karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 24

24

 

 

மறுநாள் அம்மா பாட்டியோடு உள்ளூரில் பத்திரிக்கை வைப்பதற்காக சில சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போய்விட்டு திரும்பியிருந்தாள் ஆராத்யா.. இந்த புது வேலை அவளுக்கு உற்சாகமாக இருந்தது.. அவர்கள் வீட்டிற்குள் நுழையும் போது பரமசிவம் கோபம் கொப்பளிக்கும் முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தார்.. சதுரகிரி வீட்டிற்குள் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்.. சுப்புலட்சுமி கலங்கிய முகத்தோடு ஓரமாக நின்றிருந்தாள்..
“என்னங்க என்ன ஆச்சு..? ஏன் எல்லோரும் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள்..?” வரலட்சுமி கேட்டபடி கணவன் அருகில் அமர்ந்தாள்..
“நம்ம தலையெழுத்து எப்பவும் நிம்மதியாகவே இருக்கக் கூடாதுன்னு நம்ம தலையில் எழுதியிருக்குது போல..”
“அப்பா ஏன்பா இப்படி பேசுறீங்க..? என்ன நடந்தது..?” மனோரமா பதட்டத்துடன் தந்தையருகில் அமர்ந்தாள்..




பரமசிவம் ஆதரவுடன் மகள் தலையை வருடினாள்..
“உன் வாழ்க்கை இப்படியாகிவிட்டதே மனோம்மா..”
“என்னப்பா..? என்ன சொல்லுகிறீர்கள்..? அவர் எதுவும் சொன்னாரா..? போன் செய்தாரா..?”
“போனில் இல்லை நேரிலேயே வந்தார்..”
“இங்கேயா..? என்ன சொன்னார்பா..? ஏதாவது சாப்பிட்டாரா..?” பரபரத்த மகளை வெறித்தார் பரமசிவம்..
“மனோ இருபது வருசத்துக்கு முன்னாடி எப்படி புத்தியில்லாமல் இருந்தாரோ, இன்றும் அதே போல்தான் உன் புருசன் இருக்கிறார்.. இவர் கூடெல்லாம் எப்படி இத்தனை வருடமாக குடும்பம் நடத்துகிறாய்..?”
“அண்ணா..”
“கிளியை வளர்த்து குரங்கு கையில் கொடுத்துட்டோம் சதுரகிரி..”
“நாம எங்கேப்பா கொடுத்தோம்.. இது கள்ளப்பருந்து, திருட்டுத்தனமாக நம்ம வீட்டுக் கிளியைக் கொத்தி தூக்கிட்டு போயிடுச்சு..”
“இரண்டு பேரும் நிறுத்துறீங்களா..? என்ன நடந்ததுன்னு தெளிவாக சொல்லிட்டு பிறகு வசைபாடுங்க..” மனோரமா கத்தினாள்..
“உனக்கு உன் புருசனை பேசுறது பிடிக்கலை இல்லை..?” பரமசிவம் மகளை கூர்ந்து பார்த்து கேட்டார்..
“எனக்கும் என் அப்பாவை பேசுவது பிடிக்கவில்லை தாத்தா..” ஆராத்யா அழுத்தமாக பேசினாள்..
பேத்தியை நிமிர்ந்து பார்த்த பரமசிவத்தின் கண்கள் கலங்கியிருந்தன.. அவளை நோக்கி கைகளை நீட்டினர்.. “திரும்பவும் உன்னை பிரிஞ்சிடுவேனா செல்லம்..”
“ப்ச் ஏன் தாத்தா இப்படி பேசுறீங்க..? நான் எப்பவும் உங்களை விட்டுப் போகமாட்டேன்..” ஆராத்யா தாத்தாவின் கையை பற்றிக் கொண்டாள்..
“உன்னையும், உன் அம்மாவையும் இனி பிரியக்கூடாதுன்னுதான் நாங்க உனக்கு இந்தக் கல்யாண ஏற்பாடு பண்ணினோம்..”
“எந்தக் கல்யாண ஏற்பாடு தாத்தா..?”
“உனக்கும் ஆர்யனுக்கும் திருமணம் செய்யலாமென்று பேசி வைத்திருக்கிறோமேடா..”
“அப்படியா..? எனக்கு தெரியாதே..” அவள் முடித்த மறுநொடியே “ஆரா” என்ற அதட்டல் வந்தது..
ஆர்யன் கோப முகத்துடன் அவள் முன் வந்தான்.. அட, இவன் இவ்வளவு நேரமும் இங்கேதான் இருந்தானா..? ஆர்யா அவன் அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தாள்.. வளைந்து போகும் மாடிப்படியில் அமர்ந்திருந்திருக்கிறான்.. அதனால் கண்ணில்படவில்லை.. ஆராத்யா அவனை அலட்சியமாக பார்த்தாள்..
“நான் சொர்ணா கல்யாணம் முடிந்த பிறகு உன்னிடம் சொல்லாமென்று இருந்தேன் ஆரா..” மனோரமா சமாதானமாக வர, ஆராத்யாவின் அலட்சியப் பார்வை இப்போது தாய் மீது..
“ஆர்யனும் நீயும் திருமணம் செய்து கொண்டால் நம் உறவு காலாகாலத்திற்கு தொடர்ந்து இருக்கும் ஆராம்மா..” சதுரகிரி வேகமாக சொன்னார்..
“அது.. சரி அதை விடுங்க.. அதை பிறகு பார்க்கலாம்.. இது உங்க ப்ளான்.. இப்போது அப்பா என்ன சொன்னார்..?”
“உன் அப்பா உனக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து வைத்திருக்கிறார்..” ரௌத்ரம் தெறித்தது ஆர்யனின் குரலில்..




