kadak katru Serial Stories

Kadal Kaatru – 33

                                            33

” இப்படி எண்ணெய் வழிய வழிய பூரி சுட்டு கொண்டு வந்து போட்டால் நான் எப்படி சாப்பிடுவது ..? ” தட்டோடு தள்ளினாள் சமுத்ரா .

” ஏய் சாப்பிட முடியலைன்னா எந்திரிச்சு போடி …” எகிறினாள் செல்வமணி .இந்த நிலை தனக்கு வருமென்று அவள் நினைத்தவளில்லை . மேகலை படிக்கவென்று போய்விட சமையல்கட்டு அவளுக்கென்றானது .நன்றாக சாப்பிட்டு , உறங்கி , டிவி பார்த்து என்று இருந்தவள் .இப்போது வேர்க்க , விறுவிறுக்க அடுப்பில் நிற்கிறாள் .

அதுவே பெரிதென்று பேசாமல் போட்டதை தின்றுவிட்டு போவாளா …?அது நொட்டை …இது நொள்ளை என்று குறை பாடுகிறாள் .நேற்று இப்படித்தான் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தவளை எழுந்து போய் காபி போட வைத்தாள் .

” அரை குறை சாப்பாட்டில் எழுந்து போய் , என்னை எங்கேயாவது தலைசுற்றி கீழே விழுந்து கிடக்க சொல்கிறீர்களா ..? ” கத்தினாள் சமுத்ரா .

இருவரின் சண்டையையும் பார்த்தபடி மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் யோகன் .

” தம்பி பார்த்தாயா …? இவள் என்னவெல்லாம் என்னை சொல்கிறாள் .நானென்ன வேலைக்காரியா …?” கண்ணீர் உடனடியாக உற்பத்தியானது செல்வமணி க்கு .

தட்டில் வைத்திருந்த பூரியை ஒரு விரலால் தடவி பார்த்த யோகன் ” எண்ணெய் கொஞ்சம் அதிகம் போல்தான் தெரிகிறது செல்லா .வேறு எடுத்து வந்துவிடேன் ” என்றான் .

கொதித்து வந்த்து செல்வமணிக்கு .சப்பென்றானது சமுத்ராவிற்கு .இவனென்ன இப்படி மாறிவிட்டான் ..? பெரியதொரு யுத்தத்திற்கு தயாராக வாயை திறந்த செல்லாவை பார்வையாலேயே அடக்கி ” ம் ….” என்று கண் காட்டினான் .பொங்கிய கண்ணீருடன் வேறு பூரி சுட உள்ளே போனாள் அவள் .

இவனென்ன எதற்கும் அடங்க மாட்டானா …? எரிச்சல் வந்த்து சமுத்ராவற்கு .ஒரு மிகப்பெரிய சண்டைக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு வந்திருந்தாள் அவள் .இவன் ஒரு நிமிடத்தில் அதனை ஒன்றுமில்லாமல் பண்ணிவிட்டான் .

நிதானமாக பூரியை , அவள் அதிக எண்ணெய் என்று ஒதுக்கிய பூரியை தானே சாப்பிட துவங்கினான் யோகன் . ” உட்காரும்மா …உனக்கு எண்ணெயில்லாத வேறு நல்ல பூரி வருது ” என்றான் .

” எப்போ சுட்டு எப்போ வர்றது …? எனக்கு வேலை இருக்கு .சாப்பாடு வேண்டாம் .நான் போகிறேன் ” தட் தட்டென்ற காலடிகளுடன் வெளியேறினாள் சமுத்ரா .

யோகனை நிம்மதியாக இருக்க விடக்கூடாது என்பது அவள் எண்ணம் . மேகலை விசயத்தில் அவன் தன்னிடம் வாதாடுவான் என எதிர்பார்த்தாள் .ஆனால் சத்தமில்லாமல் அவள் சொல்படி மேகலையை படிக்க அனுப்பிவிட்டு , அதற்கு ஒரு காரணம் இருப்பதை ஊகித்து அவளிடமே வந்து என்ன காரணமென்று விசாரிக்கிறான் .




