karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 24

   24

வாஞ்சையாய் நீ என் மீதெறிந்த கருணை களையவே 
இரக்கமற்றதான உனதோர் இறுகிய அணைப்பு தேவைப்படுகிறது

அந்த மொட்டை பாறையில் அமர்ந்து தூரத்து கோதுமை வயல்களை வெறித்து கொண்டிருந்தாள் சாத்விகா .கொஞ்சம் உயரமான இடமென்பதால் அந்த இடத்தில் குளிர் அதிகமாக தெரிந்த்து .” விஷ் ” லேசான சத்தத்துடன் குளிர்காற்று அவளை சுற்றி சுழன்று கொண்டிருந்த்து .உறைந்து கொண்டிருந்தன அவள் மனநினைவுகள் .

” போகலாமா சாத்விகா …? ” அவளருகே அமர்ந்திருந்த வீரேந்தர் கேட்டான் .

” நாம் ஏன் பாகிஸ்தான் போக்க்கூடாது ….? ” அவள் பார்வை இப்போது அடிவானத்தில் இருந்த்து .

” என்ன …? பைத்தியமா உனக்கு …? இப்போது அங்கே ஏன் போக வேண்டுமென்கிறாய் …? “

” அந்த ரேணுகாதேவியை பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ளலாமே …”

” அவர்கள் விபரங்கள் உனக்கு எதற்கு …? “

” அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்றாவது எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும் …”

” அசட்டுத்தனத்திற்கும் ஒரு அளவு வேண்டும் சாத்வகா .அந்த ரேணுகாதேவிக்கு இப்போது  அறுபது வயது .நிச்சயம் அவர்கள் உன் அம்மாவாக இருக்க வாய்ப்பல்லை.பிறகு ஏன் அவர்களை சந்திக்க வேண்டுமென்கறாய் …முதலில் எழுந்து வா .போய்கொண்டே பேசலாம் “

” ஏனென்றால் அவர்கள் லெட்டரை என் அப்பா லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்தார் .”நடந்தபடி சொன்னாள் .

” அந்த லெட்டரில் உன் அப்பாவின் நலம் விசாரிப்பும் , தனது நல விபரமும் மட்டுமே இருந்த்து .




” அவர்கள் என் அம்மா இல்லை .ஆனால் என் அம்மா பற்றிய தகவல் எதுவும் அவர்களிடம் இருக்கலாமல்லவா …? “

” சாத்விகா உன் தந்தை முன்பு இங்கே டெபுடி கமிஷனராக கொஞ்ச காலம் வேலை பார்த்திருந்திருக்கிறார் .இந்த ஏரியாவில் சாதி பிரச்சினைகள் அதிகம் .தாழ்ந்த சாதியினரை ஆதிக்க சாதியினர் மிகவும் கொடுமைப்படுத்துவார்கள் .பண்ணையார்கள் , நிலச்சுவான்தார்கள் போன்ற பந்தாக்களுடன் பணத்தால் பேசும் அராஜகங்கள் இங்கே நிறைய உண்டு .தீண்டாமை என்பது இன்னமும் இந்த பக்கங்களில் முழுவதுமாக போகவில்லை .அந்த ரேணுகாதேவி இந்த பகுதியில் தாழ்த்தப்பட்ட குலமென இகழப்படும் சாதியை சேர்ந்தவர்கள் . உன் அப்பா இங்கே பதவியில் இருந்த போது இந்த கொடுமைகளை எதிர்த்து செயல்பட்டதாக அறிந்தேன் .அப்படி இந்த ரேணுகாதேவிக்கு அவர் ஏதாவது உதவியிருக்கலாம் .அதனை மறக்காது அந்த ரேணுகாதேவி உன் அப்பாவிற்கு எழுதிய நன்றி கடிதமாக அந்த கடிதம் இருக்கலாமில்லையா …? “

”  எல்லாமே இருந்திருக்கலாம் ….நடந்திருக்கலாம்தானே ….உறுதியெதுவுமில்லையே ….”

