Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 11

11

 

 

” மணிபாரதி செய்ததில் தவறொன்றும் இருப்பது போல் எனக்கு தெரியவில்லையம்மா ….” முதன்முறையாக அப்பாவின் வார்த்தை ஒன்றுக்கு கண்ணம்மாவிற்கு அளவில்லாத கோபம் வந்த்து .

” என்னப்பா தவறில்லை .வயதிற்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு ஒரு அப்பாவிற்கு மறுதிருமண ஆசை வரலாமா …? “

” ஏனம்மா …வந்தாலென்ன …? அவர் இவ்வளவு நாட்களாக மணமுடிக்காமல் இருந்த்துதான் தவறென்று சொல்வேன் நான் .அத்தோடு வயது வந்த பெண் ….என்று நீ இழுப்பதற்கு ஏற்ப நித்திகாவிற்கு  ஒன்றும் கல்யாண வயதாகி விடவில்லை .பதிமூன்றே வயதுதான் .அவள் இன்னமும் சிறு குழந்தைதான் “




” பதிமூன்று வயது குழந்தை வயதென்று உங்களுக்கு யார் சொன்னது …? உங்களை சொல்லி குற்றமில்லை .நீங்களும் ஆண்பிள்ளைதானே .உங்கள் இனமென்று அந்த ஆள் மீது அளவில்லாமல் பாசம் பொங்கி வடிகிறது ….”

வந்த்தும் உடையை கூட மாற்றாமல் முழங்கால்களை கட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தபடி படபடவென பொறிந்து கொண்டிருந்த மகளை விநோதமாக பார்த்தார் முத்துராமன் .

” உனக்கு ஏனம்மா இவ்வளவு கோபம் வருகிறது …? “

” கோபமா …எனக்கு அப்படியே அவர் சட்டையை பிடித்து இழுத்து நறுக்கென்று  நாலு கேள்வி கேட்கவேண்டும் போல் இருக்கிறது ….” கண்ணம்மாவின் கோப வார்த்தைகளுக்கு பின்னணி இசை போல் காலிங்பெல் ஒலித்தது .

மணிபாரதிதான் வந்திருந்தான் .கதவை திறந்த முத்துராமனிடம் ” கண்ணம்மா இருக்காங்களா …? ” மெல்லிய குரலில் கேட்டான் .

” நான் இங்கேதான் இருக்கேன் …” உள்ளே உட்கார்ந்தபடியே குரல் கொடுத்தாள் கண்ணம்மா .

அந்த வேக குரலில் தடுமாறியவன் ரொம்ப கோபமாக இருக்கிறாளா … ? ஜாடையில் முத்துராமனிடம் கேட்டான் .அவர் உதட்டை பிதுக்கி கைகளை விரித்தார் .

என்ன நடந்த்து …? பதிலுக்கு ஜாடையாக கேட்டார் .

அது ….

உள்ளே அமர்ந்து திருமணம் பேசிக்கொண்டிருந்தவர்களை கண்டதும் மனம் கொதிக்க , வாசல் கதவின் மேல் எரிச்சலாக தட்டினாள் கண்ணம்மா .

திரும்பி வாசலில் நின்ற இவர்களை பார்த்த மணிபாரதியின் முகம் மலர, நேர் மாறாக அவன் தாய் மீனாட்சியின் முகம் கறுத்தது .

வேகமாக எழுந்து வாசலுக்கு வந்தவன் ” என்ன இந்த நேரத்தில் ….என்னாச்சு நித்திக்கு உடம்பு சரியில்லையா …? ” என்றான் .

பதிலின்றி இருவரும் ஒன்றுபோல் முறைப்பதை கண்டவன் ” கண்ணம்மா …..” என்றான் .




” எங்களை நீங்கள் எதிர்பார்க்கவில்லை போல …உங்களை மிகவும் டிஸ்டர்ப் பண்ணிவிட்டோமோ …? “

” அ…அது …அப்படி ஒன்றும் இல்லை .உள்ளே வாருங்கள் .நித்தி வாடா …”

” அவர்களெல்லாம் யார் அப்பா …? ” நித்திகா நகராமல் நின்றபடி கேட்டாள் .

” அவுங்க ….நம்ம கெஸ்ட் நித்தி.வாடா உன்னை அறிமுகப்படுத்துகிறேன் …” மகளின் கையை பற்றி அழைத்தவன் , கண்ணம்மாவை கண்களால் அழைத்தான் .

