Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 29

29

எனக்கென்ற உன் சொல்லாடல்களில்
பார்வை பதித்தபடி
சொல்லாமல் விட்ட சொற்களின்
ஒற்றெழுத்துக்களை கணக்கெடுத்து
கொண்டிருக்கிறேன்
நட்சத்திரங்களின் பின்னே அவற்றை
மறைத்து விட்டு
நிலவை காட்டி சாதம் பிசைகிறாய்
அடைமழையில் கப்பல் விட்ட அனுபவமொன்றை
நிலவுடன் பகிர்ந்தபடி விண்மீனுக்கு
விழைகிறேன்
விருப்பம் நிறைவேறும் தருணத்தில்
விடிந்து விட
புற்களின் தலை மேல் பனித்துளிகள்
தேடுகிறேன் .




இளநீல டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டு சுற்றிலும் வண்ண வண்ண வாசமற்ற மலர்கள் மலர்ந்திருக்கும்  பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு …அருகினில் அமர்வதற்கென்று சிறு மேடை ஒன்று இளம் பச்சை வண்ண டைல்ஸ் கற்களால் அமைக்கப்பட்டு மிக அழகாக , சாம்பவி எதிர்பார்த்தது போன்றே அந்த கிணற்றடி மாற்றி அமைக்கப்பட்டு விட்டது .

கிணற்றிற்குள் எட்டி பார்த்தாள் .சுத்தமான நீர் அப்படியே அவளை வாங்கி பிரதிபலித்தது .இது போல் மனிதர்களால் ஒருவரை ஒருவர் பிரதிபலிக்க முடிவதில்லை .என் எண்ணம் இதுதான் …என் மனது இதுதான் என ஒவ்வொருவரும் தனித்தனி பாதையில் போய் கொண்டிருக்கிறார்கள் .பெருமூச்சுடன் நினைத்துக் கொண்டாள் .

மெல்ல நடந்து வந்து அந்த இளம் பச்சை மேடையில் அமர்ந்து கொண்டாள் .சுற்றிலும் வண்ண வண்ண பூக்கள் அசைந்து ஆட , அந்த மேடையில் அமர்ந்திருப்பது …ஏதோ அந்தப்புரத்தில் தோழிகள் புடை சூழ மகாராணியாக அமர்ந்திருப்பது போன்றதோர் உணர்வை தந்த்து .இது போன்றதோர் அனுபவத்திற்காகாகத்தான் இந்த கிணற்றை எடுத்து விடாமல் அப்படியே விட்டு வைக்க சொன்னாள் .

சுட்டெரிக்கும் வெயில் வீசும் பின் மதிய வேளையானாலும் , அருகிலிருந்த வேப்பமரக்காற்றும் , கிணற்று நீரின் குளிர்ச்சியை அள்ளி வந்த காற்றும் …சேர்ந்து வெப்பத்தை மறைத்து உடலை குளிர்விக்க  , கண்களை மூடி உடலை தளர்த்திக்கொண்டாள் .மனம் காலை  நினைவிற்கு போனது .வேதனையில் ஆழ்ந்த்து .

என் கணவரின் முன்னேற்றத்திற்கு நானே தடையாக இருக்கலாமா …? சாம்பவியின் மனம் கேட்டது .

” ஏன் அவருக்கு அந்த விருது கிடைக்கவில்லை அத்தை .அதற்கு நான் எப்படி காரணமாவேன் …? ” குழப்பத்துடன் கேட்டாள் .

,” நீதான் காரணம் . ரிஷியை அவரது மகளுக்கு திருமணம் முடித்து வைக்க ஆசைப்பட்டு சென்ட்ரல் மினிஸ்டர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார் .இதை பற்றி பேசத்தான் அவனை இங்கே வர வைத்தோம் .அவன் இங்கே மதுரையில் வந்து உட்கார்ந்து கொண்டான் .அங்கே எத்தனையோ வாய்ப்புகள் அவனுக்காக காத்திருக்க இங்கே ஒன்றிற்கும் உதவாத உன் பின்னால் சுற்றிக்  கொண்டிருக்கிறான் .இதில் அந்த மினிஸ்டர் மகளுக்கு வேறு ஒரேடியாக நோ சொல்லிவிட்டான் .அதனால் அவர் ஏதோ தில்லுமுல்லு பண்ணி இவனுக்கு கிடைக்க இருந்த அவார்டையே மாற்றி , இவனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவருக்கு கொடுக்க ஏற்பாடு பண்ணிவிட்டார் .இதனால் ரிஷிக்கு எவ்வளவு நஷ்டம் தெரியுமா …? இந்த அவார்டு அவன் கை வரை வந்து தட்டிப்போனது அவனது தொழிலையே பாதிக்கும் .”

இது விசயமாகத்தான் அடிக்கடி வெளியூர் போயக்கொண்டிருந்தானா ….என எண்ணிய சாம்பவி …

“போகட்டும் அத்தை .மினிஸ்டர் மகளை திருமணம் செய்து அதன் மூலம்தான் அரசாங்க விருது வாங்கவேண்டுமென்றால் , அது நமக்கு வேண்டாம் அத்தை . நாம் நேர்மையான வழியில் உழைத்தால் அந்த விருது அடுத்த வருடமே நம்மை தேடி வந்துவிட்டு போகிறது ….”

