Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 43

43

” உங்களை பற்றி இவ்வளவு தெரிந்த பிறகும் எப்படி உங்களையே திருமணம் செய்து கொள்வேன் என்று நினைத்தீர்கள் ? ” 

” என்னைப் பற்றி அப்படி  எவ்வ்வ்…வளவு தெரிந்து கொண்டாய் ? ”  நக்கலாக கேட்ட விஸ்வேஸ்வரனின் குரல் பிசிறில்லாமல் இருந்தது.

” நீங்கள் ஒரு பிற்போக்குவாதி .சுயநலம் பிடித்த ஆண் . பெண்களை மதிக்காதவர் .உங்களை மணம் முடித்தால் என்னை காலுக்கு கீழ் போட்டு மிதித்து விடுவீர்கள் “கமலனியின் சரம் சரமான குற்றச்சாட்டுகளை மென்44மையான தலையசைப்பு டன் கேட்டுக்கொண்டிருந்தான் விஸ்வேஸ்வரன்.

” இதெல்லாம் எப்போதிருந்து ? ” தாடையை தடவியபடி கேட்ட அவனது நிதானமான கேள்வி கமலினியுனுள் அமிலத்தை பாய்ச்சியது.

” எதெல்லாம்…? ” பொறுமையற்று ஒலித்தது கமலினி யின் குரல்.

” அதுதான் இந்தக் கணிப்புகளெல்லாம்…” 




கமலினி உட்கார்ந்த இடத்திலிருந்து சரேலென எழுந்து நின்று அவன் முகத்தின் முன் விரல் சொடுக்கினாள்.” ஹலோ  உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படித் தெரிகிறது ?  வேலை வெட்டி இல்லாத வெற்றுப் பெண் என்று நினைத்தீர்களா ?  ஆயிரம் வேலை இருக்கிறது எனக்கு . உங்களுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.  எனது கல்யாண வேலை வேறு இருக்கிறது . அதையும் நான் பார்க்க வேண்டும். கல்யாணம்… எனக்கும் மணிகண்டனுக்கும் கல்யாணம் ” அழுத்தி  அறிவித்தாள்.

” அதை ஏன் மேடம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொள்கிறீர்கள். உங்களுக்கு நீங்களே தெளிவுபடுத்திக் கொள்கிறீர்களோ ? ” கேட்டு விட்டு வெகு ஆச்சர்யமாக  இரு புருவம் உயர்த்தியவனை என்ன செய்வதென்று தெரியாமல் சட்டென டேபிளின் மேல் இருந்த தண்ணீீர் டம்ளரை எடுத்து அவன் முகத்தின் மேல் நீர் வீசினாள். பேச்சை பார் ..மேடமாம் மேடம் …

ஒரு நொடி திகைத்தவன் தன் பாக்கெட்டில் இருந்த கர்சீப்பை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டு அதனை அவள் மீது வீசினான். தன் முகத்தில் வந்து விழுந்த கர்சீப்பில் விஸ்வேஸ்வரனின் வாசத்தை உணர்ந்த கமலினி அதனை கைகளில் பற்றி பார்க்க , ” உன்னுடையதுதான். உன் அருகாமை மிகவும் தேவைப்படும் நாட்களில் எல்லாம் இதனை தான் நான் உபயோகிக்கிறேன் .அதுவும் சமீப நாட்களாக தொடர்ந்து இந்த கர்ச்சீப்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறேன் ”  ஒலித்த அவனது குரலில் நழுவிய தனது இதயத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டு முறைத்தாள்.

” என்ன இது நாடகத்தனமாக  ? நிறைய சினிமா படங்கள் பார்ப்பீர்கள் போல ? ” 

” ஆமாம் .பார்ப்பேன் தான். அதையே சில நேரங்களில் செயல்களிலும் முயற்சித்திருக்கிறேன் ”  சொல்லிவிட்டு அவன் இதழ் குவிக்க கமலினியுனுள் ஆயிரம் வோல்ட் மின்சாரம். வேண்டாம் கமலினி இவன் உன் பலவீனங்களை நன்றாக தெரிந்து வைத்துக் கொண்டு அதனையே ஆயுதமாக்கி உன்னை வீழ்த்த பார்க்கிறான் .மயங்காதே …ஸ்டெடி …ஸ்டெடி …தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டாள் . வில் போல் தன்னுடலை விறைப்பாக்கிக் கொண்டாள் .கடவுளே காப்பாற்று மனதிற்குள் ஆண்டவனை துணைக்கழைத்தாள் .

