Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 3

3

நீ துப்பிவிட்டு போன மனக்குப்பைகளை
அப்படியே விட்டு வைத்திருக்கிறேன் ,
மந்திரம் ஜெபிப்பது போல்
உனை சொன்னபடி
என் வீட்டின் சில ஓரங்களில்
அவை கிடக்கின்றன ,
சேர்த்து வைத்து கூட்டித் தள்ளும்
எண்ணமில்லை ,
கோர்த்து வைத்து பார்த்திருக்க
எண்ணமுண்டு ,
பிறிதொரு நாள் அவற்றை நாம்
அலசுகையில் இனங்காணலாம் ,
நிறைய உன்னை …
பிறகு… சிறிது என்னை ,
அதனால் …
சதுரங்களாய் இணையும் என் வீட்டு சுவரின்
ஒவ்வொரு மூலையிலும் ,
நீ துப்பிவிட்டு போன மனக்குப்பைகளை
அப்படியே விட்டு வைத்திருக்கிறேன் .




” ஏய் அதோ அங்கே இருக்கு பாரு .அதுதான் நீ போகப்போகிற ஊர் .அங்கேதான் காரில் போகனும் .ம் …கிளம்பு ..கிளம்பு …. ” ஆணும் , பெண்ணுமாக பத்து பேர் சேர்ந்து நின்று கொண்டு அவசரப்படுத்தினர் .

சாம்பவிக்கு அழுகை வரும் போல் இருந்த்து .தலை குனிந்து நின்றிருந்தாள்.

” ம் …ஸ்டியரிங்கை பிடி ….” மெல்ல கைகளை உயர்த்தி ஸ்டியரிங்காக்கினாள் .

” இப்போ கியர் போடு ….” விழித்தாள் .

” என்னடி முழிக்கிற …? வாயால் சத்தமாக கியர் போடு ” அதட்டினான் ஒருவன் .

இல்லை இவர்கள் முன் அழக்கூடாது .வைராக்கியத்துடன் மெல்ல வாயால் சத்தமிட்டாள் .கைகளை ஸ்டியரிங் போல் சுற்றியபடி நகர்ந்தாள் .

” ஏய் ..எவ்வளவு டிராபிக் பாரு .ஹார்ன் அடி …” கூச்சலிட்டாள் ஒருத்தி .

” சத்தமாக பாம் பாம் என்று அடி ….” இன்னொருவன் கத்தினான் .

இதற்கு மேல் தாங்க முடியாமல் நின்று அழ ஆரம்பித்தாள் சாம்பவி .

” ஹாய் ப்ரெண்ட்ஸ் .பாவம் அவளை விட்டுடுங்க .அவளுக்கு பதில் நான் கார் ஓட்டுறேன் ….” என்ற குரலில் திரும்பி பார்த்தது அந்த மாணவர் பட்டாளம் .

” ஏய் நீ யாரு …”

” நானும் பர்ஸ்ட் இயர் .நியூ அட்மிசன்தான் …,என்னையும் நீங்க ராக் பண்ணலாம் …”

சுடிதாரில் கூனி குறுகி நின்றிருந்த சாம்பவியை விட ஜீன்ஸில் விரைப்பாக நிமிர்ந்து நின்ற சஹானா அவர்களுக்கு சுவாரசியமாக பட, அவளை விட்டு விட்டு இவளை நெருங்கினர் .

” ஒ…நீ கார் ஓட்டுவியா ….? “

” ரேஸ்ல கலந்துக்கிடுற அளவு ஓட்டுவேன் .ஆரம்பிக்கட்டுமா ….? ” சாம்பவியை போய்விடு என சைகை செய்துவிட்டு கைகளை ஸ்டியரிங் ஆக்கி வாயால் கியர் போட்டாள் சஹானா .




ஆளை விட்டால் போதுமென்று ஓடி வந்துவிட்டாள் சாம்பவி . அரைமணிநேரம் போல் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து சுற்றி செல்லும் மாணவர்களை வேடிக்கை பார்த்துவிட்டு , சிறிது பசிப்பது போல் தெரிய , மெஸ் இந்த பக்கம்தானே …என யோசித்தபடி நடக்க ஆரம்பித்தாள் .

” ஹாய் …நான் சஹானா ….” கை நீட்டியபடி வந்தாள் அவள் .

” நான் சாம்பவி ….” முகம் மலர கை குலுக்கினாள் .

