Barathi Kannmma Serial Stories

பாரதி கண்ணம்மா – 15

                                                                15

 

 

” அத்தை ப்ளீஸ் …இப்போது உங்களுடன் சண்டை போடும் மூட் எனக்கு இல்லை ….”

” அப்போது நான் உன்னை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்கிறேன் என்கிறாயா …? “

கண்ணம்மாவிற்கு ஆயாசமாக இருந்த்து .பதில் சொல்லாமல் உள்ளே போக போனவளை …

” உன் புருசனை எங்கே …? ” என நிறுத்தினாள் மீனாட்சி .




” அத்தை என்னையும் , அப்பாவையும் ஏர்போர்ட்ல இறக்கி விட்டுட்டு, ஏதோ பிஸினஸ் பார்ட்டி இருக்கிறதுன்னு அவர் போனார் .இப்போது வந்திடுவார் ….”

” எல்லாம் வந்துட்டான் .தடுமாறிக்கிட்டே மாடியேறி போனான் .இன்னும் கையில் வேறு கொண்டு வந்திருக்கான் …இதையெல்லாம் இந்த வயதில் நான் போய் கேட்க முடியுமா …? “

மீனாட்சியின் நியாயமான ஆதங்கம் புரிய , கண்ணம்மாவிற்கு கோபம் வந்த்து . மணிபாரதி இன்னமும் முழுதாக இந்த பழக்கத்திலிருந்து விடுபடவில்லையென அவளுக்கு தெரியும் .தினமும் என்றிருந்த்தை வாரம் ஒரு முறை , இரண்டு வாரத்திற்கு ஒரு முறை என குறைத்துக்கொண்டு வருவதாக சொல்லியிருந்தான் .

இன்று கூட ட்ரிங்ஸ் பார்ட்டி .அளவோடு நிறுத்திக் கொள்வதாக சொல்லிவிட்டுத்தான் போயிருந்தான் .இப்போது ….இவனை ….பற்களை கடித்தவள் …சொல்வது ஒன்று …செய்வது ஒன்று ….

வேகமாக தனது அறைக்குள் நுழைந்தவள் தூங்குவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நித்திகாவிடம் ….

” நித்தி கிளம்புடா …நாம் இன்று மாடியில் படுத்து கொள்வோம் …” என்றாள் .

” எதுக்கும்மா …? வேண்டாம்மா …” நித்தியின் குரலில் பயம் தெரிந்த்து .

பெற்ற மகளுக்கு தந்தையை பார்க்க பயம் .என்ன லட்சணத்தில் இவன் பிள்ளை வளர்த்திருக்கிறான் ….?

” நித்தி …அம்மா இருக்கிறேன்ல .பயப்படாம வா …இனிமேல் நாம் தினமும் மாடியில்தான் படுக்க போகிறோம் ….” கண்ணம்மா எவ்வளவோ சமாதானம் சொல்லியும் நித்திகா பாதி படிகளில் நின்று கொண்டு ….

” நீங்க முதலில் போங்கம்மா .நான் பிறகு வருகிறேன்….” என அவளை வெள்ளோட்டம் விட்டாள் .

இவன் குடித்து சீரழிவதற்கு பிள்ளையை எப்படி பயமுறுத்தி வைத்திருக்கிறான் பார் …கோபம் அதிகமாக வேகமாக படியேறினாள் .




அன்று அவள் வந்தபோது இந்த ஹாலில்தான் டீபாயில் பாட்டிலோடு , சைட்  டிஷ்களையும் அடுக்கி வைத்துக்கொண்டு சுதந்திரமாக குடித்துக்கொண்டிருந்தான் .இவளை பார்த்ததும் அவசரமாக பாட்டிலை எடுத்து சோபாவிற்கடியில் மறைத்து விட்டு ….

” நித்தி வர்றாளா …? ” என இவளுக்கு பின்னால் பார்த்தான் .கண்ணம்மாவிற்கு கொதித்து வர , இறங்கி வெளியேறிவிட்டாள் .இன்று ஒரு வேளை ரூமுக்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறானோ ….?

வேகமாக போய் அறைக்கதவை தட்டினாள் . ஷார்ட்ஸும் , பனியனுமாக கதவை திறந்தவனின் விழிகள் சிவந்து போதையில் சொக்கியிருந்தன .

” என்ன கண்ணம்மா …? ” தடுமாறிய அவன் குரலில் எரிச்சலடைந்தவள் ….

” தள்ளுங்க …” என அவன் மார்பில் கை வைத்து அவனை தள்ளிவிட்டு அறையினுள் நுழைந்தாள் .கையில் கொண்டு வந்த்தை எங்கே வைத்திருப்பான் …?

அலமாரி கதவுகளை திறந்து பார்த்தபடி ” இனி நானும் , நித்திகாவும் இங்கேதான் தங்க போகிறோம் …” என்றாள் .

