Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 10

10

 

 


அந்த யானை மிகவும் ஆவேசமாக இருந்தது. அதில் இம்மியும் தவறிருப்பதாகத் தெரியவில்லை .அதன் துதிக்கையில் தீ எரிந்து கொண்டிருந்தது .அதனை அணைக்கும் வழிக்காக அங்குமிங்கும் அலைந்து அந்த இடத்தையே துவம்சம் செய்து கொண்டிருந்தது அது .

” அடப்  பாவிகளா ! யார் செய்த கொடூரம் இது ? ” சுடரொளி பதறியபடி , பயந்து அழுத அமிர்தனை தன் தோளில் அணைத்துக் கொண்டாள் .

” இங்கேயே இருங்கள் .கீழே வர வேண்டாம் ” அவர்களை எச்சரித்து விட்டு கீழிறங்கி ஓடினான் ஆனந்தபாலன் .

அதற்குள் மலைவாசிகள் கூட்டமாக சேர்ந்து கையில் தீப்பந்தங்களோடு யானை இந்தப் பக்கம் வராமல் விரட்ட முயன்றனர் .

” தீப்பந்தத்தை அணையுங்கள் .அது சும்மாவே வேதனையில் இருக்கிறது .இதில் நீங்களெல்லாம் ஏன் அதனை காயப்படுத்த நினைக்கிறீர்கள் ?” ராஜா அவர்களுக்கு முன்னால் வந்து நின்று கத்தினான் .

” எங்க குடியிருப்பு பக்கம் வந்தால் , குடிசைங்களையெல்லாம் காலி பண்ணிடும் சார் .எதிர்ல வர்றவங்களை மிதிச்சே கொன்னுடும் .எங்களை வேடிக்கை பார்த்துட்டு இருக்க சொல்றீங்களா ? ” ஆளாளுக்கு ராஜாவுக்கு பதிலாக கத்திக் கொண்டிருக்க ,அவன் …




” நான்கு நாட்களுக்கு முன்னால் அந்த குட்டியை காப்பாற்ற நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் .இப்போது அதை யாரும் எதுவும் செய்யக் கூடாது …” அவர்களை தடுக்க முயன்று கொண்டிருந்தான் .

இந்தக் களேபரத்தில் ஆனந்தபாலன் குழப்பமுற்று செங்காந்தள் அருகே போய் , ” உங்கள் பக்கத்து ஆட்களோடு போய் யானையின் மேல் தண்ணீர் ஊற்றலாமே ? ” என்றான் .

” எங்கே சார் …அது ஒரு இடத்தில் நின்றால் தானே ? “

” நாமே தண்ணீர் ஊற்ற முடியாது .அதுவாகவே தண்ணீரை தேடிப் போக வைக்கலாம் .பக்கத்து அருவிக்கு அதனை எப்படியாவது திசை திருப்புங்களேன் “

” அது எப்படி சார் முடியும் ? யானை இப்போது பைத்தியம் பிடித்தாற் போலிருக்கிறது “

” உங்கள் பகுதிக்குள் நுழைய விடாமல் தடுக்க என்ன செய்வீர்களோ …அதையே முயற்சியுங்கள் “

செங்காந்தள் அவள் கூட்டத்து ஆண்களிடம் பேச , அவர்கள் அருவிப் பாதை விடுத்து மற்ற பாதைகளில் கையில் தீப்பந்தத்தோடு சுற்றி வளைத்து நின்றனர்.யானையோ அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனையில் செய்வதறியாது இடைப்பட்ட மரங்களை முறித்துப் போட்டு , நெருப்பு காட்டுபவர்களை நோக்கியே வரத் துவங்க , ஆனந்தபாலன் அருவிப் பாதை பகுதியில் போய் நின்று கொண்டான்  .

அவன் கைகளில் பீர் பாட்டில்கள் மற்றும் குண்டு பல்புகளை தோரணம் போல் கட்டிய கயிறு இருக்க அதனை மரங்களுக்கிடையே கட்டி இழுத்து ஆட்டினான் .சாதாரணமாக யானைகளை விரட்ட இந்த முறையையும் பயன்படுத்துவார்கள் .இந்த ஓசையை கேட்ட யானைகள் பயந்து ஓடும் .ஆனால் உடல் வேதனையில் இருந்த இந்த யானை தனக்கு எதிராக நிற்பவர்களை  அழித்து விடும் ஆவேசத்துடனிருக்க , ஆனந்தபாலனை நோக்கி வெறியுடன் ஓடியது .




இவ்வளவு நேரமாக மரம் மேல் குடிலில் நின்று பைனாகுலர் மூலமாக நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த சுடரொளி ,ஓ என்ற அலறலோடு , மேலிருந்து கீழே இறங்கி ஓடி வந்தாள் .

