Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 10

10

எழு ஞாயிறை எட்டிப் பார்க்கையில்தான்
அஸ்தமன சூரியன் சங்கமிக்க அழைக்கிறது …
இப்படித்தான் போகிறது என் வாழக்கைப் புத்தகம் …
எழுதியும் , எழுதாமலும் ..ரப்பர் அழித்த கறுப்போடு
அ, ஆ …பொறிக்கும் இரட்டை கோடு நோட்டு போல …




” அப்படி என்னம்மா அவசியம் ..அந்த பெண்ணேதான் வேண்டுமென்பதற்கு …? ” தனசேகரன் கேட்டார் .

” ஏன் டாடி …குறையென்று எதுவும் இருக்கிறதா அவளிடம் …? ” சஹானா .

” எந்தப் பெண்ணும் குறைவான பெண் கிடையாது சஹி . நாங்கள் அப்படி நினைக்க மாட்டோம் , சொல்ல மாட்டோமென்று உனக்கே தெரியும் …” மஞ்சுளா .

” பின் என்ன …இப்படி ஒரு கேள்வி …? “

” இது வாழ்க்கை பிரச்சினையம்மா .காலம் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டுமல்லவா …ம்ஹூம் எனக்கு ஒரு சப்பாத்தி போதும் தனா .கொஞ்சம் ப்ரூட்ஸ் சாப்பிட்டுக்கொள்கிறேன் .ஒரு கிலோ கூடிவிட்டேன் .அதை குறைக்க வேண்டும் …” அவள் பக்கம் தனசேகரன் நகர்த்திய சப்பாத்தி பாத்திரத்தை மீண்டும் தனசேகர் புறமே தள்ளி வைத்தபடி சொன்னாள் மஞ்சுளா .

மஞ்சுளாவை பார்க்கும் யாரும் அவளுக்கு ஐம்பது வயதென்று சொல்லி விட மாட்டார்கள் .முப்பது வயது பெண் போல் தனது தோற்றத்தை கவனமாக காத்து வருபவள் அவள் .

” மம்மி இது போலெல்லாம் நாசுக்கு சாம்பவிக்கு தெரியாது ….” கொஞ்சம் இறங்கிவிட்ட குரலில் கூறினாள் சஹானா .

” அது எனக்கும் தெரியும் .அவள் எப்படி நம் குடும்பத்தோடு பொருந்துவாளென நினைக்கிறாய் …” ஆப்பிளை துண்டாக்கியபடி கேட்டாள் மஞ்சுளா .

” நம் குடும்பத்திற் கேற்றாற் போல் அவளை மாற்றி விடலாமென நினைக்கிறேன் மம்மி …”

” நம் குடும்பத்தற்கு ஏற்றாற் போல் , இதே போன்ற பழக்க வழக்கங்களுடன் நிறைய பெண்கள் இருக்கும் போது , இது போன்ற ஒரு கட்டு பட்டியான பெண்ணை எதற்கம்மா நம் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும் …? ” தனசேகர் .

” ஏனென்றால் அவர்கள் யாரும் எனது தோழிகள் இல்லை …”

” அதுதான் எனக்கும் ஆச்சரியம் .இந்த அளவு ஆழமான நட்பாக இவளை ஏன் உனக்கு பிடித்தது ? “




” இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது டாடி .அவளை எனக்கு பிடிக்கிறது .அவ்வளவுதான் …”

” ஏதோ லவ் டயலாக் மாதிரி இருக்கிறது சஹிம்மா நீ சொல்வது …” மஞ்சுளா சிரித்தாள் .

” நட்புக்கும் , லவ்வுக்கும் கொஞ்சம்தான்மா வித்தியாசம் . எங்கள் இருவருக்குமிடையே லவ் இருப்பதால் தான் நட்பு வந்த்து .நட்பு இருப்பதால் தான் லவ்வானோம் .எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் ….”

” பார்த்து பேசு டார்லிங் .நீ இப்படி பேசுவதை யாராவது கேட்டால் தப்பாக எடுத்துக் கொள்வார்கள் …” தனசேகரன் மகள் தலையை செல்லமாக தட்டினார் .

” யார் டாடி …? என்ன தப்பாக எடுத்துக் கொள்வார்கள் ….? ” எனக் கேட்டபடி தன்னருகே வந்தமர்ந்த சகோதரனை ஏறிட்டாள் சஹானா .