மௌனமாக நின்றவன் அலமாரியை உருட்டிக்கொண்டிருந்தவளின் அருகே வந்து அவளது தலைக்கு மேலிருந்த செல்பை எட்டி திறந்தான் .அதனுள்ளிருந்த பாட்டிலை எடுத்து …” இங்கே இருக்கு ….” என கொடுத்தான் .

” வேறு எங்கே வைத்தருக்கிறீர்கள் …? ” முறைத்தாள் .

” நம்பு கண்ணம்மா …வேறு இல்லை …சாரி மறுக்க …மறுக்க என் ப்ரெண்ட் கொடுத்து விட்டு விட்டான் ….” போதையின் தடுமாற்றமோ என்னவோ தள்ளாடியவன் அவள் தோள்களை பற்ற முயல பட்டென அவன் கைகளை உதறினாள் .

” முதலில் நீங்கள் ஸ்டெடியாக நில்லுங்கள் .பிறகு என்னை தொடுங்கள் ….” விரலை ஆட்டி எச்சரித்தாள் .

” நித்தி …இங்கே வாடா ….” கீழே பார்த்து குரல் கொடுக்கவும் மணிபாரதி அவசரமாக அவள் கையிலிருந்த பாட்டிலை வாங்கி ஒரு கவருக்குள் போட்டு மறைத்தான் .தடுமாற்றத்தை மறைக்கவோ என்னவோ ஒரு சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான் .




” ம் ..மகள் பார்த்திடுவாளோங்கிற பயம் தண்ணியடிக்கும் போது இருக்கனும் …” இகழ்ச்சியாக சொன்னவள் …

பயத்துடன் அறைக்குள் எட்டிப் பார்த்த நித்திகாவிடம் ” இங்கே வாடா .நாம் இந்த அறையில் தங்குவோமா …? பக்கத்து அறைக்கு போய்விடலாமா ….? ” என்றாள் .

”  பக்கத்து அறைக்கே போயிடலாம்மா ….” நித்தி பயத்துடன் அவள் முந்தானையை பிடித்துக்கொண்டாள் .

” பக்கத்து அறையில் ஏ.ஸி ஒர்க் பண்ணாது கண்ணம்மா .நீங்க இன்னைக்கு ஒருநாள் கீழே தூங்குங்க ….நாளைக்கு அதை ….”

” தேவையில்லை …இன்று ஒருநாள் நாங்கள் ஏ.ஸி இல்லாமலேயே படுத்துக்கொள்கிறோம் ….” வாசல் வரை போனவள் திரும்பி வந்து அந்த பாட்டில் இருந்த கவரை கையில் எடுத்துக் கொண்டு ….

” ரூம் கதவை திறந்து வைத்துக்கொண்டு படுக்க வேண்டும் .நான் நடுவில் எழுந்து வந்து பார்ப்பேன் ….” எச்சரித்துவிட்டு போனாள் .

                                                              —————

மறுநாள் மாலை கண்ணம்மாவும் , நித்திகாவும் பள்ளியிலிருந்து வந்த போது வீடு முழுவதும் சாம்பிரானி , பத்தி என தெய்வீக மணம் நிறைந்திருக்க , படையலுக்கான சமையல் வாசமும் நிறைத்திருந்த்து . அன்று நித்திகாவின் அன்னையின் நினைவுநாள் .மீனாட்சியும் , மணிபாரதியும் காலையிலிருந்தே அநாதை இல்லங்களுக்கு சாப்பாடு , பள்ளி , கோவில்களுக்கு நன்கொடை என பிஸியாக பேசியபடி  இருந்தனர் .

” எனக்கு நேற்று வைதேகியின் நினைவு வேறு ரொம்பவும் தொல்லை செய்த்து கண்ணம்மா .அதனால்தான் பார்ட்டியில் கொஞ்சம் ஓவராகிவிட்டது ….” என கைகளை குடிப்பது போல் காட்டினான் மணிபாரதி .

” ஆண்கள் கவலைகளை மறக்க குடிப்பீர்கள் .நாங்கள் பெண்கள் என்ன செய்யட்டும் …? உங்கள் அம்மா , நான் ….அப்புறம் நித்திகா ….உங்கள் வழியையே நாங்களும் பின்பற்றவா …எனக் கேட்டு அதிர வைத்தாள் .அதிர்ந்து நின்றவனின் முகத்தை பார்க்க பிடிக்காது பள்ளிக்கு கிளம்பி வந்துவிட்டாள் .

இப்போது இறந்தவருக்கு படைத்து வணங்கிட வீடு தயாராகிக் கொண்டிருக்க , கண்ணம்மாவிற்கு வைதேகியை பார்க்க வேண்டும் போலிருந்த்து .அவளது போட்டோ அங்கே பூஜையறையில் சிறியதாக கறுப்பு , வெள்ளையில் ஒன்று இருந்த்து .அதைத்தான் இப்போது படைத்து கும்பிடவும் எடுத்து வைத்திருந்தார்கள் .

கண்ணம்மாவிற்கு முன்தினம் மணிபாரதி அறையில் அலமாரிகளை திறந்த போது கல்யாண ஆல்பம் பார்த்த நினைவு வர , டிவி பார்க்க உட்கார்ந்து விட்ட நித்திகாவை கலைக்காமல் மெல்ல மாடியேறினாள் .

