ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 4

4

சற்றும் தயங்காமல் அந்த பள்ளத்திற்குள் பைக்கை விட்டான் அவன் .உடல் தூக்கிப் போட சீட்டிலிருந்து சுத்தமாக ஒரு அடிதூரம் எழுந்து பின்பு மீண்டும் சீட்டில் நச்சென்று அமர்ந்தாள் நிலானி. இடுப்பில் சுரீரென்று வலி தாக்கியது . எவ்வளவு கொடூரமான பயணம் ?!இதுபோல் ஒரு பயணத்தை அவள்  வாழ்நாளில் மேற்கொண்டதில்லை .வீட்டை விட்டு படி இறங்கியதுமே காரில் கால் வைத்துத்தான் அவளுக்கு பழக்கம். அவனோ ஒரு மெல்லிய பெண் பின்னால் உட்கார்ந்து இருக்கிறாள் என்ற எண்ணம் இன்றி இந்த முரட்டு சாலையில் பைக்கை விரட்டிக் கொண்டிருந்தான். 

 ” இதில் தான் நாம் போகப் போகிறோம் ” என்றபடி அவன் காட்டிய பைக்கை அச்சத்துடன் பார்த்தாள் அவள்.

 ” எ…எங்கே போகப் போகிறோம் ? ” 

” மேகமலை …ஹைவேவிஸ் .அதுதான் நம்முடைய இடம் ”  மீண்டும் கண் சிமிட்டல்

அவர்கள் வந்து இறங்கிய இடத்தை  ” மதுரை ”  என்று சொன்னான். அப்போதுதான் நிலானி  சுற்றிலும் பார்த் தாள். அது தமிழ்நாடு தான் என உணர்ந்தாள்.

 ஆக அவளுக்கு முன்பே திட்டமிட்டு தான் இங்கே டிக்கெட் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைனில் ராஜேஷ் புக் செய்த அந்த டிக்கெட்டை தான் வாங்கி கூட பார்க்காத மடத்தனம் அப்போது தான் அவளுக்கு உறைத்தது.

அதுமட்டுமின்றி இரவு முழுவதும் எங்கே போகிறோம் என்றே தெரியாமல் கூபேயின் கதவை பூட்டிக்கொண்டு ஜன்னல் ஸ்க்ரீனையும் இழுத்து விட்டுக் கொண்டு வெளியுலகம் கவனியாது தூங்கிய தனது முட்டாள் தனத்தை அவளுக்கு எப்படி நோவது என்றே தெரியவில்லை .எப்படி இப்படி அறிவில்லாமல் நடந்து கொண்டேன் நிலானிக்கு உண்மையில் அப்போது அவள் மீதே மிகுந்த வெறுப்பு ஏற்பட்டது.




” ம் ..ஏறு  …” என்று அவன் காட்டிய பைக்கை கிலியுடன் பார்த்தாள்.பைக்கின் பின்னால் அவளுடைய டிராலியை வைத்து கயிற்றால் கட்டியிருந்தான் .பெட்ரோல் டேங்க் மேல் தனது பேக்கை வைத்துக் கொண்டான் .அவளது ஹேன்ட் பேக்கை அவளது கழுத்தில் மாட்டி முதுகுப்புறம் தள்ளிவிட்டான் .

இப்படியே அதோ அந்த கூட்டத்தோடு ஓடிப் போய் சேர்ந்து கொண்டால் என்ன நிலானி நப்பாசையுடன் பார்த்தாள் . ” அப்படி ஓடிப்போய் என்ன செய்வாயாம் ? எங்கே போவாயாம் ? யாரைப் பற்றி கம்ப்ளைன்ட் செய்வாயாம் ? ” 

அவள் உத்தேசத்தை தெரிந்து கொண்டது போல் அவன் கேள்வி கேட்டான். ஆம் பெற்றோரே எதிரியான பிறகு அவள் எங்கே போவாள் ?  யாரிடம் என்ன புகார் கொடுப்பாள் .  இதோ இவனிடம் மாட்டிக் கொண்டிருக்கும் அவள் தந்தையே அப்படி ஒன்றும் இல்லையே என மறுத்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது தானே ? நிலானி மிகவும் சோர்ந்தாள்.

அவள் தோள்களை வலிக்கும்படி அழுத்தி பற்றி பைக்கில் ஏற்றினான் அவன் .இதோ இப்படி கரடுமுரடுகளிலெல்லாம் விழுந்து எழுந்து போய்க் கொண்டிருக்கிறான் .இதுவும் அவளுக்கான தண்டனைகளில் ஒன்றுதான் என்று அவளுக்கு இப்போது தெள்ளென விளங்கியது.

” இதற்கு அந்த அம்பாசிடரே தேவலாம் போல ” வார்த்தைகள் காதில் விழுந்ததும்தான் தான் அதனை வாய் விட்டுச் சொல்லி விட்டதை உணர்ந்தாள் .அய்யய்யோ இதற்கு என்ன சொல்வானோ…? 

