Barathi Kannmma

பாரதி கண்ணம்மா – 14

                                                                14

 

 

” நித்தி ” மொகஞ்சதாரா ” பார்க்கலாமா …? “

” ஓ…எனக்கு ஹிருத்திக் பிடிக்குமே .அம்மா உங்களுக்கு …? “

” எனக்கும் …ரொம்ப ….”

” அட …இந்த அளவு அதிகமாகவா …? “விரித்து காட்டிய அவளது இரண்டு கைகளையும் பார்த்து சொல்லியபடி வந்தான் மணிபாரதி .

” அம்மா …எனக்கு ரன்பீர் பிடிக்கும் .உங்களுக்கு …? “




” ம் ….சல்மான்கான் ….” கண்ணம்மாவின் குரலில் முந்தைய துள்ளல் இல்லை .கொஞ்சம் அடக்கமாக ஒலித்தது .

” ஐய்யே …அவருக்கெல்லாம் வயசாயிடுச்சு ….எனக்கு இப்போல்லாம் அவரை பிடிக்க மாட்டேங்குது …”

” வயசானால் என்ன ஹீரோ …ஹீரோதானே  .கண்ணம்மாவின் பார்வை ஒரே ஒரு விநாடி மணிபாரதியை சந்தித்துவிட்டு திரும்ப , மணிபாரதியின் விழிகளில் மின்னலடித்தது .

” பாரதியாரையும் , அல்ஜிப்ராவையும் தாண்டி உங்க பொண்ணு வேறு விசயங்களும் பேசுவார்களா மாமா …? ” அங்கு வந்த முத்துராமனை தனக்கு கூட்டு சேர்த்தான் .

” அதென்ன தம்பி அப்படி கேட்டுட்டீங்க …? கண்ணம்மாவுக்கு தெரியாத விசயமே கிடையாது .என் புத்தகத்திற்காக பாரதியாரை பற்றி குறிப்பெடுத்துக் கொண்டே , டிவியில் ஜேம்ஸ்பான்ட் படம் பார்த்துக்கொண்டிருப்பாள் …” முத்துராமன் பெருமைப்பட்டார் .

” ம் ….எனக்கென்னவோ எப்போதும் டீச்சரம்மா தோரணைதான் தெரிகிறது …. ” அவன் கண்கள் மலர் மொய்க்கும் வண்டாய் கண்ணம்மாவை சுற்றியது .

முத்துராமன் யோசனையாக இருவரையும் பார்த்தார் .

” எனக்கெல்லாம் டீச்சர்ங்கிறதை விட அம்மாவாகத்தான் தெரியுறாங்கப்பா ….” நித்திகா அம்மாவின் தோள் சாய்ந்து கொண்டாள் .அவள் எப்போதடா சந்தர்ப்பம் அமையும் அம்மாவை ஒட்டிக்கொள்ளலாம் என எதிர்பார்த்திருப்பவள் .

” ஏன் மேடம் என்னிடம் மட்டும் இந்த ஓரவஞ்சனை …? எப்போது பார்த்தாலும் என்னை பெஞ்ச் மேல் நிறுத்துகிற மாதிரியே பார்க்கிறீர்கள் …? “

” அவள் உங்கள் மனைவி தம்பி .இன்னமும் ” ங்க ” போடுகிறீர்களே …” முத்துராமனின் குரலில் கவலை தெரிந்த்து .




” அட …நான் சும்மா கிண்டல் பண்ணிக்கொண்டிருக்கிறேன் மாமா …நீங்கள் சீரியஸாக எடுக்காதீர்கள் …”

” கண்ணம்மா …நீ பள்ளியில் தான்மா ஆசிரியை .வீட்டிற்கு வந்துவிட்டால் மனைவி , தாய் , மருமகள் ….” கவலையோடு அக்கறை கலந்து சொன்னார் .

” அப்பா …நீங்க ஒண்ணும் என்னிடம் பேசவேண்டாம் .நீங்கள்தான் என்னை மறந்துவிட்டு நாடு விட்டு நாடு போகிறீர்களே …” முகத்தை தூக்கி வைத்துக்கொண்டாள் .

” என்னடாம்மா …இது முன்பே நாம் நினைத்திருந்த்துதானே …முன்பு இருவருமாக என்று நினைத்திருந்தோம் .இப்போது என் கண்ணம்மாவிற்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது .மனநிறைவோடு நான் மட்டும் போகிறேன் …”

” ஒரே பொண்ணை விட்டுட்டு மனதார போகப்போகிறேன என்கிறீர்களே அண்ணா .மருமகன் வீட்டில் உட்கார கூடாது என்கின்ற வீம்புதானே …? ” மீனாட்சி கேட்டபடி வந்து அமர்ந்தாள் .

