karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 22

22

“எ.. என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்..?” ஆராத்யாவின் குரல் நடுங்கியது.. ஆர்யன் அவள் முகத்தை உற்றுப் பார்த்தபடி மேலே கேட்குமாறு சைகை செய்தான்..
“யாரடி சொல்ற..? உன் அண்ணன் பையனையா..?”
“ஆமாம் பெரியம்மா.. என் ஆர்யாவை என் மகளுக்கு கணவனாக்கி எப்போதும் போல் என் செல்லப் பிள்ளையாக வைத்துக் கொள்ளப் போகிறேன்..”
“ம்.. நல்ல முடிவுதான்ம்மா.. இருபது வருசமாக பிரிந்திருந்த குடும்பம்.. இந்தக் கல்யாணத்திலாவது ஒன்று சேரட்டும்..” பாட்டி ஆசீர்வாதம் போல் சொல்லிவிட்டு மண்பானையினுள் வைக்கோல்களை பரப்பி அதனுள் செய்து வைத்திருந்த கொலுக்கட்டைகளை அவிப்பதற்காக பரப்பத் தொடங்கினார்..
ஆராத்யா பிரமித்து அமர்ந்திருந்தாள்.. எனக்கும் ஆர்யனுக்கும் கல்யாணம் பேசுகிறார்களா.. என்னிடம் யாரும் கேட்கவே இல்லையே.. சிறு மனத்தாங்கல் வந்தது அவளுக்கு..
மனோரமா இரண்டு நாட்களுக்கு முன் இரவு அவளிடம் முக்கியமான விசயம் பேச வேண்டமென்றது நினைவு வந்தது.. அப்பாவின் போனைக் கூட எடுக்காமல் அம்மா தாத்தாவுடன் பேசிக் கொண்டு அமர்ந்திருந்தது ஞாபகத்தில் மோதியது.. அவையெல்லாம் இந்தக் கல்யாண விசயங்கள்தானா..?
இ… இது எப்படி.. இது சரியாக வருமா..? இந்தக் கேள்வியை அவள் கண்கள் ஆர்யனிடம்தான் கேட்டன..




“இன்று இந்த பூஜையின் போது இங்கே நம் கல்யாண விஷயம் பேசுவார்களென்று எனக்கு தெரியும் ஆரா.. அதற்கு முன்பே நான் உன்னிடம் பேச நினைத்தேன்.. என்னை தெளிவு படுத்த நினைத்தேன்.. பகல் முழுவதும் சொர்ணா கல்யாண வேலைகள் உன் பக்கமே வர முடியவில்லை.. அதனால்தான் இரவில் இங்கே பேச வந்தேன்..”
“ஆனால்.. நா.. நான் நிறைய யோசிக்க வேண்டுமே..” ஆர்யனின் முகம் ஒளியிழந்தது..
“யோசி ஆரா.. ஆனால் அதற்கு முன் என் தன்னிலை விளக்கத்தையும் சொல்லிவிடுகிறேன்.. நான் இன்ஜினியரிங் இங்கே திருச்சியில்தான் படித்தேன்.. இன்டெர்ன்ஷிப் டெல்லியில் செய்தேன்.. இங்கே கிராமத்து சூழ்நிலையிலேயே வளர்ந்த எனக்கு டில்லி சூழல் மிகப் பிரமிப்பாகத் தெரிந்தது.. எனது மேற் படிப்பிற்கு டில்லி ஐஐடியை தேர்ந்தெடுத்தேன்.. படித்தேன்.. ஆண், பெண் வித்தியாசமின்றி பழகும் அந்த சூழல் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.. இங்கே கிராமத்தில் கூடப் பிறந்தவளையோ, தாயையோ கூட ஒரு வயதுக்கு மேல் தொட்டுப் பேசும் பழக்கம் கிடையாது.. ஆனால் அங்கே ஆணும், பெண்ணும் தோளில் கை போட்டுத் திரிந்தனர்.. இச்சூழல் பழகவே எனக்கு சில நாட்களானது..
