Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -15

அத்தியாயம்-15

 

அன்றைய தினத்தில் மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர்.!  

‘கெட்டி மேளம்…!கெட்டி மேளம்!’ என்ற குரலுக்குக் கட்டுப்பட்டு அந்த சபையிலிருந்த அனைவரும் எழுந்து நின்று பூக்களைத் தூவ சுபாஷினியின் சங்கு கழுத்தில் தங்க நாணைப்பூட்டினான் ஆனந்த்.

அந்த மண்டபத்தின்  ஓரத்தில் ஒற்றைக்காலை மடக்கி சுவற்றில் சாய்ந்தபடி நின்றிருந்தான் முரளிதரன். மனசு வலித்தது. கண்கள் கலங்காமல் இருக்க உடலையும் சேர்த்து கடினப்படுத்தி கொண்டிருந்தான். எல்லாமே முடிந்து போனது இனி எதுவுமே இல்லை என்றபோது ஒரு விரக்தி தோன்றுமே அப்படித்தான் அவனுடைய மனநிலையும் மாறியிருந்தது. தெரிந்தோ தெரியாமலோ சுபாஷினி மேல் காதல் தோன்றியது. பிரியங்கா மேல் வராத காதல் சுபாஷினியைப் பார்த்த மறுநிமிடமே வந்ததுதான் வியப்பு. உருவ ஒற்றுமை ஒன்றாக இருந்தாலும் வளர்த்தப்பாசம் அவனை பிரியங்காவிடம் இருந்து விலக்கியே வைத்தது.




என்னதான் பெரியவங்க இவங்க இரண்டு பேருக்கும் கல்யாணத்தை நடத்திடனும்னு திட்டம் தீட்டினாலும் இருவருக்குமே அதில் உடன்பாடில்லை. ஆனால் தற்செயலாக சந்தித்த இந்த சுபாஷினி சந்திப்பு தான் அவன் மனதில் காதலை விதைத்தது. தனக்கு திருமணம் என்று ஒன்று நடந்தால் மனைவி என்று ஒருத்தி வந்தால் அது கண்டிப்பாக சுபாஷினியாகத்தான் இருக்கும் என்று திட்டவட்டமாக எண்ணியிருந்தவன் அவளுக்காக ஐந்து வருடம் காத்துக்கொண்டு இருந்தான். ஆனால்  இப்போது சுபாஷினியை மறக்க வேண்டிய கட்டாயம் அவள் வேறு ஒருவனுக்கு மனைவியான பிறகு அவளைப் பற்றி நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான் . நண்பனின் மனைவி என்ற ஒரே உறவுதான் மத்தபடி அவளைப் பற்றி நினைக்கக்கூட நமக்கு எந்த உரிமையும் இல்லை என்றது முரளிதரனின் மனம்.

இதற்கு மேலும் அங்கு நின்று மணமக்களை ஆசீர்வதிக்கும் அளவிற்கு   தைரியம் இல்லாததால் அங்கிருந்து வெளியேறினான். யாரோ பின்னாலிருந்து அவனை அழைப்பது போலிருந்தது. அந்த குரல் ஆனந்த்துடையதாக தான் இருக்கும். அவனை பேஸ் பண்ண மனது உடல் இரண்டிலும் தெம்பில்லை. இங்கிருந்து போய் விட வேண்டும். இதுதான் நமக்கு நல்லது. நேராக பிரியங்காவை சென்று பார்க்க வேண்டும் அவள் யாரையோ காதலிப்பதாய் உளறிக்கொண்டிருக்கிறாள் நல்ல பையனாக இருந்தால் அவனுக்கே கல்யாணம் பண்ணிட வேண்டியதுதான். அத்தோடு நம்முடைய கடமை முடிந்துவிட்டது. திரும்பவும் பழைய வேலையில் போய் சேர்ந்து மக்களுக்காக உழைத்து…இருக்கும் கொஞ்ச நாட்களையும் மக்களுக்காகவே செலவிட வேண்டியதுதான் என்ற மன உறுதியுடன் நடந்தான்.

