karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 32

   32

சந்தித்த பொழுதுகளையெல்லாம் 
சந்தங்களால் நிரப்பி வைத்திருக்கிறாய் ,
துணையெழுத்தொன்றின் தீவிர தேடலில் நானிருக்கையில்
ஒற்றெழுத்தாய் மேனியெங்கும் பரவுகிறாய் ,
உயிரையும் , மெய்யையும் சேர்க்கும் கலையறிந்த வித்தகா ,
கற்றதை கற்பிக்க 
ஆசானாய் வா .

நீ இங்கிருப்பதை உன் அப்பாவிற்கு தெரியப்படுத்தி விடுவேனென சொன்ன மாதிரி வீரேந்தர் சண்முகபாண்டியனுக்கு சாத்விகா இங்கிருக்கும் விசயத்தை சொல்லியே இருந்தான் . அது விசயமாக அவள் அவனுடன் சண்டையிட்டபோது …

” முட்டாளதனம் பண்ணாதே சாத்விகா .நீ உன் போன் நம்பரை மாற்றியதாலோ … அவர்களுடன் தொடர்பில்லாமல் இருப்பதாலோ …அவர்களால் உன்னை கண்டுபிடிக்க முடியாதென்று நினைக்கிறாயா …? அவ்வப்போது கார்டை சொருகி பணத்தை உருவுகிறாயே .அந்த ஒரு விசயம் போதும் .உட்கார்ந்த இடத்திலிருந்தே உன் தந்தை உன்னை தூக்கி வரச் செய்துவிடுவார் .உனக்கு அடைக்கலம் கொடுத்நிருக்கிறேனென என்னையும் தூக்கி போய் லாக்கப்பில் உட்கார வைத்துவிடுவார்கள் .இது தேவையா எனக்கு …? ” என்றான் .

” ஒரு முன்னாள் ராணுவ மேஜ்ரை அப்படி கேள்வியின்றி உள்ளே தூக்கி வைக்க முடியுமாக்கும் …? ” அவனை முறைத்தாள் .

” அந்த அளவு உன் மூளை வேலை செய்வதில் சந்தோசம் .உனக்கு பிடிக்கவில்லையென்றால் நீ ஒதுங்கிக் கொள் .எனக்கு அவரை ரொம்ப பிடிக்கிறது .நான் அவருடன் தொடர்பில் இருக்கத்தான் போகிறேன் ….” என முடித்து விட்டான் .

அவன் சண்முகபாண்டியனுடனோ , கார்த்திக்குடனோ அடிக்கடி பேசும் விசயத்தை அறிவாள் .சில முறை மெல்ல  அவளையும் பேச அழைத்திருக்கிறான் .ஆனால் சாத்விகா தீவிரமாக மறுக்கவும் விட்டு விட்டான் .

இன்று திருமண விபரம் சொல்லாதே என்ற பின்னும் சொல்லி அவர்களை வரவழைத்திருக்கிறான் .இவனை …சௌந்தர்யாவை பார்த்த முதல் நொடி சாத்விகாவிற்கு வீரேந்தரின் கழுத்தை நெரிக்கும் ஆவல் வந்த்து .நான் என்ன சொன்னால் , இவன் என்ன செய்து வைத்திருக்கிறான் …? ஏன் எப்போதுமே நான் சொல்வதற்கு எதிராகவே செயல்படுகிறான் …? சாத்விகாவின் யோசனையை …

” எங்களை மறந்துவிட்டாயா பாப்பா …? ” என்ற சௌந்தர்யாவின் குரல் நிறுத்தியது .தழுதழுப்பாய் வந்த அன்னையின் ஏக்க குரல் சாத்விகாவினுள் ஒளிந்திருந்த பாசத்தை தூண்டி விட அவள் ” அம்மா …” என நெகிழ்ந்தாள் .

” எப்படி இருக்கிறாய் பேபி …? ” என சௌந்தர்யாவின் பின்னால் வந்து நின்ற சண்முகபாண்டியனை கண்டதும் அனைத்து உறுத்தல்களையும் மறந்து ” அப்பா …” என்ற கதறலுடன் அவர் கழுத்தை கட்டிக்கொண்டாள் .அவளை சௌந்தர்யா பின்னிருந்து கட்டிக்கொள்ள …” என்னை மறந்துவிடாதே பாப்பா …” என்ற கோரிக்கையுடன் வந்த  கார்த்திக்கும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான் .

