Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 9

9

மலையுச்சி பார்க்கலாமென
இளம் மஞ்சளும் , நீலமும் கலந்து
பளபளக்கும் சிறகுகளை பூட்டிவிட்டு …
விரிக்காதே … சுருக்கிக் கொள்,
வெறிக்கும் வெயிலில்
சாயம் போய்விடுமென்கிறாய் .
காய்ந்து உலர்ந்த அவற்றை
கழுத்திழுக்க சுமந்து கொண்டு
என்ன செய்யட்டும் நான் ????
மூக்கு சுருக்கி முகம் நோக்குகையில்
கூந்தல் கலைத்து
ஆடை ஆராயும் தென்றலாகிறாய் ,
தாள முடியாமல் தவித்து
விரிக்காத சிறகுகளின்
புள்ளி எண்ணி ..
கோடுகளாக்க முனைகிறேன் நான் .




” இதை சாப்பிடும்மா …” தனது முன் நீண்ட  அல்வா கிண்ணத்தை  திகைப்புடன் பார்த்தாள் சஹானா .

” ஆன்ட்டி ….” அலறினாள் .

” எனக்கிருக்கிறது வயிறா இல்லை ரைஸ்மில்லா ….? நீங்க தட்ட …தட்ட அரைச்சி தள்ள …மதியம் நீங்க போட்ட பிரியாணியே இன்னும் மூக்கு வரை இருக்குது .அதுக்குள்ள சாயந்திர டிபன்னு இப்படி பருப்பு அரைச்சு , நெய்யை கொட்டி அல்வான்னு சொல்லி நீட்டுறீங்களே …இப்படி தின்னால் நான் என்ன ஆவேன் …? “

” இதோ இப்படி ஒட்டடைக்குச்சி மாதிரி உயர்ந்து ஒடியிறாப் போல இருக்கியே , அது மாறி கொஞ்சம் சதை போட்டு எங்கள் சாம்பவியை மாதிரி அழகாகிவிடுவாய் .அவ்வளவுதான் …” இன்னும் கொஞ்சம் பாதாம் அல்வாவை அவள் கிண்ணத்தில் வைத்தபடி கூறினாள் மரகதவல்லி .

” என்னது ..உங்க பொண்ணு மாதிரியா …? நான் அவளையே ஒரு நாலு கிலோ வெயிட்டை  குறைன்னு சொல்லிட்டிருக்கேன் .நீங்க என்னை அவளை மாதிரி மாற சொல்றீங்களே ….ஏனடி …? ” என சாம்பவியை திரும்பி பார்க்க …

அவளோ …பாதி அல்வா கிண்ணத்தை முதலிலேயே காலி பண்ணிவிட்டு ..சஹானா அழைக்கவும் இதை எங்கே போடுவது வாயிலாக …மீண்டும் கிண்ணத்திலா …என கையிலிருந்த அல்வா ஸ்பூனை பார்த்தபடி விழித்துக் கொண்டிருந்தாள் .

” ஏய் …எதுக்குடி இந்த முழி முழிக்கிறாய் …? ” என்றபடி அவள் கிண்ணத்திற்குள் எட்டிப் பார்தநுவிட்டு காணாமல் போயிருந்த பாதி அல்வாவை கண்டு ..” அடிப்பாவி இந்த ஒரு கிண்ண அல்வாவில் எவ்வளவு கலோரி இருக்கும் தெரியுமா …
இப்படி தின்னின்னா எப்படியடி வெயிட் குறையும் …? “

” நான் உன்னை வெயிட் ஏற்ற சொன்னால் , அரும்பாடுபட்டு வளர்த்து வைத்திருக்கும் என் பிள்ளையை வெயிட் குறைக்க சொல்கிறாயே …இது நியாயமா …? இப்படி அது நொட்டை …இது நொள்ளைன்னு சாப்பாட்டை குறை சொன்னேன்னு வச்சுக்க , பின்னால் பிள்ளை பெறும்போது ரொம்ப கஷ்டப்படுவாய் ..சொல்லிட்டேன் …” மகளின் குறைந்து விட்ட கிண்ணத்தை மீண்டும் நிரப்பியபடி சொன்னாள் மரகதவல்லி .

