Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 8

    8

 

 சந்தடியற்ற இந்த வேளைகளில்
முன் தின சாகச கணங்களை
மென்று கொண்டிருக்கையில் ,
அறையெங்கும் வியாபித்திருந்தது
உன் பேரன்பின் வியர்வை நாற்றம் ,
கூடிக் களித்தாடும் அலை பார்த்து
குளிர் நிழல் வைத்திருக்கும் குடிசையென
குளிர்ந்திருக்கிறது உள்ளம் ,
இழையாய் இழையாய் என் தனிமையில்
இழைந்து கொண்டிருக்கையில் ,
காலடி தடமற்று பெருக்கி வைத்த
வாசலில் …பதிந்து விட்ட சுவடென ,
திடீரென எனக்குள் வந்துவிட்டாய் ,
சட்டென மாறிவிட்ட
குமிழ் விடும் கொதிநீர் உள்ளத்துடன்
மௌனங்களின் பெருவெளியை
ஆட்சி செய்து கொண்டிருக்கிறேன் நான் .




” ல்ல நேரம் பார்த்தீர்கள் லோடு ஏற்ற ….? ” சலித்தபடி லாரியில் ஏற்றிய செங்கல்களை கணக்கிட கணக்கு நோட்டை திறந்தான் சந்திரன் .

” நான் பார்க்கிறேன் சார் …” என நீண்ட கைகளை பார்த்து ஆச்சரியமானான் .

” மாலினி …தூங்கவில்லையா ..நீ …? இப்போது மணி இரவு மூன்று தெரியுமா ….? “

” நீங்கள் விழித்திருக்கிறீர்களே சார் ….” அவனிடமிருந்து கணக்கு நேட்டை தான் வாங்கி எழுத ஆரம்பித்தாள் .

” திடீரென லோட் இப்போது ஏற்றியே ஆகவேண்டுமென்று விட்டார்கள் ்தூக்கத்தை தியாகம் செய்து நான் வந்திருக்கிறேன் .உனக்கென்ன …நீ தூங்கியிருக்கவேண்டியதுதானே …? “

” தூங்கிக்கொண்டுதான் சார் இருந்தேன் . இந்த சத்தத்தில்தான் விழித்துக் கொண்டேன் . எனது இந்த நிம்மதியான தூக்கத்திற்கு காரணமே நீங்கதானே .உங்களுக்காகவிழிக்க மாட்டேனா …? “

” போச்சுடா …ஆரம்பித்து விட்டாயா …? உன் சித்தியுடன் தங்கியிருப்பது பாதுகாப்பில்லை என்பதால் , நம் கம்பெனிக்குள்ளேயே இருந்த சிறிய வீட்டில் தங்கிக் கொள்ளசொன்னேன் .அதனை சமயம் கிடைக்கும் போதெல்லாம் நன்றி அறிவிப்பாக சொல்ல வேண்டுமா …? “

” நீங்கள் எனக்கு செய்திருக்கும் நன்மையின் அளவு உங்களுக்கு தெரியாது சார் .அது எனக்கு மட்டும்தான் தெரியும் ….”

” சரி ..சரி ..அந்த நன்றியுணர்வை உனக்குள்ளேயே வைத்துக்கொள் .இப்படி சமயம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு காட்ட வேண்டுமென்பதில்லை ..” அதட்டல் போல்கூறிவிட்டு கணக்கை எழுதுமாறு கூறிவிட்டு குடோனிற்குள் நடந்தான் .

எல்லாம் ஏற்றி முடித்ததும் குடோன் கதவை இழுத்து மூடியவனுக்கு அதிகாலை விழிப்பில் தலை வலிக்க ஆரம்பித்தது .நெற்றிப் கோட்டை அழுத்தி விட்டுக்கொண்டவனின் முன் சூடாக ஒரு தம்ளரில் காபி நீட்டப்பட்டது .

” தலைவலிக்கு நன்றாக இருக்கும் .குடிங்க சார் ….” என்றாள் மாலினி .




எவ்வளவு அனுசரணையான பெண் என நினைத்தபடி நன்றி சொல்லி காபியை வாங்கிக்கொண்டான் .

” உனக்கு ….”

” நான் …பிறகு குடிக்கிறேன் .இப்போது நீங்கள் குடியுங்கள் …”

” இன்னொரு தம்ளர் கொண்டு வா ….”

அவளுக்கு பாதி காபியை ஊற்றி கொடுத்தவன் ” இருக்கிற பாலுக்கு எனக்கு மட்டும் காபி கலந்தாயாக்கும் ” என்றான் .

