Serial Stories அதோ அந்த நதியோரம்

அதோ அந்த நதியோரம் – 1

                                      அதோ அந்த நதியோரம்

1

.

கைலாஷ் அந்த ஹாலில் நுழைந்த போது அங்கே சூழ்நிலை உணர்ச்சி வசப்பட்டிருந்த்து . ஆண்களும் , பெண்களுமாக வண்ண வண்ண உடைகளோடு சிட்டுக்குருவியாய் சிறகசைத்து அங்குமிங்கும் பறந்தபடியிருந்தனர் இளைஞர் பட்டாளங்கள் . இப்போது விட்டால் பிறகு எப்போது பார்ப்போமோ ….இந்த தவிப்பு தவறாமல் அனைவரின் கண்களிலும் தெரிந்த்து .

தோள்களை அணைத்தபடி , கைகளை கோர்த்தபடி , கண்களை பிரிக்காமல் பார்த்தபடி…சிலர் கண் கலங்கியபடி கூட    கும்பல் கும்பலாக நின்று , உட்கார்ந்து பேசியபடி இருந்தனர் . அடுக்கடுக்காய் ..வட்டங்களாய் உயரமாய் இருந்த அந்த கேக் ஹாலின் நடு மையத்தில் டேபிளில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த்து .அதனை வெட்டவோ …பார்க்கவோ கூட யாருக்கும் எண்ணமில்லை .கைலாஷால் அங்கிருந்த நிலைமையை நன்கு உணர முடிந்த்து .அவனுக்குள்ளும் அதே உணர்வலைகள்தானே …

அகன்ற எட்டுக்களுடன் போய் தன் நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து கொண்டான் .வேகமாக அவனையும் உள்வாங்கிக் கொண்ட அந்த குழுக்கள் விரைவிலேயே தங்களது பாவங்களை அவனுக்கும் பரப்பின.

” எப்படிடா பிரிந்து போவோம் …? “

” ஒருத்தரையொருத்தர் பார்க்காமல் இருந்திடுவோமா …? “

” இந்த காலேஜ் லைப் ஏன் இப்படி சீக்கிரம் முடிஞ்சது …? “

” இனிமேல் எப்படி வாழ போகிறோம் …? “

அத்தனை பேரும் உயிரை காப்பாற்றும் உன்னத தொழிலை கற்றுத் தேர்ந்த மருத்துவர்கள் .அந்த நினைப்பே இல்லாமல் அந்நேரம் சாதாரண மாணவர்களாக மாறியிருந்தனர் .ஐந்து வருட பந்தம் அவர்களுடையது . இப்படி திடீரென முடிவுக்கு வந்துவிட்டதே …நிறைய பெண்கள் …சில ஆண்களும் கூட கண்ணீர் தெறிக்க அழுது கொண்டே இருந்தனர்.

அடுத்த வாரம் அவர்களுக்கு செமஸ்டர் ஆரம்பமாகிவிடும் .அந்தந்த மேஜருக்கான பரீடசைகளுடன் அவரவர் ஒதுங்கி விடுவர் என்பதினால் இந்த கெட் டு கெதரை கைலாஷ்தான்இந்த பெரிய ஹோட்டலில்  ஏறபாடு செய்திருந்தான்.இதறகான செலவும் கூட அவனுடையதுதான் .இதன் பில் லடசங்களில் கூட இருக்கும் எனபதனையும் அவன் அறிவான் .ஆனால் அந்த லடசம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவனது பொருட்டே வேறு …

படபடத்த இதயத்துடன் கண்களை சுழற்றி பார்த்தான் .கிட்டதட்ட நூறு பேருக்கும் மேல் கூடியிருந்த அந்த கூட்டத்தில் அவள் இல்லை .ஏமாற்றத்தில் அவன் முகம் சுருங்கியது .இன்று அவள் நிச்சயம் வருவாளென்று எதிர்பார்த்தான் .எப்போதும் மற்றவர்களுடன் ஒட்டாமல் பழகுகிறவள்தான்….இப்போதுமா …? சட்டென தனது போனை எடுத்தவன் அவள் நம்பரை அழுத்தினான் .

” ஹாய் கைலாஷ் …சொல்லுப்பா …என்ன விசயம் …? “

இவள் ஒருத்திக்காக நான் இங்கே லட்சக்கணக்கில் செலவழித்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறேன் ்அங்கே இருந்து கொண்டு கூலாக என்ன விசயமென்கிறாளே …ஆத்திரம் பொங்கினாலும் அதை அவளிடம் காட்ட மனமற்று ….

