karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 25

    25

என்ன நடக்கிறது …ஏது நடக்கிறது

கணிக்கும் முன்

உன் கையில் ஆடும்

பொம்மை ஆக்கியிருந்தாய் என்னை …

 

 

 

சாத்விகாவின் கணிப்பு போன்றே ரேணுகாதேவி அங்கே பிரசவ வார்டில்தான் வேலை செய்து வந்திருந்தாள் . பிரசவ நேரத்தில் பிரசவிக்கும் பெண்ணுக்கும் , மருத்துவர்களுக்கும் உதவும் வேலை .அவள் பார்த்த பிரசவங்களின் விபரங்கள் சொல்ல முடியுமா ..எனக் கேட்ட சாத்விகாவை செத்த எலியை பார்த்தது போல் பார்த்து வைத்தான் அந்த ஆஸ்பத்திரி  க்ளார்க் .ரேணுகா இருபது வயதில் இந்த ஆஸ்பத்திரி வேலைக்கு வந்துவிட்டாள் .மூன்று மாதங்களுக்கு முன்பு வரை …முப்பது வருடமாக இங்கேதான் வேலை பார்த்திருக்கிறாள் .எத்தனையோ ஆயிரம் பிரசவங்களை பார்த்திருப்பாள் .அதையெல்லாம் எப்படி லிஸ்ட் போட முடியுமென்றான் …? முட்டாளே என அவன் பார்த்த பார்வையில் நொந்து வேகமாக அங்கிருந்து வெளியேறி விட்டாள் சாத்விகா .

வீரேந்தர் வேறு ” இது தேவையா உனக்கு …? ” என கடுப்பேற்றினான் .

” இது போன்ற இடிபாடுகளுக்கிடையேயே கூட்டி வந்து உயிரை வாங்கி விட்டு …இப்போது என்ன வாய் உங்களுக்கு …? ஒரு இடமாவது உருப்படியான இடத்திற்கு கூட்டிப் போயிருக்கிறீர்களா ..? ” தெருவில் வழிந்தோடும் சாக்கடையை மிதிக்காமல் நடப்பதற்காக பிரம்ம பிரயத்தனம் செய்து கொண்டு அவனிடம் எரிந்து விழுந்தாள் .

” இந்த இடமெல்லாம் நானாக கூட்டி வந்த இடங்களா …? எல்லாம் உன் தலையில் நீயாக அள்ளி போட்டுக்கொண்ட மண் .என்னை குற்றம் சொல்கிறாயா …? ” கோபமாக கேட்டான் .

” சந்தும் …பொந்துமாக ஒரு இடத்தில் தங்க வைத்திருக்கிறீர்களே .அது கூட நானாக தங்கிய இடம்தானோ …? “

” அது …அங்கே என்ன குறை சாத்விகா .?அன்புள்ளங்கள் வசிக்கும் இடம் அது .அங்கே உனக்கு உணவிலோ , பாதுகாப்பிலோ , அக்கறையிலோ ஏதாவது தவறோ …குறையோ இருந்த்தா …? “

சுகிர்தாவின் தாயன்பு நினைவு வர ” அப்படி ஒன்றும் இல்லை …” சாத்விகாவின் இதழ்கள் தாமாகவே முணுமுணுத்தன.

” உனக்கு தொல்லைகள் வரும் ஒரு இடத்தில் உன்னை நான் விடுவேனா சாத்விகா …? “

” எனக்கு இது போன்ற கூட்டமான இடங்களில் தங்கி பழக்கமில்லை .கசகசவென்று ஒரு மாதிரி ….”

” அப்போது இன்று இரவு சென்னை ப்ளைட்டுக்கு புக் செய்து விடவா …? “

” எதற்கு …? ” முறைத்தாள் .

” இது போன்ற சூழ்நிலைகள் உனக்கு பழக்கமில்லையே பேபி .இந்த இடங்களில் வாழ்வென்பது உனக்கு கடினமில்லையா …? வசதியானதொரு வளமை வாழ்வு சென்னையில் இருக்கும் போது …நீ ஏன் இங்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க போகிறாய் …? “

” இந்த எண்ணம் எனக்கு வர வேண்டுமென்றுதான் அந்த நெரிசல் கூட்டத்தில் என்னை தங்க வைத்தீர்களா …? “




சாத்விகாவின் கேள்விக்கு பதிலின்றி புன்னகைத்தவன் ” நீ ரொம்ப சூட்டிகை பேபி ” என்றான் .