” அழைத்தாயா கமலினி ? ” கேட்டபடி வந்து நின்றான் மணிகண்டன் .

அவனை ஆபத்பாந்தவா …அநாதரட்சகா பார்வை பார்த்தவள் ” ஏன் இவ்வளவு லேட் ? ” பற்களை கடித்தாள்.

” ஆபிசில் கொஞ்சம் வேலை .அதுதான் லேட் .இந்த ஹோட்டல்தானே சொன்னாய் …அது வேறு சந்தேகம் எனக்கு .ஓ…ஹலோ சார் .இவர் உன் முதலாளிதானே கமலினி ? இங்கே எப்படி …? எதுவும் பிசினஸ் டிஸ்கசனா ? ” ஆச்சரியப்பட்ட மணிகண்டனின் கையை எழுந்து பற்றிக் கொண்டான் விஸ்வேஸ்வரன் …

” ஆமாம் மணிகண்டன் .சம் இம்பார்ட்டென்ட் பிசினஸ் .நீங்கள் கமலினியுடன்  நாளை பேசலாமே …” 

” ஓ …” எனத் தலையாட்டிய மணிகண்டன் கடைசி நிமிடம் ” ஆ ” வென குனிந்து காலை தடவிக் கொண்டு ” ம்ஹூம் …நான் …நான்தான் இப்போதே பேச வேண்டும் ” உறுதியாக அறிவித்தான் .

” காலில் என்ன …? முள்ளா …? இந்த ஏசி ஹோட்டலுக்குள்ளா …? ” எக்கி குனிந்து அவன் காலை விஸ்வேஸ்வரன் ஆராய , மணிகண்டன் விழித்தான் .கமலினியை பார்த்து அவளது சமிக்ஞையில் தைரியம் பெற்றான் 

” உங்கள் ஆபிஸ் வேலையை இத்தோடு முடித்துக் கொள்ளுங்கள் சார் .நாங்கள் பேமிலி மேட்டர் பேச வேண்டும் ” 

” ஓகே.. ஓகே.. கோ அஹெட் ”  பெருந்தன்மையாய் பேசிய விஸ்வேஸ்வரன் கமலினிக்கு மிகுந்த எரிச்சலை ஊட்டினான்.

” போகலாம் மணிகண்டன் ”  கிளம்பியவளின் முன் வந்து மறித்தார் போல் நின்ற விஸ்வேஸ்வரன் அவள் கையில் இருந்த கர்சீப்பை பிடுங்கிக் கொண்டான்.

” என்னுடையது மணிகண்டன் ” அறிவித்தவனை பதறித்தடுத்து ”  இல்லை இல்லை இது என்னுடையது .இவர் பிடுங்கி வைத்துக் கொண்டார் ” பதில் குற்றச்சாட்டு சொன்ன கமலினி நாக்கை கடித்துக் கொண்டாள்.

” என்ன கமலினி இப்படியா உண்மையை உடைப்பது ? பாரேன் மணி சார் என்ன சொல்வதென்று தெரியாமல் விழிக்கிறார் ” ஒற்றை விரலால் உச்சந்தலையை சொரிந்து கொண்டிருந்த மணிகண்டனை காட்டி கேலி பேசினான் விஸ்வேஸ்வரன்.

” இது என்ன சிறு பிள்ளை விளையாட்டு சார் ? இனி என்ன விபரம் என்றாலும் இவளுடன் உங்கள் கடையில் வைத்தே பேசிக் கொள்ளுங்கள். இப்படி தனியாக இவளை சந்திக்க முயல வேண்டாம் .இப்போது நாங்கள் கிளம்புகிறோம் ” உறுதியாக பேசிவிட்டு கமலினி யின் கைகளை பிடித்துக் கொண்டுநகர்ந்தான் மணிகண்டன் .அவனுடன் நடந்த கமலினி வாசலில் திரும்பும்போது லேசாக திரும்பி விஸ்வேஸ்வரனை பார்க்க அவன் இதழ் குவித்து அவளுக்கு தாராளமாக ஒரு முத்தத்தை காற்றில் பறக்க விட்டான். நெஞ்சம் படபடக்க தலையை குனிந்து கொண்டு வேகமாக நடந்தாள் அவள்.

” என்ன கமலினி இரண்டு பேரும் சேர்ந்தாற்போல் போல் நடக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இப்படி முன்னால் ஓடுகிறாயே குறைபட்டபடி கால்களை எட்டி வைத்து அவளுடன் இணைந்தான்  மணிகண்டன்.