இப்போது செல்வமணி விசயத்தை கையில் எடுத்து கொண்டிருக்கிறாள் .இதனை விடப் போவதில்லை .அக்காவையும் , தம்பியையும் அழ அழ வைக்கப் போகிறேன் .தனக்குள் சூளுரைத்தபடி அந்த அலுவலக அறையில் அமர்ந்திருந்தாள் .

அவளுக்காக அங்கே ஒரு அலுவலகம் ஏற்பாடு பண்ணி கொடுத்திருந்தான் யோகன் .இது அவளுக்கு வசதியாக இருந்த்து .நிறைய பெண்கள் அவளை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பாக இருந்த்து .ஆனால் ஒருவராவது யோகனைப் பற்றி ஏதாவது வாயைத் திறக்க வேண்டுமே …? ஊஹீம் …சமுத்ராவும் பலவிதங்களில் அவர்கள் வாயை கிளறி பார்த்தாள் .ஆனால் யோகன் என்பவன் அவர்களின் வாழ்க்கையை சீரமைத்த கடவுள் அவதாரமாக இருந்தான் .திருமணம் முடியாத இளம்வயது பெண்களுக்கோ அவன் கனவுகளின் நாயகனாக இருந்தான் .

அப்படி கண்களில் கனவு மின்ன அவனைப் பற்றி சில பெண்கள் பேசும் போது ,சமுத்ராவிற்கு  அப்படியே அவர்கள் மூஞ்சியிலேயே ஒன்று போடலாமென்று இருக்கும்.

ரங்கநாயகி கேட்டபடி இங்குள்ள விபரங்களை கட டுரையாக்கி அனுப்பி விட்டாள் . அவர் அடுத்து இந்த பெண்களுக்காக சிறு தொழில்களை உருவாக்கலாமே என ஆலோசனை சொல்ல , அதனையே நினைத்தபடியிருந்த சமுத்ராவும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய முயன்றாள் .இந்த பெண்கள் வெறுமனே டிவி பார்த்து பொழுது கழிக்க கூடாது என்பது அவள் எண்ணம் .

வீட்டிலிருந்தவாறே சில கைவினைப்பொருட்கள் , தையல் ,பூவேலை …என அவள் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள் .அதற்கான முதலீடாக ஒரு தொகையை கொடுத்து அதனை அவர்கள் வருமானத்திலிருந்து சிறிது சிறிதாக கழித்துக் கொள்வது போல் ஏற்பாடு செய்திருந்தாள் .இந்த விபரங்கள் ரங்கநாயகி மூலம் பத்திரிக்கையில் வரும்படி பாரத்துக்கொண்டாள் .அது இந்த பெண்களுக்கு மட்டுமின்றி , இது போன்ற கீழ்தட்டு நிலையிலிருக்கும் மற்ற பெண்களுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்குமென்று நினைத்தாள் .

அவர்கள் செய்த பொருட்களை விற்பனை செய்யும் பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டிருந்தாள் .சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே வந்தனர் இருளாயியும் , மரியாவும் .வீட்டில் பெண்கள் செய்து வைத்திருக்கும் பொருட்களை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது .அவர்கள் கொண்டு வந்த பொருட்களின் தரத்தினையும் , எண்ணிக்கையையும் பார்த்த சமுத்ரா முகம் சுளித்தாள் .
” இது என்ன இருளாயி …?”

” எங்களை ஒண்ணும் கேட்காதீங்கம்மா .அவுங்க கொடுத்ததை கொண்டாந்துட்டோம் …எதுவும் கேட்டால் அப்படித்தானுங்கிறாங்க …” பதில் சொன்னாள் மரியா .

” இப்படி செய்தால் கடன் வாங்கிய பணம் எப்படி கழியுமென்று கேட்டீர்களா …? மரியா நீ பத்தாவது வரை படித்திருக்கிறாய்தானே ..? அவ்களுக்கு கணக்கு தெரியாவிட்டால் நீ சொல்வதுதானே …? ” எரிச்சலாக கேட்டாள் .

