Serial Stories

Atho Antha Nadhi Ooram – 22

22

 ஓ.என் .ஜி.சி நிறுவனம் ஜெயங்கொண்டத்தை சுற்றி ஆறு இடங்களில் மீத்தேன் வாயுவை நிலத்தடியிலிருந்து எடுப்பதற்கான ஆழ்கிணறுகளை அமைத்திருந்த்து .முதலில் ஒரு கிணறில் கசிவு ஏற்பட்டு இரண்டு பேர் உயிரிழப்பு வரை போனதும் , அந்த நிறுவனம் உடனடியாக செயல்பட்டு அந்த அடைப்பை சரி செய்த்து . இப்போது அடுத்த கிணற்றில் கசிவு ஏற்பட்டுள்ளது .சம்பவ இடத்திலேயே ஒரு முதியவர் உயிரிழந்து விட , பாதிக்கப்பட்டவர்கள் முப்பது பேருக்கும் மேலே ஜீவிதாவின் க்ளினிக்கிற்கு கொண்டு வரப்பட்டனர் .

வாசலில் சிவபாலனின் கார் சத்தத்திற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஜீவிதா , கார் சத்தம் கேட்டதும் டாக்டர் என்ற நிலையை மறந்து சிறு குழந்தையின் துள்ளலாய் வாசலுக்கு ஓடினாள் .சிவபாலனின் கார்தான் .அவன் குளித்து , ஷேவ் பண்ணி தாடி எடுத்துவிட்டுத்தான் வந்திருந்தான் .ஆனால் …அவன் முகத்தில் ஏன் இத்தனை டென்சன் …?

ஆசையாய் அவன் முகம் பார்த்துக் கொண்டிருந்த ஜீவிதா முதலில் கவனிக்கவில்லை .பிறகுதான் அவன் காரின் பின்கதவை திறந்து கை தாங்கலாய் இறக்கிய நோயாளிகளை கவனித்தாள் .பதட்டத்துடன் அருகில் சென்றாள் .

” அடுத்த கிணற்றில் கசிவு ஜீவா .அந்தப் பக்கம் பிடி .உள்ளே கூட்டிப் போகலாம் …” இருவருமாக அவர்களை உள்ளே படுக்க வைத்தனர் .

” நீ அவர்களுக்கு ட்ரீட்மென்ட் பாரு .நான் அங்கே போய் பார்த்து மற்றவர்களையும் அனுப்புகிறேன் .கைலாஷ் எங்கே …? “

” அவன் பின்னால் குளிக்க போனான் …”

” நான் பார்த்து கூப்பிட்டுக் கொள்கிறேன் .ஜெயந்தியை இங்கே உனக்கு துணைக்கு அழைத்துக்கொள் …” வேகமான வார்த்தைகளோடு வாசல்படிக்கு போனவன் ஏதோ தோன்ற படியில் நின்று திரும்பி பார்த்தான் .

ஜீவிதா …ஸ்டூலில் அமர்ந்து படுக்கையில் கிடந்தவர்களுக்கு சிகிச்சையை தொடங்கியிருந்தாள் .திணறிய மூச்சை சீராக்கும் முயற்சியில் இருந்தவளின் கவனம் சிவபாலன் பக்கம் திரும்பவில்லை .சிவபாலன் அவளின் பக்கவாட்டு தோற்றத்தை தன் கண்களால் அளந்து மனம் முழுதும் நிரப்பிக் கொண்டு வெளியேறினான் .

————————




” இன்னும் ஒரு இட்லி வைத்துக்கோடா …” கெஞ்சிய சௌதாமினிக்கு தலையசைத்து மறுத்துவிட்டு சாப்பிட்ட தட்டை தூக்கிக் கொண்டு ஓடினாள் ஜீவிதா .” டைம் ஆச்சும்மா .போதும் ….”

” அதுதான் நேரமாச்சுன்னு சொல்றாளே . விடு ….நாலு இட்லியை ஒரு டிபன்ல வச்சுக் கொடு .டைம் இருக்கறப்ப சாப்பிட்டுக்குவா…” சபாபதி சொன்னபடி பேக்டரிக்கு கிளம்பி போனார்.

” ம்க்கும் …இப்படி சாப்பிடாமல் , கொள்ளாமல் …ஓடிப்போய் எனக்கு என்னத்த கொண்டு வந்து தட்ட போகிறாள் …? ஊருக்கு உழைக்க இப்படி வயிற்றை பார்க்காமல் ஓடனுமா …? ” சௌதாமினி பெருமினாள் .