” இப்போது எல்லா ஞாயமும் பேசுங்கள் .ஹோட்டல் பெயரைச் சொல்லி ஆறு மணிக்கே வரச் சொன்னேன் தானே ?/நிதானமாக எட்டு மணிக்கு வந்து நின்றால் என்ன அர்த்தம் ? “. 

” நான் ஆறு மணிக்கே வந்து விட்டேன் கமலினி ” 

” எங்கே இருந்தீர்கள் ? ” 

” அதே ஹோட்டலில் தான். நாலு டேபிள் தள்ளி உட்கார்ந்து இருந்தேன் .உங்களை கவனித்துக் கொண்டே இருந்தேன். ” 

” ஏன் அப்படிச் செய்தீர்கள் ? ” 

” அம்மா தாயே உடனே பாயாதே. நான் வரும்போது நீ இல்லை .விஷ்வா சார் மட்டும் தான் உட்கார்ந்து இருந்தார். அவரிடம் போய் தனியாக என்னை என்ன பேசச் சொல்கிறாய் ?  நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது நான் இடையில் வந்து உன்னை கூட்டிப் போக வேண்டும் என்பதுதானே நம் பிளான் .நீ வருவதற்காகக் காத்துக் கொண்டிருந்தேன். நீ லேட்டாகத்தான் வந்தாய் .ஆனாலும் விசுவாவிற்கு அலாதி பொறுமை .வாட்சைப் பார்க்கவும் போனை பார்க்கவும் என்று மிகவும் பொறுமையாக உனக்காக காத்துக் கொண்டிருந்தார் ” 

” அவருக்கு பாராட்டுரை வழங்க உங்களை கூப்பிடவில்லை .பிறகு நான் வந்த உடனேயே நீங்களும் வந்திருக்க வேண்டியதுதானே ? ” 

” நீங்கள் இருவரும் சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தீர்கள்மா. நான் தள்ளி நின்று அதனை ரசித்துக் கொண்டிருந்தேன் , அந்த பாஸிங் த கர்ச்சீப் வரை . எனக்கு ஓர் உண்மையைச் சொல் கமலினி. ஆகக்கூடி  அந்தக் கர்ச்சிப் யாருடையது ? ” 

” இப்போது இந்த ஆராய்ச்சி ரொம்ப தேவை . வாயை மூடுங்கள் ” 

” இதோ மூடிக்கொண்டேன் ”  வாய் மீது கை வைத்துக் கொண்ட மணிகண்டனின் முகத்தில் புன்னகை மறையவில்லை . அவளது சொல்படி பஸ்ஸில் ஏறி வீட்டு  நிறுத்தம் வரை அமைதியாகவே வந்தவன் பிரியும் இடத்தில் நின்று ” விஸ்வா பெர்பெக்ட் . அவரை பிரிவது தேவைதானா கமலினி ?  நன்றாக யோசித்து முடிவு எடு. ஒரு நண்பனாக என்னுடைய வேண்டுகோள் இது ” என்றான்.

” நான் முடிவெடுத்துவிட்டேன். அதில் மாற்றம் இல்லை”  உறுதி தெறித்தது கமலினியின் குரலில்.

                               ——————

” ஹை எவ்வளவு சிகப்பாக உங்கள் கைகளில் பற்றியிருக்கிறது அம்மா ” கன்னத்தில் கை வைத்து அதிசயித்தாள் சௌபர்ணிகா .

” உன் கையை காட்டுடா குட்டி ” மகளருகே குத்திட்டு அமர்ந்து பாரிஜாதம் கேட்க , தன் கையை நீட்டி ” எனக்கு அழிஞ்சிடுச்சு ” உதடு பிதுக்கி வருத்தம் காட்டினாள் .

” ஏன் பாரி பாப்பா கையை அசங்காமல் பார்த்துக் கொள்ளக் கூடாதா ? ” மென்மையாக கடிந்தபடி அவர்களருகே தானும் குத்திட்டான் சந்தானபாரதி 

” நானும் முடிந்த அளவு டிரை பண்ணேன் பாரதி .இவள் தூக்கத்தில் ஒரே உருளல் .கையை காலை பெட் முழுவதும் தேய்த்து பெட்ஷீட் , தலையணைக்கெல்லாம் மெஹந்தி பூசியாயிற்று .இப்போது உதடு பிதுக்குகிறாள் .” மகளின் பிதுங்கிய உதடுகளை பாசமாக வருடியபடி சொன்னாள் பாரிஜாதம் .

