Serial Stories Sollamal Thotu Sellum Thenral சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் – 26

26

காட்டுவழி பாதை பயணம்
உன்னுடனான வாழ்வு
பச்சை பாம்பும் படரும் கொடியும்
ஆனாலும் உயிர் பறவைகளை
கைவிடுவதில்லை வனங்கள்..




“நம்ம மகளை பார்த்தியாடி மகாலட்சுமி போல் எப்படி ஜொலிக்கிறாளென்று..” சிவராமன் தன் மனைவியிடம் பெருமிதமாய் சொல்லிக் கொண்டிருந்தார்..

“அது மட்டுமா அவளுக்கு அவுங்க வீட்டில் எவ்வளவு பொறுப்பு கொடுத்திருக்காங்க பாருங்க.. மூத்த மருமகளாக பொறுப்பாக கல்யாண வேலைகளை எப்படி ஓடி ஓடி பார்க்கிறாள் பாருங்க..”

தாயும், தந்தையும் தன்னையே கவனித்துக் கொண்டிருப்பதை மைதிலி அறிவாள்.. உள் மன புகைச்சல் வெளியே முகத்தில் தெரியாமல் சமாளித்தபடி பரபரவென மண்டபத்திற்குள் இயங்கிக் கொண்டிருந்தாள்.. அவள் செய்ய வேண்டியவைகளாக ஏகப்பட்ட வேலைகள் அவளிடம் கொடுக்கப் பட்டிருந்தன..

அதைத்தான் வீட்டின் முக்கிய ஆளாக தங்கள் மகள் மாறிவிட்டதாக அவளது தாயும் தந்தையும் பெருமை பேசிக் கொண்டிருந்தனர்.. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்டிருந்த அதிகப்படி பொறுப்புகளின் காரணம் வேறென்று மைதிலிக்கு தோன்றியது.. நடக்கக்கூடாது என அவள் நிறுத்த சொன்ன திருமணப் பொறுப்புக்களை அவளே ஏற்று நடத்த வேண்டுமென அவளது வீட்டார் செய்த ஏற்பாடு போல் இது அவளுக்கு பட்டது.

“ராஜகுமாரி மாதரி இருக்கிறாய்டா தங்கம்..” அம்மா அவளை திருஷ்டி சொடுக்கினாள்.




இருக்கத்தானே செய்வேன் ஒரு லட்சரூபாய் புடவையும் பலலட்ச ரூபாய் நகைகளும் அணிந்திருப்பவள் ராஜகுமாரி, போலத்தானே தெரிவாள்.. வெளியேதான் நான் ராஜகுமாரி.. உள்ளே பிச்சைக்காரி.. நினைவுகள் கசந்து வழிய அதன் சுவடுகள் கண்களை எட்டாமலிருக்க பாடுபட்டபடி உதடுகளை இழுத்து புன்னகைத்துக் கொண்டாள்.. அவள் பார்வை அம்மாவின் அருகே அமர்ந்து அவளை பொறாமையாய் பார்த்த அண்ணி கிரிஜா மேல் விழுந்தது..

‘இப்படி பார்க்காதே அண்ணி.. உனது இந்தப் பார்வைக்கு நான் தகுந்தவள் இல்லை.. நீ நினைக்கும் உயர்ந்த இடத்தில் நான் இல்லை.. கீழே காலடியில் கிடக்கிறேன்.. என் மீது பொறாமைபடாதே, பாவப்படு.. பரிதாபம் கொள்.. ஒரு வகையில் உனது வாழ்க்கை உயர்ந்தது.. கணவன் குழந்தையென எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாத தனி வாழ்க்கை.. ஏதேதோ கூனித்தனம் செய்து நீ சாதித்து கொண்ட வாழ்க்கை.. அத்தனை திறனில்லாத நான் இங்கே மெழுகாய் உருகிக் கொண்டிருக்கிறேன்..’

மைதிலி மனதிற்குள் புலம்பியபடி வெளிப் பார்வைக்கு புன்னகைத்தாள்.. கிரிஜா அவளை ஊடுறுவது போல் பார்க்க, அந்த பார்வையிலிருந்து தப்ப மண்டப வாயில் பக்கம் நகர்ந்து விட்டாள்..

“இந்தக் கோலத்தில் கலர்பொடி கொஞ்சம் சிதறியிருக்கிறது பாருங்கள்.. போட்டோ, வீடியோவில் அசிங்கமாக தெரியும்.. இதை சரி பண்ணுங்கள் அக்கா..” கோலம் போட்ட பெண்ணை அழைத்து சொன்னாள்..

“மைதிலி..” பின்னால் கேட்ட குரலுக்கு திரும்பி விழி விரித்தாள்..

“சுமதி, சௌமியா வாங்கடி வாங்க..”

