kadak katru Serial Stories

Kadal Kaatru – 13

(  13 )

 

 

” எங்களோட இப்போதைய நிலைக்கு  அரசாங்கம்தான்மா முக்கியமான காரணம் ” தடுமாறியபடி வலைகளை காய வைத்துக் கொண்டே பேசினார் அந்த பெரியவர் .எப்படியும் எழுபது வயதிருக்கலாம் .

இவர் போன்ற பழைய கடலோடிகளையே இன்று பேட்டியெடுக்க ஏற்பாடு செய்திருந்தான் யோகேஷ்வரன்.முன்பே சிறந்த வாழ்வு வாழ்ந்த இவர்களால்தான் இப்போதைய சிதைந்த வாழ்வுக்கான காரணம் கூற முடியுமென்றுதான் சமுத்ராவும் அதனையே விரும்பியே வந்தாள் .

இவர்கள் வாயை பிடுங்கியேனும் , இந்த யோகேஷ்வரன் போன்ற முதலாளிகளிடம் இந்த எளியோர் படும் வேதனையை தெரிந்து கொள்ள வேண்டும் .அதன் பிறகு அவனுக்கு இருக்கு…என மனதிற்குள்ளாகவே யோகேஷ்வரனுக்கான வலைகளை விரித்து வைத்தபடி , காத்திருந்த சமுத்ராவிற்கு சின்ன இறால் கூட சிக்கவில்லை .

அந்த பெரியவர்கள் தங்கள் பழைய வாழ்க்கையை மனம் நிறைய உவகையுடன் நினைவு கூர்ந்தனர் .இறுதி முடிவில் அந்த உவப்பில் சிறிது உப்புச்சுவை கோடிட்டிருந்த்து.

” எங்க தலையெழுத்தை அந்த ஆண்டவன் இப்படி எழுதிட்டான் தாயி .அதான் இப்படி அலைக்கும் , கடலுக்குமா அல்லாடுறோம் ” என்றார் ஒரு மூதாட்டி .

” ஆரம்பத்திலிருந்தே இதே வாழ்க்கையென்றால் சரி பாட்டி .ஆனால் உயர்வாய் ஒரு வாழ்க்கை வாழ்ந்து விட்டு இன்று இந்த துயர நிலையென்றால் அதற்கு தலையெழுத்தை எப்படி காரணமாக்குவீர்கள் ? ” ஆதங்கத்துடன் கேட்டாள் .

” என்ன தாயி செய்ய ? அப்போல்லாம் எங்க சனத்துல பவுனை கொடுத்துதான் பொண்டுகளை கண்ணாலம் முடிச்சாக .இப்போ இருபது , முப்பதுன்னு பவுனு கேட்குறாக.அன்னாட பொழப்ப பாக்குறதா ? பவுன சேக்குறதா ?அதோ பாருங்க எம்பேத்தி …இந்த ஆனி வந்தா இருபத்தியெட்டாகுது …இன்னும் எடம் தகையாம கருவாடோட கருவாடா உப்புப்பிண்டமா கெடக்கா …இதெல்லாம் தலயெழுத்தில்லாம வேறென்ன ?.” தூரத்தில் கருவாடு விற்று கொண்டிருந்த ஒரு பெண்ணை சுட்டுகிறாள் அந்த மூதாட்டி .

“கடக்கரையில பொறக்குற ஒரு பொட்டப்புள்ளைக்கு வெவரம் தெரியிற வயசுலயே வலி பழக்கணும்னு சொல்லுவாங்க. வலி பழக்கணும்னா என்ன அர்த்தமுண்டா, உங்களை அடிச்சாலும் வலி தெரியக் கூடாது. நீங்க தடுக்கி வுழுந்து புண்ணு பட்டாலும் வலி தெரியக் கூடாது. அடி பாட்டுக்கு அடி, புண்ணு பாட்டுக்கு புண்ணு, நட பாட்டுக்கு நட. அப்படிப் பழகணும். இப்போ நகரத்துல இருக்குற பொண்டுவோபோல, கடக்கரையில பொண்டுவோ தான் சோலி பார்த்து வாழ முடியாது. கஷ்டமோ நஷ்டமோ, குடும்பத்தோடு சேர்த்துதான் எல்லாம்.இது எங்களுக்கு பொறந்த்தும் எங்க பெரியவுக எடுத்த பாடம் .இப்பவும் இதே பாடந்தேன் எங்க பெட்டைகளுக்கு சொல்லுதோம் .என்ன ஒண்ணு …உடல் வலியோட மன வலியையும் சேர்த்துக்க சொல்றோம் ” கண்ணீரை துடைக்க கூட இல்லாமல் புலம்புகிறார் மற்றொரு முதிய பெண்மணி .

