Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள் – 1 நடிகை ஷோபா

       பூக்க தவறிய பூக்கள் 

வாசக நெஞ்சங்களுக்கு என் அன்பு வணக்கம்.  “பூக்க தவறிய பூக்கள்” தலைப்பில் இன்றைய பதிவில் நாம் காணவிருக்கும் முதல் பூ எது தெரியுமா? ! 1970 இன் பிற்பகுதிகளில் தமிழ் திரையுலகின் முடிசூடா மகாராணியாக வலம் வந்தவர் இவர், அன்றைய தேதியில் இவருக்கு இணையாக நடித்த நடிகைகள் இவருடைய பெயரை சொன்னாலே எச்சில் விழுங்குவார்கள். .இவர் நடித்த காலகட்டத்தில் உச்ச நடிகையாக இருந்தவருக்கு கூட  இவர் பெயரைச் சொன்னாலே உள்ளூர உதறல் எடுக்குமாம் !!




 நடிகைகளுக்கு மட்டுமல்ல, நடிகர்களுக்கும் இவருடன் இணைந்து நடிப்பது என்பது சிம்ம சொப்பனம் தான், சினிமா நடிகை என்றால் சுண்டி இழுக்கும் நிறம் வேண்டும். தல தல வென்ற உடல் வேண்டும். ரசிகர்களை கிறங்க வைக்கும் அழகு வேண்டும். அளவில்லா மேக்கப்புகளை அள்ளிப் போட்டுக் கொண்டு, அரைகுறை ஆடையை அணிந்து கொண்டு,  சொக்கும் விழி பார்வையுடன் திரையில் தோன்ற வேண்டும் என்ற எழுதப்படாத இலக்கணங்களை எட்டி மிதித்து, உடைத்து தள்ளியவர். ‘இவர். ‘ அபாரமான உடல் வளைவுகளோ, ஆளை மயக்கும் வசீகரமோ எதுவும் இல்லாத பொழுதும், குறும்பு சிரிப்பும், குறுநகையும், குழந்தைத்தனமும், இவரை ஒட்டு மொத்த ரசிகர்களின் நெஞ்சில் சிம்மாசனம் இட்டு அமர வைத்தது. ரசிகர்கள் இவரை ஒரு நடிகையாக அல்லாமல், தன் அண்டை வீட்டுப் பெண்ணாக. தன் சக தோழியாக, உற்ற சகோதரியாக, மொத்தத்தில்  ‘தன்னில் ஒருவராக’ இவரை பார்த்து மகிழ்ந்தனர். இவருடைய ஒட்டுமொத்த வெற்றிக்கு முதல் காரணம் இதுதான். நான் யாரைச் சொல்கிறேன் என்பதை நீங்கள் இப்போது யூகித்திருப்பீர்கள் ஆம் நடிகை ஷோபா‘ 

.


           நடிகை ஷோபா நம்முடைய தமிழகத்தை சேர்ந்தவர் அல்ல.  அவர் மலையாள தேசத்து மங்கையாவார்.  1962 ஆம் வருடம் செப்டம்பர் 23ஆம் தேதி தான் இந்த விசித்திரமான நடிகை இந்த பூமியில் பிறந்தார். வாசகர்களே; நான் ஏன் இந்த தேதியையும்  வருடத்தையும் மிகவும் தெளிவாக குறிப்பிடுகிறேன் என்பதை என்னை பின் தொடர்ந்து கவனியுங்கள்.  இந்த பூக்க தவறிய பூ வாழ்ந்தது மொத்தமே 17 ஆண்டுகள் தான்.  1965 ஆம் வருடம் ‘ஜீவித யாத்திரா’ என்ற மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஷோபா. அப்பொழுது அவருக்கு வயது மூன்று தான். அந்த முதல் திரைப் பிரவேசத்திற்கு பின்னர் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திர வாய்ப்பு அவருக்கு வந்து குவிய ஆரம்பித்தது. குழந்தையாக இருந்த போதே 1971 ஆம் வருடம்   சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான  கேரள மாநில விருதை வென்று எடுத்தவர் இவர் என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளேன்.  கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் குழந்தை நட்சத்திரமாக வெளுத்து வாங்க ஆரம்பித்தார்  சோபா.  தமிழில் முதல் முதலாக அவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானது ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற திரைப்படத்தில் இதனைத் தொடர்ந்து “புன்னகை”,  ‘இரு கோடுகள்’ போன்ற தமிழ் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தார்




 திரைவாழ்க்கை

  

           சோபா.  சோபாவின் வாழ்வில் எல்லாமே வேகமாக நடந்தது. அவருடைய 15ஆவது வயது இறுதியில் கதாநாயகியாக அறிமுகமானார். அவர் கதாநாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட படம் ‘அச்சாணி’ ஆனால் முதலில் வெளிவந்த படம் ‘நிழல் நிஜமாகிறது’. இந்தப் படத்தில்  திலகம் என்னும் நிழல் கதாபாத்திரத்தை நிஜமாக  மாற்றி காட்டி இருப்பார் ஷோபா. ஆனால் இவருடைய நிஜ வாழ்க்கை ஏனோ நிழலாகி போனது. இந்தப் படத்தில் கமல் ஒரு அனுபவம் மிக்க நடிகர். ஆனால் சோபா அறிமுக நடிகை. வாசகர்களே உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் ஒரு முறை இந்தப் படத்தை பாருங்கள். சோபாவுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் கமல்ஹாசன் விழி பிதுங்குவதை உங்களால் உணர முடியும்.




நாளை தொடர்வோம் 

What’s your Reaction?
+1
7
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!