karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 29

  29

குற்றங்கள் சொல்லிக்கொண்டே இருக்கும்

சுற்றங்களுக்கு மத்தியில்

சட்டங்கள் பேசி திரிகிறாய்

சட்டென விடுபட முடியா

சிலந்தி வலையொன்றை

எனக்களித்தபடி …

 

 

நேரடியாக முகத்திற்கு வந்த இந்த தாக்குதலில் சாத்விகா அதிர்ந்து போனாள் .இவர்களுக்கு என்னை தெரியுமா …? ஏன் என்னை இப்படி வெறுப்பாக பார்க்கிறார்கள் …? நினைவு தெரிந்த நாள் முதல் இது போன்ற உதாசீனங்களை பார்த்திராதவளாத்தால் இந்த முறைப்பு அவள் மனதை மிகவும் புண்படுத்தியது .

” உள்ளே போய் பேசலாம் வாங்கம்மா ” என்றவன் ஒரு கையால் அம்மாவின் தோள்களை  அணைத்தபடி , மறுகையால் வாசலிலேயே தயங்கி நின்று விட்ட சாத்விகாவின் கைகளையும் பற்றி இழுத்தபடி உள்ளே நுழைந்தான் .

” இங்கே இரு …” அங்கிருந்த சோபாவில் அவளை தள்ளியவன் , அம்மாவை அழைத்தபடி உள்ளறைக்கு போய்விட்டான் .லேசான அவமானத்துடன் அந்த சோபாவில் பின்னால் சாய்ந்து அமரவும் கூசியபடி நுனியிலேயே தடுமாற்றத்துடன் அமர்ந்திருந்தாள் சாத்விகா .

” சந்து …இன்று ஒரு குட் நியூஸ் ….” என்றபடி உள்ளே வந்த அந்த ஆள் இவளை பார்த்ததும் அதிர்வது துல்லியமாக தெரிந்த்து .

” ஏய் …நீ …ஏன் வந்தாய் ….? எப்படி வந்தாய் …? எதற்கு வந்தாய் …? ” தடுமாற்றத்துடன் கேள்விகளை இறைத்தவருக்கு பதில் சொல்லும் வகையற்று திகைத்து எழுந்து நின்றாள் சாத்விகா .

” நான்தான் அழைத்து வந்தேன் அப்பா ….” சொல்லியபடி உள்ளிருந்து வந்தான் வீரேந்தர் .




” இங்கே ஏன் அழைத்து வந்தாய் …? ” வீரேந்தரின் அப்பாவின் குரலில் இவளை உடனே வெளியேற்று என்ற செய்தியிருந்த்து .

” இவளை முதலில் மாடியில் தங்க வைத்துவிட்டு வருகிறேன் அப்பா .நாம் பிறகு பேசலாம் …வா சாத்விகா ” என்றவன் அவளது பேக்கை கையில் எடுத்துக்கொண்டு மாடியேறினான் .

உடனடியாக வெளியேறுமாறு பார்வையாலேயே சொல்லிக்கொண்டிருந்த வீரேந்தரின் அம்மாவையும் , அப்பாவையும் பார்த்ததும் …அங்கே தங்க வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் போக …” நான் வரவில்லை ” என பாத்த்தை அழுத்தி தரையில் ஊன்றினாள் .

” முட்டாள் …அடம் பிடிக்காதே …வா …” என அவள் தோள்களை வலுக்கட்டாயமாக அணைத்து இழுத்து படியேற்றியவன் மாடியில் ஒரு அறைக்குள் அவளை கிட்டதட்ட தள்ளினான் .

” இங்கே தங்கிக்கொள் …நான் அப்பா , அம்மாவுடன் பேசிவிட்டு வருகிறேன் …”

” அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை .நான் இங்கு தங்கமாட்டேன் ….” என்றவளின் இதழ்களின் மேல் விரல் வைத்து ” உஷ் ” என்றான் .

” ஒரு பிரச்சினையும் இல்லை .எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் .நீ இங்கேதான் தங்க போகிறாய்.” உறுதியாய் தெரிவித்துவிட்டு வெளியேறினான் .