” நிச்சயம் போகனும்மா. ஏன்னா அந்த ஊர்ங்கிறது நாமளும் சேர்ந்த்துதான் …” கையை துடைத்தபடி சொன்ன மகளை முறைத்தாள் .

” உனக்கெதுக்குடி இந்த வம்பெல்லாம் .காலையில் எந்திரிச்சோமோ …சாப்பிட்டோமா …க்ளினிக் போனோமா …நாலு பேருக்கு ஊசி போட்டோமா…வீட்டுக்கு வந்து சாப்பிட்டு படுத்தோமான்னு … இல்லாமல் …ஊர் பிரச்சினையெல்லாம் எதுக்குடி தலையில் போட்டுக் கொண்டு திரிகிறாய் ….சிவனேன்னு இரேன் …”

” எப்படிம்மா இருக்கனும் …? ” ஜீவிதா ரசனையாய் கேட்டாள் .

” சிவனேன்னு ….” என்று ஆரம்பித்தவள் நிறுத்தி மகளை முறைத்தாள் .

” சிவ …சிவான்னுதாம்மா இருக்கேன் ….” கண்களை சிமிட்டி தாயை வம்புக்கிழுத்தாள் .

” திமிர்டி உனக்கு .உன்னையெல்லாம் சென்னை வரை அனுப்பி டாக்டர் வரை  படிக்க வைத்திருக்க கூடாது .இங்கேயே  எதையாவது படிக்க வைத்து , அப்படியே எவன் தலையிலாவது கட்டி , வீட்டை விட்டு விரட்டியிருக்க வேண்டும் …”

” உங்க ஐந்தாண்டு திட்டமெல்லாம் என்கிட்ட செல்லாது மம்மு …நான் எப்போதும் ப்ரீ பேர்டாக்கும் ….” செல்லம் கலந்த கொஞ்சலுடன் அம்மாவின் தோள்களை கட்டிக் கொண்டு அவள் மேல் சாய்ந்து கொண்டாள் .

” நான் சொல்றது எதையும் கேட்க மாட்டாய் .கொஞ்ச மட்டும் வருவாயா …? போடி என்னை தொடாதே …” சௌதாமினி மகளை கோபித்துக் கொண்டாள் .

” என் அம்மா …நான் கொஞ்சுவேன் …யார் கேட்பார்கள் ….” தள்ளிய சௌதாமினியை விடாமல் கட்டிக்கொண்டு வம்பு செய்து கொண்டிருந்த போது ….

” ஜீவா …நீ இன்னமும் கிளம்பலையா …நேரமாயிடுச்சு கிளம்பு ….” பரபரத்தபடி வந்தான் சிவபாலன் .

ஜீவிதாவின் விளையாட்டுத்தனம் உடனடியாக மறைந்து விட , அவள் சௌதாமினியின் மகளிலிருத்து ஜெயங்கொண்டத்தின் டாக்டராக மாறினாள்.

” இதோ வந்துட்டேன் பாலா ….ஒரு நிமிடம் மாடியில் பேக் மட்டும் எடுத்துட்டு வந்துடுறேன் …”

நாங்க இரண்டு பேரும் பேசினாலே இவனுக்கு மூக்கில் வியர்த்துடுமே …கரெக்டா வந்துடுவான் …சௌதாமினியின் பார்வை எப்போதும் போல் குரோதமாகவே சிவபாலன் மேல் விழுந்த்து .

அவள் பார்வையை பார்த்தவன் “எப்படியும்  இன்னும் பத்து நாட்களில் இந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்துவிடும் அத்தை .பிறகு ஜீவா வழக்கமான வேலைக்கு  வந்துவிடுவாள் …” சமாதானமாக பேசினான் .

சௌதாமினி பதிலே சொல்லாமல் அவனுக்கு முகத்தை திருப்பியபடி உள்ளே போனாள் .சிவபாலன் வாட்சை பார்த்துவிட்டு ” ஜீவா …” மாடியை ஏறிட்டு கத்தினான் .

” இதோ வந்துட்டேன் ….” ஜீவிதா படி இறங்கிக் கொண்டிருக்கையில் சௌதாமினி சமையலறையிலிருந்து வந்து அவன் கையில் ஒரு டிபன் பாக்ஸை திணித்தாள் .

