Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 16

16

சிறு துளையிலும் நுழையும் உன் 
மாயப்புகையல்ல …என் நேசம் 
கல்லுடைத்து வெளிவர துடிக்கும் 
விதையின் வாதை .

இண்டு , இடுக்கு கிடைத்தால் கூட எப்படி …இப்படி புகை போல் காதலால் நிரம்புகிறான் ..? எனக்கெல்லாம் மிக கடினமாக கல்லுடைப்பது போல் இருக்கிறதே இந்த காதல்  …வைசாலியின் மனம் கவிதையாய் காதல் வாசிக்க , தன்னை நெருங்கியவனை என்னென்று தோன்றாத உணர்வுடன் பார்த்தாள் .




அவள் பார்வையில் என்ன உணர்ந்தானோ …ஒற்றை விரலால் அவள் முகத்தினடியில் கை வைத்து முகத்தை தூக்கி , அவள் விழிகளுக்குள் ஆராய்ந்தான் .சுற்றிலுமுள்ள உலகமே நிசப்தம் ஆனது போல் , எங்கோ விண்ணில் சுழலும் கோள்களுக்கிடையே தானும் சுழல்வது போன்ற ஒரு மாயவலையில் சிக்குண்டாள் வைசாலி.

சிறிது நேரம் சென்றே , தன்னை தொட்டிருந்த அவன் நுனி விரலின் தீத்தீண்டலை உணர்ந்தவள் , ” இது போல் தொடுதல்களில் என்னை வசப்படுத்தி விடலாமென்று நினைத்தீர்களா ..? அந்த அம்ருதாவை போல ….? ” என்றாள் .

தீச்சுட்டாற் போல் விரல்களை எடுத்துக் கொண்டவன் ” நீ என்னை மிகவும் காயப்படுத்துகிறாய் வைசாலி ” என்றான் வேதனை நிரம்பிய குரலில் .

” உங்களை விடவா …? “

பதிலின்றி அவளை பார்த்தபடி இருந்தவனை தவிர்த்து திரும்பிய போது ” வைசாலி ” என வேதாவின் குரல் கேட்டது .ஸ்டுடியோவின் பின்புறம் வந்து நின்று அங்குமிங்குமாக வைசாலியை தேடிக்கொண்டிருந்தாள் அவள் . அவள் கண்களில் பட்டுவிடக்கூடாதே என அவசரமாக கிளம்பினாள் …

” என் மனதில் இப்போது பட்ட காயத்திற்கு நீ பதில் சொல்லியே ஆகவேண்டும் வைசாலி ” குரல் குறைத்து இவளிடம் முணுமுணுத்தவன் சட்டென விலகி மறைந்தான் .

வேதா இவளை நெருங்கி வந்தபோது காற்றாய் காணாமலேயே போயிருந்தான் .வேதா பார்க்க என்னிடம் பேசிக்கொண்டிருந்தால் அவனது ஆசைநாயகிக்கு பதில் சொல்ல வேண்டுமே …கசப்புடன் நினைத்தபடி உள்ளே நடந்தாள் வைசாலி .

—————

” இன்று அந்த பங்களா ரெஜிஸ்ட்ரேசன் வைசாலி .என் பெயரில் மாற்ற போகிறான் . முதலில் பங்களா …பிறகு அவன் …விரைவில் இரண்டும் என் வசமாகும் “

அமருதா வாழ்க்கையை கொண்டாடிக்கொண்டிருந்தாள் .வைசாலி வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருந்தாள் .இல்லை …இனி இங்கே வேலை செய்யமுடியாது ….இவளது வெற்றிகளை கேட்டபடி இவளருகில் இருப்பது மிகக் கடினம் .என்ன செய்ய போகிறேன் நான் …? எப்படி என் குடும்பத்தை கொண்டு செல்ல போகிறேன் .வைசாலிக்கு யோசிக்க யோசிக்க தலை வெடித்து விடும் போல் இருந்த்து .

ஒரு வாரமாக மனோகரன் அவள் கண்களிலேயே படவில்லை .ஸ்டுடியோ பக்கமே வரவில்லை .நல்லதுதானே …அவனை பார்க்க கூடாது என்றுதானே நானும் நினைக்கிறேன் .என தன்னைத்தானே சமாளித்துக் கொண்டாலும் , ஏனோ …ஏதோ ஒரு விரும்பத்தகாத நிகழ்வை உள்ளம் எதிர்பார்த்துக் கொண்டே இருந்த்து.

