pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 26

26

தேவயானி அந்த ஹோட்டலின் வரவேற்பறையில் காத்திருந்தாள் . அது  ரிஷிதரனுக்கு தீ விபத்து நடந்த அதே ஹோட்டல் தான். இங்கேதான் ரிஷிதரன் தங்கி இருக்கிறான் என்பதனை சந்திரசேகர் மூலமாக அவள் அறிந்து கொண்டாள். சந்திரசேகருக்கு தேவையான கையெழுத்துக்களை அவள் வாங்கி கொடுத்துவிட்டதால் தேவயானி கேட்ட மறுநிமிடமே போனிலேயே 

ரிஷிதரன் பற்றிய விவரங்களை சந்திரசேகர் ஒப்படைத்து விட்டான்.




” ரிஷி சாரை தனியாகவா சந்திக்கப் போகிறீர்கள் மேடம் ? ”  என்று அவன் கேட்ட விதத்தில் தேவயானிக்கு கோபம் வந்தது.

” ஏன் அப்படி சந்திப்பதால் என்ன ? ” 

” மேடம் ரிஷி சார் உங்கள் குடிலில் தங்கியிருந்தபோது நடந்துகொண்ட முறையை வைத்து அவரை நல்லபடியாக நினைக்கவேண்டாம் .இங்கே அவர் பழைய மாதிரிதான்… அரக்கத்தனமாகவே  நடந்து கொண்டு இருக்கிறார். நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள் ” 

சந்திரசேகர் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகளில் இருந்த அரக்கத்தனம் தேவயானியின் இதழ்களில் புன்னகையை கொண்டுவந்தது. ஆமாம் அரக்கன் …மகிஷாசுரன். தனக்குள் சொல்லிக் கொண்டாள்.”  நீங்கள் கவலைப்பட வேண்டாம் சார் .அதனை நான் பார்த்துக்கொள்கிறேன் ” என்றாள்.

” சரிங்க மேடம். எதற்கும் ஹோட்டலில் அவருடைய அறை வரை போக வேண்டாம் .பேசவேண்டிய விஷயத்தை ரிசப்ஷனில் வைத்தே…”  சந்திரசேகர் பேசிக்கொண்டே போக தேவயானிக்கு எரிச்சல் வந்தது .இவர் என்னை என்ன  நினைத்தார்…

” சந்திரசேகர் சார் எனக்கு ஒரு சந்தேகம் .உங்கள் முதலாளிகளை பற்றிய தகவல்களை இப்படித்தான் யார் கேட்டாலும் ஒப்படைத்து விடுவீர்களா  ? ” இனிய குரலில் கேட்டாள்.

” அது எப்படிங்க மேடம் கேட்பவர்களுக்கு எல்லாம் சொல்லுவேன்?  நீங்கள் எங்களுக்கு நன்கு பழக்கமானவர் .அதனால்தான் மறைக்காமல் சொன்னேன் ” 

” ஒரு மாதம் எங்கள் விடுதியில் உங்கள் முதலாளி தங்கியிருந்தார் அவ்வளவுதானே …இதைத்தவிர என்னைப்பற்றி உங்களுக்கு வேறு என்ன தெரியும் ? நான் யாராவது சிலருடன் சேர்ந்து உங்கள் சின்ன முதலாளியை கடத்தி வைத்துக்கொண்டு பெரிய முதலாளியிடம்  பணம் கேட்டு மிரட்டினால்  நீங்கள் என்ன செய்வீர்கள் ? ” 




” ஐயோ மேடம்…”  சந்திரசேகரின் கத்தலில் பயம் இருந்தது.

” ஏங்க மேடம் ஏதேதோ சொல்றீங்க …நான் உங்களை நம்பி தானே …நீங்கள் எனக்கு கையெழுத்து எல்லாம் வாங்கித் தந்தீர்களே ….ஆனால் இப்படியெல்லாம் செய்வீர்களா  ? ” புலம்ப ஆரம்பித்துவிட்ட சந்திரசேகரை…

” உங்களது தெளிவான தகவல்களுக்கு நன்றி சார் ” என்று மேலும் அதிர வைத்துவிட்டு புன்னகையோடு போனை வைத்தாள் .இதோ இங்கே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்துக்கொண்டு இருக்கிறாள் .அந்த ரிஷிதரனை காணவில்லை. எங்கே எவளுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறானோ பற்களை நற நறத்து கொண்டாள்.

