று முல்லை கூறியதும் உற்சாகமாக நிச்சய ஏற்பாடுகளை ஆரம்பித்தார். ஆனால் இன்று இந்த அபசகுனம்?

       முல்லை என்ன யோசிப்பது என்று தெரியவில்லை. சங்கரை நினைவில் கொண்டு வர முயன்றாள். அவன் முகம் பழைய மங்கிப் போன கருப்பு வெள்ளை படம் போல் மனதில் தோன்றியது. அடிக்கடி சுவாமிநாதன் மட்டுமே வீட்டுக்கு வந்து போவார். ஏதானும் விசேஷம் என்றால் பார்வதி உடன் வருவார். மற்றபடி சங்கர் வந்ததில்லை.

       சங்கரின் பள்ளிப் படிப்பு திருச்சியில். கல்லூரி சென்னை. அது முடித்ததும் பிலானியில் மேற்படிப்பு. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆகி ஹைதராபாத்தில் போஸ்டிங். அதன்பிறகு மீண்டும் சென்னை வந்தான்.

       படிப்பு, வேலை என்று இந்தப் பக்கமே வந்ததில்லை.

       நிச்சயத்தின்போது கூட அமைதியாக நண்பர்கள் மத்தியில் இருந்தவன், இவளிடம் சொல்லிக் கொள்ளாமல் போய்விட்டான்.




       ஒருவேளை அவனுக்கு தன்னைப் பிடிக்கவில்லையோ?

       திக்கென்றது.

       இது தெரிந்தால் அப்பாவின் உணர்வுகள் எப்படி இருக்கும்?

       அது மனத்தைக் குடைந்தது.

       “என்னம்மா யோசனை?– பாட்டி வெளியில் வந்து திண்ணையோரம் அமர்ந்தார்.

       “என்னவோ யோசனை.

       “எதுக்கும் மனசைப் போட்டு அலட்டிக்காதே. எல்லாம் நல்லதே நடக்கும். அவங்கதான் குருஜியைப் பார்க்கப் போயிருக்காங்க இல்லையா. நல்ல வார்த்தை சொல்லி அனுப்புவார்.

       “இந்தக் கல்யாணத்துல அவருக்கு இஷ்டம் இல்லையோ பாட்டி?

       “ஏன் இப்படிச் சொல்றே?

       முல்லை தன் மனசில் இருந்த சந்தேகத்தைக் கூற பாட்டி சிரித்தாள்.

       “காலைல நான் கிண்டலுக்காகச் சொன்னேன். ஆனா செல்போன்ல பேசி, ஊரைச் சுத்தினாத்தான் காதல்னு இல்லை. அது மனசின் ஆழம். உணர்வுகள், செயல்கள் மூலம் வெளிப்படும் விஷயம். உங்க தாத்தா என்னைப் பார்க்கக் கூட இல்லை. ஆனா அழகா செயல்கள் மூலம் யாருக்கும் தெரியாம அன்பைக் காட்டுவார்.

       “அட, மலரும் நினைவுகளா?

       “இல்லை என்றும் வாடாத நினைவுகள். ஒரு பெண்ணின் மிகப் பெரிய இழப்பு அன்றில் பறவையின் துணையை இழக்கறது. அவ மேலும் வாழறதுக்கான காரணமே, குழந்தைகளும், கணவனுடன் கூடிய மலரும் நினைவுகள்தான். என் ஒவ்வொரு அணுவிலும் தாத்தாவின் நினைவு இருக்கு. அவர் காதல் வசனம் பேசியதில்லை. ஆனால் காதலை சின்னச் சின்ன விஷயங்கள், அக்கறை மூலம் காட்டினார்.

       பாட்டி பந்தல்மேல் வந்தமர்ந்த ஒரு காக்கையைப் பார்த்தபடி இருந்தார். முல்லை உள்ளே சென்று சிறிது சாதம் கொண்டு வந்து வைத்தாள்.

       காப்பி கலந்து தனக்கும், பாட்டிக்கும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள்.

       “நான் உன்கிட்ட காபி வேணும்னு கேட்டேனா?

