Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 21

21

 

 

சிலீரென கண்ணாடி விழுந்து நொறுங்கும் சத்தத்தில் அபிராமி வேகமாக வந்து பார்த்தாள்.. சில விருந்தாட்கள் வருவதால் சிறு விருந்தொன்றுக்கு வீட்டில் ஏற்பாடு செய்திருந்தாள்.. அவர்களுக்காக டேபிளை செட் பண்ண கார்த்திகாவை போனில் அழைத்தாள்.. அவளோ இங்கே வரமாட்டேனென கூறிவிட்டாள்.. அபிராமி கவலையோடு யோசித்தபடி இருந்த போது, சஸாக்கி தான் அந்த வேலையை செய்வதாக கூற தயக்கத்துடன் தன் அந்த பொறுப்பை கொடுத்திருந்தாள்..
இதோ அதற்கான பலன்..
விலையுயர்ந்த அந்த கிறிஸ்டல் பாத்திரங்கள் தரையில் விழுந்து நொறுங்கி கிடந்தன.. திரு திருவென விழித்தபடி அருகில் நின்று கொண்டிருந்தாள் சஸாக்கி..




“சஸாக்கி..” ஆத்திரமான அபிராமியின் கத்தலுக்கு அதிர்ந்து பின்வாங்கினாள் சஸாக்கி..
“என்ன செய்திருக்கிறாய்..? உன்னையெல்லாம் வைத்து மேய்க்க வேண்டுமென்று என் தலையில் எழுதியிருக்கிறது பார்..”
அபிராமியின் கத்தலில் அன்னலட்சுமி வேகமாக வந்தாள்..
“மன்னிச்சிடுங்க அண்ணி.. தெரியாமல் பண்ணிவிட்டாள்.. இனி இப்படி நடக்காது.. நான் பார்த்துக் கொள்கிறேன்..”
“எதை பார்ப்பீர்கள்…? எல்லாவற்றையும் ஓய்த்து ஒழித்து விட்டுத்தான் உங்கள் மகள் நிற்பாள்.. நீங்கள் அப்போதும் நான் பார்த்துக் கொள்கிறேனென நிற்பீர்கள்.. சை என் தலையெழுத்து உங்களிடமெல்லாம் பட வேண்டுமென இருக்கிறது..”
சஸாக்கி அழத் தொடங்கி விட, அன்னலட்சுமி முகம் கன்ற நின்றாள்..
“தேவதை மாதிரி வீட்டிற்கு வந்து போய் கொண்டிருந்த என் மகளை இரண்டு பேரும் சேர்த்து அடித்து விரட்டி விட்டீர்கள்.. இப்போது உங்கள் இஷ்டம் போல் ஆடுகிறீர்கள்..”
“ஐயோ.. அப்படியெல்லாம் இல்லை அண்ணி.. அது சஸி தெரியாமல் செய்த தவறு..”
“இப்படித்தான் இருவருமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் பேச்சில் எனக்கு நம்பிக்கையில்லை.. நீங்கள் இரண்டு பேருமாக ஏதோ திட்டம் போட்டே எல்லா வேலைகளும் செய்வது போன்றே தோன்றுகிறது..”
“ஐயோ.. இல்லை அண்ணி.. நாங்கள் என்ன திட்டம் எதற்கு போடப் போகிறோம்..?”
“உங்க லூசு பொண்ணை வைத்து என் மகனை மடக்கி, இங்கே நுழைந்து எங்களது கோடிக்கணக்கான சொத்திற்கு வாரிசாகலாமென்றுதான்..”
“அபிராமி..”