” இன்னும் ஒரு மணிநேரத்தில் பால் வந்துவிடும் .பிறகு குடிக்கலாமென்று நினைத்தேன் …” காபியை வாயில் வைத்தபடி கூறினாள் .

” உங்கள் தங்கை எப்படி இருக்கிறார்கள் …? ” எதிரிலிருந்து தன்னை பார்த்தபடியிருந்த அவனது பார்வையை சந்திக்க முடியாமல் கேட்டாள் .

” ம் …நன்றாக இருக்கிறார்கள் .புது மாப்பிள்ளை நேற்றுதான் மறுவிட்ட…” முடித்து மாப்பிள்ளை வீட்டில் இருவரையும் விட்டு விட்டு வந்தோம் .நாளை புது மணமக்கள் இருவரும் ஹனிமூன் கிளம்புகிறார்கள் “

” ….இருவரும் பொருத்தமான ஜோடி ….”

” அப்படியா சொல்கிறாய் .மாப்பிள்ளை நிறைய படித்தவர் . எந்நேரமும் பாரினிலேயே சுற்றுபவர் .அவருக்கும் சாம்பவிக்கும் எந்த அளவு ஒத்து போகுமோ …என ஏனோஒரு பயம் இருந்து கொண்டே இருக்கிறது “

” இல்லை .எனக்கு அப்படி தோன்றவில்லை .திருமண மேடையில் அருகருகே நின்றபோது பார்த்தேன் .இருவரும் மிக மிக அந்நியோன்யமான அழகான ஜோடியாகதோன்றினார்கள் .நிச்சயம் அவர்கள் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும் பாருங்கள் “

” ஆஹா …ஏனோ இந்த வார்த்தைகளை உனது வாய் வழியாக கேட்க ரொம்ப சந்தோசமாக இருக்கிறது மாலினி .எனது கவலைகள் காரணமற்றவை என தோன்றுகிறது “

சந்திரனின் இந்த பாராட்டுதலில் கூச்சமுற்று மாலினி தலை குனிய , அந்த அரை இருளில் அங்கே எரிந்து கொண்டிருந்த மங்கிய டியூப்லைட்டின் ஒலியில்பொன்சிலையென சந்திரனுக்கு தோன்றினாள் .தனை மறந்து அவளை நெருங்கி நின்றான் அவன் .தனக்கு அருகே அவனை உணர்ந்த மாலினி நிமிர முடியாமல்குனிந்தபடியே இருக்க …

” அப்படி போடு …இங்கே இதுதான் நடக்குதா …? ” என்ற குரலில் திடுக்கிட்டு இருவரும் விலகினார்கள் .




பூமணிதான் .துணைக்கு நான்கு ரவுடிகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் .

” ஏன்டி வேலை ” ஏன்டி வேலை பார்க்கிறேனென்று கூறிவிட்டு இங்கே இவனுடன் இந்த கூத்துதான் அடித்துக் கொண்டிருக்கி றாயா …? ” மாலினியின் கூந்தலை பிடித்து உலுக்கினாள் அவள் .

” விடுங்கள் அவளை …” சந்திரன் அவளை பிடித்து தள்ளினான் .ஏற்கெனவே போதையில் இருந்த அவள் தடுமாறி கீழே விழுந்தாள் .உடனே அந்த ரவுடிகள் நால்வரும் சந்திரனை சூழ்ந்து அடிக்க முனைந்தனர் .

அவர்களுக்கிடையே வந்த மாலினி ” அவரை விடுங்கள் .இப்போது உங்களுக்கு என்ன …நான் உங்களுடன் வர வேண்டும் அவ்வளவுதானே .நான் வருகிறேன் .சித்தி வாங்க போகலாம் ” கீழே கிடந்த பூமணியை தூக்கி விட்டவள் அவளுடன் நடக்க தொடங்கினான் .

” மாலினி …” என அதட்டிய சந்திரனிடம் ” அவர்கள் ரவுடிகள் சார் .என்னால் உங்களுக்கு ஒன்றும் ஆக்க்கூடாது ” என்றுவிட்டு போய்விட்டாள் .எப்படியோ தனது நோக்கம் நிறைவேறியதில் சந்தோசமாக போனாள் பூமணி .