அப்படி என்ன இவனுக்கு அதிகாரம் …? இவன் விரல் நீட்டும் இடமெல்லாம் நான் தங்கவேண்டுமா …? வரட்டும் முடியாதுடான்னு மூஞ்சில அடிக்கிற மாதிரி சொல்லிவிட்டு வெளியேறிவிடுகிறேன் .திரும்பவும் நிரஞ்சனாம்மா வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன் .ஆனால் வீரேந்தர் சம்மதித்தால்தான் அவர்கள் என்னை அங்கே அனுமதிப்பார்களோ …? இல்லாவிட்டால் சுகிரதாம்மாவிடம் போய் தங்கிக் கொள்கிறேன் .ஆனால் அவர்களும்தான் வீரேந்தருக்காகத்தானே என்னை அங்கே தங்க வைத்திருந்தார்கள் .

யோசித்து …யோசித்து மண்டை குழம்பியது சாத்விகாவிற்கு .வீரேந்தர் வேறு அப்பா , அம்மாவிடம் பேச போகிறேனென போனவன் அதன் பிறகு வரவேயில்லை. அன்பாய் , ஆதரவாய் பார்த்துக்கொள்ள சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் அன்று தன்னை அநாதையாய் உணர்ந்தாள் சாத்விகா .

வெளியே மழை பெய்ய ஆரம்பிக்க சரிவாய் சாய்த்து விடப்பட்டிருந்த கண்ணாடி சன்னல் கதவுகளில் மழைநீர் ஓடையாக சரிந்து அழகான ஆறு போல் இறங்கியது .ஆர்ப்பாட்டமற்ற அமைதியான அருவியை நினைவுறுத்திய அந்த மழைநீரையே பார்த்தபடி  அந்த சன்னல் திண்டிலேயே கால்களை கோர்த்து அமர்ந்துவிட்டாள் சாத்விகா .

சாப்பிடுமாறு கையில் உணவு தட்டுடன் வந்து நின்ற வேலையாளை பார்வையாலேயே விரட்டினாள் .அவன் உணவு டிரேயை டேபிள் மேல் வைத்துவிட்டு வெளியேறினான. .

ஒன்பது மணிக்கு கதவு தட்டப்பட , பதிலின்றி கதவையே பார்த்தபடி இருந்தாள் .திறந்திருந்த கதவை மெல்ல தள்ளி உள்ளே பார்த்துவிட்டு உள்ளே வந்த வீரேந்தர் , சாத்விகா அமர்ந்திருந்த கோலத்தை பார்த்து திகைத்தான் .

” என்ன சாத்விகா இது …? அப்போதிருந்து இப்படியே உட்கார்ந்திருக்கிறாயா …? ” பேக் வைத்த இடத்திலேயே இருக்க , கட்டிலையோ …சோபாக்களையோ அவள் பயன்படுத்திய தடமெதுவும் தெரியாமலிருக்க ,தன்னை ஒடுக்கி சன்னலில் அமர்ந்திருந்தவளை பார்த்து கண்டிப்புடன் கேட்டான் .

” நான் இங்கே இருக்கமாட்டேன் .போகிறேன் …” அவள் குரலை காதில் வாங்காமல் …

” சாப்பிடவில்லையா …? ” சற்றுமுன் வேலையாள் கொண்டு வந்து வைத்துவிட்டு சென்ற டிரேயை திறந்து பார்த்து கேட்டான் .

” உங்கள் அப்பா , அம்மா இரண்டு பேருமே என்னை விரோதி போல் பார்க்கின்றனர் .என்னால் இங்கே இருக்கமுடியாது …”

அவளுக்கு பதில் சொல்லாமல் குட்டி ஹாட்பேக்கில் சூடாறாமல் வைக்கப்பட்டிருந்த உணவை திறந்து பார்த்து தட்டில் பரிமாறினான்.

” சப்பாத்தி – பட்டாணி குருமா .உனக்கு பிடிக்கும்தானே …? “

” நான் இங்கே இருக்கமாட்டேனென்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் …” குரலை உயர்த்தியவளின் அருகே வந்து வாயில் சப்பாத்தியை திணித்தான் .