” வ்வாட் …சாம்பவி …..என்ன பெயர் இது …? ” சிரிக்க ஆரம்பித்தாள் அவள் .

” அது …அம்மன் பெயர் …,” தலை குனிந்து சொன்னாள் .

” ஓ…அம்மன் பெயர. வைத்ததால் , அந்த அம்மனை போலவே அலங்காரமும் செய்ய வேண்டுமா …? ” ஒரு கையால் அவள் உருவத்தை மேலிருந்து கீழ் கைகளால் காட்டி கேட்டாள் .

” ஏன் என்க்கென்ன …? ” தன்னையே ஒரு முறை பார்த்துக்கொண்டாள் சாம்பவி .

” இந்த மஞ்சளில் அம்மனுக்கு கூழ் ஊத்துபவர்கள் மட்டுமே டிரஸ் போடுவாங்க .” அவளது சுடிதாரை காட்டினாள் .

” நீ பொட்டு வைத்துக்கொள் .அதற்காக இப்படியா நெற்றி முழுவதும் நிரப்புவாய் ….? காது , கை , கழுத்தென இப்படி நகைகளால் நிரப்பி வைத்துள்ளாயே …உன்னை பார்த்தாலே அம்மன் போலத்தான் இருக்கிறது …” சிரிக்க தொடங்கினாள் .

” என்னை அந்த கலாட்டாவிலிருந்து காப்பாற்றியதற்கு நன்றி …” அவளது கேலியை அலட்சியம் செய்து சொன்னாள் சாம்பவி .

” ம் …பார் சாம்பவி .இப்படி உன்னை போல பட்டி தொட்டியாக இருந்தால் , சும்மா போவோர் கூட சீண்டிக்கொண்டுதான் போவார்கள் .நீ மாறவேண்டும் .ஏனோ தெரியவில்லை உன்னை எனக்கு ரொம்ப பிடித்து விட்டது .சீக்கிரமே உன்னை நான் என்னை போல் மாற்றிக் காட்டுகிறேன் .ஏய் என்ன இந்த பக்கம் எங்கே போகிறாய் ….? “

” அது …மெஸ் இந்தப்பக்கம்தானே இருக்கிறது .காலையில் இந்த வழியாகத்தான் போன ஞாபகம் …” விழித்துக் கொண்டு நின்றவளை கண்டு வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்தாள் சஹானா .




” ஏன்டி காலையில் போன பாதையை அதற்குள்ளாகவா மறந்து போனாய் …?”

,” இங்கே எல்லா பாதையும் ஒன்று போலவே தெரிகிறது ..” முணுமுணுத்தாள் சாம்பவி .

” அதற்கெதற்கு உன் மூஞ்சு இப்படி மாறிவிட்டது …? சுட்ட கத்தரிக்காய் போல …ம் ….” என்றவளை வெறித்தாள் சாம்பவி .

,சுருக்கென குத்தப்பட்ட ஊசியில் ” ஷ் ” என்றபடி பழைய நினைவிலிருந்து மீண்டாள் சாம்பவி . கைகளை தேய்த்து விட்டுக்கொண்டாள் .

” ஒன்றும் பயமில்லையே டாக்டர் ..? ” சாதாரண தடுமாற்றத்துக்கு டன் டன்னாய் கவலையை காட்டி கேட்ட அண்ணனை கிண்டலாக பார்த்து ” அண்ணா போதும் .என்னாலேயே முடியலை .டாக்டர் பாவம் அவரை விட்டுடு ” என்றாள் .டாக்டர் சிரித்தார் .

” என்ன பாப்பு இப்படியா கவனமில்லாமல் இருப்பாய் ..?தங்கையை கடிந்தான் சந்திரன் .

” உங்க தங்கை கவனமாகத்தாங்க வந்தாங்க .எங்க மேடத்திற்குத்தான் என்ன ஆச்சுன்னு தெரியலை .திடீர்னு காரை திருப்பிட்டாங்க .இவுங்க பய்ந்து ரோட்டை விட்டு இறங்கி , சரிஞ்சிட்டாங்க …” விளக்கினான் சபரீஷ் .

அவன்தான் சாம்பவியை ஒரு ஆட்டோ பிடித்து ஆஸ்பத்திரி அனுப்பி விட்டு , அவள் ஸ்கூட்டியை எடுத்து வந்திருந்தான் . இடையில் சந்திரனுக்கும் தகவல் சொல்லி வர வைத்திருந்தான் .

” யார்….யாரை சொன்னீரகள் ….? ” சந்திரனின் குரல் இறுக்கமாக ஒலித்தது .

