Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 6

  6

 

 

 

தீராத விளையாட்டு பிள்ளை கண்ணன்
தெருவிலே பெண்களுக்கோயாத தொல்லை “

பாரதியின் பாடலுக்கு எளிமையான பரத அசைவுகளை சொலிக் கொடுத்தாள் கண்ணம்மா .அந்த பிள்ளைகள் ஆவலுடன் ஆடினார்கள் .பின்வரிசையில் கடைசியாக நின்றுகொண்டிருந்த நித்திகா மிகச்சரியாக தவறான அபிநயங்களையே பிடித்துக்கொண்டிருந்தாள் .அவளுக்காக மீண்டும் மீண்டும் பாட்டை நிறுத்தி சுழல விட சக மாணவியர் தங்களுக்குள் அவளை கேலி செய்து சிரிக்க தொடங்கினர் .




” ஏன் சிரிக்கிறீங்க …? இன்னைக்கு ப்ராக்டீஸ் போதும் .எல்லோரும் கிளாஸ் போங்க ” அவர்களை அனுப்பிவிட்டு நித்திகாவை பார்க்க அவள் அழுதுவிடுவாள் போல் நின்றிருந்தாள் .

“நான்தான் சொன்னேனே மிஸ்.எனக்கு இதெல்லாம் வராது ” எனக்கு டான்செல்லாம் வராது என்ற நித்திகாவை அவள்தான் கட்டாயப்படுத்தி சேர்த்திருந்தாள் .

” அட இன்னைக்குத்தானே முதல்நாள் நித்திகா .இன்னும் இரண்டு நாள் பிராக்டிஸ் பண்ணினால் தானாக வந்துவிடுகறது ….” சமாதானப்படுத்தினாள் .

” நீங்கள் எனக்கு ஸ்பெசல் கோச்சிங் கொடுக்கறீர்களா மிஸ் …? “

” அதுக்கென்ன கொடுத்துட்டால் போச்சு ….”கண்ணம்மா  அந்நேரத்தற்கு சும்மா சொன்னாள் .ஆனால் நித்திகா அதையே பிடித்துக்கொண்டு பள்ளி முடிந்த்தும் தன்னுடனேயே வீட்டிற்கு வந்து தனக்கு நடனம் சொல்லித் தந்தே ஆகவேண்டுமென பிடிவாதமாக நின்றாள் .

கொஞ்சம் கடிந்து பேசவும் யோசனையாக இருந்த்து .நித்திகா ஒரு பத்து நாட்களாக கொஞ்சம் கோபம் குறைந்து தெளிவாக இருப்பது போலிருந்த்து .

” சரி வருகிறேன்.ஆனால் அரைமணி நேரம்தான் .நான்கு ஸ்டெப்புகள் சொல்லிக் கொடுத்துவிட்டு போய்விடுவேன்.அதை நீ இன்று நன்றாக ப்ராக்டிஸ் செய்து கொண்டு வந்து நாளை எனக்கு ஆடிக் காட்ட வேண்டும் ….” உறுதி வாங்கிக் கொண்டு ….அவர்கள் வீட்டிற்கு வந்தாள் .

அரைமணி நேரம் என்றது ஒரு மணி நேரத்தையும் தாண்டிய பிறகும் நேரமே தெரியாமல் ஓடியது .இருவருக்குள்ளும் ஒரு ஒட்டுதல் ஏற்பட்டு ஒருவரின் நடனத்தில் ஒருவர் லயித்து மாறி மாறி அழகாக ஆடினர் .




என் அப்பன் என் அய்யன் என்றால்
அதை தட்டிப் பறித்து
தோழிக்கு வைப்பான் …”

ஓடிய பாடலுக்கேற்ப இருவரும் ஆடியபடி திரும்ப அறை வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நித்திகாவின் தந்தையை கண்டதும் டக்கென நின்றுவிட்டாள் .

இவள் நின்றதை பார்த்ததும் அவன் கைகளை படபடவென தட்டினான் .” சூப்பர் அசத்திட்டீங்க …”

” ஐ….அப்பா …நான் எப்படி ஆடினேன்பா ….? ” நித்திகா அவனிடம் ஓடினாள் .

” இரண்டு பேருமே அசத்திட்டீங்கடா குட்டி …” மகளின் தோள்களை அணைத்தபடி கண்களால் இவளுக்கு பாராட்டுகளை சொன்னான் .

கண்ணம்மா கூச்சத்துடன் தூக்கி சொருகியிருந்த சேலையை இறக்கிவிட்டுக் கொண்டாள் .

” வ…வந்து …ஸ்கூலில் பாரதியார் பங்சன் .அதற்கு டான்ஸ் ப்ராக்டிஸ் பண்ண ….நித்திகா என்னை அடம்பிடித்து இங்கே கூட்டிவந்து ….” ஐயோ இவனிடம் அனுமதி கேட்காமல் இவன் வீட்டிற்குள் வந்துவிட்டோமே …மனதிற்குள் குறுகியபடி தடுமாறினாள் .

” இதெல்லாம் நீங்கள் சொல்ல வேண்டியதில்லை மேடம் .நித்திதான் பத்துநாட்களாக உங்கள் புராணம்தானே பாடிக்கொண்டிருக்கிறாள் ….”

</h

உன்னிடம் என்னை பற்றியா…? என்னிடம் உன்னை பற்றி ….எண்ணிக்கொண்டவள் …

” நான் கிளம்புகிறேன்….” என்றாள் .

” நித்தி உங்கள் மிஸ்ஸை சாப்பிட்டு போகச் சொல்லுடா …”

” ஆமாம் மிஸ் வாங்க சாப்பிடலாம் “

” இல்லை நேரமாகிவிட்டது .நான் வருகிறேன்”

” ப்ளீஸ் மேடம் .எங்கள் நித்திக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள் .கொஞ்சம் சாப்பிட்டு போங்கள் …ப்ளீஸ் “

 




கண்ணம்மாவினால் மறுக்க முடியாது போயிற்று .