” எங்கள் அந்தரங்கத்தில் தலையிட நீ யாரென என்னை விரட்ட மாட்டீர்களே …? ” வீரேந்தர் வாசல் நிலையில் கைகளை கட்டியபடி சாய்ந்து நின்று கேட்டபோது , சாத்விகா அம்மா மடியில் தலை வைத்து ,அப்பா மடியில் கால் நீட்டி படுத்திருந்தாள் .பக்கத்தில் அமர்ந்து அவள் கைகளை பற்றியபடி பேசிக்கொண்டிருந்தான் கார்த்திக் .




கார்த்திக் எழுந்து வீரேந்தரை அணைத்து வரவேற்றான் .” உன்னை எழுந்து வரவேற்க வேண்டுமென்றால் நான் என் பெண்ணை விட்டு எழ வேண்டும் வீரேந்தர் .அது எனக்கு பிடிக்காத்தால் …நீ வா …இப்படி உட்கார் …” தன் மடியிலிருந்த மகளின் கால்களை பாசத்துடன் வருடியபடி வீரேந்தரை வாயால் வரவேற்றார் சண்முகபாண்டியன் .

விடவே மனதின்றி மகளின் பாதங்களை ஒரு பூவை வருடும் மென்மையுடன் வருடியபடியிருந்த சண்முகபாண்டியனை ஆச்சரியமாக பார்த்தான் வீரேந்தர் .இவர் எப்படிப்பட்ட ஒரு கம்பீரமான மனிதர் …? இவரது பெயரை கேட்டாலே எத்தனையோ பயங்கரவாதிகளின் விரல்கள் நடுங்குவதை வீரேந்தர் தன் கண்களாலேயே கண்டிருக்கிறான் .அப்படி சிங்கமாய் சீறுபவர் இன்று முயல்குட்டி போல் மகளின் கால்களை வருடிக்கொண்டிருக்கிறார் .

இந்த பாசத்தை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையா …? வீரேந்தரின் குற்றம் சாட்டும் பார்வையை சாத்விகா சந்திக்கவில்லை.அவள் தாயின் கரத்தை இழுத்து தன் கழுத்தினுள் பொதித்தபடி கண்களை மூடியிருந்தாள் .

” நீங்கள் உங்கள் மகளை சரியான கண்டிப்பு காட்டி வளர்க்கவில்லை சார் .அதனால்தான் நம் அனைவருக்கும் இன்று இப்படி ஒரு தலைவேதனை …” இந்த வார்த்தைக்கு  சாத்விகாவின் கால்புறமிருந்த சேரில் அமர்ந்திருந்த வீரேந்தரை தன் கால்களை எட்டி உதைத்தாள் சாத்விகா .

” ஷ் …ஏய் கழுதை …ஏன்டி என்னை உதைக்கிறாய் …? ” அவள் கால்களில் கிள்ளினான் .

” நாங்க எங்கள் பேமிலி விசயம் பேசிக்கொண்டிருக்கிறோம் .நீங்கள் வெளியே போங்கள் …” அதிகாரமாக குரல் உயர்த்தினாள் .

” நேற்று வரை ஒரு கழுதை , இங்கே என் அம்மா , அப்பாவை வரவைக்க கூடாது என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்த்து .அதை எங்கே காணோம் …? ” வீரேந்தர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனை மீண்டும் உதைக்க தூக்கிய சாத்விகாவின் காலை சண்முகபாண்டியன் பற்றிக்கொண்டார் .

” சும்மாயிரு பேபி .என்ன இது மரியாதையில்லாமல் …? “

” ஆமாம் இவனுக்கெல்லாம் என்ன மரியாதை …? ” முணுமுணுத்தவளை சௌந்தர்யா ” பாப்பா பேசாமலிரு …” என அதட்டினாள் .

அம்மாவிற்கு தெரியாமல் வக்கலம் காட்டிய சாத்விகாவிற்கு பதில் வக்கலம் காட்டிய வீரேந்தரை கார்த்திக் ஆச்சரியமாக பார்த்தான் .

”  வீரேந்தர் நீங்கள் ஒரு கேப்டன் …” என நினைவுறுத்தினான் .