திடீரென்று மனதில் தோன்றிய குறும்புடன் தனது போனை எடுத்து சந்திரசேகருக்கு போன் செய்தாள் .” எக்ஸ்க்யூஸ் மீ சார் .ரிஷிதரன் சாருடைய போன் நம்பர் எனக்கு தர முடியுமா ? அவர் இங்கே ஹோட்டலில் இல்லை .போன் செய்து அவரிடம் பேசி  இங்கே வரவழைத்து , அதற்குப் பிறகு அவரை நான் திட்டம் போட்டபடி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் ” ஏதேதோ எண்ணங்கள் வரும்படி குரலை ஏற்றி தாழ்த்தி பேசினாள்.

” மேடம் விளையாடாதீர்கள் மேடம் .நான் திருச்சியில் இருக்கிறேன். இப்போது என்னால் உடனடியாக அங்கே வர முடியாது .ஆனால் நீங்கள் அப்படி ரிஷிதரன் சாரை கடத்தவெல்லாம் செய்வீர்களா ? அவர் வேறு ஃபுல்லாக மப்பில் இருந்தாரானால் நடப்பதே தெரியாது…” 

” ஆஹா , இது நல்ல ஐடியாவாக இருக்கிறதே …அவருக்கு கூடக்கொஞ்சம் தண்ணியை ஊற்றிக் கொடுத்தால் ஈசியாக கடத்தி விடலாம் அப்படித்தானே ….? உங்கள் ஐடியாவிற்கு நன்றி சார் .இதைக்கூட நான் உபயோகப் படுத்திக் கொள்கிறேன் ” 

” அய்யய்யோ தவளை …தவளை  “சந்திரசேகர் அந்தப் பக்கம் தன் வாயில் அடித்துக்கொள்ளும் ஓசை கேட்டது .தனது சிரிப்பு சத்தம் போனில் கேட்டு விடாமல் இருக்க ஓசையை அடக்கிக்கொண்டு இதழ்களை மட்டும் பிரிய விட்டு சிரிப்பை செய்கையில் காட்டிக்கொண்டிருந்தாள் தேவயானி.

ரிஷிதரன் அந்த ஹோட்டலின் வாயில் படி ஏறும்போதே  சத்தமின்றி இதழ் விரிந்து , கன்னங்கள் உற்சாகமாக குவிந்திருக்க , கண்கள் மின்மினிகளாய் மின்னிக் கொண்டிருக்க , முகம் கொள்ளா சிரிப்புடன் போனில் பேசிக் கொண்டிருந்த

 தேவயானியின் இந்தத் தோற்றம் தான் அவன் கண்ணில் பட்டு மனதில் பதிந்து போனது.

வேகமாக தேவயானியை நோக்கி நெருங்கினான் .அவனைப் பார்த்துவிட்ட தேவயானி ” ரிஷி சார் வந்து விட்டார். பிறகு பேசுகிறேன் ” என்று சொல்லிவிட்டு ” மேடம் …மேடம் தப்பாக எதுவும் செய்து விடாதீர்கள் ” என்ற சந்திரசேகரின் கெஞ்சல் பேச்சை புன்னகை ஒன்றுடன் பதிலின்றி கட் செய்தாள்.

” இங்கே என்ன செய்கிறாய் ? ”  கோபம் இருந்தது ரிஷிதரனின் குரலில்.

” உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் ” 

” என்னை பார்ப்பது என்றால்….”  பேசிக் கொண்டிருந்தவன் தேவயானியின் பார்வை அவனுக்கு பின்னால் போவதை கவனித்து அவனுடன் வந்த இரண்டு பேருக்கும் ஹோட்டலின் உள் போகுமாறு ஒற்றை விரல் ஆட்டினான். அவர்கள் பணிந்து உள்ளே போனார்கள்.

“முழிக்கிற முழியை பாரு …ஸ்கௌன்டிரல்ஸ் ”  போனவர்களை முணுமுணுத்தாள் தேவயானி.




” அதனால் தான் கேட்கிறேன் …இங்கே ஏன் வந்தாய் என்று .ஒரு போன் செய்திருந்தால் நானே வந்திருப்பேனே ? ” 




ஆமாம் சொன்னால்தானே வருவீர்கள்  ? ” முணுமுணுத்தாள்.