ஆறடிக்கும் அதிக உயரமே இருப்பான் .ஜிம் , யோகா என பத்திரமாக உடலை பாதுகாத்து கட்டுடலுடன் நிமிர்ந்து நின்றான்  .தலை கொள்ளாத முடியுடன் , நேர் நாசியும் , அடர்ந்த மீசையும் , அளவான உதடுகளும் , சந்தன நிறமுமாக ….ஏதோ ஓர் ஹாலிவுட் பட ஹீரோவை நினைவுக்கு கொண்டு வந்தான் .

அவசரமாக சாம்பவியை மனக்கண்ணிலேயே அவனருகில் கொண்டு வந்து நிறுத்தி பார்த்து ,அவ்வளவு மோசமில்லை என திருப்தி பட்டுக் கொண்டாள் சஹானா .

” உன் தங்கை யாரையோ காதலிக்கிறாளாம் …” மஞ்சுளா குறும்பாக கூறினாள் .

” இஸ் இட் …கங்கிராட்ஸ் சிஸ் …கூ இஸ் தேட் லக்கி பர்சன் ….? ” தங்கையின் கை பற்றி குலுக்கினான் அவன் .

சஹானா தாயை முறைத்தாள் .

” நான் சொன்னதை இந்த லட்சணத்தில் தான் சொல்வாயா மம்மி ….? “

” அப்போ அது லவ் இல்லையா சஹி டியர் …? ” தனசேகரன் மேலும் மகளை சீண்டினார் .

” ஹலோ ..என்ன நடக்கிறது இங்கே …? ” ரிஷிதரன் இடையில் வந்தான் .




” ரிஷி ..நான் உன் மேரேஜை பற்றி பேசிக் கொண்டிருந்தேன் …” சஹானா …

” டாட் …சஹிக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டீர்களா …? சொல்லவேயில்லையே …? “

” ஏய் நான் உன்னைப் பற்றி சொன்னால் …”

” உன் மேரேஜுக்கு அப்புறந்தானே எனது மேரேஜென்று சொல்லியிருந்தேன் சஹி …”

” எனக்கு ஒருத்தனும் சிக்கவில்லை .நீ முதலில் பண்ணிக்கொள் …”

” எங்கே வலை விரித்தாய் கண்ணா …? ” தனசேகரன் சிரிக்காமல் கேட்டார் .

” டாட் …ஒழுங்காக என் பக்கம் பேசுவதானால் வாயை திறங்கள் .இல்லாவிட்டால் ….” வாயை மூடிக் கொள்ளுமாறு தந்தைக்கு சைகை செய்தாள் .கன அக்கறையாக தனசேகரன் கையால் வாயை மூடிக்கொண்டார் .

” வலையை இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக விரித்து பாரேன் சஹி …” குருமாவை ஊற்றிக் கொண்டு தங்கைக்க்கு ஆலோசனை சொன்னான் ரிஷிதரன் .

” யூ …” அண்ணனின் மீது சஹானா வீசிய சப்பாத்தியை கேட்ச் பிடித்தவன் , அதனையும் தனது தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான் .

இதுதான் சஹானாவின் குடும்பம் .குடும்பத்தோடு சேர்ந்து இருக்கும் போது காதல் என்ற வார்த்தையையே உச்சரிக்க யோசிக்கிற குடும்பம் சாம்பவியுடையது .யாரையாவது காதலிக்கிறாயா …? என தந்தையே மகளை கேட்கும் , காதலித்துத்தான் பாரேன் என அண்ணனே தங்கைக்கு ஆலோசனை சொல்லும் குடும்பம் சஹானாவுடையது .இரண்டும் எப்படி ஒத்து போகும் …?

ஒத்துப் போக வைக்கலாம் என்றாள் சஹானா .

” ஆல் அபார்ட் ஜோக்ஸ் ….டேய் இப்போ நீ என் ப்ரெண்டை கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறாயா இல்லையா …? “




” ஐய்யய்யோ ..நான் வேறு யாரை பற்றியோ பேசுகிறாயென்றல்லவா நினைத்திருந்தேன் .உன் ப்ரெண்டா ….உன்னை மாதிரிதானே இருப்பாள் …ஏன் சஹி ..நான் உனக்கு என்ன பாவம் பண்ணினேன்.எனக்கு  இப்படி ஒரு கொடுமை பண்ணுகிறாயே….? “

” ரிஷி ..ஐ ஆம் சீரியஸ் யா …” சஹானா அழுவது போல் ஆனாள் .

