karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 28

    28

ரகசியங்களை பூட்டி வைத்திருக்கும்

உன் வான வீதிகள்

என் உயிர் குடிக்கும் நட்சத்திரங்களை

ஓயாமல் உதிர்த்த படியிருக்கின்றன

சாத்விகா திரும்ப கண் விழித்த போது இன்னமும் அவள் உடலில் சாக்கடை நாற்றம் இருப்பது போல் உணர்ந்தாள் . குமட்டக்கொண்டு வந்த்து .வாந்தி வருவது போல் இருக்க வேகமாக கட்டிலில் இருந்து எழுந்து வாஷ்பேசினுக்கு ஓடினாள் .பின்னால் வந்து அவசரமாக அவள் தலையை தாங்கினாள் நிரஞ்சனா .

” பார்த்தும்மா ….” அவள் வாந்தி எடுத்து முடித்ததும் வாய் கொப்பளித்து முகம் கழுவ உதவினாள் நிரஞ்சனா .தொண்டையும் , வாயும் எரிய தள்ளாடியபடி திரும்பிய சாத்விகா , இடுப்பில் இரு கைகளையும் தாங்கி நின்றுகொண்டு அவளை முறைத்து பார்த்தபடி நின்ற வீரேந்தரை பார்த்தாள் .அதே அறையில்தான் சற்று தள்ளி நின்று கொண்டு அவள் வாந்தியெடுப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் .

இவன் எப்போது வந்தான் …ஒரு வாரத்திற்கு இந்த பக்கமே வர முடியாதென்றானே …அங்கே விழுந்தவள் இங்கே எப்படி வந்தேன் …யோசித்தாள் .

கால் பிரண்டு கீழே விழும்போதே தன் நிலையை உணர்ந்துவிட்டவள் , சட்டென தன் கை போனை இறுக பிடித்து  காப்பாற்றிக்கொண்டாள் .கீழே விழுந்த வேகத்தில் தலை எதிலோ இடிக்க கண்கள் இருண்டு மயக்கம் வருவது போல் தோன்ற , அவசரமாக போனை ஆன் செய்து வீரேந்தரை அழைத்தவள் , அவன் போனை எடுக்கவும் ” வீரா ” என்ற ஒரு முனங்கலுடன் மயங்கிவிட்டாள் . இதோ இப்போது இங்கே வீட்டில் இருக்கிறாள் .

சூடான சூப்பை ஸ்பூனால் எடுத்து அவள் வாயில் வைத்தாள் நிரஞ்சனா .இதமான சூட்டுடன் நா ஊற வைக்கும் அந்த சூப்பின் மணத்தையும் தாண்டி , சாக்கடை நாற்றம் இன்னமும் உள்ளுக்குள் சுழன்றுகொண்டு திரும்பவும் வாந்தி உணர்வை தோற்றுவிக்க …உமட்டியவளை ” இந்த சூப்பை குடித்துவிட்டால் சரியாகிவிடும் .காலி வயிறுதான் திரும்ப திரும்ப உமட்டும் .வேறெதையும் நினைக்காமல் இதை குடி ” அன்பான அதட்டலுடன் வாயினுள் சூப்பை நுழைத்தாள் நிரஞ்சனா .

” ஆமாம் ….சின்ன பப்பா  …இந்த சூப்பை பாட்டிலில் ஊற்றி ,ரப்பர் மாத்தி குடுங்க  .சப்பி …சப்பி குடிக்கட்டும் ” வீரேந்தர் நக்கலாக குரல் கொடுத்தான் .

” என்ன வீரேந்தர் இது …? டாலி வேதனையில் இருக்கும் போது …நீ் வேறு ….” ஆட்சேபம் தெரிவித்த முகுந்தும் அங்கேதான் ஓரமாக அமர்ந்திருப்பதை அப்போதுதான் கவனித்தாள் சாத்விகா .




மூவரின் முன்னாலும் தான் நோயாளி போல் படுத்திருக்கும் இந்த நிலை அவளுக்கு பிடிக்காமல் போக , சரிந்து அமர்ந்திருந்தவள் அவசரமாக எழுந்து அமர்ந்தாள் .