அன்னலட்சுமியின் குரல் இப்போது கோபமாக வெளிவந்தது..
“யோசித்து பேசுங்கள்.. வார்த்தைகளை விடாதீர்கள்.. அள்ள முடியாது..”
அபிராமியின் கண்கள் நெருப்பு துண்டுகளாய் ஜொலித்தன..
“என் வீட்டில் நின்று கொண்டு என்னையே பெயர் சொல்லி அதட்டுகிறாயா..? எவ்வளவு திமிர் உனக்கு..?”
“நீங்கள் தான் அப்படி பேச வைக்கிறீர்கள்.. என் மகளை பற்றி இப்படி பேசுகிறீர்களே, உங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள்.. நினைவு வைத்துக் கொண்டு பேசுங்கள்..”
அபிராமி கோபத்தின் உச்சிக்கு போனாள்..
“என் மகளும்.. உன் மகளும் ஒன்றா..? எதற்கு எது இணை..? சந்தனமும் சாக்கடையும் ஒன்றாகுமா..?”
“பணம் இருப்பதினாலேயே சாக்கடை சந்தனமாகி விடாது..”
அன்னலட்சுமியின் வார்த்தைகளில் அதிர்ந்த அபிராமி குமுறினாள்..
“தெரியாமல் உங்கள் இருவரையும் என் வீட்டிற்குள் நுழைய விட்டு விட்டேனே.. இனி என்ன செய்ய போகிறேன்..?”
புலம்பிக் கொண்டிருந்தவளை அலட்சியம் செய்து சஸாக்கியை அணைத்து கூட்டிக் கொண்டு போனாள் அன்னலட்சுமி.
இனி இதனை சரி பண்ண வேண்டும்.. ஏற்கெனவே கலங்கிய மனதுடன் இந்த அதிகப்படி வேலை ஆயாசமும் சேர்ந்து கொள்ள, சலிப்புடன் வேலை ஆளை அழைக்க திரும்பிய அபிராமி வியந்தாள்..
அங்கே சிதறிக் கிடந்த அனைத்து கண்ணாடி துண்டுகளும் சுத்தம் செய்யப்பட்டு, பளிரிட்ட தோடு விருந்திற்கான டேபிள் அழகாக அடுக்கப்பட்டிருந்தது..
ஆச்சரியமாக பார்த்த போது கை துடைக்கும் டிஸ்யூக்களை துள்ளும் முயல் போல் அழகாக மடித்து வைத்துக் கொண்டிருந்த சரண்யா இருந்தாள்..
“சரண்யா இதெல்லாம் உனக்கு தெரியுமா..?” அபிராமியின் கேள்வியில் சரண்யா அடி வாங்கிய பார்வை பார்த்தாள்..
நீ ஒரு மாத சம்பளக்காரி.. உனக்கு இந்த மேல்மட்டத்து விருந்து முறைகளெல்லாம் எப்படி தெரியும்.. என்பதை தொடுக்கி கேட்கப்பட்ட தனது கேள்வி சரண்யாவின் மனதை காயப்படுத்தி விட்டதை உணர்ந்த அபிராமி மனம் வருந்தினாள்..




