pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 27

27

” என்ன சொல்ல வேண்டும் அக்கா ? ” ஆரம்ப பதட்டம் தணிந்து தைரியமாகவே தன் முன் நின்ற மருதாணியை வியப்பாக பார்த்தாள் தேவயானி. இந்த பெண்ணிற்கு எவ்வளவு தைரியம்… இவளை சிறுமி என்று நினைத்திருந்தது தவறு,  என்று எண்ணினாள்.

” இதோ உன்னிடம் இருக்கும் இந்த போனை பற்றி… அதை உனக்கு கொடுத்தவனை பற்றி சொல்ல வேண்டும் ” 

” இது என்னுடைய ஃப்ரெண்ட் எனக்கு கொடுத்தது .என்னுடைய பிறந்தநாள் பரிசாக கொடுத்தான் .அந்த விபரங்கள் உங்களுக்கு எதற்கு சொல்ல வேண்டும் ? ” 

தேவயானி கேட்க வருவது மருதாணிக்கு புரிந்தது. மருதாணிக்கு புரிகிறது என்று தேவயானிக்கு தெரிந்தது. ஆனாலும் வெளிப்படையாக உடைத்து பேசிக்கொள்ள தயங்கி இருவரும் சுற்றிவளைத்து பேசியபடி இருந்தனர்.







” ஒரு ஸ்கூல் படிக்கும் பையனுக்கு இவ்வளவு காஸ்ட்லியான பரிசை கொடுக்கும் வாய்ப்புகள் இருக்குமா ? அப்படி யார் அந்த பையன் ? ” 

” அவன் என் கூட படிப்பவன் இல்லை .வேறு காலேஜில் படிக்கிறான் .ரொம்ப நல்லவன் .பெரிய பணக்காரன் .இந்த மாதிரி பரிசுகள் எல்லாம் அவனுக்கு சாதாரணம் ” பெருமிதம் பொங்கி வழிந்து கொண்டிருந்த மருதாணியின் குரலை வேதனையோடு கவனித்தாள் தேவயானி.

இரண்டும் கெட்டான் வயது .கொஞ்சம் அதிகமான பணப்புழக்கம் இருப்பவனை பெரிய ஹீரோவாக நினைத்து வீழ்ந்துவிட்டது .முதலில் அவன் யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும் .பிறகு ….இப்போதும் அடுத்து என்ன  என்ற நினைவுகள் அவளை வாட்டத்தான் செய்தது .ஆனால் அதனை அப்போது பார்ப்போம் என்று தள்ளினாள்.

மருதாணியின் கைகளை மென்மையாக பற்றிக்கொண்டாள் தேவயானி. ”  இதோபார் உனக்கு இதுபோல் ஒரு நல்ல துணை கிடைத்திருப்பதில் சந்தோசம் தான். அவன் யார் என்று சொன்னாயானால் நானே அவனிடம் பேசிப் பார்க்கிறேன் ” 

அதட்டல் இன்றி உடன் போக்காக பேசிய தேவயானியின் இந்தப் பேச்சில் மருதாணி கொஞ்சம் சமாதானம் ஆனாள் .” அக்கா அவன் விவரங்கள் யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறான் ” 

தேவயானிக்கு சுருக்கென்று குத்தியது .சரியானவன் என்றால் அவனுடைய விவரங்களை மறைக்கச் சொல்வானேன்  ? ” ஏன் மருதாணி ஏன் அப்படி சொன்னான் ? ” 

” அது வந்து அக்கா …” மருதாணி உற்சாகமாக ஆரம்பித்தாள் .” அவன் பெரிய பணக்காரன் . நிறைய கார் , வேன் என மாறி மாறி வருவான் . அடிக்கடி புது புது  போன் மாற்றுவான் .பளபளவென்று டிரஸ் போடுவான் .இதையெல்லாம் பார்த்து அவன்மேல் என்னுடன் படிக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் ஒரு கண் .ஆனால் அவன் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டும்தான் பார்த்தான் .என்னிடம் மட்டும் தான் பேசினான் பழகினான் . இதுவெல்லாம் அவர்களுக்கு தெரிந்தால் எங்கள் மேல் பொறாமைப்படுவார்கள்தானே ? அதனால் தான் எங்கள் காதல் விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவன் சொல்லியிருக்கிறான் ” 