” உங்கள் பாராட்டு எனக்கு தேவையில்லை .இது போன்ற சின்ன சின்ன இடர்களினால் என் வாழ்வின் ஆதாரத்தை கண்டறியும் முயற்சியை நிறுத்தி ஙிடுவேனென நீங்கள் நினைத்திருந்தீர்களானால் நீங்கள் ஒரு முட்டாள் …”

” ம் ….அடுத்தடுத்து காத்திருக்கும் என் வேலைகளை ஒதுக்கிவிட்டு உனக்கு ஜீப் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் பார் .நான் முட்டாள்தான் “

வீரேந்தரின் கசந்த பேச்சை கண்டுகொள்ளாமல் ” உங்கள் ஐந்தம்ச கொள்கை திட்டங்களையெல்லாம் என் மேல் பரிசோதித்து பார்ப்பதை இனி நிறுத்திவிடுங்கள் வீரா .இது போன்ற சிறு இடறல்கள் 
என் குறக்கோளை தடை செய்யாது .அதனால் கொஞ்சம் உருப்படியாக யோசிக்க ஆரம்பியுங்கள் .முதலில் எனக்கு தங்குவதற்கு வேறு நல்ல இடம் பாருங்கள் ” உத்தரவாக கூறினாள் .

” என்ன அதிகாரம் …? அப்படி பார்க்க முடியாது என்றுவிட்டால் ….? “

” சிம்பிள் .உங்களுடனேயே தங்க உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவேன் …” சொல்லிவிட்டு அவன் விழிகளை ஊடுறவ முயன்றாள் .

சாலையை கவனித்தாற் போல் வைத்திருந்த அவன் கற்பாறை முகத்தில் எந்த உணர்ச்சியுமில்லை .ஆனால் அவளது சொல்லுக்கு மறுப்பு அங்கே நிச்சயம் தெரிந்த்து .

” உங்கள் வீட்டில் யார் …யார் இருக்கிறார்கள் வீரா …? ” படபடத்த இதயத்தை அடக்கியபடி மெல்ல கேட்டாள் .

” எனக்கு இன்னமும் திருமணமாகவில்லை ….” இப்போதும் அவன் முகத்தில் உணர்ச்சிகளில்லை .

” அப்போது உங்கள் அம்மா , அப்பாவிடம் என்னை அறிமுகப்படுத்துவதில்  என்ன தயக்கம் …? ” சாத்விகாவின் கேள்வி துள்ளலுடன் உற்சாகமாக வந்து விழுந்த்து .

” இல்லை .அது சரி வராது …? “

” ஏன் ….? “

” என்ன ஏன் …? திருமணமாகாத தன் மகன் திடீரென ஒரு அழகிய பெண்ணை அழைத்து வந்து வீட்டில் தங்க வைப்பதை எந்த பெற்றோர் விரும்புவார்கள் …? என் அம்மா என்னை கேள்வகளாலேயே குத்தி கிழித்து விடுவார்கள் “

கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது தானேடா …உதடுக்குள் முணுமுணுத்தவள் , அவன் இவள் புறம் தலையை சரித்து ” என்ன …?” என கவனித்து கேட்க …

” ரொம்ப நன்றின்னு சொன்னேன் …” எரிச்சலாக சொன்னாள் .

” அது எதற்கு …? “

” ம் …ஒரு வழியாக என்னை அழகிய பெண்ணென்று ஒத்துக்கொண்டதற்கு ….”

” அழகான பெண்ணா …? அது யார் இங்கே …? ” ஜீப்பை ஸ்லோ செய்து ஓடவிட்டபடி அங்குமிங்குமாக திரும்பி வீரேந்தர் தேட ஆரம்பித்த போது இறுக்கம் போய் அவன் முகம் மலர்ந்திருந்த்து .

” அதோ …அங்கே …” என சாத்விகா கையை நீட்டிய திசையில் தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக தண்ணீர் குடம் சுமந்த  ஒரு வயதான பெண் தோல்களெல்லாம் சுருக்கங்கள் விழுந்து துவண்டிருந்தவள் தளர்ந்த நடையுடன் சென்று கொண்டிருந்தாள் .