” முதலில் சாப்பிடு .மற்றவற்றை பிறகு பேசலாம் …” என்றான் .அவளருகிலேயே சன்னலில் அமர்ந்து கொண்டவன் அவள் மேலே பேச வாய்ப்பெதுவும் தராமல் மூன்று சப்பாத்திகளையும் தானே அவள் வாயில் ஊட்டி முடித்தான் .

தண்ணீர் குடித்ததும் பேச முயன்றவளை கை நீட்டி தடுத்து நிறுத்தி … அவள் பேக்கை ஆராய்ந்து அதிலிருந்து ஒரு கருநீல சாட்டின் நைட்டியை …அழகான கலரில்ல என்ற சிலாகிப்போடு தேர்ந்தெடுத்து அவளிடம் கொடுத்து அவளை யோசிக்கவிடாது போய் மாற்றிவிட்டு வா …என பாத்ரூமிற்குள் விரட்டினான் .

அவள் மாற்றிவிட்டு வெளியே வந்த்தும் ” ம் …என் செலக்சன் சரிதான் .இந்த நைட்டி உனக்கு மிக அழகாக இருக்கிறது ” என்றான் .

விரும்பாதோர் இடத்தில் கள்ளிச்செடி மேலிருக்கும் பூவை போன்றதோர்  அவஸ்தையிலிருந்த சாத்விகா இந்த அவனது இலகு அணுகுமுறையில் திகைத்தாள் .

” வா …வந்து படுத்துக்கொள் …” கட்டிலை காட்டினான் .

” நான் நாளை இந்த வீட்டிலிருந்து போய்விடுவேன் …” உறுதியாக கூறியவளின் உறுதியை  உடைக்கவென்றோ என்னவோ அழுத்தமான காலடியுடன் அவளருகே நெருங்கியவன் குனிந்து அவளை குழந்தை போல் கைகளில் அள்ளிக்கொண்டான் .

” சில நேரங்களில் பத்து வயது குழந்தை போல் நடந்து கொள்கிறாய் பேபி …” என்றவாறு அவளை மென்மையாக படுக்கையில் படுக்க வைத்தவன் , போர்வையை இழுத்து கழுத்து வரை மூடிவிட்டான் .

பேச முயன்ற அவள் இதழ்களில் விரல் வைத்தவன் அவள் முகத்தருகே குனிந்து ”  உன்னை நம் வீட்டிற்குள் அழைத்து வந்துவிட்டேன் பேபி .இனி நானே நினைத்தாலும் நீ இங்கிருந்து போக முடியாது .இனி இதுதான் உன் வீடு …” பாறையின் உறுதி குரலில் கூறியவன் …




” உனது அறைக்கு எதிர்அறை என்னுடையது. எந்த நேரத்தில் என்ன பிரச்சனையென்றாலும் என்னை அழைக்கலாம் .ஆனால் இனி உனக்கு பிரச்சினைகள் வராது .தூங்கு  .குட்நைட் …”,இதமாக அவள் நெற்றியை வருடிவிட்டு வெளியேறினான் .

தனது வீட்டை விட்டு வெளியேறிய நாள் முதல் …வேறு வேறு இடங்களில் தங்கியிருந்த போது சுகிர்தா ,நிரஞ்சனா என்று பாசமான ஆட்கள் இருந்தபோதும் அங்கெல்லாம் நிம்மதியாக வராத உறக்கம் …இன்று வெளியே போ என விரட்டிக்கொண்டிருக்கும் ஆட்கள் இருக்கும் அந்த வீட்டில் காரணமறியா நிறைவுடன் வந்து சாத்விகாவை தழுவிக்கொள்ள …அவள் வெகுநாட்கள் கழித்து நிம்மதியாக தூங்க தொடங்கினாள் .

