Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 14

                                                                 14

” இங்கே எதற்கு வந்தாய் …? ,” மனோகரனின் கோபமான கேள்வி வைசாலிக்கு மிகுந்த சந்தோசத்தை கொடுத்தது .அவனை அலட்சியப்படுத்தி திரும்பினாள் .

அன்று அதிகாலையிலேயே ஷூட்டிங் என்பதினால் ஆறு மணிக்கெல்லாம் ஸ்டுடியோ வந்துவிட்டாள் .உள்ளே நுழையும் போதே மனோகரனின் காரை பார்த்துவிட்டாள் .இவனென்ன இவ்வளவு அதிகாலையிலேயே வந்து நிற்கிறான் .அவனது ஸ்டுடியோ …அவன்  ஆசைநாயகியின் நடிப்பை பார்க்க வந்து இருப்பான் .மனது வலிக்க நினைத்தவள் , எவன் எப்படி போனால் எனக்கென்ன என எண்ணியபடி உள்ளே நுழைந்தாள் .




எதிரில் வந்த மனோகரன் அவளை நம்பமுடியாமல் பார்த்தான் . அவனது குற்றம் சாட்டும் பார்வை ஏதோ வைசாலிதான் தப்பு செய்தாற்போல் ஒரு உணர்வினை அவளுக்கு கொடுத்தது .இவன் இப்போது வந்து பேசுவானோ …? அப்படி பேசினால் என்ன பதில் சொல்வது ..? பேசாமல் திரும்பி வீட்டிற்கே போய்விடலாமா ….? என்று எண்ணிய வைசாலி இரண்டு எட்டுகள் பின்னால் கூட எடுத்து வைத்துவிட்டாள் .

” ஏய் வந்துவிட்டு அங்கே என்ன பராக்கு பார்த்துக்கொண்டு நிற்கிறாய் …? அம்ரு வெயிட் பண்ணிக்கொண்டிருக்கிறாள் வா …” தள்ளி நின்று கத்தினாள் வேதா .திரும்பி பார்த்த போது மனோகரனை காணவில்லை .வைசாலி உள்ளே நடந்தாள் .

மெல்லிய குரலில் பாடியபடி மிகவும் சந்தோசமாக இருந்தாள் அம்ருதா .வேகமாக வந்து வைசாலியை கட்டிக்கொண்டவள் ” வா வைசாலி .உடம்பு இப்போது எப்படி இருக்கிறது ..? நீயில்லாமல் எனக்கு ஒரு கை ஒடிந்த்து போல் இருந்த்து தெரியுமா …? ” என வரவேற்றாள் .

அசூசையுடன் அவளது அணைப்பை விலக்கியவள் ” வேலையை ஆரம்பிப்போமா மேடம் …? ” என்றாள் .

” வைசாலி நான் நினைத்தது நடந்துவிட்டது .இப்போது மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் .மனோ என் இழுப்புக்கு வந்துவிட்டார் தெரியுமா …? ” அவள்பாட்டுக்கு தனது சாதனையை விவரித்துக்கொண்டிருக்க வைசாலிக்கு வாந்தி வரும் போலிருந்த்து .

” இப்போது பேசுவதை நிறுத்த போகிறாயா ..? இல்லையா …? ” என அவள் கன்னத்தில் அறையும் ஆவல் வந்த்து .ஆனால் குற்றவாளி இவள் மட்டும் அல்லவே ….இவளுக்கு மட்டும் ஏன் தண்டனை தரவேண்டும் .பேசாமல் தனது நரக விநாடிகளை எண்ணியபடி இருந்தாள் வைசாலி .

அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவளையே உறுத்தபடி இருந்தாள் வேதா .ஏதோ ஓர்  எதிர்பார்ப்புடன் வைசாலியை பார்த்தபடி இருந்தாள் அவள் .

மேக்கப் முடித்து அம்ருதா தனது ஷாட்டுக்கு போனதும் , மேக்கப் ரூமிற்குள்ளேயே உட்கார்ந்திருந்தாள் வைசாலி.