நேராக தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றான் முதலும் கடைசியுமாக ஆனந்திடம் சொல்லி விட்டு வந்திருக்கலாம். ஆனால் அந்த தைரியம் இல்லாததால் சொல்லாமல் கொள்ளாமல் இப்போ ஊரை விட்டு போகப் போகிறோம். நாம இங்கிருந்து போய் திருப்பியும் ஜார்கண்டில் கலைக்டர் பதவியில் ஜாயின்ட் பண்ணிட வேண்டியது.  இனிமே வாழ்க்கையிலே கல்யாணமும் கிடையாது காதலும் கிடையாது. என்ற உறுதியோடு தான் தங்கியிருந்த அறைக்கு சென்று தேவையான துணி மணிகளை எல்லாம் எடுத்து பேக் பண்ணினான். அறையை பூட்டிவிட்டு கடைசியாக குளக்கரைக்கு வந்தான். இவனும் சுபாஷினியின் பேசிக்கொண்டிருந்த அந்த குளக்கரை படிக்கட்டில் கண்மூடி சற்றுநேரம் அமர்ந்திருந்தான், மனப்போராட்டமும் மனஉளைச்சலும் சற்று மாறி அமைதி நிலைக்கு வந்திருந்தது. ஒரு பெருமூச்சோடு அந்த இடத்தை விட்டு எழுந்து அவன் பேக்கை தோளில் மாட்டிக்கொண்டு நடக்கத் தொடங்கினான்.

“தம்பி…தம்பி…” என்று அழைத்தப்படி இவன் தோள்களைப் பற்றி யாரோ நிறுத்தினார்கள்.




மெல்ல திரும்பிப்பார்த்தப்போது கோவில் பூசாரி  நின்றிருந்தார்.

“பிரசாதம் வாங்கிக்கோங்க.!…”

“ந…நன்றி…” இத்தனைநாளும் வணங்காத கடவுளை  வணங்கினான்.

இனியும் இங்கிருப்பது சாத்தியமில்லை. என்னதான் சுபாஷினியிடம் வீம்பாக பேசியிருந்தாலும் ஆனந்தின் அருகில் அவள் உட்காரும் அந்த காட்சியை பார்க்கும் மன தைரியம் இவனுக்கில்லை. அதுமட்டுமில்லாமல் சுபாஷினி இந்த ஊருக்கு வந்துவிட்டாள் என்று ஆனந்த் சொன்னதிலிருந்து அவளைப்பார்க்காமலே இந்த ஊரைவிட்டு போய்விடவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான்.

அவன் நினைத்ததை அடுத்தநாள் நிறைவேற்றவும் செய்தான்.

ஆனால் ஆனந்தும் அவன் குடும்பத்தாரும் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

இடது கையைத்திருப்பி மணி பார்த்தப்போது மணி சரியாக பதினொன்றை தொட்டிருந்தது. பனிரெண்டு மணிக்கு சென்னை செல்லும் ஒரு பஸ் இருப்பது தெரியும். நடையை எட்டிப் போட்டால் பஸ்ஸை பிடித்து விடலாம் என்று மூளை வலியுறுத்தியது.

சென்னையில பிரியங்காவை மீட் பண்ணி விட்டு அங்கிருந்து நேரா ஜார்கண்ட் போக வேண்டியதுதான் என்று எண்ணினான். தன்னுடைய பேக்கை சுமந்துகொண்டு சற்று தூரம் நடந்தப்போது ஒரு தென்ன மர தோப்பிலிருந்து அழகான குயிலின் சத்தம் கேட்டது. அதன் குரலை ரசிக்கும் மனநிலையில் அவனில்லை. கொஞ்ச தூரம் நடந்தான் பின்னால் கொலுசொலி கேட்டது.

சட்டென்று திரும்பிப் பார்த்தவன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான். காரணம் அங்கே நின்றிருந்தது பிரியங்கா. கடைசியாக அவன் வாங்கித்தந்த கருநீல நிற சுடிதார் அணிந்திருந்தாள்.




“மா….மாமா….”

“ஏய் நீ எங்க இங்க…!?” என்று இவன் கடுமையான குரலில் கேட்க,

“மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு எங்கே கிளம்பிடீங்க மாமா?”

“இனி எனக்கு இங்க என்ன வேலை? ஆமா நீ எதுக்கு இங்கே வந்தே?”

“சுபாஷினியோட கல்யாணத்துக்கு…ஆமா திரும்பவும் பழைய வேலையில் சேரப்போறீங்களா?”