“என்னடா இவுங்களை நாம் கல்யாணத்திற்கு கூப்பிடவே இல்லையே.. எப்படி வந்தார்களென்று பார்க்கிறாயா..?” கொஞ்சம் கோபமாக அவர்கள் கேட்க,

“சீச்சி என்னடி நீங்க.. நான் அப்படி நினைப்பேனா..? நிறைய வேலைகள்டி.. அதனால் உங்களை மறந்து விட்டேன்.. வாங்க உள்ளே வாங்க..”




“ம்.. நல்லவேளை நீதான் மறந்தாய்.. ரவி மறக்கவில்லை..”

“ஓ என் கொழுந்தனாரின் தோழிகளா நீங்க.. அப்போது உங்களை கொஞ்சம் விசேசமாக கவனிக்க வேண்டும்.. இல்லை என்றால் என் கொழுந்தன் கோபித்துக் கொள்வாரே..”

“என்னது உன் கொழுந்தனாரின் ப்ரெண்டா..? அப்போது உனக்கு நாங்க அவ்வளவுதானா..? திமிர்டி உனக்கு..”

தோழிகள் இருவரும் மைதிலியை செல்லமாக அடிக்க முயல, அவள் அவர்களிடமிருந்து தள்ள முயல, பிறர் கவனத்தை கவராமல் அங்கே ஓர் குட்டி சண்டை நடந்து கொண்டிருக்க, திடுமென பரசுராமன் வந்து நின்றான்..

மூன்று பெண்களுமே ஸ்தம்பித்து நின்றனர்.. ஐயோ இவனுக்கு இதெல்லாம் பிடிக்காதே.. இப்போது என்ன சொல்ல போகிறான்..? பரிதவித்து நின்ற அவர்கள் பயம் அநாவசியம் போல் அகலமாக புன்னகைத்தான் பரசுராமன்..

“என்ன மைதிலி விருந்தாட்களை வாசலில் நிற்க வைத்தே பேசிக் கொண்டிருக்கிறாய் உள்ளே கூப்பிட்டு போய் சாப்பிட சொல்லலாமே..”

மைதிலி தன் காதுகளை தேய்த்து விட்டுக் கொள்ள சுமதியும், சௌமியாவும் தங்கள் கண்களை தேய்த்து பார்த்து எதிரிலிருந்த உருவத்தை உணர்ந்து கொள்ள முயன்றனர்..

“நீங்கள் உள்ளே போய் சாப்பிடுங்க மைதிலி கூட்டிப் போம்மா..” முகம் நிறைந்த புன்னகையோடு சொல்லிப் போனவனை மூவராலுமே நம்ப முடியவில்லை..

“என்ன மைதிலி உங்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டது போல..?” சுமதி நடந்து கொண்டே கிசுகிசுத்தாள்.

“சரிதாண்டி புருசன் பொண்டாட்டி சண்டை எத்தனை நாளைக்கு..? இன்னைக்கு அடிச்சுக்குவாங்க.. நாளைக்கு கட்டிக்குவாங்க.. இடையில் வந்தோம்னா நாம்தான் பொல்லாப் பிள்ளையாயிடுவோம்..” சௌமியா பாசமுடன் தோழியின் கையை பற்றிக் கொண்டாள்.




மைதிலி பதில் பேசா புன்னகையுடன் அவர்களை அழைத்துப் போய் பந்தியில் அமர வைத்துவிட்டு அடுத்த வேலைக்கு போனாள்.. அது அவர்களது திருமணம் நடந்த அதே கல்யாண மண்டபம்தான்.. அன்று அவள் மணப்பெண்ணாய்.. இன்று மணமகள் வீட்டாளாய்.. காட்சிகளை மாற்றிய காலத்தை வியந்தபடி மண்டபத்தின் இரண்டாவது மாடியில் நின்றபடி மண்டபம் முழுவதையும் விழியால் ஓட்டினாள்.

இதோ இப்போது அவள் கணவன் பரபரப்பாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கிறான்.. மணமகனுக்குரிய எந்த ப்ரத்யேகமும் இன்றி அவர்கள் திருமணத்தின் போதே அவன் இப்படித்தானே வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.. இதன் அர்த்தம் அவர்கள் திருமணம் அவனது எந்த இயல்பையும் பாதிக்கவில்லை என்பதா..? போகிற போக்கில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொண்டதா இந்த திருமணமும்.. நானும் அவனது விட்டேத்தியான செயல்கள் அதைத்தானே காட்டுகின்றன.. மைதிலி மன வருத்தத்துடன் தன் வாழ்வை தானே வலிக்க வலிக்க வெட்டிக் கூறு போட்டுக் கொண்டிருந்தாள்.