” ஏம்மா எழுந்திருக்கிறாய் …? படுத்துக்கொள் . டாக்டர் இரண்டு நாட்கள் ரெஸ்ட்  எடுக்க சொல்ரியிருக்கிறார் ” அவள் தோள்களை மீண்டும் படுக்க அழுத்தினாள் நிரஞ்சனா .

” எனக்கு ஒன்றுமில்லை .ரெஸ்ட் எதற்காம் …? ” மெலிதாய் முனங்கினாள் .

” ம் …ஊர்பட்ட சாக்கடையை குடிச்சிருக்கியாம் .அதெல்லாம் ஜீரணமாகனுமாம் .அதற்காக இந்த ரெஸ்ட்டாம் …” வீரேந்தர் மீண்டும் குத்தினான்.

என்னது சாக்கடையை குடிச்சேனா ….? சாத்விகாவிற்கு  மீண்டும் வாந்தி உணர்வு வந்த்து .” இல்லைம்மா …அப்படி ஒன்றும் இல்லை .வீரேந்தர் சும்மா சொல்கிறார் .” சாத்விகாவின் நெஞ்சை நீவி சமாதானப்படுத்தினாள் நிரஞ்சனா .

மிக கடினத்துடன் அந்த உணர்விலிருந்து மீண்டவள் ” இங்கே என்ன கண்காட்சி வைத்திருக்கேனா …? அசையாமல் பார்த்துக் கொண்டிருப்பதற்கு …வெளியே போங்களேன் ” என வீரேந்தரிடம் எரிந்து விழுந்தாள் .ஏனென்றால் அவன் நின்ற தோற்றம் அப்படித்தான் …ஏதோ கண்காட்சியை வேடிக்கை பார்க்க வந்தவன் போலத்தான் இருந்தது .

கோபத்துடன் பதில் சொல்ல வந்த வீரேந்தரை ” ப்ளீஸ் நீங்க போங்க வீரேந்தர் .முகு …அவரை கூட்டிப் போங்க ” என அனுப்பி வைத்தாள் நிரஞ்சனா.

” எவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் , சலனமில்லாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் பாருங்கள் அம்மா ” நிரஞ்சனாவிடம் புகார் கூறினாள் .

” இல்லை சாத்வி .உன்னை அங்கிருந்து தூக்கி வந்த போது வீரேந்தர் எவ்வளவு பதட்டமாக இருந்தார் தெரியுமா …? நாங்கள் பார்ட்டியில் இருந்த போது போன் செய்து உடனே வீட்டுக்கு வாருங்கள் என்றார் .நாங்கள் வந்த ஐந்து நிமிடங்ளில் உடல் முழுவதும் சாக்கடையுடன் உன்னை தூக்கிக்கொண்டு காரிலிருந்து இறங்குகிறார் .உன்னை தூக்கியதால் அவர் உடம்பும் சாக்கடையாக இருக்கிறது .டாக்டருக்கு போன் செய்யுங்கள் என்றுவிட்டு பாத்ரூமில் ஷவரை திறந்துவிட்டு உன்னை சுத்தம் செய்து , தானும் சுத்தமாகி ….அப்போது அவர் முகத்தை பார்க்க வேண்டுமே …அவ்வளவு பதட்டம் .அடிக்கடி உன் கன்னத்தை தட்டி உன்னிடம் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார் .”

ஆம் …அது சாத்விகாவிற்கு இப்போது ஏதோ கனவில் நடந்த்து போல் நினைவில் வந்த்து .அப்போதெல்லாம் எங்கோ நீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்த தன்னை வீரேந்தர் வந்து அணைத்து காப்பாற்றியது போல் உணர்ந்திருந்தாள் .