“ஆமாம்…”

“நீங்க காதலிச்ச உங்க அக்கா பொண்ணு பிரியங்காவை ஏமாத்திட்டு போகலாமா?”

“நான் உன்னை காதலிச்சேன்னு உனக்கு யார் சொன்னா?”

“அப்போ…நீங்க இந்த பிரியங்காவை காதலிக்கலை அப்படித்தானே?”கேட்டவளின் முகத்தில் ஒரு இருள் தோன்றியது.

“இல்லை… நீ என் அக்கா பொண்ணு அதுமட்டுமல்ல உன்னை  குழந்தையிலிருந்து தூக்கி வளர்த்திருக்கேன்”

“அப்ப நீங்க சுபாஷியை காதலிச்சீங்களா…?”

 “இல்ல அதெல்லாம் ஒண்ணுமில்லே எனக்கு இந்த காதல் மேலேயே நம்பிக்கை இல்லை புரியுதா நீ என்கூட வா”

 “மாமா நீங்க பொய் சொல்றீங்க உங்க மனசுல இருக்குற பொண்ணு யாருன்னு எனக்கு தெரியும். அவளுக்கு இப்போ கல்யாணம் முடிஞ்சுருச்சுன்னுதானே கவலையா இருக்கீங்க”




 “அதெல்லாம் ஒண்ணுமில்ல… உன் வேலையை மட்டும் பாரு தேவையில்லாத எதையாவது உளறிக்கிட்டிருக்காதே”

 “மாமா உங்க மனசுல சுபாஷினி தானே இருக்கா!? எனக்கு தெரியும் மாமா, ஆனா உங்க காதலை வெளியில் சொல்லாமல் மறச்சுக்கிட்டு இருக்கீங்க. நீங்க வாய் திறந்து சொல்லிருந்தா அவ இந்த கல்யாணத்தை நிறுத்திட்டு உங்களை கல்யாணம் பண்ணி இருப்பாள்”

 “இல்லை இல்லை அந்த மாதிரி முட்டாள் தனமான வேலையை நான் செய்ய மாட்டேன். சுபாஷினிக்கு ஆனந்த்தான் பொருத்தமானவன். ரெண்டு பேரும் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும். இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சதா காட்டிக்கக்கூடாது புரியுதா?”

 “சரி மாமா ஆனா எனக்கு ஒரு சந்தேகம் அதை மட்டும் சொல்றீங்களா?”

“என்ன சீக்கிரம் சொல்லித்தொலை பஸ்சுக்கு லேட் ஆகுது பனிரெண்டு மணிக்குள்ள நான் பஸ் ஸ்டாண்டில் இருக்கணும்”

 “ஒருவேளை சுபாஷினிக்கு கல்யாணம் ஆகலைன்னா நீங்க சுபாஷினிகிட்ட உங்க காதலை சொல்லி இருப்பீங்களா…?”

சற்று நேரம் கண்மூடி நின்றவன் ஒருசில நிமிடங்களுக்கு பிறகு அதிவேகத்தோடு சொல்லத்தொடங்கினான்.

 “கண்டிப்பா சொல்லியிருப்பேன் ஆனா ஆனந்த் சுபாஷினியை லவ் பண்றார். அத என்கிட்டேயே சொன்னார். அதை கேட்ட பிறகும் என்னால எப்படி சுபாஷினியை ஏத்துக்க முடியும்.? ஒருவேளை சுபாஷினி என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டிருந்தால் ஆனந்தன் கிட்ட சொல்லி கண்டிப்பா சுபாஷினியை கல்யாணம் பண்ணிட்டு ஜார்கண்ட் கூட்டிட்டு போயிருப்பேன். இனி அது நடக்கப்போவதில்லை நடக்காத விஷயத்தை பத்தி பேசுவதில் எந்த பிரயோசனமும் இல்லை…சரி வழிவிடு,,,”

அவள் அசைவற்று அப்படியே நின்றாள். கோபத்தோடு அவளை விலக்கி நிறுத்திவிட்டு நடக்க தொடங்கினான்.

 “ஒரு நிமிஷம்…சார் அந்த நிலவை பாருங்களேன் எவ்வளவு அழகா இருக்குது!! குழந்தைத்தனமான சிரிப்புன்னு சொல்லுவாங்களே? அது அந்த நிலவை பார்க்கும் போது தோணுதுல்லே” என்று அவள் சொன்ன அடுத்த நிமிடம் சட்டென்று திரும்பி “பகலில் நிலவா…?”அதிர்ச்சியோடு அவளை நெருங்கினான்.