அவன் எதுவும் சொல்லவில்லை .ஆனால் பைக்கின் வேகம் கூடியது. பைக் இன்னமும் குதித்து குதித்து ஓடியது .பாதை போகப்போக அபாயகரமாக மாறியது .அந்தப் பாதையிலும் இத்தனை வேகத்தில் பைக்கை செலுத்த இவனால் தான் முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. பக்கவாட்டில் தெரிந்த கிடுகிடு பள்ளத்திற்கு பார்வை போகாமல் இருக்க மிகவும் மெனக்கெட்டாள் .

பைக்கின் குலுக்களுக்கு மேலாக அந்த குலுக்கல்களால்  அவன் மீதே பொத் பொத்தென்று மோத வேண்டிய நிலைமைதான் அவளுக்கு மிகவும் அவமானகரமாக இருந்தது .இதுபோல் ஒட்டி உரசுவதற்காகத்தான் இந்த பைக் பயணத்தை இவன் தேர்ந்தெடுத்தானோ …?  விலகவும் முடியாமல் நெருங்கி  பற்றி அமரவும்  முடியாமல் அந்த நீண்ட பயணத்தில் நிலானி மிகவுமே தவித்துப் போனாள்.

” பழமைகளை எப்போதும் நாங்கள் போற்றுவோம். தூக்கி வீசி விட மாட்டோம் ”  காதுகளை அறைந்து  போன காற்றின் ஒலிகளுக்கு இடையே திடுமென கத்தலாக பேசினான். இவன் எதை சொல்கிறான் ? எதற்கு சொல்கிறான் ? மிகவும் யோசித்து இறுதியில் அந்த அம்பாசிடர் காருக்கான விளக்கம் இது என கண்டு கொண்டாள்.

உன் போற்றலை பார்த்துவிட்டாலும் மனதிற்குள் வைது கொண்ட அவளின் விழிகள் சுற்றுப்பாதையை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தது. தப்புவதற்கான மார்க்கத்தை தேடிக் கொண்டே இருந்தது .ஆளரவமே இல்லாத இந்த மலைக் காட்டுப் பகுதியில் யார் வந்து எனக்கு உதவ போகிறார்கள் ? அவளது நம்பிக்கை தேய்ந்து கொண்டே போனது .சரி பரவாயில்லை ஏதோ ஊர் சொல்கிறானே அங்கே போய் பார்த்துக் கொள்ளலாம் தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு பைக்கின் பின்னே குலுங்கிக் கொண்டிருந்தாள் அவள்.

திடுமென பைக் நிறுத்தத்திற்கு வர எட்டி அவன் தோள்களுக்கு முன்னால் பார்த்தாள். அங்கே சாலையை மறைத்து கற்குவியல்கள் கிடந்தன .நான் தப்ப வழி கிடைத்து விட்டதா ? அவள் விழிகள் பரபரத்தன.

” புதிதாக சாலையை விரிவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள் .அதற்காக பக்கவாட்டு மலையை வெடி வைத்து தகர்த்து கொண்டிருக்கிறார்கள் .அந்த கற்கள் தான் இப்படி விழுந்து பாதையை மறைத்துள்ளன .இவற்றை அகற்றிய பிறகுதான் நாம் போக முடியும் ” விளக்கம் கொடுத்தபடி பைக்கை நிறுத்தி இறங்கினான்.

பைக்கில் இருந்து இறங்கிய நிலானியின் கால்கள் வெடவெடத்தன. தரையில் ஊன்ற முடியாது பாதங்கள் புண்ணாக வலித்தன .அத்தோடு அடி வயிற்றைப் புரட்டிக் கொண்டு வர அவள் வேகமாக ஓடிப்போய் ஓரமாக வாந்தி எடுத்தாள் .இந்த கொடுமையான பயணத்தை அவள் உடல் ஏற்றுக்கொள்ளாமல் எதிர்வினை காட்டியது.

ஏற்கனவே காலை எழுந்ததிலிருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்கவில்லை .விடிந்த உடனேயே அவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து அப்படியே அவளை இழுத்துக் கொண்டு வந்து விட்டான் .இப்போது இந்த மலை பயணம் அவளுக்கு தலை சுற்றி வாந்தி வர வைத்து மயக்கத்தை கொடுத்தது. உடல் தடுமாற மெல்ல பக்கத்தில் இருந்த பாறை மேல் உட்கார்ந்தாள் .கண்கள் சொருகின.




சுரீரென்று முகத்தில் ஏதோ மோத திடுக்கிட்டு விழித்து பார்த்தால் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவ்வளவு வேகத்துடன் அவள் முகத்தில் அடித்துக் கொண்டிருந்தான் அவன்.

” என்ன மகாராணி அம்மாவிற்கு அதற்குள் ஓய்வு தேவைப்படுகிறதோ ? ”  மீண்டும் நீரை கைகளில் ஊற்றி சுளீர் என்று முகத்தில் அடித்தான்.

” என்னால் முடியவில்லை ” பலகீனமாக முணுமுணுத்தாள் நிலானி.

” பொன்போல போற்றி வளர்த்த உடல் .அப்படித்தான் இருக்கும் ” நக்கல் பேசியவன் தனது பேக்கிலிருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து வந்தான் .அவள் மடியில் எறிந்தான் .

