kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 21

21

 

” அக்கா சுற்றி இருப்பவர்களை பாரேன் எல்லோர் கண்களிலும் பொறாமை அப்பட்டமாக மின்னுகிறது. எல்லாம் நம்முடைய இந்த சேலையை பார்த்துதான் .இப்படி ஒன்றுபோல் சேலை கட்டிக்கொண்டு நாம் வந்து நிற்பது எல்லோருடைய கண்களையும் உறுத்துகிறது ”  மிருதுளா காரைவிட்டு இறங்கும்போதே

 மதுராவின் காதில் கிசுகிசுத்தாள்.




 

ம்ம்…” என்றபடி மதுரா இறங்கி உள்ளே சென்றாள் .அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் மீட்டிங் ஹாலில் தான் ஏற்பாடு செய்திருந்த பங்ஷனில் கலிவரதன் தனது மருமகன் மகிபாலனை தொழில் நண்பர்களுக்கு அறிமுகம் செய்வித்தார்.

 

” ஒன்றிலிருந்து மூன்று வருடங்கள் வரை ஆகும் ஒரு கோடியா கப்பலை கட்டுவதற்கு .ஆறே மாதத்தில் ஒரு கப்பல்அதுவும் என்னுடைய கம்பெனியின் முதல் கப்பல் கட்டப்பட்டு முடிந்திருக்கிறது என்றால் அதன் முழு காரணமும் இவன்தான் .என் தங்கை மகன் மகிபாலன். இவனையே இனி என் தொழில் வாரிசாக நான் நியமிக்கிறேன் ” சொல்லி முடிக்க அந்த ஹால் முழுவதும் கை தட்டலில் நிறைந்தது.

 

” அக்கா அத்தானை பார்த்தாயாஃபுல் சூட்டில் எவ்வளவு அழகாக ஹாலிவுட் ஹீரோ போல் இருக்கிறார் ” மிருதுளா மகிபாலனின் மேலிருந்த கண்களை அகற்றாமல் சொல்ல மதுரா அவளை திரும்பி முறைத்தாள்.

 

” மகிபாலனை நம்பாதே மிருது .இதோ இதுபோல் விலை உயர்ந்த உடைகளுக்கும் இப்போது அப்பா அளித்தாரே அந்த தொழில் பதவிக்காகவும் அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அவருடைய குறி நம் சொத்துக்களும் தொழில்களும்தான் ” 

 




கடூரமான அக்காவின் இந்த வார்த்தைகள் மிருதுளாவின் மனதை மிகவும் பாதித்தது .அவள் நம்பமுடியாமல் மதுராவை பார்க்க அதற்குள் மதுரா வேறு இடத்திற்கு நகர்ந்து போயிருந்தாள் .இவ்வளவு நாட்களாக மதுராவும்  அவளுடன் சேர்ந்து மகி புகழ் பேசியவள்தான் .ஆனால் இப்போது அவளுடைய மாற்றத்தில் மிருதுளா மிகவும் குழம்பினாள் .அவள் கண்கள் மீண்டும் அக்காவைத் தேடி கண்ட போது  மதுரா இருந்த நிலையில் அதிர்ந்தாள்.

 

மதுரா அங்கே விருந்தினருக்கென  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஸ்கி கிளாஸில் ஒன்றை கையில் எடுத்து குடித்துக் கொண்டிருந்தாள் .ஐயோ இது என்ன கெட்ட பழக்கம்அம்மாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்களேஅத்தோடு யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்…? மிருதுளா மதுரா அருகில் போய் தடுக்க நினைத்தபோது அவள் வேறு இடத்திற்கு நகர்ந்து விட்டாள்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் மிருதுளாவால் மதுரா அருகே போகமுடியாமல் ஏதாவது இடையூறு வந்தபடியே இருக்க அல்லது அவளை அருகே அனுமதிக்காமல் மதுரா நகர்ந்துகொண்டே இருக்க தொடர்ந்து விஸ்கி குடித்தபடி இருந்த மதுராவை  வேதனையுடன் பார்த்தாள் மிருதுளா.

 




பார்ட்டி முடிந்து ஒவ்வொருவராக விடைபெற்று போய்க்கொண்டிருக்க மகிபாலனும்  மதுராவும் ஒரு காரில் ஏறுவதை பார்த்தாள் மதுரா. எங்கே போகிறார்கள்…?

