Entertainment lifestyles News

என்.ஆர் குரூப்பின் சைக்கிள் பியூர் அகர்பத்தியின் வெற்றி பயணம்

சிறந்த தரத்தில் இருந்தால் ஒரு சிறிய பொருளுக்கு மிகப் பெரிய அளவிலான வாடிக்கையாளர் கூட்டத்தை உருவாக்க முடியும் என்பதற்கு ‘என்.ஆர்’ குரூப் நிறுவனம் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. சைக்கிள் பியூர் அகர்பத்தியில் தொடங்கிய அவர்களின் பயணம், அடுத்தடுத்த தலைமுறையில் வாசனைத் திரவியங்கள், ஆன்மிகப் பயன் பாட்டுக்குத் தேவையான பொருள்கள், விமானத் தளவாடப் பொருள்கள் எனப் பல்வேறு துறைகளில் தடம்பதித்துள்ளது.

1948-ம் ஆண்டு ரங்காராவ் என்ற தனிநபர் விதைத்த முயற்சியே இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு ஆரம்பம். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு என்ற கிராமத்தில் பிறந்த ரங்காராவ், சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். தன்னுடைய படிப்பு செலவுக்காக, மொத்த மார்க்கெட்டில் இனிப்புகள் வாங்கி, சிறிய கடைகளில் விற்பனை செய்வது, புதிர்கள் நிரப்புவது எனத் தனக்கு தெரிந்த வழியில் எல்லாம் பணம் சம்பாதித்து படிப்பையும் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டார்.




படிப்பு முடித்து தன்னுடைய பணிக்காக கர்நாடகா சென்றவருக்கு, குடும்பம், குழந்தைகள் எனப் பொறுப்புகள் அதிகமாக, சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என நினைத்தார். அந்த நேரத்தில் இந்தியா சுதந்திரம் அடைய, ரங்காராவுக்கு அரசு வேலை கிடைத்தது. அரசு வேலையா, சொந்தத் தொழிலா என்று குழம்பி நின்றவருக்கு, அவரின் மனைவி சீதா தன்னுடைய நகைகளை விற்று பிசினஸ் தொடங்குவதற்கான முதலீட்டைக் கொடுத்துள்ளார். அந்த உறுதியான முடிவுதான் ‘என்.ஆர்’ குழுமம் என்ற வெற்றி தலைமுறை உருவாகக் காரணமாக அமைந்திருக்கிறது.

ரங்காராவ் குடும்பத்தினர் அதிக தெய்வபக்தி கொண்டவர்கள். அதனால் இறைவழிபாடு தொடர்பான பிசினஸ் குறித்து யோசித்த வருக்கு சட்டென்று உதயமானது அகர்பத்தி தயாரிப்பு. அகர்பத்தி தயாரிப்பு முறையைக் கற்றுக்கொண்டு வீட்டிலேயே அகர்பத்திகள் தயாரிக்கத் தொடங்கினார். எல்லாத் தரப்பு மக்களுக்கும் பார்த்ததும் பிராண்டின் பெயர் நினைவுக்கு வர வேண்டும் என்பதற்காக எல்லாரும் நன்கறிந்த பொருளான சைக்கிள் என்பதை பிராண்டின் முத்திரையாகவும் பெயராகவும் தீர்மானித்தார்.

சில நூறு ரூபாய் முதலீட்டில் ஒரு சில பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், இன்று 30,000 பணியாளர்களுடன் வருடத்துக்கு 15 பில்லியன் அகர்பத்திகள் தயாரிக்கும் நிறுவனமாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வெற்றிப் பயணத்தை நம்முடன் பகிர்ந்துகொண்ட என்.ஆர் குழுமத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த இயக்குநர் அர்ஜுன் ரங்கா.

“எங்களுடைய தாத்தாதான் எங்கள் வழிகாட்டி. சிறிய வயதில் நிறைய போராட்டங்களைக் கடந்து வந்தவர். அவர் இந்தத் தொழிலைத் தொடங்கிய போது அடைந்த சிரமங்களை நாங்கள் உணர வேண்டும்; அப்போதுதான் அதன் முக்கியத்துவம் எங்களுக்குப் புரியும் என்று நினைத்து, அவர் கடந்து வந்த சூழலைப் புத்தகமாக எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். பிசினஸில் நம்முடைய சின்ன நகர்வுகள்கூட மிகப் பெரிய ஆரம்பமாக இருக்கும் என்பது தாத்தாவிடம் இருந்து நாங்கள் கற்றுக் கொண்ட பாடம்.