” ஒரு பெரிய அதிகாரியென்று  அங்கே சொல்லுங்கள் கார்த்திக் …” என சண்முகபாண்டியன் பக்கம் வீரேந்தர் கை காட்ட அனைவரும் சிரித்தனர் .

” நீங்கள் மட்டும் என்ன …நேற்றுத்தான் குன்னூரில்  பெரிய ரவுடி கும்பலையே என்கவுண்டர் பண்ணினீர்கள் .இன்று தங்கை கைகளுக்கு சொடுக்கெடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் …” வீரெந்தர் பதில் கேலியை கார்த்திக் பக்கம் திருப்பினான் .

” அப்படியா அண்ணா .ரவுடியை சுட்டீர்களா …? சாத்விகா எழுந்து அமர்ந்து ஆவலாக கேட்டாள் .

” ஆமாம், அவனெல்லாம் ஒரு பெரிய ரவுடியா பாப்பா …? ” என்றான் கார்த்திக் .

” அதுதானே நாற்பதே கொலைகள்தான் செய்திருந்தான் .அவனை போய் ரவுடி என்று சொல்லிக்கொண்டு ….” வீரேந்தர் கிண்டல் பண்ண …

” நாறபது கொலையா …? என்ன அண்ணா அவன் பெரிய ரவுடி இல்லையா …? அவனுடனா மோதினீர்கள் …? ” கவலையோடு அண்ணனின் கைகளை , முகத்தை என ஆராய்ந்தாள் .

” எனக்கு ஒன்றும் இல்லை பாப்பா . ஆனால் வீரேந்தர் நீங்கள் என் தங்கையை என்ன செய்தீர்கள் …? ” கார்த்திக் கவலையாய் கேட்டான் .

” நானா …என்ன செய்தேன் …? ” வீரேந்தர் புரியாமல் பார்க்க …

” நல்லா லட்டு மாதிரி வளர்த்து வைத்திருந்தோம் .இப்போது பூந்தி மாதிரி உதிர்ந்து கிடக்கிறாளே …பாருங்களேன் எனக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுத்து பேசுகிறாளா ….? ” தன் கேலியின் முடிவில் பத்திரமாக கார்த்திக் தள்ளி நின்று கொள்ள , ஆனால் அதை முதலிலேயே ஊகித்து எட்டி அவன் சட்டையை பிடித்து இழுத்தாள் சாத்விகா .

” டேய் அண்ணா …பேனாப் போகுதுன்னு உனக்கு ” ங்க ” எல்லாம் போட்டு மரியாதை பண்ணினால் நீ என்னையே வாறுகிறாயா …? ” சோபா குஷனை தூக்கிக்கொண்டு அவனை விரட்டினாள் சாத்விகா .

” ஐய்யோ …நமக்குள் மரியாதை எதற்கு பாப்பா …வேண்டாமே .நீ “ங்க ” போட போட எனக்கு ஏதோ அந்நிய தேசத்தில் அடிமையாக வாழும் பீலிங் வருகிறது …” தங்கையிடம் அடி வாங்காமல் லாவகமாய் தப்பியபடி அறை முழுவதும் ஓடினான் கார்த்திக் .

சுற்றி சுற்றி ஓடிக்கொண்டிருந்த தன் பிள்ளை செல்வங்களை கண்கள் பொங்க பார்த்திருந்த தாய் ,தந்தையரை கனிவாக பார்த்திருந்தான் வீரேந்தர் .

” நன்றி வீரேந்தர் .என் பேபியை இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் வைத்திருப்பதற்கு …” என்றார்  சண்முகபாண்டியன் .

” நானல்லவா உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் சார் …”

” எதற்கு அப்பாவிற்கு  நன்றி …? ” அண்ணனை துரத்தி அடித்து முடித்துவிட்டு மூச்சு வாங்க அவர்களருகில் வந்தமர்ந்த சாத்விகா கேட்டாள் .

” நன்றியா ….இப்படி ஒரு தொல்லையை என் தலையில் கட்டிவிட்டீர்களே …என்று நான் உன் அப்பாவிடம் அழுது கொண்டல்லவா இருந்தேன் …”

” நான் தொல்லையா ….? ” கார்த்திக்கை அடித்த குஷன் தள்ளி கீழே கிடக்க , இவனை எதை வைத்து அடிக்கலாமென்று சாத்விகா தேடிக்கொண்டிருந்த போது ,

” அப்பா …நாம் திருமண ஏற்பாடுகளை பார்ப்போம் ்வாருங்கள் ….” என அவர்களை அழைத்துக் கொண்டு கார்த்திக் வெளியேறினான் .

