pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 35

35

” சவர்மா , ஆந்திரா சிக்கன் ப்ரை , சிக்கன் டிக்கி ,ப்ரான் பக்கோரா , எக் கட்லெட் , பிஷ் பிக்கிள் , நண்டு ரசம் …ம் ..மலபார் பிரியாணி , நாண் , புல்கா அப்புறம் ஸ்வீட்டுக்கு ரசமலாய் , கலாகன்ட் …” சுந்தரேசன் சொல்ல சொல்ல ” வாவ் ” போட்டுக் கொண்டிருந்தான் சசிதரன் .

” என்ன சொர்ணம் இத்தனை வெரைட்டியா ? எல்லாமும் நீயா பண்ணப் போற ? ” மனோரஞ்சிதம் ஆச்சரியமாக கேட்டாள் .

” இல்லைங்க மேடம் .இத்தனை ஐட்டமும் என்னால் எப்படி பண்ணமுடியும் ? அத்தோடு இந்த மாதிரி உணவுகளெல்லாம் செய்வதற்கு எனக்கு தெரியாதே ” 

உணவு பேச்சு பேசிக்கொண்டிருந்த அம்மாவும் , மகனும்… அதற்கு பதிலளித்து கொண்டிருந்த அம்மாவும் , மகனும் என நால்வரும் தேவயானிக்கு மிகுந்த எரிச்சலை கொடுத்துக் கொண்டிருந்தனர் .அங்கே… ஒருவன்  இக்கட்டான நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது இவர்களால் இப்படி கவலை இல்லாமல் பேசி சிரிக்க எப்படி  முடிகிறது ? 







இதோ …அவளுக்கு உள்ளூர ஏதோ நமநமத்துக் கொண்டே இருக்கிறதே… ஒரு மடக்கு தண்ணீர் கூட தொண்டைக்குள் இறங்க மறுக்கிறது .இவர்களால் எப்படி இப்படி ரசனையுடன் சாப்பாடு பற்றி பேச முடிகிறது ? நால்வரையும் வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் அவள்.

” திருச்சியிலிருந்து ஒரு பெரிய ஹோட்டல் கேட்டரிங்கில் சொல்லியிருக்கிறேன் மேடம் .அவர்கள்தான் வந்து அடுப்பு எல்லாம் செட் செய்து கொடுத்து , கடைசிவரை கூட இருந்து விட்டு போவார்கள் ”  சுந்தரேசன் விளக்கம் சொன்னான்.

” என்ன சுந்தர் திடீரென்று இதுபோல் மார்டனாக இறங்கி விட்டீர்கள் ? மண்பானை , மீன் குழம்பு ,  கருப்பட்டி பணியாரம் , சீனி சேவு இது எல்லாவற்றிற்கும் மேலாக மூலிகைச்சாறு,  கசாயம் , பச்சிலை இப்படித்தானே உங்கள் விடுதி இருக்கும் ? இப்போது கேம்ப் ஃபயர் எல்லாம் செட் பண்ண ஆரம்பித்து விட்டீர்களே ? ” சசிதரன் ஆச்சரியமாகக் கேட்டான்.

” மண் பானையும் , மூலிகையும் எங்கள் குடிலின் அடையாளம் சார் .அது இப்போதும் அப்படியேதான் இருக்கிறது .காலத்திற்கும் மாறாது அது .இந்த கேம் பயர் காலத்திற்கு ஏற்றார்போல் நாங்களும் கொஞ்சம் மாறுகிறோம் என்று காட்டுவதற்காக .இந்த ஐடியா கூட ரிஷிதரன் சார்தான் கொடுத்தார் ” 

” அட… அப்படியா ரிஷி கொடுத்த ஐடியாவா இது ? ” மனோரஞ்சிதத்திற்கு மிகுந்த ஆச்சரியம்.

” ஆமாம் மேடம் திருச்சியில் அந்த ஹோட்டலை அறிமுகப்படுத்தியது கூட ரிஷிதரன்  சார்தான் .அவர் சொன்னதால் தான் அவர்கள் இவ்வளவு தூரம் வந்து நமக்காக இந்த ஏற்பாட்டினை செய்வதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்கள் .அதுவும் எங்களுக்கு கட்டுபடி ஆகிற விலையில் …” 

” தொழிலில் இதுபோல உருப்படியான ஐடியாக்கள் கூட கொடுக்கிறானா அவன் ? சசிதரனுக்கும் ஆச்சரியம் தான்.




