karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 12

12

துல்லியமாய் உனை கணித்த 
திகட்டல் பொழுதொன்றின் கணத்தில் ,
இறகு விரித்து மேலேறுகிறது 
வனப்பறவை ஒன்று .

அப்பா சொன்ன வேலைக்காக என்பதெல்லாம் சும்மா வீரேந்தர் அங்கு வந்த காரணம் வேறு என வெகுவாக தோன்ற ஆரம்பிக்க …ஒரு வேளை அன்று நான் சொன்ன அந்த பொய்யை நம்பி என் பின்னால் தொடருபவனை பார்க்க வந்தானோ … ? இல்லையில்லை  ….வீரேந்தர் என்னை பார்க்கத்தான் வந்தான் …இப்போது இதுதான் உண்மை போல சாத்விகாவிற்கு தோன்றியது .

இதனை நாளை காலை அவனது ஜாக்கிங்கின் போது அவனிடம் கேட்டு சீண்ட வேண்டும் …என்ற முடிவெடுத்த பின் அழகான புன்னகை ஒன்று அவள் இதழின் மேல் அமர்ந்து கொள்ள இனிய உறக்கத்திற்கு போனாள் சாத்விகா .

தட்டி விட்டாற் போல் அதிகாலை விழிப்பு வந்துவிட , வேகமாக எழுந்து சன்னல் வழியே பார்த்தபோது வீரேந்தரை காணவில்லை .பிறகும் குளித்து முடித்து , சாப்பிட்டு அவன் கண்ணிலேயே படவில்லை .எங்கே போய் தொலைந்தான் …எரிச்சலுடன் நினைத்தவள் ….வாசலுக்கு வந்தாள் .

அங்கே சௌந்தர் சண்முகபாண்டியனின் காரை துடைத்துக் கொண்டிருந்தான் .இவனெங்கே வந்தான் ….?

” சௌந்தர் நீங்கள் எப்போது வந்தீர்கள் …? “

” நான் இன்று காலையில்தாம்மா திரும்பவும்  ட்யூட்டியில் ஜாயின்ட் பண்ணினேன் ….”

” ஓ…அப்போது வீரேந்தர் எங்கே ….? கண்களை அலைய விட …

” அவர் வேலை முடிந்த்து .அவர் கிளம்பி போய்விட்டார் பாப்பா …” சொன்னது கார்த்திக் .

அவன் ட்யூட்டிக்கு கிளம்ப யூனிபார்ம்முடன் வெளியே வந்து கொண்டிருந்தான் .

” என்ன …என்னண்ணா சொல்கிறீர்கள் …? எங்கே போய்விட்டார் …? “

” அவர் ஊர் டில்லி .அங்கே போய்விட்டார் ….”

” என்ன ….? “

” இதில் இவ்வளவு அதிர்ச்சியடைய என்ன இருக்கிறது பாப்பா .அவர் நம் அப்பாவின் பாதுகாப்பிற்காக மூன்று மாத ஒப்பந்த்த்தில் வந்தார் .இப்போது கூடுதலாக ஒரு மாதம்தான் நம் வீட்டில் தங்கியிருந்திருக்கிறார் .மிக மிக பத்திரமாக அப்பாவை பாதுகாத்து , இனி அவருக்கு ஆபத்தில்லை என தெளிவான பின்பு நம்மிடம் ஒப்படைத்து விட்டு போய்விட்டார் ….”




” ஒரு வார்த்தை சொல்லவில்லையே …? ” சாத்விகாவின் குரல் நடுங்கியது .

” யாரிடம் …? உன்னிடமா …? ” கார்த்திக் அவளை கூர்ந்தான் .

அவனுக்கு பதில் சொல்லாமல் ஒரு மாதிரி விட்டு போன  மனதுடன் மாடியேறி போனாள் சாத்விகா .

