karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 21

21

 

 

 

“எல்லாப் பொண்ணுகளுக்கும் சொல்லியாச்சா..?” வரலட்சுமி கிசுகிசுப்பாக கேட்டாள்..
“நம்ம சொந்தக்கார பொண்ணுங்களே முப்பது பேர் வரை வந்துட்டாங்க, எல்லோருக்கும் சொல்லியாச்சு..”
“நம்ம வீட்டில் செய்ய முடியாது.. போன வருடம் வள்ளியம்மை பாட்டி வீட்டில் செய்தோம்.. இந்த வருடம் அந்த தாத்தா போய் சேர்ந்துட்டார்.. இப்போது யார் வீட்டில் செய்ய..?” வரலட்சுமி கவலைப்பட..
“நம்ம ரோஜாப்பூ அத்தை வீட்டில் வைத்துக்கலாம்மா.. அவுங்க புருசன், பிள்ளைங்க எல்லோரும் படிக்க, வேலை பார்க்க என்று வெளியூரில் இருக்கிறார்கள்.. அவர்கள் வீட்டில் ஆண் வாசனையே இருக்காது..” வசுமதி யோசனை சொன்னாள்..
இவர்களது பேச்சில் ஆராத்யாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்தது.. என்ன சொல்கிறார்கள்..? எதைப் பற்றி பேசுகிறார்கள்..?
“எத்தனை வருடங்களாயிற்று அண்ணி..? இப்போதும் நினைக்கும் போதே எனக்கு நாவில் எச்சிலூறுகிறது..” மனோரமா நாக்கை வளைத்து சுவைத்தாள்..