” என்ன சார் இப்படி கேட்டு விட்டீர்கள் ? ரிஷி சார் எவ்வளவு டிரிக்கியான யோசனைகள் எல்லாம் சொல்கிறார் தெரியுமா ? நீங்கள் அவரிடம் உட்கார்ந்து பேசிப்பாருங்கள் …பிறகு அவரைப் பற்றி தெரியும் ” 

தன் உடன்பிறந்தவனைப்பற்றி இன்னொருவனிடம் இருந்து தெரிந்து கொள்ளவேண்டிய நிலைமை வந்ததை எண்ணி ஒரு துணுக்குறல்  சசிதரனிடம் தெரிந்தது .அவன் வெறுமனே தலையசைத்து அமைதியாக இருந்தான்.

” என் தொழிலின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த போது, தொழிலை முன்னேற்ற வேண்டும் என்று யார் யாரோ கண்ட ஐடியாக்களையும் கொடுத்துக் கொண்டு இருந்தனர் .” சுந்தரேசன் இதனைச் சொன்னபோது சுனந்தா அவர்கள் அனைவருக்கும் எலுமிச்சை ரசம் கொண்டுவந்து கொடுத்துக்கொண்டிருந்தாள்.

கணவனின் குத்தல் புரிந்து பற்களை உள்ளூர நறநறத்தபடி வேகமாக உள்ளே திரும்பிவிட்டாள்.




” அப்போது தற்செயலாகத்தான் ரிஷிதரன் சாரை சந்தித்தேன் .எதேச்சையாக தான் அவரிடம் எனது தொழில் பற்றி பேசினேன் .அப்போது அவர் கொடுத்த ஐடியாக்களில் ஒன்று தான் இந்த கேம்ப்பயர் ” 

தற்செயலாக… எதேச்சையாக…. இந்த தற்செயலுக்கும் ,  எதேச்சைக்கும் பின்னால் அந்த ரிஷியுடைய மிகப்பெரிய திட்டம் இருப்பதை நீ அறிய மாட்டாய் சகோதரனே …என மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் தேவயானி. அவன் மிகவும் அபாயமானவன் என்றும் தனக்கு நினைவுறுத்திக் கொண்டாள்.

அபாயம் என்று அறிவுறுத்திய பிறகும் தீ தொட  ஓடும் பிஞ்சு பிள்ளையின் சுண்டு விரலென அவள் மனம் மீண்டும் ரிஷிதரனிடமே ஓடியது.

ஐயோ , அவனுக்கு என்ன ஆயிற்றோ ? மீண்டும் பரிதவிக்க துவங்கியது அவள் உள்ளம் .காலையில் அவள் போலீஸ் ஸ்டேஷனில் படபடத்து நின்றபோது யோசனையாய் அவளைப் பார்த்த சசிதரனின் கண்களில் லேசான சிந்தனை இருந்தது .இவளுக்கு ஏன் இத்தனை பதட்டம்…?

அவனுடைய அந்த சந்தேகப் பார்வையை கவனிக்கும் நிலையில் தேவயானி இல்லை .” சார் ப்ளீஸ் …ஏதாவது செய்யுங்க , யாரிடமாவது பேசுங்க… இப்பவே அவரை நாம் கையோடு கூட்டிக் கொண்டு போய்விட வேண்டும்.”  மீண்டும் மீண்டும் இதையே சொல்லி  படபடப்பாய் நின்றாள் அவள்.

” இதோ பேசிக் கொண்டுதான்மா இருக்கிறேன் .ஒன்றும் பிரச்சனை இல்லை .அவனை விட்டு விடுவார்கள் ”  தனது போனை காட்டினான்.




என்னத்தை பேசுறாரென்று தெரியலையே …அரெஸ்ட் பண்ணி இவரையும் சேர்த்து அங்கே  உட்கார வைக்கிறேன் என்றல்லவா  அந்த இன்ஸ்பெக்டர் கேட்கிறார் …எந்த அளவு இவரை நம்ப முடியும் …? தேவயானிக்கு  சசிதரன் மேல் நம்பிக்கையின்மை வளர்ந்து கொண்டே இருந்தது.

” யாரிடம் பேசுகிறீர்கள் சார் ? கமிஷனரிடமா ?அவரிடம் பேசினால் விட்டு விடுவார்கள் தானே சார் ? ” அவளுக்கு சசிதரனிடம் இருந்து அவனுடைய செயல்பாடுகளுக்கான

 நிறைய விளக்கம் வேண்டியது இருந்தது.