” அப்போ இப்போது ரிஷி நேர்மையாக உழைக்கவில்லை .அதனால் இந்த விருதிற்கும் அவன் தகுதியில்லை என்று சொல்கிறாயா …? “




மாமியாரின் பேச்சில் அயர்ந்தாள் சாம்பவி விநாடியில் பேச்சை எப்படி மாற்றுகிறார்கள் …?கணவனின் கடின உழைப்பை அறிந்து வைத்திருக்கும் அவளால் எப்படி இது போலெல்லாம் சொல்ல முடியும் ….?

,” நீங்கள் வீம்பிற்கு பேசுகிறீர்கள் அத்தை …”

” வீம்பா …யாருக்கு …? உனக்கா …? எனக்கா ….? வீம்பு பிடிப்பதெல்லாம் நீயும் உன் குடும்பமும்தான் .நாங்கள் இல்லை .தாலியை சுழட்டி கொடுத்து அனுப்பினாயே …அப்படியே போய்விட வேண்டியதுதானே .திரும்பவும் வந்து என் மகனோடு ஒட்டிக்கொண்டு எதற்கு உயிரை வாங்குகிறாய் ….? “

” நான் இங்கேயேதான் இருக்கிறேன் .உங்கள் மகன்தான் என்னை தேடி வந்திருக்கிறார் …அதனை நினைவில் வைத்துக் கொண்டு பேசுங்கள் ….”

,” அப்படி அவனை உன்னை தேடி வர வைத்துவிட்ட திமிர்தானே இப்படியெல்லாம் பேச வைக்கிறது ….? அவன் உனக்காக தொழிலை , பெயரை , புகழை எல்லாவற்றையும் விட்டு கொடுத்துவிட்டான் .நீ அவனுக்காக என்ன கொடுத்தாய் …? “

” ஒரு மனைவி கணவனுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்தேன் அத்தை .அவருக்கென்று ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கிறேன்.தேவதை போல் ஒரு மகளை கொடுத்திருக்கிறேன் ்…” சாம்பவியின் குரலில் பெருமை இருந்த்து .

” குழந்தையா ..? யாருடைய குழந்தை ….? ” மஞ்சுளா ஒரு மாதிரி குரலில் கேட்க …முதலில் குழந்தை விவரம் இவர்களுக்கு தெரியாதா …என எண்ணிவிட்டு அதைப் பற்றி கூற வாயை திறந்த சாம்பவிக்கு மஞ்சுளாவின் ஒரு மாதிரியான  பேச்சு மனதில் பட்டது .

” உங்கள் திருமணம் முடிந்து மொத்தமே ஒரு வாரம்தான் நீ ரிஷியுடன் இருந்தாய் . அந்த நாட்களிலும் நீங்கள் இருவரும் அப்படி ஒன்றும் ஒட்டி பழகவில்லை .இரண்டே நாட்கள் கோவாவில் இருந்தீர்கள் ்அப்போதும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருந்த்தாக ரிஷி சொன்னான் .பிறகு …வந்த்தும் புருசனே வேண்டாமென்று தாலியை சுழட்டி கொடுத்து அனுப்பிவிட்டாய் .இதில் குழந்தை எங்கிருந்து வந்த்து ….? “

வார்த்தைகளில் கூட இது போல் நெஞ்சை கிழிக்கும் வாட்களை வைக்க முடியுமா ….? சுக்கல் சுக்கலாக உடைந்து கொண்டிருந்தாள் சாம்பவி .

” உனக்கு வேறு திருமண ஏற்பாடுகள் கூட நடந்த்தாமே ….அந்த குழந்தை யாருடைய குழந்தை சாம்பவி …? அதற்கு அப்பா யார் …?  ….” குரூரமாக கேட்டாள் மஞ்சுளா .

கண்களை கட்டி விட்டு பாதாளத்திற்குள் உருட்டி விட்டது போன்றதோர் உணர்வில் இருந்தாள் சாம்பவி .அவளே அறியாமல் கண்களில் கண்ணீர் வடிந்தபடி இருந்த்து .இவர்கள் இப்படி பேசுவார்கள் என்று அவனுக்கு தெரியும்தானே ….பிறகும ஏன் என்னை இவர்களுடன் தனியாக விட்டு விட்டு போனான் …? உள்ளே நுழைந்த்திலிருந்து மிகவும் இறுக்கமாக இருந்தானே ….என்னை திரும்பியும் பார்க்கவில்லையே ….அத்தோடு நான் சபரிஷை பற்றி பேசியதால் என் மீது கோபமாக வேறு இருந்தானே ….இப்போது அவனது பெற்றோர் சொல்வது அவனுக்கு சரியென்று தோன்றிவிட்டதா …? தேவையில்லாமல் என்னை பாரமாக சுமந்து கொண்டிருக்கிறோமென எண்ணிவிட்டானா …? அதைப் பற்றி யோசிக்கத்தான் தனிமை வேண்டுமென வெளியே போந்விட்டானா …? இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடியவன் அவன்தானே …அது என் பிள்ளையென அடித்து சொல்ல அவனல்லவா …அருகில் இருக்க வேண்டும் …? இதனை நானா ஒவ்ஙொருவருக்கும் விளக்க முடியும் …?




