pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சைமலை பூவு – 5

5

கருங்குவளைகள் மலர்ந்து கிடக்கும் காட்டுப் பகுதிகள் கடினமானவை , 

கடுவன்கள் அலைந்து திரியும்

பாலை வெளிகள் ,

கடும் இருளையும் , சிறு நிலவையும்

புரளும் சர்ப்பங்களையும் 

மற்றும் 

உன்னையும் கொண்டிருப்பவை.




” இதோ இப்படி ஒரு ஓரமாக மெல்ல மாவை விட வேண்டும் .பார்த்தீர்களா …எப்படி எழும்பி வருகிறது என்று ” சொர்ணம் விவரிக்க மனோரஞ்சிதம் அவள் அருகில் இருந்து ஆர்வமாக அடுப்பை பார்த்துக்கொண்டிருந்தாள்

” ஆஹா எவ்வளவு நன்றாக எழும்புகிறது ? பார்க்கும்போதே எடுத்துச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது ” 

” ஐயோ இருங்க மேடம் .ஆர்வத்தில் கையை எண்ணெய் சட்டிக்குள் விட்டுவிடாதீர்கள் ” சொர்ணம் கிண்டல் செய்ய…

” இன்னமும் இரண்டு  நிமிடத்தில் எனக்கு இந்த பணியாரங்களில்  இரண்டாவது நீங்கள் தராவிட்டால் நான் நிச்சயம் சட்டிக்குள் கையை விடத்தான் போகிறேன் ” இரும்பு வாணலிக்குள்  பொன்னிறமாய் வெந்து கொண்டிருந்த பணியாரங்களை பார்த்தபடி நாவை சவைத்துக் கொண்டாள் மனோரஞ்சிதம்.

” அந்த வேதனை உங்களுக்கு வேண்டாம் மேடம் .இதோ சுடச்சுட பணியாரங்கள் ” ஒரு தட்டில் நான்கு பணியாரங்களை எடுத்துக்கொண்டு வந்து அவள் முன் வைத்தாள் சுனந்தா .ஆவலுடன் அதில் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு கண்களை மூடி அதன் சுவையை அனுபவித்தாள் மனோரஞ்சிதம்.

” உங்கள் கைப்பக்குவம் யாருக்கும் வராது சொர்ணம் .பெரிய பெரிய ஸ்டார் ஹோட்டலில் கூட இந்த சுவை கிடைப்பதில்லை ” 

” ஸ்டார் ஹோட்டல்களில் கருப்பட்டி பணியாரம் கிடைப்பதில்லை மேடம் ” சுனந்தா கிண்டல் செய்தாள்.

” ஆமாம் அப்படியே கிடைத்தாலும் இந்த சுவை அவற்றிலே நிச்சயம் இருக்காது .சுனந்தா உனக்கு இந்த பணியாரம் செய்ய தெரியுமா ? ” 




” உங்க இந்த கருப்பட்டி பணியாரம் , கேழ்வரகு களி , கம்பு உருண்டை , ராகி உப்புமா இவையெல்லாம் அத்தையின் டிபார்ட்மெண்ட் .அதில் நான் தலையிடுவதில்லை .நான் பிரியாணி ப்ரைட் ரைஸ்,  பீட்ஸா  இப்படி போய்விடுவேன் ” 

” அவள் இப்படி விதவிதமாக செய்வதற்கு

படித்திருக்கிகள் இல்லையா மேடம்  ? அதனால் அந்த வகை உணவுகளைத்தான் செய்வாள் . இதுபோன்ற பட்டிக்காட்டு  உணவு வகைகள் அவளுக்கு தெரியாது. ” அப்படித்தான் அவள் சொல்லி கொள்ளுவாள் .சந்தடி சாக்கில் மருமகளுக்கு ஒருகொட்டு வைக்க தவறவில்லை சொர்ணம்.




” பட்டிக்காட்டா …?  இதுவா…?  இதன் அருமை தெரியாதவர்கள் அப்படி ஏதாவது சொல்லி விட்டுப் போகட்டும் சொர்ணம் .எனக்கு இந்த உணவுகள் அமிர்தம் போல் தோன்றுகிறது . கருப்பட்டி பணியாரம் வாசத்தை முகர்ந்து கொண்டே தான் எங்கள் குடிலில் இருந்து இங்கே வந்து அடுப்படியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் ”  மனோரஞ்சிதம் நான்கு பணியாரங்களையும் காலி செய்துவிட்டாள்.

