Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 11

11

ஏறக்குறைய மூன்று கோடிக்கு அருகே வந்த பில்லை ஓரக்கண்ணால் கவனித்தபடி முதலாளியின் உத்தரவிற்கு கட்டுப்பட்ட பணியாளாக இரண்டாவது தளத்திற்கு இறங்கி வந்துவிட்டாள் கமலினி .

இன்னுமா கோபம் போகவில்லை …? எவ்வளவு பெரிய வியாபாரத்தை முடித்துக் கொடுத்திருக்கறேன் .பாராட்ட வேண்டாம் .இப்படி எரிந்து விழாமல் இருக்கலாமே …கனத்த மனத்துடன் வாடிக்கையாளர்களை கவனிக்க ஆரம்பித்தாள் .இரண்டாவது தளம் குழந்தை நகைகளுக்கானது .அநேகமாக அனைவரின் கைகளிலும் குழந்தைகள் இருந்தனர் .அத்தோடு அங்குமிங்கும் ஓடியபடி சில குழந்தைகள் இருக்க , அந்த இலகு சூழல் கமலினி மனதை ஓரளவு சமாதானப்படுத்தியது .

”  செல்லக்குட்டிக்கு மொட்டை போட்டு காது குத்த போறீங்களா ..? குட்டிக்காகவே அழகழகான ஸ்டெட்ஸ் நிறைய நியூ மாடல்ல வந்திருக்கிறது .உள்ளே போய் பாருங்கள் ….” காது குத்துக்கு கம்மல் கேட்டு வந்த தம்பதி ஒருவரின் கை குழந்தவயை கன்னம் நிமிண்டி கொஞ்சி உள்ளே அனுப்பி வைத்தாள் .

” இந்த சுட்டி பின் சங்கிலி இல்லாமல் முன் உச்சியில் மட்டும் வைத்துக் கொள்வது போலிருக்கும் மேடம் .உங்கள் மகளின் நாட்டிய அரங்கேற்றத்திற்கு இது ரொம்பவே சிம்பிளாக தெரியும் .நீங்கள் கொஞ்சம் பெரிதாக பாருங்களேன் .அதுதான் மேடையில் ஆடும்போது கீழிருந்து பார்க்க அழகாக தெரியும் …” சிம்பிள் நெற்றிச்சுட்டி பார்த்துக் கொண்டிருந்த தாயை சற்று பெரிய நகை பக்கம் திருப்பினாள் .

அவளது போன் ஒலித்தது .யார் நம்பர் இது …தெரியாத  புது நம்பரில் யோசனையோடு ஹலோ சொன்னாள் .

” மேலே வா ” விஸ்வேஸ்வரனின் குரல் .உடனே கட் பண்ணிவிட்டான் .திமிரை பார் .இவன் வா …என்றால் வருவதற்கும் …போ என்றால் போவதற்கும் இவன் வைத்த ஆளா நான் …பொருமியபடி படியேறும் போது ,அவன் வேலைக்கு வைத்த ஆள்தானேடி நீ ..அவள் மனம் அவளை கிண்டல் செய்தது .




” உன்னிடம் சொல்லிக் கொள்ள வேண்டுமாம் …” ஏழாவது தள நுழைவிலேயே நின்றவன் அவனுக்கு பின் நின்ற ப்ரியமவதா குடும்பத்தினரை கட்டை விரலால் காட்டி விட்டு , அருகே நின்ற சுதாகரிடம் பேச திரும்பிக் கொண்டான் .

” உன்னோட உதவியால்தான்மா இத்தனை அழகான நகைகளை செலக்ட் செய்ய முடிந்த்து .ரொம்ப திருப்தியாக போகிறோம் .உன்னிடம் சொல்லிக் கொண்டு போகலாமென்றுதான் கூப்பிட சொன்னேன் …” ஒளிரும் முகத்துடன் அவள் கைகளை பற்றினாள்  ப்ரியம்வதாவின் அம்மா .

