Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -14

அத்தியாயம்-14

“சுபாஷினி… நாம மதியம் கிளம்பினாத்தான் ஈவினிங்குள்ளே முசோரி போய் சேரமுடியும். அக்காவைப் பற்றிய  பயமில்லை. டாக்டரைப் பார்த்துட்டுதான் வரேன். அபாய கட்டத்தை தாண்டிட்டாங்களாம். நாளைக்கு  நார்மல் வாடுக்கு அனுப்பிடுவேன்னு  சொன்னார். எங்க அப்பா அம்மா கூட இருந்து கவனிச்சிக்குவாங்க. ஆனா உன்னோட விஷயம் அப்படி இல்லை கூட்டிட்டு வந்தேன். அதே மாதிரி பத்திரமா கொண்டுட்டு போய்விட்டிடனும்.  அது என்னுடைய கடமை. அதனால நாம எவ்வளவு சீக்கிரம் கிளம்புறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு  நல்லது…” என்றான் ரிட்டன் டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் ஓரளவுக்கு ஈஸியாகவே இருந்தது.

“ஓகே சார் நாம கிளம்பலாம் ஆனா ஒரு சின்ன ரெக்வஸ்ட் சார்…”

” என்ன சொல்லு…” என்றான் படபடப்புடன்.

“நம்ம கூட பிரியங்காவை கூட்டிட்டு போகலாமா ஏன்னா வந்து ரெண்டு மூணு மணிநேரத்திலேயே நாங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரெண்டாயிட்டோம். நான் படிக்கிற  அகாடெமிக்கு நேரில் வந்து பார்க்கணும்னுமாம்..”




“என்ன விளையாடுறியா நாம வந்துட்டுப்போறதே பெரியப்பாடு இவளையும் கூட்டிட்டு போக முடியுமா? அடுத்தது இவ தங்குவதற்கு  இடம் கிடைக்காது கெஸ்ட் வந்தா கூட ரொம்ப நாளைக்கு தங்க முடியாது. இவள கூட்டிட்டு போறது எல்லாம் வேலைக்கு ஆகாது.” என்று சற்று கோபத்துடன் கூறினான் முரளிதரன்.

“மாமா நீங்க எத்தனை வருஷமா அங்க ஒர்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? என்னைக்காவது உங்க கூட வரணும்னு நான் ஆசைப்பட்டிருக்கேனா? இப்போ சுபாஷினியைப் பார்த்த உடனே எனக்கு அந்த ஊரெல்லாம் சுத்தி பாக்கணும்னு ஆசையா இருக்கு.. நான்தான் சுபாஷினி கிட்ட அங்க வரேன்னு சொன்னேன். சுபாஷினி ஒன்னும் என்னை கூப்பிடல புரியுதா ரொம்பத்தான் பிகு பண்றீங்க..”

 “உன்ன வரக்கூடாதுன்னு நான் சொல்லல நீ எப்ப வேணாலும் வரலாம் ஆனா  இந்த முறை வரமுடியாது ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணி தரேன் நெக்ஸ்ட் வீக் ரெண்டு நாள் லீவு வரும் அப்ப வா.. இந்தாம்மா சுபாஷினி இவளை கூட்டிட்டு போயி முசோரி முழுவதும் சுற்றி காட்டு நான் வேணான்னு சொல்லலை.” என்றான்.

முரளிதரன் சொன்னதுக்கு அப்புறம்தான் பிரியங்கா சமாதானாமானாள். ஆனால் சுபாஷினிக்குதான் அந்த பயணத்தால் வாழ்க்கை மாறிப்போனது.

முசோரி விமான நிலையத்தில் இறங்கி அங்கே வைத்திருந்த தன்னுடைய காரில் சுபாஷினியோடு லால்பகதூர் சாஸ்திரி ட்ரெய்னிங் சென்டரை நோக்கி வந்துக்கொண்டிருந்தப்போது காரின் டயர் பஞ்சராயிருச்சு. கீழே இறங்கி செக் பண்ணிவிட்டு சோர்வோடு வந்தான் முரளிதரன்.

“என்னாச்சு சார் எனி ப்ராப்ளம்?” என்று குழப்பத்தோடு கேட்ட சுபாஷினியிடம் கார் பஞ்சராயிடுச்சு டயர் மாத்தணும் கொஞ்சம் லேட் ஆகும். அதுவரைக்கும் நீ வெயிட் பண்றது கஷ்டம் வேற ஏதாவது கார் வந்தா அதுல உன்ன ஏத்தி விடுறேன்.”