” பாலா …பாலா…நில்லுங்க …இனி ஒரு தடவை உங்களைப் பிரிய நான் தயாரில்லை .நானும் வருகிறேன் ” கத்தலோடு வந்தவளின் கையிலிருந்து நழுவிய குழந்தையை சுற்றியிருந்தோர் வாங்கிக் கொள்ள , அவள் ஆனந்தபாலனை நோக்கி ஓடினாள் .

அவன் அதற்குள் அருவிப் பாதைக்குள் ஓடி மறைந்திருக்க , யானை அவனைத் தொடர்ந்து ஓட ,சுடரொளி யானையைத் தொடர்ந்தாள் .அருவியை அடைந்ததும் யானை நீருக்குள் பாய்ந்திருக்க , அதன் உடம்பை எரித்துக் கொண்டிருந்த தீ அணைந்தது. தவிர தீப்பட்ட காயம் நீரினால் குளிர்ச்சியடைய , வேதனை குறைந்த திருப்தியில் நீருக்குள் முனகியபடி கிடந்தது .

ஆனந்தபாலன் யானைக்காக நீருக்குள் பாய்ந்து ,அதற்கடியிலேயே அகப்பட்டு உள்ளேயே மூழ்கி விட்டான் என்ற முடிவிற்கு வந்த சுடரொளி , தானும் நீருக்குள் பாயும் முடிவோடு நீரருகே செல்ல , கரையருகே மறைந்திருந்த ஆனந்தபாலன் அவள் இடை பற்றி தன் பக்கம் இழுத்துக் கொண்டான் .

” பாலா …” சுடரொளி அவனை இறுக்கிக் கொண்டாள் .இருவரும் ஆரத் தழுவியபடி தங்களை மறந்து நின்றிருந்தனர் .

” அப்பா …கனி …” அமிர்தனின் அழுகுரல் கேட்க இருவரும் வேகமாக பிரிந்தனர் .ராஜாவும் , செங்காந்தளும் முன்னால் ஓடி வர , செங்காந்தளின் கையிலிருந்த அமிர்தன் அழுது கொண்டிருந்தான் .




ராஜா யானையிடம் ஓட ,செங்காந்தள் அமிர்தனை சுடரொளியிடம் ஒப்படைத்து விட்டு ராஜாவிற்கு உதவச் சென்றாள் .பிரிவு ஏக்கமோ , அன்பு செய்கையோ …

அழும் அமிர்தனை சமாதானம் செய்த சுடரொளி , அவனது முகம் முழுவதும் முத்தமிட்டாள் .பதிலுக்கு அமிர்தனும் அவள் கன்னங்களில் விசும்பியபடி முத்தமிட , அவர்களைப் பார்த்தபடி நின்ற ஆனந்தபாலன் …

” எனக்கு ….” என்றபடி அவர்களருகே வந்தான் .அவன் கண்களிலிருந்து வழிந்த அளவற்ற காதலையும் , மோகத்தையும் உணர்ந்து கொண்டு சுடரொளி திடுக்கிட்டாள் .சை…என் நிலையை மறந்து விட்டேனே !

” போகலாம் ” ஒற்றை வார்த்தையோடு ஆனந்தபாலன் பக்கமே திரும்பாமல் நடக்கத் தொடங்கினாள் , பின்னால் மலைவாசிகள் அனைவரும் சேர்ந்து யானையை நீருக்குள்ளிருந்து வெளியே கொணரும் முயற்சிகளில்இறங்கியிருந்தனர் .

அதிகாலைதான் யானை வெளியே  வந்தது .அதன் உடல் முழுவதும் நெருப்புக் காயங்கள் இருந்தன .அந்த வேதனையில் அது முனகியபடி படுத்தே கிடந்தது .

” பழங்களுக்குள் , சாப்பாட்டிற்குள் மருந்து , மாத்திரைகளை வைத்து யானைக்கு கொடுப்போம் சார்.அது பக்கத்தில் அனுமதித்தால் காயத்திற்கு மருந்து தடவுவோம் .இனி நாங்கள் பார்த்துக் கொள்வோம் .நாங்கள் எல்லோரும் பதட்டத்தில் இருந்த போது நீங்கள் மிகப் புத்திசாலித்தனமாக செயல்பட்டு யானையை காப்பாற்றி விட்டீர்கள் .ரொம்ப நன்றி சார் ” ராஜா ஆனந்தபாலன் கை பற்றி குலுக்கினான்.

” நீங்கள் ரொம்பவே பயந்து விட்டீர்களே சார் ?” சுடரொளி கேட்க ராஜா தலையாட்டினான் .

” இது இரண்டு  வருடங்களேயான குட்டி யானை மேடம் .நான்கு நாட்களுக்கு முன்னால் நான் காட்டுக்குள் போன போது , இந்த யானை தவறி பள்ளத்திற்குள் சரிந்து கத்திக் கொண்டிருந்தது .நான்தான் என் ஆட்களோடு  கயிறு கட்டி மேலே இழுத்து வந்து காப்பாற்றினேன் .இன்று மீண்டும் ஆபத்து .மனிதர்கள் ஏனிப்படி கொடூரமாக மாறி விட்டனரோ ?” மிக வருந்தினான்.




