Serial Stories தத்தி தாவுது மனசு

தத்தி தாவுது மனசு -13

அத்தியாயம்-13

 

சுபாஷினி வீட்டிற்கு வந்து முரளிதரனோடு பேசியதை அசைப்போட்டு பார்த்தாள்.

சுபாஷினியின் நினைவு ஐந்து வருடத்திற்கு முன்னோக்கி சென்றது.

அன்று சுபாஷினிக்கு  கடைசி வகுப்பு கேன்சலானதால்  ரூமுக்கு திரும்பினாள். வந்த ஐந்தாவது நிமிடத்தில் போன் அழைத்தது சோர்வோடு எடுத்து பார்த்தால் முரளிதரன் அழைத்துக் கொண்டிருந்தான். இவன் ஏன் இந்த நேரத்துக்கு கூப்பிடுறான்? முந்தின வகுப்பை அவன் தானே எடுத்தான். முக்கியமான விஷயம் ஏதாவது இருந்தால் அப்பவே கேட்டிருக்கலாமே? என்ற யோசனையோடு போனை ஆன் பண்ணினாள்.




“ஹலோ சொல்லுங்க சார்…” என்றாள்.

“சுபாஷினி ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசணும்…,உடனே போலோ கிரவுண்ட் பக்கத்துல வர முடியுமா…?”

 அவன் குரலில் தெரிந்த பதற்றம் ஏதோ பெரிய பிரச்சினை என்பதை புரிந்து கொண்டவள் ஏன் எதற்கு என்று கேள்விகளை எழுப்பாமல் உடனே கிளம்பி அந்த போலோ கிரவுண்டுக்கு அருகில் சென்றாள் இவளுக்காக அங்கே அவன் காத்திருந்தான். தன்னுடைய காரின் கதவை திறந்து ஏறிக்கொள்ளுமாறு சொல்லி விட்டு வேகமாக காரை ஸ்டார்ட் பண்ணி அந்த மலைப்பாதையில் சற்று தூரம் ஓட்டிச்சென்றான். சொல்ல வேண்டிய விஷயத்தை இங்கேயே சொல்வதற்கென்ன? கார்ல போயி தனிமையான இடத்தில் தான் சொல்லனுமா என்ன? என்று வாய்க்குள் முனுமுனுத்தப்படி வந்தாள் சுபாஷினி.

ஆள் நடமாட்டமில்லாத அந்தப் பாதையில் இடதுபுறமாக வளைத்து செந்நிற மலர்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த மரத்திற்கு அடியில் காரை பார்க்பண்ணினான்.

இவள் இறங்கும் வரை அமைதி காத்தவன்,

 “சுபாஷினி  நீ என்கூட மும்பை வர முடியுமா? காலையில போயிட்டு இரவே  திரும்பி வந்திடலாம்…” பதற்றமான குரலில் கேட்டான்.

“என்னாச்சு.. என்னாச்சு.. சார்..?” என்று இவள் தடுமாற்றத்துடன் கேட்டாள்.




“அக்கா…எங்க அக்கா ரொம்ப சீரியஸா இருக்காங்களாம். அ…அவங்க உன்ன பாக்கணும்னு ஆசைப்படுறாங்க அவங்களோட கடைசி ஆசையும் கூட எப்படியாவது உன்னை கூட்டிட்டு வரேன்னு அவங்க கிட்ட  ப்ராமிஸ் பண்ணி இருக்கேன் அதனால மறுக்காம நீ என்கூட வரணும்…”

 “ரொம்ப சீரியஸ்..கடைசியா உன்னை பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க இப்படிப்பட்ட தான வார்த்தைகளை கேட்டு மறுக்கமுடியாமல் ‘சரி’ என்று தலையசைத்தாள்.

 “ஆனா பர்மிஷன் வாங்கனும்னுமே? எப்படி சடேன்னு கிளம்பறது என்றெல்லாம் பலவிதமான கேள்வி அவளுக்குள் எழுந்தது. அதை எல்லாம் நான் பாத்துக்குறேன் அதைப்பத்தி நீ கவலைப்படாதே.”  அவளின் மனதை புரிந்து கொண்டவனாய் கூறினான்.