” அட நான் என்னங்கம்மா செய்தேன் .எங்கள் முதலாளி வாங்கி வைத்த நகைகளை உங்களுக்கு காட்டினேன் .அவ்வளவுதானே …? என் வேலைதானே இது …? ” புன்னகைத்தாள் .எதிரே இருந்த முழு உயர கண்ணாடியில் பின்னால் நின்றிருந்த விஸ்வேஸ்வரனை பார்த்தாள் .அவன் முகம் இறுக நின்றிருந்தான் .

மிளகாயை தின்றாயா என்ன …இப்படி மூஞ்சியை வைத்துக் கொண்டிருக்கிறாயே …? இப்படியான பொருள் பார்வை ஒன்றை அவனிடம் எறிந்துவிட்டு முகம் திருப்பிக் கொண்டாள் .

” வருகைக்கு நன்றி ” பணியாளாய் கை கூப்பி ஒவ்வொருவருக்கும் விடை கொடுத்தாள் .ப்ரியம்வதா அவளுக்கு கை குலுக்க கை நீட்ட , வியந்த பார்வையிடன் அவள் கை பற்றினாள் .

” தேங்க்யூ …ம் …உங்கள் பெயர் என்ன சிஸ்டர் …? “

” கமலினி ” ப்ரியம்வதாவின் மாற்றத்தில் வியந்தபடி கை குலுக்கினாள் .மனதிற்கு பிடித்த உடைகளோ , ஆபரணங்களோ அமைந்து விட்டால் இந்த பெண்களுக்குத்தான் எத்தனை சந்தோசம் வந்து விடுகிறது என ஆச்சரியப்பட்டுக் கொண்டாள் .

” கமலினி இவை எனது திருமண நகைகள் .வாழ்நாள் முழுவதும் நான் நினைவு கூறி பத்திரமாக வைத்துக் கொள்ளப் போகும் நகைகளல்லவா …? அவை என் மனதிற்கு பிடித்தமானதாக , எனக்கு பொருத்தமானதாக கிடைக்க வேண்டுமில்லையா …? அதுதான் எனக்கு முதலில் கொஞ்சம் டென்சன. உங்களிடம் கூட படபடவென பேசி விட்டேன் .தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் .எனக்கு உதவியதற்கு   ரொம்ப தேங்க்ஸ் “

” ஹையோ இதற்கெல்லாம்  வருத்தமா மேடம் …? ஒரு பெண்ணாக உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது .கல்யாண டென்சன் எல்லாப் பெண்களுக்கும் உண்டாவதுதான் .இங்கே இது என்னுடைய வேலை மேடம் .நீங்கள் நன்றி சொல்வதாக இருந்தால் இத்தனை அருமையான நகைகளை செலக்ட் செய்து இங்கே வாங்கி வைத்திருக்கிறாரே எங்கள் முதலாளி .அவருக்கு சொல்லுங்கள் .”

சற்று சத்தமாகவே இதை சொன்னபடி விஸ்வேஸ்வரனின் சமாதான முகத்தை எதிர்பார்த்து அவனை லேசாக திரும்பிப் பார்க்க , அவன் முகம் இன்னமும் இறுகி இருந்த்து .

ப்ரியம்வதா கமலினியை லேசாக அணைத்து விடைபெற சுதாகர் அவர்கள் அருகில் வந்தான் .” நீங்கள் ஏதோ மந்திரம் வைத்திருக்கிறீர்களோ கமலினி …? ப்ரியாவின் நட்பு  அவ்வளவு எளிதாக  யாருக்கும் கிடைத்து விடாதே …? உங்களுக்கு மட்டும் எப்படி …அதுவும் இவ்வளவு விரைவில் …? “

” ஐயோ …இது சும்மா ஒரு பார்மாலிட்டிக்கு சார் ” கமலினி கூச்சமாக மறுக்க , ப்ரியம்வதா செல்லமாக அவள் கையை தட்டினாள .

” பார்மாலிட்டியெல்லாம் இல்லை .நிஜமாகவே நாம் இனி ப்ரெண்ட்ஸ்தான் .ஆமாம் என்ன சொன்னீர்கள் …என் நட்பு எளிதாக யாருக்கும் கிடைக்காதா …? ” செல்லமாக சுதாகரை முறைத்தாள் .