” ஓ.கே …ஓ.கே ரிலாக்ஸ் டியர் …கமான் டெல் மீ ….வாட்ஸ் யுவர் ப்ராப்ளம் …? “

” என் ப்ரெண்டை நீ …? ” முடிக்கும் முன் கையுயர்த்தி தடுத்தான் .

” பார் வாட் …? “

” ஏனென்றால் அவளை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது .எப்போதும் அவளுடன் ப்ரெண்டாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் “

” ஏன் ..இப்போது அதற்கென்ன தடை …? “

” ஆண்கள் நட்பு போல் பெண்களின் நட்பு கிடையாது .திருமணம் முடிந்த்தும் அவர்களின் நட்பும் முறிந்து விடுகிறது . எங்கள் இருவருக்குள் அப்படி நடக்க கூடாது “

” நீ எந்த நூற்றாண்டில் இருக்கிறாய் சஹி . இப்போதெல்லாம் பெண்கள் அப்படி இல்லை …” மஞ்சுளா .

” நோ மம்மி யு ஆர் ராங் . இவள் ….சாம்பவி அப்படித்தான் .திருமணம் முடிந்த்தும் தனது முந்தைய வாழ்வு முழுவதையும் கை கழுவி மறந்து விடும் ரகம் .இன்னமும் ஒரு நூற்றாண்டு பின் தங்கியே இருக்கிறாள் “

” அதுதான் எனக்கும் யோசனை சஹி .நம் ரிஷியை தெரியுமில்லையா …? எந்நேரமும் உலகம் முழுவதும் சுற்றி பிஸினஸ் செய்து கொண்டிருப்பவன் .இவனுக்கு ஈடு கொடுக்கும் பெண்ணாக பார்க்க வேண்டாமா …? இவளைப் போல் ஒரு பட்டிக்காட்டு பெண்ணையா பார்ப்பாய் ….”




” ஸ்டாப் இட் டாட் .அவள் ஒன்றும் பட்டிக்காடு இல்லை …” சஹானா அப்படித்தான் .சாம்பவியை இது போலெல்லாம் பேசி அவள் காயப்படுத்துவாள் .ஆனால் வேறு யாரையும் அவளை ஒரு சொல் சொல்ல விட மாட்டாள் .

” நீயே சொல்லு ரிஷி ..மதுரை பட்டிக்காடா …? “

” நீ இவ்வளவு நேரம் உன் தோழி அந்த மதுரை பொண்ணை பற்றியா சொல்லிக் கொண்டிருக்கிறாய் …? ” ரிஷிதரன் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தான் .

” ஆமான்டா அவளேதான் .அவள் ஓ.கே தானே உனக்கு …? ” பரபரத்தாள் சஹானா .

தங்கையின் முகத்தை பற்றி தன்புறம் திருப்பினான் ரிஷிதரன் . ” சஹிம்மா இங்கே என்னை பார் .இந்த திருமணத்திற்கு வேறு ஏதாவது …உன்னுடையதென்று ஏதாவது காரணங்கள் இருக்கிறதா …? “

சஹானா திணறினாள் .இவன் ஒருத்தன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுவிடுவான் .அண்ணனின் விழிகளை பார்க்க முடியாமல் குனிந்தாள் சஹானா .

” அப்படி …அதெல்லாம் ஒன்றுமில்லையே ….” முணுமுணுப்பாக வந்த்து அவள் குரல் .

” அப்படியா …? ..” மேலும் தங்கையை கூர்ந்தான் அவன் .

” அவள் …உன் தோழி இங்கே வந்து  வாழ்வது கடினமென்றால் , நீ அங்கே போய் வாழ்வது அதை விட கடினம் சஹி டியர் …” சாதாரணமாக சொல்லியபடி எழுந்து கை கழுவினார் தனசேகரன் .

ரிஷிதரன் அதனை ஒப்பும் முகபாவத்தோடு தங்கையை பார்த்தபடி இருக்க , ” என்ன …? ” என அதிர்ந்தாள் மஞ்சுளா .