இந்த கடற்புற பெண்களின் கண்ணீரில் மனபாரம் ஏறியது சமுத்ராவிற்கு .சோகம் சுமந்து சுமந்து ஓய்விற்கு கெஞ்சின அவள் காதுகள் .கடற்காற்றில் படபடத்த முந்தானையை இழுத்து சொருகியபடி ஒரு பாறை மீது அமர்ந்தாள் .

” என்னங்கம்மா காத பிச்சி எறிஞ்சிடலாம்னு தோணுதா ?” கேள்வியோடு அருகில் வந்து அமர்ந்தாள் இருளாயி .

” ஏன் இருளாயி அப்படி கேட்கிறாய் ? ” முயன்று புன்னகைத்தாள் .

” எங்க பாடு அப்படிங்கம்மா .முதல்ல கேட்கும்போது பரிதாபம் வரும் .கேட்க …கேட்க ..சையின்னாயிடும் .ஆள உட்டா போதும்னு ஓடிடுவாக “

” இன்று உனக்கு வேலையில்லையா இருளாயி .?”

” எனக்கு இன்னைக்கு உடம்பு கொஞ்சம் சரியில்லீங்கம்மா .அதான் லீவு உட்டேங்க .எனக்கு என் மச்சான் பிரச்சினையில்லாதவருங்க .கடலை உட்டா ஊடுதாங்க அவுருக்கு ..அதனால் ஒரு நோவு …நோக்காடுன்னாலும் ..தெகட்டாம என் பொழுது ஓடிடுதுங்க ” தன் கணவனின் பெருமை இருளாயி குரலில் .

சிறு உயர்வென்றாலும் கணவனை மலையாக்கி பேசும்  பெண்கள் .,..மனதினுள்  எண்ணும் போதே காலை சம்பவம் நினைவு வந்த்து .ஆக்ரோசமாக வந்து பார் என்று நின்ற பெண் …விட்டால் இந்த குப்பங்களையே நுனிவிரலில் மோதிரமாக்கி கொள்வாள் .ஆனால் கணவன் முன்னால் கூனி குறுகி நின்றாளே ….இவை பெண்ணினத்தின் தலையெழுத்தா ?

அன்று காலை குளித்து கிளம்பிக் கொண்டிருந்த போது அவள் அறைக்கதவு தட்டப்பட்டது .ஒரு வேளை யோகேஷ்வரனோ ..? நேற்று சொல்லாமல் சென்றதற்கு  இன்று ஏதாவது சமாதானம் சொல்ல வந்துள்ளானோ ? அதிகாலையிலேயே வந்திருப்பானே ..அவனாகத்தான் இருக்கும் .நன்றாக திட்டிவிட வேண்டும் …கதவை திறந்தவள் அங்கே நின்ற செல்வமணியை யோசனையோடு பார்த்தாள் .

” யாரை எதிர்பார்த்தீர்கள் மேடம் ? ” போலி பணிவுடன் அவள்  கேட்டாள் .ஒரு கதவு மட்டும் திறந்திருக்க , அந்த இடைவெளியில் வாசலில் தன் குண்டு உடம்பை திணித்தபடி  ஒயிலாக நிற்க முனைந்தபடி இருந்தாள் .அவளது இந்த போஸ் சிரிப்பை தூண்டிவிட சட்டென தனை மறந்து சிரித்து விட்டாள் சமுத்ரா .




கணநேரத்தில் கண் சிவந்து விட்டது செல்வமணிக்கு .அந்த சிறிய இடத்தில் சிறிது கஷ்டப்பட்டு தன் உடலை திணித்தவள் , சமுத்ராவை தள்ளுபவள் போல் அறையினுள் நுழைந்து நின்று ” எதற்கடி சிரித்தாய் ?” என உறுமினாள்.

அவளது ஏகவசனம் கோபமூட்ட பதிலின்றி தலை திருப்பியவளின் தோள்களை அழுத்தி பற்றி திருப்பினாள் .” உன்னைத்தாண்டி கேட்கிறேன் ” சினம் இப்போது உச்சியை அடைந்திருந்த்து .