அடுத்தநாள் இவளுடைய அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்பது போல் இவள் கிளம்ப அவன் தன்னுடைய ஊருக்கு போயிட்டு ரிட்டர்ன் வந்துவிடுவதாக கிளம்பினான். இருவரும் ஒரு இடத்தில் மீட் பண்ணினார்கள்.

இருவருக்கும் ஆல்ரெடி டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் மும்பை செல்வது மிகவும் எளிமையாக இருந்தது.

இரண்டு மணி நேரத்தில் முசோரியில் இருந்து பிளைட் ஏறி மும்பை போய் இறங்கினர். இறங்கியதும் பிரியங்காவிற்கு கால் பண்ணி எந்த ஆஸ்பிட்டல் என்ற விவரத்தை மீண்டும் ஒரு முறை கேட்டு தெரிந்து கொண்டான். பிறகு அங்கிருந்து ஒரு கால் டாக்சி பிடித்து இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள். அருகில் அமர்ந்திருந்த முரளிதரனின் முகம் இறுகிப்போய் இருந்தது. அவனிடம் பேச்சு கொடுக்கவே தயக்கமாய் இருந்தது அதனால் அமைதியாக வந்தாள் சுபாஷினி.




 பாவம் கூட பிறந்த அக்கா சீரியஸாக இருக்கும்போது பதற்றம் இல்லாமல் எப்படி இருக்கும்? என்று மனதுக்குள் நினைத்தாள். முதல் முதலில் தன்னுடைய அப்பாவின் காதலியை பார்க்க போகிறோம் என்ற பதற்றமும் அவளுக்கு தொற்றிக்கொண்டது. என்னைப் பார்த்தா அவங்களுடைய ரியாக்ஷன் எப்படி இருக்கும்? என் கூட இயல்பா பேசுவாங்களா இல்ல…எங்க அப்பா மேல இருக்கிற வெறுப்பால என்னை முகம் சுளித்து திட்டக்கூட செய்யலாம் எதுவா இருந்தாலும் இவ்வளவு தூரம் வந்துட்டோம். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி கொண்டு அமர்ந்திருந்தாள் சுபாஷினி. சுமார் இருபது நிமிட கால் டாக்ஸி பயணத்திற்குப் பிறகு ஒரு தனியார் மருத்துவமனை வாசலில் வந்து இறங்கினர்.

ஹாஸ்பிடல் வாசலில் இறங்கி ரிசப்ஷனுக்கு நடந்தபோது ‘மாமா!’ என்ற ஒரு இளம் குரல் கேட்டு இருவரும் ஒரே நேரத்தில் திரும்பினர். அங்கே நின்றிருந்த அந்த பெண்ணை பார்த்தவுடன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்துப் போனாள் சுபாஷிணி. காரணம் தன்னைப் போலவே ஒரு உருவம் எதிரில் நிற்பதை கண்டு அவளுடைய கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. பதற்றத்தில் அருகில் நின்றவனை ஒட்டி நின்றாள் இவளின் பதற்றத்தை புரிந்து கொண்டவன்,

“சுபாஷினி இதுதான் எங்க அக்கா பொண்ணு பேரு பிரியங்கா நான் சொன்னேனில்லே அந்த பிரியங்கா இதுதான்.”

 பிரியங்காவிற்கும் அதே மனநிலைதான் தன்னைப்போலவே இருக்கும் சுபாஷினியை  அதிர்ச்சியோடு பார்த்தாள்.

“பிரியங்கா வா…” என்று அக்கா மகளின் கைகளைப் பற்றி தன்னருகில் நிற்க வைத்தான்.