” ஆமான்டி பொண்ணுங்க பிரசவத்தின் போது நிறைய ரத்தம் சேதாரம் ஆகுமாம் .அதனால் முதலிலிருந்தே நமது உடலில் இது போல் பலகாரமெல்லாம் சாப்பிட்டு ரத்தத்தை ஏற்றி வைத்திக்கொண்டே இருக்க வேண்டுமாம் .அம்மா எப்போதும் சொல்வார்கள் …” என்றபடி தாய் தனக்கு துணை இருக்கும் தைரியத்தில் அடுத்த ஸபூன் அல்வாவை இன்னும் கொஞ்சம் பெரியதாகவே எடுத்து வாய்க்குள் திணிதநுக்கொண்டாள் சாம்பவி .




அதில் திருப்தியுற்று ” நீயும் சாப்பிடும்மா …” என்றுவிட்டு போனாள் மரகதவல்லி .அவள் அந்தப்பக்கம் போகவும் சாம்பவி தலையில் ஒரு கொட்டு வைத்து கையிலிருந்த அல்வா கிண்ணத்தை பிடுங்கி கீழே வைத்தாள் சஹானா .

” ஏன்டி நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன் .நீ விழுங்கிக் கொண்டே இருக்கிறாயே …? “

” நீயும் விழுங்கேன் .என்னை ஏன் தொல்லை செய்கிறாய் …? ” கிண்ணத்தை எடுக்க முயன்றாள் .

அவள் கைகளை தட்டிவிட்டு கழுத்தை பிடித்தாள் .” கொன்னுடுவேன் …தின்னது போதும் . எந்திரிச்சு வா வெளியே எங்கேயாவது போயிட்டு வருவோம் …”

” இப்போ எங்கேடி போக …? இருட்ட போகுதே ….”

” எங்கேயாவது …காலையிலிருந்து வீட்டிற்குள்ளேயே இருப்பது மூச்சு முட்டுவது போல் இருக்கிறது .அட்லீஸ்ட் கோவிலுக்காவது போய்விட்டு வரலாம் “

” இல்லை …இப்போ சீரியல் போட ஆரம்பிச்சிடுவாங்க …அதுதான் யோசிக்கிறேன் …” அல்வா கிண்ணத்தில் ஒரு கண்ணும் , டிவியில் ஒரு கண்ணும் பதித்தபடி கூறினாள் சாம்பவி .

” ஐயோ கடவுளே …ஸ்னாக்சும்  …டிவியும் தான் வாழ்க்கைன்னு நினைக்கிற உன்னோட மிடில் க்ளாஸ் மென்டாலிட்டியை நான் எப்படித்தான் மாற்றப் போகிறேனோ …? ” தலையில் கை வைத்துக் கொண்டாள் .

” அதென்ன மிடில்கிளாஸ் மென்டாலிடி …” முகம் சுளித்தாள் சாம்பவி .

” ம் …இதுக்கு மட்டும் கோபம் வந்திடும் …இங்கே புதிதாக ஒரு டைல்ஸ் கம்பெனி வருதுன்னு சொன்னாங்களே .அந்த விபரம் போய் விசாரித்து விட்டு வருவோம்னு காலையிலிருந்து சொல்லிட்டிருக்கறேன் .வீட்டை விட்டு வெளியேறுகிறாயா ..நீ ..? “

” அது பாட்டுக்கு வந்துட்டு போகுது .நமக்கென்ன …? “

” ஏய் நல்ல கம்பெனியாக இருந்தால் , நமக்கு அதில் வேலை கிடைக்கிறதா என பார்க்கலாமேடி …? “

” வேலைக்கு போகும் எண்ணம் எதுவும் எனக்கு இல்லையே …”

” ஏன்டி இல்லை ..? பிறகு என்ன கன்றாவிக்கு பெங்களூர் வரை வந்து படித்தாயாம் …? “




” அது ..சும்மா ..வீட்டில் பொழுது போகலை .அந்த காலேஜில் எல்லாம் எனக்கு சீட் கிடைக்கும்னு எதிர்பார்க்கலை .எப்படியோ கிடைச்சிடுச்சு .சரி படித்துத்தான் பார்ப்போமேன்னு வந்தேன் …” சஹானா அசந்த நேரமாக பார்த்து எப்படி அல்வா கிண்ணத்தை எடுப்பது என யோசித்துக் கொண்டே கூறினாள் சாம்பவி .

