Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா – 2

2

உன் சாக்லேட் நினைவு கலந்த
என் ரோஜா கனவுகள்
சிவந்து சிதறிக் கொண்டிருக்கையில்
பெய்து நின்றுவிட்டது மழை ,
வேப்பமரத்தின் சிலீருடன்
என் படுக்கையின் ஓரம்
ஆரம்பித்தது குளிர்காலம் ,
சுண்டுவிரல் நகம் வரை
இரவு நீள என்னை தழுவிவிட்டு
உடைக்க முடியா முத்தமொன்றுடன்
மஞ்சள் வந்ததும் விலகிவிட்டது ,
எரியாத அடுப்பில்
குளிர்ந்து கிடக்கிறது விறகு .




” தனம் ப்ளை ஆஷ் ஸ்டோன்ஸ் ” என்ற பெயர்பலகை இருந்த கம்பெனி முன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் வைசாலி .அவளது அம்மா தனலட்சுமி பெயரில் இந்த கம்பெனி ஆரம்பித்திருந்தாள் .

இது சிமெண்ட் செங்கற்கள் தயாரிக்கும் கம்பெனி .அவள் அப்பா மாணிக்கவாசகம் செங்கல் தயாரிக்கும் கம்பெனி அதே ஊரில் மூன்று இடங்களில் வைத்திருந்தார் .இப்போது சந்திரன் அதைத்தான் பார்த்து வருகிறான் . மாணிக்கவாசகத்திற்கு ஹார்ட் அட்டாக் வந்தவுடன் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென்று , கம்பெனி பொறுப்பினை சந்திரன் முழுமையாக ஏற்றுக்கொண்டான் .

அப்பாவிற்கென மூன்று கம்பெனிகள் இருந்த போதும் ,தனது திறமையை தனியே காட்ட வேண்டுமென சாம்பவி விரும்பினாள் .எனவே அந்த தொழிலுடன் தொடர்புடைய இந்த தொழிலை மாணிக்கவாசகமும் , சந்திரனும் சேர்ந்து பேங்கில் லோனுக்கு ஏற்பாடு பண்ணி சாம்பவிக்காக வைத்துக் கொடுத்திருந்தனர் .

தொழில் தொடங்கி ஆறே மாதத்தில் அப்பாவும் , அண்ணனும் எதிர்பார்த்ததிற்கும் மேலாகவே இந்த தொழிலை திறமையாக நடத்தினாள் சாம்பவி .அவளது கம்பெனி செங்கற்களின் தரமறிந்து நிறைய ஆர்டர்கள் வரத் துவங்கின .

” சாம்பல் வந்தாச்சா சந்திரா …? ” கேட்டபடியே உள்ளே வந்தாள் சாம்பவி .அவளது அந்த கம்பெனியில் சில கடினமான பணிகளுக்கு தவிர பிற பணிகளனைத்திற்கும் பெண்களே அமர்த்தப்பட்டிருந்தன .

” வந்தாச்சு மேடம் .எழுபது மூட்டை பின்னால்  குடோனில் இறக்கிட்டாங்க .எண்ணி சரி பார்த்துவிட்டேன் “

” குட் …அப்போது புது கற்களை புரட்டுகிற வேலையை நாளை ஆரம்பித்துவிடலாம் .இந்த யூனிட் இன்றோடு முடிந்து விடுமல்லவா …? “

” முடிந்துவிடும் மேடம் .ஆனால் நாளை புது வேலை ஆரம்பிப்பதென்றால் ….” தயங்குகிறாள் அவள் .

” ஏன் ..? …என்ன ஆச்சு …? “




” மேடம் ஜிப்சம் இன்னும் வரலை மேடம் …”

” நேற்றே வந்துடும்னு சொன்னாரே …இன்றைக்கு வந்தாலும் வரலாம் .நான் இப்போது பேசிவிடுகிறேன்”  .தன் போனில் நம்பரை தேடி அழுத்தினாள்  .

எதிர்முனை ரிங் போய் எடுக்க பட்டதும் சரளமான ஹிந்தியில் பேசத் தொடங்கினாள் .ஐந்துநிமிடம் பேசி முடித்து போனை ஆப் பண்ணிவிட்டு ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கும் சந்திராவிடம் என்னவென்று புருவங்களால் கேட்டாள் .