” இல்லைமா …கமிஷனரிடம் பேசவில்லை ” 

” ஐயையோ கமிஷனரிடம் பேசவில்லையா ? கமிஷனரை உங்களுக்கு தெரியாதா சார் ? அந்த அளவு பெரியவர்களிடம் பேசினால்தான்  இவரை விடுவார்கள். இவர் வேறு பைத்தியக்காரத்தனமாக நான்தான் செய்தேன் என்று துப்பாக்கியோடு வந்து சரணடைந்து இருக்கிறார். நாம் மிகவும் ஸ்ட்ராங்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் சார். ப்ளீஸ் சார்… கமிஷனரிடம் பேச முடிகிறதா என்று பாருங்கள் சார் …சும்மா இருக்காதீர்கள் சார் .யாரைப் பார்ப்பது யாரை பிடிப்பது …என்று யோசியுங்கள் சார்  .ப்ளீஸ் சார்… கொஞ்சம் பாஸ்ட்டா யோசியுங்கள் ” 

” ரிலாக்ஸ்… ரிலாக்ஸ் தேவயானி .ஏன் இவ்வளவு பதட்டம்  ?நான் சரியான ஆட்களிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன். இன்று இரவு ரிஷிதரன் இங்கே இருக்கமாட்டான். போதுமா ? ” சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்குள் போய்விட்டான் சசிதரன்.

தேவயானி பதட்டம் தணியாமல் உள்ளே போய் ரிஷிதரனை பார்த்தாள். அவன் வலது கையை தனது இடது தோளில் வைத்து அழுத்தி”  நான் ஷேப்தான் ” என்று செய்கையோடு உதட்டை அசைத்தான்.

இந்த ஆறுதல் தேவயானிக்கு போதுமானதாக இருக்கவில்லை .அவள் விழிகள் அலைபாய்ந்து மீண்டும் சசிதரனை அடைந்தது .சசிதரன் அமர்ந்திருக்க அந்த இன்ஸ்பெக்டர்  அவனுடன் பேசிக் கொண்டிருந்தார் . வியர்த்து வழிந்த தனது நெற்றியை அடிக்கடி கர்ச்சீப்பால் துடைத்தபடி இருந்தார்.

அங்கே அவரது டேபிளில் இருந்த துப்பாக்கி தேவயானியின் கவனத்தில் விழுந்தது .இவர்களுடைய ஆதாரம் இதுதானே …இதனை  தூக்கிக் கொண்டு ஓடிவிட்டால் … இப்படி யோசிக்கத் தொடங்கினாள் அவள்.




” முட்டாள்தனமாக எதையாவது யோசிக்காதே .இங்கிருந்து கிளம்பு .நான் வந்து விடுவேன் ” அருகில் குரல் கேட்க திரும்பிப் பார்த்தாள். அவள் அருகே இருந்த தண்ணீர் பானையில் நீர் மொண்டு குடித்துக் கொண்டிருந்தான் ரிஷிதரன்.




இவளுடன் பேசுவதற்காகவே தண்ணீர் குடிக்க வந்திருப்பான் போலும் . ஆனால் தேவயானிக்கு வேறு நினைவு வந்தது .எப்போதும் கையில் மினரல் வாட்டர் பாட்டிலுடன் இருப்பவன் .இப்போது இந்த பழைய மண்பானையில் இதோ இந்த பிளாஸ்டிக் டம்ளரில் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறான் .இதற்கு நீயும் ஒரு காரணம்… அவள் மனச்சாட்சி அவளை கொட்டியது.

” ஏன் இப்படி செய்தீர்கள் ? ” மெல்லிய குரலில் கேட்டாள்

” எல்லாம் சரியாகத்தான் செய்துகொண்டிருக்கிறேன் .நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. நீ கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை .இப்படி கலங்கி நிற்காதே  ஏஞ்சல் .ப்ளீஸ் போ .நான் வந்துவிடுவேன் ”  சொல்லிவிட்டு ரிஷிதரன் மீண்டும் அந்த பெஞ்சில் போய் அமர்ந்து கொண்டான்.