அவளது மனம் திருமணத்திற்கு முதல்நாள் கணவனை மணமகன் அறையில் சந்தித்த நிகழ்வில் வந்து நின்றது.. அப்போது அவன் பார்வை.. இப்போதும் அந்த நினைவில் அவள் உடல் சிலிர்த்தது அதென்ன பார்வை.. ஏன் அப்போது அப்படி பார்த்தான்..? கணவனின் பார்வையை ஆராய்ந்து கொண்டிருந்தவளுக்கு.. திடுமென தான் அன்று கணவனின் அறைக்கு போன காரணம் நினைவு வந்தது.. அவள் மனம் பரபரத்தது.. அன்று அவர்கள் திருமணத்தை நிறுத்துவதற்கு சதி நடந்ததே.. அது வந்தனாவின் தந்தையால் நிகழ்த்தப்பட்டது தானே.. இ.. இப்போது இதனை மாமனாரின் காதிற்கு கொண்டு போனால்..

அடுத்த நொடி மைதிலியின் கால்களுக்கு அபார பலம் வந்தது.. அவள் இரண்டிரண்டு படிகளாக இறங்கி, இரண்டாவது மாடியில் இருந்து முதல் மாடிக்கு ஓடினாள்.. நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.. காலையில் திருமணம்.. மண்படத்தில் நெருங்கிய உறவினர் மட்டுமே இருந்தனர்.. மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடை பெற்று வெளியேறிக் கொண்டிருந்தனர்..

வேகமாக இறங்கிக் கொண்டிருந்த மைதிலி திடுமென எதிரே வந்து விட்ட பரசுராமன் மேல் மோதிக் கொண்டாள்.. மேலே வந்து மெத்தென மோதிய மனைவியை சற்று அதீத ஆர்வத்துடனேயே தாங்கி பற்றி நிதானமாக விலக்கிய பரசுராமன் கேட்ட..




“எங்கேடி இவ்வளவு அவசரமாக போகிறாய்..?” கேள்வி கொஞ்சமாக போதை சுமந்திருந்தது..

அவனது கணவன் பார்வையை உணரும் நிலையில் மைதிலி இல்லை..

“மாமாவை பார்க்க போகிறேன்.. ஒரு விசயம் பேச வேண்டும்..” அவளது பரபரப்பு இப்போது அவனுக்குள் சந்தேகத்தை கொண்டு வந்ததிருந்தது..

“என்ன பேசனும்..?”

“அது அன்று நம் கல்யாணத்தின் போது..” வேகமாக பேச வாயெடுத்து விட்டு பட்டென வாய மூடிக்கொண்டாள்.

“ஒன்றுமில்லை..” அவனைத் தாண்டிப் போக போனவளின் இடை பற்றி முரட்டுத்தனமாக இழுத்து அருகிலுள்ள அறைக்குள் தள்ளிப் போனான்..

“அப்பாகிட்ட என்னடி பேசப் போகிறாய்..? சொல்லுடி..” உலுக்கினான்.

அதென்ன இவனுக்கு எப்போதும் இப்படி ஒரு அராஜகம் எரிச்சல் பட்ட மைதிலி அவன் கைகளை தட்டி விட்டாள்..

“அன்று நம் திருமணத்தை தடுத்து நிறுத்த உங்கள் மாமா திட்டம் போட்டாரே.. அதை இன்று உங்கள் அப்பாவிடம் சொல்ல போகிறேன்.. உங்கள் மகன் திருமணத்தையே நிறுத்த பார்த்தாரே, அவர் மகளுடனா உங்கள் மகனுக்கு திருமணம் எனக் கேட்கப் போகிறேன்.”

“மைதிலி” கர்ஜித்தான்.

“தப்பு பண்றடி, வேண்டாம்.. இதனால் இரண்டு பேரோட வாழ்க்கையை நீ பாழாக்குகிறாய்..”

“உங்களுக்கு புரியவில்லை.. இந்த திருமணம் நடந்தால்தான் அவர்கள் இருவர் வாழ்க்கையும் பாழாகும்..”

“உளறாதே.. உனக்கு ஒன்றும் தெரியாது.. பேசாமல் இரு..”




“உங்களுக்குத்தான் ஒன்றும் தெரியாத.. நான் மாமாவிடம் பேசத்தான் போகிறேன்..”

ஒருவர் இழுக்க ஒருவர் தள்ள என இருவரும் இருக்க, திமிறிக் கொண்டு அறையை விட்டுப் போக கதவை அடைந்து விட்ட மைதிலியை கடைசி நிமிடத்தில் பற்றிய பரசுராமன் அவன் கன்னத்தில் பளாரென அறைந்தான்.. ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நின்றவள் பின் ஒரு வித உத்வேகத்துடன் மீண்டும் அறைக்கு வெளியே ஓட முயல, அவளை இழுத்து உள்ளே போட்டு மீண்டும், மீண்டும் அவள் கன்னத்தை பதம் பார்த்தான்.. வெறுப்போடு கட்டிலில் தள்ளினான்..