இவர்கள் குடும்பமே இப்படித்தான் கோபத்தை நுனி விழிகளில் வைத்திருப்பனரோ ? உடன்பிறப்புகளின் கோப பார்வைகளை தனக்குள் ஒத்தவள் , போனால்  போகிறது எப்படியும் என்னை விட பத்து வயதாவது மூத்திருப்பார்கள் என செல்வமணியின் ஒருமையை மன்னித்தாள்.

” பரவாயில்லை நீங்கள் என்னை விட ரொம்ப பெரியவர்கள் .அதனால் நீ , வா …்.போன்னு கூப்பிடுவதில் எனக்கொன்னும் ஆட்சேபனையில்லை ” இதழ் விரிப்பை கூட்டினாள் .

சமுத்ராவை மதிக்க கூடாதென்றே அவளை ஒருமையில் அழைத்தாள் செல்வமணி .ஆனால் அதனை இப்போது நீ வயதானவள் …நான் சிறு பெண் …என்பதான தோற்றத்திற்கு சமுத்ரா மாற்றி விடவே ஆத்திரமடைந்தாள் .

” தம்பி இன்னும் வீட்டிற்கு வரலை தெரியுமா ?” தேவையில்லாத தகவலை கவனமாக சமுத்ரா வசமாக்கினாள் செல்வமணி.

என்ன இன்னுமா  வரவில்லை ? ….ஏன் ..? இப்படி எண்ணம் மனதினுள் ஓடியபோதும் ,

” தம்பியா ….? எந்த தம்பி ….? எனக்கு தம்பி யாரும் கிடையாது .ஒரே ஒரு அண்ணன்தான் .அவர் ராணுவத்தில் இருக்கிறார் செல்லா ” என்றாள் செல்லாவிற்கு சிறிது அழுத்தம் கொடுத்து ..ஆக இவள் இந்த விசயம் என்னிடம் சொல்லவே இவ்வளவு அக்கறையாக வந்து நிற்கிறாள் .

இதனால் என்ன வந்து விட போகிறது எனக்கு ? அவன் எப்போது போனால் என்ன …? வந்தால் எனக்கென்ன …? எவளை கொஞ்சினால் எனக்கென்ன …? அலட்சியத்துடன் தலையை சிலுப்பியபடி சாப்பிட அமர்ந்தாள் .

தோசையை கொண்டு வந்து வைத்த மேகலை வேறு அண்ணன் இரவு போனது ….்இன்னமும் வரவில்லையென தகவல் தந்தாள் .

” போ …எனக்கு அடுத்த தோசை மாத்தோசையாக ஊற்றிக் கொண்டு வா ” என எரிச்சலுடன் அவளை ஏவினாள் சமுத்ரா .

” ஏய் … கடங்காரி வாடி வெளியே …” யாரோ ஒரு ஆணின் குரல் ஓங்கி ஒலித்தது .

யார் அது …? கையில் பிய்த்த தோசையோடு எட்டிப் பார்த்தாள் சமுத்ரா .நாற்பத்தியைந்து வயது மதிக்க தக்க ஆண் ஓருவன் .நடு வீட்டில் நின்று கொண்டிருந்தான் .

” இங்கே வாடி …இப்போ …இப்போவே ….” கைகளை குத்திக் கொண்டவன் அங்கிருந்த ஊஞ்சல் மேல் ஏறி அமர்ந்து கொண்டான் .

பரபரப்புடன வெளியே வந்த செல்வமணி அவனருகில் நின்றாள் .குரலை குறைத்து குனிந்து அவனுடன் பேசினாள் .செல்வமணிக்கு இவ்வளவு மென்மையாக பேச தெரியுமா ? .எப்பொழுதும் வெங்கல தொண்டைதானே …ஆச்சரியமாக அவளை பார்த்தாள் சமுத்ரா .

” என்னடி குயில் கூவுது ?சத்தமா பேசுடி …” என்ற அந்த ஆண் சட்டென தனது இடது கையால் அவள் நெற்றியிலேயே அடித்து தள்ளினான் .கீழே விழ இருந்த செல்வமணி சுதாரித்து மீண்டும் அவன் கைக்கெட்டாத தொலைவில் கவனமாக தள்ளி நின்றாள் .

சமுத்ரா திடுக்கிட்டாள் .இதென்ன பேசும் போதே கை நீட்டுகிறான் .இவன் ….?????

சமுத்ரா கேட்ட மாத்தோசையை பார்த்து …பிய்த்து பிய்த்து எடுத்து வந்த மேகலை …இவள் பார்வை போன திசையை பார்த்து விட்டு ” சண்டிமாட்டையும் அடக்க ஆளிருக்குமில்ல …நம்மளை பாடா படுத்துறதுக்கும் சேர்த்து புருசன்கிட்ட வாங்கி கட்டுது பாரு…” ஒருவித திருப்தி யுடன் கூறினாள் .