” ஆமாம் ப்ரியா .பாரேன் நமக்கு திருமணம் நிச்சயம் செய்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது .அடுத்த மாதம் திருமணம் .இன்னமும் எனக்கே உன் நட்பு கிடைக்கவில்லை .எப்போதும்  உன்னை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்பது போன்றே என்னை  பார்க்கிறாய் .அதோ அப்படி நில் என்று வாசல்படி தாண்டியே நிற்க வைத்துக் கொண்டிருக்கிறாய் .இதோ இப்போதுதான் கிடைத்த உன் புது ப்ரெண்டை மட்டும் வா …வா என அணைத்துக் கொள்கிறாய் …ம் …” குறும்பு பேச்சும் ஏக்க மூச்சுமான  சுதாகரனின் பேச்சு திருமணத்திற்கு காத்திருக்கும் இளம் ஜோடிகளின் அந்தரங்கத்தை , சுதாகரின் ஏதோ மன விருப்பத்தை வெளிப்படுத்த , ப்ரியம்வதா ஊடல் பார்வை ஒன்றுடன் வெட்கமாக தலை குனிய , கமலினிக்கோ தர்ம சங்கடம் .

அடக் கடவுளே …இவனது மன ஆசைகளை வெளிப்படுத்த , தேவைகளை கேட்க ,  இடையாக இவனுக்கு நானதானா கிடைத்தேன் …கூச்சத்துடன் படபடத்த விழிகளை திருப்ப அங்கே விஸ்வேஸ்வரன் நின்றான் .அவனும் அப்போது அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் .இறுக்கம் குறைந்த அவனது முகத்தில் இப்போது சுவாரஸ்யம் இருந்த்து .அது கமலினியிடம் இருந்த்து .பார்வையை நகற்றாமல் மெல்ல நடந்து வந்து அவர்களோடு சேர்ந்து கொண்டான் .

” டேய் சுதா தேவையானதை தைரியமாக நேரடியாகவே கேட்டு வாங்க வேண்டுமடா .இப்படியா இடையில் ஆள் வைத்து கேட்பார்கள் ..? ” கிண்டல் செய்தபடி ஓங்கி தோழனின் தோளில் தட்டினான் .

” நீ வேறடா .நேருக்கு நேர் பார்க்கும் போதே ஒரு மாதிரி முறைப்பாகவே பார்க்கிறாள் .எனக்கு கை கால் நடுங்க ஆரம்பித்து விடுகிறது ..”

” சுதா சும்மா இருங்க .இதென்ன கிண்டல் ….? ” வெட்கத்தில் கிசுகிசுத்து வந்த குரலை ஆச்சரியமாக பார்த்தாள் கமலினி.அட ….ப்ரியம்வதாவிற்கும் வெட்கம் வருகிறதே …

” வாவ் .இது …இதைத்தான் நான் எதிர்பார்த்தேன் ….” மெலிய கூச்சலுடன் , தன் தோள் குத்திய ப்ரியம்வதாவின் கை பற்றி இழுத்து தன்னோடு சேர்த்து இணைத்துக் கொண்டான் சுதாகர் .

அவர்களது நெருக்கம் தந்த கூச்சத்தில் அவசரமாக அவர்கள் அருகாமையை விட்டு நகர்ந்த கமலினி அவர்களுடன் வந்திருந்த மற்றவர்களுக்கு விடை கொடுக்க தொடங்கினாள் .




” வருகைக்கு நன்றி .மீண்டும் வாருங்கள் ” கை கூப்பியும் , கை குலுக்கியும் தனது பணியை செய்து கொண்டிருந்தவளின் முதுகில் அந்தக் குரல் கேட்டது .பொங்கிய ரௌத்ரத்தை பற்கள் கடித்து அடக்கி சன்னமாக வழிய விட்ட சுடு குரல் . விஸ்வேஸ்வரனின் குரல் .