” ம் …பார்க்கலாம் ராஜா சார் .இதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க முடிகிறதா எனப் பார்க்கலாம் ” ஆனந்தபாலன் சமாதானம் செய்ய , ராஜா தன்னை சமாளித்துக் கொண்டான் .

” யானையின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து விட்டு , வீட்டிற்கு வாருங்கள் சார். இனி இப்படி நடக்காமலிருக்க ஏதாவது செய்ய முயற்சிப்போம் ” சுடரொளி சொல்ல அவளை நிமிர்ந்து பார்த்த ராஜாவின் விழிகள் வியப்பில் விரிந்தன .

அதிகாலை விடியல் பொன் ஒளியாய் காட்டு மரங்களுக்கிடையே கீற்றாய் நுழைந்து கொண்டிருக்க , காட்டுப் பிரதேசத்திற்கேயான அதிகாலை தென்றலில் , விரிந்திருந்த கூந்தல் சாமரமாய் படர்ந்து  படபடக்க , நானும் உனக்கு துணை என அறிவித்தபடி ஒற்றையாய் அவள் இட்டிருந்த முந்தானை சடசடக்க , மையற்றிருந்தும் மயக்குவதில் குறையற்ற அவளது சிலு சிலு விழிகள் வண்டாய் நடமாட ,ராஜாவின் வாய் பிரமிப்பில் திறந்து கொண்டது .

” மே…மேடம் …நீ…நீங்க “

சுடரொளி அவனது ஆச்சரியத்தில் புருவம் சுருக்கி குனிந்து தன்னைப் பார்த்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள் .சை…இப்படி வேடம் கலைத்து வெளியே காட்டிக் கொண்டேனே ?

” கண்ணாடியை மறந்து விட்டேன் ” வேகமாக முடியை சுருட்டி கொண்டையாக்கி , முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டு படியேறி மேலே போனவளை பார்த்தபடி இருந்த ராஜாவின் முகத்தின் முன் சொடக்கிட்டான் ஆனந்தபாலன் .

” என்ன சார் அவ்வளவு பிரமிப்பு ? “

” இ…இவர்கள் எ…எப்படி …எதற்காக அப்படி வேசமிட்டு வயதைக் கூட்டிக் காண்பித்தார்கள் சார் ? “

” இந்த உலகில் ஐந்தறிவு ஜீவனான யானைக்கே பாதுகாப்பில்லை . தாய் , தந்தை துணையற்ற  அழகான இளம் பெண்ணிற்கு பாதுகாப்பு வேண்டாமா சார் ? அதற்குத்தான் இந்த வேடம் “

” ஆனாலும் இருக்கும் அழகை இல்லாமல் காட்டும் மனதெல்லாம் வருவது …ப்ச் …சுடரொளி கிரேட் சார் .உங்களுக்கு அவர்களை முன்பே தெரியுமா சார் ? “




ராஜாவின் கேள்விக்கு சம்மதமாக தலையசைத்தவன் , ” இந்த வேடத்திற்குள் அவளை தள்ளி விட்டதில் என் பங்கும் இருக்கிறது ” என்றான் .

இதையேதான் அவர்கள் காரில் திரும்பும் போதும் சொன்னான் .” என் நிலைமை எதுவாயினும் , உன் நிலைமை எதுவாயினும் பாதுகாப்பு எனும் வேலியை உனக்கு நான் கொடுத்திருக்க வேண்டும் சுடர் .இப்படி வாலிபத்தில் உன்னை வயோதிகம் தாங்க வைத்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்மா “

” இது என் பாதுகாப்பிற்காக போட்ட வேசமில்லை .அப்பா , அம்மா ஆதரவு இல்லையென்றாலும் எனக்கு என் சித்தி , சித்தப்பா இருக்கிறார்கள் .சும்மா திருமணம் …திருமணமென்ற அப்பாவுடைய நச்சரிப்பை மாற்றுவதற்காக எனக்கு நானே போட்டுக் கொண்டதே தவிர உங்களுக்காக எதுவுமில்லை ” சுள்ளென்றாள் .

முன்னால் பார்த்தபடி சிறிது நேரம் மௌனமாக கார் ஓட்டிக் கொண்டிருந்தவன் லேசாக தொண்டையை செருமிக் கொண்டான். ” ஆக …நீ உன் அப்பாவிடம் திருமணத்தை மறுத்திருக்கிறாய் ? “

சுடரொளி வாயடைத்துப் போனாள் .உனக்காக இல்லையென்று அவள் விளக்கங்கள் கொடுத்தாலும் , அவள் பேச்சின் பொருள் எல்லாம் அவனுக்காக என்றுதானே ஆகிறது ?




What’s your Reaction?
+1
53
+1
35
+1
1
+1
1
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!