” இரண்டே இட்லிதான் சாப்பிட்டாள் .அவளை சாப்பிட வை …”

சரியென்ற தலையாட்டலுடன் டிபனை வாங்கிக் கொண்டு போனவனின் பின்னால் ஓடினாள் ஜீவிதா .என் மகளுக்கு சிக்கிரம் நல்ல வழியை காட்டப்பா சிவனே …என வேண்டிக் கொண்ட சௌதாமினி …நிறுத்தி நல்வழி காட்டப்பா முருகா என தெய்வத்தின் பெயரை மாற்றிக்கொண்டாள் .பெரிய சிவன் …இவன் என மனதிற்குள் நாத்தனார் மகனை நொடித்துக் கொண்டாள் .

—————-

நல்ல வெயில் .சிவபாலனின் செலவில் பந்தல் அமைத்திருந்த்தால் அங்கே அமர்ந்து போராட மக்களுக்கு வசதியாக இருந்த்து .அவர்கள் அங்கு பதினான்கு நாட்களாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் .தங்கள் கிராமத்தில் எரிவாயு தெழிற்சாலை வரக்கூடாது .அந்த மீத்தேன் ஆய்வு கிணறுகளை மூட வேண்டும் என அரசாங்கத்திடம் போராடிக் கொண்டிருந்தனர் .

போராட்டத்திற்கு தேவையான உதவிகளை சிவபாலன் ஊர் பெரிய மனிதர்களுடன் ஒன்று கூடி செய்து கொண்டிருந்தான் .வேளாவேளைக்கு உணவு , தண்ணீர் , மோர் , இளநீர் என நிறைய உதவிகள் செய்த்தோடு , எளிய மக்களாக மட்டும் போராடினால் இந்த போராட்டம் வெற்றி பெறாது எனக் கணித்து , அந்த பகுதியில் ஓரளவு பிரபல புள்ளியான தானும் அவர்களோடு ஒன்றிணைந்து போராடினான் .டாக்டரான ஜீவிதாவையும் அவர்களோடு உட்கார்ந்து போராட வைத்தான் .

ஆனால் அவர்களது முயற்சகள்தான் பலனளிக்காது போய்கொண்டிருந்த்து .இன்னும் எந்த முறையில் அரசாங்கத்தின் கவனத்தை தன் பக்கம் திருப்ப …? தலையை பிய்த்து யோசித்துக் கொண்டிருந்தனர் .




இந்த பதினான்கு நாள் போராட்டத்தில் கிணறுகளில் கசிவு வராமல் பார்த்துக் கொள்வதாக ஓ.என் .சி.ஜி நிறுவனம் சார்பாக உறுதி சொல்லப்பட்டது .ஆனால் மக்கள் ஒரேடியாக அந்த மீத்தேன் வாயு திட்டத்தை கைவிடுமாறு போராடிக்கொண்டிருந்தனர் .

அன்று மாவட்ட ஆட்சியர் அவர்களை பார்த்து பேச வருவதாக சொல்லியிருந்தார் .அதற்குத்தான் அவசரமாக சிவபாலனும் , ஜீவிதாவும் கிள்ம்பிக் கொண்டிருந்தனர் .

கலெக்டருக்கு தாங்கள் டாக்டரென தெரியப்படுத்துவதற்காக ஜீவிதாவும் , கைலாஷும் தங்கள் உடைகளுக்கு மேல் வெள்ளை கோட்டை போட்டுக் கொண்டனர் .

” நீயும் , பாலாவோடு முன் வரிசையில் உட்கார்ந்து கொள் கைலாஷ் .கலெக்டரிடம் இந்த வாயுவால் மக்களுக்கு வரும் தீங்கை நாம்தான் விளக்கி சொல்ல வேண்டும் …” ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் போட்டுக்கொண்டாள் .இருவரும் பந்தலின் பின்னால் நின்று கோட்டை மாட்டிக் கொண்டிருந்தனர் .

” நீயும்தான் ஜீவிதா .ஜெயந்தியும்தான் ..இந்த பகுதி தொழிலதிபர் .டாக்டர் , நர்ஸ் என அனைவருமாக முன்னால் நின்றால்தான் இந்த போராட்டத்தின் தீவிரம் கலெக்டருக்கு புரியும் …”

” ஆமாம் …ஜெயந்தியை நர்ஸ் உடையோடு வரச் சொன்னாய்தானே ….? “

” ஜெயந்தி நர்ஸ் உடையோடு வந்து முன்னால் உட்கார்ந்து விட்டாள் .டாக்டர்கள்தான் இன்னமும் வரனும் ….” சொன்னபடி வந்தான் சிவபாலன் .அவன் கண்கள் தேனுறிஞ்சும் வண்டாய் ஜீவிதாவை …அவளது டாக்டர் தோற்றத்தை உறிஞ்சியது .