” ஏய் என்னடி இப்படி ஒரு எண்ணத்தை வைத்துக் கொண்டா இந்த திருமணம் பற்றி பேசினாய் …? “

” அது …இல்லை மம்மி …அப்படி ஒரு எண்ணம் இருக்கிறது .ஆனால் அதனை நான் இன்னமும் சரியாக முடிவு செய்யவில்லை .ஆனால் ஹன்ட்ரட் பரசென்ட் அடித்து சொல்கிறேன் சம்பா நிச்சயம் நமது வீட்டோடு பொருந்தி போவாள் …”

” அதெப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் …? “

” நான் அவளை மாற்றிக் காட்டுவேன் மம்மி …”

” உன்னை…உன்னை அவள் மாற்றுவாளா …? அவள் வீட்டிற்கு ஏற்றாற் போல் …” தனசேகரன் அமைதியாக கேட்டார் .

” என்னையா …? நானா …நான் மாறுவேனா …? டிரை பண்ணி பார்ப்பேன் முடியாதென்றால் நம் இடத்திற்கு இழுத்து வந்து விடுவேன் …”




” அதற்கு துருப்பு சீட்டு உன் சிநேகிதியா …? ” ரிஷிதரன் நிதானமாக கேட்டான் .

“ரிஷி …..நான் இப்போதைக்கு உங்கள் திருமணத்தை மட்டும்தான் நடத்த வேண்டுமென்று நினைக்கிறேன் “

” ம் …இந்த திருமணத்தற்கு அவர்கள் வீட்டில் சம்மதிப்பார்களா …? “

” அது என் கவலை .நான் சம்மதிக்க வைப்பேன் .நீ மட்டும் இப்போது சம்மதம் சொன்னால் போதும் ரிஷி …”

” ஓ.கே டாட் .எனக்கு சம்மதம் .அடுத்த ஏற்பாடுகளை பாருங்கள் …”

” ஏய் ரிஷி …நிஜம்மாகவே சொல்கிறாயா …? “

” யெஸ் மாம் .ஐ ஆம் ஷ்யூர் ….” ரிஷிதரன் எழுந்து சென்றுவிட்டான் .

சஹானா ” ஓவ் …” என உற்சாக கூச்சல் எழுப்ப , தனசேகரனும் , மஞ்சுளாவும் ஒருவரையெருவர் பார்த்துக் கொண்டனர் .

இந்த அளவு சிரம்ம் கூட சாம்பவி வீட்டில் சஹானாவிற்கு இல்லை . தனது எண்ணத்தை சாம்பவியின் பெற்றோரிடம் அவள் சொல்லவும் , தங்கள் மகளின் அழகு , அறிவு , அடக்கம் எல்லாவற்றையும் பார்த்தே இந்த சம்பந்தம் வந்த்தென்று அவர்கள் உறுதியாக நம்பினர் .

சஹானா வீட்டினரின் வசதிகள் மாணிக்கவாசகம் , மரகதவல்லியின் சில நெருடல்களை மறக்கடித்து விட்டன. கொஞ்சம் யோசனையில் இருந்த சந்திரனும் தங்கைக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்குமோ …? என்ற எண்ணத்தில் மௌனம் காத்து விட்டான் .

ஆக , சஹானாவின் ஆசைப்படி மிக எளிதாக இந்த திருமணம் நடந்து முடிந்த்து .ஆனால் ” சிறு பிள்ளை வெள்ளாமை வீடு போய் சேராது ” என்பதற்கிணங்க அனுபவமற்ற சிறு வயது சஹானாவால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திருமண ஏற்பாடுகள் நன்றாகவே நடந்தாலும் , பத்தே நாட்களில் திருமண முறிவு ஏற்பட்டு சாம்பவி தனது தாய் வீடு வந்துவிட்டாள் .
திருமணம் நடக்க காரணமாக இருந்த சஹானாவே , அந்த திருமணம் முறியவும் காரணமாக இருந்தாள் .

அன்று …




திருமண கொண்டாட்டங்கள் ,விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடிந்து ஹனிமூனுக்காக புது மண தம்பதிகளை அனுப்ப ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் .

” சஹி ….” தயக்கமாக கெஞ்சலுடன் ஒலித்த தோழியின் குரலில் திரும்பி பார்த்தாள் சஹானா .

” ஏய் வாடி , உனக்காகத்தான் இதையெல்லாம் ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறேன் .இதோ இநத டிரஸ்செல்லாம் நேற்று உனக்காக வாங்கி வந்தேன் . அங்கே கோவாவில் போட்டுக்கொள் …”

சஹானா காட்டிய துணிமணிகளை பார்த்த சாம்பவிக்கு மயக்கம் வரும் போல் இருந்த்து .