அவன் மருதாணியை மிக அழகாக வலைவிரித்து அடைந்திருக்கிறான் என உணர்ந்தாள் தேவயானி .வெளி உலகம் அறியாத இந்த அப்பாவி சிறுமியும் அவனது பகட்டிலும் பேச்சிலும் மயங்கி இருக்கிறாள். உன்னை சுற்றி இருப்பவர்களை விட நீ மட்டுமே எனக்கு முக்கியமானவள் என்ற  பேச்சும் செய்கைகளும் மிக எளிதாக ஒரு பெண்ணை வீழ்த்திவிடும் .தான் கவனிக்கப்பட வேண்டும் தன்னாலேயே அவனது செயல்கள்  முடிக்கப்பட வேண்டும் என்ற ஆசையே ஒவ்வொரு பெண்ணிற்கும் அபரிமிதமாக இருக்கும் .அப்படி அவளை உணர வைப்பவன் அவளது ஹீரோவாகி விடுகிறான்…

பெண்ணின் இந்த பலவீனத்தை உணர்ந்து கொண்டு அதனை தொடும் ஆண் மிக எளிதாக அவளை ஜெயித்து விடுகிறான் .நீதானடி எனக்கு என்று சரணம் சொல்லி பின்  அவள் அறியா   ஒரு நொடியில்    அவளைக் காலடியில் போட்டு மிதிக்கிறான் .சுயமரியாதை உள்ள பெண் நிமிர்ந்து விடுகிறாள். அன்பில் அடிமையானவள் காலம் முழுவதும் தலை தாழ்ந்து போய்விடுகிறாள் .இப்படித்தான் நம் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். 

நீ மட்டும்தான் என்று இவளிடம் பேசியவன் அதே பேச்சினை இவளது மற்ற தோழிகளிடமும் பேசியிருக்கலாமில்லையா ? அப்படி எத்தனை பேர் இவனிடம் ஏமாந்திருக்கிறார்களென்று தெரியவில்லையே .இதையெல்லாம் மருதாணி உணர்வாளா ? சொன்னால் புரிந்து கொள்வாளா ?வேதனையுடன் எண்ணமிட்ட தேவயானி மருதாணியை பாவமாக பார்த்தாள்.

” அப்படி பார்க்காதீர்கள் அக்கா .அவன் நிச்சயம் என்னை திருமணம் செய்து கொள்வான் ” சீறினாள் மருதாணி.

சற்று முன்பு கூட இப்படி ஒரு நப்பாசை தேவயானிக்கும் இருந்தது. ஆனால் இப்போது ஒரு சதவிகிதம் கூட அந்த எண்ணம் இல்லை .இதோ இப்போதுகூட மருதாணி அவனைப் பற்றிய விவரங்களை சொல்ல தயாராக இல்லை .இந்த அளவு ரகசியம் காப்பவன் எப்படி நல்லவனாக இருக்க முடியும் ? 

” எப்போது மருதாணி ? “

” எங்கள் இருவரின் படிப்பும் முடிந்தபிறகு ” 

” அதாவது அவனது கல்லூரிப் படிப்பு முடிந்து… பிறகு உனது பள்ளிப்படிப்பு முடிந்து…. பிறகு உன் கல்லூரிப் படிப்பும் முடிந்த பிறகு.. அப்படித்தானே ? சரி அது வரை…? ” 

” நாங்கள் காதலித்துக் கொண்டே இருப்போம் ” உற்சாகமாக சொன்னாள் மருதாணி.

” சரி உன்னுடைய வயிற்றில் வளரும் குழந்தை ? ” தேவயானி கேட்க மருதாணி அதிர்ந்தாள். அவள் முகம் கலங்கியது.

” அ…அக்கா …” தடுமாறினாள் .

” எனக்கு தெரியும் மருதாணி .இது தவறு இல்லையா ? இதற்கு அவன் என்ன பதில் சொன்னான் ? ” 

” இதனை அவனிடம் சொல்ல வேண்டும் ” முணுமுணுத்தாள்.

” இன்னமும் சொல்லவில்லையா ? ” 

” இ…இல்லை சொன்னால் கோபப்படுவானோ என்று ….”  தடுமாற்றம் மருதாணியிடம்.







” சரி அவன் அட்ரஸ் கொடு .நானே நேரடியாக அவனிடம் போய் விஷயத்தைச் சொல்லி பேசுகிறேன் ” 

” இல்லை …இல்லை .நீங்கள் போகாதீர்கள் .நானே அவனிடம் சொல்லிக் கொள்கிறேன் ” 

” ஏன் மருதாணி , உன் தோழிகளிடம் தானே அவனைப்பற்றி சொல்லக்கூடாது என்றிருக்கிறான் . என்னிடம் சொல்லலாமே ? ” 

தேவயானி பலவிதமாக கேட்டுப் பார்த்தும் மருதாணி அசையவில்லை .” நான் அவனிடம் பேசுகிறேன் .எல்லாவற்றிற்கும் அவனிடம் தீர்வு இருக்கும் ” தீர்மானமாக சொன்னாள். தீவிரமாக நம்பினாள்.