” அடுத்த ஷாட் உடனே இருக்கலாம் .போனை தூக்கிக்கொண்டு வெளியே ஓடிவிடாதே .இங்கேயே இரு ” கட்டளையிட்டு விட்டு போனாள் வேதா .போனையா ….? அவளா …? இனி ஜென்மத்திற்கும் போனை தொடும் எண்ணம் வருமா அவளுக்கு …?்

வெளியில் போகும் எண்ணம் வைசாலிக்குமே இல்லை .வெளியே போனால் மனோகரனை சந்திக்க வேண்டியிருக்குமோ …என்ற பயத்தை விட , மனோகரனுடன் போனில் கொஞ்சிக் கொண்டு உட்கார்ந்திருந்தாளே அந்த மரத்தடியை சந்திப்பதில்தான் அவளுக்கு வேதனை அதிகமிருந்த்து .அப்போது எவ்வளவு சந்தோசமாக இருந்தாள் ….அவனது பேச்சுக்கள் வரிசையாக நெஞ்சுக்குள. வலம் வர ஆரம்பிக்க மூக்கு விடைத்து கண்ணீர் வர பார்த்தது .




சை …தகுதியற்ற ஒருவனுக்காக வடிப்பதற்கென்றே காத்திருக்கிறதே இந்த கண்ணீர் …தன் மீதே ஆத்திரம் கொண்டு துடைத்துக்கொண்டாள் .

பத்துநிமிடமே பார்த்த ஒருவனிடம் எப்படி என் மனதினை பறிகொடுத்தேன் ….? இது ஏன் எனக்கு நடந்த்து …? அவ்வளவு பலவீனமானவளா நான் …? கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தை வெறித்தபடி தனக்கு தானே கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தாள் .திடீரென கண்ணாடியில் தனக்கு பின்னால் தெரிந்த மனோகரனின் உருவத்தில் திகைத்து , பிறகு தலையை உலுக்கி கண்களை விழித்து பார்த்தாள் .

” நான் இங்கேதான் உன் பின்னால்தான் நின்று கொண்டிருக்கிறேன் …” குரல் கொடுத்தான் மனோகரன் .

வேகமாக எழுந்தவள் அறையை விட்டு வெளியே போக எண்ணும்போது , அவன் வாசலை மறைத்து நிற்பதை பார்த்தாள் .பாதங்களை தரையில் அழுந்த ஊன்றி நகரப்போவதில்லை என அவளுக்கு உணர்த்தினான் அவன் .இங்கே ஏன் வந்தாயென்றான் …கோபமாக .

” யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் ..? வெளியே போங்கள் …” குரலை குறைத்து கத்தினாள் .

” அதனால்தான் கதவை மூடவில்லை ” திறந்திருந்த கதவை காட்டி சொன்னவன் . ” எனக்கு உன்னிடம் பேசவேண்டும் .வெளியே எங்கேயாவது …”

” இல்லை ..நான் வரமாட்டேன் .உங்களுடன் பேச ஒன்றுமில்லை எனக்கு .வெளியே போங்கள் …” அவன் முடிக்கும் முன்பே கத்தினாள் .

” ஷ் …ஏன் கத்துகிறாய் ….? வெளியே இருப்பவர்களெல்லாம் இங்கே வர வேண்டுமென்று நினைக்கிறாயா …? ” அதட்டினான் .பின் தணிந்து …

” வைசாலி உன்னிடம் சில கேள்விகள் கேட்கவேண்டும் …” என்றான் .

” ஓ…செய்யக்கூடாத தப்பினை செய்பவர்களுக்கெல்லாம் ஆசிரியர் பதவி கொடுத்து விடுகிறார்களே …? “வைசாலியின் நக்கலில் அவன் முகத்தில் புன்னகை வந்த்து.

” சரி …நீயே கேளு …? நான் பதில் சொல்கிறேன் …”சமாதானமாக சொன்னான் .

என்னவோ பெரிய மகாராஜா …விட்டுக்கொடுப்பது போன்ற பாவனையை பார் ….மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாள் .

” இது உங்கள் ஸ்டுடியோதானே …? ஆட் பிலிம் சம்பந்தமாக வந்த்தாக பொய்தானே சொன்னீர்கள் ..? ” கேட்டாள் .




” பொய்யில்லை .அன்று அதற்காகத்தான் வந்தேன் .”

” என்னிடம் ஏன் சொல்லவில்லை …? ” எதையென்று சொல்லாவிட்டாலும் எதைக் குறிப்பிடுகிறாளென உணர்ந்த மனோகரன் மௌனமானான் .

” நிறுத்தாமல் பேசுவீர்களே …இன்று என்ன இவ்வளவு அமைதி …? ” கிண்டலாக கேட்டாள் .