” ஹிந்தி அழகாக பேசுகிறீர்கள் மேடம் “

” ராஜஸ்தானில் இருக்கும் கம்பெனியுடன் ஹிந்தியில்தான் பேசியாக வேண்டும் .நேற்று இரவு லாரியில் ஏற்றி விட்டார்களாம் .இன்று இரவு வந்துவிடும் .நாளை காலை பத்து மணிக்கு கண்டிப்பாக அடுத்த யூனிட்  ஆரம்பித்து விட வேண்டும் .ஆட்களை அதற்கேற்றாற் போல் தயார் பண்ணி வை ” உத்தரவிட்டு விட்டு கம்பெனியினுள் நடக்க துவங்கினாள் .

ஒரு மெக்கானிகல் மெஷினும் , இரண்டு ஹைட்ராலிக் மெஷின்களும் இயங்கிக் கொண்டிருந்தன. இருபத்தியைந்து பேர் வரை வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் .சாம்பவியைக் கண்டதும் கொஞ்சம் தளர்ந்நிருந்த அவர்கள் வேலை சுறுசுறுப்பானது .
அப்படியே அச்சிறிய கம்பெனியை சுற்றி வந்தாள் சாம்பவி .

” இன்னைக்கு நம்ம மேடத்தை பார்த்தியாடி .அப்படியே சூரியகாந்தி பூ மாதிரி இருக்குறாங்க “

” மஞ்சள் சேலை கட்டியிருந்தா உனக்கு சூரியகாந்தியா…? “

” நான் சேலையை வைத்தா சொல்றேன் .அவுங்க முகத்தை பாரேன் .இப்போதான் மலர்ந்த புது மலர் மாதிரி அது ஜொலிக்கிறதை ..”

” ஆமான்டி நம்ம மேடம் ரொம்ப அழகு ..இல்லை …”

செங்கற்களை வெயிலில் காய வைக்கும் கூலி பெண்கள் இருவர் வெளியே கிரௌன்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர் .




சூரியகாந்தி மாதிரியா …? இந்த பெண்களுக்கு அவள் சம்பளம் கொடுக்கும் முதலாளி .அதனால் அவள் முகம் இவர்களுக்கு மலரைப் போன்று தெரிகிறது .

அதென்ன உன் மூஞ்சியை எப்போ பார்த்தாலும் சுட்ட கத்தரிக்காய் மாதிரியே வைத்திருக்கிறாய் ….மனதினுள் ஓரு குரல் ஒலித்தது .

சுட்ட கத்தரிக்காயை பார்த்திருக்கிறாயா ..நீ …? என உடனே கேட்க துடிக்கும் நாவை அடக்கிக் கொள்வாள் சாம்பவி .

இப்படி சொற்களை மீண்டுமொருமுறை கேட்க்க்கூடாது என்றே ஆன மட்டும் முயற்சிப்பாள் .ஆனால் அது நடக்காது .ஒரு மணி நேரத்திலேயே இது போன்றதோர் மற்றொரு குறை சொல்லும் சொற்கள் தீயாய் காதில் நுழையும் .

தலையை உலுக்கி பழைய ஞாபகங்களை களைந்தாள் .” ஏய் பொன்னம்மா , வாசுகி …வேலை நேரத்தில் என்ன வெட்டி அரட்டை  .போங்க போய் வேலையை பாருங்க ” சத்தமாக கூறினாள் .ஓடிவிட்டனர் அந்த பெண்கள் .

இதுபோன்ற தீச்சொற்கள் அன்பும் , அனுசரணையுமான பல செயல்களுக்கிடையேதான்  என்றாலும், அந்த சொற்கள் உதிர்கையில் முந்தைய அன்புசெயல்கள் அனைத்தும் நீர்த்துப்போகும் .பெருமூச்சோடு தனது இருக்கையில் அமர்ந்தாள் சாம்பவி .பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள் .வேண்டாத இந்த கசப்பான நினைவுகள் இன்று அதிகமாக துரத்த காரணம் என்ன..?

சட்டென காரணம் விளங்கியது .எல்லாம் அந்த சபரீஷால் வந்த்து. அதிகாலை கோலம் போடும் போதே உயிரை வாங்கவே வந்து சேர்ந்தான் .அந்த கம்பெனியில் வேலை அது …இதுவென என்னென்னவோ …சொல்லி ..புரையோடியிருந்த புண்ணை குத்தி கிளறிவிட்டான் .