” ஆஹா …என்ன அழகு …என்ன பளபளப்பு ….!!!” மெதுவாக ஜீப்பை நிறுத்தி இறங்கியவன் ” ஆசீர்வதியுங்கள் அம்மா ” என அந்த பெண்ணின் காலை தொட்டு  ஆசீர்வாதத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் ஜீப்பை எடுத்தான் .

” பளபளப்பா …? ” சாத்விகா முறைத்தாள் .

” நான் அவர்கள் கண்களின் ஒளியை சொன்னேன் பேபி .இந்த வயதான காலத்திலும் எவ்வளவு தன்னம்பிக்கையை சிமந்து கொண்டிருக்கின்றன அந்த விழிகள் .பார்த்தாயா …?! “

” ஆமாம் …” ஒத்துக்கொண்டவள் .ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவன் கைகளின் அருகே தனது கைகளை இணையாக வைத்து பார்த்தாள் .பிறகு சுளீரென்று அவன் கைகளில் அறைந்தாள் .

” ஷ் …ஆ …ஏய் லூசாடி நீ …? இப்போது எதற்கு அடித்தாய் …? “

” எவ்வளவு நிறம் …? அரைத்த சந்தனம் போல் இந்த நிறம் எங்கிருந்து வந்த்து உங்களுக்கு ..? அதுவும் காட்டிலும் , மேட்டிலும் துப்பாக்கி தூக்கிக் கொண்டு திரிந்த போதும் …”

” என் அம்மாவிடமிருந்து வந்திருக்கும் …” வந்த சிரிப்பை அடக்கியபடி சொன்னான் .

” ஓ …அப்போது இந்த கறுப்பு நிறம் எனக்கு என் அம்மாவிடமிருந்து வந்திருக்குமோ …? ‘”

வீரேந்தர் மௌனமானான் .

” அப்படித்தான் இருக்கவேண்டும் .ஏனென்றால் என் வீட்டில் பாட்டியிலிருந்து , கார்த்திக் வரை எல்லோரும் நல்ல நிறம் .இதோ உங்களை போல் .நான் மட்டும்தான் இப்படி கறுப்பாக …அசிங்கமாக .இது என்னை பெற்ற அம்மாவிடமிருந்துதான் எனக்கு வந்திருக்கவேண்டும் …”

” உஷ் என்ன பேபி இது ..? முட்டாள்தனம் .நீ அழகில்லையென்று யார் சொன்னது ..? குருடன் கூட உன்னை தொட்டு பார்த்தே சொல்லிவிடுவான் .நீ பேரழகியென்று …” வீரேந்தர் ஜீப்பை நிறுத்திவிட்டு சாத்விகாவை சமாதானப்படுத்தினான் .

” ஆமாம் …குருடன்தானே .சொல்லுவான் .அவனுக்கு வேறு வழியில்லை பாருங்கள் …”




” ஹேய் …ஒரு பேச்சுக்கு சொன்னால் …இதோ இப்போது நான் சொல்கிறேன் .நீ அந்த செதுக்கி வைத்த சிற்பம் போல்  மிக அழகு பேபி .கற்பூரத்தில் செய்து வைத்த பொம்மை போல் வாசமாக , அழகாக இருக்கிறாய் …”

முகத்துக்கு முன்னான இந்த பாராட்டில் சாத்விகாவின் கன்னங்கள் வெட்கம் வாங்கி சிவந்து கனிந்த்து .” ம் ….போதும் .அழுகிறேனென சமாதானப்படுத்தவென்று எதையாவது சொல்லவேண்டாம் .நான்கு மாதம் எங்கள் வீட்டில் வேலை பார்த்தீர்கள் .ஒரு நாளாவது என்னை திரும்பியாவது பார்த்திருப்பீர்களா …? ” சிணுங்கினாள்.

” நான் பார்க்கவில்லையென்று உனக்கு தெரியுமா …? அப்போது எனக்கு நானே போட்டுக்கொண்ட ஒரு கட்டிப்பாட்டு வட்டத்தில் இருந்தே ன் .அத்தோடு நீ அறிகிற மாதிரியா உன்னை பார்ப்பேன் ….? ” ஒற்றைவிரலால் அவள் தாடையை பற்றி நிமிர்த்தி அவள் கண்களுக்குள் பார்த்தான் .