எப்படி அவன் என்னிடம் சொல்லாமல் போகலாம் …தனக்குள் பொருமினாள் .இல்லை அவன் சொன்னான் …அதற்காகத்தான் நேற்று என்னை பார்க்க காலேஜ் வரை வந்தான் .உன்னை பற்றிய கவலையின்றி நான் போகலாமென்றானே …பற்கள் பளீரிட அப்படி சிரித்தானே …தனது கடமை முடிந்த திருப்தியில் வந்த சிரிப்பாக அது இருக்கவேண்டும் .கதவருகே நின்று பை சொன்னானே ….அவனது அந்த தோற்றம் இப்போதும் கண்ணுக்குள் வந்து நிற்க …சாத்விகாவிற்கு இப்போது கோபம் வந்த்து .

என்னிடம் சொல்லிக் கொள்ள வந்தவன் நேரடியாக சொல்லிவிட்டு போக வேண்டியதுதானே. அதென்ன மறைமுகமான ஒரு விடை பெறல் …இதனை உடனடியாக அவனிடமே கேட்கும் எண்ணம்  பிறக்க …கடகடவென படியிறங்கியவள் , வெளியேறிக் கொண்டிருந்த தந்தையிடம் ….

” அப்பா எனக்கு வீரேந்தர் நம்பர் வேண்டும் ” என்றாள் .

” எதற்குடா பேபி …? “

” அந்த ஆளோடு எனக்கு ஒரு முடிக்கப்படாத கணக்கு இருக்கிறது .அதை என்னவென்று கேட்க வேண்டும் ….”

” என்ன விசயம்டா பேபி …? ” சண்முகபாண்டியனின் பார்வை அவளை துளைத்தது .

” அதனை பிறகு சொல்கிறேன் .நீங்கள் நம்பர் கொடுங்கள் ….”

ஆராய்ச்சி பார்வையுடன் தனது போனை எடுத்து நம்பரை அழுத்தி அவளிடம் நீட்டினார் .” பேசு “

போன் இந்த நம்பரை நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது என்றது .திரும்பவும் முயற்சித்தாள் .மீண்டும் …மீண்டும் அதே ரிக்கார்ட் வாய்ஸ் .சலிக்காமல் ஐந்தாவது முறை நம்பரை அழுத்தியவளின் தோளை வருடினார் சண்முகபாண்டியன் .

” விட்டு விடு பேபி .அவர் நம்பர் மாற்றியிருக்கலாம் ….”

” ஏன் …எதற்காக நம்பரை மாற்ற வேண்டும் …? “

” நமது வேலைக்காக இங்கே வருவதற்காக அவர் இந்த நம்பரை கொண்டு வந்திருக்கலாம் .வேலை முடியவும் வேறு நம்பர் மாற்றியிருக்கலாம் .அவரது வேலையில் இதெல்லாம் சாதாரணம் தானேடா….”

” அடிக்கடி நம்பர் மாற்ற அவரென்ன கிரிமினலா …? ” வெடித்தாள் .

” கிரிமினல்கள் மட்டுமல்ல  பேபி .அவர்களோடு  பழகும் நிர்பந்த்த்தில் இருப்பவர்களும் இப்படித்தான் செய்ய வேண்டயதிருக்கும் ….”

” சை …என்னமோ பண்ணுங்கள் …” போனை அப்பாவிடம் எறிந்து விட்டு மாடியேறினாள் .

” ஹேய் சாத்வி நீ இன்று காலேஜ் போகலையா …? ” அப்போது உள்ளே வந்த சுகுமார் ஆச்சரியம் காட்ட …

” உன் வேலையை பார்த்துக் கொண்டு போ …” அவனிடம் கத்திவிட்டு மாடியேறினாள் .

” மாமா அடிக்கடி இப்படி ஏக வசனத்தில் பேசுகிறாள் .அம்மா என்னைத்தான் திட்டுகிறார்கள் .இதை கொஞ்சம் மாற்றிக் கொள்ள சொல்லுங்கள் ….” சுகுமாரின் முகம் கோபமாக இருந்த்து .