” எங்க கம்பெனி மேனேஜர் சஹானா மேடம்தான் .அவுங்கதான் திடீர்னு ….” என்றவன் சந்திரனின் கோபத்தில பயந்து போனான் .

” அவள் வேண்டுமென்றேதான் செய்திருப்பாள் .நான் அவளிடமே போய் கேட்டுவிடுகிறேன் …,” எழுந்தவனின் கையை பிடித்து தடுத்தாள் சாம்பவி .

” அண்ணா …தப்பு என் மேல்தான் .அவள் சரியாகத்தான் வந்தாள் .நான்தான் ஏதோ யோசனையில் வண்டியை தடுமாற விட்டு விட்டேன் “




” இதை என்னை நம்ப சொல்கிறாயா …? “

” நம்பித்தான் ஆகனும் .சஹானா மேல் தவறில்லை .என் மீதுதான் தவறு ” அழுத்தமாக கூறினாள் சாம்பவி .

” உன்னால்தான்மா அவர்கள் எல்லோரும் தப்பித்துக் கொண்டே வருகின்றனர் ….” விரக்தியோடு சொன்னபடி போய் காரில் ஏறினான் சந்திரன் .மௌனமாக சாம்பவியும் போய் அண்ணனின் காரில் ஏறிக்கொண்டாள்.

” சபரீஷ் ப்ளீஸ் …நீங்கள் …” என்ற சந்திரனுக்கு …
” நான் ஸ்கூட்டியை ஓடடிக்கொண்டு வந்துவிடுகிறேன் ” என்றான் சபரீஷ் .

காருக்கு வெளியே தலை நீட்டி ” ரொம்ப தேங்க்ஸ் ” என்ற சாம்பவியை கேள்வியாக பார்த்து தலையாட்டினான் சபரீஷ் .

” ரொம்ப நன்றி தம்பி …உட்காருங்க ,” மாணிக்கவாசகம் உபசரித்தார் .

” அந்த மகமாயி தான் தம்பி உங்களை  அந்த நேரத்தில் அங்கே அனுப்பியிருக்கிறாள் .இல்லைன்னா என் பொண்ணு அங்கே நடுரோட்டில் நின்னு முழிச்சிட்டிருந்திருப்பாள் …,” மரகதவல்லி கண் கலங்கினாள் .

,” அதெல்லாம் இல்லை ஆன்ட்டி .அங்கே நான் இல்லையென்றால் எங்க மேடம் சாம்பவியை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருப்பாங்க .நான் இருந்த்தால்தான் அவுங்க பாட்டுக்கு போயிட்டாங்க . ,,”

,” யாரு …அந்த கடன்காரியா ..? அப்படி கூட்டிட்டு போவாளே …தடுமாறி என் பொண்ணு எந்திரிச்சி நின்னா திரும்ப கீழே தள்ளி விடுவா ….” சத்தமாக சொன்னாள் மரகதவல்லி .

” அம்மா …சும்மாயிருங்க …” என அதட்டியபடி வந்த சாம்பவியின் கையிலிருந்த காபி கப்பை பார்த்ததும் , சஹானா பற்றி ஏதேதோ கேட்க எண்ணியிருந்த கேள்விகள் எல்லாம் , சபரீஷுக்கு மறந்து போயின.

தன் முன் நீண்ட காபியை கலவரமாய் பார்த்தவன் தொண்டையை செருமிக்கொண்டு ” பாருங்க சாம்பவி பொதுவாக எனக்கு இனிப்பு அவ்வளவா பிடிக்காதுங்க .காபிக்கு சீனி கூட ரொம்ப கம்மியாத்தான் ….” என்று பயமாக இழுத்தான் .

” பயப்படாதீங்க கரெக்டா இருக்கும் …” சிரித்தபடி காபியை நீட்டினாள் சாம்பவி .




விடுதலை மூசசுடன் காபியை எடுத்து சுவைத்து பார்த்தவன் திருப்தியாக தலையசைத்துக் கொண்டான் .

” அந்த சஹானாவுக்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சினைங்களா …? ” கேட்டபடி சாம்பவியை பார்த்தான் .

அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள் .இது உனக்கு எதற்கடா …?என்றது அந்த பார்வை .

” ஒண்ணா …இரண்டா …ஆயிரம் பிரச்சினை இரண்டு பேருக்குள்ளும் …” ஆரம்பித்த மரகதவல்லியை சந்திரன் அதட்டினான் .