       “இல்லை. நீங்க இந்நேரத்துக்கு குடிப்பீங்கன்னு தெரியும்.

       “இந்த அக்கறைதாண்டி காதல். அது எதிர்பாலினம் மேலதான் வரணும்னு இல்லை. இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றுகிறோம். அது காதல். காதலாகிக் கனிந்து கண்ணீர் சிந்தின்னு பாடறது இல்லையா? நம்ம பிரியத்துக்கு உரியவர் மேல நாம காட்டற அக்கறை, கனிவு, பிரியம் இதே எல்லாமே காதல்தான். அந்தக் காதல் உங்க ரெண்டு பேருக்கு நடுவுல வரணும்.

       “சங்கர் உன்கிட்ட உருக வேண்டாம். ஆனா உன்னை சக மனுஷியா மதிக்கணும். உன் வளர்ச்சியில் அக்கறை காட்டனும். இவ என்னுடையவள். என்னில் பாதிங்கர உணர்வோடு நடக்கணும். பெண் வெறும் போகத்துக்கு உரியவள் இல்லைடி. உயிரின் சக்தி அவள்.

       பாட்டி மனம் விட்டுப் பேசினாள்.

       முல்லை அவளைத் தடுக்காமல் அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

       “இந்தச் சென்னையில் ஒரு பக்கம் தறி கெட்ட நாகரீகம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம், பாரம்பரியம், நேர்மை, சத்தியம்கற  வாழ்க்கையும் ஓடிட்டு இருக்கு. நமக்கு எது வேணும்னு தேர்ந்தெடுக்கறதுலதான் நம்ம மகிழ்ச்சி இருக்கு.

       “ஆமாம் பாட்டி.

       “முல்லை நான் சொல்றேன். நல்லா மனசுல வச்சுக்கோ. பெருமைக்காக எதையும் செய்யாதே. உனக்கு எது மன நிறைவோ அதை சந்தோஷமா செய். ஆனா எதைச் செய்யணுமோ, அதைச் செய். யாரையும் கெஞ்சாதே. அதேபோல் யாருக்கும் அஞ்சாதே. உன் வாழ்வை உனக்காக வாழு. அதே சமயம் அது மற்றவர்களை பாதிக்காம பார்த்துக்கோ.

       முல்லை யோசனையோடு பாட்டியைப் பார்த்தாள்.

       இதை எதுக்கு இப்போது சொல்கிறாள்? என்றாலும் இதில் எதோ விஷயம் இருக்கிறது என்று தோண அவள் சொல்வதை மனதில் குறித்துக் கொண்டாள்.

       “என்னவோ என் மனசுல தோணுதுடி. நிறையச் சோதனைகள் வரப் போகுது. பகவானே

       “அதான் பகவானேன்னு சொல்லிட்டீல்ல, அவர் பாத்துப்பார்.

       பாட்டி அவள் தலையைத் தடவிக் கொடுத்து விட்டு உள்ளே எழுந்து போனாள். முல்லை அங்கேயே உட்கார்ந்திருந்தாள். அப்பா சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.

       “குருஜி, சென்னை போயிட்டாராம். ரெண்டு நாள் ஆகுமாம் வரதுக்கு.– அப்பா சோர்ந்து போய் அமர்ந்தார்.

       “சரி, மனசு விடாதே. மேல கல்யாண காரியங்களைக் கவனி. எல்லாம் நல்லதா நடக்கும்.– பாட்டி சொல்ல அப்பா, “நான் போய் மண்டபத்துல பூ மேடை அலங்காரம் சொல்லிட்டு வரேன் என்று போனார். ஆனால் மாலை சுவாமிநாதன் வீட்டிற்கு வந்து நீள நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்தார்.

       “இந்தக் கல்யாணம் நடக்காது ராமு– குலுங்கிக் குலுங்கி அழுதார்.

       கலங்கிப் போய் நின்றது வீடு.

                                         *****************




What’s your Reaction?
+1
12
+1
27
+1
0
+1
0
+1
0
+1
0
+1
6
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!