Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 18

                                                               18

 

 

வழக்கமான பதட்டங்களின்றி போனில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த மெசேஜ்களை அலட்சியப்படுத்தி உறக்கம் பிடிக்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் கண்ணம்மா .அன்று காலை கிடைத்த  கணவனின் அணைப்பு அவளுக்குள் புதியதோர் தைரியத்தை உண்டாக்கியிருந்த்து .

சரிதான் போடா …என எவனையும் அலட்சியப்படுத்தும் மனோபாவத்தை தந்திருந்த்து . சாதாரண ஓர் அணைப்பிலேயே இவ்வளவு தைரியத்தை தர முடியுமானால் , முழுதாக அவனுடன் மனைவியாக ஒன்றினால் ….

கணவனாக அவளுடன் சேரும் ஆர்வத்தை சில தினங்களாக மணிபாரதி வெளிப்படையாக காட்டிவந்த போதும் , தன் முன்வாழ்க்கை உறுத்தலால் அவனை நெருங்க தயங்கி வந்திருந்தாள் .ஆனால் அவளது அத்தனை தயக்கங்களையும் தன் ஒரே அணைப்பில் அன்று எளிதாக தகர்த்திருந்தான் அவள் கணவன் .




இனியும் அவனிடமிருந்து விலக வேண்டுமா ….விலக முடியுமா ….தனக்குள் போராடியவள் படுக்கையில் எழுந்து அமர்ந்தாள் .அருகில் தூங்கிக் கொண்டிருந்த நித்திகாவின் கலைந்திருந்த உடையை சரி செய்து போர்வையை போர்த்தி விட்டு , கையில் பாரதியின் கவிதையோடு வெளியே வந்து ஹாலில் உட்கார்ந்தாள் .

கண்களை இறுக மூடி மனதினை கட்டுக்குள் கொண்டு வந்தவள் , புத்தகத்தை திறந்து தந்தை கேட்டிருந்த குறிப்புகளை தேடத் தொடங்கினாள் .ஐந்தே நிமிடங்களில்….

” தூக்கம் வரலையா கண்ணம்மா .எனக்கும் தூக்கம் வரலை ….” அவளருகில் நெருங்கி அமர்ந்தான் மணிபாரதி .

” என்ன செய்கிறாய் ….? ” அவள் கூந்தல் மல்லிகையை வருடியது அவன் கை .

” அது …அப்பா கொஞ்சம் விபரங்கள் கேட்டிருந்தார் .அதை …” மல்லிகையை முகர்ந்த கணவனின் செய்கையில் வார்த்தைகள் பாதியாகின.

” கண்ணம்மாவிற்கும் , பாரதிக்கும் நடுவே இது எதற்கு …? ” புத்தகத்தை காட்டினான் .

” எப்போதும் அவர்களுக்கிடையே கவிதை இருக்கும் …” புத்தகத்தை விடாமல் பற்றினாள் .

” கவிதைதானே …நானே சொல்கிறேன் …” என்றவன்

தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!
வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு…

அழுத்தமான தன் குரலை மென்மையாக்கி பாடியே காட்டினான் ….

” ஆஹா ….அழகாக பாடுகிறீர்களே ….” விழி விரித்தாள் .
” எனக்கு வேறு வழி தெரியவில்லை கண்ணம்மா .உன்னை கரெக்ட் பண்ணுவதற்காக உன் அப்பாவின் புத்தகத்திலிருந்து கஷ்டப்பட்டு மனப்பாடம் செய்தேன் தெரியுமா …? “




” கரெக்ட் பண்ண போகிறீர்களா …? பெரிய மனுசன் பேசும் பேச்சா இது …? ” முறைத்தாள் .

” பெரிய மனுசனா …? அது யாருடி இங்கே …இந்த நேரத்தில் பெரிய மனிதன் , சின்ன மனிதனென்ற வித்தியாசம் கிடையாது .எல்லோரும் ஒன்றுதான்” …மூச்சு முட்ட மோகத்தை அவள் மேல் கவிழ்த்தவன் , அவள் தலையிலிருந்த மல்லிகை சரத்தை எடுத்து முகர்ந்து விட்டு பாரதியார் கவிதைக்குள் புக் மார்க்காக வைத்து மூடினான் .