பழகியதும் இது போலொரு நவ நாகரீக கம்பெனியாக பின்னால் நான் ஆரம்பிக்க போகும் கம்பெனி இருக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன்.. அது போலவே அமெரிக்கன் தரத்தில் சென்னையில் நம் “ஆரா ஆட்டோமொபைல்ஸ்”சை நடத்திக் கொண்டிருந்தேன்..
நான் அங்கே டில்லியில்.. இங்கே சென்னையில் சந்தித்த பெண்கள் எல்லோருமே அல்ட்ரா மாடர்னாக இருந்தனர்.. எனக்கான நேரம் அப்படி இருந்ததோ என்னவோ.. ஓரிரு பெண்களை தவிர மற்றவர்கள் எல்லோருமே.. வந்து.. என்னிடம் மிக நெருங்கி அந்தரங்கமாகப் பழக தயாராக இருந்தனர்..”
ஆராத்யா சட்டென அவன் தோள்களில் அடித்தாள்,
“ஆமா பெரிய மன்மதன் இவன்.. இவன் பின்னாடியே பொண்ணுங்கள்லாம் சுத்திக்கிட்டு இருந்தாங்களாக்கும்.. கோகுலக் கண்ணனாடா நீ..?” அவன் சட்டைக் காலரை பிடித்து உலுக்கினாள்..
“ஷ் ஆரா மெதுவாக பேசு..” அவளை எச்சரித்தபடி தானமர்ந்திருந்த இருள் பகுதிக்கு அவளையும் இழுத்துக் கொண்டான் ஆர்யன்.. தன் சட்டைக் காலரை பற்றியிருந்த அவள் கைகளை மென்மையாக வருடினான்..
“நான் அப்படி ஒன்றும் அழகானவனில்லை ஆரா.. ஆனால் எனக்கு பெண்களால் நேர்ந்த அனுபவங்கள் அப்படித்தான் அமைந்தன..”
நிலவின் ஒளி மட்டுமே இருந்த அந்த இடத்தில், அரைகுறை இருளில் தெரிந்த அவன் முக வடிவு கவர்ச்சிகரமாக இருக்க, இ.. இவன் வசீகரமானவன்.. வசீகரிக்க தெரிந்தவன்.. ஆராத்யா தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“வந்த பெண்கள் பின்னாலெல்லாம் நீ..” தழுதழுப்பாய் வெளி வந்த அவள் குரலை தொடர விடாமல் வாயை பொத்தினான் ஆர்யன்..
“இல்லை ஆரா.. நான் அப்படி இல்லை.. சீச்சி என்று அந்தப் பெண்களையெல்லாம் ஒதுக்கினேன்.. நான் இப்படித்தான் என ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதற்குள் நிமிர்ந்து நின்றேன்.. உன்னை சந்திக்கும் நாள் வரை நான் அப்படித்தான் இருந்தேன் ஆரா..”
ஆராத்யா அவனை முறைக்க.. “நம்பு ஆரா.. நான் தவறுகள் செய்தவனில்லை.. நம் குடும்பத்து பெயரைக் கெடுத்தவனில்லை அன்று.. உன்னை முதன் முதலாக அங்கே நம் கம்பெனிக்கு முன்னாலிருந்த பார்க்கில் பார்த்தேன்..”
“என்ன அப்போது.. நீங்கள் அங்கேயா இருந்தீர்கள்..?”
தலையசைத்தான்.. “நான் வெளி வேலைகளையெல்லாம் முடித்து விட்டு கம்பெனிக்கு பன்னிரெண்டு மணிக்குத்தான் வருவேன்.. அதற்கு முன் சில நிமிடங்கள் யாரும் அறியாமல் அந்தப் பார்க்கில் அமர்ந்திருப்பது உண்டு.. ஏனென்றால் அந்தப் பார்க்கிறகு நம் கம்பெனி ஊழியர்கள் அடிக்கடி வந்து உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.. நான் அவர்கள் அறியாமல் மறைந்து அமர்ந்து அவர்கள் பேச்சுக்களை கவனிப்பேன்.. இதனால் கம்பெனியினுள் நடக்கும் எத்தனையோ ஊழல், முறைகேடுகளை கண்டுபிடித்து சரி செய்திருக்கிறேன்.. அன்றும் அது போல் மரத்திற்கு பின்னால் மறைவாக உட்கார்ந்திருந்த போதுதான் பார்க் வாயிலில் உன்னைப் பார்த்தேன்.. பார்த்த உடனேயே ஏதோ ஒரு உரிமையோடு நீ என் மனதில் ஒட்டிக் கொண்டாய்.. உன்னை பார்த்தபடி இருந்தேன்..”