” அம்மா ..குட்டிப்பிள்ளை அழுகை சத்தம் கேட்குது .போய் என்னன்னு பாருங்க …” என்றான் .

” ஏன் உன் பொண்டாட்டி என்ன செய்யுறாளாம் ….? ” முணுமுணுத்துக் கொண்டு எழுந்து போனாள் மரகதவல்லி .

உட்கார்ந்திருந்தவர்களை ஒரு மாதிரி பார்த்த சபரீஷிடம் ” அதொன்றுமில்லை சபரீஷ் .அந்த சஹானாவும் , நானும் காலேஜில் ஒண்ணா படிச்சவங்க .எங்க ரெண்டு பேருக்குமே முதலிலிருந்தே கொஞ்சம் ஒத்து போகாது .அவ்வளவுதான்…” மறைத்த விசயத்தை முழுமைப் படுத்த இறுதியாக அழகாக ஒரு புன்னகை சிந்தி வைத்தாள் .

” ஓ….” என நம்பியும் நம்பாமலும் தலையசைத்தான் சபரீஷ் .

சாம்பவி உள்ளே வந்தபோது , வீர் …வீர்ரென வீறிட்டுக் கொண்டிருந்த , சாஹித்யாவை இழுத்து பிடித்து சமாளிக்க முயன்றபடி மரகதவல்லி மாலினியை வாங்கு வாங்கென வாங்கிக் கொண்டிருந்தாள் .

” பச்சைப்புள்ளை மனசறிஞ்சு அதை சமாதானப்படுத்த முடியலை .நீயெல்லாம் ஒரு பொம்பளையா …? என்ன கணக்கி்ல் உன்னையெல்லாம் ஒரு புள்ளைன்னு பெத்து வளர்த்தாங்களோ …? எங்க உயிரை வாங்கன்னு எங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு உட்கார்ந்துக்கிட்டு அழிச்சாட்டியம் பண்ணிக்கிட்டு இருக்க ….”




மாலினி தலை நிமிராமல் குனிந்தபடியிருந்தாள் .தனது உதவிக்கு வருவானா …என அடிப்பார்வையில் லேசாக திரும்பி கணவனை பார்த்தாள் .அவன் இங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது போல் , செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே போய்விட்டான் .இவ்வளவு நேரம் மாமியார் திட்டியதில் வராத கண்ணீர் இப்போது வந்த்து மாலினிக்கு .

” அம்மா விடுங்கம்மா .பாப்பாவை கொடுங்க .அண்ணி நீ போய் நைட் டிபன் வேலையை பாரு …,” தாயிடம் இருந்த குழந்தையை தான் வாங்கிக் கொண்டு மாலினியை உள்ளே அனுப்பினாள் சாம்பவி .

உனக்கும் , உன் வீட்டிற்கும் சமைத்து கொட்டுவது ஒன்றுதானே என் வேலை …மனதிற்குள் புலம்பியபடி கிச்சனிற்குள் நுழைந்தாள் மாலினி .

அழுத குழந்தை சாம்பவியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு விசும்பியது .அவள் குழந்தையை சமாதானப்படுத்தியபடி தன் அறைக்குள் வந்து , பொம்மைகளை காட்டி குழந்தையை சமாதானப்படுத்த துவங்கினாள் சாம்பவி .

ஐந்தே நிமிடத்தில் அழுகை மறந்த குழந்தை பொக்கை வாய் சிரிப்போடு விளையாட ஆரம்பிக்க , அழகான அந்த சிரிப்பு சாம்பவியை கொள்ளை கொள்ள குனிந்து குழந்தையின் குண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் .உடனே குழந்தையும் சாம்பவியை பற்றியபடி எழுந்து நின்று , அவள் கன்னத்தில் தன் வாயை வைத்து கடித்தாள் .சாஹித்யாவும் முத்தம் கொடுக்கிறாளாம் .

உடல் சிலிர்த்த சாம்பவி மீண்டும் குழந்தையை அணைத்து  முத்தமிட , குழந்தையும் அவள் மேல் விழுந்த அவள் கன்னங்களை எச்சிலாக்க , வாசலில் நின்று அதனை பார்த்த மரகதவல்லி கண்களை துடைத்துக் கொண்டாள் .அவர்களின் தனி உலகத்தல் நுழைய மனமின்றி ரூம் கதவை லேசாக சாத்தி வைத்துவிட்டு வெளியேறினாள் .