 

” அப்பா அத்தானும் அக்காவும் எங்கே போகிறார்கள் ? ”  ஏதோ ஒரு அபாயத்தை மனம் உணர கலிவரதனிடம் கேட்டாள் .

 

” அவர்கள் நம் கப்பல் கட்டும் இடத்திற்குத்தான் போகிறார்கள் குட்டி .நாளை நமது கப்பல் வெள்ளோட்டம் விடப்பட போகிறது .அதற்கு முன் இன்று இரவு அதனை ஒருமுறை செக் செய்து விட சொன்னேன் .அதற்காகத்தான் போகிறார்கள் ” 

 

” நானும் போகிறேன் அப்பா. நான் இன்னமும் அந்த கப்பலை பார்த்ததே இல்லை ” 

 

” இதோ எல்லோரையும் அனுப்பிவிட்டு நானும் அங்கேதான் போகிறேன் குட்டி .என்னுடன் வாகலிவரதன் மற்றவர்களை பார்க்க போய்விடமிருதுளாவிற்கு அப்பா வரும் வரை பொறுமை இல்லை. தானே காரை எடுத்துக்கொண்டு அங்கே போனாள்அங்கே

 

” அந்த முட்டாள் ஜான்பீட்டரை கூட நான் உங்களுக்காகத்தான் பொறுத்துக் கொண்டு இருந்தேன் தெரியுமா ?” கத்தி கொண்டிருந்தாள் மதுரா.

 

” என்னை வேவு பார்க்கும் வேலையை நீ அவனுக்கு கொடுத்திருந்தாய் .என் பொறாமையை தூண்டுவதாக நினைத்துக் கொண்டு அவனோடு நெருங்கி பழகுவதாக காட்டிக் கொண்டிருந்தாய்இது எனக்கு தெரியும்.அவன்  நம்மிடம் வேலை பார்ப்பவன் மதுரா .அவனிடம்  நம் பிரச்சனைகளை இப்படி சொல்லலாமா  ?இது தவறு இல்லையா ? ” 

 

” தவறுதான் .ஆனால் உங்களை நினைக்கும் போது அதையெல்லாம் யோசிக்கும் நிலையில் நான் இல்லை .ப்ளீஸ் மகி என்னை தவிர்க்காதீர்கள் .நீங்கள் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்ய முடியவில்லை ” 

 

மகிபாலன் அமைதியாக நின்றான் ” இப்படி கல் மாதிரி நிற்காதீர்கள் மகி .பதில் சொல்லுங்கள் ” 

 

” என்னுடைய பதிலை நான் உனக்கு சொல்லி விட்டேன் .இனி புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை ” 

 

” மகிமதுரா ஆத்திரத்துடன் அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள் .மிருதுளா அதை பார்த்ததும் வேகமாக அவர்கள் அருகே ஓடினாள்.

 




” மது ..அக்கா  நீ என்ன செய்கிறாய் ?அத்தானின் சட்டையை விடு ” 

 

” ஏய் நீ எதற்காகடி இங்கே வந்தாய் ? ” 

 

மிருது நீ ஏன் வந்தாய்வீட்டுக்கு போ ” 

 

” நான் இந்த கப்பலை பார்க்க வந்தேன் அத்தான் .இங்கே உங்கள் இருவருக்குள் என்ன சண்டை ? “

 

” என்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் உன் அத்தான். சொல்லு அந்த ஜான் பீட்டர் சொல்வதையெல்லாம் நம்பிக்கொண்டு தானே என்னை ஒதுக்கி வைக்கிறாய். அப்படித்தானே….? உன் மனதில் என்னை பற்றி தப்பாக தானே நினைத்து இருக்கிறாய் ? ” 

 மதுரா கத்தினாள்

 

” மதுரா நீ இப்போது நிதானத்தில் இல்லை .நாம் எல்லாவற்றையும் நாளை காலையில் பேசிக்கொள்ளலாம்”  மகிபாலன் நிதானமாக பேசினான்.

 

” ஆமாம் ஏன் அக்கா இந்தக் கெட்டப் பழக்கம்இதனை எப்படி பழகிக் கொண்டாய் ? ” 

 

” இதோ இவரால்தான் .இந்த துரோகியால்தான் ” மதுரா உளறல் குரலுடன் மகிபாலனை சுட்டிக்காட்டினாள்.