” பிறகு என்னை உனக்கு உடை மாற்றி விட சொல்லிவிட்டு போனார் .டாக்டர் வந்து சாதாரண மயக்கம்தான் என சொல்லும் வரை ஒரு பதட்டத்தில்தான் இருந்தார் .எவ்வளவு இக்கட்டிலும் சலனங்களை கண்களில் கூட காட்டமாட்டார் .இப்போது பாரேன் .காதல் செய்யும் வேலையை …என முகுந்த் கூட கிண்டல் செய்து கொண்டிருந்தார் “

சாத்விகாவின் உடலில் ஜிவ்வென்றதோர் உணர்ச்சி பரவியது .காதல் செய்யும் வேலையா ….? அதையும் அவனை வைத்துக்கொண்டே மேஜர் சொன்னாரா …? அதற்கு அவன் என்ன சொல்லியிருப்பான் …? அதனை அறியும் ஆர்வம் சாத்விகாவிற்கு இருந்த அளவு சொல்லும் எண்ணம் நிரஞ்சனாஙிற்கு இல்லை .அவள் சாத்விகா போட்டுக்கொள்ள வேண்டிய மாத்திரைகளை விவரித்தபடி கைகளில் சேகரிக்க ஆரம்பித்தாள் .

சரிதான் போகட்டும் …என்னமும் சொல்லிவிட்டு போகிறான் ….இல்லை எப்போதும் போலவே ஒன்றுமே பேசாமல் ஊமைக்கோட்டான் மாதிரியே நின்றுவிட்டு போகறான் …எனக்கென்ன .தோள்களை குலுக்கி கொண்டாள் சாத்விகா .

அன்று முழுவதும் வேளாவேளைக்கு உணவும் மாத்திரையும் தந்து தாயைப்போல் அருகிலிருந்து அவளை பார்த்துக்கொண்டாள் நிரஞ்சனா .வந்த சில நாட்களில் நிரஞ்சனாவின் தாயன்பை சாத்விகா உணர்ந்திருந்த்தால் இதில் அவளுக்கு ஆச்சரியம் ஏதுமில்லை .ஆனால் எந்நேரமும் வேலை …வேலையென பறந்து கொண்டிருக்கும் வீரேந்தரும் அன்று முழுவதும் அங்கேயே இருந்த்து ….அவளது வேளை தவறாத உணவு , மாத்திரைகளை கண்காணித்தபடி இருந்த்துதான் ஆச்சரியமாக இருந்த்து .

ஆனால் அவளை முறைத்தபடியே இருந்த்தை மட்டும் நிறுத்தவில்லை .சரிதான் …போடா…என பதிலுக்கு தானும் கண்ணகி பார்வைகளை அவனுக்கு பதிலாக தந்து கொண்டிருந்தாள் .அன்று மதிய உணவின் பின் நன்றாக தூங்கி எழுந்த்தும் உடலின் பாரத்தன்மை நீங்கி , வாந்தி உணர்வு குறைந்து மிக லேசாக உணர்ந்தாள் .கண்களை திறக்காமலேயே தன் உடலின் மாற்றத்தினை கணித்தபடி படுத்திருந்தவளின் தலை கடினமான கரமொன்றினால் மென்மையாக வருடப்பட்டது .

விழி திறக்காமல் படபடத்த மனதுடன் படுத்திருந்தவளின் காதருகே ” எப்படியிருக்கிறாய் பேபி ….? ” என கேட்டான் வீரேந்தர் .

தன்னிடம் அவன் ஏதாவது பேச வந்தால் பட்டென்று பேசி அவன் மனதை உடைக்க வேண்டிமென்று உருப்போட்டு வைத்திருந்த சாத்விகா இப்போது வெறுமனே ” ம் ….” என்றாள் .

” இனி இது போன்ற முட்டாள்தனமான வேலைகளை செய்யாதே …” இப்போது வீரேந்தரின் குரலில் கனிவு மறைந்து லேசான அதிகாரம் எட்டி பார்க்க …பட்டென நெற்றி வருடிய அவன் கைகளை தட்டி விட்டவள் எழுந்து அமர்ந்து ….




” யார் முட்டாள் …? நானா …? ” எகிறினாள் .