” ஆமாம்டி உனக்கெல்லாம் தெரியாத்தனமாகத்தான் அந்த காலேஜில் சீட் கொடுத்துட்டாங்க .உன்னைப் போய் கொஞ்சமாவது மாற்றனும்னு நினைக்கறேன் பாரு …என்னை சொல்லனும் …” நோகாமல் தன் தலையில் அடித்துக் கொண்டாள் .

,” என் கூட உன்னை ஏன்டி சேர்த்துக்கொள்கிறாய் …? உன் வழி உனக்கு , என் வழி எனக்கு .எங்க வீட்டில் எனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க . எப்படியும் இன்னும் ஆறு மாதத்தில் எவன்கிட்டேயாவது பிடித்து தள்ளி விட்டுடுவாங்க . பிறகு என் வாழ்க்கை சமையலும் , சீரியலும்தான் ….ஆனால் நீ அப்படியில்லை …ஏதேதோ செய்ய போகிறேன்னு கனவு கண்டு கொண்டிருக்கிறாய் .அது போலெல்லாம் நடந்து நிச்சயம் பெரிய ஆளாக வர வேண்டும் .ஆனால் என்னை மட்டும் விட்டு விடு …”

” என்னடி சம்பா இப்படி பேசுகறாய் …? உன்னை பற்றி உனக்கே தெரியவில்லையேடி .என்னை விட படிப்பு , பேச்சு , அறிவு …எல்லாவற்றிலும் பெஸ்ட் நீதான்டி .நீ மட்டும் துணிந்து தொழில் செய்தாயென்றால் …”

” ஏய் நிறுத்து …நிறுத்து  ….என்னது தொழிலா…? அது ஆண்பிள்ளைகள் செய்வது .எனக்கெதற்கு …? ” கேட்டுவிட்டு அல்வா கிண்ணத்தை மீண்டும் எடுத்துக் கொண்ட சாம்பவியை அறையலாமா என தோன்றியது சஹானாவுக்கு .

” தொழிலென்றால் ஆண் பிள்ளைகளுக்கா …? யாருடி அப்படி சொன்னது …? “

” தப்பு …தப்பு …உன்னைப் போல தைரியமான  பெண் பிள்ளைகளுக்கும்தான் ….” கிண்ணத்தை காலி பண்ணிவிட்டாள் .

” நீ சென்னையில் , பெங்களூரிலோதானே வேலை பார்க்க வேண்டுமென்றாய் …? சிங்கப்பூர் வேலைக்கு கூட ஏதோ இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினாயே …?…”

” என்ன …? தோழிகள் இரண்டு பேரும் என்ன பண்ணுகிறீர்கள் …? ” என்றபடி வந்தான் சந்திரன் .

” வாங்கண்ணா எப்போது வந்தீர்கள் .உங்களை கவனிக்கவேயில்லையே நாங்கள் …? “

” இப்போதுதான் உங்களை தாண்டித்தான் உள்ளே போனேன் .என்னைக் கவனிக்காமல் இருவரும் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தீர்கள் …..நீ சாப்பிட்டாயா …? இப்போது கொஞ்சம் சாப்பிடு…” என்றபடி தனது கிண்ணத்தில் இருந்த அல்வாவை அள்ளி தங்கைக்கு வாயில் கொடுத்தான் .

” அவள் ஏற்கெனவே அரைக் கிலோ அல்வா முழுங்கி விட்டாள் .இதில் நீங்கள் வேறு ஊட்டுங்கள் …” சஹானா எரிச்சலோடு சொன்னாள் .




” பொறாமைப்படாதம்மா …எனது ஆசை தங்கை நான் ஊட்டுகிறேன் .உனக்கு பிடிக்கவில்லையென்றால் திரும்பிக்கோ ….”

சந்திரனின் இந்த பதிலில் சஹானாவுக்கு இன்னமும் எரிச்சல் வந்த்து .