புருசனாக போய்விட்டதாலேயே அவன் பெண்ணை அடிக்கும் உரிமை பெற்று விட்டானா ? அவன் குடித்திருந்த்து நன்கு தெரிந்த்து .அப்படி பட்டபகலில் குடித்து விட்டு வந்து , வேலையாட்கள் எதிரில் மனைவியை அடிக்கிறானே…?மனைவியின் மான அவமானத்தை சிறிதேனும் சிந்தித்தானா ? …

அவன் மனைவியாவது அதனை எதிர்த்தாளா ?அவ்வளவு தைரியமான பெண்மணி .அடியை வாங்கிக் கொண்டு மௌனமாக  நிற்கத்தானே செய்தாள்? . இது கணவன் பதவிக்குரிய மரியாதையா …இல்லை ஆணென்ற திமிருக்கான அங்கீகாரமா….?

” என்னம்மா திடீர்னு ஏதோ யோசனைக்குள்ள போயிட்டீங்க ?” இருளாயி சத்தமாக கேட்க தந்நிலை மீண்ட சமுத்ரா ,

” எவ்வளவு சுலபமாக இந்த ஆண்கள் பெண்களை அடிக்கிறார்கள என நினைத்தேன் ” என்றாள்.

” அந்த சுடிதாரை விட இந்த சேலை உங்களுக்கு அழகா இரு்க்கும்மா .சிலையாட்டம் இருக்கீங்க ” என பாராட்டினாள் .சமுத்ரா அன்று சேலை கட்டியிருந்தாள் .வேலையென்று நாலு இடங்களுக்கு அலைவதற்கு சேலை சற்று அசௌகரியமான உடைதான் .ஆனாலும் சேலை சமுத்ராவிற்கு பிடித்த உடையென்பதால் அடிக்கடி அதனையும் அணிவாள் .

” ஏய் ..நான் எவ்வளவு முக்கியமாக பேசிக்கொண்டிருக்கிறேன் .நீ இப்போதுபோய் என்னை வர்ணித்து கொண்டிருக்கிறேயே….” 

” ம் ….ஆம்ம்மா …ஒழுங்காத்தேன் இருக்கானுங்க .தண்ணியை போட்டுட்டா ஆளே மாறிடுறாங்க .என்ன பண்ண …கட்டிக்கிட்ட கயித்துக்காக காலம் பூரா கட்டுப்பட்டு கிடக்க வேண்டியிருக்கு .சரிம்மா நான் வாறேன் என் மச்சான் வந்திருக்கும் ” சலித்தபடி நகர்ந்தாள் அவள் .

தண்ணியடித்தால் மட்டுமா மாறுகிறார்கள் .இல்லையே …ஆணென்ற திமிரும் , அகங்காரமும் ….பிறப்பிலிருந்தே ஊறிப்  போவதால்ல் லவா …இப்படி நடக்கிறார்கள் ?

இல்லையென்றால் அப்பாவும் , அம்மாவும் , சகோதரியுமாக கண்ணியமாக குடும்பம் நடத்தும் வீட்டில் , ஒருவன் அவர்கள் முன்னாலேயே தன் ஆசைநாயகியை தேடி போவானா ? தைரியமாக போனில் இதோ வருவதாக அறிவித்து விட்டு …இதெல்லாம் ஆண்பிள்ளை திமிரன்றி வேறென்ன ?

ஆண்கள் என்ன தவறு செய்தாலும் பெண்கள் பொறுத்து போக வேண்டுமா ? தனக்குள் தர்க்கித்தபடி கடல் அலையை வெறித்தபடி இருந்தாள் சமுத்ரா.

” என்ன மேடம் யாரையோ வசமா திட்டிட்டிருக்கீங்க போலயே ?” கேட்டபடி வந்தவன் அமல்ராஜ்.

அவன் பாறையில்அமர்ந்த விதம் , தலை சரித்து பார்த்த விதம்…சட்டென சமுத்ராவிற்கு இன்று ஜாடை பிடிபட , ” ரோசம்மா…உங்களுக்கு …?”

” என் அம்மா .உங்கள் முதல் சந்திப்பை அம்மா கூறினார்கள் .எப்படி என்னை கண்டு பிடித்தீரகள் ?”