” வாடா கண்ணா .அப்பா உனக்கு அம்மாவை விட அழகாக கலர் வர வைக்கிறேன் ” சந்தானபாரதியின் நீட்டிய கைகளுக்குள் ஆவலுடன் புகுந்து கொண்டாள் சௌபர்ணிகா .

” நிஜமாகவா அப்பா ? எப்படி …? ” 

” ஆமாம்டா .ஆனால் அந்த டெக்னிக்கை நாம் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் ” மகளை தூக்கிக் கொண்டு காதிற்குள் ரகசியம் பேசியபடி சென்றவனை , உதடு விரித்த புன்னகையோடு மென் பாதங்கள் வைத்து சத்தமின்றி மெத்தென  பின்தொடர்ந்தாள் பாரிஜாதம் .

இவர்களின் அந்நியோன்யத்தை சற்று எட்ட இருந்து பார்த்துக் கொண்டிருந்த கமலினியின் கண்கள் ஆனந்த்த்தால் கலங்கி கன்னங்களில் நீர் கோடிட்டன. 

” சூ …என்ன இது …? அழுகிற நேரமா இது …? ” கேட்டபடி அவள் கன்னங்களை துடைத்து விட்ட விஸ்வேஸ்வரனின் குரலிலும் உணர்ச்சிக் கரகரப்பிருந்த்து.

” தாயின் கல்யாண மருதாணிக்கு மகிழும் மகள் . எவ்வளவு வரவேற்க வேண்டிய விசயம் இது தெரியுமா விஸ்வா ? ” 

” நிச்சயமாக .முட்டாள்தனமாக இந்த நல்ல விசயத்தை  நழுவ விட இருந்தேனே …நீ விடாமல் அடம் பிடித்து சாதித்து விட்டாய் கமலி ” அவன் கை நீண்டு அவளுடைய கையை பற்றிக் கொண்டது 

” சாதனை செய்த்து நானில்லை .உங்கள் அம்மா .அவர்கள் வணங்கப்பட  வேண்டிய அற்புதமான பெண்மணி . அவர்களை மீற ஒரு்போதும் நினையாதீர்கள் ” சொல்லிவிட்டு கையை அவனிடமிருந்து பிடுங்கிக் கொண்டு நகர்ந்தாள் 

” அந்தக் குத்துவிளக்கை தூண்டி விட்டு எண்ணெய் ஊற்று ” இவளை பார்த்ததும் உத்தரவிட்டார் ராஜசுலேச்சனா .உடன் பணிந்து மணவறையிலிருந்த ஆளுயர குத்துவிளக்குகளை எண்ணெய் ஊற்றி தூண்டி விட்டாள்.ஐயர் மந்திரங்களை ஓத துவங்கினார்.




அந்த சிறிய திருமண மண்டபம் முழுவதும் நெருங்கிய உறவினர்களால் நிறைந்திருந்த்து .எங்கள் குலதெய்வ கோவிலில் திருமணம் .மறுநாள் திருச்சியில் ரிசெப்ஷன்…என்ற ராஜசுலேச்சனாவின் ஏற்பாட்டின் படி குலதெய்வ கோவிலின் மண்டபத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் சூழ சந்தானபாரதி – பாரிஜாதம் திருமணம் இதோ நடக்க போகிறது .

அழிந்தழிந்து சிகப்பு தீற்றலாக இருந்த  குட்டி கையில் சிகப்பு சாயத்தால் குட்டி குட்டி வட்டமிட்டு கலைந்த மருதாணியை சீர் செய்திருந்த தந்தையை விட்டு விலக மனமின்றி ஒட்டிக் கிடந்தாள் சௌபர்ணிகா . மடியிறக்காமல் மகளை இருத்திக் கொண்டு , பாரிஜாதம் கழுத்தில் தாலி கட்டினான் சந்தானபாரதி .உறவுகள் மலர் தூவி ஆசீர்வதித்தனர் . கையில் தூக்கிக் கொண்ட குழந்தையுடன் தம்பதிகள் அக்னி வலம் வருவதை நெகிழ்வுடன் பார்த்திருந்தனர் அனைவரும் .

தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ள விஸ்வேஸ்வரனின் பார்வை கமலினியை தேடியது .தாய் தந்தையுடன் இருந்து மணமக்களுக்கு பூ தூவி வாழ்த்திக் கொண்டிருந்தவள் திடுமென காணாமல் போயிருந்தாள் .

What’s your Reaction?
+1
24
+1
21
+1
1
+1
3
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Viswa kamaliyai virumbuvatai un ammavudan sonnaayaa illaiyaa.rajima unakalukum kamalikum ippave disum disumaa.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!