” டி.ஐ.ஜி சார் இப்படி அநியாயமாக என்னை ஒரு தீவிரவாதியிடம் விட்டு விட்டு போகிறீர்களே ….” வீரேந்தர் அபய குரல் கொடுக்க …தள்ளியிருந்த குஷனை எடுத்த சாத்விகா வந்து அடிக்கும் அவகாசமின்றி அதனை அங்கிருந்தே வீரேந்தர் மேல் எறிந்தாள் .

” உங்க தலையெழுத்தை நீங்களே எழுதிக்கிறீங்க மேஜர் .நாங்கள் என்ன செய்ய முடியும் …? ” என்ற கார்த்திக் அவசரமாக அறைக்கதவை மூடிக்கொண்டு வெளியே போய் தப்பித்தான் .

” உங்களுக்கு நான் தொல்லையா …? ” கோபத்தோடு தன் சட்டையை பிடித்த சாத்விகாவை இறுக்கி அணைத்தான் வீரேந்தர் .

” ஆமாம் பேபி …நிறைய தொல்லை செய்கிறாய் .எந்த வேலையையும் ஆழ்ந்து பார்க்க முடிவதில்லை .எத்தனையோ முக்கியமான மீட்டிங்குகளிலெல்லாம் சுற்றியிருப்பவர்களெல்லோரும் மறைந்து நீ மட்டுமே இருக்கிறாய் .உனது பேச்சு மட்டுமே என் காதில் கேட்கிறது .அந்த நேரங்களில் யாராவது ஏதாவது கேட்டால் ஒன்றும் புரியாது விழித்துக்கொண்டிருக்கிறேன் .சம்பந்தமில்லாமல் ஏதோ பேசுகிறேன் .என்னை எல்லோரும் லூசு என்பது போல் பார்க்கின்றனர் .இதற்கு நான் என்ன செய்யட்டும் பேபி …? “

வீரேந்தரின் கேள்வியில் முகம் சிவந்த சாத்விகா ” போதும் .லூசு மாதிரி உளறிக்கொண்டு ….” முணுமுணுத்தாள் .

” அதைத்தான் நானும் சொல்கிறேன் பேபி .கொஞ்சம் கொஞ்சமாய் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன் .உன் கை நூலிலாடும் பொம்மை போலாகி விட்டேன் …..”

” என் சொற்படி ஆடும் பொம்மையா …? நான் சொல்ல சொல்ல கேளாமல் என் அப்பா , அம்மாவை வரவைத்திருக்கிறீர்கள் .” குற்றம் சாட்டினாள் .

” அவர்கள் அன்பை நீ உணரவில்லையா சாத்விகா …? இவர்களை விட்டு பிரிய உன்னால் எப்படி முடிந்த்து …? “




” அவர்கள் அன்பு எனக்கு தெரியும் வீரா .அது என்னை மிகவும்  பலவீனமாக்கும் என்பதனை நான் அறிவேன் .அதனால்தான் அவர்களை விட்டு விலகி வந்து என் அம்மாவை தேட நினைத்தேன் …”

” சௌந்தர்யாம்மா எந்த வகையில் உனக்கு குறை வைத்தார்கள் சாத்விகா ….? அவர்களை விட உயர்ந்தவர்களென நீ அம்மாவென உணராத ஒரு புதிய பெண்மணியை நீ தேடி அலைவதற்கு …”

” என்னை பெற்றவளை கண்டுபிடித்து அவள் மடியில் விழுந்து என்னை ஏற்றுக்கொள் என்று அழப்போகிறேனென நினைக்கிறீர்களா ..? எனக்கு அவளை ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் .பெற்ற குழந்தையை அவள் தத்து கொடுத்த காரணத்தை அவள் வாயால் கேட்க வேண்டும் .தன் குற்றத்திற்காக அவள் என் முன் கூனி குறுகி நிற்கவேண்டும் .அதை நான் கண் குளிர பார்க்க வேண்டும்  .உன்னை விட ஆயிரம் மடங்கு என் மேல் பாசத்தை காட்டக்கூடிய அப்பா , அம்மா எனக்கு இருக்கிறார்கள் .உனக்கு அன்று நான் தேவையில்லாமல் போனேனே ….இன்று எனக்கு நீ தேவையில்லை …என்று அவள் முகத்தற்கு நேராக கூறிவிட்டு வந்துவிடுவேன் .பிறகு அவள் முகத்திலேயே விழிக்க மாட்டேன் ….”