” விடு சுகுமார் சரியாகிவிடுவாள் . ஆமாம் ஏதோ புது மாடல் கார் வேண்டுமென்று கேட்டாயாமே …இன்று மாலை போய் மாடல் பார்க்கலாமா …? ” அவன் தோள்களில் கை போட்டபடி வெளியே நடந்தார் .

_———————

” அடுத்த வாரம் உங்கள் நிச்சயதார்தத்தை வைத்துக் கொள்ளலாமா பேபி …” தட்டிலிருந்த்தை யோசனையுடன் கிண்டிக் கொண்டிருந்த சாத்விகாவை பார்த்து கேட்டார் சண்முகபாண்டியன் .

நிமிர்ந்து அப்பாவை பார்த்து விட்டு தட்டில் குனிந்து கொண்டாள் .

” பாப்பா அப்பா உன்னுடம்தான் கேட்கிறார் ….” சௌந்தர்யா அழுத்தி சொல்ல …

” எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க அப்பா .நான் யோசிக்க வேண்டும் …”

” மூன்று வருடமாக இந்த கல்யாணம் பற்றி பேசி வருகிறோம் .உனக்கு யோசிக்க என்ன இருக்கிறது …? ” ரங்கநாயகி முறைத்தாள் .

” தப்பு பாப்பா .உங்கள் திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே நம் வீட்டாரால் வாய் வார்த்தையாக நிச்சயிக்கப்பட்ட ஒன்று .அதனை ஊர் முன் நிச்சயப்படுத்துவதில் தாமதம் எதற்கு …? நீங்கள் நாம் பேசிய தேதியிலேயே நிச்சய ஏறபாடுகளை செய்யுங்கள் அப்பா ….”

தனக்காக முடிவெடுத்த அண்ணனை கோபமாக பார்த்தவள் ” என் முடிவை கேட்காமல் ஏதாவது ஏற்பாடு செய்தீர்களானால் அதை நிறுத்தவும் தயங்கமாட்டேன் ….” தட்டிலிருந்து கைகளை உதறிவிட்டு எழுந்தாள் .




” அடிப்பாவி எப்படி பேசுகிறாள் பாரேன் .எல்லாம் நீ கொடுத்த இடம்தான் சண்முகம் .இவளையெல்லாம் வளர்க்கும் விதத்தில் வளர்த்திருந்தால் ….” ஆரம்பித்த ரங்கநாயகியை தன் உதட்டின் மேல் ஒற்றை விரலை அழுத்திக் காட்டி அடக்கினார் சண்முகபாண்டியன் .

கவலையோடு மகள் போன திசையை சௌந்தரி பார்க்க , முகம் முழுவதும் கோபம் நிறைய தங்கையை பார்த்தான் கார்த்திக் .

அன்றி இரவு சாத்விகா தூங்குவதற்காக படுத்துக் கொள்ளும் போது அவள் அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தான் கார்த்திக் .

” எந்த காரணத்தை கொண்டும் உனக்கும் , சுகுமாருக்குமான திருமணம் நிற்பதை நான் விரும்பவில்லை பாப்பா .நீ நிச்சயம் இந்த திருமணத்தை செய்து கொண்டே ஆகவேண்டும் ….” இதை சொன்னபோது பாசமும் , அன்பும் குரலில் குழைவுமாக அவளிடம் பேசும் அண்ணனை சாத்விகா பார்க்கவில்லை .

குற்றவாளிகளிடம் கடுமையும் , கறாருமாக நடந்து கொள்ளும் ஒரு போலீஸ் அதிகாரியை பார்த்தாள் .மறுப்பென சிறு தலையசைவை அவள் வெளிப்படுத்தினாலும் ரிவால்வரால் அவளை சுட்டுவிடும் உறுதி முகத்தில் தெரிய நின்றிருந்தான் கார்த்திக் .

What’s your Reaction?
+1
14
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!