———————

” குட்மார்னிங் ஆன்ட்டி ” உற்சாகமாய் பின்னால் ஒலித்த குரலில் திகைத்து திரும்பி பார்த்தாள் சந்திரிகா .பாதம் வரை புரண்ட பச்சை நிற ப்ரில் பாவாடைக்கு , மேட்சாக உடலோடு அழகாக பொருந்திய ஆலிவ் க்ரீன் டாப்ஸ் அணிந்து , குட்டை கூந்தலை அழகாக ப்ரஷ் செய்து தோள்களில் புரளவிட்டபடி , காதிலும் , கழுத்திலும் அணிந்திருந்த ஒற்றை மிளகு சைஸ் வைரங்களின் டாலடிப்பை விட அழகான புன்னகை ஒன்றை சிதறவிட்டபடி நின்றிருந்த சாத்விகா …சந்திரிகாஙிற்கு சற்று முன் அவள் தோட்டத்தில் பறித்தெடுத்து , ஹாலில் இருந்த பூச்சட்டிக்குள் நீரில் மிதக்கவிட்டிருந்த மலர்ந்த பெரிய மலரொன்றை நினைவுபடுத்தினாள் .

” குட்மார்னிங் ….” பார்வையை அந்த பூச்சட்டி பூவிற்கு கொடுத்தபடி முணுமுணுத்தாள் சந்திரிகா .

” நான் இங்கே இருக்கேன் ஆன்ட்டி …” முகம் திருப்பியிருந்த சந்திரிகாவின் முகத்தின் முன் வந்து நின்றுகொண்டாள் சாத்விகா .

” இவ்வளவு அதிகாலையில் குளித்து அழகாக ப்ரெஷ்ஷாக …நெற்றி நிறைய குங்கும்மும் தலை நிறைய பூவுமாக நீங்கள் இந்த சோபாவில் உட்கார்ந்திருப்பதை பார்த்தால் , ப்ரேமுக்குள் அடைபட்டுக் கிடந்த அந்த மகாலட்சுமியே வந்து வீட்டிற்குள் உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது …” பெரிய ஐஸ்கட்டி ஒன்றை கஷ்டப்பட்டு தூக்கி அவள் தலையில் வைத்தாள் .

தலையேறிய ஐஸ்கட்டியின் கனத்தில் துளியும் சலனமின்றி பேப்பரை புரட்டினாள் சந்திரிகா .காபி கொண்டு வந்து வைத்த வேலைக்கார பெண்ணை போவென சைகை செய்துவிட்டு , காபி கலந்து கொள்ளுமாறு சாத்விகாவிற்கு சைகை செய்தாள் .அந்த ஙேலைக்கார பெண்ணும் நானும் ஒண்ணா …? என்ற வேகம் சாத்விகாவினுள் எழுந்தாலும் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக்கொண்டாள் .

எப்படியாவது சந்திரிகாவின் அன்பை பெற்றுவிட வேண்டுமென நினைத்தாள் .ஏனென்றால் அன்று வெளியே போகும் முன்பு வீரேந்தர் அம்மாவை சரிபண்ண உன்னால் முடியுமா …என அவளிடம் சவால் விட்டு சென்றிருந்தான் .உன் அம்மாவை நான் ஏன் சரிபண்ணவேண்டுமென்று நினைத்தாலும் , அவன் கேட்ட தொனி அவள் ரோசத்தை கிளப்ப அவனது தூண்டுதலுக்கு சம்மதித்திருந்தாள் .

அன்று காலை ஆறு மணிக்கே அவளது அறையை திறந்து வந்த வீரேந்தர் போர்வைக்குள் கதகதப்பாக சுருண்டிருந்தவளை தட்டி எழுப்பினான் .எழுந்து வெளியே பார்த்தவள் இன்னமும் கறுப்பாக இருந்த வானத்தை பார்த்துவிட்டு …

” ஏன் நடுராத்திரி எழுப்புகிறீர்கள் …? ” என்றாள் .

” நடுராத்திரியா …மணி காலை ஆறு …எனக்கு கொஞ்சம் வெளியில் வேலை இருக்கிறது .கிளம்பிவிட்டேன் ….” தன் கைகடிகாரத்தை அவள் முன் நீட்டினான் .

நன்றாக திரும்பி சன்னல் வழியாக வெளியே பார்த்தாள் .வானம் விடிவேனா என அடம்பிடித்துக் கொண்டிருக்க முன்தின மழையின் மிகுதி எச்சமாய் அவ்வப்போது துளிகளை விசிறிக்கொண்டிருந்த்து வானம் .