சை ..இவனையெல்லாம் யார் வேலைக்கென ,அங்கிருந்து இங்கு வந்து தொலைய சொன்னது..? அங்கே இல்லாத கமபெனியா  ….? இன்று வேலையில் ஜாயின்ட் பண்ணுவதாக சொன்னானேனே …? இப்போது அங்கேதானே இருப்பான் …? சாம்பவியின் நினைவுகள் இங்கிருந்து …அங்கே தாவின

அங்கே ….

” நீங்க தலைக்கு என்ன ஷாம்புங்க யூஸ் பணறீங்க …? ” ரிசப்சன் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தான் சபரீஷ் .

” உங்க இடம் அங்கே இருக்கு .சமத்தா போய் உட்கார்ந்து வெயிட் பண்ணிங்கன்னா   நல்லது .இல்லை எங்க ஜி.எம் வரவும் நீங்க இங்கே வேலை பார்க்கிறதை  பற்றிய ஆலோசனை செய்ய வேண்டிவரலாம் …” கம்யூட்டர் திரையிலிருந்து கண்களை எடுக்காமல் அலட்டாமல் பதிலளித்தாள் அந்த பெண்.

சே …இந்த பொண்ணுங்க எப்படித்தான் நம்ம வழிசலை உடனே கண்டுபிடிச்சிடுறாங்களோ …? தனக்குள் நொந்தபடி கை கட்டிக்கொண்டு நல்ல பிள்ளை போல் ரிசப்சன் சோபாவில் போய் உட்கார்ந்து கொண்டான் சபரீஷ் .

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க , உடனே போய் எட்டிப்பார்க்க துடித்த கால்களை அடக்கி , கால் மேல் கால் போட்டுக்கொண்டான் .கையிலிருந்த பைலை அநாவசியமாக பிரித்து முகத்தை மறைத்துக்கொண்டான் . ஷூ அணிந்த ஜீன்ஸ் கால்கள் தன்னைக் கடப்பதை பைலின் அடியில் பார்த்தவன் , உடனே பைலை இறக்கி அந்த முகம் பார்க்க துடித்த கைகளை கட்டுப்படுத்திக் கொண்டான் .




உங்கள் ஜி.எம்  எப்படிங்க …என ஒரு கேள்வியை அந்த ரிசப்ஷன் பெண்ணிடம் கேட்கலாமா …? என யோசித்துவிட்டு , அவளது கறாரான முகத்தை பார்த்துவிட்டு அந்த எண்ணத்தை அழித்தான் .அரைமணிநேரம் கழித்தே அவனுக்கு அழைப்பு வந்த்து .லேசாக படபடக்கும் மனதுடன்தான் உள்ளே நுழைந்தான் .

,” யா …ஐ கன்சல்ட் மை ப்ரோ ..அன்ட் தென் டெல் யூ …ப்ளீஸ் வெயிட் டூ டேஸ் ….” நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசிய குரல் உள்ளே நுழைந்த்தும் காதில் விழுந்த்து .ஒற்றைவிரலால் அமரும்படி பணிக்கபட்டான் .தொடர்ந்து நேர்த்தியான ஆங்கிலத்தில் பேசி முடித்துவிட்டு ,இவனிடம் திரும்பி ” எஸ் …” என்றபோது ஒரு நிமிடம் திகைத்தான் .

” அது …வந்து …நான் ….” திணறினான் .

,” மிஸ்டர் சபரீஷ் .நியூ அப்பாயின்டமென்ட் …ரைட் …”

பதில் சொல்ல முடியாமல் தலையாட்டினான் .

,,” பாருங்க சபரீஷ் …இது டைல்ஸ் கம்பெனி .இந்தியாவின் நிறைய இடங்களில் இதற்கு கிளைகள் இருக்கிறது .தமிழ்நாட்டில் இங்கே ….ஹெட் ஆபிஸ் குஜராத்தில் . இது எல்லாம் உங்களுக்கு தெரியுமே …நீங்கள் மும்பை கிளையில் வேலை செய்தவர்தானே .இங்கே தமிழ்நாட்டில் இந்த கிளையில் நடக்கும் வியாபாரம் நமது ஹெட் ஆபிஸிற்கு திருப்தியில்லை .அதனால் உங்களை கம்பெனியின் ரிப்போர்ட்டிற்காக அனுப்பியிருக்கிறார்கள் .ரைட் …? ஹெட் ஆபிஸில் இருந்து வந்தாலும் , உங்களை இங்கே தொடர்ந்து வேலை செய்ய வைப்பதற்கான அனுமதி எனக்கு உண்டு .அதனால் இந்த வழிசல் , அசட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு நல்ல பிள்ளையாக இருந்தீர்களானால் மிக நல்லது .இல்லை பெண்களை கண்டதும் வழிந்தே தீர்வேனென்றால் …சாரி உங்கள் வேலையை பற்றி நான் யோசிக்க வேண்டும் ….”