“சரி” என்று தலையசைத்தாள்.

இருள் சூழத்தொடங்கியிருந்த அந்த மலைப்பாதை இவளை அச்சமடைய வைத்ததென்னவோ உண்மைதான். அந்த வழியாக எந்த வாகனமும் வரவில்லை ஏதாவது வருகிறதா என்று பார்த்துக் கொண்டே டயரை மாற்ற தொடங்கினான் முரளிதரன். திடீரென்று பெய்த காட்டு மழை இருவரையும் திகிலடையவே வைத்தது.

காருக்குள் வந்தமர்ந்து கண்ணாடி கதவை க்ளோஸ் பண்ணினான் இப்போ என்ன பண்ணுவது என்ற புரியாத தடுமாற்றம்.




பேய்மழை பெய்து மலையை நனைத்துக் கொண்டிருந்தது. பதற்றத்தோடு அமர்ந்திருந்த சுபாஷினியின் கரத்தை மெல்ல பற்றினான்.

“சாரி சுபாஷினி…உன்னை நான்தான் கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்தேன். இப்போ நல்ல மழையில் மாட்டிக்கிட்டோம் இங்கிருந்து எப்படி போகப்போறாம்னு தெரியல மழை நின்னுட்டா டயரை மாத்திடுவேன். ஆனால் மழையோட வேகத்தை பார்த்தா விடற மாதிரி தெரியலை…என்ன பண்றதுன்னு புரியல…” என்றவனுக்கு பதில் சொல்லாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள்.

இடியும் மழையின் தாக்கமும் மனதை ஏதோ பண்ண அவன் கைகளை தன்னுடைய கைகளால் இறுகப்பற்றினாள். அடுத்த நிமிடம் கண்களை கூச வைத்த மின்னலும் அதை தொடர்ந்து வானத்தைப் பிளந்து கொண்டு வந்த இடி சத்தத்துக்கு பயந்துபோய் அவனை இறுக்க கட்டிக்கொண்டாள்.

அவனும் அதற்கு இசைந்தே அமர்ந்திருந்தான். இரவு மழையோடு கரைந்து விடியலை அடையாளப்படுத்திய போதுதான் இருவரும் பிரிந்து அமர்ந்தார்கள். காலை விடிந்த பிறகுதான் ட்ரெய்னிங் சென்டருக்கு சென்றனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளத்தயங்கினர். இவள் தன்னுடைய அறைக்குள் சென்று படுத்தவள்தான் கடும் ஜுரம் இரண்டு நாட்கள் கண் விழிக்கவே இல்லை. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை இயல்பாகி வந்தது. அந்த நிகழ்விலிருந்து அவனோடு பேசுவதையும் பழகுவதையும் சற்று குறைத்துக்கொண்டாள். ஆனாலும் மனதளவில் இருவருக்கும் இடையே ஒரு நெருக்கம் உண்டாகியிருந்தது.

ஒரு வாரத்துக்கு பிறகு…

மும்பையிலிருந்து பிரியங்கா முசொரியில் வந்திறங்கினாள். அவளை தன்னுடைய கெஸ்டாக தன்னுடன் தங்க வைத்துக்கொண்டாள் சுபாஷினி. மலையைப்பற்றியும் மலையின் அழகைப்பற்றியும் தமக்கையிடம் விளக்கினாள்.

“இந்திய மலைகளின் ராணி என்று அழைக்கப்படும் முசோரி, உத்திரகாண்ட் மாநிலம் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள பசுமைப் போர்த்திய மலைகளும், பல்வேறு வகையான தாவரங்களும், இதை ஒரு தேவதை நிலமாக மாற்றியிருக்கிறது.” என்றவள் அடுத்த நாள் பிரியங்காவுடன் அவுட்டிங் கிளம்பினாள்.

மிஸ்ட் ஏரியில் போட்டிங், குல்ரி பஜாரில் ரோலர் ஸ்கேட்டிங், முசோரி ஏரியை சுற்றிலும் பாரா கிளைடிங், மால் ரோடில் ஷாப்பிங், குன் மலைக்கு ரோப்வே கேபிள் கார் பயணம், கெம்ப்டி அருவி கொண்டாட்டம் என, எல்லா இடங்களையும்  அக்கா தங்கை இருவரும் கைகோர்த்துக்கொண்டு சுற்றி வந்தார்கள்.