அப்படியா …என்ற அவளின் விழிக்கேள்விக்கு ஆமாம் என இமையசைத்தான் .சுர்ரென திடீரென உடலுக்குள் பாய ஆரம்பித்துவிட்ட மின்சார அளவு அதிகரித்தபடி செல்ல , அதை கட்டுப்படுத்தும் வகையறியாது ” என்ன பொம்மையென்றீர்கள்….? ” என்றாள் .

” கற்பூர பொம்மை .கற்பூரம் மிக மென்மையான பொருள் பேபி .அதில் பொம்மை செய்வது எவ்வளவு கடினம் தெரியுமா …? மிகுந்த கவனத்துடன் ஒவ்வொரு செதுக்கலையும் , நுண்மையாக மிக கவனமாக செய்யவேண்டும் கற்பூரபொம்மையை .ஆனால் அப்படி செய்து முடித்துவிட்டால் மென்மையும் , வாசமும் கலந்து மிக அற்புதமாக அமைந்துவிடுமல்லவா …? அது போல் பார்த்து , பார்த்து பக்குவமாக செய்த பொம்மை நீ ….”

அவனது விளக்கத்தில் விழி விரித்தவள் ” அற்புதம் …” என்றாள் .

” ஆமாம் …நீ ..”

” இல்லை .உங்கள் விளக்கம் .”

” ம் ….அற்புதங்களின் விளக்கங்கள் அற்புதமாகத்தானே இருக்கும் ….” நிறுத்தியிருந்த ஜீப்பை மீண்டும் ஓட்ட ஆரம்பித்தான் .

” அட …உங்களுக்கு லேசாக கவிதை கூட வருகிறதே வீரா …”

” அழகான பெண்ணை பார்த்தால் கவிதை தானாக வந்துவிடுகிறது ….”

” ஐயா …சாமி நான் தெரியாமல் கேட்டுவிட்டேன் .நான் அழகா …என சந்தேகப்பட்டுவிட்டேன் .அதற்காக நீங்கள் வார்த்தைக்கு வார்த்தை என்னை அழகென்று சொல்லி உங்களை கஷ்டப்படுத்திக் கொள்ளவேண்டாம் ” சாத்விகா  பவ்யம் போல் கையெடுத்து கும்பிட வீரேந்தர் சிரித்தான் .

பளீரிடும் அவன் பல்வரிசையை பார்த்தபடி ” கற்பூரத்திற்கு இன்னுமொரு குணமுண்டு வீரா .அது பற்ற எரிவதற்காகவே படைக்கப்பட்ட பொருள் தெரியுமா …? என்றாள் .




” ஆமாம் ….அது தான் மட்டும் எரியாது . பக்கத்தில் இருக்கும் பொருளையும் சேர்த்துக் கொண்டுதான் எரியும் .அப்படித்தான் நீ என்னையும் உன்னோடு சேர்த்து எரித்து கொண்டிருக்கிறாய் .” அலட்டலில்லாத அவன் பதிலில் எரிச்சலாக அவனை பார்த்தாள் .

” இங்கே ஒருவரை பார்க்கவேண்டும் .அழுது முடித்துவிட்டாயானால் மூக்கை சீந்தி போட்டுவிட்டு இறங்கு ….” ஜீப்பிலிருந்து இறங்கி ் அந்த வீட்டின் காலிங்பெல்லை அடித்துக்கொண்டிருந்தவனை முறைத்தபவள் , சந்தேகமாக தனது மூக்கை தொட்டு பார்த்துக் கொண்டாள் .சொந்த வேண்டிய அவசியமில்லை என உறுதியானதும் கீழே இறங்கினாள் .

காலிங்பெல்லிற்கு கதவை திறந்த அந்த நடுத்தரவயது பெண் கொஞ்சம் மங்கிய நிறமாக இருந்தாலும் திருத்தமாக அழகாக இருந்தாள் . அவள் நிச்சயம் ஒரு தமிழ்பெண் .

What’s your Reaction?
+1
18
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!