பெயருக்கு ஒரு ஹோமமென நான்கு செங்கற்களை வைத்து முன்னால் எரிந்து கொண்டிருந்த தீயை வெறித்தபடி மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள் மாலினி .தனது வழுக்கையை தடவியபடி அருவெறுப்பான பார்வையோடு அவளருகே மாப்பள்ளையாக அமர்ந்திருந்தான் அந்த கிழவன் .

” உன் அப்பனை கல்யாணம் பண்ணும் போது நானும் உன்னைப் போல சின்னப் பொண்ணுதான்டி . இரக்கமில்லாமல் அவன் என்னைக் கல்யாணம் பண்ணலை .இப்போ அவன் பெத்த பெண்ணற்கும் அதே கதியை உண்டாக்கலைன்னா எப்படி …? “

அப்பாவை பழி வாங்க வேண்டுமென்பது சித்தியின் நெடுநாள் கனவாக இருந்திருக்க வேண்டும் .அதனை இப்போது நிறைவேற்றியிருக்கிறாள் .துயருடன் அமர்ந்திருந்தாள் மாலினி .

‘”இதோ இங்கேதான் சார் .மணப்பெண்ணின் விருப்பமில்லாமல் கல்யாணம் பண்ணுகிறார்கள் .திருமணத்து நிறுத்தி ,அவர்களை தண்டிக்க வேண்டும் நீங்கள் …” சந்திரன் போலீசுடன் வந்து நின்றான் .

” பொய் சொல்லுகிறான் சார் .இவள் என் மகள் .இவளுக்கு நான் கல்யாணம் பண்ணுவதில் என்ன தவறு …? ” தனது நெடுநாள் கனவு பறிபோவதில் கத்தினாள் பூமணி .

இந்த கல்யாணத்திற்காக இந்த கிழவன் ஒரு லட்சம் பணம் வேறு கொடுத்திருக்கிறானே …கல்யாணம் நின்றால் அதை திருப்பி வேறு கேட்பானே ….மனதிற்குள் பயந்தாள் .




” ஏன்மா இவ்வளவு சின்ன பொண்ணுக்கு இவ்வளவு வயசான ஆளை கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க …? ” இன்ஸ்பெக்டர் விசாரித்தார் .

” என்ன சார் பண்ணுவது ..? வயசு பசங்க எல்லோரும் ஐம்பது , அறுபதுன்னு பவுன் கேட்கிறாங்களே …அதுக்கு நான் எங்கே போவேன் …? அதுக்காக என் மகளை காலம் பூராவும் கன்னியாகவே நிப்பாட்ட முடியுமா …? இதோ இவர்தான் அவரே நகை போட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு .அதுதான் இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணினேன் …” காண்பவர் மனம் உருகுமாறு ஏற்ற இறக்கமாக பேசி , கண்களை முந்தானையில் துடைத்துக் கொண்டாள் .

” என்ன சார் ரொம்ப ஹெவி சென்டுமென்ட்டாக இருக்கிறதே …” இன்ஸ்பெக்டர் சந்திரனிடம் கூற …

” எல்லாம் நடிப்பு சார் .இவர்களை விடாதீர்கள் ” என்றான் .

” எதுய்யா நடிப்பு …?ஆளை கூட்டிட்டு வந்து அரும்பாடு பட்டு  நான் ஏற்பாடு பண்ணின கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாயே .நான் கேட்கிறேன் ..இதோ இப்போது என் பொண்ணை பைசா வாங்காமல் நீ திருமணம் செய்து கொள்கிறாயா …? ” சவாலாக கேட்டாள் .

பெரிய முதலாளி .இவள் மேல் ஒரு பிடித்தம் இருந்தாலும் ..சும்மா வைத்துக் கொள்ள நினைப்பானே தவிர , தாலி கட்ட துணிய மாட்டான் …என நினைத்தே இப்படி சவால் விட்டாள் பூமணி .

” நிச்சயம் தயாராக இருக்கிறேன் .மாலினி போல் ஒரு பெண் மனைவியாக அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும் .எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக அவளை மணம் முடிக்க தயங்க மாட்டேன் ” உரத்து அறிவித்தான் சந்திரன் .

” கிழித்தாய் …இதோ மணக்கோலத்தில்தானே உட்கார்ந்திருக்கிறாள் .சும்மா வாய் சவடால் விடாமல் தாலியை கட்டேன் பார்ப்போம் …” சந்திரனை அந்த இடத்தை விட்டு விரட்ட வேண்டுமென்றே இதனை சொன்னாள் பூமணி .