முசோரியில் உள்ள லேண்டர் என்ற சிறிய ஊர் எந்த வகையிலும் மாசு அடையாமல் அமைதியாகவும் அழகாகவும் இருக்கும் என்ற முரளிதரனின் பேச்சை மதித்து அங்கேயும் சென்று வந்தார்கள். இங்கு கேப்டன் யங் கட்டிய ‘முல்லிங்கர்’ வீடு, அரண்மனைகள் போன்ற வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் ஏராளமாக இருக்கின்றன. இங்கே உள்ள சாலைகளின் வளைவுகளில், ‘இங்கு சுற்றுபவர்கள் யாரும் தொலைவதில்லை’, ‘பயணங்களில் நிறைய பாடங்களைக் கற்கலாம்’ போன்ற பொன்மொழிகளை அழகாக எழுதி வைத்திருக்கிறார்கள்.




லால்டிப்பாவுக்குப் போகும் போது முரளிதரனும் உடன் சென்றான். வழியில் 1839-ம் ஆண்டு கட்டப்பட்ட மிகப் பழமையான செயிண்ட் பால் மாதா தேவாலயம் இருக்கிறது. இதனருகில் இருக்கும் ‘சார் துகான்’ என்ற நான்கு கடைகள் புகழ்பெற்றவை. 1920களில் ஆரம்பிக்கபட்ட இந்தக் கடைகள் இன்றும் பரபரப்பாக இயங்கிவருகின்றன. மிகச் சிறந்த சிற்றுண்டிகளும் பலவித சுவைகளில் தேநீரும் கிடைக்கின்றன.

முசோரி மலையின் ஒட்டுமொத்த அழகும் இந்த இடத்தில் தான் இருக்கிறது!

பிரியங்கா வந்த அந்த இரண்டு நாட்களும் மிகவும் மகிழ்வோடு கழிந்தது. லால்பகதூர் சாஸ்திரி அகாடமியில் இருக்கும் அனைவரும்  இவர்கள் இருவரையும் பார்த்து மிகவும் அதிசயித்தார்கள். ஒரே மாதிரி இருக்கீங்களே கண்டே பிடிக்க முடியவில்லை என்று ஆளாளுக்கு கை குலுக்கி சொன்னபோது இருவருக்குமே பெருமிதமாக இருந்தது.

ம்ம்…அதெல்லாம் ஒரு இனிமையான நாட்கள் என்ற பெருமூச்சோடு அன்றைய நினைவுகளில் இருந்து விடுப்பட்டாள்.

***

தாத்தாவின் உடல் நிலை மோசமடைந்த காரணத்தால் ஆனந்த் சுபாஷினி திருமணம் துரிதக்கதியின் முடிவு பண்ணப்பட்டது.

 

அடுத்த நாளே சுபாஷினி குடும்பத்தார் மகளுடன் சென்னை திரும்பினார்கள்.

திருமணத்திற்கு இன்னும் இரண்டுவார காலம்தான் இருந்தது அதனால் அதற்கான வேலைகளில் பெண், மாப்பிள்ளை இருவீட்டாரும் ஈடுபட தொடங்கினார்கள்.

சுபாஷினி கேரள மாநிலத்தில் துணைக் கலெக்டர் பதவியில் இருந்ததால் அவளால் சொந்த ஊருக்கு அடிக்கடி வர முடியவில்லை. அவளை தொந்தரவு படுத்தாமல் பெற்றோர்களே எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக் கொண்டார்கள்.

முதல் நாள் விஸ்வநாதன் மகளிடம் போனில் பேசினார். அதாவது திருமணத்திற்கான இன்விடேஷன் எந்த மாதிரி அடிப்பது எந்த டிசைனில் அடிப்பது உன்னுடைய பிரண்ட்ஸ்களுக்கு கொடுக்க எத்தனை இன்விடேஷன் வேண்டும் என்ற தகவலுக்காக போன் பண்ணி பேசினார். ஆனால்  மகள் தீர்மானமாக சொல்லி விட்டாள்

“அப்பா எல்லாமே உங்க விருப்பம் நீங்க எது செஞ்சாலும் அது எனக்கு புடிச்ச மாதிரி தான் இருக்கும். நான் யாரையும் கூப்பிட போறது இல்ல ஒரு பத்து ஃப்ரெண்ட்ஸ் மட்டும்தான் கூப்பிட போறேன் எனக்கு 10 இன்விடேஷன் இருந்தா போதும். அதனால முழுக்க முழுக்க நீங்களே எல்லாவற்றையும் பாத்துக்கோங்க.., அடுத்தது எனக்கு இதைப் பத்தின பெரிய ஐடியா எல்லாம் இல்ல. ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்றேன் பா அதாவது கல்யாணம் ரொம்ப எளிமையா இருக்கணும் ஆடம்பர செலவை எவ்வளவுக்கெவ்வளவு தவிர்க்க முடியுமோ  அவ்வளவுக்கு தவிர்த்து விட்டு ரொம்ப எளிமையா நடத்துங்க.., அது மட்டும் தான் என்னுடைய விருப்பம்…” என்று பட்டும் படாமல் பேசிவிட்டு போனை வைத்துவிட்டாள் சுபாஷினி.