” உஷ் ..அப்பா …உன்னோடு முடியலை .எதையும் இப்படித்தான் சந்தேக கண் கொண்டு பார்ப்பாயா …? “

” என்னையே நான் நம்ப முடியாத நிலையிலிருக்கிறேன் .இதில் இருபத்தியிரண்டு வருடம் வளர்த்தவரை எப்படி நம்புவதாம் …? “

” உனக்கெல்லாம் சாத்விகா என்ற பெயரை யார்தான் வைத்தனரோ …? அமைதியான சாத்வீகமான பெண்ணற்கு வைக்க வேண்டிய பெயர் .உன்னை போல் ரணபத்ரகாளிக்கு இந்த பெயரையா வைப்பார்கள் …? “

” என்ன …பத்ரகாளியா …நானா ….அதுவும் ரணபத்ரகாளியா …உங்களை ….” அவனை அடிக்க தோதாய் தனது த்ரீ போர்த் சுடிதார் கையை சுருட்டியபடி கையை உயர்த்தியவள் …திடீரென நிறுத்தி ….

” உண்மையிலேயே எனக்கு இந்த பெயரை யார் வைத்திருப்பார்கள் வீரா ….? என் இந்த அம்மா  ….அப்பாவா …? இல்லை …என்னை பெற்றவர்களா …? பெற்றுவிட்டு பெயர் வைத்தார்களா …? இல்லை பிறந்த்துமே என்னை தூக்கி எறிந்துவிட்டார்களா …? ஒரு வேளை சாரதா அத்தை சொல்வது போல் என் அம்மாவிற்கு தவறான வழியில் பிறந்தேனா …? அப்பா என்னை குப்பைத்தொட்டியிலிருந்து பொறுக்கி எடுத்து வந்தாரா …? “

அழுகை ஆரம்பித்துவிட்ட சாத்விகாவின் முகத்தை பார்த்த வீரேந்தர் ” போச்சு …ஆரம்பித்துவிட்டாயா …? அம்மா …தாயே …பரதேவதை நான் வாபஸ் .நீ காளி இல்லை .தேவதை அம்சம் .போதுமா …? இப்போது என்ன செய்ய வேண்டும் .அதை மட்டும் சொல்லு .முதலில் கண்ணீரை துடை .அழும்போது ரொம்ப சுமாராக இருக்கிறாய் …” கிண்டல் போல் அவள் கலக்கத்தை போக்க முயன்றான் .

” எனக்கு அந்த ரேணுகாதேவியை சந்திக்க வேண்டும் .பாகிஸ்தான் போயேனும் ….”

” பாகிஸ்தான் பெண்ணாக நான் இருப்பேனோ….என அன்று கலங்கினாய் .இன்று அங்கேயே போகவேண்டுமொன்கிறாயே…? ” என்றவனை முறைத்தாள் .

” நான் அந்த நாட்டில் குடியுரிமை வாங்கி கொடுங்கள் என்றா கேட்டேன் …? சும்மா போய் பார்த்து விட்டு ….இருங்கள் …கொஞ்ச நேரம் முன்பு என்ன சொன்னீர்கள் ? அழும்போது …எப்படி இருக்கிறேன் ….? “

” கடவுளே ..எப்போது சொன்னதற்கு எப்போது கேட்கிறாய் …? டியூப்லைட் கூட இப்போதெல்லாம் உடனடியாக ப்ளிச்சென்று எரிகிறது பேபி …பாகிஸ்தான் போகாமலேயே இந்த பிரச்சினையை சமாளிக்க முடியாதா ….? “

” அதெப்படி முடியும் ….? ரேணுகாதேவியின் விபரங்களை அவரேதானே சொல்லமுடியும் …? அப்படி ரொம்பவே சுமாராகவா இருக்கிறேன் …? ” மடித்திருந்த ஜீப்பின் சன்ஷேடோ கண்ணாடியை இறக்கி தன் முகத்தை ஆராய்ந்தபடி கேட்டாள் .




” ரொம்ப இல்லை கொஞ்சம்தான் .இந்தியாவிற்கும் , பாகிஸ்தானுக்கும் நீறு பூத்த நெருப்பு போல் சண்டை உள்ளுக்குள்ளேயே கன்ன்று கொண்டிருக்கிற இந்த இக்கட்டான நேரத்தில் நீ தைரியமாக அங்கே போக வேண்டுமென்கறாயே .இவ்வளவு தைரியத்தை பார்த்து பெருமைப்படும் பொழுதே …அழகை ஆராய்ந்து சராசரி பெண்ணாகிறாயே …? ” குறைபட்டான் .