இன்னமும் உறுதி பெற்றிராத தனது திருமணவாழ்வினால் சாம்பவி குழம்ப தொடங்க …அந்த குழப்பத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்ட மஞ்சுளா தொடர்ந்தாள் .

” என்ன சாம்பவி பதிலையே காணோம் …? நான் உன் குழந்தையுடைய அப்பாவை பற்றி கேட்டுக்கொண்டிருந்தேன் .ஒருவேளை அந்த விபரம் உனக்கே தெரியாதோ …? “

” அத்தை ….” என்ற சாம்பவியின் அலறலுக்கு மேலாக …

” மம்மி …..” என்ற அலறல் ஒலித்தது .

சஹானா …ஒளிரும் நெருப்பு பந்து போல்  முகம் சிவக்க  கதவை திறந்து  வந்து கொண்டிருந்தாள் .

” என்ன மம்மி ..ரிஷி இல்லாத தைரியமா …? உன்  எண்ணம் போல் என்னென்னவோ பேசிக்கொண்டு போகிறாயே ….? “

” நான் தப்பாக எதுவும் பேசவில்லையே சஹி .நியாயமாக தோன்றிய சந்தேகத்தை கேட்டேன் .ஏன் இவள் குழந்தை உண்டான விசயம் கேட்டவுடன் நீ கூட இந்த கேள்வியை கேட்கவில்லை …? …” சாம்பவி அதிர்ந்து சஹானாவை பார்க்க அவள் ….

” நான் கேட்பேன் மம்மி .நான் அவளை ஆயிரம் கேட்பேன் .திட்டுவேன் .ஆனால் நீ கேட்க்கூடாது .தப்பாக ஒரு பார்வை பார்க்க கூடாது .அதற்கு நிச்சயம் நான் அனுமதிக்கமாட்டேன் …” என்றபடி சாம்பவியின் தோள்களை பற்றி தன்னுடன் இழுத்து அணைத்துக்கொண்டாள் .

” சஹி …இவள் ….இவள் அண்ணன் …உன் வாழ்க்கையை கெடுத்தவர்கள் .அதை மறந்து விட்டு இவர்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசுகிறாயே ….? “

” என் வாழ்க்கையை நான் அப்படி யார் கையிலும் தூக்கி கொடுத்து விட மாட்டேன் மம்மி .எப்போதும் அதனை பத்திரமாக நானேதான் வைத்திருப்பேன் .அதை எப்படி கொண்டு போக வேண்டுமென்றும் எனக்கு தெரியும் .இதில் தலையிட நான் யாருக்கும் உரிமை கொடுப்பதில்லை ….” உனக்கு கூடத்தான் என சொல்லாமல் சொன்னபடி அம்மாவை பார்த்தாள் சஹானா .

மகளின் இந்த அலட்சியத்தில் பாதிக்கப்பட்ட மஞ்சுளா ” நான் உன்னை பெற்றவளடி ….” குரல் தழுதழுக்க கூறினாள் .

” ஆமாம் அதனால்தான் இப்போது உன்னை நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கிறேன் .இதோ இவளுக்கும் எனக்கும் எந்த ரிலேசன்ஷிப் இருந்தாலும் , முதலில் நானும் இவளும் நல்ல ப்ரெண்ட்ஸ் .அதற்கு பிறகுதான் எங்களுக்குள் உறவுகளெல்லாம் .யாருக்காகவும் …எந்த சொந்தங்களுக்காகவும் எங்கள் ப்ரெண்ட்ஷிப்பை நாங்கள் விட்டு கொடுக்க மாட்டோம் ….” உறுதியாக கூறினாள்.

எதிர்பாராத இந்த தாக்குதலில் அதிர்ச்சியான மஞ்சுளா ” சஹி ….” என விம்ம தொடங்க …

” போதும் மம்மி .அழாதே .. ..டாட் காரில் வெயிட் பண்ணுகிறார் . போ …இங்கே மதுரையில் இல்லை .நீங்கள் இரண்டு பேரும் சென்னைக்கே போய்விடுங்கள் .நாங்கள் பிறகு வருகிறோம் ….” சொல்லிவிட்டு திரும்பிக் கொண்டாள் .

மஞ்சுளா தளர்ந்த நடையுடன் வெளியேறினாள் .




,” சம்பா ..சாரிடி மம்மி பேசியதற்காக நான் உன்கிட்ட சாரி கேட்டுக்கிறேன்….” சாம்பவியின் தோள்களை அணைத்தபடி சொன்னாள் சஹானா .

” எனக்காக பேசியதற்காக நான் உன்னிடம் நன்றி சொல்லிக் கொள்கிறேன்…” உயிரற்று ஒலித்தது சாம்பவியின் குரல் .