இதற்கு முன் எத்தனையோ சந்தர்ப்பங்களில் ரிஷிதரன் அவளை ஏஞ்சல் என்று அழைத்திருக்கிறான் . அந்த அழைப்பை ஒரு வகை அலட்சியத்துடன் கடந்து விடுவாள் தேவயானி. சில நேரங்களில் உணர்ச்சிகள் குவிந்து வழியும் அவனது ஏஞ்சலை கூட சுலபமாக கடந்து இருக்கிறாள். ஆனால் இப்போது… இந்த இக்கட்டான சூழ்நிலையில் இத்தனை பேர் சூழ இருக்கும் போது , ரகசியமாக அவர்கள் இருவருக்குமென மட்டுமாக  அழைத்த இந்த ஏஞ்சல் அவளை மிகவும் பாதித்தது.

பாதிப்பென்றால் விருப்பமான பாதிப்பு. மிக நல்ல மன நிலையில் கவலையற்ற சூழ்நிலையில் இருக்கும்போதுதான் ரிஷிதரன் அவளை ஏஞ்சல் என்று அழைப்பான் .இப்போது இந்த அழைப்பு அதுபோல் ஒரு சூழலை அவளுக்கு உணர்த்தியது .வாயால் விளக்கமாக சொல்லாத தைரியத்தை , செய்கையால் அழுத்தமாக தெரிவிக்காத பாதுகாப்பை , இந்த அவனது ஒரே ஒரு வார்த்தை அவளுக்கு கொடுத்தது  .அந்த ஏஞ்சலிலேயே பெருமளவு சமாதானமாகி விட்டவள் இரவுக்குள் ரிஷிதரன் வந்து விடுவான் என்ற சசிதரன் , மனோரஞ்சிதத்தின் பேச்சை நம்பி அங்கிருந்து வந்து விட்டாள்.

காலை 11 மணியளவில் ரிஷிதரனை அங்கே விட்டு விட்டு வந்தவர்கள்,  இதோ மாலை 5 மணி நெருங்கிக்கொண்டிருக்கிறது .இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் அவள் ரிஷிதரனின் வரவை எதிர்பார்த்து இங்கே காத்துக் கொண்டிருக்கிறாள் .ஆனால் மற்றவர்களோ எப்படியும் வந்து விடுவான் என்ற உறுதியோடு தங்களது மற்ற வேலைகளை கவனிக்கப் போய் விட்டனர்.

ரிஷி சாருக்காக என்றுதான் சுந்தரேசன் இன்றும் இந்த கேம்பயரை ஏற்பாடு செய்திருந்தான் .அங்கிருந்த அனைவருமே தங்கள் குடும்பத்தோடு,  குழந்தைகளோடு அருவிக்கரைக்கு வந்துவிட , உற்சாகம் தொடங்கியது சூழலில். பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் வாசிக்கும் ஒரு மெல்லிசை குழுவையும் சுந்தரேசன் ஏற்பாடு செய்திருக்க அருவியை ஒட்டி இருந்த பெரிய பாறை ஒன்றில் அவர்கள் தங்களது இசைக்கருவிகளை வைத்து செட் பண்ணிக்கொண்டு , மென்மையான இசைகளை வாசித்து சூழ்நிலையை மேலும் உற்சாகமாகி கொண்டிருந்தனர்.

முதலில் அவர்கள் சினிமா பாடலை பாட , பிறகு நாட்டுப்புறப் பாடல்களை சிலர் விரும்ப அதையும் பாடத் துவங்கினர் . பின்னர் பார்வையாளர்களுக்கு போட்டிகள் என சில சிறு விளையாட்டுகளை அவர்கள் ஆரம்பித்து வைக்க அவற்றிற்கான சிறுசிறு பரிசுகளும் வழங்கப்பட , குழந்தைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஏற்பாட்டில் நேரம் செல்லச் செல்ல பெரியவர்களும் குழந்தைகளாக மாறி கலந்துகொள்ள ஆரம்பித்தனர் .

மனோரஞ்சிதம் , சொர்ணம் இவர்கள் வயதை ஒத்த குடிலில் தங்கியிருந்த மற்றவர்களும் , குடில்களை கூட்டி பெருக்கி சுத்தம் செய்யும்  அறுபது வயது ஆயா எல்லம்மாவும் கூட இரு கைகளையும் தட்டி ஓசை எழுப்பியபடி உற்சாகத்தில் கலந்து கொண்டிருந்தனர் .