நான்கு நாட்கள் அவனை பார்க்காவிட்டால் இப்படியா தோணுவது …? ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு அவனை தினமும் பார்த்துக்கொண்டா இருந்தாய் …? இல்லை பேசிக்கொண்டிருந்தாயா …? கோபமாக தன் மனதுடன் தானே பேசிக்கொண்டாள் .

திடீரென தன் நெருக்கத்தில் ஒரு ஆள் நிற்க கண்டு வேகமாக பின்னால் போனாள் .ஏதோ நினைவில் நடந்து கொண்டிருந்தால் , இப்படியா மோதுவது போல் வந்து நிற்பது ..? கோபமாக நிமிர்ந்தவளை ” ஈ” யென பல்லைக் காட்டியபடி அவன் பார்த்தான் .

இவன் ஏதோ ஒரு டைரக்டரின் அஸிஸ்டென்ட் .முன்பே ஒரு முறை நடிக்க வருகிறீர்களா …? என இவளிடம் கேட்டு இவள் மறுத்து , அவன் நடித்தே ஆகவேண்டுமென விரட்டி …பிறகு அம்ருதா தலையிட்டு அவள் நடிக்கமாட்டாள் என அவனிடம் சண்டையிட்டு வைசாலியை மீட்டிருந்தாள் .கொஞ்சநாட்கள் இவளை முறைத்துக் கொண்டே திரிந்தான் .பிறகு கண்ணிலேயே படவில்லை .இப்போது எதற்கு வந்து தொலைந்தானோ …?




அவனை முறைத்தபடி கடக்க முயன்றவளின் கைகளை பிடித்தான் .பதறி விலகினாள் .ஒற்றைவிரலை ஆட்டி அவனை எச்சரித்தவள் வேகமாக வந்து ஸகூட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினாள் .அவன் தொட்ட இடம் அமிலம் பட்டது போல் எரிந்த்து .

நாயே ..! இருடா …உன்னை என் மனுவிடம் சொல்லி ….தன் போக்கில் எண்ணிவிட்டு , பிறகு தன்னிலை புரிந்து தலையை குலுக்கி தன்னை மீட்டுக்கொண்டாள் .இல்லை …அவன் வரமாட்டான் …அவன் வர தயாரென்றாலும் ..நான் அவனிடம் போக போவதில்லை …இந்த நினைப்பு மிகுந்த துயரத்தை கொடுக்க கண்கள் கலங்கி எதிர்ப்படும் வாகனங்கள் மங்கலாக தெரிய தொடங்க வண்டியை நிறுத்தி கண்களை துடைத்துக்கொண்டாள் .

ஆறு மாதங்களுக்கு முன்பு வரை , இவனில்லாமல்தானே வாழ்ந்து வந்தேன் .என்னை நானைதானே பார்த்துக்கொண்டேன் .இப்போது மட்டும் எதற்கு இந்த சூன்யம் …? எல்லாம் இந்த மனது படுத்தும் பாடு .இதனை கட்டுப்படுத்தி விட்டால் எல்லாம் சரியாகிவிடும் .தன்னையே தேற்றிக்கொண்டாள் .

இனி அம்ருதாவிடம்  நிச்சயம் வேலை செய்ய முடியாது .வெளியேறிவிட வேண்டும் .வேறு வேலை தேடவேண்டும் என முடிவு செய்து கொண்டாள் .வேலை பற்றிய சிந்தனைக்கு முயன்று மனதை திருப்பினாள் .ஒவ்வொரு சிக்னலில் நிற்கும்போதும் வேலை அது …இதுவென …சிந்தனையில் இருந்தாலும் கண்கள் சாலையில் மனோகரனின் ரோல்ஸ்ராய் காரை தேடியது .சிறிதுநேரம் கழித்தே அதனை உணர்ந்த வைசாலி தன்னைத்தானே கடிந்துகொண்டாள் .