” இன்று நாம் சந்திக்கும் கடைசி நாள் .இன்றைக்கு கூட வரமாட்டாயா …? ” என்றான் .எதிர்முனை மௌனமானது .பிறகு கட்டானது .போனை தூக்கி எறிந்து உடைக்கும் வேகத்தை கட்டுப்படுத்தினான் .

” சார் டிரேஸ் செட் பண்ணிடலமா ….? ” அருகில் வந்து பவ்யமாக கேட்ட பேரருக்கு வாய் திறந்து பதில் சொல்ல முடியாமல் தலையாட்டினான் .

உடனே ஜீ பூம்பா போல் அந்த ஹால் அமைப்பு மாறத் துவங்கயது .வெரைட்டிகளாக சிக்கனும் , மட்டனும் , மஸ்ரூமும் , பனீரும் , பரோட்டா , சப்பத்தி , நாண் , ரைஸ் என விதங்களாக நிரம்ப ஆரம்பித்தது அந்த ஹாலின் ஒரு புறம் .அடியில் அடுப்பு வைத்து சூடேறியபடி இருந்த அந்த உணவுகளின் வாசத்தில் எல்லோரும் தங்கள் கவலைகளை தற்சமயத்திற்கு மறந்தனர் .

” டியர் ப்ரெண்ட்ஸ் ,மே பி   திஸ் இஸ் தி லாஸ்ட் டேஆப் அவர் காலேஜ் லைப் .இது போல் இப்படி ஒரு கெட் டு கெதர் இனி நம்க்கு வாய்க்குமோ என்னவோ …? ஐந்து வருடங்கள் ஆழமான நட்போடு பழகிவிட்டோம் .இந்த காலேஜ் , கிளாசஸ் , செமினார்ஸ் …இவைகளெல்லாம் இல்லாத ஒரு வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை .நட்பையும் தாண்டி ஏதோ ஓர் பந்தம் நமக்குள் ….” மைக்கில் பேசிக் கொண்டிருந்த கைலாஷின் குரல் அந்த ஹாலின் கதவை திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தவளை பார்த்துவிட்டது . தடுமாறியது .தடம் மாறியது .

” நட்பை தாண்டியதோர் விநோத பந்தமொன்றிற்குள் விழுந்து கிடக்கிறோம் நாம் .எப்போது அதை தாண்டி வரப் போகிறோம் …? வர முடியுமா …? ” இவ்வளவு நேரமும் இருந்த நெகிழ்ச்சியை தாண்டி ஏதோ ஒன்று அவன் குரலில் .நட்பை தாண்டிய பிரியத்தின் நெகிழ்ச்சி அது .

ஒவ்வொரு ப்ரெண்ட்டுடனும்  கை குலுக்கியும் , தலையசைத்தும் , உற்சாகம் காட்டியும் பேசியபடி மேடையை நெருங்கி வந்து கொண்டிருந்த அந்த பெண் மிக அழகாக இருந்தாள் .வடித்து வைத்த சிலை மாதிரி தோற்றத்துடனும் , நேர்த்தியான முக லட்சணத்துடன் …பளீரென்ற வெண் பாதங்கள் வலிக்குமோ என நெஞ்சம் பதறும் வகையில் மென்னடையுடன் , மெல்லிடையுடன் அவளின் வட்ட முகத்திற்கு கிரீடம் போல் அமைந்திருந்த சுருள் கேசத்துடன் தலை சாய்த்து சிரித்து பேசியபடி வந்தாள் .அவள் …ஜீவிதா .

கைலாஷின் உள்ளம் கவர்ந்தவள் . அவர்களது இரண்டாவது வருட படிப்பின் போது ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள் .நான்கு வருடங்கள் நண்பர்களாக பழகி வருகின்றனர் .கைலாஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பே தனது நட்பை தாண்டி அடுத்த கட்டத்தற்கு போய்விட்டான் .ஆனால் ஜீவிதா …இதோ இந்த வினாடி வரை அவளை புரிந்து கொள்ள அவனால் முடியவில்லை .

