Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 15

15

” வைசாலி சொன்னால் கேளு .இனி இங்கே வராதே …இந்த இடம் உனக்கு பாதுகாப்பில்லை …” மனோகரன் லேசான இறைஞ்சலுடன் கூறினான் .

” ஏன் …இங்கேயிருந்தால் உங்கள் லீலைகளையெல்லாம் கண்டு கொள்வேனேயென்ற பயமா …? பிறகு உங்கள் மேலுள்ள ஹீரோ அப்பியரன்ஸ் போய்விடுமே …அந்த கவலைதானே உங்களுக்கு …? ” முயன்று கேலி போல் தோற்றமளிக்கும்படி கேட்டாள் .

” இல்லை அப்படி இல்லை .நான் எப்போதும் ஹீரோவாக மிக நல்லவனாக தோற்றமளிக்க வேண்டுமென்று நினைத்ததில்லை ….”

” ஆமாம் ராமனாக இருக்க வேண்டுமென்று கூடத்தான் நினைத்ததில்லையே …” அவளது குத்தலை கவனிக்காதவன் போல் …




” ஆனால் உனக்கு எப்போதும் ஹீரோவாக இருக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறேன் …” எனக் கூறி நிறுத்தினான் .வைசாலி முகம் சிவக்க நிற்க …

” அதனாலேயே இனி என்னை புதுப்பித்துக்கொண்டு ராமனாக இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறேன் ” என குறிப்பாக கூறி தொடர்ந்து முடித்தான்.

இவன் இப்படி ஏதாவது பேசுவானென்று தெரியும் .அதனால்தான் தனியாக இவனிடம் மாட்டிக்கொள்ள கூடாது என்றே நினைத்து வந்தாள் .அன்று அம்ருதா நடந்து கொண்ட முறை வேறு இங்கே வரவேண்டுமென்ற எண்ணத்தை பின்னே தள்ளிக்கொண்டு போனது .ஆனால் அவளது குடும்ப சூழ்நிலை …

” அம்ருதா எப்பவுமே இப்படித்தான் …எங்கே எப்படி நடந்து கொள்வது என்ற நாகரீகமின்றி நடந்து கொள்வாள் .அவளது வாழக்கை முறை அப்படி …சில நேரங்களில் எதிர்பார்க்காமல் இப்படி நடக்கும்போது ….அன்று …அவளை தள்ளிவிடுவதற்குள் ….” அன்றைய தனது நிலையை தயக்கத்துடன் வைசாலிக்கு விளக்க முயன்றான் .

வலுக்கட்டாயமாக மேலே வந்து விழும்போது , அதுவும் திடீரென ஒட்டிக்கொள்ளும் போது உடனே தள்ளி விடுவதென்பது கஷ்டம்தானே …அன்று கூட மேக்கப் அறைக்குள் திடீரென்று வந்துதானே ஒட்டிக்கொண்டாள் ….இப்படி தனக்குள் ஒலித்த குரலை கேட்டதும் பயந்து போனாள் வைசாலி .இல்லை இது சரி வராது …இன்னும் கொஞ்ச நேரம் இவனை பேசவிட்டால் இவன் என்னையே அவனுக்கு நியாயம் பேச வைத்துவிடுவான் .

” எவ்வளவு இலகுவாக பேசுகிறீர்கள் சார் .இது போன்ற வசதி படைத்தவர்களின் பழக்கங்களெல்லாம் என்னைப் போன்ற நடுத்தரவாதிகளுக்கு ஜீரணமாகாது .அதனால் ப்ளீஸ் …சார் …விட்டுவிடுங்கள் சார் …” அவனை அந்நியப்படுத்த வேண்டுமென்றேதான் இத்தனை சார்களை போட்டாள் .
” சாரா ….? ” அவனது முகம் விழுந்துவிட்டது .

சிறிதளவாவது அவனை பாதிக்க முடிந்த மகிழ்ச்சியில் ” ஆமாம் சார் .நீங்கள் என் முதலாளியில்லையா ….? இனி முதலாளி என்றே அழைக்கவா …? முன்பெல்லாம் இந்த ஸ்டுடியோ பக்கமே வரமாட்டீர்களே …இப்போது என்ன தினமும் வந்துவிடுகிறீர்கள் …? “

இதுவும் வைசாலியை உறுத்திக் கொண்டிருந்த விசயம்தான் .முன்பு அவள் மனோகரனை இங்கே பார்த்ததே இல்லை .ஓரிரு முறை அவனுடைய அப்பாவை பார்த்திருக்கறாள் .முதலாளி என்ற தோரணையில் தள்ளி வைத்து தூரமாய் பார்த்திருக்கிறாள் .மனோகரன் இப்படி வந்த்தில்லை .முன்பே அவனை பார்த்திருந்தால்தான் இப்போது இப்படி ஏமாந்து நிற்க மாட்டாளே …அப்போதெல்லாம் வரவே மாட்டானே .இப்போது தினமும் வந்து விடுகிறானே …என்ற உறுத்தல் அவளுக்கு .