” இன்னமும் இரண்டு வைக்கட்டுமா மேடம்  ? ” வந்தனா கேட்க , 

” நீ சட்டியை முழுவதும்  கவிழ்த்தாலும்  நான்உட்கார்ந்தே காலி பண்ணி விடுவேன் .ஆனால் என் வயதிற்கு இது போதும் .மீதத்தை எங்கள் குடிலுக்கு கொடுத்து அனுப்பு.  சசி விரும்பி சாப்பிடுவான்…” 

” ஓ உங்கள் மகன் வந்துவிட்டாரா மேடம் ? ” 

” இன்று அதிகாலையே வந்துவிட்டான் .சரிதாவும் அவனும் அப்படியே வெளியே ஒரு வாக் போய் இருக்கிறார்கள். நான் கொஞ்சம் படுத்திருந்தேன் .உங்கள் கருப்பட்டி பணியாரம் என்னை இங்கே இழுத்து வந்து விட்டது ” 

” உங்கள் குணம் அப்படியே உங்கள் மகனுக்கு மனோ மேடம் .சிந்தனையிலிருந்து சாப்பாடு வரை உங்கள் இருவருக்கும் ஒரே குணம் தான் ” சொர்ணம் பணியாரங்களை சுட்டு எடுத்தபடி  மனோரஞ்சிதத்தின் மகனை பாராட்டினாள்.

உன்னைப்போல் உன் பிள்ளை என்று சொல்லும்போது மகிழாத பெற்றோர்கள் உண்டா ?  மனோரஞ்சிதமும் சூரியனாய் முகம் மலர்ந்தாள்.

”  ஆமாம் முதலில் கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாக சுற்றிக் கொண்டிருந்தான். ஆனால் அவருக்கு  பிறகு தொழில் பொறுப்பை 

ஏற்ற பிறகு மிகவும் பொறுப்பானவனாக  சசிதரன் மாறிவிட்டான் . சரிதாவை திருமணம் முடித்து வைத்த இந்த நான்கு ஆண்டுகளில்  இரண்டு பேருமாக சேர்ந்து எங்கள் தொழில்களை நன்றாக வளர்ச்சி நிலைக்கு கொண்டு போய்விட்டனர் . எனக்கு முழு ஓய்வு கொடுத்து விட்டனர் .நான் இப்போது சும்மா மேற்பார்வையிடுவதோடு சரி ”  மகன் மருமகளை பற்றிய பெருமை பேசினாள் மனோரஞ்சிதம்.

” உங்கள் கணவர் மறைந்த போது நீங்கள் தடுமாறி நின்றது இப்போதும் எனக்கு நினைவில் இருக்கிறது மனோ மேடம் ” நெகிழ்வாக பேசினாள் சொரணம்.

மனோரஞ்சிதம் எண்ணெய்  பிசுபிசுப்போடு இருந்த சொர்ணத்தின் கையை பற்றிக் கொண்டாள். ” கணவரையே முழுமூச்சாக நம்பியிருக்கும் நம்மைப் போன்ற பெண்களின் நிலை அவர்களுக்கு பின்பு குருடான கண்களோடு பௌர்ணமி பார்க்கச் செல்வது போல் ஆகிவிடுகிறது சொர்ணம்.  இதுபோல ஒரு தருணத்தை நீங்களும் கடந்து வந்து இருக்கிறீர்கள் .அப்போது உங்கள் வேதனையில் நானும் பங்கு கொண்டிருக்கிறேன் நினைவிருக்கிறதா ? ” 




வெளிவர தயங்கி அணை கட்டிக்கொண்ட கண்ணீர் துளிகளுடன் இரு பெண்களும் தங்கள் கடந்த காலத்திற்குள் விழுந்திருந்தன.

சுனந்தா அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு அடுப்படியை விட்டு வெளியேறினாள்.

” அதோ அந்த அருவி ஓடையாக ஓடிக் கொண்டிருந்தது நாங்கள் முதன் முதலில் இங்கே வந்தபோது…”  அடுப்படி ஜன்னல் வழியே தெரிந்த சிறிய அருவியை சுட்டிக்காட்டி சொன்னாள் மனோரஞ்சிதம்.

இருபது வருடங்களுக்கு முன்பு பசுமைகுடில்  விடுதி ஆரம்பிப்பதற்காக கட்டிட வேலை நடந்து கொண்டிருந்த நேரம். அப்போது இந்தப்பக்கம் அவ்வளவாக விரிவடையாத முழு காட்டுப் பகுதிதான் .சுதாகரும் , மனோரஞ்சிதமும் வந்த கார் சகதிக்குள் சிக்கி நகராமல் நின்று விட , இடியும் மழையும் மிரட்டிக் கொண்டிருந்த அந்த வனாந்திர பகுதியில் செய்வதறியாமல் திகைத்து நின்று கொண்டிருந்த அவர்களுக்கு பாலை சோலையாய் இவர்களது விடுதி  இல்லையில்லை குடியிருப்பு கண்ணில் பட்டது.