” விடுடி அம்மாவிற்கு ஏதேதோ ஆசை ….அதனால்தான் இப்படி கொஞ்சம் கடூரமாக பேசிவிட்டாள் .மற்றபடி மிகவும் நல்லவள் தெரியுமா …? கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுவாள் பாரேன் …,” சஹானாவின் சமாதானங்கள் மனதிற்கு மெல்லிய இதமளித்தது.

மெல்ல தலையசைத்து அதை ஏற்றுக்கொண்ட சாம்பவி ” நான்கொஞ்சம் வெளியே போய்விட்டு வர்றேனடி …”என்றுவிட்டு வெளியேறினாள் .

தளர்ந்த நடையுடன் செல்லும் தோழியை குற்றவுணர்வுடன் பார்த்த சஹானா ஒரு முடிவுடன் தனது போனை எடுத்தாள் .

சாம்பவி மனநிம்மதியை தேடி  இதோ இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாள் .

அவளுக்கு தனிமை அவசியமாயிருந்த்து . ஷ்ராவத் , தனசேகர் ,மஞ்சுளா , சஹானா ,ரிஷிதரன் என ஒவ்வொருவராக அவள் மேல் பொழிந்த எதிர்பாரா நிமிடங்களை மென்று ஜீரணிப்பதற்கு ….இந்த தனிமை வேண்டியிருந்த்து .

கண்களை இறுக மூடி ஒவ்வொருவரையும் தனக்குள் வாங்கிக் கொண்டிருந்தாள் .சில நேரம் நெகிழ்ந்த உள்ளம்  பின் இறுகியது …துவண்டு பின் நேராகி சிறிது பூரித்து இறுதியில் வெறுமையானது .

சாஹித்யா …என் குழந்தை …என் தெய்வம் …என் தேவதை …அவளுக்கு இப்படி ஒரு இழிசொல்லா …? உதடு துடிக்க ….உள்ளம் வெடிக்க …

” நீங்கள் கூட ஏதாவது ஒரு நொடி நம் குழந்தையை அப்படி நினைத்தீர்களா …? ” மெல்ல வாய் திறந்து முணுமுணுத்தாள் சாம்பவி .

” நிச்சயம் இல்லை பவி ….” என்று பதில் சொல்லியபடி அவளருகில் அமர்ந்தான் ரிஷிதரன் .

மனம் முழுவதும் அவன் மேல் வருத்தமிருந்தாலும் ஆதரவான பார்வையோடு அவனை அருகில் காணவும் சட்டென அவன் கழுத்தை கட்டிக் கொள்ள தோன்றியது .அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அறையை விட்டு அவன் வெளியேறிய நிமிடம் நினைவு வர முகத்தை திருப்பிக்கொண்டு வீட்டிற்குள் வந்துவிட்டாள் .

பின்னாலேயே உள்ளே வந்த ரிஷிதரன் தனது கரங்களை விரித்தபடி ” பவி ….” என அழைத்தான் .அதனை பார்க்காத்து போல் சன்னல் அருகில் போய் நின்று வெளியே வேடிக்கை பார்க்க தொடங்கினான் .

ஒரு நிமிடம் அவளையே பார்த்தவன் பிறகு தோள்களை குலுக்கிக் கொண்டான் .” வீடு எப்படி வந்திருக்கிறது சாம்பவி .உனது ஐடியாவோட என்னுடையது சிலவற்றையும் சேர்த்திருக்கிறேன் உனக்கு திருப்தியாக இருக்கிறதா …? ” என்றான் .

” ம் …இதோ இந்த பக்க சுவர்களுக்கு ஏன் இன்னமும் பெயின்ட் பண்ணாமல் வைத்திருக்கிறீர்கள் …? ” வலது பக்க சுவரை காட்டினாள் .

” அந்த இடத்தில் அழகாக ஒரு ஓவியம் வரையலாமென்ற ஐடியா சாம்பவி .உன் யோசனைப்படி முன் ஹாலில் வரைந்திருக்கும் கண்ணன் ஓவியம் மிக அழகாக அமைந்து விட்டது பார்த்தாயா …? அதைப் போல் இங்கேயும் ஒரு ஓவியம் .அது என்னவென்று நீயே செலக்ட் பண்ணி வை ….” என்றபடி சன்னல் கதவை பூட்டினான் .

” ஓ…வரையலாமே …சீனரி போல் பார்க்கலாமா …அல்லது ஏதாவது மலர்கள் இல்லை ….மாடர்ன் ஆர்ட் ஏதாவது டிரை பண்ணலாமா …? ” ஆவலுடன் கேட்டாள் .

” தட்ஸ் யுவர் சாய்ஸ் …டியர் ….” என்றபடி அடுத்த சன்னலை பூட்டினான் .

” இந்த சன்னலுக்கு போட்டிருக்கும் ஸ்கீரின் கலர் சரியில்லைங்க .சுவரோடு நிறத்திற்கு பொருந்தி வரலை …வேறு மாற்ற வேண்டும் …”

” ஓ…மாற்றிவிடலாம் .நாளை நாமே கடைக்கு போய் வேறு ஸ்கிரீன் வாங்கலாம் …” வாசல் கதவை இழுத்து பூட்டினான் .

