Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 7

 7

 

 

 

” நல்ல பையன்னு நினைத்தேனே …அவனுக்கு ஏன் இப்படி ஒரு கெட்ட பழக்கம் …? ” முத்துராமனுக்கு இன்னமும் நம்பமுடியவில்லை.

” எப்படிப்பா நல்ல பையன் சர்ட்டிபிகேட் தர்றீங்க …? எனக்கென்னவோ பார்த்ததிலிருந்து அவரோட கேரக்டர் முன்னுக்கு பின் முரணாகத்தான் தெரிகிறது …”

” இல்லைம்மா …இந்த சின்ன வயதிலேயே மனைவியை இழந்திருக்கிறார் .அந்த விரக்தி கூட காரணமாக இருக்கலாமில்லையா …? “

” அம்மா இறந்தபோது உங்களுக்கு எத்தனை வயதுப்பா..? நீங்கள் அப்போது இப்படித்தான் அம்மாவையும் , மகளையும் கீழே வைத்துகொண்டு மாடியில் தைரியமாக குடித்துக் கொண்டிருந்தீர்களா …? ”

 




” இல்லைடா கண்ணம்மா .என் நிலைமை வேறு .நான் என் மனைவியின் மரணத்தை எதிர்பார்த்தே இருந்தேன் .அதனால் அது என்னை பாதிக்கவில்லை .இவர் அப்படியில்லாமல் மனைவியின் திடீர் மரணத்தால் பாதிக்கப்பட்டு ….ஏன்மா சும்மா அவர் …இவர்ங்கிறோமே .அவர் பெயர்தான் என்ன ..? “

” அ…அது தெரியவில்லையே அப்பா ….” கண்ணம்மா விழித்தாள் .முத்துராமன் அவளை விநோதமாக பார்த்தார் .

————

வீட்டிற்கு வந்தே ஆகவேண்டுமென அடம்பிடித்த நித்திகாவை நாளை வருவதாக சமாளித்துவிட்டு ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டிருந்த கண்ணம்மாவின் பின்னால் …

” குட்ஈவினிங் மேடம் .நான் ஹெல்ப் பண்ணவா …? ” என்ற குரல் கேட்டது .

” வேண்டாம் …நான் கிளம்பிவிட்டேன் .பிறகு பார்க்கலாம் .” திரும்பி பார்க்காமலேயே அவன் குரலை உணர்ந்து பதில் சொல்லியவளின் முன்னால் வந்து நின்றான் .

” உங்களோடு பேச வேண்டும் மேடம் .ப்ளீஸ் ….”

” ஆமாம் மிஸ் .வாங்க மிஸ் ப்ளீஸ் ….” அவனோடு நின்ற நித்திகாவும் கெஞ்ச …







பள்ளியில் சுற்றியிருந்தவர்களின் கவனத்தை கவர விரும்பாது …கிளம்ப நினைத்தாள் .ஏனெனில் அவனது வருகை பள்ளியில் ஒரு பரபரப்பை முன்பே உண்டாக்கியிருந்த்து .தலைமை ஆசிரியை அவனை வாசலுக்கே வந்து வரவேற்றிருந்தார் .




அவன் முன் நிற்க பிடிக்காதுதான் கண்ணம்மா வேகமாக வெளியேறிக் கொண்டிருந்தாள் .

” உங்களுடன் பேசத்தான் வந்தேன் மேடம் .” இவன் இப்படி பைக் ஸ்டான்ட் வரை வந்து அவளுடன் பேசிக்கொண்டிருந்தால் …பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ….சங்கடமாக உணர்ந்த போதும் …

” வெளியே எங்கேயாவது பேசலாம் .வீட்டிற்கு வர மாட்டேன் …” திட்டவட்டமாக அறிவித்தாள்.

ஒரு நிமிடம் முகம் வாடியது தகப்பனுக்கும் , மகளுக்கும் . சமாளித்து கொண்டவன் ….

” எங்க கூட காரில் வாங்க .திரும்ப உங்களை இங்கேயே விட்டுடுறேன் …” அவளை அழைத்து வர மகளை கை காட்டிவிட்டு போய் காரை எடுத்தான் .

” அப்பா நேற்று நைட் எங்கள் மிஸ்ஸை திட்டினீர்களா …? .அவர்கள் கோபமாக இருக்கிறார்களே …?  நித்திகா கேட்டாள் .