” நீதான்டி ..ஒரே ஒரு நிமிடம் எல்லோரும் அசந்துவிட்டால் உடனே போய் சாக்கடையில் விழுவாயா …? ” அவள் காதை பற்றி வலிக்கும்படி திருகிக்கொண்டே கேட்க …

” என் இஷ்டம் …அப்படித்தான் செய்வேன் .உன்னால் முடிந்த்தை பாருடா …” அவள் தோள்களில் குத்தியபடி சாத்விகா கத்த , அந்த நேரம் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நிரஞ்சனா இருவரும் இருக்கும் கோலத்தை பார்த்து திகைத்து பின் வந்த சிரிப்பை வாய் பொத்தி அடக்கியபடி …

ம் ….ம் …ஓ.கே …ஓ.கே .நடத்துங்க …சாரி பார் த டிஸ்டர்பன்ஸ் ” என்றுவிட்டு கதவை வேறு மீண்டும் மூடிவிட்டு போனாள் .

” எதை கன்டினியூ பண்ண சொல்றாங்க …? சண்டையையா …? ” தான் சண்டை போட உத்தேசத்திருந்தவனிடமே சந்தேகம் கேட்டாள் சாத்விகா .

” ஆமாம் …எழுந்து கிளம்பு .மீதி சண்டையை போகிற வழியில் வைத்துக் கொள்ளலாம் .” வீரேந்தர் கட்டிலிலிருந்து எழுந்தான் .

வேகமாக அவன் கைகளை பிடித்தவள் ” எங்கே வீரா …? அந்த ஹாஸ்பிடலுக்கா …? அங்கே நான் பிறந்த வருடத்தில் ரேணுகாதேவி என்று ஒரு பெண்ணிற்கு பிரசவம் நடந்திருக்கிறது .தெரியுமா …? “

” அதனால் …? “

” அப்பாவிற்கு கடிதம் எழுதியது இந்த ரேணுகாதேவியாக ஏன் இருக்க கூடாது ….? ” நச்சென அவள் தலையில் கொட்டினான் .

” உன் பிரச்சனைதான் என்ன …? உலகத்தில் ரேணுகாதேவி என பெயர் வைத்திருப்பவளெல்லாருமே உன் அப்பாவிற்கு கடிதம் எழுதியவளாகவோ , உன்னை பெற்றவளாகவோ இருப்பாளா …? “

” சந்தேகமென்று வந்துவிட்டால் அதை தீர்த்து கொள்வதில் என்ன தவறிருக்கிறது …? ” என்ற போது சாத்விகாவின் குரல் இறங்கியிருந்த்து .இவன் சொல்வது சரிதானே …அங்கே அந்த ஹாஸ்பிடலில் அந்த வருடத்தில் பிரசவம் பார்த்தவர்களுள்  எத்தனையோ ரேணுகாதேவி இருக்கலாம் .ஒவ்வொரிவரிடமும் போய் நீ ….இந்த மாதிரி ….இவருக்கு கடிதம் எழுதினாயா ….? என்றோ , நீ பெண் குழந்தையை பெற்றாயா …? அதை என்ன செய்தாய் என்றோ கேட்க முடியுமா …?

” அது …முடியாதில்லையா …? வாயை மூடிக்கொண்டு கிளம்பு “

அவனது அதிகார தோரணை கடுப்பேற்ற ” நான் எங்கேயும் வரப்போவதில்லை ” சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டாள் .

” உன்னை ஒரு இடத்தில் நம்பி விட்டு போனால் நீ அங்கே உள்ளவர்களுக்கு இம்சை கொடுத்து கொண்டிருக்கிறாய்.இனி இங்கே இருக்கவெண்டாம் .வேறு இடம் உனக்கு பார்த்திருக்கிறேன் .கிளம்பு …”

” நான் யாரையும் தொல்லை செய்யவில்லை .எங்கும் வரமாட்டேன் …” கைகளையும் கட்டிக்கொண்டு அழுத்தமாக அமர்ந்து கொண்டாள் .

” மேஜர் வீட்டில் தங்கிக்கொண்டு நீ எங்கேயோ ரோட்டில விழுந்து கிடந்தாயானால் அதனால் அவருக்கு எவ்வளவு சங்கடம் ….? “

” ஏன் …என்ன சங்கடம் …? “

” இனி உன்னை விட்டு  விட்டு அவர்களால் எங்கேயாவது வெளியே கிளம்பமுடியுமா …? நீ எங்கே போய் என்ன செய்து வைப்பாயோ என்ற கவலையிலேயே  இருபத்திநான்கு மணிநேரமும் உன்னையே கண்காணித்தபடி வீட்டிலேயே அவர்களை முடங்க சொல்கிறாயா …? ” சீறினான் .