“ஸ்டாப்.. ஸ்டாப் எல்லோரும் நிறுத்துங்க, எனக்கு ஒரு மர்மக் கதையை பாதியிலிருந்து வாசிப்பது போலிருக்கிறது.. எதைப் பற்றி எல்லோரும் பேசுகிறீர்கள்..?” ஆராத்யா உயர்ந்த குரலை ஆளாளுக்கு உஷ்.. தஷ்.. ப்ச் என குரல் கொடுத்து மெதுவாகப் பேச சொன்னார்கள்..
“இது தெய்வ ரகசியம் ஆரா.. யாருக்கும்.. குறிப்பாக ஆம்பளைகளுக்கு தெரியக் கூடாது..”
ஆராத்யாவின் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது.. “அது என்ன ரகசியம் பாட்டி..?” அவளும் குரலைக் குறைத்து ரகசியம் பேணினாள்..
“நாளைக்கு செவ்வாய்கிழமை.. நாங்க எல்லோரும் ஔவையார் விரதம் இருக்க போகிறோம்..” சுப்புலட்சுமி சொன்னாள்..
“அது என்ன விரதம்..?”
“இது பெண்கள் மட்டுமே நடத்தும் வழிபாடு.. இது நடக்கிற வீட்டில் சுமங்கலி பெண்கள் இருக்க வேண்டும்.. பூஜை நடத்தும் போது ஆண்கள் அந்த வீட்டில் இருக்கவே கூடாது.. பொழுது சாய்ந்து இருட்டின பிறகுதான் இந்த பூஜையை ஆரம்பிக்கனும்.. சுத்தமான அரிசி மாவில் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைத்து வணங்கனும்.. இதுதான் ஔவையார் விரதம்..”
ஆராத்யாவிற்கு இந்த பூஜை உடனே பிடித்துவிட்டது.. யாருக்கும் தெரியாமல்.. அதுவும் வீட்டு ஆண்களுக்கு தெரியாமல், பெண்களாக கூடி ஒரு பூஜையா..?
“வெரி இன்ட்ரெஸ்டிங்.. நானும் வர்றேன்..”
“ஆராக்குட்டி முக்கியமாக உனக்காகத்தான்டா இந்த பூஜையே.. சரி சரி நாளைக்கு காலையில் விரதம் ஆரம்பம்.. எல்லோரும் சுத்த பத்தமாக குளித்து விரதத்தை ஆரம்பிச்சிடுங்க.. ராத்திரி தூங்காம முழிச்சிருங்க.. பதினோரு மணிக்கு மேல் ஆம்பளைங்க எல்லோரும் தூங்கின பிறகு ரோசாப்பூ வீட்டுக்கு போகலாம்.. இங்கே யாருக்கும் நாள் இருக்குதா..?”
ஸ்ரீமதி சிணுக்கமான முகத்துடன் கை உயர்த்தினாள்.. “பாட்டி எனக்கு..”
“அப்போ நீ பூஜைக்கு கிடையாது.. விரதமும் இருக்க வேண்டாம்.. நல்லா தூங்கி ஓய்வெடு..” வரலட்சுமி சொல்லிவிட ஸ்ரீமதியின் முகம் வாடியது..
மறுநாள் காலை எழுந்து தலைக்கு குளித்து சுத்தமாகி அப்போதுதான் வாங்கி வந்த பச்சரிசியை உரலில் போட்டு சௌடாம்பிகையும், சுப்புலட்சுமியும் இடிக்க ஆரம்பித்தனர்..
“ஐய்யோ எவ்வளவு கஷ்டமான வேலை இது எதற்கு அத்தை..?” ஆராத்யாவிற்கு அவர்களது லாவகமான உரலிடித்தல் ஆச்சரியத்தை கொடுத்தது..
“இந்த பச்சரிசியை மாவாக்கி அந்த மாவில்தான் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு படைக்கனும் ஆரா..” அத்தைகளின் விளக்கத்தை உள்வாங்கிக் கொண்டாள்..
பூஜைக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், எண்ணெய், பத்தி, சூடம், வைக்கோல், புதுப்பானை என ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து வாங்கினர்.. இதில் விசேசம் என்னவென்றால் இவற்றையெல்லாம் வீட்டு ஆண்கள் யாருக்கும் தெரியாமல், அவர்கள் கண்ணில் பட்டு விடாமல் செய்தனர்..
இதுபோல் ஆண்களுக்கு தெரியாமல் தாங்களே ஒரு விசயம் செய்வதில் அந்தப் பெண்கள் அனைவருக்கம் சந்தோசம்.. இரவு வீட்டு ஆண்கள் எல்லோரும் தூங்கியதும் பெண்கள் மட்டும் வீட்டுக் கூடத்தில் கூடிப் பேசி சத்தம் போடாமல் விளக்குகளை எரிய விடாமல் இருட்டிலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறி ரோசாப்பூ வீடு நோக்கி நடக்க தொடங்கினர்.. ஆராத்யாவிற்கு இந்த புது அனுபவம் மிக உற்சாகமாக இருந்தது..
ரோசாப்பூவின் வீடு அவர்களது தோப்பிலேயே ஒரு ஓரமாக இருந்தது.. அவள் அவர்களுக்கு ஏதோ ஒருவகை தூரத்து சொந்தக்கார பெண்தான்.. அங்கே அவள் வீட்டில் ஏற்கெனவே நிறைய பெண்கள் வந்து சேர்ந்திருந்தனர்..
“என்ன எல்லோரும் வந்தாச்சா..? ஆரம்பிக்கலாமா..?” வரலட்சுமி கேட்க..
“உங்களுக்காகத்தான் காத்துகிட்டு இருக்கோம் பாட்டி.. ஆரம்பிக்கலாம்..” கோரசாக ஆனால் குறைந்த குரலில் பேசினர் பெண்கள்.