கைலாஷ் ஒன்றும் வருடக்கணக்காக காதலை தனது மனதிற்குள் ஒளித்து வைத்துக் கொள்ளுமளவு பொறுமையானவன் இல்லை .அப்படி மறைத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவனுக்கில்லை .சென்னையின் பிரபல கார்டியாலஜிஸ்டின் ஒரே மகன் .அவன் அம்மாவும் கைனகாலஜிஸ்ட் .அவர்களுக்கென சென்னையில் நவீன வசதிகள் கொண்ட  பெரிய நர்சிங்ஹோம் இருக்கிறது .மிக வசதியான ஹை கிளாஸ் பீப்பிள் மட்டுமே அங்கே சிகிச்சை பெற முடியும் .

மேலும் கைலாஷ் கடந்து போகும் பெண்களை திரும்பிப் பார்க்க வைக்குமளவு அழகன் .இந்த ஐந்து வருடங்களில் அவனிடம் உடன் பயிலும் பெண்களில் பத்து பேருக்கு மேல் காதல் சொல்லியிருக்கின்றனர் .இத்தனை தகுதிகளை கொண்டுள்ள கைலாஷ் ஜீவிதாவிடம் காதலை சொல்ல தயங்க வேண்டியதில்லை .தயங்காமல் அதை செய்தான் .ஜீவிதாவும் சிறு தயக்கமும் இல்லாமல் அவன் காதலை நிராகரித்தாள் .இதோ இப்போது வரை அதற்கான காரணத்தை அவள் கைலாஷிடம் சொல்லவில்லை .இல்லை என்றாள் …கிடையாது என்றாள் .சளைக்காமல் மறுத்தாள் .கைலாஷும் சளைக்காமல் முயன்று கொண்டிருக்கிறான் .

” ஹாய் கைலாஷ் …ஐ ஆம் ஹியர்…ஆர்யு ஹேப்பி நவ் ? ” மலர்ந்திருந்த ஜீவிதாவின் முகத்தை பார்த்தபடி தலையசைத்தான் கைலாஷ் .இனி பேச முடியாதென தோன்றியதால் மைக்கை வேறொருவனிடம் கொடுத்து விட்டு ஜீவிதாவோடு கீழிறங்கி நின்று கொண்டான் .எந்த பாதிப்புமின்றி சிரித்த முகத்தோடு நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தவளை வெறித்தான் .இவள் எப்படி எதனாலும் பாதிக்காமல் இப்படி இருக்கிறாள் …? நெற்றிப் பொட்டை அழுத்திக் கொண்டான் .

” சொல்லு எப்போ வந்து ஜாயின்ட் பண்ண போற …? ” எல்லோரும் கலைந்து செல்லும் போது அவளிடம் கேட்டான் .

” எங்கே …? ” ஜீவிதாவின் பார்வை எதிரிலிருந்த ரோட்டில் இருந்த்து .

பற்களை கடித்துக் கொண்டான் .தெரியாத்து போல் கேட்கிறாள் பார் .” எங்க ஹாஸ்பிடலில் ….வேலைக்கு …”

” பார்க்கலாம் …” வழக்கமான பதில் .

” படிப்பு முடிந்த்து ஜீவிதா .இனியும் எதற்கு லேட் பண்ண வேண்டும் …எக்ஸாம்ஸ் முடிந்த்தும் …அடுத்த மாதம் இருபதாம் தேதி நீ எங்க ஹாஸ்பிடல் வர்ற .ட்யூட்டியில் ஜாயின்ட் பண்ற .நான் உன்னை பற்றி என் டாடியிடம் சொல்லிவிட்டேன் ….”

” வெயிட் …வெயிட் ..வொய் ஆர் யு ஹரியிங் லைக் திஸ் கைலாஷ் …எனக்கும் சில லைப் ப்ளான் இருக்குமில்லையா …? “

” என்ன பெரிய ப்ளான் …? ” எரிச்சல் அவன் குரலில் .

” நான் என் ஊருக்கு போகவேண்டும் …”

” வாட் …? உன் ஊருக்கா …? அது …எது …? நீ ….உனக்கு …ஊர் இருக்கிறதா …? ” கைலாஷால் நம்ப முடியவில்லை .அவன்றிந்து இந்த நான்கு வருடங்களாக ஜீவிதா அவளது ஊருக்கு சென்றதே இல்லை .காலேஜ் லீவிலும் ஹாஸ்டலில் தான் .

” நிச்சயமாக .எனக்கென ஊர் இருக்கிறது .அம்மா , அப்பா இருக்கிறார்கள் .சொந்தங்கள் இருக்கிறார்கள் …” அடுக்கினாள் .