” அப்படி இல்லையம்மா .இந்த மலேசியா பயணம் ஒரு வருடத்திற்கு முன்பே எனக்கு வந்த வாய்ப்பு .அங்கிருக்கும் தமிழர் பண்பாட்டு கழக பொறுப்பை ஏற்று அவர்கள் நடத்தும் தமிழ் பள்ளிக்கு என்னை தலைமையாசிரியர் பொறுப்பேற்கும்படி என் நண்பன் அழைத்துக் கொண்டிருக்கிறான் . முதலில் கண்ணம்மாவோடு சேர்ந்து போகவேண்டுமெனத்தான் நினைத்தேன் .ஆனால் அவளுக்கு வெளிநாட்டு வாழ்வு பிடிக்கவில்லை …..”

உங்களுக்குத்தானேப்பா அந்த வெளிநாட்டு வாழ்வு பிடிக்காமல் அந்த வாய்ப்பை தள்ளி போட்டுக்கொண்டே வந்தீர்கள் …இப்போது மகளென்றாலும் அவள் வீட்டில் தங்கமுடியாதென பிடிக்காத வாழ்விற்கு தயாராகிவிட்டீர்கள் ….மனத்தாங்கலுடன் தந்தையை பார்த்தாள் .

” ம்க்கும் ….இந்த கதையெல்லாம் வேறு எங்கேயும் போய் சொல்லுங்கள் அண்ணா .பெரிய புரட்சி கவி …அது ..இதுவென்று புரியாத வார்த்தையிலெல்லாம் பேசி பெரிய ஆள் போல் காட்டிக்கொண்டாலும்  அடிப்படையில் நீங்கள் இன்னமும் பழமைவாதியாகத் தானே இருக்கிறீர்கள் .இல்லையென்றால் நான் அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் எங்களுடன் ஒரே வீட்டில் தங்க பயந்து மலேசியா  ஓடுவீர்களா …? “

உரிமையாக பேசும் மாமியாரை ஆச்சரியமாக பார்த்தாள் கண்ணம்மா .என்னிடம் மட்டும் முறைத்துக் கொண்டே இருக்கிறார்கள் .அப்பாவிடம் பாசமாக பேசுகிறார்களே …தனியாக இங்கே இருந்து என்ன செய்ய போகிறீர்களென வலுக்கட்டாயமாக முத்துராமனை இங்கே அழைத்து வந்தவளே மீனாட்சிதான் ….

” என்னம்மா தங்கச்சி செய்வது …? நான் முதலில் கண்ணம்மாவின் அப்பாவாயிற்றே ….” முத்துராமனின் பதிலுக்கு அவரை முறைத்தாள் மீனாடசி .

” நீங்க பாட்டுக்கு போயிட்டீங்கன்னா இங்கே உங்கள் பொண்ணை அடக்குவது யார் …? அவள் யார் பேச்சையும் கேட்பது போல் தெரியவில்லையே ….” ஊடுறுவும் மாமியாரின் பார்வையில் நெளிந்தாள் .




திருமண இரவு புது மாப்பிள்ளை , பொண்ணிற்கு முதலிரவென ஏற்பாடுகளில் மீனாட்சி இறங்கிய போது , கண்ணம்மா தயக்கமின்றி அவளிடம் நேரிடையாகவே மறுத்தாள் .

” அத்தை வயதுப்பெண்ணை வீட்டில் வைத்திருக்கிறோம் .இதெல்லாம் ஏற்பாடு செய்வது தப்பு .இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் …”

” நித்திகா எப்போதும் கீழே அவள் அறையில்தான் படுத்துக்கொள்வாள் .நீ மேலே மணியின் அறைக்கு ….”

” ஷ் …அத்தை நான் கீழே நித்திகாவுடன்தான் படுத்து கொள்ள போகிறேன் .நீங்கள் பேசாமல் இருங்கள் ….” நித்திகா காதில் விழுந்து விடக்கூடாதென குரலை தாழ்த்தி பேசினாலும் …கண்ணம்மாவின் குரலில் அதட்டல் தெரிந்த்து .

” ஏய் …என்னடி அதட்டுகிறாய் …? இது உன் பள்ளிக்கூடம் கிடையாது. என் வீடு .இங்கே நான்தான் அதிகாரம் செய்வேன் .

” ஓ….பண்ணுங்களேன் .நான் போகிறேன் …நீங்கள் அதிகாரம் பண்ணிக்கொண்டே இருங்கள் ….” அலட்சியமாக நகர்ந்தவளின் கைகளை இழுத்து நிறுத்தினாள் .

” என்னடி திமிரா ….? நீ நித்திகா கூட படுத்துக்கொண்டால் என் மகனின் கதி ….!? “

” அதை நான் பார்த்துக்கொள்கிறேன் அம்மா .நீங்கள் கவலைப்படாதீர்கள் ….” மணிபாரதி வந்து நின்றான் .