அவளிடம் பதிலில்லை மாறாக தலை கவிழ்ந்து புன்னகை சிந்தினாள்.

 “ஏய்…நீ சுபாஷினி தானே? நீ சுபாஷினிதான் கண்டிப்பா பிரியங்காவா இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா நாம ரெண்டு பேரும் ஒருமுறை இந்த நிலவைப்பத்தி பேசிருக்கோம். அதே டயலாக்கை இப்போ பேசுறே!! அப்படின்னா சு…சுபாஷினி… நீ எப்படி..”




அவன் ஆவல் மிகுதியில் சுபாஷினி கரங்களைப் பற்றி,

 “என்ன இதெல்லாம் ஒண்ணுமே புரியல? அப்படின்னா உனக்கும் ஆனந்துக்கும் நடந்த கல்யாணம்.?.”

 “கல்யாணம் நடந்தது உண்மைதான் ஆனால் எனக்கும் ஆனந்துக்கும் இல்லை. ஆனந்துக்கும் பிரியங்காவும் தான் கல்யாணம் நடந்தது.”

 “என்ன சொல்றே?” அவளில் தோள்களை பற்றி குலுக்கினான்.

 “ம்ம் சொல்றேன்…அப்பா அம்மாவிடம் பிரியங்காவை பற்றின விஷயத்தை சொன்னேன். அவளும் தன்னுடைய மகள்தான் என்று ஏத்துக்கிட்டார் அப்பா, என் மனதில் இருக்கும் காதலையும் சொன்னேன். அத்தைக் கிட்ட பேசினார் அப்பா!  அத்தையை பொருத்தவரைக்கும் தம்பி பொண்ண கல்யாணம் பண்ணனும்னு எண்ணந்தானே தவிர யார் வயித்துல பிறந்திருந்தா என்ன? என்று பிரியங்காவை கல்யாணம் பண்ண ஆனந்தும் அத்தை மாமாவும் சம்மதிச்சாங்கள். பிரியங்காவை வரவழைச்சோம். அவளுக்கு ஆனந்தை கல்யாணம் பண்ண முழு சம்மதம் என்றாள்.! ‘நீங்கள் இருவரும் காதலிப்பது எனக்கு தெரியும். அதனால்தான் மாமாவை விட்டு விலகினேன்.’ என்றாள். உடனே இருவருக்கும் கல்யாணத்தை முடித்தோம். உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கனுன்னு நான்தான் உங்க கிட்ட சொல்ல வேணான்னு சொன்னேன்.

 “மொத்தத்துல என்னை முட்டாளாக்கிடீங்க அப்படிதானே? நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னா என்ன பண்ணுவே?”

 “என்னை நீங்க கல்யாணம் பண்ணித்தான் ஆகணும் முடியாதுன்னு சொன்னீங்கன்னா கத்தி ஊரைக் கூட்டி மீடியாவை வரவழைத்து என் கிட்ட தப்பா நடந்துகிட்டதா சொல்லி உங்களை கல்யாணம் பண்ணிப்பேன்”

அவள் சொன்ன அடுத்த நிமிடம் கையை ஓங்கிவிட்டான்.

“சீ…நீ…இவ்வளவு கீழ்த்தரமாவெல்லாம் பேசமாட்டியே? ஏன் இப்படியெல்லாம்?”

“எ…எல்லாம் உங்கள் மேலிருக்கும் காதல்தான்…” என்று அவள் கண்ணீர்மல்க சொல்லவும், கோபத்தில் அதுவரை விறைப்பாய் நின்றிருந்த முரளிதரன் அவள் கண்களில் கண்ணீரை கண்டதும் தோய்ந்துப்போனான். இரண்டே எட்டில் சுபாஷினியை நெருங்கி சட்டென்று அவளை இழுத்து அணைத்து இதழோடு இதழ்பதித்தான். அவளின் கண்ணீர் ஆனந்த கண்ணீராய் முரளிதரனின் மார்பை நனைத்தது.

முற்றும்




What’s your Reaction?
+1
15
+1
11
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!