குழந்தைகளோடு குழந்தையாக மருதாணியும் இணைந்து விளையாண்டு  கொண்டிருப்பதை நெகிழ்வோடு பார்த்தாள் தேவயானி. இப்படி தன் வாழ்வை வேடிக்கையும் , விளையாட்டுமாக கழிக்க வேண்டியவள் .எப்படிப்பட்ட  கொடுமையில் மாட்டிக் கொள்ள இருந்தாள் …? மருதாணியின் நிலை பற்றிய எண்ணத்தை தொடர்ந்து அவள் மனம் மீண்டும் ரிஷிதரனிடமே வந்து நின்றது .

இவளுக்கு அவன் எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறான் ? அழிந்து போக இருந்த இவளது குழந்தை வாழ்வை காப்பாற்றி தந்திருக்கிறான் . வளமான எதிர்காலத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறான் .எல்லாவற்றையும் செய்துவிட்டு தப்பு செய்தவன் நானென அங்கே போலீசிடம் போய் உட்கார்ந்திருக்கிறான் .தேவயானியின் கண்கள் கலங்கத் துவங்கியது .சுற்றியிருந்த உற்சாகம் அவளுக்கு மிக வெறுப்பை தந்த்து .

எதற்காக இப்படி எல்லோரும் கூத்தடித்துக் கொண்டிருக்கின்றனர் …? எரிச்சலாய் அவள் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது , ஒலித்துக் கொண்டிருந்த இசை நின்றது .

” இப்போது நடனம்…அதற்கேற்றாற் போல் மியூசிக் போடப் போகிறோம் .எல்லோரும் …வயது வித்தியாசமின்றி எல்லோரும் ஆடலாம் ” இசைக்குழுவின் தலைவர் சொல்லிவிட்டு கைகளை அசைக்க தொடங்க நடனத்திற்கேற்ற இசை ஒலிக்கத் துவங்கியது .

கணவன் , மனைவியாக வந்திருந்தவர்கள் இணைந்து ஆடத் துவங்க , குழந்தைகள் தங்களுக்குள் கை கோர்த்து நடனமென குதிக்க தொடங்க , பெரியவர்கள் உட்கார்ந்தபடியே லேசான தோளசைவு , கை தட்டலென தங்கள் பங்களிப்பை செய்யத் தொடங்கினர் .




இப்போது வானம் முழுமையாக கருமைக்கு சென்றிருக்க  ,  முழுநிலவு மேகத்தை விட்டு வெளியே வந்து வெள்ளித் தாம்பாளமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அது தந்த ஒளியோடு  காதில் கேட்ட மயக்கும்  ஒலியும் சேர்ந்துகொள்ள , அப்போது அந்த அருவிக்கரை தேவலோகத்தின் கிளை ஒன்று போல் தோன்றத் துவங்கியது .ஏதோ ஒரு வசியத்திற்கு கட்டுப்பட்டது போல் அனைவரும் இசையில் மூழ்கியிருக்க தேவயானியின் மனது சூழ்நிலையோடு ஒன்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது .அப்போது….

அதோ… அங்கே வருவது … உட்கார்ந்திருந்த பாறையிலிருந்து எழுந்து நின்று விட்டாள் .பளீரென்ற நிலவொளி  வந்து கொண்டிருப்பவனை  தெளிவாக அடையாளம் காட்ட தேவயானி இமை சிமிட்ட கூட செய்யாமல் அவனை பார்த்தபடியே நின்றாள் .அவனது பார்வையும் இங்கே அவளுடைய மேல்தான் இருந்தது.  நடனத்துடன் அசைந்து கொண்டிருந்தவர்களுக்கு இடையே மெஸ்மெரிக்கப் பட்டவள் போல்

 மெல்ல அவனை நோக்கி நடந்தாள் .பார்வை கோட்டிலிருந்து இவளை நகர்த்தாமல் அவனும் இவள் அருகே வந்தான்.




நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டிருந்த இருவரும் அப்படியே ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றிருந்தனர். தேவயானியின் விழிகள் அவசரமாக ரிஷிதரனை  கண் , காது ,மூக்கு , வாய் என தொட்டுத்தொட்டு தடவி விட்டு மெல்ல கீழே இறங்கி சிறு பதட்டத்துடன் அவன் உடலில் படிந்தது .தோள் , மார்பு , கை ,கால் என ஆராய்ந்த்து.

ரிஷிதரன் தன் இரு கைகளையும் விரித்து காட்டினான் .” சிறு கீறல் கூட கிடையாது ” என்றான் .கண்ணாடி காகிதமாய் மின்னியது தேவயானியின் கண்கள்.