” கண்ணம்மா சொல்வது சரிதாம்மா .வளர்ந்த பிள்ளையை வைத்துக்கொண்டு இது போலெல்லாம் ஏற்பாடு செய்வது தப்பு ….”

” டேய் எப்போதும் பொண்டாட்டிக்கே சப்போர்ட் பண்ண வேண்டுமென்ற அவசியமில்லை .அம்மா பேச்சையும் கேட்கலாம் …”

” அம்மா நீங்கள் பயப்படுவது போல் எதுவும் நடக்காது .ஒன்றுமே நடக்காமலும் போய்விடாது .எங்கள் வாழ்க்கையை நாங்கள் நன்றாகவே பார்த்துக்கொள்வோம் .நீங்கள் கவலைப்படாமல் போய் தூங்குங்கள் ….” மீனாட்சி முனகியபடி போனாள் .

” ஒன்றும் நடக்காமல் போய்விடாதுதானே கண்ணம்மா ….” மணிபாரதியின் சீண்டலில் அவன் முகம் பார்க்க நாணி அங்கிருந்து வந்துவிட்டாள் கண்ணம்மா .

மருமகளும் , மகனும் தனித்தனி அறையில் தூங்குவதை எந்த தாய்தான் ஏற்றுக்கொள்வாள் .தனது ஏமாற்றத்தை மீனாட்சி அடிக்கடி வெளிப்படுத்தியபடியே இருந்தாள் .அத்தோடு எனது பழைய வாழ்வும் கூட இவர்களது கோபத்திற்கு காரணமாக இருக்கலாம் .மாமியாரின்  கோபத்திற்கு ஒரு காரணம் வைத்துக்கொண்டாள் கண்ணம்மா .

—————–

” நான் உன் மாமியாரிடம் எதையும் சொல்லவில்லையம்மா ….”

” அப்பா ….” அதிர்ந்தாள் .” நிஜம்மாகவா …? நா ….நான் உங்களிடம் முன்பே சொல்லிவிட சொன்னேனே …? “

” சொல்லத்தான் நினைத்தேன் .ஆனால் அவர்கள் மிகவும் கண்டிப்பான ஆளாக தெரிந்தார்கள் .மணிபாரதி போன்ற நல்ல பையனை இழக்க நான் தயாராக இல்லையம்மா ….”




 

” என்னப்பா …இப்படி செய்துவிட்டீர்கள் .ஒளிவு மறைவின்றி மகள் வாழ்வை பகிர்ந்து கொண்டீர்களென்ற காரணத்தால்தான் அத்தை உங்களிடம் பாசமாக இருப்பதாக நினைத்தேனே …”

” ம் ….எந்த பின்னணியும் இல்லமலேயே பாசமாக இருக்கிறார்களே …அப்போது இந்த பாசம் அவர்கள் இயல்புதானேம்மா ….”

” என் தலையில் இப்போது மிகப் பெரிய பாரம் இருப்பது போலிருக்கிறதப்பா ….” தலையை பிடித்தவளின் தலையை வருடினார் .

” பாரதி நல்ல பையன்மா .நீயே பக்குவமாக உன் முந்தைய வாழ்வை அவரிடம் சொல்லு .அவருக்கும் உன் போல் ஒரு முன் வாழ்வு உண்டில்லையா …? உன்னை எளிதாக புரிந்துகொள்வார் …”

இந்த ஆண்களை உங்களுக்கு தெரியாது அப்பா .அவர்கள் மட்டும் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்யலாம் .ஆனால் பெண்கள் மட்டும் புத்தம் புது மலராக இருக்கவேண்டும் .இவர் மட்டும் விதிவிலக்காகவா இருக்க போகிறார் .இதனை கண்ணம்மா தன் மனதிற்குள்தான் நினைத்துக்கொண்டாள் .

மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டதென்ற மனநிறைவில் விமானம் ஏற விமானநிலையத்தில் காத்திருக்கும் தந்தையிடம் இப்போது வேறு எதையும் அவளால் பேச முடியவில்லை .வெறுமனே தந்தைக்கு தான் பார்த்துக் கொள்வதாய் தலையை மட்டும் அசைத்து வைத்தாள் .

அடுத்த திருப்பம் தெரியாத தனது இந்த வாழ்வு எப்படி இருக்க போகிறது …? கண்ணம்மாவின் மனதை ஓயாமல் ஒரு ரம்பம் அறுக்க தொடங்கியது .

” அப்பாவை மட்டுமே கவனித்து கொண்டிருந்தால் போதாது . கட்டின புருசன் மேலேயும் கொஞ்சம் அக்கறை காட்ட வேண்டும் ….” வீட்டிற்குள் நுழைந்த்துமே குத்தலாக சொன்னபடி வந்தாள் மீனாட்சி

 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!