” என்ன …? ” 

” உங்கள் போன் நம்பர் என்னிடம் இல்லை என்றேன் ” 

” உன் அண்ணனிடம் கேட்பதற்கு என்ன  ” என்றபடி தனது போனை எடுத்து அவள் போனுக்கு அழைத்தான் ” ,சேவ் செய்து கொள் ” 

” என் நம்பர் தெரியுமா உங்களுக்கு ? ” 

” அக்கறை இருந்தால் எல்லாம் தெரியும் ” அவனது பதிலுக்கு என்ன அர்த்தம் என்று யோசித்தாள்.

” சீக்கிரம் சொல்லு என்ன விஷயம்  ? ” கேட்டபடி தனது வாட்சை பார்த்தவனை முறைத்தாள்.

” முக்கியமான விஷயம் பேசவேண்டும் .இப்படி போகிற வழி வருகிற வழியில் நின்று பேச முடியாது ” 

” ம் . மதிய உணவு நேரம் .சாப்பிடுவதற்காக வந்தோம் ” முணுமுணுப்போடு தன் போனை எடுத்தான்.

” நானும் சாப்பிடவில்லை .வாங்க எல்லோருமே சாப்பிடலாம் ” என்றவளை திகைப்புடன் ” என்ன …? ” என்றான்.

” நானும் உங்கள் பிரண்டு தானே ரிஷி சார் ? உங்களுடைய அந்த பிரண்ட்ஸோட சேர்த்து எனக்கும் சாப்பாடு வாங்கி தர மாட்டீர்களா  ? ” தலைசாய்த்து கொஞ்சலாய் கேட்டவளை எரிப்பது போல் பார்த்தான் .

” மாட்டேன் .இப்படி சொல்லாமல் கொள்ளாமல் வந்து நின்றதற்கு நீ இன்று ஒருவேளை பட்டினி கிடக்கலாம் .தப்பில்லை ”  என்றவன் தனது போனில் ” வேண்டியதை கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் .நான் ஒரு முக்கியமான வேலையாக வெளியே போகிறேன் ” என்றுவிட்டு அவளுக்கு வருமாறு கையசைத்தபடி வெளியே நடந்தான்.




” நான் சரி. நீங்களும் எதற்காக பட்டினி கிடக்க போகிறீர்கள் சார் ” கேட்டபடி அவனது வேக நடைக்கு இணைய மெது ஓட்டமாக நடந்தாள்.

” கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டு இரு ” தன் போனை நோண்டியபடி அவளிடம் எரிந்து விழுந்தவன் கார் கதவை திறந்து விட்டு ஏற சைகை செய்தான் .

” அட்லீஸ்ட் அந்த ஹோட்டலில் நீங்கள் தங்கியிருக்கும் அறைக்காவது என்னை அழைத்துப் போய் இருக்கலாம் ” 

குறைபட்டவளை ”  வாயை மூடச் சொன்னேன் ” என உறுமினான்.

” முக்கியமான விஷயம் பேச வேண்டி இருக்கிறதே சார் .எப்படி வாயை மூட முடியும்  ? ” அப்பாவியாக விழி விரித்தாள்.

ரிஷிதரனின் தாடைகள் இறுகுவதில்  அவனுடைய அடக்கப்பட்ட கோபம் வெளிப்படையாக தெரிந்தது.

” இப்படி நான் சுற்றிக் கொண்டிருக்கும் இடங்களுக்கெல்லாம் என்னை தேடி வராதே தேவயானி. இங்கெல்லாம் …இதுவெல்லாம் நீ வரக்கூடிய இடங்கள் இல்லை ” 

” ஆனால் நீங்கள் இங்கே தானே இருக்கிறீர்கள் சார் ? ” மீண்டும் கண் சிமிட்டி பச்சைப்பிள்ளை வேடம் .

” உன்னை….”  வலது கை ஸ்டியரிங்கை  பிடித்து இருக்க , இடது கையை விரித்து அவள் முகத்தை பற்றி நசுக்கும் வேகத்தோடு   கொண்டு வந்தவன் தேவயானி தலையை பின் இழுக்கவும் அவள் முகம் தொடும் கடைசி நொடியில் கையை மடக்கி கொண்டான்.