ஆரம்பத்தில் வீட்டில்தான் பத்திகளைத் தயாரித்தார் எங்கள் தாத்தா. இந்தத் தொழிலில் சிறந்த நிறுவனமாக உயர வேண்டுமானால், புதுமையான வாசனை வகைகளை சொந்தமாக உருவாக்க வேண்டும் என்பது அடுத்த சில வருடங்களில் தாத்தாவுக்கு புரிந்துபோனது. அதன்பின் அதற்கான முயற்சி களில் அவரே ஈடுபடத் தொடங்கினார். அவரே உருவாக்கிய முதல் வாசனை அகர்பத்திதான் எங்கள் முதல் பிராண்டான ‘சுகந்த மல்லிகா.’

நிறைய வாசனை வகைகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற தாத்தாவின் அந்தக் கொள்கையை நாங்கள் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வருகிறோம். நம்முடைய பொருள் வாடிக்கை யாளர்களுக்கானதாகவும், அவர்களைத் திருப்தி அடையச் செய்யும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதிலும் தாத்தா எப்போதும் கவனம் செலுத்தி யுள்ளார்.

ஆரம்பத்தில் பத்திகள் எவர்சில்வர் டப்பாக்களில் அடைக்கப்பட்டு வந்தது. அகர் பத்தியைவிட அதன் பேக்கிங் அதிக செலவானது. வாடிக்கை யாளர்கள் அகர்பத்தியைத்தான் வாங்க விரும்புகிறார்கள். அதன் வெளித் தோற்றத்தில் கவனம் செலுத்துவது இல்லை என்பதை உணர்ந்து சில்வர் பெட்டிகளை அட்டைப் பெட்டிகளாக மாற்றி, அகர்பத்தியின் தரத்தில் கவனம் செலுத்தினார். அதன்பின்தான் மற்ற நிறுவனங்களும் அட்டை பெட்டிகளில் பத்திகளை விற்பனை செய்ய ஆரம்பித்தன.

தாத்தா காலத்திலேயே எங்கள் தயாரிப்புகள் இலங்கைக்கு ஏற்றுமதி ஆனது. அடுத்தடுத்த தலைமுறையினர் கைகோத்ததால், நிறுவனத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு நகர்த்தி இருக்கிறோம். தாத்தா வுக்குப் பின் பெரியப்பா, அப்பா, சித்தப்பா ஆகியோர் நிறுவனத்துக்குள் வந்தனர்.

எங்கள் பெரியப்பாதான் எங் களுக்கெல்லாம் குரு. நிர்வாகத்தில் முழுவதுமாகக் கவனம் செலுத்தினார். அப்பா, மூர்த்தி தயாரிப்பு முறையிலும், விளம்பரத்திலும் வித்தியாசம் காட்டினார். வாசு சித்தப்பா புதுப்புது வாசனைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார். மூன்று பேரும் சேர்ந்து பிசினஸில் செய்த மேஜிக்தான் இன்று இந்த பிராண்ட் உலகம் முழுக்க சென்றிருக்கிறது.

தொழிலில் விற்பனை அளவைக் கணிக்கும் முறையை டிஜிட்டலாக மாற்றினார்கள். டீலர்கள் முறையை விடுத்து, எங்கள் நிறுவனத்துக்கு என்று விற்பனைக் குழுவை உருவாக்கினார்கள். அவர்களுடைய இந்த முயற்சிகளால் நிறுவனம் தொடங்கிய 20 வருடத்தில் அகர்பத்தி தயாரிப்பில் இந்தியாவில் முதல் நிறுவனமாக எங்கள் நிறுவனம் உயர்ந்தது” என்ற அர்ஜுன் ரங்கா, இரண்டாம் தலை முறையினர் இடமிருந்து கற்றுக் கொண்டவற்றையும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினார்.