” வாசலில் முன்பிருந்த ஒட்டு கூரையை மாற்றிவிட்டு புதிதாக போட்டிருக்கிறோமே ..அந்த கூரை எப்படி இருக்கிறது….” என்றபடி அவள் அருகில் வந்தான் .

” ஆமாங்க …உள்ளே நுழையும் போதே பார்த்தேன் .என்ன கூரை அது புதிதாக இருக்கிறது …? ஏன் கதவு சன்னல் எல்லாம் பூட்டுகிறீர்கள் …? “

” பசுமை வீடுகள் கேள்விப்பட்டிருக்கிறாயா …அதில் யூஸ் பண்ணும் கான்செப்ட் அது .கூரைகளின் மீது மண் பரப்பி புற்களை வளர்ப்பது .இதனால் இயற்கை முறையில்  வீடு குளிர்ச்சியாகும் .முன்பு ஙெளிநாடுகளில் மட்டுமே இந்த மெதட் இருந்த்து .இப்போது நம் நாட்டிலும் வந்துள்ளது .இங்கே தமிழ்நாட்டில் அநேகமாக நாம் தான் ஆரம்பித்து வைத்திருக்கிறோமென நினைக்கிறேன் ….” என்றவனின் கைகள் அவள் கன்னத்தை வருடின.




அவன் கதவு ,சன்னல்களை பூட்டியதன் காரணத்தை உணர்ந்த சாம்பவி அவனை முறைத்தாள் .” இதற்குத்தான் எல்லாவற்றையும் பூட்டினீர்களா …? ” அவளின் இதயத்தில் குதிரைகள் தடதடத்து ஓடின.

” எதற்குத்தான் பவி ….நான் சும்மா இயற்கை வெளிச்சமின்றி நம் வீடு எப்படியிருக்கிறது என்று  பார்ப்பதற்காக பூட்டினேன் ….” என்றான் .

” ஓ…” என்ற சாம்பவியின் குரலில் சிறிது ஏமாற்றம் இருந்த்து.

” நீ எதற்கென்று நினைத்தாய் பவி …? ” குறும்புடன் கேட்டபடி மூக்கால் அவள் கன்னம் உரசினான் .

” நான் ஒன்றும் நினைக்கவல்லை .விடுங்கள் நான் போய் அந்த கூரையை இன்னொரு முறை பார்க்க போகிறேன் …” நகர்ந்தவளின் கால்கள் தரையில் படவில்லை .அவளை தனது கைகளில் அள்ளிக் கொண்டான் ரிஷிதரன் .

” நீ ஆசையாக ரசித்து செட் பண்ணிய ஊஞ்சல் பவி .வா …அதில் உட்காரலாம் ….” அந்த ஊஞ்சலில் பூங்கொத்தாய் அவளை சரித்தவன் அதனை மெல்ல ஆட்டிவிட்டான் .

ஊஞ்சலோடு இணைந்த மணிகள் ஒலிக்க தொடங்க , இருளும் , ஒளியும் அரைகுறையாய் சூழ்ந்த அந்த அறையும் ,மணியோசையுடன் கூடிய ஊஞ்சலாட்டமும் , அதனை ஆட்டி விட்டபடி அருகிருந்த ஆண்மையான கணவனுமாக சேர்ந்து சாம்பவியை ஒரு புதுவிதமான மாய உலகுக்கு அழைத்து செல்ல ,தேனுதிரும்  மலர்க்கூட்டமென சரிந்து கிடந்தபடி  அவள் கண் மூடி அந்த அற்புத நொடிகளை அனுபவிக்க தொடங்கினாள் .
ஊஞ்சலை நிறுத்திவிட்டு அவளருகிலேயே தானும் சரிந்த ரிஷிதரன் ” தேவலோகத்தில் இருப்பது போல் தோன்றுகிறது பவி …” என அவளது எண்ணத்தை தன் வார்த்தைகளில் சொல்ல …

” எனக்கும்தான் …” என்றபடி தன் மேல் படர்ந்த கணவனை சிறிதும் தயக்கமின்றி இறுக அணைத்து தனக்குள் பொதித்துக் கொண்டாள் .

ஊஞ்சல் மெல்ல ஆடத்தொடங்க மணிகள் சிருங்காரமாய் ஒலிக்க துவங்கின.

” அதோ அங்கே பாருங்கள் அந்த பழங்கள் இன்னும் பெரியதாக இருக்கிறது …அதையும் பறியுங்கள் ….” மரத்தின் மேல் ஏறி நின்று கொடுக்காபுளி பறித்துக் கொண்டிருந்த ரிஷிதரனை மேலும் ஏவிக்கொண்டிருந்தாள் சாம்பவி .அதையும் பறித்துவிட்டு இறங்கிய ரிஷிதரன் அவள் மடி நிறைய கட்டிக் கொண்டிருந்த பழங்களை பார்த்து அலறினான்

” ஏன்டி எனக்கு தெரியாமல் தனியாக கொடுக்காபுளி வியாபாரம் எதுவும் பார்க்கும் ஐடியாவில் இருக்கிறாயா ….? மடி நிறைய இத்தனை கட்டிக் கொண்டிருக்கறாய் …?இதில் இன்னமும் அதை பறி …இதை பறி …என்று என்னை அதிகாரம் வேறு ….” போலியாய் அலுத்துக் கொண்டான் .