” உங்க பொண்ணுக்கு பீரியட்ஸ் .பாவம் குழந்தை வலியால் துடித்தாள் .அதுதான் வீட்டிற்கு கூட்டி வந்தேன்.நீங்கள் உங்கள் விருந்தினர்களோடு உங்கள் மகளையும் சேர்த்து கவனித்தீர்களானால் நன்றாக இருக்கும் ….நான் வருகிறேன் ” கத்தரித்தாற் போல் பேசிவிட்டு வெளியேறும் முன் அவனை திரும்பி பார்த்தாள் .

கோபத்தில் சிவந்தோ , வருத்தத்தில் கறுத்தோ இல்லாமல் மணிபாரதியின் முகம் பளீரென மலர்ந்து சொல்ல முடியாதோர் பாவனையோடிருந்த்து .

கோபமாக பேசியிருக்கிறேன் ….சுரணையில்லாமல் இளித்துக் கொண்டிருக்கிறான் பார் ….மனதிற்குள் அவனை வைதபடி வண்டியை எடுத்துக்கொண்டு வந்தாள் .

” இரண்டு பேரும் ஜாடை போடுவதை நிறுத்தி விட்டு உள்ளே வாங்க …” கண்ணம்மாவின் குரலில் கைகளை பாவனையோடு ஆட்டிக் கொண்டிருந்த ஆண்கள் இருவரும் தங்கள் பாவனைகளை விட்டு கைகளை அவசரமாக இறக்கிக் கொண்டு உள்ளே வந்தனர் .

தரையில் கோபத்தோடு அமர்ந்திருந்த கண்ணம்மாவை பார்த்தபடி அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான் மணிபாரதி .எங்கிருந்து …எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல் மூவருமே தயங்கி இருக்க ….இறுக்கமான அந்த சூழ்நிலையை மாற்ற முத்துராமன் லேசாக தொண்டையை செருமிக்கொண்டு …

” பாரதி நான் அன்னைக்கு கொடுத்த என்னோட புத்தகத்தை படிச்சி முடிச்சிட்டீங்களா …? படித்திருப்பீர்கள் .ஏனென்றால் அதை கையில் எடுத்துவிட்டால் கீழே வைக்க முடியாது .இன்று அடுத்த புத்தகம் தருகிறேன் .படித்து விட்டு சொல்லுங்கள் .அதற்கு முன் உங்களுக்கு சூடாக ஒரு காபி தருகிறேன் ” என உள்ளே செல்ல ….

சோபாவில் அமர்ந்தபடியே கண்ணம்மாவின் பக்கம் குனிந்த மணிபாரதி ” ஐயோ …கண்ணம்மா நான் இன்னமும் அந்த புத்தகத்திலேயே மொத்தம் பத்தே பக்கங்கள்தான் படித்திருக்கிறேன் .அதற்குள்  அடுத்த புத்தகமா …ம்ஹூம் என்னால் முடியாது .ப்ளீஸ் கண்ணம்மா என்னை காப்பாற்றேன் ….” மெல்லிய குரலில் அவன் பேசிய பாவனையில் சிரிப்பு வர பட்டென சிரித்துவிட்டாள் கண்ணம்மா .

” இந்த தண்டனை உங்களுக்கு வேண்டும் .நான் ஒன்றும் சொல்லமாட்டேன் .நீங்கள் அனுபவியுங்கள் …” சொன்னபடி நிமிர்ந்தவள் அவள் முகத்தில் பதிந்திருந்த மணிபாரதியின் பார்வையில்  திணறினாள் .




” ம் ….சிரிக்கும் போது அழகாக இருக்கிறாய் கண்ணம்மா …” இவ்வளவு நேரம் அவன் சொன்ன கண்ணம்மாவிற்கும் இந்த கண்ணம்மாவிற்கும் நிறைய வித்தியாசம் இருந்த்து . என் கண்ணே நீயம்மா என்பது போன்ற பாவனையில் இருந்த்து இப்போது சொன்னது .

வறண்டு விட்ட தொண்டையை நனைக்க எச்சில் விழுங்கினாள் .

” இப்படி விரிந்த கூந்தலுடன் கதவில் சாய்ந்தபடி இலகுவாக அமர்ந்திரக்கும் போது ….ம் …நான் உள்ளே வரும் போது என்னடா இது தேவதை ஒன்று வந்து நடுவீட்டில் அமர்ந்திருக்கிறதென்று நினைத்தேன் தெரியுமா ….? ” தொடர்ந்து அவன் புகழ்ந்து கொண்டே  செல்ல ….