” இந்த பாரதியை நாளை பார்க்கலாம் .இப்போது உன் பாரதியை பார் கண்ணம்மா …” கிசுகிசுத்து விட்டு அவளை கைகளில் அள்ளிக் கொண்டான் .

காதலடி நீயெனக்கு காந்தமடி நானுனக்கு
     வேதமடி நீயெனக்கு விந்தையடி நானுனக்கு

ரசித்து பாடிய பாரதிக்காக வீணையாகிய கண்ணம்மா அவன் விந்தைகளுக்குள் ஆழத்துவங்கினாள் .

                                                                  ———–

இவ்வளவு அழகாக ஒரு காலை தன் வாழ்க்கையில் இதுவரை வந்த்தில்லையென கண்ணம்மாவிற்கு தோன்றியது .

நாசிக்குள் நுழைந்த பன்னீர் ரோஜாவின் மணத்தை இழுத்து நுகர்ந்தவள் அந்த செடியருகே போய் குனிந்தாள் .ஹப்பா …எத்தனை பூக்கள் .

” இத்தனை சின்ன செடியாக இருக்கிறாய் ….அதற்குள் உனக்கு எத்தனை பூக்கள் ….” ஒன்று …இரண்டு என எண்ணி ….” பத்து பூக்களா ….? ” என வியந்தாள் .

செடியை சுற்றி தனது இரு கைகளையும் கூட்டி அணைத்து ஒரு பூக்கொத்தின் மீது முகம் பதித்து முத்தமிட்டாள் .பூவின் அடியிலிருந்த சிறு முட்கள் மென்மையாக அவள் கன்னம் குத்தியது .

இந்த சமயம் மென்மையும் , வன்மையுமான முன்தின கணவனின் அணைப்பை நினைவுறுத்த சிவந்த முகத்தை அந்த மலர்களுக்குள்ளேயே புதைத்தாள் .

” இங்கே என்னடி பண்ணிட்டு இருக்க…? ” திடுக்கிட்டு நிமிர்ந்தவளின் கன்னத்தில் முள் கோடிழுத்தது .

” அத்தை ….” போச்சு …சும்மாவே இவள் கவிதை எழுதுவதை வெட்டி வேலை , கனவிலேயே மிதக்காதே …என்று ஏதாவது குத்திக்காட்டிக் கொண்டிருப்பார் .இப்போது …இதை வேறு பார்த்துவிட்டார் .நான் தொலைந்தேன் .வேகமாக உள்ளே வந்து அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள் .

” சமையல்காரி லீவு .நான் தனியாக சமையலறையில் அல்லாடிக்கிட்டு இருக்கேன் .நீ  என்னன்னா பூவுக்கு முத்தம் கொடுத்திட்டு இருக்கிறாயா …? ” ஹாலில் உட்கார்ந்து கொண்டு கத்த ஆரம்பித்தார் .




கண்ணம்மா அவசரமாக சமையலை தொடர்ந்தாள் .வெளியே மணிபாரதி , நித்திகாவின் சத்தம் கேட்டது .

” ஏன் பாட்டி அம்மாவை திட்டுறீங்க …? ” நித்திகா கோவிப்பது கேட்டது .

மீனாட்சி ” நீ வாயை மூடுடி ….” அதட்டினார் ..

நித்திகா உள்ளே வந்து பின்னிருந்து அவளை கட்டிக்கொண்டாள் .

” சாரிம்மா …பாட்டிக்காக ….” என்க …கண்ணம்மா நெகிழ்ந்தாள் .

” இதுக்கு எதுக்குடா சாரி .பெரியவங்க டென்சன்ல ஏதாவது சொல்வாங்க .அதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது ….” மகளுக்கு போல தனக்கும் சேர்த்தே சொல்லிக்கொண்டாள் .

” உங்களுக்கெதுவும் வருத்தமில்லையேம்மா ….” தன் மார்பில் சாய்ந்து கொண்டு தன்னை ஏக்கமாக நிமிர்ந்து பார்த்த மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டாள் .

” எனக்கெந்த வருத்தமும் இல்லைடா .நீ போய் குளித்து தயாராகு .போ ….” அவளை அனுப்பினாள் .

” எனக்கு கூட அவளை மாதிரியே உன்னிடம் கேட்கத்தான் ஆசை கண்ணம்மா ….” பின்னாலேயே வந்து நின்றான் மணிபாரதி .