” ஐந்து வருடங்களுக்கு முன் …நீ காலேஜில் சேரும் போது உன்னை இந்த கோட்டோடு டாக்டராக பார்த்தது ஜீவா .பிறகு இப்போதுதான் பார்க்கிறேன் …” அவன் நேர் பார்வையில் ஜீவிதாவை பார்த்தபடி வந்தான் .

” அன்று நீங்கள்தானே …இந்த கோட்டை வாங்கி வந்து தந்தீர்கள் பாலா …” சிவபாலனின் காதல் பார்வைக்கு குறையாத பதில் பார்வை ஜீவிதாவிடமும் .

இருவருக்கும் பக்கத்தில் நின்றிருந்த கைலாஷ் கண்ணில் படவே இல்லை .சுற்றுப்பறுத்தை மறந்து தங்களிலேயே மூழ்கியிருந்தனர் .

” ம் …அதே கோட்டா இது …? ” சிவபாலன் அவளது கோட்டின் இரு முனைகளையும் கையால் பற்றி இழுத்தபடி கேட்டான் .

” ஸ்டாப் …ஸ்டாப் …நான் ஒருவன் இங்கே இருக்கிறேன் ….” கைலாஷ் இருவருக்குமடையே கையை ஆட்டியபடி பரிதாபமாக கத்தினான் .

” உங்களுக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கியாச்சே டாக்டர் சார் .நீங்க போகலை …? ” சிவபாலன் அவனை விரட்டினான் .

” நீ சொல்லுடா பாப்பு அன்னைக்கு நான் எடுத்துக் கொடுத்த அதே கோட்டுதானா இது …? ” என ஜீவிதாவிடம் தொடர ,

” ஐய்யோ …இங்கே என்ன நடக்குதுன்னே தெரியலையே .ஒரே குழப்பமா …இருக்கே …சிவ …சிவா …இதை எனக்கு கொஞ்சம் விளக்க கூடாதா …? ” கைலாஷ் ஜாடையாக சிவபாலனை பார்த்தபடி கத்த , அவன் கையில் கிள்ளினாள் ஜீவிதா .

” ஏய் …நீ சொல்லக்கூடாது அதை ….” அதட்டினாள் .

” கொடுமை ஒரு இக்கட்டில் கடவுளை கூப்பிடக் கூட உரிமையில்லாமல் போய்விட்டது ….” புலம்பியபடி போனான் அவன் .

அவனை பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்த சிவபாலனின் கன்னத்தில் அழுத்தமாக குழிந்திருந்தன குழிகள் .சுத்தமாக தாடியற்ற அவனது வழு வழு கன்னத்தில் எடுப்பாக , மிக அழகாக தெரிந்த்து அந்த குழி .உடல் சிலிர்க்க உரிமையோடு அதை பார்த்த ஜீவிதா , மெல்ல கண்களை சுழற்றி சுற்றிலும் ஆராய்ந்து விட்டு ஆட்காட்டி விரலை நீட்டி கன்னக் குழியை தொட்டாள் .

சிவபாலனின் காதல் பார்வை இப்போது மோகமாக மாறியது .அவன் கைகள் கோட்டின் முனையை அழுத்தமாக பற்றின .அவளருகில் நெருங்கியவன்  ” நான் அன்று வாங்கி தந்த்தா ஜீவி இது …? ” ரகசியமாய் கேட்டான் .

” ம் …பாலா .அதேதான் .ஐந்து வரிடங்களாக நான் அந்த கோட்டைத்தான் யூஸ் பண்ணிக் கொண்டிருக்கிறேன் .நான் டாக்டராவதற்கு முன்பே என்னை டாக்டர் தோற்றத்தில் அழகு பார்த்தவரல்லவா நீங்கள் …அதனை நான் மறப்பேனா பாலா …? அந்த கோட்டைத்தான் பொக்கிசமாக பாதுகாத்து அணிந்து வருகிறேன் ….”

நைந்திருந்த அந்த கோட்டின் ஓரங்களை தடவிய சிவபாலனின் முகம் உணர்ச்சியில் சிவந்திருந்த்து .” ஜீவி …” எனக் காதலாய் முணுமுணுத்தவனின் பார்வையில் தெரிந்த அழைப்பில் தடுமாறினாள் ஜீவிதா .