” உங்கள் முக ஜாடை கூறுகிறதே ….என்ன அன்று பார்த்தால் திடீரென காணாமல் போய் விட்டீர்கள் ? ” யோகேஷ்வரனை பார்த்ததும் இவன் அன்று என்ன ஓட்டம் ஓடினான் ? என மனதினுள் இப்போதும் சிரிப்புடன் எண்ணியபடி கேட்டாள் .

” ப்ச் ….அவனைபார்க்க பிடிக்கவில்லை .போய்விட்டேன் “

“யாரை…?” இடையில் ஏதோ ஊர்வது போல் தோன்ற சேலையை சரி செய்தாள் .

” அவன்தான் இந்த குப்பத்து முதலாளி …பொறுக்கி பயல் …” காட்டம்  அவன் குரலில் .பார்வை கீழ் பார்வையாக இருந்த்து .

நேரில் இவ்வளவு வேகம் இல்லையே …பயமல்லவா தெரிந்தது… எண்ணியபடி நிமிர்ந்த போது ,அவன் தலை திருப்பிக் கொண்டான்.

ஏனோ ஒரு பாதுகாப்பற்ற நிலை தோன்றியது சமுத்ராவிற்கு .
” ஏன் இவ்வளவு கோபம் ?”




” இங்கே குப்பத்தில் இந்த ஜனங்களுக்காக எவ்வளவு வேலை இருக்கிறது ? அதை விட்டு விட்டு விடிய விடிய அவன் அந்த அலங்காரியோடு சென்னையில் கூத்தடித்து கொண்டிருக்கிறான் “

அப்போது நேற்று சென்னைக்குஅவளை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றவா போனான் ? அதற்கா  அந்த அவசரம் …?உடனே வருகிறாயா …இல்லாவிட்டால் என மிரட்டியிருப்பாளோ ? தன் போக்கில் எண்ணியபடி நிமிர்ந்தவள் எதிரிலிருந்தவன் பார்வையில் தன் முந்தானையை சரி செய்தபடி மீண்டும் நோக்கிய போது அவன் பார்வை இயல்பாகவே தோன்றியது .

அவன் கண்களுக்குள் கூர்ந்து அவனை ஆராய முனைந்தபோது , கனத்த துணிஒன்று அவன் முகத்தை மோதி விழுந்த்து .

” நாளை கருவாட்டு கூடை அடுக்க வரவில்லையென்றால்  கண்ணை நோண்டி விடுவேன ” அந்த கனத்த துணியினால் அவன் முகத்தில் அடித்துவிட்டு நாளையல்ல …இப்போதே கண்ணை நோண்டுபவன் போல் வந்து நின்றான் யோகேஷ்வரன்.

” சரிங்க ..சரிங்க …” என உளறியபடி கிட்டதட்ட ஓடிப்போனான் அமல்ராஜ்.

” வந்த நாளிலிருந்து  நன்றாகத்தானே உடுத்திக் கொண்டிருந்தாய் .இன்று என்ன வந்த்தென்று இந்த உடை ? “இவளிடம் எரிந்து விழுந்தான்

” ஏன் இந்த உடைக்கென்ன ? நம் பண்பாடை , பாரம்பரியத்தை காப்பாற்றுகிறது .எனக்கு மிகவும் பிடித்த உடை தெரியுமா ?”

” உன் பிடித்தத்தையெல்லாம் உனக்குள் வைத்துக்கொள் .இங்கே கொஞ்சம் சுற்றிலும் கவனித்து நடந்து கொள் “

நம் தமிழ்நாட்டு உடையான சேலையில் என்ன குறையிருக்க கூடும் .இவன் எதற்கு இப்படி குலைக்கிறான் ? பதிலுக்கு யோகேஷ்வரனை பிடிபிடியென பிடித்திருப்பாள் .ஆனால் அவளுக்குமே அமல்ராஜ் பார்வை குறித்த சந்தேகம் இருந்ததால் ஒரு முறைப்புடன் நிறுத்திக் கொண்டாள் .

” சும்மா கண்ணை உருட்டாதே .வா ..வந்து வேனில் ஏறக்கொள் சாப்பிட போகலாம். “

அதிகாரத்தை பார் …முணுமுணுத்தபடி ” கொஞ்சம் வேலையிருக்கு .அப்புறமாக வருகிறேன. ” என்று நடக்க தொடங்கினாள் .