உதட்டைப் பிதுக்கியபடி வந்த  தேவயானியை பார்த்து தலையசைத்தான் ரிஷிதரன். ”  நான் எதிர்பார்த்தேன் ” என்றான் அமைதியாக.

” இனி அவளுடைய பள்ளியில் …நண்பர்களிடம் …என்று விசாரித்துப் பார்க்கலாம். ஆனால் இது அவ்வளவு சரியானதல்ல ” 

” ஆமாம் . வேண்டாம். இது சரிவராது. நாம் வேறு தான் யோசிக்க வேண்டும் .” சிந்தனையின் முடிவில் அவன் கையில் முளைத்திருந்த சிகரெட்டை கோபமாக பார்த்தாள் தேவயானி.

” ஸ்மெல் பிடிக்கலைனா கொஞ்ச நேரம் அந்தப் பக்கம் தள்ளி போய் நில்லு ” அலட்டாமல் புகையை வெளியே விட்டான்.

” மகிஷாசுரன் ”  முணுமுணுத்தபடி தட் தட்டென்ற வேக நடையுடன் அவனை விட்டு விலகிப் போய் ஒரு பாறை திட்டில் அமர்ந்தாள் தேவயானி.

தேவயானி மூலிகை பறிக்க போகும் காட்டுப்பகுதிக்குள் இருவரும் இருந்தனர் .ரிஷிதரன் இடத்திற்கு அவள் வருவதை அவன் விரும்பவில்லை .தேவயானி இடத்திற்கு அவன் வருவதை அவள் விரும்பவில்லை .அதனால் இருவருக்கும் பொதுவாக இந்த இடம்.

” அவள் போகும் இடங்கள் , சந்திக்கும் ஆட்கள் என்று உனக்கு ஏதாவது தெரியுமா ?  நீ அவளுடன் போய் இருக்கிறாயா ? ”  அவன் நின்றிருந்த தூரத்திலிருந்து சற்று தள்ளி அமர்ந்திருந்த தேவயானியிடம் சத்தமாக கேட்டான் ரிஷிதரன்.

தேவயானி யோசித்தாள் .” அவள் பெரம்பலூர் பள்ளிக்கூடத்தில் தான் படிக்கிறாள் .அங்கே போவதற்கு  சரியான போக்குவரத்து வசதி கிடையாது .

பள்ளிக்கூட வேனையோ

வழக்கமாக வரும் பஸ்ஸையோ  மிஸ் செய்துவிட்டால் பிறகு இந்தப் பக்கமாக வரும் போகும் ஏதாவது வாகனங்களில் தான் ஏறிப்  போகவேண்டும் .அப்படி….”  என்று விழிமூடி யோசித்தவளின் முகம் கண்டுபிடிப்பில் விரிந்தது.




” ரிஷி நான் அன்று உங்களை ஹோட்டலில் பார்த்த வந்தேனே …அப்போது  இங்கிருந்து மருதாணியுடன்தான்  ஒரு வேனில் வந்தேன். யாரோ ஃப்ரெண்டுடைய வேன் என்று சொன்னாள் .அந்த வேன் கொஞ்சம் விலை உயர்ந்தது. அன்று அதனை ஒட்டிக்கொண்டிருந்தது கூட ஒரு இளைஞன்தான் .ஸ்டூடன்ட் போலத்தான் தெரிந்தான். அதாவது படிக்கும் வயது தான் இருக்கும்…” 

ரிஷிதரன் கையில் இருந்த சிகரெட்டை கீழே தூக்கிப் போட்டுவிட்டு அவளுக்கு எதிரே இருந்த பாறையில் வந்து அமர்ந்தான் ” என்னை பார்க்க வந்தாயா  ? எப்போது…? ” 

” உங்களை இல்லை .சந்திரசேகரை பார்க்க வந்தேனே …அப்போதுதானே உங்களையும் பார்த்தேன் .அன்றுதான் ….” மேலே விளக்கங்கள் கொடுக்கும் முன்பாக ரிஷிதரனின் கண்கள் மின்னின. தேவயானி தன் விளக்கங்களை நிறுத்திக் கொண்டாள் .