” அம்ருதா மேடத்தை பார்க்கத்தானே தினமும் வந்துவிடுகிறீர்கள் …? ” கேலி போல் கேட்கவேண்டுமென நினைத்து கேட்டு முடிக்கவும் நெஞ்சம் வலித்துவிட கண்களின் ஓரம் நீர் வரட்டுமா …என கேட்டது வைசாலிக்கு .

” ஏன் ..உன்னை பார்க்கவென்று வரமாட்டேனா சாலி …? ” அன்புடன் அவளை பார்த்தபடி கேட்டான் மனோகரன் .




இமையை தாண்டி வழிந்துவிட்ட நீரை மறைக்க தனது முகத்தை திருப்பிக்கொண்டவள் ” அப்படி கூப்பிடாதீர்கள் என்னை …” மெலிந்த குரலென்றாலும் தீவிரமாக கூறினாள் .

” தினமும் உன்னை பார்க்க மட்டும்தான் , எத்தனையோ வேலைகளை விட்டுவிட்டு இங்கே வருகிறேன் சாலி …” அவளது பேச்சை அலடசியம் செய்து தனது நிலையை தொடர்ந்தான் மனோகரன் .

” வேண்டாம் …அப்படி வராதீர்கள் …தயவுசெய்து இனி வராதீர்கள் ….”

” நீ இந்த வேலையை விட்டு நின்று விடு .நீயும் வராதே .நானும் வர மாட்டேன் .” பேரம் பேசினான் .

” அது சரி ..இந்த வேலையை விட்டு விட்டால் , என் குடும்பம் சோத்துக்கு என்ன செய்வோமென்று நினைக்கறீர்கள் ..? ஈரத்துணியை வயிற்றில் போட்டுக் கொள்ளவா ….? “

கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவன் ” என்னை நோகடிக்க வேண்டுமென்றே இது போன்ற பேச்சுக்களை நீ பேசுவதானால் , எனது வருத்தத்தில் உனக்கு சிறிதாவது மகிழ்ச்சி இருக்குமானால் , நீ இப்படி பேசு சாலி ….எனக்கு ஒன்றுமில்லை …ஆனால் உனக்குரிய வேலை ஒன்று ஏற்கெனவே காத்திருப்பதை நினைவு கொண்டு பேசு …”

” அது நீங்கள் கொடுத்த வேலைதானே …உங்கள் ஆருயிர் நண்பர்கள் தந்த வேலை .ம் …உங்கள் நண்பர்களின் லட்சணத்தை கொண்டே அன்றே உங்களையும் கணித்திருக்க வேண்டும் .மிஸ் பண்ணிவிட்டேன் ….” வைசாலியின் மனதில் முதலில் கரணும் , சுரேஷும் அவளிடம் நடந்து கொண்ட முறையற்ற தன்மை நினைவில் வந்த்து .

” ஏன் …? இப்போது எதுவும் தொந்தரவு செய்கிறார்களா …? ” மனோகரனின் குரலில் சிறு படபடப்பு .

” சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்வதில்லை என கேள்விப்பட்டிருக்கிறேன் ” முணுமுணுத்தாள் .

தலையசைத்து மறுத்தவன் ” அது சிறுத்தை .இவர்கள் சிறுத்தையென தன்னை தானே நினைத்துக் கொண்டிருப்பவர்கள்.” மனோகரனின் இந்த பதிலில் வைசாலிக்கு சிறு புன்னகை வந்த்து .