ஆனால் விஸ்வநாதனுக்கு மட்டும் ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. என்னதான் மாவட்டத்துக்கு துணை கலெக்டர் என்ற பதவியை வகித்தாலும் பெண் என்று வரும்போது  ஆசாபாசங்கள் எதிர்பார்ப்புகள் இதெல்லாம் இருக்கத்தானே செய்யும். கல்யாணம்னா அதற்குரிய மகிழ்ச்சியோ? ஒரு எதிர்பார்ப்போ? எதுவுமே இல்லாம இயல்பா அதுவும் மிகவும் சாதாரணமாக பேசுறாளே? அப்படின்னா ஒருவேளை சுபாஷினிக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லாம இருக்குமோ? நாமதான் சரியாக கேட்காமல் இந்த கல்யாணத்த முடிவு பண்ணி விட்டோமோ? இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போய்விடவில்லை. கல்யாணத்துக்கு இன்னும் பத்து நாட்கள்  இருக்கு அதுக்குள்ள அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்கனும். என்று விஸ்வநாதன் நினைத்துக் கொண்டிருக்க கேரளாவில் மகள் வேறு மாதிரியான மன நிலையில் இருந்தாள்.

அதாவது..

பாவம் அப்பா தான் காதலித்த பெண்ணோடுதான் வாழ முடியவில்லை என்றாலும் அவள் நினைவுகளில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். ஆனாலும் அம்மாவுக்கு துரோகம் பண்ணக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தன்னுடைய காதலை மறைத்து தனக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறார். நம்  காதல்தான் இப்படி ஆகிப்போனது என்றால் நம் மகளுடைய காதலையாவது வெற்றி பெற வைப்போம் என்று அப்பா களத்தில் இறங்கி விடுவார் இதனால் பாதிக்கப்படப்போவது ஒருவரல்ல இரண்டு பேர்.

அந்த இரண்டு பேரும் தன்னுடைய பெண்கள்தான் என்பது தெரியவந்தால் இரண்டு பேர் வாழ்க்கையையும் கெடுத்து விட்டோமே என்ற மன நிலை அவரை இறுதிவரை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டே  இருக்கும். அதனால் நம்முடைய காதலை நம் மனதில் உள்ளதை மறைத்து அப்பாவின் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அடுத்தது பிரியங்காவிற்கு அவள் ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் இந்த ரெண்டுமே நடக்கணும்னா நாம ஆனந்தை கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லது என்ற முடிவுக்கு வந்தாள் சுபாஷினி.

அப்பாவுக்கு பிரியங்கா யாரென்று தெரியவில்லை ஆனால் இவளுக்கு அவளைப் பற்றிய முழு விவரமும் தெரியும். அப்பாவிடம் நேரில் சென்று சொல்லி இவளும் உங்கள் மகள் தான் என்று இருவரையும் இணைத்து வைக்க மனம் நினைக்கிறது. ஆனால் முடியாத சூழ்நிலை மகளைப் போல உருவ ஒற்றுமை உள்ள ஒரு பெண் என்ற மனநிலையில்தான் அவளோடு அப்பா பழகிக்கொண்டு இருக்கிறார். ஆனால் அவளும் நம்முடைய மகள்தான் என்பது அவருக்கு அடியோடு தெரியவில்லை இந்த உண்மையை அப்பாவிடம் சொல்லலாம் என்று பலமுறை நினைத்திருக்கிறாள் சுபாஷினி. ஆனால் எங்கே தன்னுடைய பழைய காதல் மகளுக்கு மகளுக்கு தெரிந்து விட்டதே என்ற எண்ணத்தில் அவர் மகளை விட்டு விலகிச்சென்று விடுவாரோ என்ற பயம்.  ஒரு விதத்தில் சுயநலம் என்று கூட சொல்லலாம் தன்னுடைய அப்பா தனக்கு சொந்தமாக வேண்டும் கடைசிவரை அவருக்கு மகளாக, நாமே இருக்க வேண்டும் என்ற சுபாஷினியின் மனநிலை தான் இதற்கு காரணம்.




What’s your Reaction?
+1
14
+1
15
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!