தலைகுனிந்து ” சாரி …,” என்றான் .

” இட்ஸ் ஓ.கே .ஐ ரிமெம்பர் யூ .திஸ் இஸ் நாட் மும்பை .இது தங்க தமிழ்நாடு .இங்கே பெண்கள் மும்பை பெண்களை போல் இருக்க மாட்டார்கள் .தவறான பார்வைக்கே எளிதாக செருப்பை கையில் எடுத்துவிடுவார்கள் .” கடினமான அந்த குரலில் மிரண்டான்  சபரீஷ் .

” ஐய்யோ மேடம் …நான் வெறும் புள்ளைப்பூச்சிங்க .தேளுன்னு நினைச்சிடாதீங்க .கொடுக்கு எல்லாம் கிடையாதுங்க.சும்மா பார்க்கிறதோட , ஐ மீன் …அழகை ரசிக்கிறதோட சரிங்க .மேற்கொண்டு எதற்கும் எனக்கு தைரியம் கிடையாதுங்க …” அலறினான் .

” ம் …அப்போ செருப்புக்கு வேலை இருக்காதுங்கிறீங்க ….” நிதானமாக பின்னால சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டாள அவள் .

” ம்ஹூம் மேடம் .இப்போது நாம் வேலையை பார்க்கலாமா மேடம் ….? ,” பவ்யமானான் .

” ஓஹோ…..” என அவனை அளவிட்டவள் ,” நாம் இன்னமும் அறிமுகமாகவில்லையே .நான் சஹானா .இந்த கிளையின் மேனேஜர் …,” என்றபடி கைகளை நீட்டினாள் .




கை குலுக்கவென  முனனால் நீண்ட அந்த வெண்ணிற கரங்களை  பொதுவாக யாரும் மறுக்க மாட்டார்கள் .கரங்களிலிருந்து பார்வையை உயரத்தி அந்த பெண்ணை நோக்கினான் சபரீஷ் .தோள் வரை வெட்டிவிடப்பட்ட அடர்ந்த கூந்தலும் , பப்பென குவிந்த கன்னங்களில் விழுந்த சிறு குழியும் , வைத்திருப்பதே தெரியாத அந்த சிறிய கரும்பொட்டும் , போட்டிருப்பதே தெரியாத காது வளையமும் , வெறுமையான நகையேதுமற்ற வழுவழு கழுத்தும் , நீண்ட கரங்களில் தொங்கிய மெல்லிய ப்ரேஸ்லெட்டும் , குர்தாவும் , ஜீன்ஸும் …இந்த பெண்ணை நவநாகரீக மங்கையாகவே காட்டின .

இதோ இயல்பாக குலுக்குவதற்கு நீண்ட இந்த கரங்களும் .ஆனாலும் அந்த வெண்ணெய் கரங்களை தொடுவதில் சபரீஷுக்கு நிறைய தயக்கம் இருந்த்து . இவளது தோற்றம் மாடர்ன் பெண்ணாக இருந்தாலும் , பேச்சும் , செயலும் அப்படி தோன்றவில்லையே .இயல்பாக கை குலுக்க நீட்டுகிறாள் .தவறான ஒரு சிறு அழுத்தத்திலும் இவள் கைகள் என் கன்னத்தை பதம் பார்த்துவிடும் .இதில் அவனுக்கு சிறிதும் சந்தேகமில்லையாதலால் , ” வணக்கம் மேடம் ” என கைகளை குவித்தான் .

வெளியேற துடித்த புன்னகையை அடக்கிக் கொண்டு ,தானும் கை குவித்தாள் சஹானா .” தமிழ் பண்பாடு …? ” கேலியாய் புருவம் உயர்த்தினாள் .