” வியாபாரமா …இது எனக்கே பத்தாது .நீங்கள் இன்னமும் இரண்டு கிளைகள் மேலே போய் அதோ அந்த கொத்துக்களையும் பறித்து போட்டீர்களானால் ….” என ஆரம்பித்தவள் அவன் முறைப்பை பார்த்ததும் …

” சரி …சரி வேண்டாம் .பொண்டாட்டி ஆசையை நிறைவேற்ற முடியாத புருசனெல்லாம் என்ன புரசனோ …? என முணுமுணுத்தாள் .

பின்னிருந்து அவளை சேர்த்து அணைத்தவன் ” பொண்டாட்டி ஆசையைதானே ….உள்ளே வா …ஊஞ்சலில் வைத்து நிறைவேற்றுகிறேன் .” என்றபடி முன்னால் நடந்தான்.

சற்று நேரம் முந்தைய ஊஞ்சலாட்டம் நினைவு வர ,சாம்பவியின் முகம் சிவந்த்து .

” ம்க்கும் …அம்மா , அப்பா , தங்கை இருந்தார்களானால் முகத்தை பாராமல் ஓடுவது …இப்போது தனிமையில் மட்டும் கொஞ்சுவது …” முன்னால் நடந்து கொண்டிருந்த அவன் முதுகை பார்த்து முணுமுணுத்தவள் …

” போடா …டேய் …” என தனது வழக்கம் போல் இதழ்களை மட்டும் அசைத்தாள் .

” என்னடி சொன்ன …? ” அவன் திரும்பி விட்டான் .




இவனுக்கென்ன முதுகிலும் கண்ணிருக்கறதா ..? விழித்தாள் .

அவளது நீண்ட பின்னலை பற்றி இழுத்தவன் ” திரும்ப சொல்லுடி ….” என்றான் .

” ஏன் எனக்கென்ன பயமா …? போடா …” ஆரம்பித்தவளின் இதழ்களை அவனது இதழ்கள் முடிக்கவிடாமல் மூடின .

” சீ …என்ன இது …இப்படி வெளியில் வைத்துக் கொண்டு ….” என அவனை சாம்பவி தள்ளி விட்ட போது ரிஷியின்  அந்த முத்தம் முடிந்திருந்த்து.

தனது இதழ்களை வருடியபடி ” ம் …இப்பொது கொஞ்சம் தேறிவிட்டாய் பவி …ஆனால் இன்னமும் உனக்கு நிறைய கற்று தர வேண்டியதிருக்கிறது .ஸ்பெசல் கிளாஸெல்லாம் நிறைய வைத்து திரும்ப , திரும்ப பாடம் நடத்தி ,கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் உன்னை இழுத்து கொண்டு வர வேண்டியதிருக்கிறது .மற்றதிலெல்லாம் அவ்வளவு வாய் பேசுகிறாய் .இதில் மட்டும் சுத்தமாக ஜீரோ வாக இருக்கிறாயே ….” என ரிஷி  அவளை சீண்ட …சாம்பவி வெட்கம் தாங்காமல் உள்ளே ஓடி வந்துவிட்டாள் .

அங்கே அந்த  ஊஞ்சல் அவளை மீண்டும் வரவேற்றது .பின்னாலேயே வந்த ரிஷிதரன் கதவுகளை மூடினான் .உல்லாசமும் , சல்லாபமுமாய் மீண்டும் ஒரு காதல் அந்த ஊஞ்சலின் மேல் …இப்போது அந்த மணிகள் கூட வெட்கி தங்கள் வாயை மூடிக்கொண்டன.

தன் மார்பில் சாய்ந்திருந்த மனைவியை மிகுந்த மனதிருப்தியோடு ஆறத்தழுவியிருந்தான் ரிஷிதரன் .

” என்னங்க இந்த வீடு எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது .இதை விட்டு போகவே பிடிக்கலைங்க ….” அவன் மார்பு முடிகளில் கன்னத்தை உரசியபடி சிணுங்கினாள் சாம்பவி .

” இது சின்ன வயதிலிருந்தே உன்னை கவர்ந்த இடமல்லவா பவி …? இப்போது உனது முதல் தொழில் மாடலாகவும் ஆகிவிட்டது .அத்தோடு நம் இருவருக்குமே மறக்க முடியாத நிகழ்வுகளை கொண்டதாகவும்  இப்போது இருக்கிறது ….” அவனது சீண்டலில் தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள் .