” சஹி ..என்னடி இது யாராவது சினிமா நடிகை , மாடலிங் பொண்ணோட டிரஸ்ஸஸ் எதுவும் மாற்றி எடுத்துட்டு வந்துவிட்டாயா …? “

” என்னடி உளர்ற …? உனக்காக வாங்கிய டிரஸ்தான் …”

” இல்லை இந்த மாதிரி டிரஸ்செல்லாம் நான் போட மாட்டேன் …”

” சம்பா …நீ போக போகிற இடம் கோவா .அங்கே ஹனிமூனிக்காக போகிறாய் .உன் கணவனுடன் போகிறாய் .அங்கேயும் இது போல் சேலையை சுற்றிக் கொண்டுதான் நிற்பாயா …? “

” என் உடை இதுதானே …நான் இப்படித்தான் இருப்பேன் .இந்த கண்றாவிகளையெல்லாம் உடுத்த மாட்டேன் …”

” பைத்தியமாடி உனக்கு .ரிஷியின் ரேஞ்ச் தெரியுமா உனக்கு …? அவன் உன்னை அங்கிருப்பவர்களிடம் என் மனைவியென்று அறிமுகப்படுத்த வேண்டாமா …? இப்படி முழுதாக பட்டிக்காட்டுத்தனமாக சுற்றிக்கொண்டு நின்றாயானால் அவன் எப்படி உன்னை தைரியமாக வெளியே கூட்டிப் போவான் …? “

” அப்போ நான் இப்படி இருந்தால் உன் அண்ணன் என்னை வெளியே எங்கேயும் கூட்டிப் போக மாட்டாரா …? ” நிதானமாக கேட்டாள் சாம்பவி.

” ஆமாம் ..அப்படித்தான் …இப்படி இருந்தாயானால் அடுப்பு துணியை பிடித்துக் கொண்டு அடுப்படிக்குள்ளேயேதான் நீ கிடக்க வேண்டி வரும் .கணவன் முன் இது போன்ற மாடர்னான  உடைகளை போடுவதில் என்ன தயக்கம் உனக்கு …? “

” எதற்காக எங்கள் திருமணத்தை நடத்துவதில் அளவு கடந்த ஆவல் காட்டினாய் சஹி…? “

எதையோ உணர்ந்தாற் போல் கேட்டாள் சாம்பவி .திடீரென சாம்பவி கேட்ட கேள்வியில் இவள் எதனையோ கண்டு கொண்டாளோ ..? சஹானா திணறினாள் .

” என்னைப் போல் ஒரு ஹை சொசைட்டி வாழ்வு எனது தோழிக்கு கிடைக்க வேண்டுமென்று நினைத்தேன் …”




” அவ்வளவுதானா …? இல்லை வேறு ஏதாவது …? ” சாம்பவியின் மனதினுள் சில நாட்களாகவே இந்த சந்தேகம் இருந்த்து . சஹானாவின் பார்வை ஆவலுடன் சந்திரன் மேல் படிவதை அவள் உணர்ந்துதான் இருந்தாள் .

அண்ணனின் மனைவியாக தோழியை நினைப்பது அவளுக்கு சந்தோசமாக இருந்தாலும் , தனது குடும்ப சூழல் , சந்திரனின் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து இந்த திருமணம் சரி வராது என்ற முடிவிற்கு அவள் வந்திருந்தாள் .எனவே ஆன  மட்டும் சந்திரன் , சஹானா சந்திப்பற்கு அவள் இடை நின்றாள் .

சஹானா திடீரென இந்த திருமண ஏற்பாட்டுடன் வரவும் அவளால் ஒன்றும் சொல்ல முடியாது குழப்பம் வந்த்து . சஹானா தங்கள் வீட்டு மருமகளா …? என்ற எண்ணங்கள் அவளிடம் இருந்த்தே தவிர , தான் சஹானாவின் அண்ணியா …? என்ற எண்ணம் ஒரு நாளும் அவளுக்கு இருந்த்தில்லை .இரண்டொரு முறை அவள் பார்த்த சஹானாவின் வீடும் , பழக்கவழக்கங்களும் அந்த எண்ணத்தை அவளிடம் கொண்டு வர விடவுமில்லை .