ஆனால் அவன் …

” டேய் எழுந்திரிடா …மாலினியின் அருகிலிருந்த கிழவனை தள்ளினான் .

” மாலினி இதுதான் உனக்கு வாழ்வு முழுமைக்கும் பாதுகாப்பாக இருக்கும் ….” தட்டுலிருந்த மஞ்சள் கயிறை எடுத்தபடி அவளை பார்த்தான் .

அவள் கைகளை குவித்து அவனை வணங்கினாள் .சந்திரன் அவள் கழுத்தில் தாலி கட்டினான் .

சொல்லிக் கொண்டிருந்த தனது கதையிலிருந்து சிறிது வெளியே வந்து , ஒரு மூச்சு விட்டு நிறுத்தினான் சந்திரன் .பிரமிப்புடன் அவனை பார்த்தபடியிருந்தான் சபரீஷ் .




” இவ்வளவு நடந்திருக்கிறதா உங்கள் வாழ்வில் …? நீங்கள் மிகவும் உயர்ந்தவர் சந்திரன் .இது போன்ற மனது யாருக்கும் வராது …” என்றான் .

” அப்போது என் மனதிற்கு சரியென்று பட்டதை செய்தேன் .இன்று வரை நான் ஏதோ பெரிய தியாகம் செய்த்தாக எனக்கு தோன்றியதில்லை .மாலினியை திருமணம் செய்வது தியாகம் செய்வது ஆகாது சபரீஷ் …”

” அப்போ சஹானா மேடத்தை நீங்கள் ….??”

சந்திரன் சரேலென நிமிர்ந்து அவனை பார்த்தான் .

” தவறாக நினைக்க வேண்டாம் சந்திரன் .சஹானா இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்களே ..அதனால்தான் கேட்டேன் …”

” அவள் மனது எனக்கு தெரியாது சபரீஷ் .ஆனால் என் மனதில் அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்த்தே தவிர , காதல் இல்லை .நான் பழகிய பெண்களை விட கொஞ்சம் வித்தியாசமான பெண்ணை பார்த்ததும் வரும் அட்ராக்சன் அது .அவ்வளவுதான் .இதனை நான் பிறகுதான் உணர்ந்து கொண்டேன் …”

” ஆனால் சஹானா இன்னமும் திருமணம் முடிக்காமலேயே …”

” ஆமாம் .அவள் அப்படித்தான் செய்வாள் .எங்களை பலி வாங்குகிறாளாம் . சிங்கப்பூரில் கிடைத்த ஙேலையையும் விட்டு விட்டு , உன்னால் நான் எப்படி ஆகிவிட்டேன் பார் ..என எங்களிடம் காட்ட வேண்டுமென்றே இங்கேயே ஒரு தொழிலை உண்டாக்கி கொண்டு வீம்பிற்காகவே எங்கள் கண் முன்னாலேயே நடமாடிக் கொண்டிருக்கிறாள் .அவள் கேரக்டரே அப்படித்தான் .கரடு முரடானவள் …”

” ஓ…இருக்கலாம் .அவர்கள் அப்படி பட்டவர்கள்தான் .சாம்பவி வாழ்வில் என்ன விளையாடினார்கள் …? “

” ப்ச் …ரிஷிதரனுக்கும் …சாம்பவிக்கும் திருமணமென சஹானா முடிவு செய்த போதே , இது சரி வராது என்றே எனக்கு தோன்றிக் கொண்டேயிருந்த்து .அது போலவே நடந்துவிட்டது . எனது தங்கையுடன் பத்து நாட்கள் குடும்பம் நடத்திய பிறகு தன் தங்கையை ஏமாற்றியதாக கூறி எங்கள் வீட்டிற்கு சாம்பவியை திருப்பி அனுப்பிவிட்டான் ரிஷிதரன் …”

” அப்படியென்றால் ….”

” முதலில் ரிஷிதரனுக்கும் சாம்பவிக்கும் திருமணம் .பிறகு எனக்கும் சஹானாவுக்கும் திருமணம் .இதுதான் சஹானாவின் திட்டமாக இருந்திருக்கிறது .ஆனால் நான் மாலினியை திடுமென திருமணம் செய்த்தும் அவளது திட்டம் நடக்காத்தால் , அவளுக்கு கிடைக்காத வாழ்வு சாம்பவிக்கும் கிடைக்க கூடாது என்று ….” மேலே சொல்லும் முன் குரல் கம்ம நிறுத்தனான் சந்திரன் .