” யோவ் மனுசனாய்யா நீ …நைட் புல்லா விடாம மழை பெய்திருக்குது .இன்னமும் பெய்யுது .இந்த மழையில் இந்த டில்லி குளிரில் , இவ்வளவு அதிகாலையில் நீ எந்திரிச்சு வெளியே போவதே தப்பு .நல்லா தூங்கிட்டு இருக்கிறவளையும் இப்படி எழுப்பி விடுறியே …உருப்படுவியா நீ …? ” தூக்ககலக்கத்தில் கத்தினாள் .

” பார்றா …நேற்றெல்லாம் இங்கே இருக்க மாட்டேன்னு அடம்பிடிச்சதென்ன …இன்று எழுப்ப …எழுப்ப எழுந்திரிக்காமல் அடம்பிடிப்பதென்ன …? ஏய் எழுந்திரிடி …ஹீட்டர் போட்டிருக்கேன் .போய் குளி …”

” முடியாது …” திரும்ப படுக்க போனவளின் போர்வையை உருவினான் .

” சாத்விகா …நீ சீக்கிரம் எழுந்து குளித்து கீழே போனால் அம்மா அப்படியே ஷாக் ஆயிடுவாங்கள்ல …கொஞ்சமா சந்தோஷப்படுவாங்கள்ல …”

” அவுங்க சந்தோசப்படுறதுக்காக நான் ஏன் இவ்வளவு கஷ்டப்படனும் …? ” கொட்டாவி விட்டாள் .

” அம்மாவுக்கு உன்னை பிடிக்க வேண்டாமா …? காலையில் சீக்கிரம் எழுந்தால் அம்மாவிற்கு ரொம்ப பிடிக்கும் …எப்படியும் இங்கே இருப்பதுதான் உன் தலையெழுத்துன்னு ஆயிடுச்சு.கொஞ்சம் அம்மாவுக்கு ஐஸ் வச்சு உன் பக்கம் திரும்ப வையேன் ….”

” நான் ஏன் இங்கேயே இருக்க போகிறேன் …? என் அம்மாவை கண்டுபிடித்ததும் போயிடுவேன் …”

” ஓ….கண்டுபிடிக்கவேயில்லையென்றால் …? “

சாத்விகாவின் தூக்கம் கலைந்த்து .

” அதெப்படி விடுவேன் …? கண்டிப்பாக கண்டுபிடித்தே தீருவேன் …” சத்தியம் போல் அறிவித்தாள் .




” ம் …உங்கள் அம்மாவை கண்டுபிடிக்கும் வரை இங்கேதானே நீ இருந்தாக வேண்டும் ்அதனால் இங்கிருப்பவர்கள் மனம் போலத்தான் நடந்து கொள்ளவேண்டும் .எழுந்து குளி ….” அவளை கட்டிலிலிருந்து கீழே இழுத்தான்..

” சை …சரியான கொலைகார குடும்பம் …” புலம்பியபடி பாத்ரூமிற்குள் நுழைந்தாள் .வீரேந்தர் கிளம்பி வெளியே போய்விட , சாத்விகா தயாராகி கீழே வந்து இதோ சந்திரிகாவிற்கு ஐஸ் வைத்து கொண்டிருக்கிறாள் .

” ஏன் அங்கிள் இந்த வீட்டை  நீங்கள் கட்டும்போதே இவ்வளவு அழகாக கட்டினீர்களா ….? இல்லை ஆன்ட்டியின் கை வண்ணத்தினால்தான் இவ்வளவு அழகாக இருக்கிறதா …? ” காலை காபிக்காக வந்த சக்கரவர்த்தியின் முன்னால் சுவாதீனமாக உட்கார்ந்து காலை ஆட்டிக்கொண்டு கேட்டாள் .

சக்கரவர்த்தியின் பார்வையில் சாத்விகாவை துப்பாக்கி எடுத்து சுடும் ஆர்வம் இருந்த்து .

What’s your Reaction?
+1
16
+1
10
+1
1
+1
5
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!