” அவளது முகத்தை நிமிர்த்தி பார்த்து ரசித்தவன் ” இந்த இடத்தை ..நம்மை நமக்கு திருப்பி கொடுத்த இந்த அற்புத நிமிடங்களை நான் வேறொருவருக்கு தருவேனா பவி .எப்போதோ இந்த வீட்டை நமக்கே நமக்கென்று வாங்கிவிட்டேன் “

” என்னங்க நிஜமாகத்தான் சொல்கிறீர்களா …? இந்த வீட்டை வாங்கியவர் மிகுந்த ஆசையோடு வாங்கினார் .அதை யாருக்கும் கொடுக்கும் எண்ணம் இல்லையென கூறினாரே …? நீங்கள் எப்படி ….?”  பரவசத்துடன் அவனை பார்த்தாள் .

“அதெல்லாம் நான் பேசுகிற விதமாக  பேசி முடித்து விட்டேன் .உன் பெயரில்தான் வாங்கியிருக்கிறேன் .அடுத்த வாரம் ரிஜிஸட்ரேசன் .இனி …நாம் எப்போதாவது இங்கே வரும் போது தங்குவதற்கென்று இந்த வீடு நமக்காக காத்துக் கொண்டிருக்கும் ….”

” எப்போதாவதா ….? ” முகம் வாட கேட்டாள் .

” எப்போதாவதுதான் ….?  அழுத்தி சொன்னான் .”நாம் அமெரிக்காவில்தான் செட்டிலாக போகிறோம் பவி ….”

” ஐய்யோ …ஏன் …? “

” வேண்டாம் பவி .இங்கே நமக்கு ஒத்து வராது .அம்மா பேசியதை கேட்டாயல்லவா …? அவர்கள் எப்போதும் இப்படித்தான் பேசுவார்கள் .நாம் கொஞ்சம் விலகியிருப்பதுதான் நல்லது ….”




” பேசட்டும் என்று அப்போது விட்டு விட்டு போய்விட்டீர்கள் .இப்போது வந்து இப்படி சொல்கிறீர்களே ….” குறைபட்டாள் .

” எனக்கு வேறு வழி தெரியவில்லை பவி .சஹிக்கு உன் மேல் உள்ள பாசத்தை நான் அறிவேன் .ஆனால் …அதனை அவளே அறியவில்லை .அதை வெளியே கொண்டு வருவதற்காக எனக்கு யாராவது உன்னை நன்றாக போட்டு தாக்க வேண்டியதிருந்த்து .ஷ்ரத்திடம் கேட்டு பார்த்தேன் .அவன் போடா …எனக்கு வேறு வேலையில்லையா …? சாம்பவியை போய் யாராவது திட்டுவார்களா …என்றுவிட்டான் .நானே உன்னை நன்றாக திட்டலாமென்று நினைத்தால் …எனக்கு உன் முகத்தை நேரடியாக பார்த்தாலே ..திட்டுவதை தவிர வேறு என்னென்னவோதான் செய்ய வேண்டும் போலிருந்த்து ….” என்று கூறிவிட்டு சாம்பவியின் செல்ல குத்துக்களை தனது மார்பில் வாங்கிக் கொண்டான் .

” அப்போதுதான் மம்மியும் , டாடியும் வந்தார்கள் .என் மேல் கோபமாகவும் , உன் மேல் வெறுப்பாகவும் இருந்தார்கள் .அந்த நேரத்தில் உன்னை தனியாக விட்டு சென்றால் நான் நினைத்தது நடக்குமென்று எனக்கு தோன்றியது .அது போலவே நடந்தும் விட்டது .மம்மியும் , டாடியும் போனதும் சஹானாவே எனக்கு போன் போட்டு சாம்பவியை எப்போது நம் வீட்டிற்கு கூட்டி வரப்போகிறாய் …என கேட்டாள் .இதற்காகத்தானே நானும் காத்திருந்தேன் .இதோ …உடனேயே எனக் கூறிவிட்டு …உன்னை பார்க்க இங்கே வந்தேன் .”

” சஹானாவிற்காகத்தான் பாப்பாவை பார்க்காமலேயே இருந்தீர்களா …? “

” ஆமாம் .. .அவள் என்னவோ …உன்னை எதிரியாக நினைத்துக் கொண்டிருந்தாள்  .அதனால்தான் அப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தாள் .அதனை மாற்றவேண்டும் .நம் குழந்தையை முதலில் அவள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றுதான்  நான் தள்ளியிருந்து கொண்டு சஹானாவை முதலில் பாப்பாவை தூக்க வைத்தேன் ….”

எல்லாவற்றிலும் முன் யோசனையுடன் செயல்பட்ட கணவனை நினைத்து சாம்பவிக்கு பெருமையாக இருந்த்து .

” யூ ஹேவ் டன் எ கிரேட் ஜாப் ….” என அவனை பாராட்டினாள் .

” நோ டார்லிங் …இனித்தான் நான் முடிக்க வேண்டிய நிறைய சிறந்த வேலைகள் இருக்கிறது ….” கண்களை சிமிட்டியபடி அவளை தன்புறம் இழுத்தவனின் கன்னத்தை நறுக்கென கிள்ளினாள் .