” ஓ…ஆனால் நீ ஏன் அவர்களை பார்க்க கூட போனதில்லை …? “

” ம்ப்ச் ஒரு சின்ன மனக்கசப்பு அவர்களுடன் .அதுதான் …”

” அப்பா , அம்மாவை நான்கு வருடமாக பார்க்காமல் இருந்த்து தப்பில்லையா …? ” கைலாஷ் கண்டித்தான் .

” அதுதான் இப்போது போகிறேன் …”

” சரி போய் பார்த்து விட்டு பிறகு வந்து ஜாப் ல ஜாயின்ட் பண்ணிக்கிறியா …? “

” ம் …நான் முதலில் அவர்களை போய் பார்க்கிறேன் .அப்புறம் மற்றதை பார்க்கலாம் …”

” எப்பவுமே பிடி கொடுக்காமலேயே பேசுகிறாயே ஜீவிதா …? “

” கொடுக்குமளவு பிடி என்னிடம் இல்லையே .வரட்டுமா …? விட்டால் போனிலேயே அழுதுவிடுவாய் போலிருந்தாய் .அதுதான் கிளம்பி வந்தேன் .இல்லைன்னா அக்கடான்னு எக்ஸாம்ஸுக்கு படிச்சிட்டு இருந்திருப்பேன் . எக்ஸாம்ஸுக்கு பெஸ்ட் ஆப் லக் …” ஆட்டோவை கை காட்டி நிறுத்தினாள் .

ஆட்டோ அவனை கடக்கவும் தான் நினைவு வந்து ” ஜீவிதா உன் ஊர் எது …? ” என்றான் .

” ஜெயங்கொண்டான் ” வெளியே தலை நீட்டி சொல்லிவிட்டு கையாட்டி விடை பெற்றாள் ஜீவிதா .

————————

ஹேப்பி ஜர்னி ” வாழ்த்தியபடி ரயில்வே ஸ்டேசனில் வந்து நின்ற கைலாஷை ஜீவிதா எதிர்பார்த்தே இருந்தாள் .

” நீ வருவேன்னு தெரியும் …என் கூடவே ஏதோ ஒரு ஏழாம்படை இருக்குன்னு நினைக்கிறேன் . உனக்கு அப்பப்ப தகவல் தர …” புன்னகையுடனேயே அவனை வரவேற்றாள் .

” ப்ச் அவுங்களை விடுநீ சொல்லு .நிஜம்மாவே உனக்கு அம்மா , அப்பா இருக்காங்களா ? “

” பின்னே சுயம்புவா நான் ? “

” அதெப்படி இவ்வளவு நாட்களாக அவர்களை பார்க்காமல் இருந்தாய் ஜீவிதா …? “

” எனக்கும் அவர்களுக்கும் இடையே சிறு கோபம் …”

” சிறு கோபம் போல் தெரியவில்லையே .அதி தீவிரமாக தெரிகிறதே …நான்கு வருடக் கோபம் …ஏன் ஜீவிதா …? “

ஜீவிதா பதில் சொல்லவில்லை .இமைக்காமல் அவனை கண்களுக்குள் பார்த்தாள் ்அந்த பார்வை இதையெல்லாம் நான் உன்னிடம் எதற்கடா சொல்ல வேண்டும் …? முட்டாள் …எனக் கேட்டது .கைலாஷ் பெருமூச்சுடன் பார்வையை திருப்பிக் கொண்டான் .

இப்போது இருவர் பார்வையும் வந்து கொண்டிருந்த , போய் கொண்டிருந்த ரயில்களின் மேல் ப்ளாட்பார ஜனங்கள் மேல் பரவியது .

“இவ்வளவு தீவிர கோபக்காரியாக உன்னை என்னால் நினைக்க முடியவில்லை .நான்றிந்த என் தோழி மிக மென்மையானவள் .அதிர்ந்து பேசாதவள் .பிறர் துன்பம் கண்டு பொறுக்காதவள் ….” பேசியபடியே திரும்பி ஜீவிதாவின் முகம் பார்த்தவன் அதிர்ந்தான் .

அவள் முகம் இறுகியிருந்த்து .கண்கள் சிவந்து ரௌத்ரம் பொங்கிக் கொண்டிருந்த்து .விடைத்திருந்த மூக்கும் , கடினம் காட்டிய முகமும் சவாலொன்றை சுமந்திருந்தன .இது போலொரு தோற்றத்தை ஜீவிதாவிடம் அவன் ஒரு நாளும் பார்த்ததில்லை .