“என்ன..? யார்.. யார்.. அது..?” மனோரமா படபடத்தாள்.. ஆர்யன் அதனை சொல்லக்கூட விரும்பாது தந்தையை பார்த்து கையசைத்தான் சொல்லும்படி,
“அவர் அக்கா மகனாம்.. அமெரிக்காவில் இருக்கிறானாமே.. மகளை கல்யாணம் முடித்து அமெரிக்கா அனுப்ப போகிறாராம்..”
இந்த செய்தி மனோரமாவிற்கு அதிர்ச்சி அளித்த அளவு ஆராத்யாவிற்கு அளிக்கவில்லை.. அவள் யோசனையுடனேயே நின்றிருந்தாள்..
“அன்று மாதிரியே இன்றும் ஒரு டம்ளர் பச்சைத் தண்ணீர் கூட குடிக்கலை.. நாங்க கொடுத்த எதையும் சாப்பிடலை.. இந்த விசயத்தை சொல்வதற்காகவே வந்தவர் போல சொல்லிவிட்டு போய்விட்டார்..”
“இல்லைப்பா இது நடக்காது.. நான் அவரிடம் பேசுகிறேன்..” மனோரமா தன் போனில் மாதவனுக்கு கால் செய்தாள், மூன்று முறை முழுதாக ரிங் போய் நின்றது.. அவர் எடுக்கவில்லை..
“ஆரா உன் அப்பா பதிலுக்கு பதில் செய்றாருடி.. நான் அவரிடம் நேரிலேயே போய் பேசுகிறேன்..” மனோரமா கிளம்பத் தயாராக ஆராத்யா அவள் கைகளைப் பிடித்தாள்..
“வேண்டாம் மம்மி..”
“ஏன்டி..?”
“நீ எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தது போல அப்பாவும் எனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்தார்.. இதில் தப்பு சொல்ல, சண்டையிட என்ன இருக்கிறது..?”
“ஆரா உளறாதடி.. அவர் பார்த்து வைத்தால் ஆயிற்றா..? நம்மிடம் சம்மதம் கேட்க வேண்டாமா..?”
“நீ அப்பாவிடம் சொன்னாயா..? சம்மதம் கேட்டாயா..? என்னிடம் கூட சம்மதம் கேட்கவில்லையே நீ..?”
ஆராத்யாவின் நியாயமான கேள்வியில் வீட்டினர் அனைவரும் உறைந்து நின்றுவிட மனோரமா கண்ணில் நீர்வழிய நின்றாள்..
“பொதுவாக நம் வீட்டில் பெண்களிடம் திருமண சம்மதமெல்லாம் கேட்பதில்லை ஆரா..” வரலட்சுமி மெல்ல சொன்னாள்..
“ஓ.. அதனால்தான் தன் வாழ்க்கையை தானே என் அம்மா பார்த்துக் கொண்டாள் போல.. அப்படித்தானே மம்மி..?”
மனோரமா பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்..
“தவறை உங்கள் மேல் வைத்துக் கொண்டு இருபது வருடமாக என் அம்மாவை ஒதுக்கி வைத்திருந்தீர்களே தாத்தா..?’”
பரமசிவம் யோசிக்க ஆரம்பித்தார்.. சதுரகிரி உடனடி முடிவிற்கு வந்தார்..
“ஆரா தப்புதான்டா.. இத்தனை வருடமா நாங்கள் முட்டாள்களாக இருந்து விட்டோம்.. இப்போது திருந்திவிட்டோம்.. அதன் நிரூபணமாக நான் கேட்கிறேன்.. என் மகன் ஆர்யனை திருமணம் செய்து கொள்ள உனக்கு சம்மதமா..?”
வீடு முழுவதும் குண்டூசி மௌனம், ஆர்யனின் விழிகள் தவிப்பாய் ஆராத்யாவிடம் நிலைத்திருந்தன..
“இதனை இரண்டு நாட்கள் முன்பே என்னிடம் கேட்டிருக்கலாமே மாமா..? இப்போது அப்பா வேறு எனக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டார்.. நான் என்ன செய்ய..?”
“ஏய் எந்தப் பெரிய மாப்பிள்ளையடி உன் அப்பா பார்த்தார்..? அதையெல்லாம் என்னால் ஒத்துக் கொள்ள முடியாது.. நான் உன்னை அமெரிக்காவிற்கெல்லாம் அனுப்ப மாட்டேன்..” மனோரமா மகளின் கையை பிடித்துக் கொண்டாள்..
“இந்தப் பட்டிக்காட்டிலேயே என்னை முடக்கிப் போட முடிவெடுத்து விட்டாயா மம்மி..?”
மனோரமா அதிர்ந்து வாயை மூடிக் கொண்டாள்..
“ஏன்டாம்மா உனக்கு இந்த ஊரை, எங்களையெல்லாம் பிடிக்கவில்லையா..?” வரலட்சுமியின் குரல் தழுதழுத்தது..