” இதனை தின்று தொலை. வெறும் வயிறு மலையேறும்போது கலக்க தான் செய்யும் ” சொல்லிவிட்டு நொட்டென்ற சத்தத்துடன் தண்ணீர் பாட்டிலையும் அருகே வைத்து விட்டு திரும்ப போனான்.

அதோ அங்கே கற்களை அகற்றுகிறார்களே அவர்களிடம் உதவி கேட்டால் என்ன …என்ற நிலானியின் நப்பாசை அவன் அவர்கள் அருகே போய் சிரித்துப் பேசிக் கொண்டு தானும் அவர்களுக்கு வேலையில் உதவுவதை கண்டதும் மடிந்தது .இவன் இந்தப் பகுதியில் மிகவும் தெரிந்த ஆள் போலிருக்கிறதே… மலையேறும்போது செக்போஸ்டில் கூட இவனை நிறுத்தவில்லை. மேலே ஊரில் இவனுக்கு தெரிந்த இடத்தில் இவனிடம் இருந்து தப்பிக்க முடியுமா ?நிலானியின் மனது கவலையில் பாரமானது.

உடலுக்கு தெம்பு வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவன் தூக்கி போட்ட பிஸ்கட்டுகளை வேகமாக காலி செய்தாள் .தண்ணீர் குடித்ததும் உடம்பு கொஞ்சம் பரவாயில்லை போன்றே தோன்றியது . சாலை சுத்தமாக்கப்பட  மீண்டும் அவர்களது குலுக்கல்  பயணம் தொடர்ந்தது .இப்போது கொஞ்சம் ஆறுதல் மலையில் குளிர் சேர்ந்திருந்தது .அத்தோடு ஒரு பக்கம் மலை ஒரு பக்கம் பள்ளத்தாக்கு என்றிருந்த நிலை மாறி இரு பக்கமும் மலைத்தொடர்கள் அணிவகுத்து உடன் வந்தன .கூடவே இயற்கையும் பசுமையாக வர மனது கொஞ்சம் லேசானது.

இடையில் ஒரு சிறிய ஊரை அவர்கள் கடந்தனர் . ” இதுதான் மேகமலை. அடுத்து நாம் போக போகும் இடம் ஹைவேவிஸ் ” 

 அவன் சொல்ல அட்ரஸ் கொடுத்து தைரியமாக ஆளை கடத்துகிறானே …இவன் எப்பேர்ப்பட்ட கிரிமினலாக  இருப்பான் நிலானியின் மனது கசந்து வழிந்தது.

இப்போது பாதையின் இருபக்கமும் தேயிலைத் தோட்டங்கள் தோட்டங்கள் தோட்டங்கள். தாங்கள் ஒரு எஸ்டேட்டிற்குள்  நுழைந்து கொண்டிருப்பதை நிலானி உணர்ந்தாள் .கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை பசுமை பசுமை .இயற்கை அங்கே தன்னை கடுமையாக நிலைநிறுத்தி இருந்தது .வழியில் அமைதியாக தளும்பி நின்ற ஓர் ஏரியின் ஓரம் பயணம் தொடர்ந்தபோது நிலானி தன்னை அறியாமல் அந்த இயற்கையை ரசிக்கவே செய்தாள்.

 முழுவதும் செம்பவள நிற  கற்கள் பதிக்கப்பட்டு ஒரு வகை மந்தமான மினுங்களோடு கண் முன்னே தெரிந்த அந்த பெரிய பங்களாவை விழி விரித்து ஆச்சரியமாக பார்த்தாள் .எவ்வளவு அழகான வீடு…

” உள்ளே போ ” உத்தரவிட்டுவிட்டு பக்கவாட்டில் பைக்கை நிறுத்த போய் விட்டான் அவன். இவ்வளவு பெரிய வீட்டில் ஒரே ஒரு ஆள் அவளின் உதவிக்கு இல்லாமலா போய்விடுவார்கள் ? நிலானி பரபரப்பாக உள்ளே ஓடினாள். கதவில் மாட்டிக்கொண்டு இழுத்த சுடிதாரை விடுவித்துக்கொண்டு ஒவ்வொரு அறையாக சுற்றினாள்.




” ஹலோ யாராவது இருக்கீங்களா ,? ” அவளது குரல் வீடு முழுவதும் சுற்றி எதிரொலித்தது. அவளுக்கு எதிரொலிப்பதை தவிர எந்த மனித பதிலையும் அந்த வீடு கொடுக்கவில்லை.

” யாரை தேடுகிறாய் ? ” ஆச்சரியம் போல் விழி விரித்து கொண்டு எதிரே நின்ற அவனிடம் திடுமென ஒரு மாறுதல் .அவன் விழி போன போக்கில் தன்னை பார்த்தவள் முகம் சிவந்தாள்.

கதவில் மாட்டி இழுத்து எடுத்த சுடிதார் தோளிலிருந்து நீளமாக கிழிந்திருந்தது .வெளேரென்று  அவளது உடல் தெரிய அதனை வெறித்திருந்தன அவன் விழிகள்.

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!