” அப்பாவி வேடம் போடும் இந்த கண்கள் இரண்டையும் ….” முணுமுணுத்து விட்டு பாதியில் விட்டான்.

” கண்களை குத்தி விடுவீர்களா சார்  ? ” அவனை சீண்டுவதை அவள்  குறைத்துக் கொள்ளவே இல்லை.

ரிஷிதரன் அவளது கேள்வியை கவனிக்காதவன் போல்

சிறிய பார்க் ஒன்றுக்குள் காரை நுழைத்து ஒரு மரத்திற்கு அடியில் நிறுத்தினான் .” இங்கேதான் தொல்லை இன்றி பேச முடியும் ” என்றபடி அவள் பக்கம் திரும்பி அமர்ந்தான்.

” அப்போது நிஜமாகவே பட்டினிதான்  ” தேவயானி தன் வயிற்றை தொட்டபடி கேட்ட கேள்வியை அலட்சியம் செய்தான் .

” என்ன கேட்கப் போகிறாய் …? ” அவன் விழிகள் தேவயானியை ஊசி போல் துளைத்தன.

” மிகவும் சுதந்திரமான வாழ்வு போலிருக்கிறது ..” சீண்டலை  விடுத்து  நக்கலாக கேட்டாள் .நீயெல்லாம் ஒரு மனிதனா ….எனக் குற்றம் சாட்டியது அவள் விழிகள் .

” இதுதான் என்னுடைய வாழ்க்கைமுறை தேவயானி .அங்கே உங்களது தொழில் தர்மத்திற்கு மரியாதை கொடுத்து என்னை கட்டுப்படுத்தி வைத்திருந்தேன். இங்கே எனக்கு கட்டுக்கள் கிடையாது. இதுதான் நான்… இப்படித்தான் நான்…”  என்றபடி பாக்கெட்டில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

” ம் சொல்லு .உனக்கு என்ன விபரங்கள் வேண்டும் ? ”  லேசான நடுக்கம் ஓடியது அவன் குரலில்.




தேவயானி அவன் முகத்தில் இருந்து பார்வையை வெளிப்புறம் திருப்பிக்கொண்டாள் .இவன் எக்கேடு கெட்டு  போனால் எனக்கென்ன …தன்னைத்தானே சமானித்துக் கொண்டாள்.

” மருதாணியை பற்றி பேச வேண்டும் ” உலர்ந்திருந்த்து அவள் குரல் .

” ம் . சொல்லு ” கவனமாக வந்தது அவன் குரல்.

தேவயானி மெல்ல சொல்லத் துவங்கினாள். மருதாணியின் போனில் ஆரம்பித்து அவளது மர்ம நடவடிக்கைகளை சொன்னாள்.

ம் …என்ற லேசான இடையிடல் கூட இல்லாமல் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தவன் ” நீ என்ன நினைக்கிறாய் ? ” என்றான்.

” யாரோ ஒருவன் ஒரே ஒரு போனைக் கொடுத்து  அவளை ஏமாற்றி இருக்கிறான் .இப்போதும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான். இந்த அப்பாவி சிறுமி அவனை நம்பிக் கொண்டு இருக்கிறாள். அவன் யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் .மருதாணிக்கு  உண்மையை உணர்த்த வேண்டும் ” 

ரிஷிதரன் தேவயானி பேசி முடித்ததும் இருகைகளாலும் ஸ்டீயரிங்கை அழுத்தி பிடித்தபடி பேசாமல் அமர்ந்திருந்தான் .

விரலிடுக்கில் இருந்த சிகரெட் அவன் விரலுக்கு இறங்கியது.

” ரிஷி ”  கடைசி நேரத்தில் அதை கவனித்து வேகமாக சிகரெட்டை தட்டிவிட்டாள் தேவயானி.

” என்ன  ஞாபகத்தில் இருக்கிறீர்கள் ? ” 

ரிஷிதரன் அவளை திரும்பி பார்த்தான் .அவன் முகம் பரவசமாக இருந்தது . ” நன்றி ஏஞ்சல் ” என்றான்.

” நன்றியா…?  எனக்கா…?  எதற்கு ….? ” புரியாமல் பார்த்தாள்.