” அது …அப்படி ஒன்றும் தேவையில்லை .நான் இனி ஜாக்கிரதையாக இருந்துகொள்வேன் …நீங்கள் வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள் .என்னை பிரிய நிரஞ்சனாம்மா சம்மதிக்கமாட்டார்கள் “

” எனக்குத்தான் தலையெழுத்து .அவர்களுக்கென்ன …? ” என முனங்கினான் .

” என்ன சொன்னீர்கள் …? “

” உன்னை விட முடியாத தலையெழுத்து எனக்குத்தான் .அவர்கள் ஏன் அதில் மாட்டவேண்டுமென்றேன் …? அடுத்தவர் இடத்தில் வைத்துக்கொண்டு உன் காலை கட்டிப் போட முடியாது .நீ என் இடத்திற்கு வா .அங்கே உன்னை பார்த்துக் கொள்கறேன் ….” எச்சரிக்கையான கையாட்டல் ஒன்றுடன் அறையை விட்டு வெளியேறினான் .

” பாருங்கம்மா …என்னை ஒவ்வோர் இடமாக மாற்றிக் கொண்டேயிருக்கிறார் …” நிரஞ்சனாவிடம் புகார் அளித்தாள் .

” நீ போவது எனக்கு கஷ்டமாக இருந்தாலும் , வீரேந்தர் ஒரு முடிவெடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும்மா .அதனால் கவலைப்படாமல் போய் வா …” என நிரஞ்சனா கூறிவிட வேறு வழியின்றி கிளம்பினாள் .

உம்மென்று அருகே அமர்ந்திருந்தவளை கண்டுகொள்ளாமல் கார் ஓட்டிக்கொண்டிருந்தவனை பார்த்தால் சாத்விகாவிற்கு எரிச்சல் வந்த்து .எப்படித்தான் இப்படி எப்போது பார்த்தாலும் மூஞ்சை மூஞ்சூறு மாதிரி வைத்துக்கொள்ள முடிகிறதோ …?

” எங்கே போகிறோம் ….? ” மெல்ல கேட்டாள் .

” சொல்கிறேன் ….” அவன்  ஏதோ சிந்தனையிலேயே காரை  ஓட்டிக்கொண்டிருக்க விரும்பத்தகாத அந்த மௌன சூழ்நிலை எரிச்சலூட்ட காரின் ரேடியோவை ஆன் பண்ணினாள் சாத்விகா .

வீரேந்தர் பட்டென அதை ஆப் செய்தான் .” கையையும் , காலையும் வச்சிக்கிட்டு கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா ….? ” எரிந்து விழுந்தான் .




” கொலைக் கைதிக்கு கூட இதை விட அதிக சுதந்திரம் கொடுப்பார்கள் …” சாத்விகாவின் புலம்பலுக்கு அவனிடம் பதிலில்லை .

ஓரளவு பங்களா தோற்றம் காட்டிய அந்த வீட்டின் முன் காரை நிறுத்தியவன் ” இறங்கு ….” என்றபடி இறங்கினான் .

” இது யார் வீடு …? ” கண்களால் வீட்டை அளந்தபடி கேட்ட சாத்விகாவிற்கு ….

” என் வீடுதான் …” என பதிலளித்தபடி போய் காலிங்பெல்லை அழுத்தினான் .

ஓ…இவனது வீட்டிற்கு  என்னை அழைத்து வரத்தான் அவ்வளவு யோசனை செய்தானா ….? ஆனால் …ஏன் …? சாத்விகாவின் குழப்பத்திற்கு பதில் அந்த திறந்த கதவிற்கு பின் இருந்த்து ்

கதவை திறந்த அந்த பெண்மணி …வீரேந்தரின் அம்மாவாக இருக்ககூடும் .இவளை பார்த்ததும் முகம் சுளித்தாள் .

” இவளை ஏன் இங்கே அழைத்து வந்தாய் …? ” என்றாள் .அவள் முகம் முழுவதும் வெறுப்பு நிறைந்திருந்த்து .

What’s your Reaction?
+1
14
+1
12
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!