 

” உன்னுடைய ஆகாத பழக்கத்திற்கு அவர் என்ன செய்வார் அக்கா ,? ” 

 

” இதற்கெல்லாம் காரணமே இவர்தானேஇவர் என் வாழ்க்கையையே பாழடித்து விட்டார் ” 

 

” போதும் அக்கா நிறுத்து .இனியும் அவர் மேல் ஒரு பழிச்சொல் சொல்வதற்கும் நான் விடமாட்டேன் ” 

 

” ஏய் உனக்கு என்னடி அவ்வளவு அக்கறைநான் ஏமாந்தவள் . நான் அப்படித்தான் பேசுவேன் .எனக்கு நியாயம் கிடைக்கும் வரை பேசிக்கொண்டே இருப்பேன் .மிருதுளா நான் சொல்வதை நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள் .இந்த மகிபாலனை நம்பாதே. இவன் பிராடு .நம்முடைய சொத்துக்களை பறிப்பதற்கு வந்திருக்கிறான்.. முதலில் என்னை வளைக்கப் பார்த்தான்அது முடியாததால் இப்போது உன்னை…” 

 




” மதுரா ”  மகிபாலனின் குரலில் அந்த இடமே அதிர்ந்தது . ” போதையில் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டு இருக்காதே .முதலில் இங்கிருந்து போ ” 

 

” மாட்டேன் எனக்கு நீதி கிடைக்கும் வரை இங்கிருந்து போகமாட்டேன். சொல்லு எதற்காக எனக்கு துரோகம் செய்தாய்நாய்க்குட்டி போல் ஆறு மாதங்களாக உன்னை சுற்றி சுற்றி வந்தேன் .முதலிலேயே உன்னை பிடிக்கவில்லை என்று சொல்லியிருக்கலாமேஎதற்காக நம்ப வைத்து கழுத்தறுத்தாய் ?”  அவன் சட்டையை பிடித்து இழுக்க மீண்டும் அவர்கள் இருவருக்கும் இடையில் வந்தாள் மிருதுளா 

 

 

” அக்கா அவரை விடு .நீ அவரை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய்

 

” என்னைவிட பெரிய மனுஷியாடி நீ  ? அப்படி என்ன இவரைப்பற்றி புரிந்து வைத்திருக்கிறாய் ? ” 

 

” நிறைய புரிந்து வைத்திருக்கிறேன் .இவர் பெண்களை மதிப்பவர். நம் குடும்பத்தை போற்றுபவர் .நம் தொழிலை காத்து உயர்த்துபவர் .என் மனதில் இடம் பிடித்திருப்பவர் .ஆமாம் அக்கா நான் மகி அத்தானை  மிகவும் விரும்புகிறேன் .அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் ” 

 

மூவருமாக ஒருவரை ஒருவர் பிடித்து தள்ளியபடி வாக்குவாதத்தில் இருந்தபோது மிருதுளா இதைச் சொல்ல மகிபாலன் தன் வேகம் அனைத்தும் தொலைத்து சிம்னிக்குள் எரியும் தீபமாக ஒளிவீசி நின்றான். அவன் விழிகள் தீராத தாகத்துடன் மிருதுளாவை அவள் பேச்சை சொட்டுச் சொட்டாக ரசித்து பருகின.

 

” குட்டி ஒருநாள்கூட இதை என்னிடம் சொன்னது இல்லையேடா ”  காதல் கனிந்து வழிய அவளைப் பார்க்க மிருதுளாவும் அந்நேரம் அவனையே பார்த்தாள் ” சொல்வதற்கு சரியான நேரம் கிடைக்கவில்லை அத்தான் ” பருத்தி பூவை விட மென்மையாக இருந்தன அவள் வார்த்தைகள்.

 

சற்று முன் அங்கே நடந்த வாக்குவாதத்தை சுத்தமாக மறந்து போயிருந்தனர் இருவரும் .ஒருவரை ஒருவர் விழியால் மென்று தின்றனர் .இவை எல்லாவற்றையும் அவர்களின் மிக அருகே இருந்து பார்த்த மதுராவின் முகம் செந்தனலாந்  ஜொலித்தது. தான் மீண்டும் முட்டாளாக்கப்பட்டதாக உணர்ந்தாள் .இருவருக்குமிடையே கை நுழைத்து இருவரையும் எதிரெதிர் கோணத்தில் தள்ளினாள்.

 




” மகிபாலன் கடைசியாக கேட்கிறேன் என்னை கல்யாணம் செய்து கொள்ள முடியுமா முடியாதா ? ” ஆக்ரோஷமாய் உறுமினாள்.