“பிரியங்கா….இவங்க  இவங்க சுபாஷினி  ‘ஐஏஎஸ்’ ஆபிஸர்  இவங்கள உனக்குத் தெரியாது ஆனா உன்ன அவங்களுக்கு நல்லாவே தெரியும். உன்னை பத்தி சொல்லி இருக்கேன். ஒரே உருவ ஒற்றுமை உள்ள ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கிறதுக்காகதான் இவங்கள கூட்டிட்டு வந்தேன். சரி அக்காவை பார்க்கணும் எங்க இருக்காங்க?  இப்போ பேசினாங்களா? உடம்பு கண்டிஷன் எப்படி இருக்கு…?”




“உங்க அக்கா இப்ப பரவாயில்ல நல்லா தான் இருக்காங்க பேசக்கூட செய்றாங்க மாமா. ஆமா…இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்களே அக்கா பொண்ண பத்தி கொஞ்சமாவது கவலைப்படுறீங்களா?” என்று கேட்டுக்கொண்டே உரிமையோடு அவன் தோள்களில் சாய்ந்து கொண்டாள் பிரியங்கா. அவள் ரொம்ப அந்நியோன்யமாக முரளிதரனோடு பழகினாள். அதை பார்க்கும்போது இவளுக்கு சற்று பொறாமையாககூட இருந்தது.

சுபாஷினியைப் பொறுத்தவரை முரளிதரன் அவளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஒரு ப்ரொபசர் அவ்வளவுதான். மற்றபடி அவனுக்கும் இவளுக்கும் எந்த ஒட்டு உறவுமில்லை. அப்படி இருக்கும்போது அவனுடைய விருப்பப்படி அவன் யாருடனும் பழகலாம்  பேசலாம். அதை பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது? என்று தன் மனசாட்சியை அடக்கினாள் சுபாஷினி.

சரி இப்போ நாம வந்தது ஈஸ்வரி அம்மாவைப் பார்ப்பதற்காக அத விட்டுட்டு தேவையில்லாம மனசப்போட்டு குழப்பிக்கொள்ளலாமா? என்ற எண்ணத்தோடு முரளிதரனின் முகத்தை ஏறிட்டாள். கேள்வியோடு அவனும் அவள் முகத்தையே ஊடுருவி கொண்டிருந்தான்.

“ஒன்னுமில்லே… அவங்களப்போய் பார்க்கலாமா…? என்றாள் சற்று தயக்கத்தோடு.

” போகலாம்…”

பிரியங்கா அவனை உரசிக்கொண்டே வந்தாள். அந்த மருத்துவமனை எமர்ஜென்சி அறைக்கு அருகில் வந்தவுடன் “பிரியங்கா நான் மட்டும் உள்ளே போறேன். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வெயிட் பண்ணுங்க…” என்றான். இருவருமே யோசனையோடு அவன் முகத்தை பார்த்தார்கள் பதிலேதும் சொல்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான்.

மூடிய கதவை பார்த்தவர்கள் பிறகு வேறு வழியின்றி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

“என்னாச்சுன்னு தெரியல மாமாவுடைய பேச்சு செயல் எல்லாம் மாற்றமா தோணுது.” என்றாள் பிரியங்கா.

 “அப்படியா என்ன மாற்றம்?” இவள் கேட்க…




அவள் பதிலேதும் சொல்லாமல், “சுபாஷினி மேடம் உங்களுடைய அப்பா அம்மாவை எனக்கு நல்லா தெரியும். நீங்க சென்னை டி நகரில் பிரபல துணிக்கடை ஓனரோட பொண்ணுதானே…? ” என்றாள் அடுத்த அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக.

“எங்க அப்பா அம்மாவை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்…?” இவள் குழப்பத்தோடு கேட்க,

தான் ‘டி நகர்’ போயிருந்த விஷயமும் அங்கிருந்த ஒரு துணிக்கடைக்கு சென்றபோது அங்கு நடந்த சம்பவம் அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னாள் பிரியங்கா.