“சாரிம்மா.. ஒரு மூட்ல கேட்டுட்டேன்.. நீ எல்லா வேலைகளையும் செய்யும் சகலகலாவல்லி என்பதை மறந்து போனேன்..” என லேசாக அவளுக்கு ஐஸ் வைத்து சமாளித்தாள்..
“ஐயோ சாரில்லாம் எதுக்குங்க மேடம்..? இது போன்ற உயர்மட்ட அலங்கார வேலைகளுக்காக பெரிய பணக்காரர்களாக இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இப்போதெல்லாம் இல்லை ஒரு சாதாரண கேட்டரிங் ஸ்டூடென்ட் தெரிந்து கொள்ளும் டேபிள் டெகரேசன்கள் இவை.. எனக்கு இது போன்ற அலங்காரங்களில் ஆர்வம் உண்டு.. எனது கேட்டரிங் தோழி ஒருத்தி மூலமாக இதெல்லாம் கற்றுக் கொண்டேன்..”
“ஓ.. நீ வித்தியாசமானவள்மா.. ஆபிஸ் வேலைகளையும் செய்கிறாய்.. வீட்டு வேலைகளையும் செய்கிறாய்.. ரொம்பவே சுறுசுறுப்பு நீ.. இன்று ஆபிஸில் வேலை இல்லையா..?”
“சார்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு இங்கே வந்தேன் மேடம்.. இன்று வீட்டிற்கு கெஸ்ட் வருவதால், கார்த்திகா மேடம் வரமாட்டேன்னு சொன்னதால்..” வேகமாக பேசியபடி சென்றவள், தான் குடும்ப விசயங்களில் தலையிடுகிறோம் என்ற எண்ணம் வந்துவிட்டதாலோ என்னவோ சட்டென பேச்சை நிறுத்தி விட்டு..
“இதோ வந்துவிடுகிறேன் மேடம்..” என உள்ளே போனாள்..
இடை தாண்டி நீண்டு தொங்கி அவள் பின்புறத்தை தொட்டு அழகாக அசைந்த அந்த நீளமான கூந்தலை பார்த்தபடி இருந்தாள் அபிராமி.. சரண்யா திரும்ப வந்து டைனிங் ரூம் ஓரத்தில் அழகான ப்ளவர் வாiஸ வைத்து விட்டு, சன்னல் ஸ்கிரீனை அலையலையாய் தெரியும்படி அழகாக இழுத்து கட்டினாள்..
தொடர் வேலைகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஏசியை தாண்டி மெலிதாக வியர்த்திருந்தது அவள் முகம்.. முத்துக்களாய் வியர்வை துளிகள் அவள் மூக்கின் மீது உருண்டிருந்தன.. கோல்டன் பார்டர் ஓடிய கருநீல சேலையை அணிந்திருந்தாள் அவள்.. அந்த சேலையை அவள் அணிந்திருந்த விதம் அவள் ராஜ வம்சத்தை சேர்ந்தவளோ என சந்தேகம் வரும்படி இருந்தது..
மென்மையும், லாவகமுமாய் அவள் செய்த வேலைகள் அபிராமியின் மனதில் சலனத்தை ஊட்ட அவள் சரண்யாவை பார்த்தபடி அமர்ந்திருந்தாள்..
“சார் உங்களை பார்க்க திவாகர் சார் வந்திருக்கிறார்..” சாரங்கன் வந்து சொல்ல பாலகுமாரிடம் பரபரப்பு தொற்றிக் கொண்டது.. தனது இடத்தை விட்டு எழுந்தவன் வெளியே வந்தான்..
“வா திவா.. வாடா மாப்பிள்ளை.. வாங்க மாப்பிள்ளை..” திடுமென அந்நியமாகி போன நண்பனிடமிருந்து, தங்கை கணவனை, தோழனை எப்படி அழைக்க என தடுமாறினான்..




அவனது எல்லா அழைத்தல்களுக்கும் தலையசைத்த திவாகர் அறையினுள் வந்து அமர்ந்தான்.
“கரும்பு சாறு சொல்லட்டுமா..?” தனது தேவை அறிந்து கேட்ட நண்பனை நெகிழ்வாய் பார்த்தான் திவாகர்..
“ம் சொல்லு..” என்றுவிட்டு சேரில் பின்னால் சாய்ந்து அமர்ந்தான்..
சட்டைப் பாக்கெட்டிலிருந்து சிகரெட்டை உருவி அவனுக்கும் நீட்டினான்..
“சாரிடா மச்சான்.. நிறைய டென்சன் அதுதான்..”
திவாகர் பற்ற வைத்த சிகரெட்களிலிருந்து ஒன்றை எடுத்து தன் உதடுகளில் வைத்துக் கொண்ட பாலகுமரன் ஏசியை ஆப் செய்துவிட்டு கண்ணாடி கதவுகளை தள்ளி சன்னலை திறந்தான்.. சிகரெட் புகையை வெளியே ஊதினான்..
“கார்த்தி எப்படி இருக்கிறாள்..?”
“அட அவள் ஞாபகமெல்லாம் உங்களுக்கு இருக்கிறதா மச்சான்..?” அவனது நக்கல் கேள்வியில் அவனை திரும்பி பார்த்தான் பாலகுமரன்..
“சாரி..” என கை உயர்த்தினான் திவாகர்..
“பாலா கார்த்திகா குழந்தை மனம் படைத்த மென்மையான பெண்.. அந்த குழந்தை குணம் பிடித்துத்தான் நான் அவளை திருமணம் செய்து கொள்ள மிக விரும்பி மணம் முடித்தேன்.. அந்த குழந்தை மனம் மாறாமல் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் அவளை பார்த்து பார்த்து அன்போடும் காதலோடும் வைத்துக் கொண்டுள்ளேன்..”
“இதெல்லாம் எனக்கும் தெரியும் திவா.. அவள் என் தங்கை இல்லையா..? உன்னை போலத்தான் நானும் அவளை செல்லக் குழந்தையாகத்தான் நினைத்திருக் கிறேன்..”
“நீ நினைத்திருக்கலாம்.. ஆனால் அந்த பெண்.. நீயே சொல் இதுவரை உங்கள் வீட்டில் யாராவது இப்படி கன்னம் சிவக்க அவளை அடித்திருக்கிறீர்களா.. உன் அம்மா, அப்பா, நீ..? ஆனால் அந்த பெண் மிக எளிதாக கை நீட்டுகிறாள்.. இந்த உரிமையை அவளுக்கு யார் கொடுத்தது..?”
“திவா நானுமே மிகவும் அதிர்ந்து போய் இருக்கிறேன்.. இதெல்லாம் எனக்குமே பிடித்தமில்லாத வைகளே.. என் தங்கையை.. அவள் தவறே செய்தாலும் கை நீட்டும் உரிமை நிச்சயம் சஸாக்கிக்கு கிடையாது.. ஆனால் சஸாக்கி அப்படிப்பட்ட பெண் இல்லை.. அவள் ஏதோ ஒரு மனக் குழப்பத்தில் இருக்கிறாளென நினைக்கிறேன்.. அதனால்தான்..”