எல்லோரும் வீட்டிற்குள் போய் ஆளுக்கொரு வேலையாக பிரித்துக் கொண்டனர்.. பூஜை வேலைகளை சிலரும், கொழுக்கட்டை வேலைகளை சிலரும் பார்க்க தொடங்கினர்.. அவரவர் பங்கிற்னெ கொண்டு வந்திருந்த அரிசி மாவை ஒன்றாக கலந்து இளநீர் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை பிடிக்க தொடங்கினர் சிலர்.. பிள்ளையாரை பிடித்து வைத்து, வாழையிலை விரித்து பூஜை சாமான்களை பரப்பினர்..
கை வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் வாய் சும்மா இருக்குமா பெண்களுக்கு..?
“ஏன் ராசாத்தி அந்தக் கடைசி வீட்டு சுந்தரி வீட்டு விசயம் என்ன ஆச்சு..?” ஒரு பெண் ஆரம்பித்தாள்..
“அந்த வெட்கக்கேட்டை ஏன்கா கேட்கிறீங்க..? அவள்..” பதில் சொன்னாள் இன்னொருத்தி..
இப்படியாக படையல் வேலையும், பூஜை வேலையும் முடிவதற்குள் கிட்டத்தட்ட அந்த ஊரிலுள்ள அனைத்து வீட்டையும் அலசி முடித்திருந்தனர்.
சரிதான் இவர்களது இந்த பூஜை நோக்கமே இதுதான் போல் தெரிகிறது.. ஆண்கள், யாருடைய குறுக்கீடுமில்லாமல் தங்கள்
மன எண்ணங்களை பரிமாறிக் கொள்ள பெண்களுக்கு மட்டுமென ஒரு பூஜை வேண்டுமென்றே இதுபோன்ற பூஜைகளை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்க வேண்டுமென ஆராத்யாவிற்கு தோன்றியது..
அவளுக்கு இந்த ஊர் கதைகள் போரடிக்க தூக்கம் வருவது போலிருக்க, கொஞ்சம் எழுந்து வெளியே காற்றாட நிற்கலாமென நினைத்து வீட்டின் பின் வாசல் பக்கம் வந்து நின்றாள், அங்கே பின் வாசல் திண்ணையருகே அமர்ந்திருந்த செம்பருத்தி செடியருகே ஏதோ அசைவு தெரிய சிறு பயத்துடன் செடியருகே போனவள் கை பிடித்து அச்சிறு புதரின் பின் இழுத்துக் கொள்ளப்பட்டாள்..
அலற திறந்தவளின் வாய் அழுத்தமான கைகளால் மூடப்பட்டது.. “ஷ் ஆரா கத்தாதே.. நான்தான்..” ஆர்யனின் குரல்..
“நீங்களா..? இங்கே ஏன் வந்தீர்கள்..?”
“சும்மாதான்.. உன்னுடன் பேசுவதற்காக வந்தேன்..”
“இங்கே வைத்து என்ன பேச முடியும்..? இந்த ராத்திரியில் பேசுவதற்கு என்ன இருக்கிறது..?”
“நான் இருக்கிறேன் ஆரா.. உனக்கு நான் கொடுக்க வேண்டிய விளக்கங்கள் இருக்கிறது.. அவை நெருஞ்சி முள்ளாய் என் மனதை குத்திக் கொண்டே இருக்கிறது அதனை உடனே பிடுங்கி வெளியே எறிய வேண்டும்..”
“அதற்கு இப்போது என்ன அவசரம்..? நாளை.. பகலில் பேசிக் கொள்ளலாமே..”
“பேசிக் கொள்ளலாம்தான்.. ஆனால் படுத்தால் எனக்கு தூக்கம் வருவதில்லை ஆரா.. எல்லாவற்றையும் உன்னிடம் கொட்டி விட்டால் மனப்பாரம் நீங்கும்.. எனக்கு பாதகமான முடிவு எதையும் நீ எடுக்காமல் இருக்க வேண்டுமே.. நீங்கள் எல்லோரும் வெளியே போவதை பார்த்துக் கொண்டே இருந்து பின்னாலேயே வந்தேன்..”
“அச்சோ..” ஆராத்யா திடீரென பதறினாள்..
“இது பெண்களுக்கு மட்டுமான பூஜை ஆர்யன்.. இங்கே நீங்கள் வரக்கூடாது.. ஏதாவது கெடுதல் நடக்குமாம்.. முதலில் இங்கிருந்து போங்க..”