” நானும் தமிழன்தாங்க …” பணிவாய் கூறினான் .

” ம் …,” என்றபடி அவனது பைலை பார்வையிட்டாள் .” உங்கள் விபரங்கள் எனக்கு நேற்றே மெயிலில் வந்துவிட்டது .இந்த பைலை உமாவிடம் கொடுத்து , ஆபீஸ் கமயூட்டரில் ஏற்ற சொல்லுங்க .,ஏன் இங்கே தங்குவதற்கு உங்களுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா …? ” பைலை பட்டென மூடி தூக்கி போட்டாள் .

ஏன் இந்த இடத்திற்கு என்ன குறை …மனதிற்குள் நினைத்தபடி , ” இந்த காலனியில் எங்க ரிலேடிவ் இருக்கிறாங்க மேடம் . அவுங்க பூரணியம்மா எனக்கு பெரியம்மா .அதாவது எங்க அம்மாவோட …,”

” ஸ்டாப் இட் …இந்த ப்ளா …ப்ளா எல்லாம் தேவையில்லை .எங்கேயும் தங்கிட்டு போங்க .ஐ டோன்ட் கேர்..கொஞ்சம் நாகரீகமான மனிதர்களோடு மட்டும் சிநேகம் வைத்துக் கொண்டீர்களானால் நல்லது ….,”

அவள் சொல்வது ஒன்றும் புரியவில்லையென்றாலும் தலையாட்டி வைத்தான் .அந்தக் காலனியை பற்றி இவளுக்கு தெரியுமா ….? என்ற சிந்தனையோடு ..

” மதியம் வரை இங்கே ஸ்டெடி பண்ணுங்க .லன்ஞ் சுக்கு மேல் , வெளியே நம்ம பார்ட்டிஸ் கொஞ்சம் பேரை போய் பார்க்கலாம் .என்ன …என்ன யோசிக்கிறீங்க ….? ”
” இல்லை மேடம் அங்கே நாகரீகமில்லாமல் யார் இருக்கிறாங்கன்னு யோசிச்சிட்டு இருந்தேன் …..நீங்க நினைக்கிற மாதிரி அங்கே …” என ஆரம்பித்தவன் சஹானாவின் எரிக்கும் பாரவையை கண்டதும் வாயை கப்பென மூடிக்கொண்டான் .

ஒரு நிமிடம் கண்களை இறுக மூடிக்கொண்டிருந்தவள் பிறகு  லேப்டாப்பை திறந்து வைததுக்கொண்டு ,  ” கெட் லாஸ்ட் …” என்றாள் .அவசரமாக வெளியேறினான் சபரீஷ் .

உமா ..யாராக இருக்க்கும் ..? அதோ அந்த பச்சை சுடிதார் …இதோ இந்த ஊதா சேலை …இல்லை இந்த ப்ரௌன் சுடிதார் ..கண்களை சுழலவிட்டவனை ” இங்கே வாங்க சார் ” என அழைத்தவள் சிகப்பு சேலை அணிந்த பெண் .




” நான்தான் உமா .பைலை கொடுங்க …,” என கை நீட்டியவளை , அட..டா நம்ம தமிழ்பெண்கள் எலலோரும் அழகுதான் மனதிற்குள் தன் இயலபுபடி வழிந்தபடி அவளிடம் பைலை நீட்டினான் .

” ஏங்க உமா ..இந்த கம்பெனியில் நிறைய பொண்ணுங்கதான் வேலைக்கு இருக்காங்க .அது எப்படிங்க ..? “

” நம்ம மேனேஜர் ஒரு பொண்ணு. தெரியுமதானே..? ” …கம்யூட்டருக்குள. புதைந்தபடி கேட்டாள் அவள் .

ம் …அது தெரிந்துதானே அவள் முகத்தை பார்க்க ஆவலுடன் காத்திருந்தேன் .ஆனால் நல்லா வகையாக எனக்கு ஆப்பு வச்சிட்டாளே ….மனதிற்குள் பேசிபடி ” அது வந்துங்க …உமா …” என ஆரம்பிததவனின் கைகளில் பைலை வைத்தவள் ” போய் சுலேகா மேடத்தை பாருங்க ” என்றாள் .