” பார் வைசாலி . இவர்கள் இருவரும் நமது சில தொழில்களில் தொடர்புடையவர்கள்.”பின்னால் “நீ இவர்களை அடிக்கடி சந்திக்க வேண்டி வரலாம் .அப்போது அந்த உனது முதல் சந்திப்பு இவர்களுக்கு நினைவு வர கூடாது .உன்னை மரியாதையாக பார்க்க வேண்டுமென்றுதான்  .உனக்கென ஒரு வேலை என்றதும் இவர்களையே உன்னிடம் அனுப்பி வைத்தேன் .என் கணிப்பு தப்பாது .அவர்கள் மதிப்பில் நீ இப்போது உயர்ந்த இடத்தில் இருக்கிறாய் .நிச்சயம் உனக்கு அவர்களால் தொந்தரவு இருக்காது ….”

எல்லா செயல்களுக்கும் மனோகரனிடம் பதில் இருந்த்து .அவனது விளக்கங்கள் வைசாலியை பலவீனமாக்கிக் கொண்டே போனது ….”பின்னால் ” …என்று சொன்னானா ..? “பின்னாள் ” என்று சொன்னானா ….?இதற்கு அர்த்தமென்ன தலையை கையால் தாங்கிக் கொண்டாள் .

” என்னை கொஞ்சம் தனியே விடுங்கள் …”

” நீ நாளையிலிருந்து கார் கேர் சென்டர் வேலைக்கு வந்துவிடுகிறாயா ….? ” எவ்வளவு எதிர்பார்ப்பு அவன் குரலில் .நிமிர்ந்து அவனை முறைத்தாள் .

” வேண்டாம்டா சாலி …இங்கே …வேண்டாம் .இந்த இடம் இப்போது உனக்கு பாதுகாப்பில்லை …” மனோகரனின் குரலில் மிகுந்த அன்போடு …காதலும் அப்பட்டமாக தெரிய  , தன்னுடன் போனில் கருணையும் , காதலுமாக பேசிய மனோகரனின் குரலை இப்போது உணர்ந்த வைசாலி , தன்னை கட்டுக்குள் கொண்டு வரும் வகையற்று அவனை நிமிர்ந்து நோக்கினாள் .




அது மதிய உணவு இடைவேளை நேரம் .அன்று ஸ்டுடியோவில் அந்த நேரம்  அம்ருதாவின் ஷூட்டிங் ஒன்று மட்டுமே இருந்த்து .அதனால் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த்து .உணவிற்கு பின் அனைவரும் ஒரு சிறு ஓய்வில் இருந்தனர் .இந்த ஓய்வு உடலை ரெப்ரஷ் பண்ணும் என்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அம்ருதா இந்த குட்டித் தூக்கத்தை தவிர்க்க மாட்டாள் .

இந்த இடைவெளியில் சந்தடியற்ற இடத்தில் அமைதியாக இருக்கலாம் என எண்ணித்தான் ஸ்டுடியோவின் பின்புறம் , சில மரங்கள் இருந்த அந்த இடத்தில் கிடந்த மரபெஞ்சில் வந்து அமர்ந்தாள் வைசாலி .இரண்டே நிமிடங்களில் மாயம் போல் அருகில் வந்தமர்ந்து விட்டான் மனோகரன் .வைசாலி அவசரமாக எழுந்து மரம் ஒன்றின் பின்புறம் சற்று மறைந்தாற் போல் நின்று கொண்டாள் .

” ஒரு வாரமாக என் பார்வையில் படாமல் ஓடிக்கொண்டிருக்கிறாய் …” என்றுதான் பேச்சை ஆரம்பித்தான் .இந்த இடம் உனக்கு பாதுகாப்பில்லை என்று சொல்லும்போது தானும் எழுந்து வைசாலியின் அருகாமையில் மரத்தை பிடித்தபடி நின்றிருந்தான் .

தனது சொல்லுக்கு மதிப்பு கொடுத்து தன்னை நிறைய சமயங்களில் காத்து நின்ற அம்ருதா நினைவு வர , அவசரமாக மனோகரனின் விழிகளை சந்திக்காது திரும்பிக்கொண்டாள் .

” எனக்கு மேடம் மேல் நம்பிக்கை இருக்கிறது “

” உனக்கு அம்ருதாவை தெரியாது …”

” ஆமாம் உங்களளவு எனக்கு அவர்களுடன் நெருக்கம் கிடையாது ” கிண்டலாக பார்த்தாள் .

” நீ வீண்வாதம் செய்கிறாய் …”

” எப்போதுமே நீங்கள் நினைத்ததே நடக்க வேண்டுமென்று நினைக்காதீர்கள் சார் ….” அவனை வெறுப்பேற்ற வேண்டுமென்றே கிண்டலாக கூறினாள் .
” நான் நினைத்ததா …? நான் நினைத்ததை நடத்தியிருந்தால் இப்போது நீ இங்கே இந்த மரத்தடியில் நின்று கொண்டு  சட்டம் பேசிக்கொண்டிருக்க மாட்டாய் .எனது வீட்டில் எனது பெட்ரூமில் இருந்திருப்பாய் ….” என நிறுத்தினான் .