வீட்டிற்கு வரவும் அம்ருதாவிடமிருந்து போன் .படத்தில் முன்பே எடுத்த ஒரு காட்சியை ரீ ஷூட் பண்ணவேண்டுமாம் .அதே மேக்கப் திரும்ப போடவேண்டும் உடனே வா என்றாள் .

” மேடம் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் …”

” நானும் வீட்டிறகு வந்துவிட்டேன் வைசாலி .இனித்தான் கிளம்பி வர போகிறேன் .அப்போதே சொல்ல நினைத்தேன். நீதான் இப்போது போன் வைத்துக் கொள்வதில்லையே .அதனால் நீ வீட்டிறகு போகும் வரை காத்திருந்து போன் செய்தேன் .இங்கே நான் கிளம்பிவிட்டேன் .நீயும் கிளம்பி வா ….” என்றாள் .

வேறு வழியின்றி மீண்டும்  கிளம்பினாள் வைசாலி .மணி இப்போதே ஆறு ஆகிவிட்டதே .இனி போய் திரும்புவதற்குள் இருட்டிவிடுமே ….யோசித்தபடி வந்தாள் .

ஸ்டுடியோ மிகவும் அமைதியாக இருக்க குழம்பினாள் .அம்ருதாவிடம் கேட்போமென்றால் கையில் போன் இல்லை .

” ஷூட்டிங் …மாடியில் …எல்லோரும் அங்கேதான் இருக்கிறார்கள் …” தகவல் தந்தவன் அந்த கேமெரா அஸிஸ்டென்ட்.மேலேயும் சத்தமில்லை .ஆனால் அது ஏ.சி ஹால் .சத்தம் வெளியே வராது என்றெண்ணியபடி கதவை திறந்து நுழைந்தாள் .ஒரே இருட்டாக இருந்த்து .ஏதோ லைட்டிங்குக்காக விளக்குகளை அணைத்திருப்பாரகளென எண்ணியபடி கண்களை தேய்த்தபடி நிமிர்ந்த போது விளக்குகள் திடீரென எரிந்து அவள் கண்களை கூச செய்த்து.

வந்த வெளிச்சத்தில் கேமெரா என எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. ஒரு ஆளை கூட காணோம் .இங்கே என்ன ஷூட்டிங் நடக்கிறது …? ஏதோ தவறாக பட வெளியே போய் விட திரும்பியவள் திடுக்கிட்டாள் .அந்த அஸிஸ்டென்ட் டைரக்டர் கதவுகளை மூடிவிட்டு இளித்துக்கொண்டிருந்தான் .

” ஏய் …என்ன செய்கிறாய் …? கதவை திற …”

” புதுசா ஒரு படம் எடுக்கிறேன் .கதாநாயகியாக நடிக்க வான்னு எவ்வளவு டீசன்டாக கூப்பிட்டேன் .பெரிய இவா மாதிரி அலட்டிக்கிட்டீயே….உனக்கெல்லாம் நல்ல படத்தில் நடிக்கிற கொடுப்பினை இல்லை .இந்த மாதிரி படத்தில்தான் நீ நடிக்கனும்னு உனக்கு தலையில் இருக்கு ….” பேசியபடி நடந்து அவளை நெருங்கினான் .




வைசாலிக்கு திடுக்கென்றது .இவன் என்ன சொல்கிறான் …” எ…எந்த ..மா…மாதிரி படம் ….? ” திணறிக் கேட்டாள் .

அவன் மேலே …அங்கே ..இங்கேயென சுற்றிக் கை காட்டினான் .” எல்லா இடமும் கேமெரா .இப்போது நாம் இருவர் மட்டும்  நடிக்க போகும்  படத்திற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன் .கோணல் சிரிப்புடன் அருகே நெருங்கினான்.

அவன் சொல்வது புரிந்துவிட உடலெல்லாம் நடுங்க எடுத்து அடிக்க கையில் என்ன கிடைக்கும் என தேடினாள் .ஐயோ மனோகரன் சொன்னானே .இங்கே உனக்கு பாதுகாப்பில்லையென்றானே …கேட்காமல் போனேனே …ஆனால் அவனே இப்படி என்னை அநாதரவாக விட்டுவிட்டானே …மனதிற்குள் அவனை திட்டி தீர்த்தாலும் , அவன் உருவத்தை மனம் முழுவதும் நிரப்பிக்கொண்டு அந்த தைரியத்தில்தான் போராடினாள் வைசாலி .