 

அவளது கேள்வி அதிர்ச்சியாய் மிருதுளாவின் மூளைக்குள் இறங்கியது .அக்காவும் அத்தானும் கல்யாணம் செய்துகொள்ள பேசுகிறார்களாநான் தவறு செய்து விட்டேனோ  அவள் கலங்கினாள்.

 

” இல்லை முடியாது ” உறுதியாக ஒலித்தது மகிபாலனின் குரல்.

 

நீ ஏமாற்றி விட்டாய் .என்னை ஏமாற்றி விட்டாய் .நான் உன்னை விடமாட்டேன்ஒரு மாதிரி வெறி பிடித்தவள் போலானாள் மதுரா .அவள் கண்கள் பரபரவென்று தேட கட்டி முடித்திருந்த அந்த கப்பலில் இருந்த பெரிய சுத்தியல் அவள் கண்ணில் பட்டது .ஓடிப்போய் அதனை எடுத்தவள்

 

”  இதோ இந்த கப்பலை காட்டித்தானே என் அப்பாவை மயக்கினாய்இதை வைத்து தானே இவளையும் மயக்கப் பார்க்கிறாய்இதனை நான் இல்லாமல் செய்து விடுகிறேன். நாளை நீயும் அப்பாவும் எல்லோர் முன்பும் அவமானப்பட்டு நில்லுங்கள் .இனி உன் தொழிலும் கிடையாது .உனக்கு திருமண வாழ்வும் கிடையாது ” சொன்னவள் அந்த சுத்தியலை சுழற்றி கப்பலில் ஆங்காங்கே வெறியோடு அடிக்கத் தொடங்கினாள்.

 

அந்த நேரத்தில்தான் நான் வந்தேன்இப்போது கதைக்குள் வந்தார் கலிவரதன்.

 

மாமா நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் .நானே முடிக்கிறேன்மகிபாலன் கண்டிப்பாக சொல்ல கலிவரதன் மறுத்தார்.

 

இதுவரை நீ சொன்னது போதும் மகி. இனி என்னுடைய பங்கு .குட்டி ஆறு மாதமாக மகிபாலனின் கடுமையான உழைப்பு .அதற்கு முன்பே மூன்று வருடங்களாக இந்த தொழிலை ஆரம்பிப்பதற்கான என்னுடைய உழைப்பு .எல்லாவற்றையும் ஐந்தே நிமிடங்களில் அடித்து நொறுக்க துடித்துக்கொண்டிருந்தாள் மதுரா . நாங்கள் அவளைத் தடுத்துக் கொண்டிருந்தோம் ” 

 

” கப்பலின் மேல் தளத்தில் நாங்கள் நின்றிருந்தோம் .அங்கே பலகைகளை உடைக்க முயன்று கொண்டிருந்தவள் திடீரென்று கப்பலின் எஞ்சினை நோக்கி ஓடத் துவங்கினாள். மகிபாலன் அவள் பின்னால் ஓடி தடுத்து இழுத்து வந்தான் .தான் நினைத்தது நிறைவேறாத ஆத்திரத்தில் மதுரா மகிபாலன் பக்கம் தன் வெறியை திருப்பினாள்.

 

” நீ வேண்டாம்எனக்கு வேண்டாம்செத்துப் போ ” கத்தியபடி சுத்தியலை ஓங்கினாள்.

 

” என்னை காத்துக் கொள்ள அந்த சுத்தியலை அப்படியே அவள் பக்கம் திருப்பினேன் .அதில் அவள் தலையில் அடிபட்டு இறந்து போய்விட்டாள் ” கலிவரதனை  இடையிட்டு மகிபாலன் சொல்லி முடித்தான்.

 




” மகி ”  கலிவரதன் அதட்ட ” உண்மையை சொல்ல தயங்கக்கூடாது மாமா. மிருது நடந்ததை நான் சொல்லிவிட்டேன். சூழ்நிலையால் மதுராவை  நானே கொல்லும் நிலைமை வந்துவிட்டது. இதற்கு நீ என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன் ” தண்டனையை ஏற்பவன் போல் கைகட்டி அவள் முன் தலை குனிந்து நின்றான் மகிபாலன்.

 

அவன் முகத்தை பற்றி நிமிர்த்திய மிருதுளாவின் கண்களில் ஒருவித ஒளி மின்னியது .அவளுடைய அடுத்த கை தரையில் கிடந்த அந்த பெரிய சுத்தியலை எடுத்தது.

 

 

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!