கண்ணம்மா செய்வதறியாது தவித்தாள் .கோபத்துடன் வந்தவள் உடையை மாற்றாமல் கொண்டையை மட்டும் அவிழ்த்து முடியை விரித்து விட்டிருந்தாள் . இன்று ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான் …ஒழுங்காகத்தானே பேசுவான் ….தவித்தாள் .

” என்னை சமாதானப்படுத்தவென்று வாய்க்கு வந்த்தை உளறவேண்டாம் .இதனால் உங்கள் தவறு மறைந்துவிடாது .வயதுப்பெண்ணை வீட்டில் வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி …இதுபோல் ….? “

” நாம் திருமணம் செய்துகொள்வோமா கண்ணம்மா …? ”
மணிபாரதியின் செய்கைகளை சாடும் வேகத்திலிருந்த கண்ணம்மா முதலில் அவன் சொன்னதை கவனிக்கவில்லை .தன் போக்கில் பேசியபடி இருந்தவள் திடீரென நிறுத்தி …

” இப்போது என்ன சொன்னீர்கள் …? ” சந்தேகமாக கேட்டாள் .

பதில் சொல்லாமல் அவள் கண்களை பார்த்தபடியிருந்தவனிடம் அப்படியா கேட்டாய் …? என பார்வையாலேயே  சந்தேகம் கேட்க ….அவன்  சந்தேகமே படாதே …்என பார்வை பதிலே சொன்னான் .

” நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் கண்ணம்மா …” இப்போது கேள்வி கூட இல்லை .முடிவே இதுதானென்பது போன்ற அவனது பேச்சில் அவளுக்கு கோபம் வந்த்து .

” எவ்வளவு தைரியம் …? ” பொருமினாள்.

” இதற்கெல்லாம் நிறைய தைரியம் வேண்டியதாகத்தான் இருக்கிறது கண்ணம்மா .ரொம்ப நாள் முயற்சித்து அந்த தைரியம் இப்போதுதான் எனக்கு வந்திருக்கிறது “

” ஒரு மணிநேரத்திற்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் பேசுவீர்கள் .இப்போது வந்து என்னிடமுமா …? ” சீறினாள் .




 

” அந்த திருமணம் நடக்காது என்று சொல்லி அவர்களை  அனுப்பிவிட்டேன் .அது அம்மாவாக ஏற்பாடு செய்தது கண்ணம்மா .வேறு வழியின்றி நான் அவர்கள் முன் உட்கார்ந்திருந்தேன் .நல்லவேளை நீயும் , நித்திகாவும் என்னை காப்பாற்ற வந்துவிட்டீர்கள் ….இப்போது சொல் நமது திருமணத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம் …? “

” நாங்கள் நிறைய யோசிக்க வேண்டும் தம்பி ” பதில் சொன்னது முத்துராமன் .கையில் காபியோடு வந்தார் .

” எல்லாமே முடிந்த பிறகு நீங்கள் மட்டும் எதை யோசிக்க போகிறீர்கள் அங்கிள் ….? ” தைரியமாக கேட்டபடி காபியை எடுத்துக்கொண்டான் .

அதில் குழம்பி முத்துராமன் மகளை பார்க்க கண்ணம்மாவின் முகத்தில் ஒரு வெறுமை வந்திருந்த்து .

” ஆம்ப்பா …யோசிக்கவேண்டிய அவசியமில்லை .இந்த திருமணம் நடக்காது என்று அவரிடம் தெளிவாக சொல்லி அனுப்பிவிடுங்கள் ….” எழுந்து உள்ளே போனவளை …

” கண்ணம்மா ….” என அதட்டினான் .

” இது போன்ற எண்ணமெதுவும் என் மனதில் இருந்த்தில்லை சார் .நீங்க போகலாம் ….” கை கூப்பிவிட்டு அறைக்குள் போய் பூட்டிக்கொண்டாள் .

மணிபாரதி குழப்பத்துடன் முத்துராமனை திரும்பி பார்க்க …அவர் ” போயிட்டு வாங்க …” என தலையசைக்க …தீராத குழப்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான் .

 

 

What’s your Reaction?
+1
5
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!