“.ஆமாம் .என்னை நம்பியதற்கு. எளிதாக பழி போடுவதற்கு ஏதுவாக நான் இருந்தாலும் ,  பழி சொல்ல சிலர் தயாராக இருந்தாலும் , அவர்களை நம்பாமல் என்னை நம்புவதற்கு .நீயா என ஒரே ஒரு கேள்வி …இல்லை அந்த மாதிரி ஒரு பார்வை பார்த்திருந்தாயானால் கூட ….” என்றவன் தலையை உலுக்கிக் கொண்டான் .” அதனை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை “

” ப்ச் …உங்களை எனக்கு தெரியும் .ஆனால்    எங்கள் விடுதியில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியுமா ? எப்படி ? ” 

” பிறகு சொல்கிறேன் .இப்போது மருதாணி விஷயம் பார்ப்போம். நான் அவளிடம் பேசுகிறேன் .இதெல்லாம் இந்த வயதில் வரக்கூடிய தடுமாற்றம் என்று புரிய வைக்க முயற்சிக்கிறேன் ” நடுக்கம் போய் உற்சாகம் வந்திருந்தது அவன் குரலில் .




” இ…இல்லை சார் .அப்படி பேசும்  நிலைமையை தாண்டி விட்டோம் .உடனடியாக செயலில் இறங்க வேண்டும் ” 

” அப்படி என்ன அவசரம் தேவயானி ? ” 

” அது… வந்து மருதாணி இ…இப்போது ….பிரக்னென்டாக இருக்கிறாள் ” தடுமாறி சொல்லி முடித்தாள்.

” ஓ …ந்நோ …” வேகமாக ஸ்டியரிங்  மேல் குத்தினான் ரிஷிதரன். ”  ஷிட் …பாஸ்டர்ட் ”  முகம் தெரியாத யாரையோ திட்டினான்.

மேலே என்ன பேசுவது என்று தெரியாமல் இருவருமே மௌனமாக சிறிதுநேரம் அமர்ந்திருந்தனர்.

” இப்போது என்ன செய்வது ? ” கேட்ட ரிஷிதரனின் குரலிலும் குழப்பமே இருந்தது.

” எனக்கு தெரியவில்லை சார் .இந்த விஷயத்தை அங்கே யாரிடமும் நான் கலந்து கொள்ள முடியாது .அண்ணனுக்கு தெரிந்தால் மருதாணியின் அம்மாவை  வேலையை விட்டு நிறுத்தி விடுதியை விட்டே அனுப்பிவிடுவார். அண்ணியும் , அம்மாவும் அண்ணாவை பின்பற்றுகிறவர்கள் தான்.

அப்புறம் யுவராஜ்…. அவரிடம் இந்த விஷயம் பேசவே முடியாது. அவர் கண்டபடி கற்பனை செய்து வாய்க்கு வந்ததை பேசிக் கொண்டிருக்கிறார் ” 

” அந்த முட்டாள் பற்றி பேசாதே ” ரிஷிதரன் சீறிய வேகத்திற்கு தேவயானி வாயை மூடிக்கொண்டாள். இருவருக்குமிடையே மீண்டும் நிமிடங்கள் இறுக்கமாக கழிய ஆரம்பிக்க அந்த அமைதியை கலைக்கும் வகையில் ரிஷிதரனின் போன் ஒலித்தது.




” என்னய்யா என்ன விஷயம்  ?அதுதான் எல்லா கையெழுத்து வாங்கி விட்டாயே …பிறகும் எதற்கு போன் செய்கிறாய் ?” ரிஷிதரன் போனில் கத்தியதில் மறுமுனையில் சந்திரசேகர் என ஊகித்தாள் தேவயானி. உடன் அவள் முகத்தில் மெல்லிய சிரிப்பு வந்தது.

” ம் …சரி …என்ன …என்னது… யோவ் பைத்தியமா நீ  ? என்னென்னமோ உளறிக் கொண்டிருக்கிறாய் .”  ரிஷிதரன் கேட்க என்ன என்று சைகையால் அவனிடம் கேட்டாள் தேவயானி.

” ஆமாம் வந்திருக்கிறாள் .இதோ என் எதிரே தான் உட்கார்ந்து இருக்கிறாள். ஏன் அவளுக்கென்ன…? ”  தொடர்ந்து போனில் பேசியவன் இரு என அவளுக்கு சைகை செய்தான் .போன் பேச்சை கவனித்தான்.