” ஜீவிதா …” அவள் கை தொட்டு அசைத்தான்.” என்னாச்சும்மா …? “

” ம் …” ப்ரக்ஞையிலிருந்து மீண்டு கொண்டாள் .” ஏதோ பழைய நினைவு …” தலையை உலுக்கிக் கொண்டாள் .

” உன் வாழ்வில் ஏதோ உன்னை வேதனைப்படுத்தும் சம்பவம் நடந்திருக்கிறது . ஒரு நண்பனாக நினைத்தேனும் அதை என்னுடன் ஷேர் பண்ணிக்கொள்ள கூடாதா …? “

ஜீவிதா சுவாரஸ்யமாக அந்த கொய்யா வியாபாரியை வேடிக்கை பார்த்தாள் .சிறிது நேரம் அவள் முகத்தை பார்த்தபடி இருந்தவன் ” வெல், உனக்கு எங்கே எந்த துன்பம் வந்தாலும் உதவ இங்கே உன் நணபன் ஒருவன் காத்திருக்கிறேனென்பதை மட்டும் மறவாதே …”

” நிச்சயம் மறக்க மாட்டேன் கைலாஷ் .என்னுடைய பிரச்சனைகளை முடித்து விட்டு நான் வேலை பார்க்க முடிவெடுத்தால் , அது நிச்சயம் உன் ஹாஸ்பிடலில்தான் .முடிந்தால் காத்திரு …”

” காலம் முழுவதும் காத்திருப்பேன்… “

” சிவ ..சிவா .நான் வேலையை மட்டும்தான் சொன்னேன்பா ….”
” இந்த சிவ …சிவாவை அடுத்து எப்போது கேட்க போகிறேனோ …? ” கைலாஷின் பேச்சு தோழனின் பாதையிலிருந்து கொஞ்சம் பிசகவும் ஜீவிதாவிற்கு சுற்றுப்புற வேடிக்கை முக்கியமாகி போனது .

” இது எனது சின்ன வயது பழக்கம் . என் பாட்டியிடமிருந்து எனக்கு வந்து விட்டது .கடவுளேன்னு  சொல்றதுக்கு பதில் சிவ சிவா …” முன்பே கைலாஷ் அறிந்த விளக்கத்தை திரும்ப சொன்னாள் .

” இது எனக்கு தெரியுமே ஜீவிதா …” என்ற அவன் தொனியில் உன்னை எனக்கு முழுவதும் தெரியுமே என்ற செய்தியிருக்க , இல்லை கைலாஷ் என்னை உனக்கு தெரியாது .நான் ரகசிய பெட்டகம் .அதை உன்னால் திறக்க முடியாது …மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் ஜீவிதா .

” ஹேய் அந்த பொண்ணு உன் ப்ரெண்டுதானே …இங்கேதான் வர்றாளா …? கைலாஷ் சுட்டிய திசையில் அங்குமிங்கும் விழிகளை அலைய விட்டபடி வந்து கொண்டிருந்தாள் ஜெயந்தி .அவளை பார்த்ததும் முகம் மலர்ந்த  ஜீவிதா ” ஆமாம் ….” என்றபடி தன் போனை எடுத்தாள் .

” இவளோட மட்டும் எப்படி உன்னால் ப்ரெண்ஷிப் மெயின்டெய்ன் பண்ண முடியுது ஜீவிதா …? “

கைலாஷின் கேள்வியில் புன்னகைத்தபடி தன் போனில் ஜெயந்திக்கு தான் இருந்த இடத்தின் அடையாளத்தை சொல்லி வரச் சொன்ன ஜீவிதா .

” ஒருவேளை இவள் கடல் அலை போலவோ …என்னை மாதிரி .தள்ள தள்ள திரும்ப வந்து மோதுற மாதிரி ….,” சமயம் கிடைக்கும் போதெல்லாம் தன்னை சொல்ல மறப்பதில்லை அவன் .

” அவள் என் ஊரை சேர்ந்த பெண் ….சின்ன வயதிலிருந்தே நாங்க ப்ரெண்ட்ஸ் ”  சிரித்தாள் .” வா ஜெயந்தி …”

” அட அப்படியா …ஏன் ஜெயந்தி நீங்க ஜீவிதா ஊர் பெண்ணா …? இதுவரை எனக்கு தெரியாதே …” ஆச்சரியமாய் கேட்டான் .

” இப்போ தெரிஞ்சுக்கோங்க சார் .என் படிப்பும் முடிஞ்சது நானும்  அக்காவோட ஊருக்கு போகிறேன் …” ஜெயந்தி நர்சிங் படித்து வருபவள் .