” இன்று …இந்த வீட்டை விட்டு வெளியேறும் ஐடியா எதுவும் உங்களுக்கு  இல்லை போல …”

” ஆ…அதுக்கு ஏன்டி இப்படி கிள்ளுற ..? “

” நீங்க மட்டும் என்னை கடிக்கலை ..? எப்படி வலித்தது தெரியுமா …? ” கன்னத்தை தடவினாள் .

” ஏய்…இது போங்காட்டம் …கடித்தால் பதிலுக்கு கடிக்கனும் ….அதென்ன கிள்ளுறது …ம் …கம்மான் …வா ..வா ..எப்படி கடித்தேன் …செய்து காட்டு ….” கலாட்டாவை ஆரம்பித்தான் .

” ம் …அதெல்லாம் முடியாது ….” அவனின் கைகளிலிருந்து ஓடியவள் ..திடீரென முகம் வாட நின்றாள் .

” பவி என்னடா …? ” ஆதரவாய் கேட்டான் .

” நாம் இங்கே சந்தோசமாக இருக்கிறோம் .ஆனால் சஹி ….அவளதுவாழ்க்கை இன்னும் ஆரம்பிக்கவேயில்லையேங்க ….நீங்கள் அருகில் வரும்போதெல்லாம் எனக்கு இது ஒரு உறுத்தல் இருந்து கொண்டேயிருக்கிறதே ….” வேதனையாக கூறினாள் .

” அதெப்படி அவளை அப்படியே விடுவேன் .இப்போதுதான் ஒளிவு மறைவின்றி பேசி விடுங்கள் …என கண்டிப்பாக கூறி சஹியையும் , ஷ்ரத்தையும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் .”

” சஹி ஒத்துக்கொண்டாளா …? ஷ்ரத் சம்மதித்தாரா …? “

” ஷ்ரத்தற்கு எப்போதும் சம்மதம்தான் .சஹிதான் தேவையில்லாத்தையெல்லாம் நினைத்து மனதைக் குழப்பிக் கொண்டிருந்தாள் .இப்போதும் உன்னை சொல்லித்தான் அவளை ஷ்ரத்துடன் அனுப்பியிருக்கிறேன் …”

” என்னையா ….? என்ன சொன்னீர்கள் …? “




” நீ இப்படியே தனியாக இருந்தால் உன் தோழி என்னை திரும்பி பார்க்கவே மாட்டாள் போலவே …முதலில் நீ உன் வாழ்க்கை பற்றிய முடிவெடு .பிறகு நான் அவளை நம் வீட்டிற்கு அழைத்து வருகிறேன் என சொன்னேன் “

” ஆனால் அது மிரட்டுவது போல் ஆகாதா ….? “

” மனதில் ஆசையில்லாதவளிடம் சொன்னால் மிரட்டல்தான் ்இவள்தான் மனம் நிறைய ஆசைகளை மறைத்து வைத்துக் கொண்டிருக்கறாளே …”

” ஷ்ரத்தற்கு சஹியை பற்றி எல்லாம் தெரியுமா ….? “

” இல்லை .நான் அவளது முந்தைய காதலை சொல்ல முயன்றபோது அவன் தடுத்துவிட்டான் .சஹானாவின் முந்தைய வாழ்க்கை எனக்கு தேவையில்லை .நான் இதோ இப்போது இருக்கும் சஹியைத்தான் வரும்புகறேன் என கூறினான் …”

” ஆனால் …சஹி …அப்படி நினைக்க வேண்டுமல்லவா …? முந்தைய அசட்டுத்தனத்தை மறந்து புது வாழ்வை ஏற்க சம்மதிப்பாளா …? ” சாம்பவி கவலையுடன் கேட்டாள் .

” நிச்சயம் பவி .அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் நிறைய காதல் வைத்திருக்கிறார்கள் .ஆனால் சஹியின் மனதில் இருக்கிற குழப்பத்தால் அது வெளியே வராமலேயே இருக்கிறது .ஈகோ பார்க்காமல் மனதை திறந்து பேசிவிடுங்கள் என கூறி அனுப்பியிருக்கிறேன் .நிச்சயம் நல்ல செய்தியோடுதான் வருவார்கள் …பாரேன் ” உறுதியாக கூறினான் .

இந்த சஹி தனது முந்தைய காதல் …அது …இதுவென்று எதையும் உளறிக் கொட்டாமல் இருக்க வேண்டுமே …என சாம்பவி கவலைப்பட தொடங்கினாள் .

என்னதான் மனதார விரும்புபவன் என்றாலும் தான் காதலிப்பவள் முன்பே வேறொருத்தனை விரும்பியவள் என்பதனை இந்த ஆண்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் …? இதோ ரிஷிதரன் கூட சபரிஷின் பெயரை சொன்னாலே சாம்பவியிடம் கோபம் கொள்ளவில்லையா …?

சாம்பவியின் கவலையிலும் அர்த்தம் இருக்கிறது என்பது போல …

அங்கே சஹானா ” நான் இங்கே முன்பே ஒருவரை மிக மிக ஆழமாக காதலித்தேன் தெரியுமா …? ” என ஷ்ராவத்திடம் கேட்டுக் கொண்டிருந்தாள் .




What’s your Reaction?
+1
52
+1
22
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!