“அதெல்லாம் ஒரு பார்மாலிட்டிக்கு சொல்வதுதான் ஆரா.. நீ இப்படி உட்கார்.. நாம் பேசலாம்..”
“பாட்டி அத்தையெல்லாம் அப்படித்தான் சொன்னார்கள்..” ஆராத்யா தயங்கினாள்..
“வழி வழியாக சொல்லப்படுவதை அவர்களும் சொல்லியிருப்பார்கள் அப்படியே பார்த்தாலும் நாம் வெளியேதானே இருக்கிறோம்.. உனக்கு தெரியுமா.. நான் சிறு வயதில் இந்த பூஜையிலேயே கலந்திருக்கிறேனாக்கும்..”
“ஹா அது எப்படி..? நீங்கள் ஆண்பிள்ளை.. ஒ.. விசயம் அப்படியா.. அந்த போட்டோவில் இருந்தீர்களே அது இந்த பூஜைக்காக போட்ட வேசம்தானா..?”
“ஏய் உடனே வார்றியே, இங்கே சின்னப் பசங்களுக்கு வர அனுமதி உண்டு.. ஒரு முறை இரவில் விழித்து நான் வருவேனென அழுது அடம் பிடித்ததால் மனோ அம்மா, பாட்டியை சமாதானப்படுத்தி இந்த பூஜைக்கு என்னையும் கூட்டி வந்திருக்கிறாள்..”
“அடப் பார்றா அத்தை – மருமகன் பாசப்பிணைப்பை.. இவ்வளவு அன்பை வைத்துக் கொண்டு ஏன் முதலில் அம்மாவுடன் பேசாமல் இருந்தீர்கள்..?” ஆராத்யாவின் கேள்வி ஆதங்கத்துடன் இருக்க, ஆர்யன் அவள் கைபற்றி தன்னருகே திண்ணையில் அமர வைத்துக் கொண்டான்.
“அது நடிப்பு ஆரா.. உன்னை ரயில்வே ஸ்டேசனில் பார்த்த போதே எனக்குள் ஏதோ தோன்றியது.. நீ எனக்கு மிக அருகே வருவது போலிருந்தது.. அன்று நானும் அந்த ரயிலில்தான் வந்து கொண்டிருந்தேன்..”
“என்ன அதே ட்ரெயினில் வந்தீர்களா..?”
“ஆமாம்.. உனக்கு கை காட்டிவிட்டு அடுத்த பெட்டியில்தான் நானும் ஏறினேன்.. நாகர்கோவிலில் ஒரு வேலை இருந்தது.. அதை முடித்து விட்டு கொஞ்சம் லேட்டாக தக்கலை வந்தேன்.. இங்கே வந்த பிறகுதான் நீ என் மனோ அத்தையின் மகளென தெரிந்தது..”
“உடனே போ.. போ என விரட்டினீர்களே..”
“ம்.. விரட்டினேன்.. ஆனால் அது உனக்காகத்தான்.. உன்னை நான் ஓரளவு அறிந்து வைத்திருந்ததால்..”
“அப்போது என்னைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு..?”
“ம்.. நீ ஒரு பிடிவாதக்கார குழந்தை என்று தெரியும்.. செய்யாதே என்றால் செய்வாய் என்று தெரியும்.. உனக்கு என்னை பார்த்ததும் அதிர்ச்சி அப்போது உன் மனதில் நான் கெட்டவனாக பதிந்திருந்தேன்.. அந்த சமயத்தில் நீ உன் அம்மாவைக் கூட்டாக் கொண்டு வீட்டை விட்டு போய் விடுவாயோ எனப் பயந்தேன்.. அதனால்தான் நானே போ.. போ என விரட்டினேன்..”
எவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறான்.. இவன் போ.. போ என சொல் சொல்லவே தனக்கு இங்கே இருக்க வேண்டுமென அதிகம் தோன்றியதை ஆராத்யா உணர்ந்தாள்..
“ஒதுங்கி நிற்கும் அப்பா, தாத்தாவிடம் உன்னை நெருக்கமாக்கவே அவர்களைப் பார்க்காதே, பேசாதே என விரட்டிக் கொண்டிருந்தேன்.. நான் விரட்ட விரட்ட நீ அவர்களை நெருங்கிக் கொண்டிருந்தாய்.. இப்படியெல்லாம் உன்னுடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது ஆரா.. அதனால் தொடர்ந்து செய்து கொண்டிருந்தேன்..”