வேலைக்காக இறக்கி போடப்பட்டிருந்த கருங்கற்களும் , செங்கற்களும் ,சல்லியமாக…நசநசவென்று அந்த இடம்  கொட்டும் மழையில் சொத சொதத்து கிடக்க ஓரமாக மூன்றே அறைகளுடன் ஒரு சிறிய வீடு .அங்கேதான் சொர்ணமும் சங்கரனும் தங்கள் பிள்ளைகளுடன் வசித்து வந்தனர் .தாங்கள் ஆரம்பிக்கப் போகும் விடுதிக்கான கட்டிட வேலைகளை கவனித்து கொண்டிருந்தனர். மழையின் காரணமாக அவர்களது வேலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இன்னமும் விடுதியறை ஆரம்பிக்காத நிலையிலும் சங்கரனும் சொர்ணமும் சுதாகர் மனோரஞ்சிதத்தை பாசத்தோடு வரவேற்று தங்கள் இடத்தில் தங்க வைத்து அவர்களுக்கும்  அவர்கள் பிள்ளைகளுக்கும்

உணவும் உறங்க இடமும் கொடுத்தனர்.

இடியும் மின்னலும் பேய் மழையுமாக அந்த வனப்பகுதி நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டு விட ஒரு வாரத்திற்கு மேல் சுதாகர் குடும்பம் அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.  மேலே உணவுப் பண்டங்கள் வாங்க வழியற்ற நிலையில்

தாங்கள் சேமித்து வைத்திருந்த சொற்ப உணவையும் முகம் சுளிக்காது  தங்களுடன் பகிர்ந்து கொண்ட சங்கரன் குடும்பத்தை சுதாகரனுக்கும் மனோரஞ்சிதத்திற்கும் மிகவும் பிடித்துப் போயிற்று.







அதன் பிறகு அவர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அல்லாது நினைக்கும் போதெல்லாம் தவறாது இங்கே வந்து  பசுமைகுடிலில் தங்கிச் செல்வது வாடிக்கையானது.

” நம்முடைய வாழ்க்கை துணையை இழந்த பிறகு இருவருக்குமே அவரவர் பிள்ளைகள் தொழிலை திறமையாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர் .பிறகு நமக்கு என்ன கவலை மனோ மேடம் ? ” சொர்ணத்தின் குரலில் தன் மகன் சுந்தரேசனுக்கான  பெருமிதம் இருந்தது.

 மனோரஞ்சிதத்திடமும் அதே பெருமிதம் இருந்தது .ஆனால் ஒரு மாற்று குறைவாக இருந்தது ..” உங்களைப்போல் இதனை முழு மகிழ்ச்சியோடு என்னால் கொண்டாட முடியவில்லை சொரணம் ” 

சொர்ணத்திற்கு மனோரஞ்சிதத்தின் கவலை புரிந்தது .மெல்ல அவள் தோளை தட்டிக் கொடுத்தாள். ”  எல்லாம் சரியாகிவிடும் மேடம்.  நீங்கள் கவலைப்படாதீர்கள் ” 

” எங்கே சரியாக …? நாளுக்கு நாள் நிலைமை  மிகவும் மோசமாகி கொண்டுதான் இருக்கிறது .இப்போதெல்லாம் வீட்டிற்கே வருவதில்லை .எங்களுடன் பேசுவது கூட கிடையாது .கேட்டால் சுதந்திரம் வேண்டும் என்கிறான்.  பெற்றவளிஊடமும் கூடப் பிறந்தவனிடமும் இருந்து இவனுக்கு என்ன சுதந்திரம் வேண்டி இருக்கிறது ” மனோரஞ்சிதத்தின் குரல் தழுதழுத்தது.

” சுண்டுவிரலும் கட்டைவிரலும் ஒன்றாக இருக்கிறதா ? ஆனால் இரண்டும் நமக்கு முக்கியம் தானே ? இன்னும் இரண்டு வருடங்கள் போனால் எல்லாம் சரியாகி போகும் மேடம் கவலைப்படாதீர்கள். ” 

” அந்த ஒரு நம்பிக்கையில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ”  தன் உள்ளக்கிடக்கை மனோரஞ்சிதம் கொட்டிக் கொண்டிருக்கும் போது சரிதா அங்கே வந்தாள்.