சஹானாவிற்கு சாம்பவியை மிகவும் பிடித்திருந்த்து .அவளது திறமையை கண்டு கொண்டு அவளை நிமிர்த்தி வெளிக்கொணர வேண்டுமென்றுதான் எண்ணினாள் .ஆனால் அதனை அவளுக்கு கட்டுப்பட்டே செய்ய வேண்டுமென நினைத்தாள் .தனது தோழிக்கு தான் ஒரு ஆலமரமாக இருக்க வேண்டுமென்று  நினைத்தாள் . ஆனால் ஆலமரத்தினடியில் ் செடிகள் வளராது என்பதையோ  …அப்படி வளர்ந்துவிட்டால் அவை மரத்தடியில் இருக்காது என்பதையோ மறந்து விட்டாள் .

மேலும் சாம்பவியின் பாசமான குடும்ப சூழல் வேறு அவளது மனதில் சிறு பொறாமையை அளித்துக் கொண்டிருந்த்து .அவளுக்காக உருகும் அப்பா , அம்மா , அண்ணன் .பார்த்து ..பார்த்து அவள் உடை முதல் உணவு வரை  கவனிக்கும் குடும்பத்தினர் .

சஹானாவின் குடும்பத்தினரும் பாசமானவர்கள்தாம் .ஆனால் அவளது அப்பா தனசேகரனும் , அம்மா மஞ்சுளாவும் சேர்ந்து தொழில் பார்ப்பவர்கள் .ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களை நிர்வகிப்பவர்கள் ்அதனால் மரகதவல்லியை போல் மகளுக்கென அல்வா கிண்டவெல்லாம்  மஞ்சுளாவிற்கு நேரம் இருந்த்தில்லை .

சமையல்கார்ரிடம் சொல்லியாகி விட்டது .டேபிளில் இருக்கிறது .எடுத்து போட்டு சாப்பிட்டு கொள் ..என்றதோடு மஞ்சுளா ஆபிஸிற்கு ஓடிவிடுவாள் .

பெற்றோருக்கு தப்பாத பிள்ளை ரிஷிதரன் .அப்பாவின் தொழில்களுடன் தனது தொழில்களையும் பெருக்கியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவன் .அவனும் அப்படித்தான் .” சாப்பிட்டாயா சஹி …? ” நடந்தபடியே கேட்டுக் கொண்டே போய்விடுவான் .

இந்த சூழ்நிலை சஹானாவிற்கு சிறுபிள்ளையிலிருந்தே பழகியதுதான் . அது அவளுக்கு வித்தியாசமாக படவில்லை .இயல்பாகத்தான் எடுத்துக்கொண்டிருந்தாள் ,சாம்பவியை அவள் குடும்பத்தினருடன் பார்க்கும் வரை .

பார்த்த பின்போ ….இது போல் என் குடும்பத்தினரும்  என்னிடம் நடந்து கொண்டால் ….என தோன்ற தொடங்கி , பின் அப்படி நினைப்பதில் உள்ள நியாயமின்மையை உணர்ந்து , …அப்படி இருக்கும் குடும்பத்தாருடன் நான் இணைந்து கொண்டால் …என தோன்ற தொடங்கிவிட்டது .

இந்த எண்ணத்திற்கு உரம் , தண்ணீரெல்லாம் போட்டு வளர்த்தவன் சந்திரன்தான் .அவன் அம்மாவை , தங்கையை பார்த்துக் கொள்ளும் பாங்கை கவனித்துக் கொண்டே இருந்தவளுக்கு , இதே போல் அவன் தன்னையும் கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என தோன்ற தொடங்கி விட்டது .

இந்த எண்ணத்தினால்தான் அடிக்கடி சாம்பவியை தேடி மதுரைக்கு ஓடி வர ஆரம்பித்தாள் .அவள் மனதில் சந்திரன் மீது அன்பிருந்த்து . இவனைப் போல் ஒரு ஆண் கணவனாக அமைந்தால் மனைவியை ராணி போல் வைத்துக் கொள்வான் ..என்ற எண்ணமிருந்த்து .ஆனால் கணவன் , மனைவியின் அன்பிற்கு அடிப்படை காதலென்பது மட்டும் அவளுக்கு தெரியாமல் போனது .




அத்தோடு இது போன்றதொரு சுகமான சூழலில் வளர்ந்த சாம்பவிக்கும் தன் வீட்டினை போன்றதொரு இயந்திர சூழலை அறிமுகப்படுத்த எண்ணினாள் .இந்த எண்ணமே அவளை சாம்பவி – ரிஷிதரன் திருமணத்தை யோசிக்க வைத்தது .