ஆத்திரமாய் பேசிய சாத்விகாவை வெறித்தான் வீரேந்தர் .” உனக்கு பிள்ளைக் குணமென நினைத்நிருந்தேன் சாத்விகா .நீ இவ்வளவு வன்மத்தை உள்ளுக்குள் வைத்திருக்கிறாயே….? உன் பெயருக்கு ஏற்றாற் போல் நீ ஏன் அமைதியான பெண்ணாக இல்லை சாத்விகா .ஒரு சராசரி பொண்ணாக , பாசத்தை கொட்டும் பெற்றோருக்கு மகளாக , அன்பான அண்ணனுக்கு தங்கையாக , ஆசையான கணவனுக்கு மனைவியாக ….நீ ஏன் இருக்கவில்லை சாத்விகா…? ” அவள் தோள்களை பற்றி உலுக்கினான் .

” நான் இப்படித்தான் .அதனால் என்னை வெறுத்து விடுவீர்களா …? “

” அப்படித்தானென்றால் என்ன செய்வாய் …உனது இந்த தேடல் எனக்கு பிடிக்கவில்லையென்றால் ….? “

” என் அப்பா , அம்மாவிற்கும் இது பிடிக்கத்தான் இல்லை .ஆனால் இதனை நான் விடவில்லை வீரா .அவர்களை விட்டு விலகி வந்தேனும் …..” மேலே சொல்ல முடியாமல் தொண்டை அடைக்க சன்னல் அருகே போய் வெளியே பார்க்க தொடங்கினாள் .

சிறிது நேரம் அவள் முதுகை வெறித்தவன் பின் பின்னிருந்து அவளை அணுகி அணைத்துக்கொண்டான் .” உன் அம்மா , அப்பாவை போல் நான் அவ்வளவு எளிதாக என்னை விட்டு போக உன்னை அனுமதிக்க மாட்டேன் பேபி .உன்னை எப்போதும் என் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளும் வித்தை எனக்கு தெரியும் .சாம்பிளுக்கு ஒன்று பார்க்கிறாயா ….? காது மடல்களை கவ்விய இதழ்கள் அவள் இதழ்களின் மேல் நிலை கொண்ட போது , சாத்விகா உண்மையிலேயே தன் கட்டுப்பாட்டை இழந்திருந்தாள் .

_——————————

” இவர் தன்வீர் . அவர் மனைவி காமினி …” அறிமுகம் செய்தபடி வீரேந்தர் கழுத்து மாலையை சரி செய்வது போல் கவனமின்றி நின்றிருந்த சாத்விகாவின் தோள்களை லேசாக இடித்து கவனப்படுத்தினான் .கொஞ்சம் தள்ளி தனது பார்வையை பதித்திருந்த சாத்விகா மீண்டு …

” ஹலோ ….” என  அவர்களுக்கு கை குலுக்கினாள் .

அன்று காலை கோவிலில் வீரேந்தர் – சாத்விகா திருமணம் முடிந்திருந்த்து .இப்போது ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன் .

” ஆஹா உங்கள் மனைவி அப்படியே பொம்மை மாதிரி இருக்கிறார்கள் கேப்டன் .இவ்வளவு நாட்களாக நீங்கள் திருமணத்தை தள்ளிக் கொண்டே போன காரணம் எனக்கு இப்போதுதான் புரிகிறது .இது போல் ஒரு பெண்ணிற்காக நீங்கள் இன்னமும் இரண்டு வருடங்கள் கூட காத்திருக்கலாமே ….” அந்த காமினி சுத்த தமிழில் பேசினாள் .

” நீங்கள் தமிழா மேடம் …?.” சாத்விகா ஆவலாக கேட்டாள் .ஏனெனில் காமினியிடம் தமிழச்சி என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை .ஸ்லீவ்லெஸ் ப்ளவுசும் ,டிசைனர் சேலையும் , பாப் தலையும் , அழுத்தமான லிப்ஸ்டிக்குமாக அவள் ஒரு மேல்தட்டு வட இந்திய பெண்ணை நினைவுபடுத்தனாள் .