“கல்யாணம் பண்ணிக் கொள்ள ஊரும், வீட்டு மனிதர்களும் மட்டும் முக்கியமில்லை பாட்டி..”
“ஆ.. ஆர்யனை.. என் பிள்ளையை உனக்கு பிடிக்கவில்லையா ஆரா..?” சுப்புலட்சுமியின் கேள்வியில் என் மகனையா பிடிக்கவில்லை என்கிறாய் என்ற ஆச்சரிய தொனி இருந்தது..
“என் அப்பாவின் மனதையும் நான் நோகடிக்க விரும்பவில்லை அத்தை.. நாம் இந்த விசயத்தை இத்தோடு விட்டு விடுவோம்.. சொர்ணா கல்யாணம் முடிந்த பிறகு திரும்ப பேசலாம்..” சொன்னதோடு பேச்சு முடிந்ததென ஆராத்யா மாடியேறத் துவங்கினாள்.
மாடிப்படியருகே நின்றிருந்த ஆர்யனைக் காணவில்லை.. இவன் எங்கே போனான்..? எப்போது போனான்..? நான் பேசியதெல்லாம் கேட்டானா இல்லையா..? சிறு பரிதவிப்புடன் பார்வையை அங்குமிங்கும் அலைய விட்டபடி தங்கள் அறைக் கதவை திறந்தவள் திகைத்தாள்..
ஆர்யன் அறையின் நடுவில் நின்றிருந்தான்.. இவளை எதிர்பார்த்திருந்தான்.. அவன் பார்வை ஏதோ போல இருக்க, திரும்பவும் கீழேயே போய்விடுவோம் அதுதான் நமக்கு பாதுகாப்பு என நினைத்தபடி, அறையினுள் எடுத்து வைத்த காலை மீண்டும் பின்னால் ஆராத்யா தூக்கிய போது ஆர்யன் ஒரு கையால் அவள் இடைபற்றி துண்டாக தூக்கி அறைக்குள் விட்ட கணமே மறுகையால் கதவையும் மூடியிருந்தான்..
“ஏய்.. ஏய் என்ன பண்ற..? ஏன் கதவை மூடுகிறாய்..?”
“அன்றே உன்னைக் கதவைத் திறந்து வெளியே அனுப்பியிருக்கக் கூடாதுடி.. அன்று செய்யாததை இன்று முடித்து விடுகிறேன்..”




மின்னும் விழிகளுடன் நெருங்கியவனை பயமாக பார்த்தாள்.. “டேய் வேண்டாம்டா.. தப்பு செய்யாதே.. நான் கத்துவேன்..” பின் வாங்கினாள்,
“எப்பவுமே தப்பு செய்யாதவன் தான்டி, ஆனால் உன்கிட்ட மட்டும் தப்பு தப்பாகவே செய்ய வேண்டும் போல் உள்ளது.. ஒரு நல்ல பையன் மனசை இப்படிக் கெடுத்து அலைக்கழிக்க வைக்கிறாயே பிசாசே..”
“என்னது பிசாசா நான்..?”
“ஆமான்டி மோகினிப் பிசாசு.. என் மோகத்தை தூண்டும் பிசாசு..” கிறக்கமாய் ஒலித்த அவன் குரலில் ஆராத்யாவினுள் ரசவாதங்கள்.. அன்றொருநாள் கதவை உடைத்தாவது திறந்து வெளியே ஓடிவிட வேண்டுமென இருந்த தீவிரம் இன்று தன்னிடம் இல்லாததில் அவள் தன்னையே அதிர்ந்தாள், ஐய்யய்யோ இப்படி இவனிடம் வீழ்ந்து விடக் கூடாதே.. தன் உணர்வுகளை அவனிடம் காட்டி விடாமலிருக்க போராடினாள்..
ஆர்யன் அவளை நெருங்கி அவள் கன்னங்களை அழுத்திப் பற்றினான்.. “ஆரா” ஒரு மாதிரி குழலறலாக அழைத்தான்.. “ஒரே ஒரு கிஸ்.. ம்..” அனுமதி போல் கேட்டு விட்டு அதைப் பெறாமலேயே அவள் முகம் நோக்கி குனிந்தான்..

What’s your Reaction?
+1
6
+1
2
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!