” சாஹித்யா மட்டும் இல்லைன்னா ..நம்ம பாப்புவோட நிலைமையை என்னால் நினைச்சே பார்க்க முடியலைங்க ..,” கணவனிடம் வந்து புலம்பினாள் .தலையசைத்து மாணிக்கவாசகம் ஆமோதித்தார்

” ஆனால் சாஹித்யாவாலேயே நம்ம பாப்பு வாழ்க்கை பாழாவதற்கும் நாம் விடக்கூடாதும்மா …,” சந்திரன் வந்து அமர்ந்தான் .

” என்னடா சொல்ற ..? “

” அம்மா குறை வாழ்க்கையை சாஹித்யாவை வைத்தே வாழ்ந்து விடலாம்னு சாம்பவி நினைச்சுடக்கூடாதும்மா …,”

” அவள் அப்படி நினைத்தால் அதில் தப்பு என்னப்பா இருக்கு …? ” மரகதவல்லி கேட்டாள் .




” இல்லைம்மா …நீங்க இப்படி நினைக்காதீங்க .நம்ம சாம்பவிக்கு என்ன வயதாகிறது … ? அவள் வாழ்க்கையில் என்ன அனுபவித்து விட்டாள் …? “

” சரிதான்டா சந்திரா …ஆனால் இதற்கு சாம்பவி ஒத்துக்கனுமே ….” மாணிக்கவாசகம் .

” நாமதான்பா ஒத்துக்க வைக்கனும் .”

” அது …முடியுமா …? “

” கொஞ்சம் கஷ்டம்தான் .ஆனால் முடிய வைக்கனும் …”

தன்னை பற்றிய தனது குடும்பத்தினரின் பேச்சுக்களை அறியாது , குழந்தையினுள் கரைந்து கொண்டிருந்தாள் சாம்பவி .அவள் மடியை விட்டு இறங்காது விளையாண்டு கொண்டிருந்தாள் குழந்தை .குழந்தையின் பசி நேரத்தை உணர்ந்தவள் சாப்பாடு ஊட்டுவதற்காக குழந்தையுடன் கிச்சனிறகுள் வந்தாள் .
” அண்ணி பாப்பாவுக்கு பால்சாதம் வேணும் ….”

” தர்றேன் …” திரும்பாமலேயே பதிலளித்த மாலினி சாத்ததை தட்டில் போட்ட போது சந்திரன் உள்ளே வந்தான் .

” ஏய் குழந்தைக்கு சாதம் கூட உன்னால் ஊட்ட முடியாதா …? ” மாலினியிடம் கத்தினான் .

நானா மாட்டேங்கிறேன் .உன் தங்கை கொடுக்கனுமே …தனது இந்த மன ஓட்டத்தை கணவனின் கண்களுக்குள் பார்த்து , அவனிடம் சொல்லிவிடலாம் என்ற மாலினியின் நினைப்பு பொய்த்துப் போனது .அவன் மனைவியின் கண்களை ஏன் அவள் முகத்தையாவது  பார்த்தாலல்லவா …சொல்ல .

வழக்கமான தனது தோல்வியுடன் குழந்தைக்காக கை நீட்டினாள் .கொடுக்க மனதில்லாமல் குழந்தையை அணைத்து நின்றிருந்த தங்கையை ” சாம்பவி இன்னும் ஒரு மிஷின் வாங்கனும்னு சொன்னாயே .அது விசயமாக பேச வேண்டும் வா …” என்றான் .

குழந்தையை கொடுத்துவிட்டு சாம்பவி நகர்ந்தாள் .குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு ” சாப்பிடலாமா செல்லம் …” என முத்தமிட்டு கொஞ்ச தொடங்கினாள் மாலினி .

குழந்தைகள் தெயவங்கள் .எவ்வளவோ துயரங்கள் மனதினுள் மண்டிக் கொண்டிருந்தாலும் , எச்சில் ஒழுக முத்தமிடும் பஞ்சு உதடுகள் இருந்தால் , அந்த துயரங்கள் எல்லாம் மறந்து தனி இன்ப உலகொன்று நமக்கென உருவாகிவிடும் .இதோ சாஹித்யா தனது பிஞ்சு சிரிப்பினால் சாம்பவியை , மாலினியை …ஏன் அந்த வீட்டில் எல்லோரையும் வசியம் பண்ணிக்கொண்டிருந்தாள் .




What’s your Reaction?
+1
42
+1
21
+1
0
+1
3
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!