காரின் முன் கண்ணாடி வழியே பின்சீட்டில் அமர்ந்திருந்தவளை பார்த்தான் .

என்னை ஏன் பார்க்கிறாய் …? உன்னிடம்தானே கேட்கிறாள் .நீயேதான் சொல்ல வேண்டும் .கைகளை கட்டிக்கொண்டு சாலையை ஆவலோடு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் .

” நித்தி ….அதோ அந்த கடையில் போய் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிரு.நானும் மிஸ்ஸும் பின்னாலேயே வருகிறோம் ….” ஐஸ்க்ரீம் கடை வாசலுக்கு நேராக காரை நிறுத்திவிட்டு சொன்னான் .

கீழே இறங்கிய நித்திகா ” மிஸ்ஸை ஒண்ணும் சொல்லக்கூடாது ” ஒற்றைவிரலை ஆட்டி தந்தையை  எச்சரித்துவிட்டு போனாள் .




” நீங்கள் பேசுவதற்காக இப்படி குழந்தையை தனியாக அனுப்புவீர்களா …? “

நித்திகா உள்ளே போய் ஐஸ்க்ரீம் வாங்கிக்கொண்டு டேபிளில் உட்காரும் வரை பார்த்திருந்தவன் , அவள் அமர்ந்திருக்கும் டேபிளை இங்கிருந்தே பார்க்கும் படியான இடத்தில் காரை சிறிது அட்ஜஸ் செய்து நிறுத்தினான் .

” இதோ அவள் நம் முன்னால்தானே இருக்கிறாள் .ஐந்து நிமிடங்கள் தான் கண்ணம்மா …” என்றவன் பின்னால் திரும்பி அவளை பார்த்தவாறு அமர்ந்து கொண்டு …

” என் மனைவி இறந்து நான் மிகவும் டிப்ரசனில் இருந்த போது இந்த குடிப்பழக்கம் என்னை தொற்றிக்கொண்டது கண்ணம்மா .முதலிலெல்லாம் வெளியே பாரில் …நண்பர்களுடன் சேர்ந்து என நிறைய குடித்துக்கொண்டிருந்தேன்.இப்போது இரண்டு வருடங்களாக மிகவும் குறைத்துக்கொண்டு வீட்டிற்குள்ளேயே குடிக்கிறேன் .கெட்ட பழக்கம்தான் .விடத்தான் வேண்டும் .உடனடியாக முடியவில்லை .கொஞ்சம் கொஞ்சமாக முயன்று கொண்டிருக்கிறேன் .இதற்காக நீ் என்னை வில்லனை போல் நினைக்கவேண்டாம் .உன் கோபத்தை என் மேல் காட்டு .ஆனால் நித்தி மேல் வேண்டாம் .பாவம் குழந்தை மிகவும் துவண்டுஙிடுவாள் ….”

” அப்படி குழந்தை மேல் அக்கறை உள்ள அப்பா போல் தெரியவில்லையே …இதுபோல் நேரத்தில் உங்களை தேடி வந்த குழந்தையை திட்டி அனுப்பியிருக்கிறீர்கள் “

” சிறியவர்களிடமிருந்து தங்கள் பலவீனங்களை மறைக்க பெரியவர்கள் கையாளும் உத்தி இது போல் காரணமில்லாமல் அவர்களை திட்டுவது .காட்டிலும் கையுமாக நான் அமர்ந்திருக்கும் கோலத்தை என் மகள் காண்பதை விரும்பவில்லை .அதுதான் ….”

” இது உங்களுக்கே அசிங்கமாக தெரியவில்லை …” முறைத்தாள் .

” இருக்கிறது கண்ணம்மா .மிகவும் அசிங்கமாக இருக்கிறது .நான் முயன்று கொண்டுதான் இருக்கிறேன் .விரைவில் இதிலிருந்து மீண்டு விடுவேன் .அதுவும் நேற்று நீ கோபித்து கொண்டு போன பிறகு இதிலிருந்து வெளி வர வேண்டுமென மிகத் தீவிரமாகஙே இருக்கிறேன் .”

” ரொம்ப சந்தோசம் .சீக்கிரம் விடுபட்டு விட்டு சொல்லுங்கள் .வருகிறேன் .”