” அப்போது கொஞ்சம் கொழு கொழுவென இருந்தாய் பாப்பு .அந்த அளவிற்கு வாங்கினேன் .இப்போது மெலிந்துவிட்டாய் .கோட்டும் லூஸாக இருக்கிறது பாரேன் …” கோட்டின் கை ஓரங்களை இழுத்துக் காட்டினான் .

” ஏன் இவ்வளவு மெலிந்தாய் பாப்பு …? ” கொஞ்சலாய் கேட்டான் .

” ம்க்கும் நீங்கள் செய்யக் கூடாத வேலையெல்லாம் செய்து வைப்பீர்கள் .அதில் எனக்கு வருத்தம் வராதா …? ” சிணுங்கினாள் .

” அதற்காக சரியாக சாப்பிடாமல் இருப்பாயா ….ஆனால் அதில் ஒரு நன்மை பாரேன் .அதிக சதையெல்லாம் வடிந்து ஆங்காங்கே அளவான சதையுடன் உன் உடல் மிக அழகாக , வடிவாக மாறிவிட்டது ….” சிவபாலனின் பார்வை கோட்டிற்குள் இருந்த அவளது உடல் வடிவை தாபத்துடன் வருடி மேய்ந்த்து .

” ஷ் …என்ன பாலா இது …இங்கே வைத்து …இப்படி பார்த்தால் ……நான் என்ன செய்ய …? ” வெட்கமாய் தடுமாறியவளின் போன் ஒலித்தது .

ஜீவிதா இன்னமும் சுகன்யாவிடம் பேசியதை சிவபாலனிடம் சொல்லவில்லை .அதற்கான தனிமை நேரம் இருவருக்குமே கிடைக்கஙில்லை .ஆனாலும் வெறும் கண் பார்வையிலேயே ஒருவரையொருவர் உணர்ந்திருந்தனர் இருவரும் .

” கலெக்டர் வந்துட்டிருக்காராம் அக்கா ….” ஜெயந்தி பந்தலினுள்ளிருந்து தகவல் கொடுத்தாள் . அதே விநாடி சிவபாலனின் போனும் ஒலிக்க அதில் ” கலெக்டர் வரும் போது நாம் முன்னால் நின்றால் நன்றாக இருக்கும் .பெரிய மனது பண ணி கொஞ்சம் வருகிறீர்களா …? ” எனப் பணிவாக கேட்டான் கைலாஷ் .

சிரித்தபடி போனை கட் செய்த சிவபாலன் வா …போகலாம் என ஜீவிதாவுடன் பந்தலுக்குள் போனான் .அவனது சிரிப்பின் கன்னத்து குழியினுள் தன்னை அமிழ்த்தியபடி , அவன் பின்னால் போனாள் ஜீவிதா .

இத்தனை ஏற்பாட்டுடன் அவர்கள் போனாலும் , தங்கள் நியாயமான கோரிக்கைகளை கலெக்டரிடம் எடுத்து கூறினாலும் , எல்லாவற்றையும் பொறுமையாக தலையாட்டி கேட்டு விட்டு போன கலெக்டர் , மறுநாள் இவர்களது போராட்டத்தை கலைக்க போலீஸிற்கு ஆர்டர் கொடுத்திருந்தார் .

மறுநாள் போலீஸ்கார்ர்கள் அதிக எண்ணிக்கையில் வந்து இறங்கினர் .முதலில் போராட்டத்தை விட்டு கலைந்து போகும்படி கேட்டனர் .இவர்கள் மறுக்கவே தடியடியை துவங்கினர.தொடர்ந்து கண்ணீர் புகை குண்டுகள் ….போராட்டக்கார்ர்கள் சிதறி ஓடினர் .ஒரு மணிநேரத்தில் அந்த இடமே கலவர பூமியாகி கிடந்த்து .




ஊர்க்கார்ர்கள் அனைவரும் சேர்ந்து பேசி போராட்டத்தை இன்னமும் தீவிரமாக்க முடிவு செய்தனர் .இது போன்ற தீவிர போராட்டங்களை முன்பே சில இடங்களில்  தலைமையேற்று நடத்தி வெற்றகரமாக முடித்துக் கொடுத்த ஒருவரை தங்கள் குழுவுக்கு தலைமையேற்க அழைத்து வந்தனர் . 

ஜெயங்கொண்டத்தில் போராட்டம் மிக தீவிரமடைய தொடங்கியது .

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
PAPPU PAPPU
PAPPU PAPPU
5 years ago

nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!