” அம்மாவிற்காக …உனக்கு ஒன்றும் வருத்தமில்லையே ….”

” ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பதில் சொல்லனுமா ….? மகளுக்கு சொன்ன பதில்தான் அப்பாவிற்கும் …” புன்னகைத்தபடி  இட்லிகளை ஊற்றி வைக்க தொடங்கினாள் .

” எவ்வளவு ஓரவஞ்சனை .மகளை போலவா ..அப்பாவிற்கு சொன்னாய் …? ” அவன் குரலில் குறும்பு வந்திருந்த்து .

” அத்தை வந்துவிடுவார்கள் .போங்கள் ….” தலையை குனிந்து கொண்டு முணுமுணுத்தாள் .

” எனக்கு உரிமையானதை எல்லாம் பூவுக்கு கொடுத்து வீணாக்குவாயா …? ,” அவளை உரசியபடி நின்றவன் ….

” ஏய் இதென்ன கன்னத்தில் கோடு …? ” வருடினான் .

” அது முள் குத்திவிட்டது ….”




” ம் …அது கூட எனக்கு வேண்டாம் .உன் புருசனுக்கு கொடுன்னு சொல்லியிருக்குது ….” அந்த காயத்தை உதடால் வருடும் எண்ணத்தில் அவன் நெருங்க ….

” டேய் …மணி ….” பின்னிருந்து மீனாட்சியின் குரல் அசரீரி போல் ஒலித்தது .

” அ…அம்மா ….” அவசரமாக ஐந்தடி நகர்ந்து தள்ளி போனான் .

” இங்கே என்னடா பண்ணுகிறாய் …? இன்னைக்கு கடைக்கு போகலையா ..? போய் கிளம்பு ….” இடுப்பில் இரண்டு கைகளை வைத்து மீனாட்சி நின்ற போஸில் ஓடிய கணவனை கேலியாக பார்த்தபடி அடுப்புக்கு திரும்பினாள் .

” காலங்கார்த்தாலே என்ன வெட்டி வேலை .பட்டுன்னு சமையலை முடிச்சிட்டு வேலைக்கு கிளம்பு ….” நிஜம்மாகவே மருமகளின் தலையில் ஒரு கொட்டை வைத்துவிட்டே மாமியார் போனார் .

ம்க்கும் புருசனும் , பொண்டாட்டியும் தனித்தனியாக படுக்கிறாங்களேன்னு அவ்வளவு ஆதங்கப்பட்டார் .இப்போது கொஞ்சம் பக்கத்தில் நின்றதற்கே இந்த விரட்டு விரட்டுகிறார் .இவரை எந்த கணக்கில் சேர்க்க …? பெருமூச்சுடன் அவசரமாக வேலையை தொடர்ந்தாள் .

                                                               ———–

” எவ்வளவு தைரியம் உனக்கு …? ” ஒரு வாரமாக அவளை போனில் முயன்று விட்டு முடியாமல் நேரிலேயே வந்து நின்றான் ராமச்சந்திரன் .

” உன்னை மாதிரி பொறுக்கியிடமெல்லாம் தைரியமாகத்தானடா இருக்க வேண்டும் ….” நிமிர்வுடன் பேசியவளை குரோதமாக பார்த்தான்




 

” உன் நிலைமையை மறந்துவிட்டு பேசுகிறாயடி ….”

” ஏய் …மரியாதை .இப்படி பேச என் புரசனுக்கு மட்டும்தான் உரிமையிருக்கு .நீ தெருவில் போகும் நாய் .உனக்கு என் பெயரை சொல்ல கூட உரிமையில்லை… “

” ஓஹோ …என் உரிமையோடு அளவை சொல்லட்டுமா …? “

” சொல்லேன் .என்னிடமில்லை .என் கணவரிடமே …இதோ …” கார்டை தூக்கி போட்டாள் .

” அவர் ஆபிஸ் அட்ரஸ் , போன் நம்பர் .நேரிடையாக அவரிடமே பேசு .போ ….” புறங்கையை அலட்சியமாக அசைத்துவிட்டு பள்ளிக்குள் போனாள் .

பற்களை நறநறத்தபடி ஒநாயாக நின்றான் அவன் .

What’s your Reaction?
+1
4
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!