மூன்று தலைமுறைகளாக ‘மணம்’ வீசும் என்.ஆர் குரூப்பின் சைக்கிள் பியூர் அகர்பத்தி! - 3

“வாடிக்கையாளர்களுடன் எப் போதும் இணைப்பில் இருப்பதை எங்கள் இரண்டாம் தலைமுறை யினர் எங்களுக்கு போதித்தனர். வாடிக்கையாளர்களின் மன நிலையை உணர அப்பா அடிக்கடி மார்க்கெட்டுகளுக்குச் செல்வார். அப்படி ஒருமுறை சென்றபோது, வாடிக்கையாளர் ஒருவர், ‘ஒரு வாசனையுள்ள அகர்பத்தி பயன் படுத்துவதைவிட, வெவ்வேறு வாசனையுள்ள அகர்பத்திகள் ஒரே பாக்கெட்டில் இருந்தால் நல்லா இருக்கும்’ என்று வேடிக்கை யாகச் சொல்ல, அதை ஐடியாவாக எடுத்துக்கொண்டு ‘சைக்கிள் த்ரீ இன் ஒன்’ அகர்பத்திகளை உருவாக்கினார். வாடிக்கையாளர் களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதை எங்களுடைய தலைமுறையிலும் ஃபாலோ செய்கிறோம். வாடிக்கையாளர் தரப்பிலிருந்து ஒரு குறை வந்தாலும், அதைத் தீர்ப்பதை உயர்பொறுப்பில் இருக்கும் நாங்களே கையாள்கிறோம்.

நாங்கள் மூன்றாம் தலைமுறை. குடும்பத் தொழிலாக இருந்தாலும், பிசினஸ் அனுபவம் முக்கியம் என்பதற்காக நாங்கள் எல்லோருமே வெவ்வேறு நிறுவனத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பின்புதான் பிசினஸுக்குள் வந்தோம். மூன்றாம் தலைமுறையிலிருந்து நான்தான் முதலில் பிசினஸ் என்ட்ரி கொடுத்தேன். நான் வந்ததும் எல்லாவற்றையும் டிஜிட்டலாக மாற்றினேன். மேலும், ஐ.எஸ்.ஓ தொடங்கி, பொருள் தொடர்பான தரச்சான்றுகள், விற்பனை மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பது போன்ற வற்றில் கவனம் செலுத்தினேன்.





மேலும், இப்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக் கேற்ப சைக்கிள் இணையதள பக்கத்தை அறிமுகம் செய்தோம். விளம்பரங்களிலும் அதிக கவனம் செலுத் தினேன். இந்தியா – மேற்கு வங்கம் ட்ரை சீரிஸ் கிரிக்கெட் மேட்சுக்கு ஸ்பான்ஸர் செய்து, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்தோம்.

இப்போது இந்தியா முழுக்க 4,500 விநியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். 8 லட்சம் கடைகளில் எங்களுடைய பொருள் விற்பனை செய்யப்படுகிறது. வருடத்துக்கு 15 பில்லியன் பத்திகள் தயார் செய்கிறோம். என் தம்பிகளான பவன், கிரண், அனிருத், விஷ்ணு, நிகில் ஆகியோர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொழில் சார்ந்து இயங்க ஆரம்பித்தார்கள். சைக்கிள் பிராண்டின் துணை பொருள்களான ஹோம் ஃப்ரெஷ்னஸ், கார் ஃப்ரெஷ்னஸ், ரூம் ஃப்ரெஷ்னஸ் தயாரிக்கும் நிறுவனமான ஐரிஷ் மற்றும் லியா பிராண்டை கிரண் நிர்வாகம் செய்கிறார். எசன்ஸியல் எண்ணெய்கள் தயார் செய்து மற்ற நாடுகளுக்கு அனிருத் ஏற்றுமதி செய்கிறார். ராணுவம், விமானங்கள், செயற்கை கோள்களுக்குத் தேவையான தளவாடப் பொருள்கள் செய்யும் தொழிலை பவன் நிர்வாகம் செய்கிறார். சூரிய ஒளியில் இயங்கும் பொருள்கள் தயார் செய்யும் பிசினஸை விஷ்ணு செய்துவருகிறார். மற்றுமொரு சகோதரரான நிகில் மொழி கற்றுக்கொள்ளல் தொடர்பான ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றை நிர்வாகம் செய்கிறார்.

அனைத்து பிசினஸிலும் நாங்கள் அனைவரும் நிர்வாக உறுப்பினர்களாக இருந்து ஒருவருக்கொருவர் வழிகாட்டி யாக இருக்கிறோம். சிறிய தொழில் பெரிய நிறுவனமாக வளர ஒற்றுமையுடன் புதுமையும் அவசியம். அது எங்களின் எல்லாத் தலைமுறையிலும் இருக்கும். அடுத்த தலைமுறைக்கும் நாங்கள் அதைப் பகிர்ந்திருக்கிறோம்” என்றார் அர்ஜுன் ரங்கா.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!