” எஸ் இட்ஸ் எ லவ்லி டே . ஒரு ஏஞ்சல் என்னை தீயில் இருந்து காப்பாற்றிய நாள் ” ரசனை வழிந்தோடியது அவனது குரலில் .

தீ விபத்தில் சிக்கி உடல் எல்லாம் எரிந்து வேதனையை அனுபவித்த நாளை எவனாவது அழகான நாள் என்று கொண்டாடுவானா … தேவயானி அவனை சலிப்பாக பார்த்தாள் .

” ஆனாலும் அப்படி பட்டென்று தெரியாது என்று விட்டாயே ஏஞ்சல் ? ”  ரிஷிதரன் அந்த நாளை விட்டு வெளியே வருவதாக இல்லை.

தேவயானியின்  கண்கள் அவனது உடல் தழும்புகளை ஆராய்ந்தது. ஃபுல் ஹேண்ட் டி-ஷர்ட் போட்டிருந்ததால் கைகளிலிருந்து கழுத்துவரை உண்டான காயங்களின் தழும்புகள் உடைக்குள் மறைந்திருந்தன ..காதிற்கு அருகிலும் பாதி கன்னத்திலும் இன்னமும் கருப்பாக அவனது விபத்திற்கான தடம் இருந்தது.

இவன் ஏன் இன்னமும் இதனை சரிசெய்யாமல் இப்படியே வைத்திருக்கிறான் ?  தேவயானியின் கண்கள் அவன் முக தழும்பை தொட்டு வருடின. அன்று முற்றிலுமாக எடுக்கப்பட்டிருந்த அவனது மீசை இப்போது லேசாக வளர்ந்து அரும்பிக் கொண்டிருந்தது. அது அவனது முகத்திற்கு வேறொரு  தோற்றத்தை கொடுத்திருந்தது. வாடி தளர்ந்திருந்த செடி மழைநீர் உண்டு சிலிர்த்து எழும்புவது போன்ற ஒரு புது தோற்றத்தை கொண்டிருந்தான் அவன்.

”   அப்படி கத்தியால் குத்தி விட்டு இப்படி மறந்து போவாயா ? ” இன்னமும் அந்த விசாரணை நிலையிலேயே இருந்தான்.

” இந்த தழும்புகளை ஏன் இன்னமும் சரி பண்ணாமல் வைத்திருக்கிறீர்கள்  ? ”  தேவயானி அவனுடைய விசாரணைக்கு பதில் சொல்லவில்லை.

ரிஷிதரன் தன் கன்னத்தை வருடி பார்த்தான் .”  இருக்கட்டுமே , மெதுவாக அதுவே மறையட்டும். ஏனோ இந்த தழும்புகளை எனக்கு பிடித்திருக்கிறது ” 

” ப்ச் .உளறாதீர்கள் .அதுவே மறைய  நிறைய நாட்கள் ஆகுமே .இதற்கான சிகிச்சையை இப்போதே எடுத்துக் கொள்ளலாமே .இது உங்கள் முகத் தோற்றத்தையே கெடுத்துக் கொண்டிருக்கிறது.  ” 




” அப்படியா…? இந்த சில நாட்களில் அப்படி எந்தப்  பெண்ணும் சொல்லவில்லையே …ஏன் ? ம் ….கொஞ்சம் அதிகமாகத்தான் பணம் கொடுத்து விட்டேனோ ? ”  ரிஷிதரனின் பேச்சில் தேவயானிக்கு சீ என்றானது .அவள் சட்டென்று எழுந்து கொண்டாள்.

” உலகத்து  அயோக்கியத்தனங்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு உன்னை நீயே கொண்டாடிக் கொண்டே இரு . ஐ ஹேட் யூ .உன்னை பிடிக்கவில்லை எனக்கு ”  தேவயானி வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள் .வீட்டிற்கு வந்த பிறகும் வெகுநேரம் அவள் உள்ளக் கொதிப்பு அடங்கவில்லை.




இவனெல்லாம் ஒரு மனுஷன் என்று இவனிடம் ஒரு உதவி கேட்டு போனேனே… என்னை சொல்ல வேண்டும் .இனி இவன் பக்கம் திரும்பவே கூடாது ….தேவயானியின் வைராக்கியம் எல்லாம் மருதாணி அவள் கண்ணில்படும் வரைதான்.