” ஓ…உங்க படிப்பும் முடிஞ்சதா …? கிரேட் …ஹவ் இஸ் யுவர் எக்ஸாம்ஸ் …? “

” பைன் சார் .வாட் அபவுட் யு …? “

” இதென்ன சும்மா சார் .ஜஸ்ட் கால் மீ கைலாஷ் .இந்த சார் என் வயதை கூட்டி காட்டுகிறது ….” முகத்தை சுளித்தான் .

” நீங்க டாக்டர் சார் .நான் நர்ஸ் .எப்படி உங்கள் பெயர் சொல்லமுடியும் …? “

” ஓ…யெஸ் .தென் யு ஆல்சோ ஜாய்ன் அஸ் இன் அவர் ஹாஸ்பிடல் …? “

” அக்கா நீங்க திரும்ப வேலை பார்க்க சென்னை வரப் போறீங்களா என்ன …? ” ஜெயந்தி ஆச்சரியமாக ஜீவிதாவிடம் கேட்டாள் .

” நோ ஐடியா ஜெயந்தி …” ஜீவிதாவின் பதிலுக்கு ” ஆமாம் ஜீவிதா அப்படித்தான் சொல்லியிருக்கிறாள் ….” அவசரமாக பதில் சொன்னான் கைலாஷ் .

” அக்கா …” கேள்வியாய் பார்த்த ஜெயந்திக்கு ” போய் ஒரு வாட்டர் பாட்டில் வாங்கு …” என்ற வேலை தந்தாள் ஜீவிதா .

தலையசைத்து எழுந்து போன ஜெயந்தியின் பின்னால் தானும் எழுந்தான் கைலாஷ் .” நான் அவளுக்கு ஹெல்ப் பண்றேன் ….”

ஜெயந்தியுடன் சேர்ந்து வாட்டர் பாட்டிலுடன் சில பாக்கெட் தீனிகளும் வாங்கினான.” இதென்ன டாக்டர் சார் …இதெல்லாம் சாப்பிட நாங்கள் குழந்தைகளா …? “

” நீ இந்த சாரை விட மாட்டாயா …? குழந்தைகள்தான் ஸ்னாக்ஸ் சாப்பிடனும்னு என்ன கட்டாயம் …? “

” டக்குனு இந்த சாரை மாற்றுவது கஷ்டம் . டிரை பண்றேன் …இப்போ உங்களுக்கு என்ன வேணும் …? “

அவள் கணிப்பில் புன்னகைத்து ” உன் போன் நம்பர் வேண்டும் …” என்றான் .

” அக்கா நம்பர் உங்களிடம் இருக்குமே …என் நம்பர் எதற்கு …? ஜஸ்ட் ஒரு விசாரணைக்கா ….? “

” அது …ஆமாம் …இல்லை ….உனக்கு ஏதாவது வேலை இருந்தால் சொல்லுவதற்கு ….” தடுமாறியவனை சிரித்தாள் .

” பொய் உங்களுக்கு வரலை சார் விட்டுடுங்க …” தன் நம்பர் சொன்னாள் .

” எங்க ஜீவா அக்காவை உங்க பக்கம் இழுக்க டிரை பண்றீங்க .நடந்தால் எனக்கும் சந்தோசம்தான் ….”

அவர்கள் கிளம்பி போன பின்பும் வெகுநேரம் ஜெயந்தியின் ஜீவா அக்கா கைலாஷின் மனதில் ஒலித்தது .இது போலொரு செல்ல சுருக்கங்களுக்கு ஜீவிதா அவனை அனுமதித்ததில்லை .

ரயிலில் …

” நீங்க திரும்ப சென்னைக்கு போய் வேலை பார்க்கிற எண்ணத்தில் இருக்கிறீர்களா அக்கா …? ” ஜெயந்தியின் கேள்விக்கு பதில் சொல்லாது , ரயிலின் ஓட்டத்தோடு இணையாக ஓடிவந்து கொண்டிருந்த அந்த நதியை பார்த்தபடி இருந்தாள் ஜீவிதா .

ட்ரெயின் அரியலூரை நெருங்கிக் கொண்டிருநதது .இதோ …இந்த நதியோரம் …அவளது சலனங்கள் சில புதையுண்டு கிடக்கின்றன .அதனை அவள் மீட்பாளோ …இல்லை அதனுடன் சேர்ந்து தானும் புதைவாளோ …காலம்தான் பதில் சொல்லவேண்டும் .

What’s your Reaction?
+1
6
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!