” யோவ் திருச்சியில் தானே இருக்கிறாய் ? 

இங்கிருந்து திருச்சிக்கு வர ஒரு மணி நேரம் தான் ஆகும் .நேரில் வந்தேன் என்று வை .உன் நாக்கை இழுத்து வைத்து அறுத்து விடுவேன். வைய்யா போனை ”  எரிச்சலுடன் போனை கட் செய்தான்

” என்ன என்னிடம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ள சொல்கிறாரா ? ” தேவயானி சிரிப்புடன்  கேட்டாள்.

” ஆமாம் …அது எப்படி உனக்கு …ஏய் ஏஞ்சல் அந்த அரைவேக்காட்டிடம் என்ன சொல்லி வைத்தாய் ? ” 

” நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று ஒரே ஒரு கேள்விதான் சார்  கேட்டேன். அப்படியே உங்களுடைய அன்றாட நிகழ்ச்சி நிரலையே ஒப்படைத்து விட்டார் .இது தப்பு இல்லையா ? அதனால்தான் அவருக்கு ஒரு சின்ன தண்டனை கொடுத்தேன்…” தேவயானி சிரிப்புடன் தான் சந்திரசேகரை சீண்டிய விவரத்தை சொன்னாள் .

” உங்களை கடத்திக் கொண்டு போய் வைத்துக் கொண்டு உங்கள் அண்ணனிடம் நிறைய பணம் கேட்கும் ஐடியா வைத்திருக்கிறேனாக்கும் .என்னிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் ரிஷி சார் ” 

ரிஷிதரன் கடகடவென்று சிரித்தான் .” இதைத்தான் நான் ஹோட்டலுக்குள் வரும்போது போனில் பேசிக் கொண்டு இருந்தாயா ? ” 

” ஆமாம் சந்திரசேகர் இனிமேல் என்னிடம் உங்களை பற்றி அடிக்கடி எச்சரிக்க மாட்டார் என்று நினைக்கிறேன். ” 

” நிச்சயம் .உன்னை போலவே உன் குறும்புகளும்  மிகவும் அழகாக இருக்கின்றன  ஏஞ்சல் ” ரசித்து ஒலித்த அவனின் குரலுக்கு அவன் முகம் பார்க்க முடியாமல் தடுமாறினாள் தேவயானி.

இப்போதும் இருவருக்குமிடையே மௌனம் நுழைந்து விட்டதுதான் .ஆனால் அதில் மென்மையாக ஒரு வீணை இசை மீட்டிக் கொண்டிருந்தது.

 ரிஷிதரனின் போன்  மீண்டும் ஒலிக்க  போனை எடுத்து அவன் அவர்கள் இருக்கும் இடத்தின் விவரம் சொல்ல , அடுத்த ஐந்து நிமிடங்களில் அவர்களது காரை தேடி வந்தது உணவு.

” சாப்பாடு ஆர்டர்  செய்தீர்களா சார் ? எப்போது ? ”  தேவயானி  வியக்க ” நாம் வரும்போதே , போனில் ஆர்டர் செய்து விட்டேன் ” என்றவன் வந்த உணவை  பிரித்து அவள் முன்  வைத்தான்.

” இருவருக்குமே பட்டினி அவசியமில்லை சாப்பிடு ” என்றான். தேவயானி மறுக்காமல் வாங்கி உண்ணத் துவங்கினாள்.

உணவின் ருசி பற்றிய பேச்சை தவிர மற்ற பேச்சு அவர்களுக்கு இடையே இல்லை . வேறு பேசுவதற்கு தயக்கமும் ஒருவித பயமும் அவர்களிடையே இருந்தது தான் உண்மை. இருவரின் மனதிற்குள்ளும் செந்தட்டியாய் அரித்தபடி அமர்ந்திருந்தாள் மருதாணி.




” அவன் யாரென்று மருதாணியிடம் கேட்டுச் சொல் ஏஞ்சல் .அவனிடம் நான் பேசிப் பார்க்கிறேன் ” என்ற யோசனையோடு தேவயானியை பசுமை குடிலின் அருகே இறக்கிவிட்டு விட்டு போனான் ரிஷிதரன்.

What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Nisha
Nisha
4 years ago

Please full story upload pannuga sister

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!