ஐயோ இந்த பேதைப் பெண் கதி என்ன …? அவள் நெஞ்சம் காந்தியது .அவள் மீண்டும் மருதாணியிடம் விவரங்கள் வாங்க முயன்றாள் .ஆனால் மருதாணி மிக உறுதியாக இருந்தாள் .எனது வாழ்வை நான் பார்த்துக் கொள்வேன் நீங்கள் தலையிட வேண்டாம் என்பதுபோல் அவள் வேகமாக பேசிவிட , தேவயானி மனதில் காயம்பட்டாள் .

இல்லை மருதாணியை தவறாக நினைக்கக்கூடாது , இது அவளுடைய வயது கோளாறு .இந்த வயது பெரியவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் மறுக்க சொல்லும் .தானே …தன் பாதையே சரி என்று உறுதியாக நம்பும் .நன்மை சொல்பவர்களையும் எடுத்தெறிந்து பேச வைக்கும் .இந்த இக்கட்டான பருவத்தைத் தாண்டி அவள் வரவேண்டும் …வருவாள் .தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டாள்.

மறுநாள் காலையிலேயே ரிஷிதரன் அவளுக்கு போன் செய்தான் . எடுக்கலாமா வேண்டாமா என்ற தேவயானியின் மனப்போராட்டத்தில் போன் முழுவதுமாக ஒலித்து நின்றது. போகிறது போ… என தேவயானி போனை கீழே வைத்துவிட்டு நகரப் போன சமயம் மீண்டும் ஒலித்தது.

” ரிஷி …” அவள் சேவ் செய்து வைத்திருந்த போனில் ஒலித்துக் கொண்டிருந்த பெயரை வாய்விட்டு வாசித்தான் யுவராஜ். இவன் எப்போது வந்தான் அவளை ஒட்டி நின்று போனை பார்த்து கொண்டிருந்தவனை விட்டு துள்ளி விலகி அவனை முறைத்தாள் .

” யார் இந்த ரிஷி தேவயானி ? ” அறியாதவன் போல் கேட்டான்.

” உங்களுக்கு நன்றாக தெரிந்தவர் தான்” பதில் சொன்னவள் போனை ஆன் செய்து காதில் வைத்தாள் .ஆனால் பேசாமல் மௌனமாக நின்றாள் .யுவராஜ் நகராமல் அப்படியே நின்று அவளைப் பார்த்தபடி இருந்தான். அவனது அந்த நாகரீகமற்ற தன்மை தேவயானிக்கு கோபத்தை கொடுக்க அவளது மூச்சு அனலாய் வேகத்துடன் வெளியானது.

” ஹப்பா இங்கே என் கன்னம் சுடுகிறது உன் மூச்சு .  இன்னமும் கோபமாக இருக்கிறாயா ஏஞ்சல் ? ” எதிர்முனையில் மென்மையாக ஒலித்தது ரிஷிதரனின் குரல். தேவயானியின் மன கொதிப்பை ஓரளவுக்கு அந்தக் குரல் குறைக்க முயற்சித்தது.

” அதெல்லாம் ஒன்றும் இல்லை சொல்லுங்கள் ”  யுவராஜ் இன்னமும் நகர்ந்த பாடில்லை

” மருதாணிக்காகவாவது  நாம் நம்முடைய வீம்புகளையும் , 

பிடிவாதங்களையும் கொஞ்ச நாட்களுக்கு தவிர்க்க பார்க்கலாமே ” 




” ம் … சரி சரி பார்க்கலாம் .இப்போது என்ன ? ” தேவயானியின் குரலில் இன்னமும் கத்திகள்தான் இருந்தன.

” இதற்கு கத்தி எடுத்தே குத்தி விடலாம் …அன்று போல் ” தெளிவாக முணுமுணுத்தான் ரிஷிதரன்.

” விஷயம் ஒன்றுமில்லையானால் போனை வைத்து விடவா ? ” 

” எனக்கு மருதாணியின்  பள்ளி பஸ் ஸ்டாப்பை  பார்க்க வேண்டும் ” 

” அதனை இச்சி மர ஸ்டாப் என்று சொல்வார்கள் ” என்றவள் ஓரளவு அந்த இடத்தின் விபரங்கள் சொன்னாள்.போனை கட் செய்தாள் .

” அவரது கார் ரிப்பேராம் .பஸ்ஸில் போகப் போகிறாராம் . நீங்கள் போய் ஹெல்ப் பண்ணுகிறீர்களா ? ” யுவராஜ் திடுக்கிட்டு மறுப்பாய் தலையசைத்து ” எனக்கு தலையெழுத்து பார் ” முணுமுணுத்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் .