” தைரியமான பெண்கள் தங்களை அழகு படுத்திக்கொள்ள கூடாது என்று உங்களிடம் யார் சொன்னார்கள் …? அழகுக்கும் , அலங்காரத்திற்கும் ஆசைபடுபவர்களெல்லாம் சராசரி பெண்ணென்று எப்படி சொல்லலாம் …? ் அழகாக இருக்க வேண்டுமென நினைக்காத ஆற்றிவு உயிர் யார் இருக்கிறார்கள் …? “

” ஹையோ பேபி …உன்னோடு பேசி என்னால் மீள முடியாது …? நீ என்னையே உன் அம்மாவை தேடி அலைய  வைத்துக்கொண்டிருக்கிறாய் .இதிலேயே உனது வீரியத்தை நான் அறிந்து கொண்டிருக்க வேண்டும் .கொஞ்சம் குறைவாக நினைத்தது தப்புதான் .மீண்டும் வெற்றிகரமாக வாபஸ் ….”

” ம் …அப்படி இறங்கி வாங்க …” என்றவள் …” அதென்ன என்னையே …அந்த ” யே ..” எதற்கு …? “

” போச்சுடா …சும்மா வாய் தவறி வந்த்தையெல்லாம் பிடித்து கொண்டு தொங்குவாயா …? இங்கே இந்த ஊரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் அந்த ரேணுகாதேவி ஆயாவாக வேலை பார்த்திருக்கிறார் .அங்கே போய் விசாரிக்கலாமென்றால் …நீ  எதையெதையோ பேசி என் மூளையை செயல்பட விட மறுக்கிறாய் …”

” ஓ….சாரி .சாரி ..வாங்க ..்போகலாம் .இந்த வகையில் நான் யோசிக்கவேயில்லையே .ரேணுகாதேவி வேலை பார்த்த இடத்தில் நமக்கு அதிக தகவல் கிடைக்கும்தானே …”

” ஆமாம் ….ஆபத்தான பாகிஸ்தான பயணத்தை விட இந்த உள்ளூர் மருத்துவனை விசாரிப்பு எளிது பாரேன் ….” கிண்டலித்தவனை கவனிக்காது …

” ஏன் வீரா ,ஒரு வேளை நான் இந்த ஆஸ்பத்திரியில்தான் பிறந்திருப்பேனோ …? ” என்றாள் .

மௌனமாக ஜீப்  ஓட்டியவனின் தோள்களை தொட்டு உலுக்கினாள் .” அப்படியிருக்கலாமோ …? சொல்லுங்களேன் …”

” என்னத்தை சொல்ல சொல்கிறாய் …? பழைய தமிழ் படங்கள் நிறைய பார்ப்பாயா …? ஏதோ ஒரு கிராமத்தில் ஏதோ ஒரு ஆஸ்பத்திரியில் …தெரியாத ஒரு பெண் ஆயாவாக இருந்த்தினாலேயே அங்கேதான் நீ பிறந்திருப்பாயா …? முட்டாள் ….”

வீரேந்தரின் இவ்வளவு வசவுகளையும் கேட்டுக்கொண்டு வாய் மூடி இருக்கும் ரகமில்லை சாத்விகா .உடனேயே பதிலுக்கு பதில் பேசிவிடும் உத்தேசத்தில் வாயை திறந்தவள் …இல்லை வேண்டாம் அந்த ஆஸ்பத்திரியில் எனக்கு நிறைய விபரங்கள் தெரியவேண்டும் .இவனில்லாமல் அந்த விபரங்பள் எனக்கு கிடைப்பது அரிது .ஏதாவது சொல்லப்போய் கோபித்து கொண்டு ஜீப்பை திருப்பிக்கொண்டு போய்விட்டானானால் …படபடவென பொறிய துடித்த நாவை பல்லை கடித்து அடக்கிக்கொண்டு …எதற்கும் இருக்கட்டுமென இதழ்கள் மீது ஒற்றைவிரலை வேறு வைத்து அழுத்திக்கொண்டாள் .

அவளது அந்த நிலை தந்த சிரிப்பை மறைத்தபடி ஜீப்பை நிறுத்திவிட்டு ” வா …” என அவன் ஒரு குறுகலான சந்துக்குள் நுழைந்து நடக்க ஆரம்பிக்க .. இது போன்ற இடுக்கான இடங்களுக்குள்ளெல்லாம் எப்படித்தான் மக்கள் வசிக்கிறார்களோ …நொந்தபடி அவனை பின்தொடர்ந்தாள் சாத்விகா .

அவ்வளவு சிரம்ப்பட்டு போனதற்கான பலன் சாத்விகாவிற்கு அங்கு கிடைக்கவில்லை .

What’s your Reaction?
+1
8
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!