“நீங்கள் நான் உட்கார்ந்திருந்த மரத்தருகேயே வந்து அமர்ந்தீர்கள்.. பிறகு நீ பேசியது நினைவிருக்கிறதா ஆரா..?”
ஆராத்யாவிற்கு நினைவிருந்தது அந்த கம்பெனி எம்.டிக்கு ஐஸ் வைத்து, அவன் மனம் போல் பேசி அவர்கள் பராஜெக்டை ஒத்துக் கொள்ள வைக்கப் போவதாக சொன்னாள்.. அவனது சிறிதான போட்டோவை பார்த்துவிட்டே அவன் பார்க்க நன்றாக இருப்பதாகவும், அவனுக்கு ரூட் விட்டுப் பார்க்க போவதாகவும் பேசினாள்..




“நான் அப்போது எங்கள் ஹெல்மெட்டை அக்செப்ட் பண்ண வைப்பதற்காக கொஞ்சம் உங்களை புகழ்ந்து பேசப் போவதாக சொன்னேன்..” ஆராத்யா கண்டிப்பான குரலில் கூறினாள்..
“அப்படித்தான் ஆரா.. ஆனால் அப்போது நான் உன்னை உணரவில்லை.. நான் சந்தித்த எத்தனையோ நாகரீக பெண்களில் நீயும் ஒருத்தி என நினைத்தேன்.. இது உனது பாணி.. யாரையும் அவர்களது மனம் போல் ஐஸ் வைத்து பேசி உன் பக்கம் திருப்பிக் கொள்வது உன் குணம் என்று எனக்கு அப்போது தெரியாது.. நினைத்ததை முடிக்க எது வேண்டுமானாலும் செய்பவளென..”
ஆராத்யாவின் முகத்தில் வேதனை படர்ந்தது.. கண்கள் கலங்கியது.. நிலவொளியில் மின்னிய அவள் கண்களை கண்டுவிட்ட ஆர்யன் பதறி அவளை தன்னோடு அணைத்துக் கொண்டான்..
“ஆரா வேண்டாம்டா கலங்காதே.. என் முட்டாள்தனமான நினைவுகளுக்கெல்லாம் நீ பொறுப்பேற்றுக் கலங்க வேண்டியதில்லைடா. ப்ளீஸ் ஆத்திரம் தீர என்னை இரண்டு அடி கூட அடித்து விடு.. இப்படி கண் கலங்காதே..” யாசிப்பாய் கேட்டவளின் பிடியிலிருந்து உதறி விலகினாள்..
“இ.. இந்த எண்ணத்தோடுதான் என்னை உங்கள் வீட்டிற்கு வரச் சொன்னீர்களா..?”
ஆர்யன் பேசத் தயங்கினான்..
“பரவாயில்லை எல்லாக் குப்பைகளையும் மொத்தமாகக் கொட்டிவிடுங்கள்.. கொஞ்சம் கொஞ்சமாக குப்பைகளை தலையில் சுமக்கம் பக்குவம் எனக்கில்லை..”
ஆர்யன் பெருமூச்சோடு மீண்டும் பேசத் துவங்கினான்..
“மற்ற பெண்களைப் போல் உன்னை எளிதாக ஒதுக்க முடியவில்லை ஆரா.. நீ என்னை ஏதோ ஓர் வகையில் தொந்தரவு செய்து கொண்டே இருந்தாய்.. ஏன் கூடாது.. என்றொரு கேள்வி உன்னிடம் பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு விநாடியும் எனக்குள் தோன்றிக் கொண்டிருந்தது.. நீ மறுத்து விட வேண்டும் எனற வேண்டுதலுடன்தான் உனக்கு என் வீட்டு அட்ரஸ் கொடுத்தேன்.. நீ.. சம்மதித்தாய்..”