சஹானாவின் இந்த திருமண எண்ணத்தின் அடிப்படை காலம் காலமாக பெண்களுக்குள் ஊறிக் கிடக்கும் மனோபாவம்தான் .புகுந்த வீட்டில் தான் கொண்டாடப்பட வேண்டும் ்பிறந்த வீட்டில் இறுதி வரை தனது ஆதிக்கம் குறையாமல் இருக்க வேண்டும் . எவ்வளவோ படித்து பெரிய வேலையில் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணின் அடி மனதிலும் இந்த ஆதி எண்ணம் அப்படியேதான் இருக்கிறது .

தனக்கு சொல் பேச்சு கேட்கும் தன் தோழியை அண்ணனுக்கு மணம் முடித்து விட்டால் , பிறந்தவீடு இப்போது போல் எப்போதும் தன் ஆளுகைக்குள் இருக்குமென்று நினைத்தாள் .அதே போல் தன்னை பிரமிப்போடு நோக்கும் தோழியின் வீட்டிற்கு தான் மருமகளானால் புகுந்த வீட்டில் தனது ஆளுமையை செலுத்தலாமென நினைத்தாள் .

சிறு வயதிலிருந்தே அடுத்தவர் மீது அதிகாரம் செலுத்தியே பழக்கபட்டவள் . நினைத்ததை நடத்திக் காட்டியே வளர்ந்தவள் .எனவே வாழ்க்கையே தீர்மானிக்கும் இந்த பிரச்சினையையும் எப்போதும் போல் எளிதாகவே நினைத்தாள் .

அதுவும் அவள் நினைத்தது போன்றே எளிதாகவே முடிந்த்து .ஆனால் அதன் விளைவுகள்தான் எளிதானதாக இல்லை .

” ஏய் என்னடி நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் .நீ பாட்டிற்கு ஏதோ யொசனையிலேயே இருக்கிறாய் …? ” கணக்கிடுதலில் இருந்த சஹானாவை நிகழ்வுக்கு இழுத்தாள் சாம்பவி .

அவள் இப்போது சந்திரனின் அல்வாவில் பாதி முடித்துவிட்டு , முறுக்கில் பங்கிங்கிற்கு வந்திருந்தாள் .

” ம் …என்ன கேட்டாய் …? நீ இப்படி அரைக்கிறதை நிறுத்த மாட்டாயா ..? “

” இங்கே பாரும்மா இதோ தட்டு நிறைய இருக்கிறது .உனக்கு தேவையானதை எடுத்துக்கொள் .பாப்புவை கண் வைக்காதே …” இதனை சந்திரன் உணர்ந்தே சொன்னான் .

” ம் ..சரி …சரி ..கொஞ்சம் உங்கள் பாசவலை பின்னுதலை நிறுத்துங்கள் …” முகம் சுளித்த சஹானா ..

” என்னை எங்கேயடி போக சொல்கிறாய் …? ” என்றாள் சாம்பவியிடம் .

” சென்னை , ஹைதராபாத் , மும்பை …இங்கெல்லாம் உனக்கு வேலை இருக்கிறதென சொல்வாயே  சஹி ….? “




” ம் ….வேலை இருக்கிறது .ஆனால்  அங்கேயெல்லாம் போக பிடிக்கவில்லை …”

” ஏன் …? “

” நீ இங்கேதானே இருக்கிறாய் …” புன்னகைத்தாள் சஹானா .

” சஹி …ஏன்டி இப்படி …? “

” ஆமாம்டி எனக்கு அந்த வேலைகளை பார்ப்பதை விட உன்னோடு இருப்பதுதான் முக்கியமாக படுகறது …” என்றபோது சஹானாவின் பார்வை சந்தரனிடம் இருந்த்து .

அவன் திணறினான் .நெற்றியில் அரும்பி விட்ட வியர்வையை துடைத்துக் கொண்டான் ….வேண்டாம் பெண்ணே …என்னை நெருங்க முயலாதே .நம் இருவருக்குள்ளும் ஒரு ஒற்றுமையான வாழ்வு அமைய சாத்தியம் இல்லை .தனக்குள் கூறிக் கொண்டான் .