இவன் என்ன சொல்கிறான் …? முகம் கலவரத்தில் வெளுக்க , அவனை நிமிர்ந்து, பார்க்க குரலை குழைத்து அவள் புறம் சாய்ந்து மென்மையான குரலில் ” என் மனைவியாக …” என்றான் .

வெண்மை மாறி வைசாலியின் முகம் சிவக்க தொடங்க ,” அது பின்னால் இல்லைடா சாலி …பின்னாள் தான் .நமது திருமணத்திற்கு பின்னாள் ….” விளக்கமளித்தான் .

ஏனோ நாசி மூச்சுக் காற்றுக்கு திணற தொடங்க , பின்னால் நகர்ந்து மரத்தில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள முயன்றாள் .அவளுக்கு மிக அருகே தானும மரத்தில் சாய்ந்து கொண்டான் மனோகரன் .

” இப்போது கூட நான் நினைத்ததே நடக்க வேண்டுமென்றால் , உன்னை அப்படியே இறுக அணைத்து …இதோ துடித்துக் கொண்டிருக்கும் உன் இதழ்களை ….”

” போதும் நிறுத்துங்கள் ….” கைகளால் காதுகளை மூடிக்கொண்டாள் .

” ஆனால் எங்கே …நான் நினைத்ததெல்லாம் நடக்கிறது ….” ஒரு ஏக்க பெருமூச்சோடு நிறுத்தினான் .” போனில் பேச்சு வழியாக கிடைத்த கருணை கூட இப்போது நேரில் கிடைக்கவில்லை ” என முணுமுணுத்தான் .

” நேரில் பார்க்க வராதே என்று கூறியவர் நீங்கள் …” அவனுக்கு நினைவுபடுத்தினாள் .

” ம் …நான்தான் சொன்னேனே …அம்ருதாவை என் வாழ்விலிருந்து விலக்கிவிட்டுத்தான் உன்னை பார்க்க வேண்டும் என ஒரு வைராக்கியம் கொண்டிருந்தேன் “

” அதனால்தான் பிளைட்டிலிருந்து இறங்கியதும் அங்கே ஓடினீர்களா …? “




” ம்ப்ச் …உடம்புக்கு முடியவில்லை .உடனே வராவிட்டால் தூக்கு ..அது ..இதுவென ஏதேதோ ..மிரட்டிக் கொண்டிருந்தாள் .அவளை எச்சரிக்கத்தான் அங்கே வந்தேன் .உன்னை அங்கே எதிர்பார்க்கவில்லை .ஆனால் அவள் திடீரென்று …..” என்றுவிட்டு மேலே பேச முடியாமல் வெளியை வெறித்தான் .

எனக்கு உடம்பு சரியில்லாதவள் போல் மேக்கப் போடு என அம்ருதா அன்று கேட்டது நினைவு வந்த்து வைசாலிக்கு .ஆனால் அதன் பிறகு ….பேச முடியாதே …எப்படி பேசுவான் …வெளியை வெறித்தவனை வெறித்தாள் .

” சில சம்பவங்கள் மறக்க முடியாமல் ஆணியடித்தது போல் அடி மனதில் தங்கி விடுகிறது …” துயருடன் கூறினாள் .

” காலம் காயங்களை ஆற்றும் மருந்து சாலி .உனது காயம் ஆறுவதற்காகத்தான் நான் காத்திருக்கிறேன் …” 
” இது மன  ரணகாயம் .இது ஆறாது ….”

” என்னால் ஆற்ற முடியும் …,”

” இது அதீத நம்பிக்கை …”

” இல்லை .காதல் நம்பிக்கை .நம் உண்மையான காதலின் மீதுள்ள நம்பிக்கை .இப்போதும் சொல்கிறேன் சாலி .தொழிலிலும் சரி ..காதலிலும் சரி … .உன்னை நீ அறியவில்லை …நான் அறிய வைக்கட்டுமா …? ” ஒரு விதமான பார்வையுடன் அவன் நெருங்க உள்ளம் துடிக்க அவனை பார்த்தபடியிருந்தாள் அவள் .

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!