அந்த திருமண ஆல்பத்தை எடுத்து புரட்டினாள் .மணிபாரதி மட்டுமல்ல வைதேகியும் மிக மிக இளமையாக தோன்றினாள் . முகம் நிறைய சிரிப்புடன் அவன் நிற்க , பொங்கிய குதூகலத்தை மறைத்தபடி மணப்பெண்ணாக நாணம் காட்டி அவள் தலைகுனிந்திருந்தாள் .

வசதியாக கட்டிலில் அமர்ந்து ஆல்பத்தை மடியில் வைத்திக்கொண்டவள் நிச்சயதார்த்தம் முதல் பாலும் , பழமும் ஊட்டுதல் வரை ஒவ்வொரு போட்டோவாக நிதானமாக பார்த்தாள் .வைதேகி இறந்த்து அநியாயமென்று தோன்றியது .

இது போல் ஒரு நிறைவான சிரிப்பை இப்போது அவனிடம் பார்க்க முடிகிறதா …யோசனையுடன் ஆல்பத்திலிருந்த மணிபாரதியை ஒற்றை விரலால் அவள் வருடியபோது ….




 

” ரொம்பவும் சின்னப்பெண் கண்ணம்மா .எனது அலட்சியத்தால் அவளை சாகடித்துவிட்டேன் …” மணிபாரதி அவள் பின்னே நின்றிருந்தான் .

திடுக்கிட்டு எழப்போனவளின் தோள்களை அழுத்தி உட்கார வைத்தவன் தானும் அவளருகே அமர்ந்தான் .

” என் தாய்மாமா பெண் வைதேகி .நான் காலேஜ் முடித்ததுமே யுனிவர்சிட்டி கோல்டு மெடல் என்பதால் அமெரிக்க வேலை தானாக தேடிவந்த்து .அங்கே போய்விட்டால் திரும்ப வரும்போது ஒரு வெள்ளைக்காரியை இழுத்துக் கொண்டு வந்துவிடுவேன் என பயந்து அம்மா எனக்கு அவர்கள் அண்ணன் மகளை திருமண ஏற்பாடு செய்தார்கள் .அப்போது வைதேகி ப்ளஸ் டூதான் முடித்திருந்தாள் .பதினெட்டே வயதுதான் .எனக்கு இருபத்தி நாலு .

இரண்டு வருடத்தில் திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறேன் என்ற எனது பேச்சை அம்மா , மாமா யாருமே கேடகவில்லை .வேறு வழியின்றி எங்கள் திருமணம் நடந்த்து .இரண்டு மாதங்கள் சந்தோசமாகவே குடும்பம் நடத்தினோம் .ஆறுமாத்ததில் வைதேகியை கூப்பிட்டு கொள்ளலாம் என்ற எண்ணத்தில் அமெரிக்கா போனேன் .ஆனால் இரவும் , பகலுமாக அங்கே என்னை வாட்டிய வேலை பளுக்களுக்கு இடையே …வைதேகியையோ , அம்மாவையோ நினைத்து பார்க்க கூட நேரமில்லை ….எப்படியிருக்கீங்க மாமாங்கிற அவள் போன் கேள்விக்கு …நான் நல்லாயிருக்கேன் …நீ நல்லாயிருக்கியா …? சாப்பிடு ….இது போன்ற பதில்கள் .இப்படித்தான் எங்கள் வாழ்க்கை போனது .

அவள் கர்ப்பமான செய்தி கூட அவள் அப்பா என்னிடம் சொன்னதுதான் .என் அம்மா , அவள் அம்மா , அப்பா என எல்லோரும் ஒரே வீட்டிலேயே இருந்ததால் அவளை பற்றிய கவலையே எனக்கு வந்த்தில்லை .அவளது பிரசவத்தற்கு ஒரு வாரம் முன்பு என்னிடம் போனில் பேசினாள் .எனக்கு பயமாக இருக்கிறது மாமா .உங்களை பார்க்க வேண்டும் போல் உள்ளது என அழுதாள் .இது பிரசவ பலவீனமென அவளை அலட்சியம் செய்துவிட்டு வேலையில் மூழ்கி விட்டேன் .

சிறுவயது திருமணமோ , அவள் உடல் பலவீனமோ , என் அலட்சியமோ …அந்த பிரசவத்திலேயே அவள் உயிர் பிரிந்துவிட்டது .அன்றிலிருந்தே என் மனைவியை கவனிக்காமல் விட்டு விட்டேனோ….என்ற எண்ணம் என்னை வாட்டியபடியே இருக்கிறது .

குரல் கரகரக்க பேசிய மணிபாரதி கைகளால் மென்மையாக வைதேகியின் புகைப்படத்தை வருடினான் .ஆறுதலாக அவன் தோள்களை வருடினாள் கண்ணம்மா .

 

What’s your Reaction?
+1
3
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!