ஆராத்யா விரிந்த விழிகளை சிமிட்டாமல் அவன் முகம் பார்த்தபடியிருந்தாள்..
“இன்னமும் நிறைய நாட்களாகும் என நான் நினைத்துக் கொண்டிருந்த போது, அப்படியில்லை இதோ முடிந்தது.. என எனக்கு உதவ வந்தது எனது அந்த சிறு வயது போட்டோ.. ரொம்ப சின்ன விசயம்தான்.. ஆனால் அதுவே எதிர்பாராத விதமாக நம் குடும்பத்தினரை சேர்த்து வைத்துவிட்டது..”
ஆராத்யாவினுள் அந்த போட்டோ நினைவு வந்துவிட அவள் இதழ்கள் குறும்பாக புன்னகைத்தாள்.. “அந்த போட்டோவில் இருக்கும் குட்டிப் பெண் ரொம்ப அழகு தெரியுமா..?” அவனைப் பார்த்து கண்சிமிட்டினாள்..
ஆர்யன் சட்டென அவள் இரு கன்னங்களையும் பற்றினான்.. அவள் கண்களுக்குள் பார்த்தான்..
“உன்னை விட அழகா ஆரா.. உன் சிறுவயது போட்டோக்களில் நீ அப்படியே செல்லுலாய்டு பொம்மை போல் எவ்வளவு அழகாக இருந்தாய் தெரியுமா..? உன்னை சிறுவயதில் பார்க்கும் சந்தர்ப்பத்தை, தூக்கி கொஞ்சும் வாய்ப்பை நான் இழந்து விட்டேன்.. இப்போது வெறுமனே அவற்றை பார்த்துக் கொண்டு இருக்கிறேன்..”
உணர்ச்சிவசப் பட்டு கரகரத்த அவன் குரலில் ஆச்சரியமானாள் ஆராத்யா..
“என்ன இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா..? நான் ப்ரிண்ட் போட்ட என் போட்டோக்களை உங்களிடம் தரவில்லையே பிறகு எப்படி..?”
“இப்படி..” தன் போனை எடுத்துக் காட்டினான்..
“உன் அம்மா போனிலிருந்து என் போனுக்கு அன்றே போட்டோக்களை மாற்றிக் கொண்டேன்..”
“ப்ராடு..” ஆராத்யா அவனை செல்லமாக அடித்தாள்.
“ஆரா நான் இப்போது பேச வந்தது..”
“ஆமாம் சொல்லுங்கள்.. ஏதோ உங்களுக்கு பாதகமான முடிவு வந்து விடக் கூடாது என்றீர்களே என்ன அது..?”
“அது.. நம் வீட்டினர் ஒரு விசயம் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.. நீ அதற்கு மறுக்க கூடாது..” இறைஞ்சலாய் இருந்தது ஆர்யனின் குரல்..
“அப்படி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள்..?”
“நீயே கேள்..” அவர்கள் அமர்ந்திருந்த திண்ணையருகே இருந்த சன்னலை காட்டினாள் உள்ளே..
“என்ன மனோ உன் மகளுக்கு கல்யாண வயசு வந்திருக்குமே.. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டியா..?” யாரோ ஒரு வயதான பெண் கேட்க,
“கைக்குள்ளேயே மாப்பிள்ளையை வைத்துக் கொண்டு வெளியில் தேட எனக்கென்ன பைத்தியமா பெரியம்மா..?” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் மனோரமா..

What’s your Reaction?
+1
7
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!