” யெஸ் ஸ்வீட் கேர்ள் .நான் தமிழ்தான் . ராணுவ்வீர்ரை திருமணம் முடித்து இங்கே செட்டிலாகவும் …இந்த ஊர் பழக்கவழக்கங்களுக்கேற்ப என்னை மாற்றிக்கொண்டேன் . நீயும் தமிழ் பெண்ணென்பதால் ….சாரி …டக்கென ஒருமையில் அழைத்துவிட்டேன் .நீங்களும் …”

” அட பரவாயில்லை மேடம் .நீ என்றே அழையுங்கள் .உங்களுக்கு என் அம்மா வயதிருக்குமே …” சாத்விகா சொல்ல …

” அடக்கடவுளே ..அப்போது மாதா மாதம் தன்வீருடன் சண்டை போட்டு வாங்கி இருபதினாயிரம் வரை செலவழிக்கிறேனே …அது வீண்தானா …? ” காமினி வருந்த …

” என்ன செலவு மேடம் …? ” சாத்விகா புரியாமல் பார்த்தாள் .

” ப்யூட்டி பார்லருக்கு டியர் .என் வயதை மறைத்து இளமையாக காட்டிக்கொள்ள அவ்வளவு செலவழிக்கிறேன் .நீ ஒரே வார்த்தையில் அம்மா வயதென்றுவிட்டாயே .எனக்கு இவ்வளவு அழகான மகளென்றால் …சந்தோசமென்றாலும் , அக்கா என்று சொல்லலாமா ….கொஞ்சம் யோசித்து பாரேன் .” காமினி கெஞ்சலாக கேட்க சாத்விகா சிரித்துவிட்டாள் .




” சிரிக்காதே டியர் .நாம் இருவரும் சுடிதார் போட்டுக்கொண்டு இணையாக நின்றோமானால் ஒன்று போல்தான் தெரிவோம் .ஒருநாள் அதனை டெஸ்ட் செய்து பார்த்து விடத்தான் போகிறேன் நான் …ஓ.கேவா தன்வீர் ” காமினி கணவனை கேட்க , இவர்கள் தமிழ் புரியாத தன்வீர் தலையசைத்து வைத்தான் .அவன் ஏதோ முக்கியமாக வீரேந்தரிடம் குறைந்த குரலில்  பேசிக் கொண்டிருந்தான் .

” மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிவிடுவீர்களா தன்வீர் .அவர்கள் பேசியது புரியாமலேயே தலையசைக்கிறீர்களே …? ” வீரேந்தர் இந்தியில்  கிண்டல் பண்ண ….

” எனக்கு நீங்கள் நம் டியூட்டியில் எத்தனையோ விபரங்கள் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள் கேப்டன் .ஆனால் மனைவியிடம் எப்படி சுமூகமாக போக வேண்டுமெனபதை நீங்கள்தான் என்னிடம் படிக்கஙேண்டும் .எப்படி சமாளித்தேன் பார்த்தீர்களா …? ” தன் தலையாட்டலை தன்வீர் தானே சிலாகித்து கொண்டான் .

” திருமணத்தற்கு பின் உங்கள் மனைவி உங்களுக்கு கொடுத்த டிரெயினிங்கை என் மனைவி எனக்கு திருமணத்திற்கு முன்பே கொடுத்துவிட்டாள் தன்வீர. இதிலும் நான்தான் சீனியராக்கும் .வேண்டுமானால் என்னிடம் குறிப்புகள் வாங்கி பயன் பெற்றுக்கொள்ளுங்கள் ….” வீரேந்தர் முடிக்க …சுற்றியிருந்தோர் சிரிக்க தொடங்கினர் .

” அப்படி என்னென்ன டிரெயனிங் உங்கள் மனைவி கொடுத்தார்கள் கேப்டன் …? ” என யாரோ கேடக…

” அந்தரங்கம் புனிதமானது …” என வீரேந்தர் சொல்ல…சாத்விகா முகம் சிவந்து தலை குனிய ,  ஒரு திருமண வீட்டிற்குரிய கலகலப்பும் , உற்சாகமும் அங்கே நிரம்பி வழிந்த்து .

What’s your Reaction?
+1
20
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!