“ரூமை விட்டு வெளியே வந்தால் காலை ஒடித்து விடுவேன்..” எச்சரித்து விட்டு கோபம் குறையாமல் சாத்தி வைத்திருந்த அறைக்கதவை திறந்தவன் திகைத்தான்.. அறை வாசலில் ரவீந்தர் நின்றிருந்தான்..

வெறுப்போடு அண்ணனை அவன் பார்த்த பார்வை இங்கே நடந்தவற்றை அவன் பார்த்துவிட்டான் என சொன்னது..

“ரவி அவள்..” விளக்கம் சொல்ல வந்த அண்ணனை கை உயர்த்தி தடுத்தான்.

“வேண்டாம் அண்ணா.. கொஞ்சம் கொஞ்சமாக என் மதிப்பிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. உங்களது இந்த தவறான செயல்களுக்கு மேலே ஏதாவது நியாயம் கற்பித்து இன்னமும் என் மதிப்பிலிருந்து இறங்காதீர்கள்.. ப்ளீஸ் போய்விடுங்கள்..” ரவீந்தர் கை கூப்ப பரசுராமன் செய்வதியாது காயப்பட்ட பார்வையுடன் அங்கிருந்து அகன்றான்..

அறையினுள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த மெல்லிய விசும்பல்கள் நெஞ்சத்தை கத்தியாக அறுக்க, சமாதானத்திற்கு உபயோகிக்க கூட வார்த்தைகள் வசப்படாமல் கையறு நிலையில் அறை முன்பாகவே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான் ரவீந்தர்..

“ரவி..” அழைத்தபடி அருகே வந்த சுமதியும், சௌமியாவும் அவனுக்கு அப்போது பயத்தைக் கொடுத்தனர்.. முன்னொரு நாள் இது போன்று நடந்து விட்ட ஒரு தவறில் அவர்கள் கொதித்த நினைவு வந்தது.. இப்போது மீண்டும் அதே தவறு, ரவீந்தர் அப்போது அவர்கள் சாடுவது போல் அந்த வீட்டு மனிதனாக மாறினான்.. மைதிலியின் தோழியாக இல்லாமல் அவள் கணவனின் தம்பியாக மாறினான்..

“ஹாய் சாப்பிட்டாயிற்றா..?” முக பாவனை மாற்றி அவர்களை விருந்தோம்பினான்..




“ஓ.. வயிறு முட்ட சாப்பிட்டாயிற்று.. ருசியான சாப்பாடு.. மைதிலியை எங்கே ரவி சொல்லிக்கொண்டு கிளம்புகிறோம்.. நாளைக் காலை வருகிறோம்..”

“அது.. அண்ணிக்கு நிறைய வேலை இல்லையா..? அலுத்துப் போய் சீக்கிரம் படுத்துவிட்டார்கள்.. நீங்கள் போய்விட்டு வாருங்கள்.. அண்ணியிடம் நான் சொல்லிக் கொள்கிறேன்..”

“ம்.. இன்னமும் அண்ணி.. இதை மாற்ற மாட்டாயா..?” செல்லமாக சலித்தபடி தோழிகள் விடைபெற குற்றவுணர்ச்சியுடன் அவர்களை வழியனுப்பினான் ரவீந்தர்..

ரவி நீ நடந்து கொண்டது தவறு.. நீ உன் நட்பிற்கு நியாயம் செய்யவில்லை.. ரவீந்தரின் மனசாட்சி அவனை தொடர்ந்து இம்சித்தது.. அவன் வெகு நேரம் யோசித்த பின் ஒரு முடிவுக்கு வந்தான்.. மைதிலியிடம் பேசி விடுவோம்.. அவள் இருந்த அறையை நோக்கி நடந்தான்..

அப்போது அறைக்கதவை திறந்து கொண்டு மைதிலி வெளியே வந்தாள்.. தளர்ந்த நடையுடன் மண்டபத்தின் பின்புறம் நடக்க ஆரம்பித்தாள்.

இவள் இந்த நேரம் எங்கே போகிறாள்..? ரவீந்தரும் மைதிலியை பின் தொடர்ந்தான்.. அவ்வளவு நேரமாக மைதிலியை தன் கண் பார்வையில் வைத்திருந்த பரசுராமன் மைதிலியையும், அவள் பின்னால் போகும் ரவீந்தரையும் புருவம் சுருக்கி பார்த்தான். பிறகு அவர்கள் அறியாமல் அவனும் அவர்கள் பின்னால் போனான்..

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!