” இங்கே உன் வேலை முடிந்த்து .கீழே போ “

கமலினி மீண்டும் கடுமையாக மனம் பாதிக்கப்பட்டாள் .இவன் ஏன் என்னை இப்படி நடத்துகிறான் …? கீழிறங்கி வந்த ஆறு மாடி படிகள் வழியும் கமலினிக்கு இதே சிந்தனைதான் .முதல் தளத்திற்கு லேசான மூச்சு வாங்கலுடன் அவள் வந்து நின்ற போது ஒரு முடிவிற்கும் வந்திருந்தாள் …இந்த வேலையை விட்டு விடுவதாக …

” ஏன் கமலினி …திரும்பவும் இப்படி சொல்கிறாய் …? ” பாரிஜாதம் சிறு கவலையுடன் கேட்க கமலினி மௌனமாக இருந்தாள் .உண்மையான கவலையே நிரம்பியிருந்த பாரிஜாத்த்தின் முகத்தை அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை .

” எ…என் மேல் எதுவும் வருத்தமா கமலினி …? “

” சே ….சே .இல்லை மேடம் . இந்த முடிவுக்கு நீங்கள் காரணமில்லை …அது வந்து ….” கமலினி தடுமாறி நிற்க …

” என்ன கமலினி மேடம் திரும்பவும் வேலையை ரிசைன் பண்ணுகிறார்களா …? ” கேட்டபடி அறையினுள் வந்தான் விஸ்வேஸ்வரன் .

கமலினி முகத்தை திருப்பிக் கொள்ள பாரிஜாதம் அவனை கண்டிப்பாக பார்த்தாள் . ” திரும்பவும் இரண்டு பேரும் சண்டை போட்டீர்களா விஸ்வா …? “

” இன்று கமலினியால் நம் கடையில் கோடிக்கணக்கில் வியாபாரம் …” விஸ்வேஸ்வரனின் பார்வை கமலினியின் திரும்பிய முகத்தில் இருந்த்து .

” அட …அப்படியா …டயமென்ட்ஸா விஸ்வா …? அந்த மினிஸ்டர் மகன் வீட்டினருக்கா …? பிறகு ஏன் விஸ்வா அவளை திட்டினீர்கள் …? “

விஸ்வேஸ்வரன் பதில் சொல்லாமல் உள்ளே வந்து பாரிஜாதம் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான் .” நீயும் உட்கார் கமலினி .உன்னிடம் பேச வேண்டும் “

கமலினி அமர்ந்தாள் .விஸ்வேஸ்வரனுக்காக இல்லை .பாரிஜாத்த்திற்காக . பார்வையை பாரிஜாத்த்தின் மீதே பதித்தபடி இருந்தாள் .

” எவ்வளவு விபரங்கள் …? எத்தனை நுணுக்கங்கள் …? என்ன அழகான விளக்கங்கள் …? இவையெல்லாம் உனக்கு எப்படி தெரிந்தன கமலினி …? “

தன் பேச்சு முழுவதையும் அவன் கேட்டிருக்கிறான் என உணர்ந்த கமலினி கேள்வியாய் அவனை பார்க்க …

” கேமெரா …அத்தோடு வைரங்கள் தளத்தில் மட்டும் சிறு மைக்குகளும் உண்டு .அதிக பாதுகாப்பிற்காக செய்த ஏற்பாடு அது .சுதாகர் குடும்பத்துடன் அங்கே வரவும் , நானே அவர்களை எதிர்கொள்ள எழுந்த போது, நீ பேச ஆரம்பித்தாய் . நான் அப்படியே அசந்து உட்கார்ந்து விட்டேன் .அந்த இடத்தில் அப்போது எனது தேவை எதுவும் வேண்டியிருக்கவில்லை .நீ கிட்டதட்ட வியாபாரத்தை முடித்த பிறகு வந்தேன் …”




” ம் . உங்களுக்கு வியாபாரம் முடிந்ததும் வெளியே போ என என்னை விரட்ட சரியாக வந்துவிட்டீர்கள் …”

விஸ்வேஸ்வரன் முகம் மாறாமல் சிறு புன்னகையுடனேயே  அவளை பார்க்க , கமலினி அவனை கோபமாக பார்க்க , பாரிஜாதம் கன்னத்தில் கை தாங்கி இருவரையும் சுவாரஸ்யமாக பார்த்தாள் .

What’s your Reaction?
+1
21
+1
24
+1
3
+1
6
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!