“பிசினஸ் பேசவென்றுதான் அழைத்தீர்கள்..”
“ம் அடிப்படை அதுதானே.. பிசினஸிற்காக.. நீ..”
“போதும்.. மேலே பேசாதீர்கள்..” காதுகளை கையால் மூடினாள் ஆர்யன் ஒரு முழு நிமிடம் மௌனமாக இருந்தான்..
“முழுவதும் சொல்லி விடுகிறேன் ஆரா.. நீ மறுநாள் வருவதாகச் சொன்ன இரவு முழுவதும் எனக்கு தூக்கம் வரவில்லை.. தப்புச் செய்கிறாய் என என் மனசாட்சி என்னை இடித்துக் கொண்டே இருந்தது.. ஆனாலும் உன்னை விடும் எண்ணமும் எனக்கில்லை.. அதனால் என்னை.. என் மனட்சாட்சியை சமாதானப்படுத்த என் சுயநினைவை இழக்க பீர் வாங்கி வைத்தேன்.. அது உனக்கும் பழக்கமாயிக்கலாமென்ற நினைப்பிலேயே அன்று உனக்கும் கொடுத்தேன்..”
ஆராத்யாவின் முகத்தில் அருவெறுப்பு நிறைந்தது.. ஆர்யன் அவள் புருவங்களை நீவினான்..
“ரிலாக்ஸ் ஆரா..” முணுமுணுத்தான்..
“அன்று நீ என்னைத் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடிய போது நான் என்னை அந்த உலகத்திலேயே மகிழ்ச்சியான மனிதனாக உணர்ந்தேன்.. உன் பின்னேயே வந்து உன்னை அணைத்து தேற்றும் ஆவல் வந்தது.. அடக்கிக் கொண்டேன்.. நீயும் உன் ப்ரெண்ட்சும் மீண்டும் என்னைத் தேடி வருவீர்களென்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன்..”




“இத்தனைக்கும் பிறகு திரும்ப உங்களைத்தேடி வருவேனென நினைத்தீர்களோ..?”
“அது.. உங்கள் ப்ராஜெக்டுக்காக என்று நினைத்தேன் ஆரா.. ஆரா ப்ளீஸ்.. என் தவறான நினைப்புகளுக்கு என்னை மன்னித்து விடு..”
ஆராத்யா அவன் கைகளை உதறினாள்.. எழுந்தாள், “நீங்கள் போகலாம்..”
“ஆரா..” ஆர்யன் அருகில் நின்றிருந்தவளை எதிர்பார்ப்போடு அண்ணாந்து பார்த்தான்..
அப்போது அவன் கண்களுக்கு ஆராத்யா இந்த உலகைக் காக்க வந்த ஆதி சக்தி சொரூபமாக ஓங்கி உயர்ந்து தெரிந்தாள்..
“இது பெண்களுக்கான பூஜை ஆர்யன்.. இங்கு நீங்கள் இருக்கக் கூடாது.. எழுந்த போங்க..” மகாராணியின் கம்பீரத்தோடு உத்தரவிட்டவளை மீற முடியாமல் எழுந்தான்..
“என்னை மறுத்து விடாதே ஆரா..” கண்களிரண்டில் உயிர் வழிய ஓர் கோரிக்கை வைத்தான்.. பின் திரும்பிப் பார்க்காமல் விடு விடுவென நடந்து போய் விட்டான்..
அவன் போன திசையை பார்த்து தலையை சிலுப்பிக் கொண்ட ஆராத்யா வீட்டினுள் நுழைந்தாள்.. அங்கே கொலுக்கட்டை வாசம் விரவி இருந்தது.. சுகந்தமான அந்த வாசம் நாசியை நிரப்பி ஆராத்யாவினுள் நுழைந்தது.. அவள் மன வேதனையை குறைக்க, வாழை இலை தூண்டில் வைத்து தன் முன் நீட்டப்பட்ட இளஞ்சூடான கொலுக்கட்டைகளை உண்ண ஆரம்பித்தாள்.. வழியத் துடித்த கண்ணீரை அணைகட்டிக் காத்தன அவள் இமைகள்..

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!