ஆயிற்று …அரைமணி நேரமாக அந்த அறையை சுற்றி சுற்றி ஓடியாயிற்று ..கையில் கிடைத்த சாமான்களையெல்லாம் எடுத்து எரிந்தாயிற்று .ஆன மட்டும் அவன் கை படாமலேயே தப்பியாயிற்று . ” ஓடு …ஓடு …இது போல் ஓடி ..ஓடி …ஷூட்டாகும் படத்திற்குத்தான் இப்போது நெட்டில் நல்ல மார்கெட் .” இளித்தபடி அவளை ஓடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்தவன் , ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அவளது முதுகுபக்கம் சுடிதாரை பிடித்து இழுக்க , அது நீளமாக கிழிந்து வந்த்து .கூடவே அவனது நகமும் ஆழமாக வைசாலியின் முதுகில் கோடிழுத்தது .

அப்போது கதவு படபடவென தட்டப்பட்டது .இப்போது இவன் போய் கதவை திறப்பான் , வெளியே ஓடி விடுவோம் என இவள் எதிர்பார்த்திருக்க , அலட்சியமாக தட்டப்பட்டுக்கொண்டிருந்த கதவை பார்த்தவன் , மீண்டும் அவளை விரட்ட தொடங்கினான் .ஆனால் இப்போது அதிகநேரம் வைசாலி ஓட வேண்டிய தேவை இருக்கவில்லை .

அடுத்த இரண்டே நிமிடங்களில் வெளியிலிருந்து கதவு திறக்கப்பட , வேகமாக உள்ளே வந்த மனோகரன் , அவனை அடித்து , துவைத்து எடுப்பதை கண்ணில் நீரோடு சுவரில் சாய்ந்து கீழே உட்கார்ந்து கொண்டு  பார்த்தபடியிருந்தாள் வைசாலி .சொல்லமுடியாத அமைதியும் , திருப்தியும் உடலையும் , உள்ளத்தையும் ஆக்ரமித்திருக்க , எழுந்து நிற்பதற்கும் உடலில் தெம்பில்லாமல் அப்படியே கிடந்தாள் .

” ராஸ்கல் …ஷூட்டா பண்ற …? இதோ இப்போ நீ என்கிட்ட  வாங்கினது எல்லாமே கேமிராவில் பதிவாகியிருக்கும் .இந்த மாதிரி வீடியோவுக்கும் நெட்ல நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கும் .நாளைக்கு நெட்ல ஏத்திவிடுறேன் பாரு …” அவனை தூக்கி அறைக்கு வெளியே எறிந்தான் .அவன் கீழே விழுந்து எழுந்து அலைய குலைய ஓடினான் .

” கீழேயிருந்து இன்னொரு சாவி எடுத்துக்கொண்டு வந்து கதவை திறந்தேன் . எனக்கு தகவல் சொல்பவர் கொஞ்சம் லேட்டாக சொல்லிவிட்டார் .அதனால்தான் இவ்வளவு கஷ்டம் உனக்கு …சாரிடா …” அவள் முன் வந்து நின்று அவள் எழுந்து கொள்ள கை நீட்டினான் .




நான் முன்பே சொன்னேனே ..கேட்டாயா …? உனக்கு அறிவில்லையா …? சொல் பேச்சு கேட்கலைன்னா இப்படித்தான் கஷ்டப்படனும் ….என்பது போன்ற குத்தல் பேச்சுக்கள் ஏதுமில்லாமல் , தான் தாமதமாக வந்துவிட்டேனென்று மன்னிப்பு கேட்டபடி எதிரே நிற்பவனை கண்ணில் வழியும் நீரோடு ஏறிட்டு பார்த்தாள் .

” அது யார் …? உங்களுக்கு தகவல் தருபவர் …? “

” இப்போது வருவார் .நீயே பார்த்துக்கொள் …” என்றவன் தனது கைகளை பற்றி எழுந்து கொள்ள முயற்சிக்காமல் அமர்ந்திருந்தவளை கேள்வியாக பார்த்தான் .

” சாலி …எழுந்திருடா …”

” ம்ஹூம் …” தலையசைத்து மறுத்தாள் வைசாலி .

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!