” இதெல்லாம் கேட்டாச்சுங்கம்மா .நம்ம அம்மா நம்மளை அப்படியா விட்டுடுவாங்கன்னு வாயை இளிச்சிக்கிட்டு கேட்கிறாளுங்க ” பெருமூச்சுடன் கூறினாள் இருளாயி .

இந்த பெண்களிடம் கொஞ்சம் ஆதரவாக பேசியது தவறோ …? என வருந்த தொடங்கினாள் சமுத்ரா .

” எல்லாம் வீட்டில் படுத்துட்டே டிவி மட்டுந்தாங்கம்மா பார்க்கனும்னு நினைக்குது” இருளாயி .

” ஆமங்கம்மா …எல்லோரும் என்னய மாதிரி அறிவாளிங்களாவே இருப்பாங்களா …? ” தலைமுடியை சரி பண்ணிக்கொண்டாள் மரியா .அவளுக்கு கொஞ்சம் சிவந்திருந்த தன் நிறத்தில் , பத்தாவது வரை படித்திருந்த தன் படிப்பில் கொஞ்சம் கர்வம் உண்டு .

” நீ கல்யாணகனவிலேயே இருப்ப. கொஞ்சம் துட்டு சேர்ந்தா  சீக்கிரமா கல்யாணம் பண்ணலாமேன்னு  உனக்கு இருக்கும் .அதுக்காக மாங்கு மாங்குன்னு ஓடுவ .அவளுகளுக்கெல்லாம் அந்த கவலை இல்லையே .அதான் வீட்டில் இருந்து டிவி பாக்குறாளுக ” மரியாவை வாரினாள் இருளாயி .

” இந்தா …ஏட்டிக்கு போட்டி பேசுனீன்னா எனக்கு கோபம் வரும் .நான் கல்யாணகனவு காணுறேன்னு உன்கிட்ட  சொன்னேனே .? “

” அதான் அந்த கண்ணுலயே தெரியுதே …? சொல்ல வேற செய்யனுமாக்கும் …? “

” என்ன …என்னத்த …நீ கண்ணுல பார்த்த …? ” ஒரு அவசர சண்டைக்கு இருவரும் தயாராக,” இரண்டு பேரும் வாயை மூடுறீங்களா …? இப்படி எதற்கெடுத்தாலும் ஒருத்தருக்கொருத்தர் ் சண்டை போட தயாராக இருப்பதால்தான் நீங்கள் எல்லோரும் இன்னமும் இப்படியே முன்னேறாமல் இருக்கிறீர்கள் ? கத்தினாள் சமுத்ரா .

” என்னாச்சு சமுத்ரா ..? ” என்றபடி வந்து நின்றான் யோகேஷ்வரன் .

அவனைக் கண்டதும் பெண்களிருவரும் ஓரமாக ஒதுங்கினார்கள் .நீ இப்போது இங்கே ஏன் வந்தாய் ? என்ற கேள்விப் பார்வையை அவனிடம் வீசியபடி பேசாமல் இருந்தாள் சமுத்ரா .

இருளாயியும் , மரியாவும் மாற்றி , மாற்றி அவனுக்கு விளக்கம் சொல்லி முடித்தனர் .

” பிரச்சினை உன்னுடத்தில்தான் சமுத்ரா .” என்றான் அவன் .

” என்ன …? ” முறைப்புடன் கேட்டாள் .” முதலிலேயே அவர்களுக்கு வேலைக்கென்று தனியாக இடம் ஒதுக்காத்துதான் பிரச்சினை .”

இதனை யோகன் முன்பே கூறியிருந்தான் .சமுத்ராதான் வீட்டையும் , குழந்தைகளையும் பார்த்துக் கொண்டே வேலையை பார்க்கட்டுமென்று கூறி மறுத்து விட்டாள் .இப்போது அதுதான் பிரச்சினை போல தெரிகிறது .