” நினைத்தேன். அத்தை  நீங்கள் இங்கே தான் இருப்பீர்கள் என்று உங்கள் மகனிடம் சொல்லிக் கொண்டே வந்தேன் என் கணிப்பு சரியாகிவிட்டது ” 

” சரிதா வாம்மா எப்படி இருக்கிறாய் ? ” சொர்ணம் அவளை வரவேற்க 

” ரொம்ப நன்றாக இருக்கிறேன் ஆன்ட்டி .இன்றைக்கு என்ன ஸ்பெஷல் ?  ஏதோ புது விதமான வாசனை ”  மூக்கை உறிஞ்சியபடி சுவாதீனமாக அவள் அந்த அடுப்படியில் கிடந்த குட்டை ஸ்டூலில் அமர்ந்தாள்.

” என்ன அத்தை உங்கள் புலம்பல்களை ஆரம்பித்துவிட்டீர்களா ? மனோரஞ்சிதத்தை கிண்டலாக கேட்டாள்.

” ஒத்த வயதுடையவர்கள். வெகுநாட்கள் பழகியவர்கள் .எங்களது சோகங்களை பேசித் தீர்த்தோம். இப்படி

 புலம்பியாவது  எனது ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கிறேன் ” மனோரஞ்சிதம் வருத்தத்துடன் பேசினாள்.

” நீங்கள் புலம்புவதால் எதுவும் மாறிவிடப் போகிறதா அத்தை ? எதற்காக இப்படி கவலைப்பட்டு உங்கள் உடல் நிலையை கெடுத்துக் கொள்கிறீர்கள் ? கரிசனத்துடன் அதட்டினாள் சரிதா.

” மன சோகத்தை வெளிப்படையாக பேசினால்தான் பாரம் குறையும் சரிதா . உன் அத்தையை தடுக்காதே. என்னை அந்நியமாக நினைக்காதே ” சொரணம் ஆட்சேபிக்கும்  விதமாக பேசினாள்.

” அய்யோ ஆன்ட்டி எனக்கு உங்களை தெரியாதா?  ஐந்து  வருடங்களாக உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன் .நீங்களும் எங்கள் குடும்பத்தின் உறுப்பினர் போலத்தான். அத்தையின் கவலை தாங்காமல்தான் இப்படி  பேசினேன். சரி செய்யவே முடியாத விஷயத்திற்கு இவர்கள் இப்படி மருகுவானேன் ? ” 

” சரி செய்யவே முடியாது என்று நீ எப்படி சொல்கிறாய் ? முயன்றால் முடியாதது எதுவும் கிடையாது .உன் அத்தையின் இந்த பிரச்சனையும் கூடிய விரைவிலேயே சரியாகப் போகிறது பாரேன் ” ஆருடம் போல் பேசினாள் சொர்ணம்.

சரிதா முகம் வாட அவளது மனநிலையை மாற்றும் முயற்சியாக ” இன்றைய ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரமம்மா .சாப்பிட்டு பார் ”  சொர்ணம் தட்டில்  எடுத்து நீட்ட அவள் ஆவலுடன் அதை வாங்கி சாப்பிட்டாள் .




 ” சசிக்கு இது ரொம்ப பிடிக்கும் .அவர் குடிலில்தான் இருக்கிறார் கொடுத்து விடுகிறார்களா  ஆன்ட்டி  ? என்றாள்.

” இதோ இப்போதே கொடுத்துவிடுகிறேன் ” என்றவள் உள்ளே திரும்பி ” தேவயானி ” என்று அழைக்க ” அவள் வெளியே போய் இருக்கிறாள் அத்தை ”  சுனந்தா குரல் கொடுத்தாள்.

” இந்நேரம் எங்கே போனாள் ?”  சொர்ணம் முணு முணுத்துக் கொண்டிருக்கும் போது வீட்டின் பின்பக்க கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தாள் தேவயானி .

வியர்த்து விறுவிறுத்து தொப்பலாக நனைந்திருந்ததால் தலைமுடி கலைந்து முகம் பொலிவிழந்து லேசாக மூச்சு வாங்கியபடி இருந்தாள் அவள் .

” தேவயானி  எப்படிம்மா  இருக்கிறாய்  ? ” மனோரஞ்சிதம் விசாரிக்க சொர்ணம் மகளை கூர்ந்து பார்த்தாள்.

” தேவயானி எங்கே போயிருந்தாய் ? ஏன் இப்படி அவசரமாக ஓடி வருகிறாய் ? ” 

காட்டுக்குள் அரக்கர்கள் சிலரை சந்தித்து விட்டு வருகிறேன் என்று சொல்லி விடலாமா என யோசிக்க ஆரம்பித்தாள் தேவயானி.

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!