ஆக தங்களது நடபு இறுதிவரை பிரியாமல் இருக்க வேண்டுமென்ற எண்ணம் தோழிகள் இருவருக்குமிருந்தாலும் , அதற்கான ஏற்பாடுகளில் துணிந்து இறங்கியவள் சஹானாதான் .சாம்பவி இப்போது வரை இது எப்படி நடந்த்து ..? நடக்கக் கூடாதே என விழித்துக் கொண்டுதான் இருந்தாள் .

இனி மறைத்து பயனில்லை ….தோழி கண்டு கொண்டாள் என்பதை உணர்ந்த சஹானா ….” ஏன் இருக்க கூடாதா …? ” தோழியை போன்றே ஆழமான பார்வையை அவளுக்கு கொடுத்தபடி கேட்டாள் சஹானா .

” உனக்கு சேலை கட்ட தெரியுமா சஹி …? ” பொருள் பொதித்து கேட்டாள் சாம்பவி .

” சுடிதார் போடுவது கூட அம்மாவிற்கு அவ்வளவாக பிடிக்காது …” சாம்பவி .

” ஆன்ட்டியையே ….உன் அம்மாவையே…சுடிதார் போட வைக்கிறேன் என் அம்மாவை போல்  ….பார்க்கிறாயா …? ” சவால் போல் பேசினாள் சஹானா .

” அதெல்லாம் அவ்வளவு எளிதில்லை “

” என்னால் முடியும் .நான் நடத்திக்காட்டுவேன் …”

” ம் ..சரி பார்க்கலாம் …” என எழுந்தாள் .

” ஏய் நில்லுடி ஏதோ பேச வந்தாய் .ஒன்றும் சொல்லாமலேயே போகிறாயே …”

சாம்பவியின் முகம் சிவந்த்து .” வந்து …இந்த ஹனிமூன் டிரிப்பை கொஞ்சநாள் தள்ளி வைக்க முடியாதா ….? “

” வாட் …? ஆர் யு மேட் …? வாட் பர்பஸ் யு டெல்லிங் லைக் திஸ் டியர் ..? “

சஹானாவிற்கு கவலை வந்த்து .புது மணமான பெண் .கணவனுடனான தனிமையை ஆவலுடன் எதிர்நோக்கியபடியிருப்பாள் .ஆனால் இவளோ …ஹனிமூனை தள்ளி வைக்க சொல்கிறாளே .
தலையை நிமிர்த்தி அவளை பார்க்கும் எண்ணமின்றி தரையில் கால் விரலால் குழி பெயர்த்துக் கொண்டிருக்கும் தோழியை உலுக்கி நிமிர்த்தினாள் .




” என்ன கன்றாவி இது ..? வெட்கமாக்கும் .இதையெல்லாம் தூர போட்டுவிட்டு என் கண்களை பார்த்து பதில் சொல்லு .உனக்கு ..எதுவும் …ஐ மீன் எந்த பிரச்சினையும் …அதாவது அண்ணனுடன் …உன் …? கேட்கும் வகையறியாது சஹானா தடுமாறினாள் .

” என்ன …என்னடி கேட்கிறாய் …? “

” ஆர் யு கம்பர்ட்டபள் வித் மை பிரதர் …யா ..ஹி ஸ் யுவர் ஹஸ்பென்ட் …இஸ் யுவர் பாமிலி லைப் கோ ஸ்மூத்லி …? ” சில நேரங்களில் தாய்மொழி தடுமாறுகையில் வெள்ளைக்காரன் பாஷைதான் கை கொடுக்கிறுது .

இந்த கேள்வியில் மேலும் முகம் சிவக்க தலையை தரைக்குள்ளேயே புதைப்பாள் போல் குனிந்தாள் சாம்பவி .

” சொல்லுடி …” மீண்டும் உலுக்கினாள் .

தலையை நிமிர்த்தாமலேயே ” ம் …” என்றாள் ஒற்றையெழுத்தில் .

” பிறகு ஏன்டி இப்படி ஒரு கேள்வி கேட்கிறாய் …? எந்த பெண்ணும் இப்படி நினைக்க  மாட்டாள் …”

,” அ…அது …வந்து …எ..எனக்கு …உன் அ…அண்ணனுடன் த…தனியாக இருக்க ..கொஞ்சம் பயமாக இருக்கிறது …” தடுமாறி தனது நிலை சொன்னாள் சாம்பவி .