” அட…ஆமாங்கய்யா நீங்க சொல்றதுதான் சரி .டயத்துக்கு ஆபீஸ் மாதிரி இங்கே வந்திடனும்னு சொன்னாத்தான் இவளுக ஒழுங்குக்கு வருவாங்க ” பரவசம் பொங்க பேசிய மரியாவை பார்த்த போது அவள் ஆவலுடன் யோகனை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள் .

எரிச்சலடைந்த சமுத்ரா ” நீங்க ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் வெளியில் போய் நில்லுங்க .நான் கூப்பிடும் போது வாங்க ” என்றாள் .

மனமின் யோகனை திரும்பி பார்த்தபடி இருளாயியுடன்  வெளியேறினாள் மரியா .

” அவர்களை இப்போது ஏன் வெளியே அனுப்புகிறாய் ..?”

” நீங்கள் ஏன் இப்போது இங்கே வந்தீர்கள் …?இங்கே வந்து ஐடியாக்களை வாரி வழங்கி பெரிய ஹீரோவாகி விடலாம்னு நினைப்போ …? “

” என்ன ஐடியா …? என்ன ஹீரோ …? கொஞ்சம் புரியும்படி பேசு சமுத்ரா ” கண்டிப்பு அவன் குரலில். ” எப்போதும் என்னை எதிர்த்தே பேச வேண்டுமென்ற அவசியமில்லை .எப்போதாவது என்னுடன் ஒத்தும் போகலாம் “

” இப்போது எதற்கு இங்கே வந்தீர்கள் …? “

“சாப்பிடாமல் வந்தாயே …டிபன் எடுத்து வந்தேன் ..” கையிலிருந்த டிபன் பாக்ஸை காட்டினான் .சமுத்ராவிற்கு என்ன சொல்லவதென்று  தெரியவில்லை .அவனது வேலை பளுவினை அவள் அறிவாள் .அத்தனையையும் ஒதுக்கிவிட்டு அவளுக்காக வருகிறானென்றால் …யோசிக்க தொடங்கிய போது ….

” ஐயா ..என் தம்பியை நீங்க சொன்ன மாதிரி ஸ்கூலுக்்கு அனுப்பிட்டோம் ..” வெளியே நின்றபடி இங்கே எட்டிப் பார்த்து கத்தினாள் மரியா .

” அட ..அப்படியா ..நல்ல காரியம் செயதீர்கள் ” திரும்பி அவளை பார்த்து யோகன் பேச , அவன் கை டிபனை வெடுக்கென பிடுங்கி ”  நான் சாப்பிட்டுக் கொள்வேன் 
நீங்க போங்க ” என்றாள் .

ஊரெல்லாம் ரசிகைகள் இவனுக்கு …பெரிய தலைவன்னு நினைப்பு இவனுக்கு …வேலைகளை முடித்துவிட்டு களைப்புடன் வீட்டிற்குள்  வரும் போதும் இதே நினைப்புதான் அவளுக்கு .

டிபனை கழுவ சிங்க்கில் போட்டவள் கண்களில் அலமாரியிலிருந்து எடுக்கப்பட்டு மீண்டும் உள்ளே அடுக்கப்படாமல் ஆங்காங்கே வைக்கப்பட டிருந்த மசால் சாமான்கள் போடப்பட டிருந்த பாட்டில்கள் பட்டன.

அவற்றை ஒழுங்காக எடுத்து அலமாரியினுள் வைக்க தொடங்கினாள் .” என் வசதிக்காகத்தான் இப்படி வைத்திருக்கிறேன். நீ ஏன் இதையெல்லாம் தொடுகிறாய் …? ” சண்டை போடும் நோக்கத்துடன் செல்வமணி வந்தாள் .

” இது என் வீடு .இங்கே என் விருப்பப்படிதான் இதெல்லாம் இருக்க வேண்டும் ” உறுதியாக கூறியபடி உறைந்து நின்ற செல்வமணியை தாண்டி வெளியே சென்றாள் .

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!