சுலேகா …என்ன அழகான பெயர் …அந்த பெயர் தோற்றுவித்த அழகிய தோற்றத்தை கற்பனை கண்டபடி , அந்த அறையினுள் நுழைந்தவன் விழித்தபடி நின்றான் . அந்த சுலேகா “ஆன்ட்டி ” என்ற கணக்கில் கூட சேர்க்க முடியாதவளாக இருந்தாள் .

அம்மான்னு சொல்லக்கூட முடியாது போலவே …பேசாமல் பாட்டி என்றே கூப்பிட.டு விடுவோமா …? சிந்தனையில் ஆழநதபடி அவளுக்கு பதில் சொன்னான் சபரீஷ் .

லன்ஞ்சுக்கு பிறகு , சஹானாவோடு காரில் போய் சில டீலர் , பார்ட்டீஸ்களை பார்த்தனர் .அவர்களிடம் டைல்ஸ் பற்றிய விபரங்களை வாங்கி குறித்துக்கொண்டான் .

” என்ன எங்களுக்கு தெரியவில்லை .உங்களுக்கு தெரிகிறதா …? ” கார் ஓட்டியபடி கிண்டலாக கேட்டாள் சஹானா .

” என்ன மேடம் .எனக்கு புரியவில்லை …? ” லாவகமான அவளது காரோட்டலை வியந்து பார்த்தபடி கேட்டான் சபரீஷ் .

” இங்கே சரியான வியாபாரம் இல்லாததிற்கான காரணம் …? என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை …சேல்ஸ் அதிகம் காட்டமுடியவில்லை என்ற காரணம் காட்டிதானே மும்பையிலிருந்து உங்களை அனுப்பியிருக்கிறார்கள் ….”

” முதல் நாளிலேயே என்ன தெரியும் ..? ஒரு வாரம் போகட்டும் .நான் நமது ஷோரூமை பார்க்க வேண்டுமே ..”

” ம் …ம் …நாளை பார்க்கலாம் ….” சொல்லியபடி காரை அந்த திருப்பத்தில் வேகம் குறைத்து திருப்பிய சஹானா ….திடீரென வேகத்தை கூட்டினாள்.இதனால் எதிரே வந்த ஸ்கூட்டி தடுமாறி , சாலையை விட்டு இறங்கி பள்ளததிற்குள் திரும்பி சாய்ந்த்து .

அதன் மேலிருந்த சாம்பவியும் சேர்ந்து சாய்ந்தாள் .பதறியபடி  வேகமாக இறங்கி சாம்பவிக்கு கை கொடுத்தான் சபரீஷ் .” பார்த்துங்க …கொஞ்சம் கவனமாக வந்திருக்க கூடாதா …? ” முழங்கை சிராய்த்து ரத்தம் வந்த்து சாம்பவிக்கு .




,” பார்த்துதான் வந்தேன் ….” முனங்கியபடி எழுந்தவளின் கை காயத்தை பார்த்துவிட்டு் ” இருங்க காரில் பர்ஸ்ட் எய்டு பாக்ஸ் இருக்கான்னு பார்க்கிறேன் ” என திரும்பி பார்த்தவன் , அசையாமல் காரினுள் அமர்ந்து சாம்பவியை பார்த்தபடி இருந்த சஹானாவை வியப்புடன் நோக்கினான் .

இவளென்ன இப்படி பார்த்துக் கொண்டிருக்கிறாள் …மிக சந்தோசமாக இருப்பது போல்ல்லவா தெரிகிறது .ஒரு வேளை சாம்பவியை பார்த்து விட்டு வேண்டுமென்றே காரை வேகமாக கொண்டுவந்து இடித்தாளோ …? சபரீஷின் எண்ண ஓட்டத்திற்கு ஆமாம் என பதில் கொடுத்தாள் சஹானா ..தனது செயலால் .

” மேடம் பர்ஸ்ட் எய்டு பாக்ஸில் ஏதாவது மருந்து…கொஞ்சம் காட்டனாவது … ” என்ற சபரீஷுக்கு

” மருந்தா ..?ஏதாவது தர்மாஸ்பத்திரிக்கு போய் டி டி இன்ஞ்செக்சன் போட்டுக்க சொல்லுங்க …,” அலட்சியமாக சொன்னவள் , முகத்தை திருப்பிக்கொண்டு காரை வேகமாக எடுத்துக்கொண்டு போய்விட்டாள் .




What’s your Reaction?
+1
33
+1
26
+1
4
+1
0
+1
3
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!