மூவருமாக டைனிங் டேபிளில் அமர்ந்த போது ஒரு வயதான பெண் உள்ளே நுழைந்தார் .கோவிலில் இருந்து அவர் வருவதை தெளிவாக சொல்லியது அவர் தோற்றம் .

” யாரும்மா நீ …? ” மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி அவர் கேட்க …

” பாட்டி இவுங்க எங்க மிஸ் ….” நித்திகா …

” மேடம்  இவுங்க என் அம்மா .அம்மா இவர்கள் நித்திகாவின் டீச்சர் கண்ணம்மா ” அவன் அறமுகப்படுத்த …கைகளை குவித்தாள் .

” வணக்கம்மா ….”

” ம் …நீதான் அன்னைக்கு போனில் பேசிய பெண்ணா ….? “

” ஓ…நீங்கதான் அன்னைக்கு போனை எடுத்தீர்களா …? பதிலே சொல்லாமல் படக்கென வைத்து விட்டீர்களே அம்மா ….? “

” ம் ….இவள் படிக்க பயந்து கள்ளமாடு போட்டுட்டு வீட்ல படுத்திட்டிருப்பா .நான் அதை போனில் சமாளிக்கனுமாக்கும் …” பேச்சோடு பேச்சாக அந்த அம்மா பேத்தியின் தலையை தட்டினாள் .

” பாட்டி இனிமேல் நான் நல்லா படிப்பேனாக்கும் .எங்க மிஸ் எனக்கு நல்லா சொல்லித் தருவாங்க “

” சரிதான்டி படிச்சு கிழிச்ச ….ஏம்மா டீச்சர் பொண்ணு உனக்கு சொந்த ஊர் திருச்சியேதானா …? “

” இல்லைம்மா .மானாமதுரை .இங்கே வந்து மூன்றே மாதம்தான் ஆகிறது “

” அட எனக்கு தெரிஞ்சவங்க அங்கே நிறைய பேர் இருக்காங்களே .அங்கே எந்த இடம் …? உன் அப்பா பெயர் என்ன …? “

” முத்துராமன் …”

” போதும் அம்மா .இன்னொரு நாள் அவர்களுடன் பேசலாம் ்இப்போது நீங்கள் போய் படுங்கள் “

” இருடா .உங்கள் தாத்தா பெயர் என்ன …? “

” ரங்கராஜன் …”

” யார் பெயரை கேட்டாலும் இப்படித்தான் மொட்டையாக சொல்வாயா …? ” அந்த அம்மா முகம் சுளித்தாள் .

கண்ணம்மா புரியாமல் விழிக்க …அவள் புறம் குனிந்து மெல்லியகுரலில் …

 




” கண்ணம்மா அம்மா உங்கள் சாதியை தெரிந்து கொள்ள நினைக்கிறார்கள் ….” என்றான் .

” ஓ….” என புன்னகைத்தவளிடம் …” சாரி …பெரியவங்க .அந்த காலத்து ஆள் ….” என்றான் .

” ம் …பரவாயில்லை சார் ” என்றவள்

” நான் நீங்கள் நினைத்து பயப்படுகிற அளவு எந்த சாதியும் இல்லையம்மா. கிளம்புகிறேன் .நித்திகாவை பார்த்து கொள்ளுங்கள் ….” எழுந்தாள் .

” வந்த்துதான் வந்தாய் .அவளுக்கு இரண்டு கணக்கு போட்டுவிட்டு போயேன் ….”

” ஆமாம் மிஸ் .இன்னைக்கு ஹோம் ஒர்க் மட்டும் சொல்லிக் கொடுத்துவிட்டு போங்கள் மிஸ் .ப்ளீஸ் மிஸ் ….” நித்திகாவை மறுக்க முடியவில்லை .

சாப்பிட்டுவிட்டு அவளுக்கு கணக்குகளை சொன்னதில் மேலும் ஒரு மணி நேரம் ஓடிவிட முத்துக்குமார் போன் செய்து தேடிவிட்டார் .

” நித்தி இன்று போட்ட கணக்குகளை உன் அப்பாவிடம் காட்டிவிட்டு போய் படுத்து தூங்கும்மா ….”

” இ…இப்போ வேண்டாம் மிஸ் .நாளை காட்டுகிறேன் “

 




” ஏன்மா இப்போது செய்ததை இப்போதான் காட்டவேண்டும் .வா …நானும் வருகிறேன் ….” அப்பாவிடம் போக வேண்டுமென்றதும் நித்திகாவின் கண்களில் கொஞ்சம் பயம் வந்த்தை யோசனையுடன் பார்த்துவிட்டு அவள் கையை பிடித்துக் கொண்டு தானும் மாடியேறினாள் .

பாதி படிகளில் நின்று கொண்ட நித்திகா ” நைட் மாடிக்கு வந்தால் அப்பா திட்டுவாங்க .நீங்க முதலில் போங்க .உங்களை திட்டலைன்னா நான் வர்றேன் …”என்றாள் .

குழப்பத்துடன் மாடியேறிய கண்ணம்மாவும் அதிர்ந்து தான் போனாள் .அவளை அங்கே எதிர்பார்க்காதவனும்  அதிர்ந்து அழைக்க அழைக்க வேகமாக இறங்கி வந்தவள் …இனி இந்த வீட்டு பக்கமே வரப் போவதில்லை என்ற உறுதியுடன் வண்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள் .

 

What’s your Reaction?
+1
2
+1
1
+1
1
+1
2
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!