“டேய்.. டேய்.. போதுன்டா.. உன் அளப்புகளை யெல்லாம் நிறுத்து.. நான் சொல்கிறேன் நன்றாக கேட்டுக் கொள்.. இதெல்லாம் சஸாக்கி அவள் அம்மாவின் திட்டம் தான்.. இரண்டு பேருக்குமே கார்த்திகா உங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவது பிடிக்கவில்லை.. அவளை வர விடாமல் செய்வதற்காகவே இந்த திட்டத்தை போட்டிருக்கின்றனர்.. சஸாக்கி மிகவும் அப்பாவி போல வேசமிட்டுக் கொண்டிருக்கிறாள்.. அவளை நம்பாதே..”
“இல்லை திவாகர்.. அ.. அவள்.. அப்படி இல்லை.. மிகவும் நல்ல பெண்..” பாலகுமரனின் மறுப்பு மிக பலவீனமாக இருந்தது..
“இப்படி உன்னை நம்ப வைத்திருக்கிறாள் பார்.. அதுதான் அவளது வெற்றி.. அவள் அன்று கார்த்தியை அடித்த காரணத்தை நான் சொல்லவா..? கார்த்தி அன்று தனக்கு அது வேண்டும் இது வேண்டுமென சேலை நகைகள் என அடுக்கிக் கொண்டிருந்தாள்.. சஸாக்கிக்கு தன் சொத்து கொள்ளை போவது போன்ற உணர்வு.. ஏதோ ஒரு காரணம் சொல்லி கார்த்தியை அடித்து விரட்டி விட்டாள்..”
“அப்படியெல்லாம் இருக்காது..” பாலகுமரனின் மறுப்பு மெல்லிய முணுமுணுப்பாக கவனித்து கேட்டால் மட்டுமே எதிராளி காதில் விழும்படியாக இருந்தது..
அவனது ஸ்திரத்தன்மை குறைவதை அது காண்பித்தது..




“நான் உணர்ந்ததை உனக்கு சொல்லிவிட்டேன் பாலா.. தங்கை கணவனாக அல்ல.. உன் நண்பனாக.. உன் வாழ்க்கையை இனி முடிவெடுக்க வேண்டியது நீதான்..”
திவாகர் எழுந்து கிளம்பினான்.. கையில் கரும்பு ஜீஸோடு சாரங்கன் அப்போதுதான் உள்ளே வந்தான்..
“உங்கள் எம்.டிக்கு கொடுங்கள்..” பாலகுமரனை கைகாட்டி விட்டு போய்விட்டான்.. ஜூஸில் மிகுந்த ஐஸ் துண்டங்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான் பாலகுமரன்..

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!