அடுத்த அரைமணியில் தேவயானி தானும் அந்த ஸ்டாப்புக்கு கிளம்பினாள் .” அதோ அந்த மரத்தடிதான் ” முன்பே வந்து நின்றிருந்த ரிஷிதரனுக்கு காட்டினாள் .

” இதோ இங்கே வந்து விடு தேவயானி ”   அருகிருந்த புதருக்கு பின் அவன் அழைக்க ,தேவயானி கண்களில் கேள்வியோடு அங்கே போனாள் .

” மருதாணி இப்போது ஸ்கூலுக்கு போக வருவாள் இல்லையா … நாம் அவளைக் கொஞ்சம் கவனிக்கலாம் ” ரிஷிதரனின் கவனம் பஸ்ஸ்டாப்பில் இருந்தது. சிறிது நேரத்தில் மருதாணி வந்து பஸ் ஸ்டாப்பில் நின்றாள் .போனை எடுத்து யாருடனோ பேசினாள். முகம் வாடினாள் . எதிர்முனை கட்டாகி விட்டது போலும். மீண்டும் போன் செய்தாள். இப்போது அந்தப் பக்கம் எடுக்கவே இல்லை .அவள் மீண்டும் மீண்டும் முயற்சித்துக் கொண்டே இருந்தாள் .அவளது பள்ளி வேன் வந்து நின்றது .கையில் இருந்த போனை தனது பேக்கில் வைத்தவள் கலங்கிய கண்களை துடைத்தபடி பள்ளி வேனில் ஏறினாள் .

” அவன் மருதாணியை தவிர்க்க ஆரம்பித்துவிட்டான் ” தேவயானியின் குரல் நடுங்கியது.

” ம் .இனிதான் நீ மருதாணியை மிகவும் கவனமுடன் கண்காணிக்க வேண்டும் தேவயானி. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளிடம் விபரங்களை சேகரிக்க முயற்சி செய் ” 

” சரி .ஆனால் இப்படி அவளை மறைமுகமாக கண்காணிப்பது… தொடர்வது என்பதெல்லாம் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது .அடுத்தவர் அந்தரங்கத்தில் தலையிடுவது போல் மனம் வலிக்கிறது. ” 

” எல்லாம் அவளுடைய நன்மைக்காகத்தானே … இதில் தவறு ஒன்றும் இல்லை .எல்லா விஷயத்திலும் நீ நேர்மை திரு உருவாகவே இருக்கவேண்டும் என்ற அவசியம் கிடையாது .கொஞ்சம் உன்னுடைய தனிப்பட்ட சட்டதிட்டங்களை  அந்த சின்னப் பெண்ணின் வாழ்க்கைக்காக  மாற்றிக்கொள் ”  ரிஷிதரன் கோபமாக பேசினான்.







தேவயானி இந்த  அவனது நியாயமான  கோபத்தை  தலையசைத்து ஏற்றுக் கொண்டாள். துயரத்துடன் மருதாணி சென்ற பாதையை வெறித்தாள்.

” பள்ளிக்கு தானே போயிருக்கிறாள். பத்திரமாக இருப்பாள் என்று நம்புவோம் .நீ வீட்டிற்கு போ . பிறகு யோசிக்கலாம்  ” ரிஷிதரன் கிளம்பினான்.

மேலும் நான்கு நாட்கள் கடந்த பிறகும் மருதாணியின் மௌனத் தவம் கலையவில்லை. அவள் விசயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது தேவயானிக்கு தவிப்பாக இருந்தது. அன்று அவளை போன் செய்து வனப்பகுதிக்கு வரச்சொன்ன ரிஷிதரன்  பேசிய பேச்சுக்களில்  தேவயானி அதிர்ந்தாள்.

” சீச்சி உன்னை பற்றி முழுவதும் தெரிந்தும் இந்த விசயத்தில் நீ ஏதாவது செய்து விடுவாயென்ற நம்பிக் கொண்டிருந்தேனே என் முட்டாள்தனத்தை என்ன சொல்ல ? இனி மருதாணி விசயத்தில் நீ தலையிடாதே .எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன் . குட்பை …” எரிதனலாய் கொதித்து விட்டு வந்தவளின் உள்ளம் வெந்து குமுறிக் கொண்டே இருந்த்து .

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Nisha
Nisha
4 years ago

Next yeppo upload pannuvinga plz seekiram pannuga sister

4
3
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!