” சாம்பவியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது சந்திரன் . கணவன் மேலுள்ள கோபத்தில் தாலியை சுழட்டி வைத்து விட்டார்களா ..? “




” அப்படி அவள் செய்திருந்தால் நான் சந்தோசப்பட்டிருப்பேனே . ஆனால் அப்படி நடக்கவில்லையே .சபரீஷ் உன்னுடன் பழைய கதைகளை பேசியதில் திரும்பவும் ஒரு முறை அவற்றையெல்லாம் வாழ்ந்த உணர்வை பெறுகிறேன் .அது என்னை மிகவும் சோர்வடைய வைக்கிறது .மீதிக்கதையை நாளை பேசுவோமே …” சோர்வுடன் கேட்டான் சந்திரன் .

” ஓ.கே .சந்திரன் நீங்கள் போய் ஓய்வெடுங்கள் .மீதியை பிறகு பேசுவோம் …” சபரீஷ் எழுந்தான் .

” எதற்காக அப்படி என்னை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள் …? ” குனிந்து பைல்ஸை பார்த்துக் கொண்டிருந்தாலும் சபரீஷின் பார்வையை உணர்ந்து கேட்டாள் சஹானா .

வழக்கமாக இது போன்ற அவளது புத்திசாலித்தனங்களில் வரும் பிரமிப்பு இப்போது சபரீஷிற்கு வரவில்லை .

” வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரது கேரக்டரை தெரிந்து கொள்ள முடிவதில்லையே என பார்க்கிறேன் …”

” வாட் டூ யூ மீன் …? “

” எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள் “ஒய்யார கொண்டையாம் , தாழம்பூவாம் ..உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் ..” அப்படின்னு .அது உங்களுக்கு அப்படியே பொருந்தி போகுது …”

” ஏய் மைன்ட் யுவர் வார்ட்ஸ் .யாரை பார்த்து என்ன பேசுகிறாய் …? ” கோபத்தில் ஒருமைக்கு தாவினாள் சஹானா .

” சாம்பவி வாழக்கையை ஏன் மேடம் இப்படி கெடுத்தீர்கள் ..? ” சபரீஷ் நேரடியாகவே கேட்டான் .

” யார் உனக்கு இதையெல்லாம் சொன்னது …? “

” தங்கையின் வாழ்க்கை துயரை பற்றிய கவலை அண்ணனுக்குத்தானே இருக்கும் …”

” ஓ…அவன் மட்டும்தான் அண்ணனா ..? ஏன் என் அண்ணனுக்கு அந்த தங்கை கவலை இருக்காதா ..? அவர் பாசமானவர் கிடையாதா …? ” கிண்டலாக கேட்டாள் .

” ஒரு வாழ்க்கையை கெடுத்து விட்டு எவ்வளஙு இலகுவாக இருக்கிறீர்கள் மேடம் .ஆனால் உங்கள் எண்ணம் போல் சாம்பவியின் வாழ்க்கை இப்படியே போக நான் அனுமதிக்க மாட்டேன் ….”




” இல்லாமல் ..அவளுக்கு வாழ்க்கை கொடுக்க போகிறாயா ..? “

” அதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் …”

சபரீஷின் பதிலில் கோபமான சஹானா ” ஏய் வெளியே போ …” விரல்களை சொடுக்கினாள் .

” உங்களை போல் எவ்வளவு கோபத்திலும் நிதானமிழப்பவன் நான் இல்லை …” சஹானாவின் ஒருமையை சுட்டிக்காட்டியவன் வெளியேறிவிட்டான் .

நான் தப்பு செய்கிறேனா ..? இப்போது செய்கிறேனா …முதலிலிருந்தே செய்வது எல்லாமே தப்புதானா …? கைகளை தலையால் தாங்கியபடி  அமர்ந்தாள் சஹானா .மனது நிலையில்லாமல் தவிக்க கோவிலுக்கு போனால் நன்றாக இருக்குமென்று தோன்ற காரை எடுத்துக் கொண்டு சாய்பாபா கோவிலுக்குவந்துஅமர்ந்து விட்டாள் .

இந்த கோவிலை அவளுக்கு காட்டியவள் சாம்பவிதான் . இதோ இப்போது தன் முன்னே அருள் சொரியும் பார்வையோடு இருக்கும் பாபாவை பார்த்தபடி தனது பழைய வாழ்க்கை சுழலுக்குள் விழுந்தாள் சஹானா .




What’s your Reaction?
+1
29
+1
25
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!