” பாப்பு எனக்கு கொஞ்சம் வேலையிருக்கிறதும்மா ..நான் வருகிறேன் ” அவசரமாக எழுந்து சென்றுவிட்டான் .

போகிறாயா …போடா …இன்னும் எத்தனை நாள் இப்படி ஓடுகிறாயென பார்க்கிறேன் .சஹானா தான் நினைத்ததை ஒரே மாதத்தில் நடத்தியும் காட்டினாள் .முதலில் தனது திருமணத்தை அவள் நடத்தியிருக்கலாம் .ஆனால் சந்திரனுக்கும் அவளுக்கும் ஒரு ஈகோ ஓடிக் கொண்டிருந்தாற்போல் உணர்ந்தாள் .

இது வரை சஹானாவை சந்திக்கும் ஆண்களெல்லாரும் விழிகளை விரித்து பிரமிப்பாகத்தான் பார்த்திருக்கின்றனர் .பார்த்த ஒரே வாரத்தில் லவ் அப்ளிகேசன் போட்டிருக்கின்றனர் .அல்லது மிக டீசன்டாக இருப்பதாக பேர் பண்ணிக்கொண்டு திருமண பேச்சை எடுத்திருக்கின்றனர் .

சந்திரனும் அவளை பிரமிப்பாகத்தான் பார்த்தான் , ரசித்தான் , பேசினான் .ஆனால் அதோடு நிறுத்திக் கொண்டான் .மேற்கொண்டு அவளிடம் அவனுக்கு எந்த எண்ணமும் இல்லையென்பதை போல்  நடந்து கொண்டான் .இதனை அவனது ஆண் பிள்ளை திமிர் என்று எண்ணினாள் சஹானா .எனவே அவனாகவே அவள் பின்னால் வந்து காதல் சொல்ல வேண்டுமென்று நினைத்தாள் .அதனால் தனது திருமணத்தை இரண்டாவதாக்கி , அண்ணனின் திருமணத்தை முதலில் வைத்தாள் .

அடுத்து …தான் திருமணமாகி இந்த வீட்டிற்கு வருவதற்கு முன்பு , நாத்தனார் என்ற முறையில் பிறந்தவீட்டிலிருந்து தனது தோழியை அதிகாரம் பண்ண வேண்டுமென்று நினைத்தாள் .எனது ஊரிலேயே ஒரு மாப்பிள்ளையை பார்த்து இங்கேயே செட்டிலாவேன் என்ற சாம்பவியின் எண்ணத்தை உடைக்க வேண்டுமென்ற நோக்கம் வேறு அவளுக்கு இருந்த்து.

சஹானா ….சாம்பவி – ரிஷிதரன் திருமணத்தை முடிவு செய்த்தற்கு இப்படி பல காரணங்கள் இருந்தன. அத்தனை காரணங்களையும் மனதினுள் பூட்டி , தங்களது உண்மையான தோழமையை மட்டுமே முன்னிறுத்தி இந்த திருமணத்தை மிக எளிதாக முடித்துவிட்டாள் அவள் .




தனசேகரன் , மஞ்சுளா பற்றி பிரச்சினையில்லை அவளுக்கு .பிள்ளைகளின் விருப்பம்தான் எதிலும் முக்கியமென்று நினைப்பவர்கள் அவர்கள் .ரிஷிதரன்தான் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவானென எதிர்பார்த்தாள் .அவனுக்கென பார்த்த பெண்களையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான் அவன் .

” நீயாக மனதில் யாரையும் வைத்திருக்கிறாயா …? ” என்ற கேள்விக்கு …

” அப்படி உயர்ந்த பெண் யாராவது இருக்கிறாளா என்ன ….? ” என பதில் கேள்வி கேட்டான் .

இப்போது சஹானாவின் திருமணத்திற்கு பிறகுதான் தனது திருமணம் என தள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறான் .அவனைத்தான் சமாளிக்க வேண்டும் .

அவனை சம்மதிக்க வைப்பதற்கான வழிமுறைகளை யோசிக்க ஆரம்பித்தாள் .




What’s your Reaction?
+1
28
+1
20
+1
3
+1
4
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!