” ஏய் …என்னடி ..புருசன் கூட தனியாக இருக்க பயமாக இருக்கிறுதுன்னு சொல்கிற முதல் பொண்ணு நீயாகத்தான் இருப்பாய் ….என்னடி ஏதாவது பிரச்சினையா உனக்கு …,”

” இல்லைடி எனக்கு ரொம்ப கூச்சமாக இருக்கிறது …” கன்னங்கள் சிவக்க வெட்கத்தில் தடுமாறும் தோழியை வினோதமாக பார்த்தாள் சஹானா .

உன் ப்ரெண்ட் இந்த நாலு நாட்களில் என் முகத்தை நிமிர்ந்து பார்த்தாளா என்றே தெரியவில்லையே …என்ற ரிஷியின் பேச்சு நினைவு வந்த்து .

” சம்பா ..நீ ரிஷியின் முகத்தையாவது நிமிர்ந்து பார்த்தாயா இல்லையா …? “

சாம்பவி தலையை நிமிர்த்தினாளில்லை .

” ஏன்டி அவன் முகத்தை பார்க்காமலேயே எப்படியடி அவனுடன் …” என்றவளை முடிக்கும் முன் அவள் வாயை பொத்தியிருந்தாள் சாம்பவி .

” ஏய் மேலே பேசாதேடி …ப்ளீஸ் …” இதழ் வெளுத்து , கண்கள் சிவந்து கன்னங்கள் கனிய கெஞ்சிய தோழியை பார்க்கவும் ,மேலும் அவளை சீண்டும் எண்ணம் பிறந்த்து சஹானாவிற்கு .

” சம்பா கோவாவில் போய் யாராவது உன் ஹஸ்பென்ட் யாரென்று கேட்டால் சரியாக அடையாளம் காட்டி விடுவாய் இல்லையா …? “

வாயை விட்டு அவள் கழுத்தை பிடித்தாள் சாம்பவி  .” கொன்னுடுவேன்டி உன்னை …”




” ஆஹா உங்கள் இருவருக்குள்ளும் இந்த அளவு திக் ப்ரெண்ட்ஷிப் இருக்குமென்று தெரியாதே எனக்கு .இப்படி கழுத்தை நெரிக்குமளவிற்கு …ம் ….”

ரிஷிதரனின் குரலை கேட்கவும் சட்டென தனது கழுத்தை விட்டு விட்டு தலையை குனிந்து கொள்ளும் தோழியை வேடிக்கையாக பார்த்தாள் சஹானா .

” ஏன்டா என் ப்ரெண்டை நீ என்ன பண்ணினாய் …? ஏதோ கொஞ்சம் பேசிக் கொண்டிருந்தாள் .இப்போது எழுத்து கூட்டி வார்த்தைகளை எண்ணிக் கொண்டிருக்கிறாளே …என்ன விசயம் …? “

” என்ன உன் ப்ரெண்ட்  பேசுவாளா …? நான் இவளுக்கு பேச வராது என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் .” ரிஷிதரன் சாம்பவியை பார்த்தபடி கேட்டான் .

” அடிப்பாவி என் அண்ணனை எப்படி ஏமாற்றி வைத்திருக்கிறாய் …? நம்பாதே ரிஷி .எதற்கும்…. ஏதாவது தமிழ் பண்பாடு  , கலாச்சாரம் என்று பேச்சு கொடுத்து பாரு .மேடம் தண்ணீர் இல்லாமல் தொடர்ந்து இரண்டு நாட்கள் பேசுவார்கள் …”

” அட இவளை பேச வைக்க இப்படி வழி இருக்கிறதா …? ” ரிஷியின் பார்வை தலை குனிந்து நிற்கும் மனைவியின் மேல் தாகத்தோடு பதிவதைக் கண்ட சஹானா ….

” அது உன் சாமர்த்தியம் .இனி நான் இங்கே இருக்க மாட்டேன் …” ரிஷி வந்தவுடன் தனது கைகளை பற்றியபடி நின்ற தோழியின் கையை உதறியவள் தேனீயாக பறந்து மறைந்தாள் .

பின்னாலேயே சென்று விட துடித்த மனைவியின் கைகளை அழுத்தமாக பிடித்து நிறுத்தினான் ரிஷிதரன் ….




What’s your Reaction?
+1
35
+1
24
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!