” ப்ச் …ஏன் ? ”  அவளது கண் கலங்களை அதட்டியவன் ,  நம்பிக்கை இல்லையா பார்க்கிறாயா  என்ற விழிக் கேள்வியோடு  அங்கே ஓரமாக ஒரு பாறையில் அமர்ந்து இருந்த எல்லாம்மாவை கைப்பற்றி எழுப்பி , ” பாட்டி நாம ரெண்டு பேரும் ஒரு டான்ஸ்  ஆடலாமா ? ” கேட்டுவிட்டு அவள் கை பற்றி  அணைத்தபடி  அசைந்து ஆட துவங்கினான் .

எல்லம்மா ” என்னங்கய்யா இது ? ”  கூச்சத்துடன் நாணி கோணினாள் .

இப்போதுதான் ரிஷிதரனை கவனித்துவிட்ட எல்லோரும் அவனருகே வரத் துவங்க , திருப்தியா  என்று புருவம் உயர்த்தி விட்டு ,  தனது கை கால்களின் ஸ்திரத் தன்மையை அவளுக்கு உணர்த்தியபடி பாட்டியுடனான தனது நடனத்தை தொடர்ந்தான் . தேவயானியின் இதழ்கள் பிரிந்து வெண்பற்கள் மின்னின. கண்களின்  நீர் துளி உற்சாகத்துடன் தெறித்து , வெண்ணிலா வெளிச்சத்தில் தரையில் விழுந்தது.

சொர்ணம் , சுந்தரேசன் என ஒவ்வொருவராக ரிஷிதரனை  சூழ்ந்துகொண்டு நலம் விசாரிக்கத் துவங்க , மெல்ல பின்னால் நகர்ந்து கொண்ட பின்தான் தேவயானி கவனித்தாள் . சசிதரனும் , மனோரஞ்சிதம் தள்ளியே நின்றிருந்தனர் .முகத்தில் மலர்ச்சி தெரிய ரிஷிதரனை பார்த்தபடி இருந்தனர் .தேவயானி யோசனையோடு அவர்கள் ஒதுக்கத்தை பார்த்தபோது மனோரஞ்சிதம் அவளை கவனித்து புன்னகைத்தாள்.

” நான் பக்கத்தில் போனால் ரிஷி இந்த இடத்தை விட்டு போய்விடுவான் .அதனால்தான் ….” தேவயானியின் பார்வைக்கு பதிலை வார்த்தைகளாக சொன்னாள் .

புரிகிறது என்பது போல் தேவயானி தலையசைத்தாள் .இது அவளும் முன்பு அறிந்த விஷயம் தானே…




” என்னம்மா தேவயானி இப்போது உனக்கு திருப்தியா ? எப்பா இவ்வளவு பதட்டம்…?  நீங்கள் கவனித்தீர்களா அம்மா ? ” சசிதரன் தாயிடம் கேட்க தேவயானி உதட்டை கடித்தாள்.




ஐயோ இவர்கள் கவனிக்கும்படி அப்படியா நடந்து கொண்டேன் …அவள் தயங்கி ரிஷிதரனை பார்த்த போது அவனும் இங்கேதான் கவனித்துக்கொண்டிருந்தான் .அண்ணனின்,  அம்மாவின் பேச்சுக்களை தெளிவாக கேட்டு விட்டான் போலும்.நிலவு  வீசிய வெள்ளிக்கதிர்களையும் தாண்டி அவன் முகம் கருத்தது.

சட்டென அந்த உற்சாக சூழலை விட்டு நகர்ந்து விட்டான் ”  நான் குடிலுக்கு  போகிறேன் ” 

சிறிது நேரம் கழித்து தேவயானி அவனைப் பார்க்கப் போனபோது , ” அப்படி என்ன உனக்கு என் மேல் தனி அக்கறை ? இனி இந்த மாதிரி நினைப்புகளை  எல்லாம் விட்டுவிடு .என் வழி வேறு .அதில் யாராலும் நுழைய முடியாது. நான் இப்போது இங்கிருந்து கிளம்புகிறேன் . இனி இந்த பசுமைகுடில் பக்கம் வர மாட்டேன் .நாம் இனி சந்திக்க போவதில்லை . குட்பை ” என்றான் . கற்பாறையின் நிச்சய கடினம் இருந்தது அந்த வார்த்தைகளில் .

What’s your Reaction?
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Eppa Samy ippo enna?deva avanoda muttuatai Vida Mano auntyai neruki visayatai vangi.teervu elithil

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!