பின்னால் வேன் புறப்பட்ட ஓசை கேட்க கிளம்புவானாயிருக்கும் என நினைத்துக் கொண்டிருக்க , அவளை உரசியபடி நின்ற வேனினுள் இழுத்து போடப்பட்டாள் .உடனே வேணும் கிளம்பியது

சரியாக அமர்ந்தபடி ” சேச்சே என்ன இது …காட்டான் மாதிரி …?” எரிச்சலை மறைக்காமல் காட்டினாள் .

” மணி ஏற்கெனவே மூன்றாகி விட்டதே சமுத்ரா .சாப்பிட வேண்டாமா ?” சமாதானம் அவன் குரலில்.

” எனக்கு பசிக்கவில்லை .வண்டியை நிறுத்துங்கள். நான் கீழே இறங்க வேண்டும் “

அவன் காதில் விழுந்தால்லலவோ ? மிக அலட்சியமாக வலது கையால்  ஸ்டியரிங்கை கையாண்டு கொண்டிருந்தான்.இடது கையால் வாயிலிருந்த சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டான் .

திமிரை பார் ….” நிறுத்தாவிட்டால் குதித்து விடுவேன் ” என அறிவித்து பார்த்தாள் .அவன் சிகரெட் புகையை ஆழமாக இழுத்து வெளிப்புறமாக ஊதினான் .

இனி வேறு வழியில்லை குதித்து விட வேண்டியதுதான் .ஆனால் மணல்வெளியிலிருந்து சாலைக்கு வந்துவிட்டதே வண்டி .குதித்தால் அடிபடாது …? எச்சில் விழுங்கியபடி அவனை திரும்பி பார்க்க அவன் சிகரெட்டில் தீவிரமாயிருந்தான் .

சேலையை இழுத்து சொருகியபடி மெல்ல அந்த திறந்தவெளி வேனின் வெளியே காலை நீட்டியபோது சர்ரென்ற பிரேக்குடன் நின்றது வேன.

அநிச்சையாக வெளியே சாயாமல் உள்ளே உடலை நகர்த்தியதால் வேகமாக யோகேஷ்வரனுடன் போய் மோதிக் கொண்டாள் சமுத்ரா .

அவளை நிமிர்த்தி சீட்டில் ஒழுங்காக அமர வைத்தவன் அவசரமாக கீழே இறங்க , என்னவென்று எட்டிப்பார்த்தாள் .

ஆணும்  ,பெண்ணுமாக ஒரு சிறிய கும்பல .நடுவிலிருந்த பெண் வேகமாக ஓடி வந்து யோகேஷ்வரன் கால்களில் விழுந்தாள் .

” ஐயா , என் புருசன் மட்டும் கரையேறல சாமி .எப்படியாவது அவர கூட்டிட்டு வந்திடுங்கய்யா .” கதறினாள் .

” என்னம்மா ..?என்ன ஆச்சு ? கடைசியா எப்போ பேசினார் ? ” யோகேஷ்வரன் குரலிலும் பதட்டம் .

” பத்து மணி வரை எங்கூட போனில் பேசினாருங்க .அப்புறம் தகவல் இல்லீங்க .போன்ல சார்ஜு இருந்திருக்காதுன்னு நினச்சேனுங்க .மத்த அல்லாரும் வரவுந்தான் பயந்து போயி ஓடியாரேன் “

” பீட்டர் …நம்ம லான்ஞ்ச்சை ரெடி பண்ணு …” தொடர்ந்து சிலருக்கு வேறு உத்தரவுகளை இட்டபடி நடந்தவனை பின் தொடர்ந்தாள் சமுத்ரா .

லான்ஞ்ச்சில் ஏற போனவன் இவளை கேள்வியாய் பார்க்க ” நானும் வர்றேனே …எனக்கு கட்டுரைக்கு உதவியாக இருக்கும் ” என்றாள்

” இல்லை இதில் ஆபத்து அதிகம் .நீ வேண்டாம் “

” நேரில் பார்த்து எழுதினால் அதன் வலிமை கூடுமல்லவா ?” கெஞ்சுதலாக பார்த்தாள் .

” அப்துல் …” திரும்பி அழைத்தவன் வந்து நின்றவனிடம் ” மேடத்தை பத்திரமாக நம்ம வீட்டில் இறக்கி விட்டுடு ” என வேன் சாவியை கொடுத்து விட்டு அவளை பார்க்காமலேயே லாஞ்ச்சில் ஏறிக்கொண்டான் .

அத்தனையும் திமிர் ..்அடம் …அதிகாரம் ….மனதிற்குள்ளாகவே அவனை வைதபடி வேனில் ஏறினாள் சமுத்ரா .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!