” வைசாலி இது விசயம் நாம் நிறைய பேசவேண்டும் .கொஞ்சநேரம் தனியாக ….”

” நான் வரமாட்டேன் …” பட்டென கூறினாள் .” உங்கள் பணக்கார செய்கைகள் எதுவும் எனக்கு ஒத்துவராது .அதனால் நாம் இருவரும் …” பிரிந்துவிடுவோம் எனக் கூற மனமில்லாது அவள் நிறுத்தியது போலவே , அதனை கேட்க மனமில்லாது அவசரமாக மனோகரனும் இடைமறித்தான் .

” வைசாலி முன்பே நான் உன்னிடம்  என்னை விட்டு பிரியக்கூடாது என்று கேட்டிருக்கிறேன்.நீயும் சம்மதித்திருக்கிறாய் …”

” ஆமாம் நீங்கள் உங்கள் இஷ்டப்படி ஊர் சுற்றிவிட்டு வருவீர்கள் .நான் தலையில் கூடையோடு நளாயினியாக உங்களுக்காக காத்திருக்க வேண்டுமோ…..”

” எனக்காக காத்திரு .நளாயினியாக இல்லை .என் மனங்கவர்ந்த ராதையாக …” உணர்ச்சியுடன் மனோகரன் இதனை கூற இளக தொடங்கிய மனதை இறுக பிடித்தபடி …

” ஓ….ராதை …அப்போது தாங்கள் கோகுல கண்ணனோ …ஆமாம் ..அது உண்மை போலத்தான் தெரிகறது ….” ஏற இறங்க அவனை பார்த்தபடி நக்கலாக  சொன்னாள் .மனோகரனின் முகம் கறுத்தது.

” நான் ராமன் இல்லை வைசாலி .இது வரை அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. ஆனால் என்று உன்னை சந்தித்தேனோ ..அன்றிலிருந்து ராமனாக இல்லாமல் போனோமே ..என ஒவ்வொரு நொடியும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன் …”

” அன்று அம்ருதாவுடன் நீ என்னை பார்த்தாயே …அதுதான் என் வாழ்விலேயே மிக மோசமான நிமிடம் என நான் நினைக்கிறேன். ” மனோகரனின் குரலில் மிகுந்த வருத்தமிருந்த்து.

உண்மையாக இவன் வருத்தம்தான் படுகிறானோ …? விநாடிக்கும் குறைவான பொழுதில் நினைத்துவிட்டு தன்னையே உலுக்கிக்கொண்டாள் வைசாலி .

” நீ நிலவு போன்றவள் வைசாலி .புள்ளிகளற்ற , மாசற்ற , சுத்தமான அதிசய நிலவு  .அது போலவே உனக்கு இணையாக சுத்தமானவனாக என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் .அதன் பின்தான் உன்னை நேரில் சந்திக்க வேண்டுமென்றுதான் அன்று உன்னை ஏர்போர்ட்டிற்கு வரவேண்டாமென்றேன் .” மெல்லிய குரலில் கூறினான் .

.சே …உடனே இந்த இடத்தை விட்டு போக வேண்டும் .இவன் பேச்சில் வல்லவன் என தெரியும்தானே.இன்னும் கொஞ்ச நேரம் இங்கிருந்தால் ‘ போய் அம்ருதாவை பார்த்துவிட்டு வாருங்கள் என என் வாயாலேயே சொல்ல வைத்து விடுவான் .




இந்த எண்ணம் தோன்றவும் வெளியேறி விட எண்ணி மீண்டும் வாசலை பார்த்தாள் . தலையாட்டி மறுத்தபடி வழியை நன்றாக மறைத்து நின்றான் அவன் .அவனை முறைத்தபடி நிமிர்ந்தவள் திகைத்தாள் .திருத்தமான அவனது புருவங்களும் , அதனருகிலிருந்த சிறு தழும்பும் பார்வையில் விழுந்த்து .

இந்த தழும்பு முன்பு காயம் பட்டபோது ஆழமாக இருந்திருக்க வேண்டும் .இப்போது அழுத்தம் குறைந்து மங்கலாக தெரிகிறது .இவ்வளவு ஆழமாக எப்படி அடி பட்டிருக்க கூடும் …? வைசாலியின் மனதினுள் இப்படி யோசனை ஓடும்போது …

” இது எனக்கு ஆறு வயதிருக்கும் போது மாடிப்படியில் ஏறும்போது சறுக்கி விழுந்த்தில் அடிபட்டது .அப்போதே எட்டு  தையல் போட்டார்களாம் …” தனது தழும்பை ஒற்றைவிரலால் தொட்டுக்கொண்டு வைசாலியை பார்த்தபடி கூறினான் மனோகரன் .