 “உங்கள மாதிரி நான் இருந்ததால என் மேல உங்க அப்பாவுக்கு ரொம்ப பாசம் வந்துடுச்சு!! அப்புறம் என்னுடைய போன் நம்பர் வாங்கி உங்கம்மாவும் பேசினாங்க ஒருமுறை உங்க வீட்டுக்கு என்ன கூப்பிட்டாங்க நானும் அங்க போயிட்டு ஒரு நாள் புல்லா அவங்களோட இருந்துட்டு வந்தேன். எனக்கு டிரஸ்செல்லாம் கூட கொடுத்தாங்க எனக்கு இன்னும் மறக்க முடியல ஆனா அடிக்கடி நான் போறதில்ல காரணம் என்னுடைய வேலை பளு அப்படி!…இந்த முறை அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு வந்துட்டேன் இங்க இருந்து போன பிறகு திரும்பவும் அவர்களைப் போய் சந்திப்பேன். ப்ளீஸ்…இந்த விஷயம் மாமாவுக்கு தெரிய வேணாம்.”

“ம்ம்…”என்று தலையசைத்தாலும் சுபாஷினிக்கு உள்ளுக்குள் பக்கென்று இருந்தது.

“ஐயையோ நான் இங்க வந்த விஷயத்தை சொல்லிடப் போறீங்க…தன்னுடைய அக்கா ரொம்ப சீரியஸா இருக்காங்கன்னு சார்  சொன்னார். அடுத்து என்ன மாதிரியே ஒரு பொண்ணு அவங்களுக்கு இருக்கிறதா சொன்னார். ரெண்டு பேரையும் பாக்க வந்தேன். இங்க வந்தது எங்க அப்பா அம்மாவுக்கு கூட தெரியாது. நான் இங்க வந்த விஷயம் தயவுசெய்து அவங்களுக்கு தெரிய வேணாம்…”

உள்ளே சென்ற முரளிதரன் வெளியில் வந்து சுபாஷினியை தன்னுடன் வருமாறு சைகை செய்தான். உடன் வந்த பிரியங்காவை இங்கே இருக்குமாறு சொல்லிவிட்டு இருவரும் உள்ளே சென்றார்கள். சுபாஷினியை நேராக தன் அக்கா ஈஸ்வரியிடம் அழைத்துச்  சென்றான். இவளை பார்த்தவுடன் ஈஸ்வரியின் முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. கண்களில் ஒளிவட்டம் தென்பட்டது இவளை கையசைத்து அருகில் வருமாறு அழைத்தார்கள். அவர்கள் அருகில் சென்ற சுபாஷினியின் கையைப்பற்றி முத்தமிட்டார்கள் அவள் உடல் சிலிர்த்தது. அந்த அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டியது. நீயும் என்னுடைய மகள்தாம்மா எனக்கு ஏதாவது ஒன்னு ஆயிடுச்சின்னா நீ உன்னுடைய அக்கா பிரியங்காவை பார்த்துப்பாயா? என்று தட்டுத்தடுமாறி கேட்டார்கள்.?”

“கண்டிப்பாக பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதியளித்தாள்.




     “பிரியங்காவுக்கு நீ யார் என்ற விஷயம் தெரியாது. தெரிந்தால் அவளுடைய ரீயாக்ஷன் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை அதனால்தான் நானும் அக்காவும் உன்னைப்பற்றிய விஷயத்தை அவளிடம் சொல்லவில்லை.” என்று முரளிதரன் சொன்னது சுபாஷினிக்கு நினைவு வந்தது.

“எல்லாம் சரியாயிடும் பிரியங்காவை நான் பாத்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க… ஆனாலும் உங்களுக்கு ஒன்னும் ஆகாது குணமாயிடுவீங்க கவலைப்படாதீங்க…அ,,,அம்மா”என்று திரும்பவும் ஒரு முறை ஆறுதலுடன் கூறினாள்.

 

  ‘அம்மா!’ என்ற அந்த ஒற்றை வார்த்தையில் நெகிழ்ந்துப்போனாள் ஈஸ்வரி.




What’s your Reaction?
+1
15
+1
18
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!