Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 22

22

 

 

 

பாலகுமரன் வீட்டிற்கு போனபோது வீடு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. முக்கிய விருந்தினர்களுக்கான அழகான அலங்காரமாக அது இருந்தது.. திவாகரின் வார்த்தைகள் மனதிற்குள் மத்தளத்தால் அடித்துக் கொண்டிருக்க தளர்ந்து சோபாவில் அமர்ந்தவனின் முன் சூடான காபி வைக்கப்பட்டது..
“உங்களுக்கு பிடித்த ப்ளாக் காபி சார்.. குடித்தால் இந்த சோர்வெல்லாம் போய்விடும்.. பிறகு ப்ரெஷ்ஷாகிட்டு வந்தீங்கன்னா கெஸ்ட் வரும் போது அவுங்களை பார்க்க சரியாக இருக்கும்..”
மென்மை புன்னகையோடு சொல்லி சென்ற சரண்யா தலையில் வைத்திருந்த மல்லி சரத்தின் வாசம் அந்த அறையை நிறைத்து பாலகுமரனின் நாசி வழி மனதில் நுழைந்தது..
“கையிலேயே வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து விட்டோமே என எனக்கோர் எண்ணம் வருகிறது குமரா..” சொன்னபடி அருகில் வந்து அமர்ந்தாள் அபிராமி..




“புரியவில்லை அம்மா..” காபி கப்பை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்..
“நிஜமாக புரியவில்லை..?” கூர்ந்த அன்னைக்கு பதில் சொல்லவில்லை அவன்.. வீட்டின் நடுவில் பளபளவென விளக்கப்பட்டு நீர் நிரப்பி கலைநயத்தோடு மலரடுக்கப் பட்டு நடுவில் அகல் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த பித்தளை கிண்ணத்தில் பார்வையை பதித்திருந்தான் அவன்..
“இதெல்லாம் யார் செய்தது..?”
“ஏதோ ஒரு தேவதை நமக்காக இதையெல்லாம் செய்வது போல் உள்ளது..”
“ப்ச் என்னம்மா இது..?”
“நிஜம்தான் குமரா.. நம் வீட்டிலேயே நம்மோடு இருந்து வந்த அந்த தேவதையை இவ்வளவு நாட்களாக நாம் கவனிக்காமல் இருந்து விட்டோம்.. நாடு விட்டு நாடு போய் ஏதோ ஒரு பிடாரியை இழுத்து வந்திருக்கிறோம்..”
பாலகுமரன் எழுந்துவிட்டான்..
“ப்ரெஷ்ஷாகிட்டு வர்றேன்மா..”
தன் அறைக்கு போகும் வழியில்.. “எனக்கு தெரியலை மம்மா.. நீங்களே இவனை தூக்குங்களேன்..” எனக் கொஞ்சிக் கொண்டிருந்த சஸாக்கியின் பேச்சு காதில் விழ, அதனை நின்று கேட்கும் விருப்பமின்று வேகமாக தன் அறைக்கு போனான்..
“கார்த்திகாவை எங்கேப்பா..?”
“அவள்.. அங்கே.. அவள் வீட்டில் ஏதோ வேலை என்று..”
அபிராமி மென்று விழுங்க..
“ம் இந்த பொண்ணுங்களே இப்படித்தான்.. கல்யாணம் முடிச்சு புகுந்த வீடு போகவும் பிறந்த வீட்டை மறந்துடுவாங்க..”




“நீங்க முதலில் இனிப்பு வச்சுக்கோங்க மாமா.. அம்மா மாமாவிற்கு குலோப்ஜாமூன் வைங்க..”
அன்று வந்திருந்த விருந்தினர் வேணுகோபாலன் அவர்களுக்கு சற்று தூரத்து சொந்தம், அவர்களது தொழிலோடு தொடர்புடையவர்கள் என்பதால், அவர்களுக்கு வீட்டிலேயே விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்..
“எங்கேப்பா உன் மனைவியையும், குழந்தையையும் காணோம்..”
அவர் வீட்டிற்கு வந்ததே இதற்குத்தானென பாலகுமரன் அறிவான் திடுமென அவனுக்கு முளைத்து விட்ட மனைவி, மகனை பார்ப்பதற்குத்தான் டில்லியிலிருந்து அவரது இந்த திடீர் வருகை..
“இதோ இப்போ வருவாங்க மாமா.. நீங்க சாப்பிடுங்க..”
“என்னப்பா வீட்டுக்கு ஒரு விருந்தாடி வந்தால் முன்னால் நின்று வரவேற்க வேண்டாமா உன் மனைவி..”
கிண்டல் போல் அவர் கொஞ்சம் குறைபாடாகவும் சொன்னார்.. இந்த டெல்லி மாமாவை பற்றி பாலகுமாரனுக்கு தெரியும்.. அதனாலேயே சீக்கிரமாக கிளம்பி குழந்தையுடன் வரும்படி சஸாக்கிக்கு தகவல் அனுப்பிவிட்டுத்தான் வந்தான்.. ஆனால் அவளைத்தான் இன்னமும் காணோம்..
பற்களை கடித்தபடி அவன் சஸாக்கிக்காக காத்திருந்தான்.. இவள் சேலை கட்டி, முடியை கட்டி வருவதற்குள்.. வெறுப்பு ஏறியது அவன் மனதில்..
“இந்த சமூசா ஒன்று வைத்துக் கொள்ளுங்களேன்.. புதுவிதமாக நானே செய்தேன்..” சரண்யா சூடான சமூசாக்களை கொண்டு வந்து தட்டில் வைக்க அவளை நிமிர்ந்து பார்த்த வேணுகோபாலன் முகம் மலர்ந்தார்..
“உன் மனைவியா குமரா..? மகாலட்சுமி போல் இருக்கிறாளப்பா.. நீ அதிர்ஷ்டகாரன்..”
பாலகுமரன் அதிர்வாய் திரும்ப சரண்யா மறுத்து பேச வாய் திறந்தாள்.. அவள் தோளை அழுத்தி பேசாமல் இருக்குமாறு சைகை செய்த அபிராமி..
“சரண்யா ருசியாக சமைப்பாள் அண்ணா.. நீங்க இந்த சமூசாவை சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க..” என்றாள்..