மனோகரனும் , வைசாலியும் பார்த்துக்கொண்டது , அன்று ரோட்டில் வைத்து , பிறகு ஹோட்டலில் வைத்து …என்று மொத்தமாக பத்து நிமிடங்கள்தான் இருக்கும் .அதன்பிறகு போனில்தான் பேசிக்கொண்டார்கள் .அப்போதும் போனில் போட்டோ அனுப்பி ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே வந்த்தில்லை .முதலில் மனதில் தங்கிய , சரியாக யாரென உணராத போதே ஒருவரையொருவர் பரஸ்பரம் ஈர்த்த அந்த முதல் உருவத்தையே மனதில் பதித்து தங்கள் காதலை சுமந்திருந்தனர் இருவரும் .

அதன்பிறகு …இதோ இப்போதுதான் ஒருவரையொருவர் நேரில் பார்க்கிறார்கள் .நான்கு மாதங்களாக குரல் வழியாக மட்டுமே தங்கள் அன்பினை , காதலை சொல்லாமல் சொல்லியபடியிருந்த இரு இளம் நெஞ்சங்களும் இப்போது நேரில் கண்டதும் ,பொங்கி வழிந்த காதலில் தவித்த உள்ளங்கள் நெக்குருக, விழிகள்  ஆர்வமுடன் ஒருவரையொருவர் தின்றன.

உணர்ச்சியுடன் ” சாலி …” என அழைத்தபடி மனோகரன் ஒற்றை ஆட்காட்டி விரலை அவளை நோக்கி நீட்டி ” உனக்கு இந்த மூக்குத்தி மிக அழகு ..தெரியுமா …? ” என்றான் .அவளின் மூச்சுக்காற்று ஆர்வமுடன் அவனது விரலை தீண்டியது .

திடுக்கிட்டாள் வைசாலி .இதென்னதிது …எப்படி இவ்வளவு அருகில் வந்தேன் …வெளியேறும் எண்ணத்தில் அவள் ஓரெட்டு எடுத்து வைத்திருக்க , மறுக்கும் எண்ணத்தில் அவனும் ஈரெட்டு எடுத்து வைத்திருக்க ,அந்த சிறிய அறையில்  இருவருமாக அருகருகே வந்திருந்தனர் .இருப்பதே தெரியாமல் அவள் மூக்கில் மினுங்கிக் கொண்டிருக்கும் அந்த மூக்குத்தி அருகே நீண்டிருந்த்து மனோகரனின் ஒற்றைவிரல் .

இவன் …எவ்வளவு தைரியமிருந்தால் அவளை தொட வருவான் .தன் முகத்தருகே நீண்டிருந்த அவன் விரல்களால் கலவரமடைந்து அவசரமாக பின்னடைந்தாள் .” போங்கள் ..உடனே போய்விடுங்கள் இங்கிருந்து …உடனே …ப்ளீஸ் …” கத்தினாள் .




அப்போது திறந்திருந்த கதவு வழியாக உள்ளே நுழைந்த அம்ருதா ” ஹாய் மனோ …” என கத்தியபடி அவனை பின்னிருந்து அணைத்துக்கொண்டாள் .” என்னை பார்க்கத்தானே வந்தீர்கள் டியர் ” என்ற கொஞ்சலுடன் .

உடலெல்லாம் தீ பிடித்தாற் போல் எரிய , வெளியேறியே ஆக வேண்டுமென்ற எண்ணத்தில் , வழியில் நின்ற மனோகரனை லேசாக உரச நேர்வதை கூட பொருட்படுத்தாமல் வெளியே ஓடினாள் வைசாலி .வாசலை தாண்டும் போது ” உனக்கு கொஞ்சம் கூட டீசன்ஸியே கிடையாதா …? ” என்ற மனோகரனின் கோப  குரல் காதில் விழுந்தது.

வேகமாக வெளியே வந்தவளை அவளது வழக்கமான மரத்தடி வேறு வேதனைபடுத்த , இங்கே இருக்கவே முடியாது என்ற முடிவுடன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறினாள் .

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!