” கண்ணம்மா இது எட்டு வருட பழக்கம் இரண்டொரு நாளில் விட முடியாது .நிச்சயம் விட்டு விடுவேன் .ப்ளீஸ்மா அதுவரை …இது போல் முகம் திருப்பாதேயேன் .ப்ளீஸ் ….”




இவன் இப்படியெல்லாம் தழைந்து பேசுவானா …? அன்று அவனது கடையில் வைத்து மிகப்பெரிய தவறை இவள் கண்டுபிடித்து சொன்னபோது கூட நிமிர்வாய் நின்றது நினைவு வந்த்து .

” நித்தி ஐஸ்க்ரீமை முடித்துவிட்டாள் ….போகலாம் …” இங்கிருந்தபடியே நித்திகாவுக்கு கை காட்டினாள் .

” நீங்க ரெண்டு பேரும் சண்டையெதுவும் போடலையே ….? ” காரினுள் வந்து அமர்ந்து கேட்ட நித்திகாவிற்கு பளிச்சென பற்கள் தெரிய புன்னகை செய்தாள் கண்ணம்மா .அவளது அந்த புன்னகையை முன் கண்ணாடியில் பார்த்துவிட்டு ஊப் பென பெருமூச்சை வெளியேற்றினான் .

” நன்றிங்க மேடம் ….” அவனது அழைப்பு இப்போதுதான்  வித்தியாசமாக பட …இவன் கொஞ்சநேரம் முன்பு வரை என்னை பெயர் சொல்லி ஒருமையில் அழைத்தானோ …அப்படித்தானே தெரிந்த்து .கண்ணம்மாவின் தீவிர யோசனையில் யோசித்ததை தவிர வேறொன்று நெருட …

” உங்கள் பெயர் என்ன …? ” கண்ணம்மாவின் திடீர் கேள்வியில் விழி விரித்தவன் …

” உங்களுக்கு தெரியாதா …? “

—————–

” என் கணிப்பு சரிதான்மா .அந்த பையன் ஒரு சூழ்நிலைக் கைதி …”

” ம்ப்ச் போதும்பா .உங்களுக்கு பிடித்த பெயரை வைத்திருக்கிறதால் ரொம்ப அவருக்கு சப்போர்ட் பண்ணாதீங்க ….,”

” ம் ….மணிபாரதி .ரொம்ப அழகான பெயர் இல்லையாம்மா .உனக்கு கூட முதலில் பாரதி என்ற  பெயர்தான் வைக்கவேண்டுமென நினைத்திருந்தேன் .ஆம்பளை பெயர் போலிருக்கிறது என்று உன் அம்மா முகத்தை தூக்கியதால் நீ என் கவியின் காதலி கண்ணம்மாவாகிவிட்டாய் .”




முத்துராமன் பாரதி என சும்மா சொல்பவர்களுடனேயே ஒரு மணிநேரம் உட்கார்ந்து பேசுவார் .அந்த பெயரையே வைத்திருப்பவர்களிடம் ….

” அப்பா அவருக்கு பாரதின்னா யாருன்னு கூட தெரியுமோ என்னவோ …நீங்கள்பாட்டுக்கு அவரிடம் கவிதை கேட்டுவிடாதீர்கள் ….”




 

” அப்படியா சொல்கிறாய் …? ” முத்துராமன் யோசனையில் ஆழ்ந்து விட ஒலித்த காலிங்பெல்லிற்காக கதவை திறந்த கண்ணம்மா அதிர்ந்தாள் .

கண்ணம்மா என அழைத்தபடி கலங்கிய கண்களுடன் நின்றிருந்தான் அவன் …ராமச்சந்திரன் .

” நான் இங்கே இருப்பது உங்களுக்கெப்படி தெரியும் …? இங்கே ஏன் வந்தீர்கள் …? “

அவனை வீட்டிற்குள் அனுமதிக்க கூடாதென்ற உறுதியுடன் வழி மறித்து நின்றபடி கேட்டாள் கண்ணம்மா .

” என்ன கண்ணம்மா …என் மனைவியை பார்க்க நான் வரக்கூடாதா …? என்றான் அவன் .

What’s your Reaction?
+1
3
+1
1
+1
1
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!