“உன் மனைவி ஜப்பான் பெண் என கேள்விப்பட்டேன் குமரா.. எனக்கு கொஞ்சம் மனதிற்குள் நெருடல்தான்.. ஆனால் இங்கே வந்து இந்த பெண்ணை பார்த்த பிறகு மிகுந்த மனநிறைவாக இருக்கிறதுப்பா..”
“ஜாப்பானில் இருந்தாலும் என் மருமகள்.. தமிழ் பெண்தான் அண்ணா.. தமிழ் பண்பாடு தெரிந்த பெண்..”
“அதுதான் பார்த்தவுடனேயே தெரிகிறதே.. என்னம்மா பெரியவன் நான்.. ஆசிர்வாதம் வாங்க மாட்டாயா..?”
சரண்யா திரு திருத்தபடி அவர் கால்களில் விழ.. “கணவன் குழந்தையென நூறு ஆண்டுகள் வாழனும்மா..” ஆசிர்வதித்தார்..
பாலகுமரன் கொஞ்சம் குற்றவுணர்வுடன் திரும்பிய போது சஸாக்கியை பார்த்தான்.. அவள் கைகளில் குழந்தையுடன் அங்கே நடப்பதை நம்பமுடியாமல் பார்த்தபடி இருந்தாள்.. அவளருகே நின்றிருந்த அன்னலட்சுமி குற்றம்சாட்டும் பார்வையுடன் இருந்தாள்..
ஒரே ஒரு விநாடி அவனது விழியை பார்த்தபடி இருந்தவள் சட்டென திரும்பி மீண்டும் லிப்டில் ஏறி மாடிக்கு போய்விட்டாள்..
“அம்மா..” அழைத்தபடி அதிகாலையிலேயே வந்து நின்ற மகளை பார்த்ததும் அபிராமிக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது..
“கார்த்தி வாடா.. வாடா.. யாரோ செய்த தப்பிற்கு இப்படி அம்மாவை பார்க்க வராமல் இருந்துவிட்டாயேடா..” கலங்கிய கண்களுடன் மகளை வரவேற்றாள்..
“ஐய்யோ என்னம்மா இது.. நான் வீட்டை விட்டு போன போது கூட இப்படி அழவில்லை.. திரும்ப வரும் போது அழுகிறீர்களே.. அப்போ நான் போய்விடவா..?” கார்த்திகாவின் கண்களும் கலங்கித்தான் இருந்தன..
“ஏய்.. ஏன்டி..” மகளை செல்லமாக கொட்டி அணைத்துக் கொண்டாள்..
“கார்த்தி வந்துவிட்டயா..?” உணர்ச்சியாய் ஒலித்த அண்ணனின் குரலுக்கு ஆச்சரியமாய் திரும்பினாள் கார்த்திகா..




“அண்ணா நீயுமா..? ஐய்யய்யோ அழுதுடுவ போலவே..?” அண்ணனை கேலி செய்தாள்..
“ஏய் வாலு..” செல்லமாய் திட்டியபடி தங்கையின் தோளணைத்துக் கொண்டான் அண்ணன்..
“என்னண்ணா உங்களுக்கும் நான் இன்று வரப் போவது தெரியாதா..?”
“இல்லையேம்மா..”
“வரச்சொல்லி போன் செய்தாங்க…” கண்களால் சஸாக்கியின் அறையைக் காட்டினாள் கார்த்திகா..
“ஓ.. எப்போது.. என்ன சொன்னாள்..?”
“நேற்று இரவு ஏதோ முக்கியமாக பேசவேண்டும்.. உங்கள் ஆசை நிறைவேறப் போகிறது.. ஒரே ஒரு முறை வாருங்கள் என்றாங்க..”
“ஆசை நிறைவேறப் போகிறதா..? அப்போது அவள் நம் வீட்டை விட்டு போகப் போகிறாளா..?” மறைத்தும் உற்சாகம் தெறித்தது அபிராமியின் குரலில்..
“ஆமாம் ஆன்ட்டி.. உங்கள் எல்லோருடைய ஆசையையும் நிறைவேற்றப் போகிறேன்.. நானும் அம்மாவும் இந்த வீட்டை விட்டு போகிறோம்..” சொன்னபடி வந்தாள் சஸாக்கி..
அபிராமியும், கார்த்திகாவும் ஒளி பொருந்திய முகத்துடன் அவளை பார்க்க, பாலகுமரன் சஸாக்கியை வெளித்து பார்த்தான்..

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!